Saturday, September 18, 2021
முகப்பு இதர கேலிச் சித்திரங்கள் ரோகித் வெமுலா கொலை – விரிவான தகவல்கள் - ஆதாரங்கள் - படங்கள்

ரோகித் வெமுலா கொலை – விரிவான தகவல்கள் – ஆதாரங்கள் – படங்கள்

-

rohit-vemula-driven-to-death-cartoon-2படம் : ஓவியர் முகிலன்

ரோகித் வெமுலா கொலை –
பார்ப்பனக் கொடுங்கோன்மையின் நேரடி சாட்சி

ஸ்மிருதி இரானி
ரோகித் வெமுலாவின் தற்கொலைக்குக் காரணமான மத்திய மனிதவளத்துறை மேம்பாட்டு அமைச்சர் ஸ்மிருதி இரானியின் நேரடி தலையீட்டை நிரூபிக்கும் கடிதங்கள்

ரோகித் வெமுலா – ஹைதராபாத் மத்திய பல்கலைக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு முனைவர் பட்டப் படிப்பு மாணவர். இப்பல்கலைக்கழகத்தில் இயங்கி வரும் அம்பேத்கர் மாணவர் அமைப்பின் முன்னணியாளர்களில் ஒருவர். இந்தப் பல்கலையில் சேர்ந்ததில் இருந்தே அரசின் மக்கள் விரோத செயல்பாடுகளைக் கண்டித்து மாணவர்களை ஒன்று திரட்டி பல்வேறு போராட்டங்கள் நடத்தியிருக்கிறார். யாகூப் மேமன் தூக்கிலிடப்பட்ட போது அதனை எதிர்த்து பல்கலைக் கழகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கிறார்.

இப்படிப்பட்ட போர்க்குணமிக்க போராளியான ரோகித் வெமுலா, கடந்த ஞாயிற்றுக் கிழமை (17-01-2016) அன்று தனது நண்பரின் அறையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். ஆர்.எஸ்.எஸ் கும்பலின் மக்கள் விரோத செயல்களுக்கு எதிராக போராடுபவர்களை எந்த அளவிற்கு ஆர்.எஸ்.எஸ் கும்பல் அடக்கி, ஒடுக்கி, அவர்களை தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு தள்ளிவிடுகிறது என்பதற்கு நம் கண் முன் நிற்கும் உதாரணம் தான் ரோகித் வெமுலா.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முசாபர் நகர் குறித்த ஆவணப் படத்தை டெல்லி பல்கலைக் கழக மாணவர்கள் திரையிட்ட போது அவர்கள் மீது தாக்குதல் நடத்திய ஏ.பி.வி.பி காலிகளைக் கண்டித்தும், யாகூப் மேமன் தூக்கைக் கண்டித்தும், ரோகித் வெமுலா, தோந்தா பிரசாந்த், விஜய்குமார், சேசு செமுடுகுண்டா மற்றும் சுன்கன்னா ஆகிய 5 மாணவர்களும் முன்னணியாக இருந்து அம்பேத்கர் மாணவர் சங்கத்தின் சார்பாக ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதற்கு எதிராக இப்போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களைக் காலிகள் என்று தமது முகநூலில் சாடியிருக்கிறான் அதே பல்கலைக் கழகத்தைச் சேர்ந்து ஏ.பி.வி.பி நிர்வாகி சுசீல் குமார்.

ஏ.பி.வி.பி
தலித் மாணவர்களை அச்சுறுத்தி, ஒடுக்கும் ஏ.பி.வி.பி (படம் இணையத்திலிருந்து)

இதனைக் கண்டித்து இந்த 5 மாணவர்களும் பல்கலைக் கழகத்தின் பாதுகாப்பு அதிகாரி முன்னிலையில் சுசீல் குமாரை அம்பேத்கர் மாணவர் சங்கத்தின் உறுப்பினர்கள் மத்தியில் மன்னிப்புக் கோர வைத்திருக்கின்றனர். பகிரங்கமாக மன்னிப்புக் கோரிய சுசீல் குமார், மறுநாள் பாரதீய ஜனதா யுவ மோர்ச்சா என்ற அமைப்பில் உள்ள தனது சகோதரனுடன் சேர்ந்து காவல் நிலையத்தில் அம்பேத்கர் மாணவர் சங்கத்தினர் சுமார் 40 பேர் திரண்டு வந்து தங்கள் இருவரையும் தாக்கியதாகப் பொய்ப்புகார் அளித்திருக்கிறான். இதை நிரூபிப்பதற்கு இவர்கள் வேண்டுமென்றே மருத்துவமனையிலும் சேர்ந்துள்ளனர்.

அம்பேத்கர் மாணவர் கூட்டமைப்பை ஒடுக்குவது தொடர்பாக பா.ஜ.க, ஏ.பி.வி.பி, மனித வளத்துறை அமைச்சகம், பல்கலைக் கழகம் இடையேயான கடிதப் பரிமாற்றம்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

இந்த நாடகங்களின் அரங்கேற்றத்திற்குப் பிறகு உள்ளூர் பா.ஜ.க பிரமுகரான ராமச்சந்திர ராவின் அழுத்தத்தின் பேரில் அப்போதைய பல்கலைக் கழக துணை வேந்தர் ஆர்.பி.சர்மா இந்த சம்பவம் குறித்து விசாரிக்க பேராசிரியர் அலோக் பாண்டேயின் தலைமையில் ஒரு விசாரணைக் குழுவை அமைத்தார்.

ரோகித் வெமுலா தற்கொலையை கண்டித்து போராட்டம்
ரோகித் வெமுலா தற்கொலையை கண்டித்து போராட்டம்

இந்தக் குழு விசாரித்து அளித்த அறிக்கையில், இப்பிரச்சினை சுசீல் குமார் மன்னிப்புக் கடிதம் கொடுத்த போதே எவ்வித அசம்பாவிதமும் இன்றி முடித்துக் கொள்ளப்பட்டது என்றும் சுசீல் குமாரின் உடலில் தாக்கப்பட்டதற்கான எந்த அறிகுறியும் இல்லை என மருத்துவர்கள் கூறியிருப்பதையும் பதிவு செய்துள்ளனர். இதனைப் பெற்றுக் கொண்ட நிர்வாகம் விசாரணைக்குழு அறிக்கையை நிராகரித்து விட்டு 5 மாணவர்களையும் இடைநீக்கம் செய்து உத்தரவிட்டது. அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பல்கலைக் கழக மாணவர்கள் போராடத் தொடங்கியவுடன், அப்போதைய துணை வேந்தர் ஆர்.பி.சர்மா வேறு வழியின்றி அம்மாணவர்கள் மீதான இடைநீக்கத்தை ரத்து செய்து விட்டு, அதே நேரத்தில் ஆர்.எஸ்.எஸ் பார்ப்பனக் கும்பலை சமாதானப்படுத்தும் வகையில் மற்றொரு விசாரணைக் கமிட்டியையும் நியமித்தார். அதோடு ஜூன் மாதம் முதல் இம்மாணவர்களுக்கு வர வேண்டிய கல்வி உதவித் தொகை பல்கலைக்கழக நிர்வாகத்தால் திட்டமிட்டு நிறுத்தப்பட்டது.

ரோகித் வெமுலா தற்கொலையை கண்டித்து போராட்டம்
ரோகித் வெமுலா தற்கொலையை கண்டித்து போராட்டம்

சென்னை ஐ.ஐ.டி.யில் அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டத்தை முடக்க, அங்கிருந்த பார்ப்பனக் கும்பல் மத்திய மனித வளத்துறை அமைச்சகத்துக்கு ஒரு மொட்டைக் கடிதாசியைப் போட்டு அதன் வாயிலாக ஐ.ஐ.டி நிர்வாகத்துக்கு அழுத்தம் கொடுத்து இம்மாணவர் வட்டத்தை முடக்க முயற்சி செய்ததும், அதனைத் தொடர்ந்து இந்தியா முழுவதுமான ஜனநாயக சக்திகளின் போராட்டத்தால் பார்ப்பனக் கும்பல் பணிய நேரிட்டதும் நினைவிலிருக்கலாம். அதே போல இங்கும் தெலுங்கானா மாநில பா.ஜ.க எம்.பி.யும், மத்திய தொழிலாளர் துறை இணையமைச்சருமான பண்டாரு தத்தாத்ரேயா, அரசு முத்திரை கொண்ட தனது அலுவலக கடிதத் தலைப்பில் ஹைதராபாத் மத்திய பல்கலையில் ஏ.பி.வி.பி.-ன் சதி செல்லுபடியாகாத கதையை, தேசத்தின் பாதுகாப்பிற்கு எழுந்த பிரச்சினையாக சித்தரித்து ஒரு கடிதத்தை மத்திய ’மனித’ வளத்துறை அமைச்சர், ’போலி சான்றிதழ் புகழ்’ ஸ்மிருதி இரானிக்கு எழுதியுள்ளார்.

ரோகித் வெமுலாவின் தாய்
ரோகித் வெமுலாவின் தாய் ராதிகா வெமுலா

உடனடியாக களத்தில் இறங்கிய மனித வளத்துறையின் பார்ப்பனக் கும்பல், இதற்கு விளக்கமளிக்குமாறு செப். 3 அன்று ஒரு கடிதத்தை அனுப்பியிருக்கிறது. இப்பிரச்சினை குறித்து அப்போதைய நிலையை விளக்கி பல்கலைக்கழகம் பதில் கடிதம் ஒன்றை அனுப்பியது. அதில் திருப்தி அடையாத மத்திய மனித வளத்துறை அமைச்சகம் பண்டாரு தத்தாத்ரேயாவின் புகாரின் அடிப்படையில் அந்த மாணவர்களின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தொடர்ச்சியாக செப்டெம்பர் 24, அக்டோபர் 6, 20 மற்றும் நவம்பர் 19 ஆகிய தேதிகளில் கடிதங்கள் அனுப்பி அழுத்தம் கொடுத்தது.

இந்நிலையில் துணை வேந்தராக இருந்த ஆர்.பி.சர்மாவின் பதவிக்காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து, காவிக் கூட்டத்தின் ஆசி பெற்ற அப்பாராவ் துணை வேந்தராக நியமிக்கப்பட்டார். ஆர்.எஸ்.எஸ் அடிமை அப்பாராவ் பதவியேற்றதும், எவ்வித விசரணையும் இன்றி இந்த 5 மாணவர்களையும் விடுதியில் இருந்து வெளியேற்ற கடந்த டிசம்பர் மாதம் 21-ம் தேதி உத்தரவிட்டார். வெளியேற்றப்பட்ட இம்மாணவர்கள் கடுங்குளிரில் விடுதிக்கு வெளியே பல்கலை வளாகத்திற்குள்ளேயே தொடர்ச்சியாகத் தங்கி இவ்வுத்தரவிற்கு எதிராகத் தமது போராட்டத்தை நடத்திய இம்மாணவர்கள் இந்த உத்தரவை மறுபரிசீலனை செய்யக் கோரி துணைவேந்தருக்கு பலமுறை கடிதம் அனுப்பியிருக்கின்றனர். அவர்களது அனைத்து கடிதங்களையும் நிராகரித்தார் அப்பாராவ்.

கடந்த டிசம்பர் 30 அன்று தங்களுக்கு இழைக்கப்படும் அநீதி குறித்து யூ.ஜி.சி.யின் முன்னாள் தலைவர் ’தொரட்’டிடம், தாங்கள் எழுதிய கடிதங்கள் உள்ளிட்ட 10 பக்க அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளனர் இந்த மாணவர்கள். இவ்வளவு போராட்டங்களுக்குப் பிறகும் தங்களை விடுதியில் தங்க அனுமதிக்காத அப்பாராவிற்கு ரோகித் எழுதிய கடைசிக் கடிதத்தில் ”தலித் மாணவர்களுக்கு எதிராக கொடுக்கப்பட்டது பொய்ப்புகார் என்று தெரிந்தும் எங்கள் மீது நடவடிக்கை எடுத்ததை வைத்தே உங்களைப் புரிந்து கொள்ள முடிகிறது. இப்படி எங்களை படிப்படியாகக் கொல்வதற்குப் பதில், தலித் மாணவர்கள் கல்லூரிக்குள் நுழையும்போதே அவர்களுக்கு தாம்ப்புக் கயிறோ, 10 கிராம் சோடியம் அசைடு விஷத்தையோ கொடுத்துவிடுங்கள் அல்லது ஒரேடியாக கருணைக் கொலை செய்து விடுங்கள்” என்று எழுதியிருக்கிறார். மத்தியில் ஆளும் பார்ப்பன பாஜக அரசின் நேரடி அழுத்தம், அப்பாராவ் என்ற அடிமையின் வாயிலாக போராளிகளை எந்த அளவிற்கு உளவியல் ரீதியில் பாதித்திருக்கிறது என்பதை இக்கடிதத்தின் வாயிலாகப் புரிந்து கொள்ள முடியும்.

கருணைக் கொலை செய்து விடும்படி ரோகித் துணைவேந்தருக்கு எழுதிய கடிதம்

ஒருபுறம், தட்டிய கதவுகள் அனைத்தும் இறுக மூடியபடியே இருக்க, மறுபுறம் 7 மாதங்களாக கல்வி உதவித்தொகை வராமல் கல்வி நிலையத்திலிருந்தும், விடுதியிலிருந்தும் ஒதுக்கப்பட்ட சூழலில் கடுமையான மன அழுத்ததிற்கு ஆளாகியுள்ளனர் இம்மாணவர்கள். ஞாயிற்றுக்கிழமை, தனது தாயிடம் மனம் ஒடிந்து பேசிய ரோகித் வெமுலா, பின்னர் தனது நண்பனின் அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். அது தற்கொலை அல்ல, சங்கபரிவாரத்தின் நேரடியான பாசிச படுகொலை என்பதை மேற்சொன்ன சம்பவங்களும், தற்கொலைக்கு முன் ரோகித் எழுதிய கடிதமும் நமக்கு உரைக்கின்றன. ரோகித் எழுதிய கடிதத்திலிருந்து சில வரிகள்:

“ஓர் எழுத்தாளனாக வேண்டும் என்பதே என் விருப்பம். காரல் சாகன் போல ஓர் அறிவியல் எழுத்தாளனாக வேண்டும் என்பது எனது லட்சியம். ஆனால், என்னால் எழுத முடிந்தது என்னவோ இந்த தற்கொலை கடிதத்தை மட்டுமே… “

rohit-vemula-suicide-protests-1”ஒரு மனிதனின் மதிப்பு, அவனது பிறப்பு அடையாளங்களால் நிர்ணயிக்கப்படுகின்றன … ——————————————- ஒரு மனிதன் எப்போதாவது அவனது கருத்தின் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்படுகிறானா என்றால்? நிச்சயமாக இல்லை. “

“சிலருக்கு வாழ்க்கை வெறும் சாப வடிவிலானதாக கிட்டுகிறது. எனது பிறப்பு ஒரு பயங்கர விபத்தின் விளைவு. எனது பால்ய பருவ தனிமையில் இருந்து என்னை எப்போதுமே விடுவித்துக் கொள்ள முடிந்ததில்லை. கடந்த காலங்களை திரும்பிப்பார்க்கும்போது யாராலும் போற்றப்படாத ஒரு குழந்தையாகவே எனது பிம்பம் மிஞ்சுகிறது. “

”எனது இறுதி ஊர்வலம் அமைதியாகவும், சுமுகமாகவும் நடைபெறட்டும். நான் தோன்றி மறைந்தேன். அவ்வளவே. அதை இயல்பாக எடுத்துக்கொள்ளுங்கள். எனக்காக கண்ணீர் சிந்த வேண்டாம்”

ரோகித் வெமுலா தற்கொலை
பார்ப்பன சாதி வெறி ஓநாய்களின் தொடர்ச்சியான உளவியல் தாக்குதல் ஒரு சமூகப் போராளியை, ஒரு விஞ்ஞானியை, தாழ்த்தப்பட்ட உழைக்கும் வர்க்கத்தில் இருந்து உயர்கல்வி பயில ஒரு பெருங்கனவோடு வந்திருந்த ஒரு மாணவனைக் கொன்றுவிட்டது.

மக்கள் நலனுக்காக, சமூக நீதிக்காக போராடிய ஒரு போராளியின் உள்ளத்தை இந்த இழிவான சாதிய சமூகமும், பார்ப்பன பாசிச கும்பலும் எவ்வளவு தூரம் பாதித்திருக்கின்றன என்பதை இந்தக் கடிதம் பறைசாற்றுகிறது. இந்த மாணவர்களின் மீது பார்ப்பன சாதி வெறி ஓநாய்களின் தொடர்ச்சியான உளவியல் தாக்குதல் ஒரு சமூகப் போராளியை, ஒரு விஞ்ஞானியை, தாழ்த்தப்பட்ட உழைக்கும் வர்க்கத்தில் இருந்து உயர்கல்வி பயில ஒரு பெருங்கனவோடு வந்திருந்த ஒரு மாணவனைக் கொன்றுவிட்டது.

இது இன்று நேற்று நடக்கும் விசயமா ?.. 2000 ஆண்டுகளாக இந்திய சமூகம் பார்த்துப் பார்த்து பழகிப் போன விசயம் தான். அது ஏகலைவன் ஆகட்டும், சம்பூகன் ஆகட்டும், அல்லது நந்தன் ஆகட்டும், பார்ப்பனிய விசத்தால் கொல்லப்பட்ட சூத்திரர்களும், சண்டாளர்களும் – பின்னாளில் பார்ப்பனர் கருணையால் இறைவனடி சேர்ந்தவர்களாக சித்தரிக்கப்பட்டதை வாசித்து புளகாங்கிதமடையும் அடிமைச் சமூகத்தில் தினமும் இது போன்ற ஆயிரக்கணக்கான ஏகலைவன்கள் கொல்லப்பட்டுக் கொண்டு தான் இருக்கின்றனர்

அம்பேத்கர்
“எந்த திசையில் திரும்பினாலும், சாதி என்ற கொடூரம் உங்கள் பாதையில் குறுக்கிடுகிறது. இந்த` கொடூரத்தை கொல்லாமல், அரசியல் சீர்திருத்தங்களோ, பொருளாதார சீர்திருத்தங்களோ சாத்தியமில்லை” – அம்பேத்கர் (படம் இணையத்திலிருந்து)

இதற்கு நீலிக் கண்ணீர் வடித்துக் கொண்டு ராகுல்காந்தி தொடங்கி அனைத்து ஓட்டரசியல் பெருச்சாளிகளும் தங்களை சமூக நீதிப் போராளிகளாகக் காட்டிக் கொள்கின்றனர். அனைத்து ஓட்டுக் கட்சி கிரிமினல்களும் ஆர்.எஸ்.எஸ் கும்பலின் தலித் விரோத, இஸ்லாமியர் விரோத, மக்கள் விரோத சதித் திட்டங்களில் ஒரு வகையில் பங்கு வகித்தவர்களே. இன்று தலித் அரசியல் பேசும் அனைத்து ஓட்டுக் கட்சிகளும், சமூக நீதி பேசும் அனைத்து ஓட்டுக் கட்சிகளும் கூட்டணி மூலமோ அல்லது தேர்தல் கூட்டணியைக் கணக்கில் கொண்டு அமைதி காப்பதன் மூலமோ இந்நாட்டை ஆர்.எஸ்.எஸ் கும்பலின் வேட்டைக் காடாக மாற்றி வருகின்றன.

****

ரோகித் வெமுலா தற்கொலை
மாணவர் எழுச்சியைக் கண்டு மிரண்டிருக்கும் அதிகாரவர்க்கம், போலீசு எடுபிடிகளைக் கொண்டு அவசர அவசரமாக ரோகித் வெமுலாவின் உடலை எரித்துள்ளது

ஆர்.எஸ்.எஸ் கும்பலின் சாதிய ஒடுக்குமுறையால் படுகொலை செய்யப்பட்ட ரோகித்தின் மரணத்திற்குப் பிறகு நாடு முழுவதும் பல்வேறு முற்போக்கு மாணவர் அமைப்புகள் ஒன்று திரண்டு போராடி வருகின்றன. வழக்கம் போல, போராடும் மாணவர்களின் மீது ஏவல் நாய்களாய் தாக்குதலை நடத்தத் தொடங்கியிருக்கின்றன போலீசு வெறிநாய்கள். மாணவர் எழுச்சியைக் கண்டு மிரண்டிருக்கும் அதிகாரவர்க்கம், போலீசு எடுபிடிகளைக் கொண்டு அவசர அவசரமாக ரோகித் வெமுலாவின் உடலை எரித்துள்ளது. சமீபத்தில் தமிழகத்தில் உயர்நீதி மன்ற கண் துடைப்பு உத்தரவையும் மீறி நாகை மாவட்டத்தில் செல்லமுத்து என்ற தலித் முதியவரின் பிணத்தை பொதுவழிக்குள் நுழையவிடாமல் போலீசு எடுபிடிகளை வைத்துத் தடுத்து சாதிய சனாதனத்தை நிலைநாட்டிய அதிகாரவர்க்கத்தின் சிந்தனையில் வேறு என்ன உதிக்க முடியும்?

பார்ப்பனிய சனாதன தர்மத்தையும், ஏகாதிபத்தியங்களுக்கு நாட்டைக் கூறு போட்டு விற்கும் தங்களது ’சேவை’யையும் எதிர்த்தால், ஒன்று கொன்றொழிக்கப்படுவீர்கள் அல்லது உளவியல் ரீதியான சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு தற்கொலைக்குத் தூண்டப் படுவீர்கள் என்பது தான் கோவிந்த் பன்சாரே தொடங்கி ரோஹித் வெமுலா வரை நடத்தப்பட்ட கொலைகளின் மூலம் ஆர்.எஸ்.எஸ் கும்பல் உலகிற்கு உணர்த்த விரும்புப் பாடம்.

ரோகித் வெமுலா தற்கொலை
“நாங்கள் அவனை தொடவே இல்லை” – ஏ.பி.வி.பி (படம் : thehindu.com)

மோடி அரசு பதவியேற்ற பின் தொடர்ச்சியாகக் கொண்டு வரும் பல்வேறு மக்கள் விரோத சட்டதிருத்தங்களும், பொருளாதார சீர்திருத்தங்களும் எந்தவித எதிர்ப்பும் இன்றி நிறைவேற்றப்பட வேண்டுமென்றால், எதிர்ப்பே காட்டாத ஒரு மழுங்கிப் போன தலைமுறையை உருவாக்க வேண்டிய அவசியம் இந்தக் கும்பலுக்கு இருக்கிறது. இதன் ஒரு பகுதியாக புரட்சிகரமான அணியினரான மாணவர்களிடையே குறிப்பாக உயர்கல்விக் கூடங்களில் படிக்கும் மாணவர்களிடையே தனக்கு எதிரான கருத்துக்கள் தோன்றக் கூடாது என்பதிலும், அப்படித் தோன்றினால் அதன் சுவடு தெரியாமல் அழித்து விட வேண்டும் என்பதிலும் உறுதியாக இருக்கிறது ஆர்.எஸ்.எஸ். பாஜக கும்பல். அதன் வெளிப்பாடு தான் “யூ.ஜி.சியை ஆக்கிரமிப்போம்” இயக்க மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள், எஃப்.டி.ஐ.ஐ மாணவர்கள் மீதும் நடத்தப்பட்ட தாக்குதல்கள், அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டத்தின் மீது விதிக்கப்பட்ட தடை, மற்றும் தற்போது அம்பேத்கர் மாணவர் அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் மீது உளவியல் ரீதியாக தொடுக்கப்பட்ட வன்கொடுமைத் தாக்குதல்கள் போன்றவை.

ரோகித் வெமுலா தற்கொலை
ஏகலைவன் 2.0-ன் கதை “இந்தத் தடவை ஒன்னோட உயிரே வேண்டும். இந்தா கயிற்றைப் பிடி” – ஹைதராபாத் பல்கலைக் கழக நிர்வாகம். (படம் இணையத்திலிருந்து)

நாட்டின் செல்வமான கல்வியை கடைச் சரக்காக்கும் ’புதிய கல்விக் கொள்கை – 2015’ மசோதாவை ஒட்டு மொத்த மாணவர் சமூகத்தின் மீதான தாக்குதலுக்காக தயாரித்து வைத்திருக்கும் மோடி கும்பல். கல்வியை கார்ப்பரேட் கும்பலின் கையில் ஒப்படைத்து பெரும்பான்மை இந்தியர்களை அறிவு ஊனமுற்றவர்களாக மாற்றத் துடிக்கும் இக்கும்பல், இதற்கு எழும்பும் எதிர்ப்பை அடக்கி ஒடுக்க வழி செய்து கொடுக்கும் வகையில் லிங்டோ கமிட்டி அறிக்கையின் படி மாணவர் அமைப்புகளுக்கான கட்டுப்பாடுகள் என்ற பெயரில் மாணவர் அமைப்புகளைக் காயடிக்க அனைத்து முயற்சிகளையும் செய்கிறது.

ரோகித் வெமுலா தற்கொலை
“வி.ஐ.பி புகார்” மீது மனுநீதியை நிலைநாட்டிய ஹைதராபாத் பல்கலைக் கழகம் – “ஏ.பி.வி.பி பசங்களோட வாழ்க்கையை அச்சுறுத்தும்படி பி.எச்.டி ஆய்வு செய்யும் தலித் நீதானா?” (படம் இணையத்திலிருந்து)

அடுத்த தலைமுறையை, பார்ப்பனிய ஏகாதிபத்திய தாசர்களாக, சொல்வதற்கெல்லாம் தலையாட்டும் ஆட்டு மந்தைகளாக, சுயமாக சிந்திக்க, தனது உரிமைக்காகக் கூட குரல் கொடுக்க முடியாதவர்களாக உருவாக்கும் தனது நிகழ்ச்சி நிரலை அமல்படுத்தி வருகிறது பார்ப்பனக் கும்பல். ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம், ஈழப் போராட்டம், டாஸ்மாக் எதிர்ப்புப் போராட்டம் என பல்வேறு போராட்டங்களை ஒருங்கிணைந்து நடத்திய மாணவ சமூகத்தை அடக்கி ஒடுக்கி, அரசியலோ, ஜனநாயக உணர்வோ இல்லாத தக்கை மனிதர்களாக மாற்ற நேரடிப் படுகொலைகள், உளவியல் ரீதியான தாக்குதல்கள் தொடங்கி சட்ட சீர்திருத்தங்கள் வரை பல்வேறு ஆயுதங்களைக் கையாண்டு வருகிறது ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க கும்பல். நாட்டை சீர்கெடுக்கும் காவிக் கும்பலை விரட்டியடிக்க வேண்டிய தருணம் இது. நாம் பகத்சிங்கின் வாரிசுகள் என்பதை மீண்டும் அவர்களுக்கு உணர்த்த வேண்டிய தருணம் இது.

– கதிர்

 1. ரோகித் வெமுலாவின் தற்கொலை கடிதத்தை மட்டும் பத்திரிகளுக்கு காட்டிய மத்திய அமைச்சரும் , சங்க பரிவாரங்களும் மற்ற கடிதங்களை மறைத்தது ஏன்?
  புதிய முதல்வர் பொறுப்பேற்பதற்கு முன், பதவி மூப்பு பேற்று செல்லும் முன்னால் முதல்வர் ஏ பி வி பி புகாரை விசாரிததில் சுசில்குமார், அம்பெத்கர் கழகத்தினர் மீது பொய்புகார் கொடுத்தது அம்பலமாகி , சுசில் மன்னிப்பு கடிதமும் கொடுத்துள்ளார்!

  புதிய முதல்வர் பதவியேற்றவுடன் பி ஜெ பி எம்பி, மற்றும் இரண்டு மத்திய அமைச்சர்கள் தலையீட்டால், விசாரணையின்றி உதவித்தொகை நிறுத்தம், விடுதியிலிருந்து நீக்கம் என தண்டனை அளித்துள்ளனர்! இது சம்பந்தமாக ரோகித் எழுதிய கடிததிற்கு பதிலளிக்காமலும், சந்திக்க வாய்ப்பு கேட்டும் சந்திக்க மறுத்தும் 5 மாணவர்களை நோகடித்திருக்கிரார் கிராதக முதல்வர்!

  தலைமை தாஙகி போராடிய ரோகித் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டாலும், அவரின் பிரேத பரிசொதனை விவரம் வெளியிடப்படவில்லை, அவசர அவசரமாக காவல் துறையினரை கொண்டு எரிக்கப்பட்டுள்ளது ஏன்? வழக்கமாக தலித் பிணங்கள் புதைக்கப்படும்! மாறாக ரோகித் எரிக்கப்பட்டது ஏன்?

  போராட்டம் நடந்த போதும், தற்கொலை நடந்து மூன்று நாள் வரை வாய் திறக்காத மோடி, அரசியல் விளைவுகளுக்கு அஞ்சி ஒப்பாரி வைப்பது ஏன்?

  நீதி விசாரணையிலாவது நீதி கிடைக்குமா?

 2. தலித்துகளுக்காக போராடும் அமைப்புகள் இதை ஏன் தீவிரமாக கையிலெடுக்கவில்லை. கம்யூக்களும் பெயரளவிற்கு இதில் முகம் காட்டுகின்றனரே தவிர, சுப்பிரமணிய
  சாமி நாய்கள் என்று இந்த சமூகத்தை சதிராடியபின்னரும் கூட மெளனம் காக்கும் எதிர்கட்சிகள்குறித்து நினைக்கும்போது, மிகக் கேவலமாக உள்ளது. போராடுவோம்…போராடுவோம்..நீதி கிடைக்கும்வரை போராடுவோம் என்கிற குரல்களின் குரல்வளை நெறிக்கப்பட்டிருக்கிறது; ரோகித் வெமுலாவின் மறைவுக்குப் பிறகாவது அரசியல் சாயமற்ற ஒரு தலித் பேரியக்கம் உருவாக வேண்டும். வெமுலாவின் இறப்புக்கு நீதி கிடைக்க வேண்டும்.

  • எந்த தலித் பேரியக்கமும் ஆரம்பத்தில் ஆகா ஓகோ என்று ஆரம்பமாகி பிறகு பெரிய கட்சிகளால் ஸ்வாகா செய்யப்படுவதுதான் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.தமிழ்நாட்டில் என்ன நடந்தது திருமாவளவனும் கிறிஸ்னசாமியும் பெரிய எதிபார்ப்போடுதான் வந்தார்கள்.இன்று கருணாநிதியிடமும் ஜெயலலிதாவிடமும் மாறி மாறி தஞசம் அடைந்ததைத்தவிர தலித்துகளுக்கு கிடைத்த மாற்றம் என்ன?

 3. ஒரு மனிதனின் மதிப்பு, அவனது ”பிறப்பு” அடையாளங்களால் நிர்ணயிக்கப்படுகின்றன, ஒரு மனிதன் எப்போதாவது அவனது கருத்தின் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்படுகிறானா என்றால்? நிச்சயமாக இல்லை – என்றுள்ள ரோகித் வாக்குமூலம் இந்துத்வத்தின் போலி முகத்திரையைக் கிழிப்பதாக உள்ளது. உலகில் பிறந்த அத்தனை மனிதருக்கும் ஒரே மாதிரி மைட்டோகாண்ட்ரிய டிஎன்ஏ இருந்தும், இந்துத்வ நாட்டில் பிறப்பால் மனிதர்கள் வேறுபடுத்தி அடையாளம் காணப்படுகிறார்கள். ஒரு அநீதியை எதிர்த்து போராடியதற்கு மாணவர்களை கல்லூரியை விட்டு நீக்கம் செய்திருக்கிறது இந்துமதத்தின் சாதிவெறி. இதுதான் பார்ப்பனர்களின் சகிப்புத்தன்மையாம். தனது தலைமையில் படுகொலைகளை செய்துகொண்டிருக்கிற மோடிமஸ்தானையும் அவனது கூட்டாளிகளையும் பதவியிலிருந்து நீக்க எந்த யோக்கியனும் ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. படுகொலைகளை நடத்தியவன் என்று அமெரிக்கா தடைசெய்திருந்த மோடிமஸ்தானை யாரும் பதவியிலிருந்து தூக்கவில்லை. தடைசெய்த அமெரிக்காவையும் மானங்கெட்ட மோடிமஸ்தான் தூக்கி எறியவில்லை.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க