Thursday, July 9, 2020
முகப்பு மறுகாலனியாக்கம் கல்வி திருச்சி ஐ.ஐ.ஐ.டி: அடிப்படை வசதி கோரி போராட்டம் !

திருச்சி ஐ.ஐ.ஐ.டி: அடிப்படை வசதி கோரி போராட்டம் !

-

திருச்சி ஐ.ஐ.டி.டி-யில் அடிப்படை வசதிகள் கோரி பு.மா.இ.மு தலைமையில் மாணவர்கள் போராட்டம்

த்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் ஒன்றான இந்திய தகவல் தொழில் நுட்ப கழகம் (IIIT) நாடு முழுவதும் இருபது இடங்களில் இயங்கி வருகின்றது. இவற்றில் தமிழகத்தில் காஞ்சிபுரம் மற்றும் திருச்சியில் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தினுள் என இரண்டு ஐ.ஐ.ஐ.டி- கள் செயல்பட்டு வருகின்றன. ஜே.ஈ.ஈ (JEE) என்றழைக்கப்படும் திறனறியும் தகுதித் தேர்வில் உரிய கட் ஆஃப் (CUT OFF) மதிப்பெண்கள் பெற்றால் மட்டுமே ஐ.ஐ.ஐ.டி- க்கான கவுன்சிலிங்கில் கலந்து கொள்ள முடியும் என்பன போன்ற கடுமையான போட்டிகளுக்கு பிறகே இக்கல்வி நிறுவனங்களில் ஒரு மாணவன் சேர முடியும். மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் 50%, மாநில அரசு 35% மற்றும் பெரு நிறுவனங்கள் 15% என்கிற அடிப்படையில் இக்கல்வி நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

srirangam-iiit-campus-protest-rsyf-poster-1கடந்த 2015-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் நடைபெற்ற பி.டெக் பிரிவுக்கான கவுன்சிலிங் நடந்து முடிந்தது. ஆகஸ்ட் மாதத்திலிருந்து முறையான வகுப்புகள் தொடங்கப்பட்டன. மிகுந்த எதிர்பார்ப்புடன் வகுப்புகளுக்கு வந்த மாணவர்களுக்கு அதிர்ச்சிதான் காத்திருந்தது. எந்த விதமான அடிப்படை வசதிகளும் முறையாக செய்து தரப்படவில்லை. சி.எஸ், ஈ.சி.ஈ, ஐ.டி உள்ளிட்ட எந்த பிரிவினருக்கும் தொழில் நுட்ப வசதிகள், ஆராய்ச்சிக்கான ஆய்வுக்கூடங்கள் என எதுவுமே செய்து தரப்படவில்லை. உதாரணமாக கணிணி ஆய்வகத்தில் C++, UNIX போன்ற மென்பொருள்கள் மட்டுமே இருந்துள்ளன. இவையெல்லாம் பள்ளிக் கல்விக்கான அடிப்படை மட்டுமே கொண்டவை. ஆராய்ச்சி மாணவர்களுக்கோ புதிய கண்டுபிடிப்புகளையோ உருவாக்குவதற்கு எந்த அடிப்படையும் இல்லை. இதைவிட கொடுமை தகுதிவாய்ந்த பேராசிரியர்கள் போதுமான எண்ணிக்கையில் இல்லை என்பதோடு இருக்கின்ற பேராசிரியர்கள் கற்பிக்கும் திறனில் வெகுவாக பின் தங்கியே இருந்துள்ளனர்.

srirangam-iiit-campus-protest-3மேலும் ஐ.ஐ.ஐ.டி வளாகம் என்பது புரட்சி தலைவி அம்மா அவர்களின் சொந்த தொகுதியான சிறீரங்கத்தில் சேதுராப்பட்டி என்கிற இடத்தில் கட்டப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. 62.97 ஏக்கர் பரப்பளவில் நிலம் கையகப்படுத்தப்பட்டு, கோடிக்கணக்கான ரூபாய் நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டு விட்டது. ஆனால் இதுவரை ஒரு செங்கல் கூட எடுத்து வைக்கப்படவில்லை (எல்லாம் அந்த ஓ.பி. எஸ்க்கே வெளிச்சம்). தங்களுக்கான கல்வி வளாகம் கட்டப்படாமலேயே இருந்தும் கூட அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள் வகுப்புகள் இன்றுவரை நடத்தப்பட்டு வருகிறது.

srirangam-iiit-campus-protest-2அடிப்படை வசதிகள் கூட இல்லாமை, ஆயிரக்கணக்கில் விடுதி உணவுக் கட்டணம் வசூலித்தும் அதற்குரிய தரத்தில் உணவுகள் வழங்கப்படாதது உள்ளிட்ட பிரச்சனைகள் காரணமாக, 154 மாணவர்கள் கவுன்சிலிங்கில் இக்கல்லூரியை தெரிவு செய்து பின்னர் நேரில் பார்த்தவுடன் 82 மாணவர்கள் திரும்பிச் சென்றுவிட்டனர். வட இந்தியா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த பெரும்பாலான மாணவர்களில் 72 பேர் மட்டுமே வகுப்புகளை தொடர்ந்துள்ளனர் (விரைவில் குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்படும் என்கிற நம்பிக்கையில்). ஆனால் நாளுக்குநாள் பிரச்சனைகள் அதிகரித்து சென்றதால் ஐ.ஐ.ஐ.டி கேம்பஸ் மென்டர் (IIIT CAMPUS MENTOR) ஆன அண்ணா பல்கலைக்கழக டீன் டாக்டர் டி. செந்தில் குமாரிடம் (DEAN Dr. T. Senthil Kumar) முறையிட்டுள்ளனர். அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிக்கும் தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர்களுக்கு குடிநீர் வசதி கூட முறையாக ஏற்படுத்தி தராமல் ஆண்டையை போல அதிகாரம் செலுத்தும் டீன் செந்தில் குமாருக்கு இது எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. அவ்வப்போது சில சாக்கு போக்குகளை சொல்லி ஏய்க்கவே முயற்சித்து வந்துள்ளார். அதன் பிறகும் உரிய நடவடிக்கை எடுக்கப்படாததால் சென்னையில் உள்ள டோட் (DOTE) வளாகத்திற்கு சென்று துறை சார்ந்த அதிகாரிகளை சந்தித்து மாணவர்கள் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்து அவரும் நடவடிக்கை எடுக்காததால் இனி போராட்டத்தை தவிர வேறு வழியில்லை என்பதை மாணவர்கள் உணர்ந்து கொண்டனர்.

srirangam-iiit-campus-protest-rsyf-poster-2தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி பாரதிதாசன் பல்கலைக்கழகம் வரை கண்டன பேரணி ஒன்றையும் நடத்தியுள்ளனர். அதன்பிறகும் அரசு தரப்பில் இருந்து உரிய பதில் இல்லாததால் வகுப்புகளை புறக்கணித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இம்மாணவர்களுக்கு ஆதரவாக புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி தோழர்கள் களமிறங்கினர். மாணவர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி சுவரொட்டி இயக்கம் மாவட்டம் தழுவிய அளவில் மேற்கொள்ளப்பட்டது. அடுத்த கட்டமாக போராட்டத்தை முன்னெடுத்து செல்வதற்கான ஆலோசனைகளையும் வழிகாட்டுதல்களையும் பு.மா.இ.மு தோழர்கள் உடனிருந்து வழங்கினர்.

மாணவர்கள் பு.மா.இ.மு-வின் தலைமையில் போராடுவதை கண்டு அஞ்சிய நிர்வாகம், உயர்கல்வி துறை அமைச்சரான ஸ்மிருதி ராணியுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் பேசுவதற்கு ஏற்பாடு செய்து தருவதாகவும் தற்காலிகமாக போராட்டத்தை கைவிடவேண்டும் என கோரியது. ஏற்கனவே டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் பிரச்சனையில் ஆப்பசைத்த குரங்காக ஸ்மிருதி ராணி உள்ளிட்ட பி.ஜே.பி, ஆர். எஸ். எஸ் கும்பல் சிக்கிக் கொண்டிருக்கும் நிலையில் வீடியோ கான்பரன்சிங் ஏற்பாடு என்ற மோசடி நாடகமும் தோல்வி அடைந்தது. போராடும் மாணவர்களுக்குள்ளேயே உள்ள ஏ.பி.வி.பி ஆதரவு சக்திகள் சில பேர் மூலம் போராட்டத்தை உடைக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளை பு.மா.இ.மு தோழர்கள் அம்பலப்படுத்தி முறியடித்தனர்.

இனி வேறு வழியில்லை என்ற நிலையில் போராட்டத்தை நசுக்கும் வகையில், சட்ட விரோதமாக பல்கலைக்கழக விதிமுறைகளை மீறி டீன் செந்தில் குமார் (காலவரையற்ற விடுமுறை) IDC என அறிவித்தார். இதன் தொடர்ச்சியாக விடுதியிலிருந்த மாணவ மாணவிகள் பெட்டி படுக்கைகளுடன் நடுத்தெருவிற்கு தள்ளப்பட்டனர். எனினும் மன உறுதி குன்றாமல் வீதியிலேயே தங்களது போராட்டத்தை தொடர்ந்தனர். இந்நிலையில் வளாகத்திற்கு வெளியே பந்தல் அமைக்க முயற்சித்ததை சட்டம் ஒழுங்கு போலீசார் மூலம் நிர்வாக தடுத்து விட்டது. அதையும் மீறி பு.மா.இ.மு தோழர்களின் உதவியுடன் தற்காலிக பந்தல் அமைத்து இரண்டாவது நாளாக போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

தகவல்

புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
திருச்சி.

தொடர்புக்கு: 99431 76246.

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க