Saturday, July 11, 2020
முகப்பு செய்தி கடலூர் வெள்ள நிவாரண உதவி - என்பெஸ்ட் தொழிலாளர் போராட்டம்

கடலூர் வெள்ள நிவாரண உதவி – என்பெஸ்ட் தொழிலாளர் போராட்டம்

-

தேசிய பஞ்சாலைத் கழகத்துக்கு உட்பட்ட மில்களில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் இணைப்புச் சங்கமான கோவை மண்டல பஞ்சாலைத் தொழிலாளர் சங்கத்தில் 300-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.

cuddalore-ntc-flood-relief-1ஏற்கெனவே குறைவான சம்பளம் குறைவான போனஸ் பெற்று வாழ்க்கை நெருக்கடியில் பஞ்சாலைத் தொழிலாளர்கள் உள்ளனர். ஒரு நாள் சம்பள இழப்பு என்பது அவர்கள் குடும்பத்துக்கு பெரிய நெருக்கடியைத் தரும். இருந்தாலும், மண்டல சங்கத் தொழிலாளர்கள் அனைவரும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் தலைமை வேண்டுகோளை ஏற்று வெள்ள பாதிப்புக்கு  தங்களது ஒரு நாள் சம்பளத்தினை வழங்க முன் வந்தனர். அதன்படி ரூ 1 இலட்சம் மதிப்புள்ள வேட்டி, சேலை, போர்வை போன்ற பொருட்கள் கடலூர் மாவட்ட மக்கள் அதிகாரம் அமைப்பிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதில் மண்டல சங்க பொதுச் செயலாளர் விளவை இராமசாமி, இணைச் செயலாளர் தோழர் மோகன்ராஜ், கம்போடியா மில் கிளைத் தலைவர் கணேசன், சி‌.எஸ்‌.டபில்யு மில் செயலாளர் முருகேசன், முருகன் மில் தலைவர் ரங்கசாமி மற்றும் பு.ஜ.தொ.மு கோவை மாவட்ட செயலர் தோழர் திலீப் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தகவல்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
கோவை

என்பெஸ்ட் நிர்வாகமே! தொழிலாளர் ஆணையர் தீர்ப்பை அமல்படுத்து!

கோவை தடாகம் ரோட்டில் பெஸ்ட் குரூப் கம்பெனிகள் உள்ளது. அதன் ஒரு கிளையான என்பெஸ்ட் கம்பெனியைச் சேர்ந்த தொழிலாளர்கள் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியில் இணைந்து தங்களை நிரந்தரத் தொழிலாளர்கள் ஆக்க வேண்டும் எனப் போராடி வந்தார்கள். நிர்வாகமோ, நீங்கள் அனைவரும் ஒப்பந்தக் கூலிகள் என்று எந்தவித விதி முறைகளையும் கடைபிடிக்காமல் அனைவரையும் வேலை நீக்கம் செய்தது.

ndlf-demo-against-enbest-6அதன் பின்னர், தொழிலாளர்கள் கோவை தொழிற்சாலை ஆய்வாளரிடத்தில் நடைபெற்ற வழக்கில் வெற்றி அடைந்தார்கள். தொழிற்சாலை ஆய்வாளர் முதலாளி திருமதி ஸ்ரீப்ரியா, எச்‌.ஆர் சிவக்குமார் ஆகியோரை விசாரித்து தொழிலாளர்கள் அனைவரையும் நிரந்தரப் படுத்த வேண்டும். இவர்கள் அனைவரும் ஒப்பந்தக் கூலிகள் அல்ல எனத் தீர்ப்பு வழங்கி ஆணை பிறப்பித்தார். தொழிற்சாலை ஆய்வாளர் ஆணையை முதலாளி ஸ்ரீப்ரியா கிஞ்சித்தும் மதிக்கவில்லை. ஆணையை அமல்படுத்தக் கோரி சங்கத்தின் சார்பில் கோவை மாவட்ட ஆட்சியர் தொடங்கி முதலமைச்சர் வரை மனு கொடுக்கப்பட்டும் எந்த வித பலனும் இல்லை.

“தொழிற்சாலை ஆய்வாளரின் உத்தரவை அமுல்படுத்து” எனும் முழக்கத்துடன் கோவை தடாகம் ரோட்டில் இடையர் பாளையம் பகுதியில் 07-01-2016 அன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. என்பேஸ்ட் கிளை செயலர் தோழர் சரவணன் தலைமை வகித்தார். நூற்றுக்கும் மேற்பட்ட தோழர்கள் தங்கள் துணைவியர் குழந்தைகளுடன் கலந்து கொண்டு ஆவேச முழக்கம் இட்டனர். தோழர்கள் நித்தியானந்தன், கோபி, சி‌.ஆர்‌.ஐ குமாரவேல் ஆகியோர் கண்டன உரை ஆற்றினர். இறுதியில் உரையாற்றிய பு.ஜ.தொ.மு மாநிலத் துணைத் தலைவர் விளவை இராமசாமி,

ndlf-demo-against-enbest-5“தொழிற்சாலை ஆய்வாளர் தமிழக அரசின் பிரதிநிதி, அவருடைய ஆணை என்பது தமிழக அரசின் ஆணை. ஆனால் முதலாளி ஸ்ரீப்ரியா தமிழக அரசின் ஆணையை மதிக்க வில்லை. தமிழக அரசின் ஆணையை மதிக்காத முதலாளி ஸ்ரீப்ரியாவை துடியலூர் காவல் துறை கைது செய்யுமா..? கைது செய்யாது. காரணம் இது முதலாளித்துவத்தை பாதுகாக்கும் அரசு; எனவே முதலாளிகளை கைது செய்யாது. தொழிலாளிகளைத்தான் கைது செய்யும்.

ndlf-demo-against-enbest-3கடந்த 30 வருடங்களாக பெஸ்ட் கம்பெனி இங்கு செயல்பாடு வருகிறது. கோவை என்பது தொழிற்சங்க போராட்டங்களின் தியாக பூமி. ஆனால் 30 வருடங்களாக பெஸ்ட் தொழிலாளர்கள் காண்ட்ராக்ட் தொழிலாளர்களாகவே உள்ளனர். கோவையில் எல்லாத் தொழிற்சங்கமும் இருந்தும் யாரும் இதனை கேட்கவில்லை. காரணம் முதலாளி ஸ்ரீப்ரியா, நிறுவனர் கௌரி சங்கர் எல்லோருக்கும் பணம் கொடுத்தார். எல்லோரும் பணத்தை வாங்கிக் கொண்டு தொழிலாளர்களை கை விட்டனர்.

பு.ஜ.தொ.மு தொழிலாளர்களை சங்கமாக்கியது. கோவைத் தொழிற்சங்க வரலாற்றிலேயே முதல்முறையாக ஒப்பந்த கூலிகள் எனப்படுவோரை நிரந்தரத் தொழிலாளர்கள் என சட்டப்படி நிலை நாட்டியது.

முதலாளி ஸ்ரீப்ரியா தொழிலாளர்கள் போராட்டம் நடத்திய போது ஐயர்களை அழைத்து வந்து தினசரி யாகம் நடத்தினார். ஆனால் இப்போது சட்டப்படி தொழிலாளர்கள் வெற்றி பெற்றுவிட்டனர். பெஸ்ட் கம்பெனி 10*10 அறையில் ஆரம்பித்து இன்று தடாகம் ரோட்டில் மாபெரும் வளர்ச்சி அடைந்து உள்ளது. இது யாகம் நடத்தியதால் வளரவில்லை. தொழிலாளிகள் உழைப்பால் தான் வளர்ந்தது என்பதை நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் தினசரி சொல்லும் காயத்ரி மந்திரமும் சந்தியாவந்தனமும் உங்களை வழிநடத்தும் வேதங்களும் எவ்வளவு குரூரமானவை என்பது நடைமுறையில் நிரூபணம் ஆகிறது.

நீங்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசின் ஆணைக்கு எதிராக தடையாணை வாங்கும் எத்தனிப்பில் உள்ளீர்கள். அதனையும் முறியடிப்போம். இறுதியில் நாங்கள் வென்று இதே இடையர் பாளையத்தில் வெற்றி விழா பொதுக்கூட்டம் நடத்துவோம்” என்று முழக்கமிட்டு முடித்தார்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

இறுதியில், தோழர் கௌரி மெட்டல் சுரேஷ் நன்றி கூற ஆர்ப்பாட்டம் முடிந்தது.

தகவல்

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
கோவை

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க