முகப்புகட்சிகள்அ.தி.மு.கதிருநாள் கொண்டச்சேரி வன்கொடுமை - நேரடி ரிப்போர்ட்

திருநாள் கொண்டச்சேரி வன்கொடுமை – நேரடி ரிப்போர்ட்

-

திருநாள் கொண்டச்சேரி வன்கொடுமை

நாகை மாவட்டம் குத்தாலம் வட்டம் வழுவூர் ஊராட்சியைச் சேர்ந்த திருநாள் கொண்டச்சேரியிலும், மேலத்தெரு, வடக்குத் தெருக்களிலும் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த இருநூறு குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அண்ணா மறுமலர்ச்சித் திட்டம், தாய் திட்டம் போன்ற அரசின் திட்டப் பணிகள் நடைபெற்றுள்ள வழுவூர் ஊராட்சியில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான அடிப்படை வசதிகள் திட்டமிட்டே புறக்கணிக்கப் பட்டுள்ளன. தாழ்த்தப்பட்ட மக்களுக்கென தனிச்சுடுகாடு கூட கிடையாது. மக்கள் வாழும் பகுதியிலிருந்து மூன்றரை கி.மீ தொலைவில் உள்ள மகிமலை ஆற்றில்கரையில்தான் பிணங்களை அடக்கம் செய்ய வேண்டும். காலனி வீட்டின் அகலம் கூட இல்லாத ஆற்றின் கரையில் ஒற்றையடிப் பாதையில் சிறு வாய்க்கால்களைக் கடந்து சென்று பிணங்களை நல்லடக்கம் செய்ய வேண்டும். மழைக்காலங்களில் சேற்றில்தான் நடந்து செல்ல வேண்டும்.

சுடுகாட்டுக்குச் செல்ல ஒற்றையடிப்பாதை

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

இப்பகுதியைச் சார்ந்த தாழ்த்தப்பட்ட மக்கள் “அருகாமையில் இடுகாடு வேண்டும். இடுகாட்டுக்குச் செல்ல முறையான பாதை வேண்டும்” என்று கோரிக்கை வைத்து நீண்ட நாட்களாகப் போராடி வருகின்றனர். 2002-ல் வழுவூர் வீரட்டேஸ்வரர், கோயில் நிலத்தை ஆதிதிராவிடர் நலத்துறை விலைக்கு வாங்கி ஊராட்சியிடம் கொடுத்த பின்னும் இதுவரை முறையான சாலை அமைக்கப்படவில்லை. ஊருக்கு அருகில் வீரட்டேஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான களத்துமேட்டுப் பகுதியில் இடுகாடு வேண்டும் என்ற தாழ்த்தப்பட்ட மக்களின் கோரிக்கைக்கு செவி கொடுக்க நாதி இல்லை. பாதைக்காக விலைக்கு வாங்கப்பட்ட இடத்தை ஆதிக்க சாதி நில உடமையாளர்கள் ஆக்ரமித்துப் பயிர்செய்து சிறு வரப்பாக்கியுள்ளனர்.

முதலமைச்சர் ‘அம்மா’வின் அறிவிப்புகளைப் போலவே 2 இலட்சம் ரூபாயில் சாலை என்ற கிரமப்புற மேம்பாட்டு அறிவிப்பும் காகிதத்திலும், கணிப்பொறியிலும்தான் உள்ளது.

பு.மா.இ.மு கண்டன சுவரொட்டி
பு.மா.இ.மு கண்டன சுவரொட்டி

பன்னெடுங்காலமாய் அடிமைப்பட்டு வாழ்ந்த மக்கள் மத்தியில் காலம் மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது. இளைஞர்களால் தொடங்கப்பட்ட கபாடி விளையாட்டுக் குழு, ஆதிக்க சாதியினரின் கண்களை உறுத்தி அச்சுறுத்தலுக்கு உள்ளானது. தவிர்க்க இயலாத சிறு சிறு மோதல்களுடன் தொடங்கிய போராட்டம் தன் இயல்பில் வளர்ந்து வழிபாட்டுரிமை போராட்டமாக முதிர்ச்சி பெற்றது.

தாழ்த்தப்பட்ட மக்களின் குல தெய்வமான பொன்னம்மா காளியை மக்கள் சூலம் வைத்து வழிபட்டு வந்துள்ளனர். 2012-ல் கோயில் கட்டுவது என முடிவெடுத்து, ஐம்பதாயிரம் ரூபாய் வசூல் செய்து நல்லப்பன் நீலகண்ட சிவா என்பவரிடம் கொடுத்துக் கோயில் கட்டியுள்ளனர். கோயில் கட்டித் தந்தவருக்கு நன்றி கல்வெட்டும் பதித்துள்ளனர். ஊர்ப் பொது வழக்கப்படி வீரட்டேஸ்வரர் கோயில் குளத்திலிருந்து கரகம் எடுத்துவரச் சென்றபோது ஆதிக்க சாதியினர் எதிர்த்து தடுத்தனர். சட்டவாத நடைமுறைகள் அனைத்தும் பின்பற்றப்பட்டு பலன் இன்றி சுற்றுவட்டார பகுதி மக்கள் 1000 பேருக்கு மேல் அணிதிரட்டப்பட்டு கரகம் எடுக்கப்பட்டது. தொடர் போராட்டங்களின் மூலம் வீரட்டேஸ்வரர் கோயிலில் திருவிளக்கு பூசை செய்யும் உரிமையையும் நிலைநாட்டினர்.

மயிலாடுதுறையில் ஆர்ப்பாட்டம்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

மதமாற்றம் தீர்வல்ல என்பதை நன்கு உணர்ந்திருந்தாலும் உரிமைகளை நிலைநாட்ட மதம் மாறுவதை ஒரு போராட்டமாகத் தற்போது கருதுகின்றனர். அம்பேத்கர் கூறியது போல பவுத்தமதத்தைத் தேர்வு செய்தால் இந்து மதத்தின் உட்பிரிவாக்கிக் கொண்டு ஒடுக்குவார்கள். எனவே கிறித்தவத்திற்கோ, இஸ்லாத்திற்கோ மாறலாம் என்ற கருத்தை இளைஞர்கள் வெளிப்படுத்துகின்றனர். இஸ்லாமிய, கிருத்தவ தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் படையெடுப்புக்குத் திருநாள் கொண்டச்சேரியும் சுற்றுவட்டாரப் பகுதிகளும் இலக்காகி உள்ளது. என்ன இருந்தாலும் ‘தாய்மத’த்தை விட்டுச்செல்லக்கூடாது என்றாவது ஒருநாள் மனமிறங்கி இராமகோபாலர்களும், இல.கணேசன்களும் வருவார்கள் என்று ஏக்கத்தில் சிலர் உள்ளனர்.

பொன்னம்மா காளியிடம் வேண்டிக்கொண்ட பிறகு பிறந்தவர் வன்னியர் சாதியைச் சார்ந்த குமார். குமார் குடும்பம் இப்போதும் பொன்னம்மா காளிக்கு நேர்த்திக்கடன் செலுத்திவருகிறது. வன்னியர்கள், தாழ்த்தப்பட்டவர்கள் தவிர வெள்ளாளர்கள், செட்டியார்கள், கோனார்கள், இசைவேளார்கள் சமூகத்தைச் சார்ந்த 80-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இப்பகுதியில் வசிக்கின்றனர். அனைவரும் தாழ்த்தப்பட்ட மக்களிடம் நெருக்கமாகவே உள்ளனர் என்றாலும் ஆதிக்க சாதி வெறியர்களுக்கு அஞ்சியே வாழ்கின்றனர். பிரபல திரைப்பட பின்னணி பாடகர் மாணிக்க விநாயகம் இவ்வூரைச் சேர்ந்தவர். இசைக் கலைஞரான தனது தந்தை இராமையா பிள்ளைக்கு நினைவு இல்லம் கட்ட முயற்சித்து ஆதிக்க சாதி வெறியர்களின் அச்சுறுத்தலுக்கு அஞ்சி ஒதுங்கிக் கொண்டதாக மக்கள் கூறுகின்றனர்.

வன்னியர்கள் உட்பட அனைவரும் வன்னிய சமூகத்தைச் சாராய ரவுடி வி.ஜி.கலியபெருமாள் குடும்பத்தைக் கண்டு அஞ்சுகின்றனர். சாராய ரவுடி வி.ஜி.கலியபெருமாள் சொந்த சாதிக்காரர்களாலேயே கொல்லப் படுகிறான். அடுத்தடுத்து நடைபெற்ற தாக்குதல்கள் கொலைகள் மக்களுக்கு அச்சத்தையூட்டியுள்ளது. கலியபெருமாள் மகன்கள் வி.ஜி.கே மணி வன்னியர் சங்கத்திலும் செந்தில் அ.தி.மு.க.விலும் இருந்து கொண்டு ஆட்டம் போடுகின்றனர். சாதி அபிமானத்தை சுயநலத்திற்குப் பயன்படுத்தி மக்களை பிளவுபடுத்துகின்றனர். குத்தாலம் ஒன்றியப் பெருந்தலைவர் தமிழரசன், பூம்புகார் எம்.எல்.ஏ பவுன்ராஜ் என்ற வலைப்பின்னலில் சாதி ஆதிக்கம் பகுதியில் கொடிகட்டிப் பறக்கிறது.

தொடக்கத்தில் அ.தி.மு.க.வைச் சேர்ந்த ஒ.எஸ்.மணியனும் தொடர்ந்து அமைச்சர் ஜெயபாலும் வன்னியசாதி வெறிக்கு உரமிட்டு வளர்த்துள்ளனர். மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி வன்னியர் என்று சொல்லிக் கொள்வதில் பெருமிதம் கொள்பவர். அமைச்சர் ஜெயபாலுக்கு நேர்முக உதவியாளராகப் பணியாற்றுபவர் என்று நாகை மாவட்ட மக்கள் கருதுகின்றனர். 17-01-2015 அன்று நடைபெற்ற திருவாடுதுறை மோதல் சம்பவத்தைப் போல மயிலாடுதுறை சுற்று வட்டாரத்தில் நூற்றுக்கணக்கான சம்பவங்களைத் தாழ்த்தப்பட்ட மக்கள் பட்டியலிட்டுச் சொல்லுகின்றனர். பா.ம.க.வும் வன்னிய சாதி வெறியர்களும், தேர்தலுக்காகத் திட்டமிட்டு சாதிக்கலவரத்தைத் தூண்ட முயற்சிக்கிறார்களா என்ற சந்தேகம் மயிலாடுதுறை பகுதி சமூக ஆர்வலர்களிடம் வலுவாக உள்ளது.

செல்லமுத்து, குஞ்சம்மாள்
அடக்கம் செய்யப்பட்ட இடம் (இளநீர் வைக்கப்பட்டுள்ள இடம் செல்லமுத்து அடக்கம் செய்யப்பட்ட இடம்)

இனி நாம் திருநாள் கொண்டச்சேரி சம்பவத்திற்கு வருவோம். 26-11-2015 அன்று குஞ்சம்மாள் என்ற என்பது வயதைக் கடந்த மூதாட்டி இயற்கை எய்தியுள்ளார். ஊரே வெள்ளக்காடாக இருந்த நேரம் அது. குஞ்சம்மாள் சடலத்தைப் பொதுப்பாதையில் எடுத்துச்செல்ல முயற்சிக்கின்றனர், ஆதிக்க சாதியினர் தடுக்கின்றனர். குஞ்சம்மாளின் பேரன் கார்த்திக் உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியரையும், காவல்துறை கண்காணிப்பாளரையும் அணுகி புகார் கொடுக்கிறார். பேச்சுவார்த்தை என்ற பெயரில் மூன்று நாள் கடக்கிறது. பிணம் அழுகிக்கொண்டிருந்த நிலையில் “சடலத்தை வயல்வெளி வழியாக எடுத்துச் செல்லுங்கள்; இல்லையேல் நாங்களே அடக்கம் செய்வோம்” என்று தாழ்த்தப்பட்ட மக்களை நிர்பந்திக்கின்றனர். தாழ்த்தப்பட்ட மக்கள் தங்கள் நிலையில் உறுதியாக நின்ற சூழலில் 29-11-2015 அன்று உள்ளாட்சி ஊழியர்கள் மூலம் பிணம் எடுத்துச் செல்லப்பட்டு காவல்துறை பாதுகாப்புடன் வயல்வெளி வழியாகச் சென்று அடக்கம் செய்யப்படுகிறது.

செல்லமுத்து சடலம் இருந்த வீடு
செல்லமுத்து சடலம் இருந்த வீடு

அடுத்த ஒரு மாதத்தில் 90 வயதைக் கடந்த குஞ்சம்மாளின் கணவர் செல்லமுத்து 03-01-2016 அன்று இயற்கை எய்துகிறார். பேரன் கார்த்தி இரவோடு இரவாக சென்னை சென்று உயர்நீதிமன்றத்தை அணுகியுள்ளார். 04-01-2016 அன்று நீதிமன்றம் “பொதுப்பாதையில் சடலத்தை எடுத்துச் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். செல்லமுத்துவின் சடலம் கவுரவமாக அடக்கம் செய்யப்பட வேண்டும்” என்று அறிவுறுத்தி உத்தரவிட்டுள்ளது.

அதிகாரிகள் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்துவதற்கு மாறாக, தாழ்த்தப்பட்ட மக்களை வயல்வெளி வழியாக எடுத்துச் செல்ல வற்புறுத்தியுள்ளனர். அவசர கோலத்தில் வயல்வெளியில் பாதை ஏற்படுத்தி உள்ளனர். வாய்க்கால்களில் மண்மூட்டைகளை அடுக்கி, சாலைகளை இணைத்துள்ளனர். தங்கள் நிலையில் உறுதியாக இருந்த தாழ்த்தப்பட்ட மக்கள் செல்லமுத்து சடலம் வைத்துள்ள வீட்டில் ஒன்று குவிந்து எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மண்மூட்டை ரோடு
மண்மூட்டை ரோடு

இந்நிலையில் மின்சாரத்துறை அதிகாரிகளைப் பயன்படுத்தி பகுதிக்கு மின் தொடர்பை துண்டித்துள்ளனர். “ஊரில் சாவு மின்தொடர்பை துண்டிக்கக் கூடாது” என்று கடைநிலை ஊழியர்கள் அதிகாரிகளிடம் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர். “மேலிட உத்தரவு அமல்படுத்துங்கள்” என்று கடைநிலை ஊழியர்கள் மிரட்டப்பட்டுள்ளனர். தங்களது இயலாமையையும், கையறு நிலையையும் கண்கலங்கியபடியும், தயக்கத்துடனும் மின்துறை ஊழியர்கள் வெளிப்படுத்தினர். திருநாள் கொண்டச்சேரி வன்கொடுமை சம்பவத்தில் தண்டிக்கப்பட வேண்டிய குற்றவாளிகள் பட்டியலில் மின்வாரிய அதிகாரிகளையும் இணைக்கப்படவேண்டும்.

குளிர்சாதனப் பெட்டி செயல்படாமல் பிணம் அழுகத் தொடங்குகிறது. ஆகையால் அங்கிருந்த இளைஞர்கள் ஐஸ்கட்டிகளை வாங்கி வந்து சடலத்தைப் பாதுகாத்துள்ளனர். “இங்கேயே மண்ணெண்ணெய் ஊற்றி எறிக்கிறோம். நாங்களும் அதிலேயே விழுந்து சாகிறோம்” என்று பெண்கள் மண்ணெண்ணெயுடன் களத்தில் இறங்கியுள்ளனர். செல்லமுத்து சடலம் இருந்த இடத்தில் தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டு மக்கள் விரட்டப்பட்டுள்ளனர். மேலத்தெரு, வடக்குத்தெரு மற்றும் பிற பகுதி தாழ்த்தப்பட்ட மக்கள் உள்ளே வர அனுமதிக்கப்படவில்லை. சமூக ஆர்வலர்கள் யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை.

வயல் வழியே சடலத்தை எடுத்துச் செல்லும் காவல்துறை
வயல் வழியே செல்லமுத்துவின் சடலத்தை எடுத்துச் செல்லும் காவல்துறை

நிலைமை கட்டுமீறவே மக்களிடம் பொதுப்பாதை வழியாக அழைத்துச் செல்வதாக வாக்குறுதி கொடுத்து சாலை பிரியும் இடத்தில் தடிஅடி நடத்தி தாழ்த்தப்பட்ட மக்களைக் கைது செய்து சடலத்தைக் கைப்பற்றி வயல்வழியே எடுத்துச் சென்றது காவல்துறை. திருவாரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரும், தேவர் – இமானுவேல் குருபூசை பாதுகாப்பு புகழ் ஜெயசந்திரன் காவல் துறையினரைப் பிணம் தூக்க வைத்து சாதனை படைத்துள்ளார். குஞ்சம்மாள் சடலம் புதைக்கப்பட்ட இடத்திற்கு அருகிலேயே செல்லமுத்துவின் சடலம் புதைக்கப்பட்டுள்ளது.

500-க்கும் மேற்பட்ட மக்கள் அணிதிரண்டு மயிலாடுதுறையில் ஆர்ப்பாட்டம் செய்து சம்பவத்தை வெளியுலகிற்கு அறிவித்தனர். மயிலாடுதுறையிலும், திருவாரூலும் சமூக ஆர்வலர்கள் நடத்திய ஆர்ப்பாட்டங்கள் தமிழகத்தில் நிலவிய கள்ள மௌனத்தைக் கலைத்துப் பொது விவாதத்தைத் தூண்டியுள்ளது.

தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைத் தலைவர் பி.எல்.புனியா திருநாள் கொண்டச்சேரிக்கு வந்து விசாரித்து “பெரியார் பிறந்த, சமூகநீதி கருத்துகள் பிரச்சாரமாகியுள்ள மண்ணில் இத்தகைய சம்பவம் துரதிரஷ்டவசமானது” என்று கருத்து வெளியிட்டு நடவடிக்கை எடுப்பதாக அறிவித்துள்ளார்.

செல்லமுத்து சடலத்தைப் புதைத்தவுடன் ஆதிக்கசாதி வெறியர்கள் வெடிவைத்து மகிழ்ந்தனர். குஞ்சம்மாள், செல்லமுத்துவின் உடல்களைப் புதைத்திருக்கலாம் அது முடிவல்ல.

தேர்தல் புறக்கணிப்பு வரை பலவகையான போராட்டங்களைத் திருநாள் கொண்டச்சேரி மக்கள் நடத்தியுள்ளனர். இந்த அரசு கட்டமைப்பு தங்களுக்கானதல்ல என்பதை அனுபவத்தில் உணர்ந்துள்ளனர். அதனைத் தகர்ப்பதற்கான போராட்டத்தில்தான் சாதிக்கு சவக்குழி வெட்டிப் புதைக்கவும், பார்ப்பனியத்தை ஒழித்துக் கட்டவும் முடியும் என்பது அவர்களுக்குப் புரியத் தொடங்கியுள்ளது.

– வினவு செய்தியாளர்

  1. ஏன் ஆதிக்க சாதியினர் என்ற வார்த்தையே பல இடங்களில் வருகிறது. மற்ற கட்டுரைகளில்/ சம்பவங்களில் கண்டிப்பது போல் எந்த சாதி என கூறியே கண்டிக்கலாமே…

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க