privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கதிருச்சியைக் கலக்குது மக்கள் அதிகாரம் - மல்லுக்கட்டுது ஜெயா போலீசு !

திருச்சியைக் கலக்குது மக்கள் அதிகாரம் – மல்லுக்கட்டுது ஜெயா போலீசு !

-

திருச்சி

பிப்ரவரி 14 – திருச்சியில் மூடு டாஸ்மாக்கை சிறப்பு மாநாடு ! மக்கள் அதிகாரம் தோழர்களுடன் மல்லுக்கட்டும் மாநகர மது விலக்கு போலீசு!

shutdown-tasmac-trichy-02மூடு டாஸ்மாக்கை சிறப்பு மாநாட்டையொட்டி திருச்சி மாவட்டம் முழுவதும் சுவரெழுத்து விளம்பரங்கள், சுவரொட்டி பிரச்சாரம், குடியிருப்புகளுக்கே சென்று மக்களை சந்திக்கும் சிறப்பு பிரச்சாரக் குழுக்கள், விளம்பர வாகன ஏற்பாடுகள், ஆட்டோ விளம்பரத் தட்டிகள், பேருந்து, ரயில் பிரச்சாரங்கள் என பல்வேறு வகைகளில் மக்கள் அதிகாரம் அமைப்பினர் வீச்சான பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். ம.க.இ.க மையக்கலைக்குழு பாடகர் கோவன் திருச்சி மாவட்ட அளவிலான மாநாட்டு பிரச்சார வேனை கடந்த 04-02-2016 அன்று தில்லைநகர் – காந்திபுரம் பகுதியிலிருந்து கொடியசைத்து துவக்கி வைத்தார். அப்போது நடைபெற்ற பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் பல்வேறு வடிவங்களில் தமிழகம் தழுவிய அளவில் பிரச்சாரம் நடைபெறவுள்ளதையும் விளக்கியுள்ளார். மாநாடு நடைபெறும் திருச்சி மாவட்டம் முழுவதும் எங்கு திரும்பினாலும் சுவரெழுத்து பிரச்சாரமும், மாநாட்டு பிரச்சாரக் குழுவினரின் பல்வகை பிரச்சார வடிவங்களாலும் இப்பொழுதே மாநாடு குறித்த எதிர்பார்ப்பு கூடி விட்டது.

shutdown-tasmac-trichy-21தமிழகத்தின் ‘மதுவிலக்கு’ மற்றும் ஆயத்தீர்வை அமைச்சர் நத்தம் விஸ்வநாதனே டாஸ்மக்கை மூட முடியாது என்று கூறிவிட்டதால் நம்பிக்கையற்று பேசும் நடுத்தர வர்க்கத்திடம் தமிழக அரசின் பொய் பிரச்சாரங்களை தோலுரித்து வருகின்றனர் மக்கள் அதிகாரம் தோழர்கள். அம்மாவுக்கு எதிராக ஏதாவது பேசினால் தீக்குளிக்கவும் தயங்க மாட்டேன் என்று அதட்டலாக அடாவடி பண்ணிய சில அ.தி.மு.க அடிமைகளிடம் ஏண்டா மூடமுடியாது? என்று சவால் விட்டும் மக்கள் அதிகாரம் தன் பிரச்சார பணிகளை செய்து வருகிறது.

பேருந்து பிரச்சாரங்களில் பலதரப்பட்ட மக்களும் மனமுவந்து நமது முயற்சிகளை பாராட்டுவதும், பேசும் போதே கைதட்டி வரவேற்பதும், பேசி முடிப்பதற்குள் வந்து உண்டியலில் ரூபாய் நோட்டுகளை திணித்து விட்டுச் செல்வதும் நடக்கிறது. பேருந்து ஒன்றில் மக்கள் அதிகாரம் தோழர்களை பிரச்சாரம் செய்ய விடாமல் தடுக்க முயன்ற அ.தி.மு.க கரைவேட்டி காரர் ஒருவரை எதிர்த்த நடுத்தர வயது பெண்மணி ஒருவர், “ஏய் அவரை ஏன் தடுக்கிற, 8 வருசமா இந்த குடியால தான் என் ஒட்டு மொத்த குடும்பமுமே அழிஞ்சிருச்சு, உனக்கென்ன தெரியும் எங்க வேதனைய பத்தி” என்று ஆத்திரத்தால் வெடித்து சீறியிருக்கிறார். “நீ பேசு தம்பி” என மக்கள் அதிகாரம் தோழர்களை அங்கீகரித்து விட்டு அவர் அமர, அவமானம் தாங்க முடியாத அ.தி.மு.க.காரரோ பேருந்தை விட்டே விருட்டென கீழே இறங்கி சென்று விட்டார்.

shutdown-tasmac-trichy-11விளம்பர சுவரொட்டிகளை நகரங்களின் முக்கிய வீதிகளில் ஒட்டிய பின்னர் குடியிருப்புகளில், தனிநபர் வீடுகளில் ஒட்டும் போது தயங்கிக்கொண்டே சுவரொட்டி ஒட்டிய தோழர்களை பார்த்து, “அட என்ன தம்பி நல்ல விசயந்தானே செய்றீங்க, அதுக்கு ஏன் இவ்வளவு யோசிக்குறீங்க, இங்க வந்து ஒட்டுங்க” என்று தாமாகவே முன்வந்து ஆதரவு கொடுக்கின்றனர் மக்கள். பெண்கள் தண்ணீர் பிடிக்கும் இடங்கள், மாலை இருட்டிய பின் குடிமகன்கள் ஒன்று கூடும் இடங்கள் என “இங்கே ஒட்டு, அங்கே ஒட்டு” என்று கையோடு அழைத்துக் கொண்டு சென்று சுவரொட்டிகள் ஒட்ட வேண்டிய இடத்தையும் காட்டுகின்றனர்.

” எம் புள்ளையெல்லாம் ஏற்கனவே தறுதலையா திரியுது, இதுல இந்தம்மா (ஜெயலலிதா) வேற இன்னும் தறுதலையா போ-ன்னு இப்படி (டாஸ்மாக் கடைகளை திறந்து வைத்து) பண்ணுது” என்று கூறி ஒரு பெண்மணி ஆத்திரப்பட்டார். மாநாட்டுக்கு வந்து விடுங்கள் என்று நாம் கூறிய போது, ‘இங்க பாரு தம்பி, என் தெருவுல யாரு வராங்களோ இல்லையோ நான் தனியாளா இருந்தாலும் கண்டிப்பாக மாநாட்டுக்கு வந்துருவேன்’ என கூறியுள்ளார். அவருக்கு நன்றி சொல்லி விட்டு அடுத்த இடத்திற்கு நகர முயன்ற தோழர்களிடம், “இப்படி போஸ்டர் ஒட்டிக்கிட்டே போறியே காலையில சாப்பிட்டியா இல்லையா?” என்று வாஞ்சையோடு கேட்டு விட்டு, தோழர்களது பதிலுக்கு கூட காத்திராமல் வீட்டிற்குள் சென்று சாப்பாட்டு பானையை எடுத்து கிளற ஆரம்பித்து விட்டார். பசை ஒட்டி காய்ந்து போன கைகளுடன் எப்படி சாப்பிடுவது என தயங்கிய போது அவரது கையாலேயே ஊட்டி விடவும் செய்துள்ளார். கலங்கிய கண்களுடன் விடைபெற்று சென்றுள்ளனர் தோழர்கள்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

பேருந்து நிலையத்தில் ஒட்டும் போது பணியில் இருந்த கீழ் நிலை ரோந்து போலீசார், யாரு அது மக்கள் அதிகாரமா? ஒட்டுங்க … ஒட்டுங்க… நல்ல விசயந்தானே செய்யுறீங்க என்று வாழ்த்தியதோடு ”தோழரே வாங்க டீ சாப்பிடலாம்” என தயக்கத்துடன் கேட்டுள்ளார்.” நாங்க போலீசுக்காரங்க, அதனால நாங்க வாங்கிக் குடுத்தா குடிக்க மாட்டீங்கன்னு தெரியும்” என வருத்தத்துடன் பேச, “நீங்கள் தனிப்பட்ட முறையில் எங்களுக்கு எதிரியா என்ன? டாஸ்மாக்கை மூட வேண்டும் என்ற கோரிக்கையில் மனப்பூர்வமா எங்களை ஆதரிக்கும் உங்களை போன்றவர்களை நாங்க எப்படி எதிரியா பார்க்க முடியும்? மக்களுக்கு விரோதமா நடக்கும் போது தானே எதிர்த்து நிற்கிறோம். உங்க அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி” என கூறிவிட்டு அடுத்தடுத்த பிரச்சார வேலைகளுக்கு சென்றுள்ளனர்.

அரசு ஊழியர்கள், பள்ளி ஆசிரியர்கள், கல்லூரி பேராசிரியர்கள் என பலதரப்பட்ட வர்களையும் சந்தித்து மாநாட்டு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆட்டோக்களில் விளம்பர பிளக்ஸ்கள், விளம்பர வாகனங்களில் மூடு டாஸ்மாக்கை பாடலை ஒலிபரப்பிய படி செல்லும் பகுதிகளில் பொது மக்களிடம் பலத்த வரவேற்பு இருந்துள்ளது. ஊருக்குள் நுழைந்தாலே சிறுவர்கள் டாஸ்மாக் எதிர்ப்பு பாடலை பாடிக்கொண்டே கும்பல் சேர்ந்து விடுகின்றனர். ஒரு பகுதியில் சென்று கொண்டிருந்த போது 70 வயது மற்றும் 50 வயது மதிக்கத்தக்க குடிமகன்கள் இருவர் நமது டாஸ்மாக் எதிர்ப்பு பிரச்சாரத்தை தடுத்து, “நீ யாருடா டாஸ்மாக் கடைய இழுத்து மூடுறதுக்கு” என்று தகராறு செய்ததோடு “கடைய மூடிட்டா இத எப்புடி நிறுத்துறது” என நடுங்கும் தனது கைகளை காட்டி பேசியுள்ளார். நிதானமாக இருந்த மற்றொரு குடிகாரரிடம் நாம் யார் என்பதை விளக்கி விட்டு, உங்க வீட்டு மகன் போல இருக்கும் என்னிடம் இப்படி பிரச்சனை செய்வது சரியா? நான் பேசும் விசயத்தில் ஏதாவது தப்பு இருந்தா சொல்லுங்க என நோக்கத்தை விளக்கி பேச அவரோ ‘டாஸ்மாக்கை மூடுறது தான் சரி தம்பி, இந்த ஊர் பூரா போய் பிரச்சாரம் பண்ணு, போஸ்டர் ஒட்டு, எவனாவது தடுத்தான்னா இந்த வேல்முருகன் தான் (அவரது பெயர்) செய்ய சொன்னான்னு சொல்லிட்டு போய்ட்டே இரு… என்று கூறிவிட்டு ‘மூடு டாஸ்மாக்கை’ என்று கூறிவிட்டு சென்றுள்ளார்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

மேலும் கடை வியாபாரிகள், வணிகர்கள் உள்ளிட்டோரை சென்று சந்தித்து ஆதரவும், நிதி திரட்டும் வேலைகளையும் மாநாட்டு குழுவினர் செய்து வருகின்றனர். நகரின் பிரபலமான பழமுதிர்ச்சோலை, இனிப்பகங்கள் போன்ற கடைகள் வைத்திருக்கும் வணிகப்பிரிவினரிடம் செல்லும் போது, “அடடே மக்கள் அதிகாரமா! வாங்க..வாங்க..” என வரவேற்று உபசரித்தனர். அதில் ஒருவர் “பாடகர் கோவனுடைய பாட்டை வெளி மாநிலங்கள்ல இருக்கிற என்னோட நண்பர்கள், உறவினர்களுக்கெல்லாம் கூட whats app-ல் அனுப்பியிருக்கேன், உங்கள நானே சந்திக்கனும்னு இருந்தேன், நீங்களே தேடி வந்துட்டீங்கனு” ஏதோ நீண்ட காலம் பழகிய நண்பரை போல பேச ஆரம்பித்து விட்டார். அரைமணி நேரத்திற்கு மேல் பேசிய அவர், நாம் பேச வேண்டிய அனைத்தையுமே பேசிவிட்டதால் மாநாட்டு அழைப்பிதழை அவரிடம் வழங்கியவுடன் தனது கல்லாவிலிருந்து 10,000 ரூபாயை எடுத்து மாநாட்டு நன்கொடையாக வழங்கியுள்ளார்.

‘உங்களுக்கெல்லாம் இத விட அதிகமாத்தான் செய்யனும் இதை இப்போதைக்கு வைத்து கொள்ளுங்கள்’ என்று கூறி மாநாடு வெற்றி பெற வாழ்த்தியுள்ளார். “எப்படியாவது டாஸ்மாக்கை மூடிவிடுங்க, இப்ப எங்க கடையிலயே 10, 15 பேரு வேலை பாக்குறானுங்க, சில பேரு பகல்லயே குடிச்சுப்புட்டு வேலைக்கு வரான், கஸ்டமருங்க முகம் சுழிக்குறாங்க! என்ன செய்யுறதுன்னே தெரியல, இவன் வாங்குற சம்பளத்தை பூரா குடிச்சே அழிச்சான்னா எத மிச்சம் பண்ண போறான்னே தெரியல” என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். இது அவரின் ஆதங்கம் மட்டுமல்ல மனித வள அழிவின் மோசமான குறியீடும், மெல்ல அழுகி நாறும் தமிழ்ச் சமூக பண்பாட்டின் குறுக்குவெட்டுத் தோற்றமும் ஆகும். எப்படியேனும் டாஸ்மாக்கை மூடியே தீர வேண்டும் என்று நாம் ஒவ்வொருவரும் உறுதி பூண வேண்டிய தருணமும் இது தான்.

shutdown-tasmac-trichy-24நாம் இப்படி சிந்திக்கிறோம். நமது பிரச்சாரம் அன்றாடம் மக்கள் மத்தியில் ஏற்படுத்தி வரும் தாக்கத்தையும் அதன் ’அபாயத்தையும்’ நன்கு உணர்ந்த திருச்சி மாநகர கமிசனர் சஞ்சய் மாத்தூர் மாநகர போலீசுக்கு புது உத்தரவு பிறப்பித்திருக்கிறாராம். அதனடிப்படையில் திருச்சி மாநகரம் முழுவதும் மதுவிலக்கு அமல் பிரிவு போலீசு சார்பில் ‘கள்ளச்சாராய’ விழிப்புணர்வு தெருக்கூத்து நாடகங்கள், தெம்மாங்கு பாட்டுக்கள், கரகாட்ட நிகழ்ச்சிகள் நடத்தி வருகின்றனர். பெண் போலீசாரை ஆடவிட்டு விடுவார்கள் என்று யாரும் அஞ்ச வேண்டாம். பெரம்பலூரில் இருந்து ஓசைக் கலைக்குழு என்கிற தன்னார்வ தொண்டு நிறுவனத்தை குறிப்பிட்ட தொகை பேசி ஒப்பந்தம் போட்டிருக்கிறார்களாம்.

இந்த முதல் சுற்று நிகழ்ச்சிகள் முடிந்தவுடன் இளைஞர்கள் மற்றும் பெற்றோர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வரும் பிப்ரவரி 12-ம் தேதி பாரதிதாசன் பல்கலைகழக NSS மாணவ – மாணவிகள், போலீசு நண்பர்கள் (FRIENDS OF POLICE) குழுவினர் உட்பட 1000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்கும் பேரணியும் நடைபெறவுள்ளதாம். பள்ளி-கல்லூரி மாணவர்களுக்கு கட்டுரை, பேச்சு போட்டி நடத்துவது, ஆட்டோ டிரைவர்கள் மூலம் பொதுமக்கள், வர்த்தகர்கள், வியாபாரிகள் மத்தியில் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் மாநகரில் உள்ள 14 சட்டம் – ஒழுங்கு காவல் நிலையங்கள், போக்குவரத்து காவல்நிலையங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் அதிகாரிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளார்களாம். இதன் தொடர்ச்சியாக போலீசார் தெரிவு செய்யும் 100 ஆட்டோ ஓட்டுநர்களுக்கு முதலுதவிப் பெட்டிகள் (FIRST AID BOX) வழங்கி (இல்லாத) ‘கள்ளச்சாராய’த்தை ஒழிக்கப் போவதாக ‘நாடகமாடு’கிறார்கள்.

shutdown-tasmac-trichy-23அப்படி என்னதான் இவர்கள் பிரச்சாரம் செய்கிறார்கள் என்பதை பார்க்கும் ஆவலுடன் கடந்த 06-02-2016 அன்று இராமக்கிருட்டிணா திரையரங்கம் அருகில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு சென்றிருந்தோம். பறை இசைக்கும், கரகாட்டத்தை பார்ப்பதற்கும் கூடியிருந்த கூட்டத்தினர் மத்தியில் ‘கள்ளச்சாரா’யம் குடித்தால் நரம்பு தளர்ச்சி ஏற்படும், உடல் உறுப்புகள் நிரந்தரமாக ஊனமாகும் என்றும் வெளி மாநில மதுவோ, அந்நிய நாட்டு மதுவோ விற்பதற்கு இங்கே தடை செய்யப்பட்டுள்ளதால் அதை மீறுவோர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாயும் என்றும், யாராவது ‘கள்ளச்சாராயம்’ காய்ச்சினால் உடனடியாக போலீசிற்கு போன் பண்ண வேண்டும் என்றும் அறிவுரைசெய்து கொண்டிருந்தனர்.

சாராயமே குடிக்கக்கூடாது என்று பேசாமல் ‘கள்ளச்சாராயம்’ குடிப்பதால் ஏற்படும் விளைவுகளை எச்சரிக்கிறோம் என்ற பெயரில், அம்மா டாஸ்மாக் மதுபான வகைகளுக்கு நேரடி விளம்பரத் தூதர்களாக மதுவிலக்கு போலீசே களமிறங்கியதை கண்டு நமக்கே சற்று அதிர்ச்சியாகத்தான் இருந்தது. பொது மக்களோ தலையில் அடித்து கொண்டு சென்றனர். அது சரி தான் மாவட்ட ஆட்சியர்களே அம்மாவின் ஜால்ராக்களாக மாறி கழகப் பணி ஆற்றிக்கொண்டிருக்கும் போது I.P.S முதல் ஏட்டு வரை எம்மாத்திரம்?

அடுத்த நாள் செய்தியில் காரைக்கால் பகுதியிலிருந்து மதுபான வகைகளை அளவுக்கு அதிகமாக பைகளில் வாங்கிக் கொண்டு, ரயிலில் தமிழக எல்லைக்குள் நுழைந்த வாலிபர்கள் சிலரை மதுவிலக்கு போலீசார் அதிரடி சோதனை நடத்தி கைது செய்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. போகிற போக்கை பார்த்தால், டாஸ்மாக்கை மூடும் வகையில் மக்கள் போராட்டங்கள் அதிகரித்தால் ‘கள்ளச்சாராயம்’ காய்ச்சி, சட்டம் – ஒழுங்கு சீர்குலைந்திருப்பதாக காட்டுவதற்காக மதுவிலக்கு போலீசாரே அம்மாவின் ஆணைக்கிணங்க களமிறங்கினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

தகவல்
மக்கள் அதிகாரம், திருச்சி.

கரூர்

ரூர் மாவட்டத்தில் நகரம் மற்றும் கிராமங்களில் மூடு டாஸ்மாக்கை என்ற முழக்கத்தை மையமாக வைத்து பகுதி பிரச்சாரம், கடைவீதி பிரச்சாரம், சிக்னல் பிரச்சாரம், வாயிற்கூட்டங்கள், பேருந்து பிரச்சாரம், இரயில் பிரச்சாரம், தெருமுனைக் கூட்டங்கள் என்ற வகையில் மூடு டாஸ்மாக்கை – பிப்ரவரி 14 சிறப்பு மாநாட்டை ஒட்டி வீச்சான பிரச்சாரம் செய்து வருகிறோம். இதற்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளதோடு அதிகபட்சமாக நிதியும் கொடுத்து ஆதரவு அளித்து வருகின்றனர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

கரூர் நகரத்தில் லைட்ஹவுஸ், தாந்தோணிமலை, வெங்கமேடு, தாலுக்கா அலுவலகம் அருகில் என்று மொத்தம் 4 கூட்டங்கள் நடைபெற்றன. மாயனூர் – கட்டளை பகுதியில் 06-02-2016 அன்று மாலை 6 மணிக்கு தெருமுனைக் கூட்டம் நடத்த மக்கள் அதிகாரம் சார்பில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தோழர் சக்திவேல் தலைமையில் அனுமதி கோரப்பட்டது. அதற்கு மாயனூர் காவல் ஆய்வாளர் நாகராஜன் அனுமதி வழங்கினார். கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு கட்டளை பகுதியில் சுவரொட்டி பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. இதைக் கண்டு பீதியடைந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் தனிப்பிரிவு ஆய்வாளர் ரமேஸ்குமார் தலையிட்டு கூட்டம் நடத்த அனுமதி இல்லை என்று கூறினார். பிறகு மாவட்ட கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே அவர்களை நேரில் சந்தித்து அனுமதி மறுத்தது தொடர்பாகப் பேசினோம். அறையை விட்டு தோழர்கள் வந்தவுடன் எஸ்.பி இன்ஸ்பெக்டர் ரமேஸ்குமார் பொங்கி எழுந்து உதிர்த்த வார்த்தைகள் இதோ…

நீங்க நாலு பேரு பேசுவீங்க. 40 பேர் அடிக்க வருவாங்க. அதுக்கெல்லாம் நாங்க பாதுகாப்பு தர முடியாது! நாலாயிரம் பேருக்கு போட்டுக் காட்டுவீங்க (வினவு தளத்தைக் குறிப்பிடுகிறார்). உங்களுக்கு 4 இடத்தில் கொடுத்ததே அதிகம். அதுக்கு மேல் ஒரு இடம் கூட அனுமதி இல்லை. வழக்கறிஞரை பார்த்து நீங்க கோர்ட்ல வாதாடுங்க. இங்க வதாடக் கூடாது. இது ஒண்ணும் கோர்ட் இல்ல. நீங்க போய் மக்களுக்கு எடுத்துச் சொன்னா மட்டும் அவன் திருந்திட போறான்களா? கரூர்ல மட்டும்தான் உங்களுக்கு அனுமதி கொடுத்து இருக்கோம். வேற எந்த மாவட்டத்திலும் கொடுக்கல.. அதுதான் எங்க வேலையா? மைனர் யாரும் குடிக்கல, மேஜர்தான் குடிக்கிறாங்க. நீங்க உங்க பப்ளிசிட்டி விளம்பரம் தேடுறீங்களா?”

ரவுடி போல அதிகார திமிருடன் நடந்து கொண்ட ரமேஸ்குமாரை எஸ்.பி அறைக்கு வெளியே மக்கள் அதிகாரம் தோழர்களும் வழக்கறிஞர்களும் சரமாரியாகக் கேள்வி கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டு ஆர்ப்பாட்ட களமாக்கினர். கட்டளை பகுதியில் மணல் கொள்ளையும், சந்துக்கடை சாராயம் விற்பனையும் அமோகமாக செய்து வருகின்றனர். இந்தக் கொள்ளையில் எஸ்.பி இன்ஸ்பெக்டர் ரமேஸ்குமாருக்கு நேரடியாக தொடர்பு உள்ளது. மற்றும் உள்ளூர் போலீஸ் முதல் மாவட்ட போலீஸ் வரை மணல் மாஃபியா கும்பலுக்கும் சாராய வியாபாரிகளுக்கும் சொம்பு தூக்கும் எஸ்.பி இன்ஸ்பெக்டர் ரமேஸ்குமாரை கண்டித்து நகரம் முழுவதும் சுவரொட்டி ஒட்டப்பட்டு ரமேஸ்குமாரின் உண்மை முகத்தை மக்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியது மக்கள் அதிகாரம்.

சுவரொட்டி முழக்கங்கள்
மூடு டாஸ்மாக்கை! மாயனூர் – கட்டளை பகுதியில் தெருமுனைக் கூட்டம் நடத்தத் தடை!

மாவட்ட நிர்வாகமே!
மாயனூர் காவல் ஆய்வாளர் கூட்டம் நடத்த அனுமதி கொடுத்தும் SP இன்ஸ்பெக்டர் ரமேஸ்குமார் ரத்து செய்த மர்மம் என்ன?

கரூர் மாவட்டத்தில் மக்கள் உரிமைக்காக பேச வேண்டும் என்றால் இன்ஸ்பெக்டர் மனது வைத்தால்தான் சாத்தியமா?

உழைக்கும் மக்களே!
மக்களின் பேச்சுரிமையை மறுக்கும் அதிகார வர்க்கக் கும்பலை தூக்கியெறிய மக்கள் அதிகாரமே தீர்வு!

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

தகவல்
மக்கள் அதிகாரம்,
கரூர்  செல் 9791301097

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க