Sunday, June 26, 2022
முகப்பு சமூகம் தொலைக்காட்சி ரோகித் வெமுலா கொலை - ஏ.பி.வி.பி அவதூறுகளுக்குப் பதில்

ரோகித் வெமுலா கொலை – ஏ.பி.வி.பி அவதூறுகளுக்குப் பதில்

-

லவேறு விதமான நேரடியான மற்றும் மறைமுகமான நெருக்குதல்கள் மூலம் ரோகித் வெமுலாவைத் தற்கொலைக்குத் தள்ளிய இந்துத்துவ பாசிச கும்பல், அவர் இறந்த பிறகும், தனது இழிவான பொய்ப்பிரச்சாரத்தைத் தொடர்கிறது. ரோகித் வெமுலாவின் ஜாதியில் தொடங்கி, அவருடைய கடந்தகால அரசியல் செயல்பாடுகள் வரை அனைத்தையும் தங்களுக்கு ஏற்றவகையில் வெட்டி, ஒட்டி ஊடகங்களை தங்கள் கையில் வைத்துக் கொண்டு ரோஹித் வெமுலாவை ‘பயங்கரவாதி’ என்றும் ‘ரவுடி’ என்றும் சித்தரிக்க முயல்கிறது.

முதலாவது, ஐந்து மாதத்திற்கு முன் பல்கலைக்கழக வளாகத்தில் ரோகித்துக்கும் எ.பி.வி.பி மாணவர்களுக்கும் நடந்த உரையாடல் அடங்கிய வீடியோவை எ.பி.வி.பி முகநூல் மூலமும், தெலுங்கு சேனல்கள் மூலமும் பரப்பியது. அந்த வீடியோவில் உள்ள உரையாடலின் சாரம்

.பி.வி.பி மாணவர்கள்: பேனரைக் கிழித்தாயா?
ரோகித்: ஆம். கிழித்தேன்.
.பி.வி.பி மாணவர்கள்: “எதற்காக பேனரைக் கிழித்தாய்?”
ரோகித்: “ஏ.பி.வி.பியின், இந்துத்துவாவின், ஆ.எஸ்.எஸ்ஸின் காவி நிறம் கண்ணுக்குத் தெரிந்தது, கிழித்தேன்”
.பி.வி.பி மாணவர்கள்: “உன் வீட்டில் காவி நிறம் இருந்தால் கிழிப்பாயா?”
ரோகித்: ஆம். நிச்சயமாகக் கிழிப்பேன்.
.பி.வி.பி மாணவர்கள்: உன்னைப் போல் நாங்களும் பேனரைக் கிழிக்க ஆரம்பித்தால் உங்களுடைய பேனர் ஒன்று கூட இங்கே இருக்காது.
ரோகித்: கிழித்துப்பாருங்கள்.

பொய்பிரச்சாரத்தையே பிழைப்பாகக் கொண்டுள்ள சங்கபரிவாரங்களிடம் நேர்மையை எப்படி எதிர்பார்க்க முடியும்? இந்த விடியோவில் இருக்கும் உரையாடல் நடந்தது 2015 ஆகஸ்டு மாதம் முதல் வாரத்தில். இந்த வீடியோவை ஏ.பி.வி.பி முகநூலில் பதிவேற்றிய அன்றே ரோகித் அதற்கு தனது முகநூலில் பதிலளித்திருந்தார். ஆகஸ்டு 8, 2015 தேதியுடைய தனது முகநூல் நிலைத்தகவலில் பின்வருமாறு எழுதியிருக்கிறார்

.பி.வி.பியினர் அனைவரும் இந்த வீடியோவை முகநூலில் பகிர்வதாகத் தெரிகிறது. அனைவரும் இதைப் பகிருங்கள். அந்த வீடியோவில் இருப்பது நான் தான். அதில் நான் 20 க்கும் மேற்பட்ட ஏ.பி.வி.பியினருக்கு பதிலளித்துக் கொண்டிருந்தேன். முதலில் கோபப்படாமல், நிதானமாக பதிலளித்துக் கொண்டிருந்தேன். ஆனால், அவர்கள் அம்பேத்கரையும், அம்பேத்கரிய அமைப்புகளையும் திட்டியவுடன் பொறுமை இழந்து நானும் திரும்பித் திட்ட ஆரம்பித்தேன். வளாகத்தில் உள்ள அனைத்து அம்பேத்கர் படங்களையும் கிழிப்பேன் என்று அந்தக் கூட்டத்தில் இருந்த ஒருவன் கூறிய போது, எனக்கும் அவனுக்கும் சண்டை நடந்தது கூட அந்த வீடியோவில் இருக்கிறது. அதை ஏ.பி.வி.பி முழுமையாக வெளியிட வேண்டும். அதிலுள்ள ஒருவன், வளாகத்தை விட்டு வெளியே வந்து பாருங்கள் பஜ்ரங் தளம், அம்பேத்கரியவாதிகள் என்றால் யாரென்று ஒரு கை பார்க்கும் என்று மிரட்டினான். இந்துதுத்துவத்தைத் திட்டியதற்காக எனக்கு எந்தவிதமான குற்ற உணர்ச்சியோ வருத்தமோ இல்லை. இந்துத்துவத்தின் கலாச்சார ஆதிக்கத்திற்கும், ஒடுக்குமுறைக்கும் எதிராக, அதைக் கொள்கையாகக் கொண்ட அமைப்புகளுக்கு எதிராக வளாகத்திற்குள்ளும், வளாகத்திற்கு வெளியேயும் தொடர்ந்து போராடுவேன். ஜெ பீம்!!!”

rohit-vemula-fb1

ரோகித் படுகொலைக்கு நீதி கேட்டுப் போராடும் மாணவர்கள் கேட்கும் கேள்விக்கு பதிலளிக்கத் துப்பில்லாத மானக்கெட்ட சங்கப்பரிவாரக் கும்பலும், அதை ஆதரிக்கும் ‘அறிவாளிகளும்’ ஏதோ புதிதாக ஒரு ஆதாரத்தைக் கண்டு பிடித்தது போன்று எடிட் செய்யப்பட்ட இந்த விடியோவை வெட்கமில்லாமல் பரப்புகிறார்கள். அப்படிப் பரப்புவதன் மூலம் ரோகித் வெமுலாவை ரவுடியாகவும், சமூக விரோதியாகவும் சித்தரிக்க முயற்சி செய்கிறார்கள். ஆனால், யார் ரவுடியிசத்திலும், சமூக விரோதச் செயல்களிலும் ஈடுபடுகிறார்கள் என்பது அனவருக்கும் தெரியும்.

‘லவ் ஜிகாத்’ என்ற பெயரில் முஸ்லிம் இளைஞர்களை அடித்து உதைப்பது, கொலை செய்வது, ‘கலாச்சார பாதுகாப்பு’ என்ற பெயரில் பிப்ரவரி 14 அன்று சாலையில் ஜோடியாக நடந்து போகும் ஆண்-பெண்களிடம் “தாலி கட்டு, இல்லை ராக்கி கட்டு” என்று மிரட்டுவது, சமூக சிந்தனையுள்ள எழுத்தாளர்கள் பங்கு பெறும் நிகழ்ச்சியில் கலவரம் செய்வது, இந்துத்துவத்தை அம்பலப்படுத்தும் படங்களைத் திரையிடவிடாமல் தடுப்பது, இந்துத்துவத்தை எதிர்த்துப் பேசும் நபர்களை கொடூரமாக கொலை செய்வது என அனைத்து வன்முறைகளிலும், சமூகவிரோத செயல்பாடுகளிலும் ஈடுபடுபவர்கள் ஏ.பி.வி.பியினர் உள்ளிட்ட சங்கபரிவாரக் கும்பல்தான்.

இத்தகைய ‘யோக்கியவாதிகளான’ ஏ.பி.வி.பியினர் தான் 2006-ம் ஆண்டு மத்திய பிரதேசே மாநிலம் உஜ்ஜயினியில், மாணவர் தேர்தலில் நடந்த முறைகேடுகள் காரணமாக தேர்தலை ரத்து செய்த கல்லூரியின் அரசியல் அறிவியல் துறையின் தலைவர் பேராசிரியர் சபர்வாலை அடித்தே கொன்றனர். ரோகித் வெமுலாவைத் தற்கொலைக்கு தள்ளிய நிகழ்வுகளின் தொடக்கமே டெல்லியியில் முசாப்பர் நகர் கலவரம் பற்றிய ஆவணப்படம் (Muzaffarnagar Baaqi Hai) திரையிட்ட போது ஏ.பி.வி.பி-யினர் அந்த நிகழ்வில் வன்முறையில் ஈடுபட்டது, அதை எதிர்த்து ரோகித் சார்ந்திருக்கும் அம்பேத்கர் மாணவர் கூட்டமைப்பு (Ambedkar Students Association) ஐதராபாத் பல்கலைக்கழகத்தில் போராட்டம் நடத்தியதும் தான். இவர்கள் தான், வன்முறையைப் பற்றியும், தீவிரவாதத்தைப் பற்றியும், சமூகவிரோதத்தைப் பற்றியும் பேசுகிறார்கள்.

இரண்டாவது, ரோகித்தின் மரணத்திற்குக் காரணமான குற்றவாளிகளை தாழத்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமைப் பாதுகாப்பு சட்டத்திலன் கீழ் தண்டிக்க வேண்டும் என்ற குரல் வலுத்தவுடன், ரோகித் தலித் சமுதாயத்தைச் சார்ந்தவரல்ல, பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்ததவர் என்ற வதந்தியைப் பரப்பியது. போராட்டக் குழுவினர் ரோகித்தின் சாதிச் சான்றிதழை ஸ்கேன் செய்து இணையத்தில் பதிவேற்றிய போது, அது போலியாகத் தயாரிக்கப்பட்ட சான்றிதழ் என்று கூறத் தொடங்கியது. அது மட்டுமல்லாமல், ரோகித்தின் தந்தை மற்றும் பாட்டியிடம் தனியார் தொலைக்காட்சிகள் மூலம் பேட்டி எடுத்து அதன் மூலம் ரோகித் தலித் அல்ல என்று நிரூபிக்க முயன்றனர். ரோகித்தின் சாதிச் சான்றிதழைத் தேடி காவல்துறை குண்டூரில் இருக்கும் அவரது வீட்டில் ரெய்டு கூட சென்றது.

ரோகித் எந்த சமுதாயத்தைச் சார்ந்தவராக இருந்தாலும், அவரின் சாவுக்குக் காரணமான குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும் என்பதுதான் போராடும் மாணவர்களின் நிலைப்பாடு. ஆனால், பா.ஜ.க, ஏ.பி.வி.பி மற்றும் துணை வேந்தர் அடங்கிய குற்ற கும்பல்தான் ரோகித்தின் மரணத்திற்குக் காரணம் என்று தெளிவாகத் தெரியும் இவ்விசயத்தில், ரோகித்தின் சாதி குறித்து கேள்வி எழுப்பவதென்பதே, மையமான பிரச்சனையிலிருந்து திசை திருப்பி குற்றவாளிகளைத் தப்பிக்க வைக்கும் தந்திரம்தான். இதே வேலையைத்தான், தாத்ரி படுகொலை சம்பவத்தில் உ.பி அரசும், ஊடகங்களும் செய்தன. கொலை செய்தவனைத் தண்டிப்பது பற்றிப் பேசாமல் அவர் வீட்டில் இருந்தது ஆட்டுக்கறியா? மாட்டுக் கறியா? என்று பரிசோதனை செய்து கொண்டிருந்தனர். எப்படியிருப்பினும், சங்க பரிவாரங்கள் ரோகித் தந்தையின் பேட்டியை முகநூலில் பகிர்ந்து விசயத்தை திசை திருப்ப முயல்வதால், அதைப் பற்றி இங்கு பேச வேண்டியிருக்கிறது.

ரோகித்தின் தந்தை ‘வட்டெரா’ (Vaddera) என்ற சாதியைச் சார்ந்தவர். இச்சாதி ஆந்திராவில் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் (BC) வருகிறது. ரோகித்தின் தாய் ‘மாலா’ (Mala) என்ற சாதியைச் சார்ந்தவர். அது ஆந்திராவில் பட்டியலினத்தில் (SC) வருகிறது.

இவ்விசயம் குறித்து ரோகித் தாயார் ராதிகா அளித்த பேட்டி.

இவரை சிறுவயது முதலே தத்தெடுத்து வளர்த்தவர் ஒரு ‘வட்டெரா’ சமுதாயத்தைச் சார்ந்தவர். ராதிகாவை வளர்த்து, அவரை தனது சமுதாயத்திலேயே ஒருவருக்கு மணமுடித்து வைக்கிறார். திருமணம் முடிந்து ஐந்து மாதங்கள் தான் இருவரும் சேர்ந்து வாழ்கின்றனர். அவர்கள் பிரிந்ததற்கு சாதியும் ஒரு முக்கியக் காரணம். இவர்களுக்கு மூன்று குழந்தைகள். அதில் மூத்தவர் ரோகித். கடந்த 25 வருடங்களாக ரோகித்தின் அம்மாவும், அப்பாவும் பிரிந்து வாழ்கின்றனர். ரோகித்தும், அவரது தம்பி, தங்கைகளும் தாயின் அரவணைப்பில் தான் வளர்கிறார்கள். ரோகித் வெமுலாவின் இளமைப் பருவம் எப்படி இருந்தது, எப்படிப்பட்ட சூழ்நிலையில் அவர் வளர்ந்தார். ரோகித்தின் தந்தையும், தாயும் ஏன் பிரிந்தார்கள் எனபதைப் பற்றிய ஒரு விரிவான கட்டுரை இந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகையில் வெளிவந்திருக்கிறது.

பொதுவாக கலப்புத்திருமணம் செய்து கொண்ட தம்பதியினரில் தந்தை ஆதிக்க சாதியாக இருந்து, தாய் தாழ்த்தப்படவராகவோ அல்லது பழங்குடியினத்தவரகவோ இருந்தால், தந்தையின் சாதியில் தான் குழந்தையையும் சேர்க்க வேண்டும் என்றுதான் புரிந்து கொள்ளப்படுகிறது. ஆனால், குழந்தைகள் யாரால் வளர்க்கப் படுகின்றன எனபதைப் பொறுத்துதான் குழந்தைகள் எந்த சாதி என்பது தீர்மானிக்கப்படவேண்டும் என்று 2012 உச்சநீதிமன்ற தீர்ப்பு கூறுகிறது. மேலும், தாயின் சமூகத்தைச் சார்ந்தவர்கள் குழந்தையை தம் சமூகத்தைச் சார்ந்ததாகவே கருதுவதாலும், தாழ்த்தப்பட்ட/பழங்குடியினத்தைச் சார்ந்த தனது தாய் அனுபவிக்கும் சாதியக் கொடுமைகள், ஏற்றத்தாழ்வுகள் குழந்தையையும் பாதிக்கும் என்ற அடிப்படையில் குழந்தைகள் தாயின் சாதியில் சேர்த்துக் கொள்ளப்படலாம் என்று கூறுகின்றது.

கலப்புத் திருமணமாக இருந்தாலும் தந்தையின் சாதிதான் குழந்தைகளுக்கும் இருக்க வேண்டும் என்று வற்புறுத்துவது பார்ப்பனிய இந்துமத ஆணாதிக்கக் கண்ணோட்டம்தான். சட்டப்பூர்வமாக மட்டுமல்லாமல், சமூக ரீதியாகவும் ரோகித் பிறந்தது முதல் தலித்தாகத்தான் அடையாளப்படுத்தப்படுகிறார், தலித் குடியிருப்பில், தலித்தாகத் தான் வளர்கிறார். ஒரு தலித், சமுதாயத்தில் என்னென்ன கொடுமைகளை அனுபவிக்கிறாரோ அது அத்தனையும் அனுபவிக்கிறார். அதைத்தான், தன்னுடைய இறுதிக் கடித்ததில் “சிலருக்கு வாழக்கை என்பதே சாபம்தான். என்னுடைய பிறப்பு ஒரு அபாயகரமான விபத்து. என் சிறு வயதுத் தனிமையில் இருந்து என்னால் மீளவே முடியாவில்லை” என்று குறிப்பிடுகிறார். இவ்வளவு இருந்தும், சங்க பரிவாரங்கள் ரோகித்தின் சாதி குறித்து கேள்வி எழுப்புவது அவர்களின் இழிவான அரசியலைத் தான் குறிக்கிறது.

மூன்றாவது, அம்பேத்கர் மாணவர் கூட்டமைப்பினர் யாகுப் மேமன் தூக்கிற்கு எதிராகப் போராடியதால் தான், பிரச்சனையே எழுந்தது என்று மொத்தப் பிரச்சனையையும் திசை திருப்புகின்றனர் இந்துத்துவக் கிரிமினல் கும்பல். இதன் மூலம், “யாகுப் மேமன் உச்சநீதிமன்றத்தால் தூக்குதண்டனை விதிக்கப்பட்ட ஒரு தீவிரவாதி. ஒரு தீவிரவாதியின் தூக்குக்கு எதிராகப் போராடிய அம்பேத்கர் மாணவர் கூட்டமைப்பினரை ‘தேசத்துரோகிகள்’ என்று அழைத்து என்ன தவறு?” என்பது போன்ற கருத்தை பரப்பை ரோகித் மரணத்திற்கு எதிராக குரல்கொடுக்கும் அனைவருக்கும் ‘தேசத் துரோகி’ முத்திரை குத்த எத்தனிக்கிறது சங்க பரிவாரக் கிரிமினல் கும்பல்.

ஆனால், பிரச்சினை ஆரம்பித்தது யாகுப் மேமன் தூக்கிற்கு எதிராகப் போராடியதால் அல்ல, டெல்லியில் முசாபர் நகர் கலவரம் குறித்த ஆவணப்படம் திரையிடப்பட்ட போது ஏ.பி.வி.பி அந்நிகழ்வில் கலவரம் செய்தது. இந்தத் தாக்குதலைக் கண்டித்து வளாகத்தில் அம்பேத்கர் மாணவர் கூட்டமைப்பு ஒரு போராட்ட நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது. அதில் ஏ.பி.வி.பி யின் கருத்துரிமை நசுக்கும் பாசிசத்தை வன்மையாகக் கண்டித்திருந்தது. இந்தப்போரட்டத்தைப் பற்றி ஏ.பி.வி.பி யின் தலைவர் சுஷில் குமார் தனது முகப்புத்தகத்தில் ASAவின் குண்டர்கள் ரவுடியிசத்தைப் பேகிறார்கள். வேடிக்கையாக இருக்கிறது” (ASA goons are talking about hooliganism…-feeling funny) என்ற நிலைத்தகவலாக இடுகிறார்.rohit-vemula-2

இதன் பிறகு தான் பிரச்சனை தொடங்குகிறது. ரோகித் உள்ளிட்ட 5 மாணவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதும் சுஷீல் குமாரைத் தாக்கியதாக வந்த குற்றச்சாட்டில் தான். பா.ஜ.க மத்திய அமைச்சர் பாண்டாரு தத்தாத்ரேயா மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணிக்கு எழுதிய கடிதத்தில்தான் யாகுப் மேமன் தூக்குக்கு எதிராக அம்பேத்கர் மாணவர் கூட்டமைப்பினர் போராடியது குறித்து குறிப்பிடுகிறார். பல்கலைக்கழத்தில் அமைக்கப்பட்ட விசாரணைக் குழுவின் எந்த அறிக்கையிலும் இதைப்பற்றிக் குறிப்பிடப்படவில்லை. ஆனால், தொலைக்காட்சி விவாதங்களில் பா.ஜ.க சார்பாகப் பேசும் அனைத்து அரைவேக்காடுகளும் யாகுப் மேமன் பிரச்சனையை மட்டுமே மையப்படுத்திப் பேசுகின்றது. அப்படி மையப்படுத்துவதன் மூலம் அனுதாப ரீதியிலும், வேறு சில காரணங்களுக்காகவும் ரோகித் மரணத்திற்கு நீதி வேண்டிய போராட்டத்தை ஆதரிக்கும் அமைப்பு சாராத நபர்கள், பொதுமக்கள் மத்தியில் ரோகித்தைப் பற்றியும், அம்பேத்கர் மாணவர் கூட்டமைப்பைப் பற்றியும், இந்தப் போராட்டத்தைப் பற்றியும் ஒரு தவறான பொய்ச் சித்திரத்தை உருவாக்குவதான் இந்துத்துவக் கும்பலின் எண்ணம்.

ஆனால் நாம், யாகுப் மேமன் பிரச்சனை போராட்டத்தின் மையப்பிரச்சனையை திசை திருப்புவதற்காகப் பயன்படுத்தப்படுகிறது என்று அம்பலப்படுத்தப்படுவதோடு நிறுத்திக் கொள்ளாமல், யாகுப் மேமன் தூக்கிற்கு எதிராகப் போராடினால் என்ன தவறு என்று கேட்டு அதற்கான நியாத்தையும் உரக்கப் பேச வேண்டும். போராட்டத்தில் பங்குகொள்வோரில் ஒரு சிலரைத் தவிர பெரும்பான்மையோர் இதைப் பற்றிப் பேசுவதில்லை.

யாகுப் மேமன் தூக்கிற்கு எதிராகப் போராடுவதைப் பற்றி கூச்சலிடும் இந்துத்துவக் கும்பல், யாகுப் மேமன் வழக்கை விசாரித்த முன்னாள் உளவுத்துறை அதிகாரி ராமன் அவர்களது கட்டுரையை பற்றி வாய் திறப்பதில்லை. அதுமட்டுமல்ல, யாகுக் மேமன் இந்திய விசாரணை அதிகாரிகளால் எப்படி ஏமாற்றி இந்தியா வரவழைக்கப்பட்டார், அவரது உயிருக்கு எந்தவிதப்பிரச்சினையும் ஏற்படாது என்று உறுதியளித்துவிடு அனைத்து ஆதரங்களையும் அவரிடமிருந்து வாங்கிக் கொண்டு அதை எப்படி அவருக்கெதிராகவே பயன்படுத்தினர் மற்றும் விசாரணையில் நடந்த பல்வேறு குளறுபடிகள் ஆகியவை பற்றி பலரும் எழுதியிருக்கின்றனர். இதைப்பற்றி எல்லாம் விவாதிக்க ஆரம்பித்தால், ஒன்று விவாதிப்பவர்களை ‘தேச விரோதிகள்’ என்று முத்திரை குத்துவது, இல்லையென்றால் “உச்சநிதிமன்றமே கூறிவிட்டது. அதை ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும், விமர்சிக்கக் கூடாது?” என்று முழுப்புவது. இதுதான் இந்துத்துவக் கும்பலின் உத்தி. ஆனால், பாபர் மசூதி இடிப்புப் பிரச்சனை உள்ளிட்டு வேறு எந்த பிரச்சினையிலாவது இவர்கள் சட்டத்தையும், நீதிமன்றத்தையும் மதித்திருக்கிறார்களா?

ரோகித் விசயத்தில், இந்துதுவக் கும்பல் யாகுப் மேமன் பிரச்சனையை மையப் பிரச்சனையாக மாற்ற முயற்சிப்பதற்கு காரணம் இல்லாமலில்லை. 2015 ஆகஸ்டு 3-ம் தேதி நடந்ததாகக் கூறப்படும் சுஷீல் குமாரின் மீதான தாக்குதல் என்பது அப்பட்டமான பொய் என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரியும். சுஷீல் குமாரைப் பரிசோதித்த மருத்துவரின் அறிக்கையும், அவ்வறிக்கை மற்றும் சாட்சிகள் அளித்த வாக்கு மூலம் ஆகியவற்றை ஆதாரமாகக் கொண்டு பல்கலைக்கழக ஒழுங்கு நடவடிக்கைக் குழு சமர்பித்த விசாரணை அறிக்கையும் அதனை ஏற்கனவே உறுதி செய்திருந்தின. அதனால்தான், யாகுப் மேமன் பிரச்சனைய முன்னிறுத்தி தீவிரவாதப் பூச்சாண்டி காட்டி மாணவர்களின் போர்க்குணமிக்க போராட்டத்தை நீர்த்துப் போகச்செய்துவிடலாம் என்று கனவு காண்கிறது காவி கிரிமினல் கும்பல்.

இதற்கு வலு சேர்க்கும் விதமாக, சட்ட பூர்வமாக மேலும் சில ஆதாரங்கள் இப்போது வெளிவந்திருக்கின்றன. கடந்த ஆகஸ்டு மாதம் சுஷீல் குமாரின் அம்மா தன் மகனுக்கு பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு இல்லையென்றும், தன் மகனைத் தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் ஒரு ரிட் மனுவைத் தாக்கல் செய்திருந்தார். அதற்கு பதில் மனு தாக்கல் செய்த பல்கலைக்கழக நிர்வாகமும், சைபராபாத் (Cyberabad) காவல் துறை ஆய்வாளரும் அம்பேத்கர் மாணவர் கூட்டமைப்பினர் சுஷீல் குமாரைத் தாக்கியதாகக் கூறப்படுவதற்கு எந்தவித ஆதாரமும் இல்லை என்றும், சுஷீல் குமாரும் அவரது தாயாரும் அளித்த புகார் சற்று மிகையாகச் சித்தரிக்கப்படது என்றும், ஆகவே சுஷீல் குமாரின் தாயார் தாக்கல் செய்த ரிட் மனுவைத் தள்ளுபடி செய்துவிடும்படியும் கேட்டுக் கொண்டுள்ளனர். இதன் மூலம் இந்துத்துவக் கும்பலின் பொய்ப் பிரச்சாரம் அம்பலப்பட்டுப் போயிருக்கின்றது.

– கனகன்

மேலும் படிக்க

 1. மும்பை தொடர்குண்டு வெடிப்பு தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட யாகூப் மேமன் தூக்கிலிடப்பட்ட பின், பல்கலைக் கழக வளாகத்தில் அவருக்காக நினைவஞ்சலி கூட்டம் நடத்தப்பட்டது.அதில் அம்பேத்கர் மாணவர் சங்கத்தைச் சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர். அந்த நிகழ்ச்சியில்‘யாகூப் மேமனை நீங்கள் தூக்கிலிடுகிறீர்கள். வீட்டிற்கு வீடு ஒரு யாகூப் மேமன் தோன்றப் போகிறான்’ என்ற வாசகங்கள் கொண்ட பதாகைகளை மாணவர்கள் ஏந்தி இருந்தனர்.
  இதற்கு என்ன அர்த்தம்? அத்தனை அப்பாவிகளை கொன்ற ஒரு இரக்கமற்ற கொடுமையான தீவிரவாதியின் செயல் நியாயப்படுத்தப்படுகிறது.
  இதை போன்ற கேவலமான சிந்தனை இவர்களுக்கு எப்படி வந்தது?
  யார் தூண்டி இவர்கள் செய்கிறார்கள்?
  இறந்தவர்களில் இவர்களது உறவினரோ நண்பரோ இருந்தால் இப்படி செய்வார்களா?
  இவர்களை பார்த்து வெட்கப்படுவதா? வேதனைப்படுவதா? வருத்தப்படுவதா?
  ஐந்து மாணவர்களைப் பல்கலைக் கழக நிர்வாகம் சஸ்பெண்ட் செய்திருந்தாலும்,அவர்கள் ஹாஸ்டலுக்கும், பல்கலைக் கழகத்தின் மற்ற இடங்களுக்கும் செல்லத் தான் (தற்காலிக) தடை விதிக்கப்பட்டிருந்ததே தவிர, கல்வியைத் தொடர்வதற்கோ, தேர்வுகளை எழுதுவதற்கோ எவ்விதத் தடை யும் விதிக்கப்படவில்லை. உண்மை இப்படியிருக்க, அந்த மாணவரின் தற்கொலைக்கு நிர்வாகத்தையோ மத்திய அரசையோ குற்றம்சாட்ட எந்த நியாயமும் இல்லை.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க