திருநாள் கொண்ட சேரி. 03-01-2016 அன்று இறந்துபோன தாழ்த்தப்பட்ட முதியவர் செல்லமுத்துவின் உடலை ஊரின் பொதுப்பாதை வழியே எடுத்துச் செல்லக்கூடாது என்று அந்த ஊரின் வன்னியர்கள் கட்டளையிட, அதற்கெதிராக சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகினர் அவ்வூர் தாழ்த்தப்பட்ட மக்கள். பொதுப்பாதை வழியாக உடலை எடுத்துச் செல்வதை மாவட்ட நிர்வாகம் உத்திரவாதப்படுத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டது. ஆனால், சாதிவெறியர்களின் உத்தரவுதான் அமலானது. அவர்கள் உத்தரவுப்படி பிணத்தை வயல்காட்டின் வழி போலீசே சுமந்து சென்றது. எதிர்ப்பு தெரிவித்த தாழ்த்தப்பட்ட மக்கள் கைது செய்யப்பட்டனர். நாடே கண்ட இந்தக் காட்சியை மாட்சிமை தங்கிய நீதிபதிகள் காணாமலிருக்க வாய்ப்பில்லை.
வழக்கறிஞர்கள் மீது ஒழுங்கை நிலைநாட்டும் பொருட்டு, சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தை மத்தியப் படையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தவர்களான நீதியரசர்கள், திருநாள் கொண்ட சேரியை இராணுவத்தின் கட்டுப்பாட்டில் கொண்டு வருவார்களென்றோ, போலீசு அதிகாரிகளைப் பணிநீக்கம் செய்ய உத்தரவிடுவார்கள் என்றோ, ஆதிக்கசாதி வெறியர்களை தீண்டாமைக் குற்றத்துக்காக உள்ளே தள்ளுவார்களென்றோ யாரேனும் எதிர்பார்த்தால் அவர்கள் சட்டம், தமிழக அரசு, நீதிமன்றம் உள்ளிட்ட எதைப் பற்றியும் எதுவும் தெரியாத அறிவிலிகள் என்று மட்டும் சொல்லலாம். ‘சட்டத்தின் ஆட்சி’க்கு மாவட்ட நிர்வாகம் சங்கு ஊத, நீதித்துறை சேகண்டி அடிக்க, சட்டம் ஒழுங்கின் ‘காவலர்கள்’ பிணம் தூக்கியிருக்கிறார்கள். சகாயம் சுடுகாட்டில் துயின்ற காதைக்குப் பின்னர், இந்த அரசமைப்பின் தோல்வி பொருத்தமான வடிவத்தில் இன்னொருமுறை இங்கே அம்பலமாகியிருக்கிறது. சாதி வெறியர்களைப் பொருத்தவரை இதனைத் தமது வெற்றி என்று மட்டுமின்றி, சத்திரிய வீரம் என்றும் அவர்கள் கொண்டாடிக் கொள்வார்கள்.
எனினும், இந்த மாபெரும் சத்திரிய வீரம், ‘தமிழ் வீரத்தால்’ மறைக்கப்பட்டதுதான் வரலாற்றுச் சோகம். இந்த ‘வீரத்தை’ உலகின் கண்களிலிருந்து மறைக்கும் வண்ணம், வேறொரு கூத்து தமிழகத்தில் அரங்கேறிக் கொண்டிருந்தது. இந்த ஆண்டு சல்லிக்கட்டு நடத்தவில்லையெனில் தமிழகத்தைக் கடல் கொண்டுவிடும் எனுமாப்போலே தமிழகம் கொந்தளித்துக் கொண்டிருந்ததாக ஊடகங்கள் சித்தரித்தன.
“சல்லிக்கட்டு தடைக்கு யார் பொறுப்பு” என்று தி.மு.க., அ.தி.மு.க., காங். உள்ளிட்ட கட்சிகள் கூச்சலிட்டுக் கொண்டிருக்க, கோட்டையைப் பிடித்தே தீருவது என்ற முயற்சியில் ஈடுபட்டிருக்கும் பாரதிய ஜனதா, சல்லிக்கட்டை நடத்துவதற்கான அறிவிக்கை என்ற பெயரில் தமிழக மக்களின் தலையில் ஒரு உருண்டை வெண்ணெயை வைத்தது. உடனே கருப்புக் கொடிகள் வண்ணத் தோரணங்களாயின.
பத்திரிகையாளர் கூட்டத்துக்கும் மைதானத்துக்கும் இடையிலான வேறுபாடு புரியாத ஒரு ஏறு அவசரப்பட்டு பொன்னாரைத் தழுவ, அவர் போட்டி துவங்குமுன்னரே குத்துப்பட்டு ரத்தம் சிந்திய தமிழ் (இந்து) வீரரானார். பொறாமையை மறைத்துக் கொண்டு எதிர்க்கட்சித் தமிழர்கள் சூட்டிய புகழாரங்களை, தனது கழுத்திலிருந்து கழற்றி ஆணியில் மாட்டி முடிப்பதற்குள் மோடி அரசின் அறிவிக்கைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து விட்டது. தமிழகத்தின் தலையில் மோடி அரசு வைத்த வெண்ணெய் உருகத் தொடங்கு முன்னரே ஆவியாகிவிட்டது. மோடி பொங்கல், மோசடிப் பொங்கலாயிற்று.
000
சல்லிக் கட்டு தொடர்பாக நடைபெற்ற விவாதங்களில் சிந்துவெளித் தொல்லியல் சான்றுகள், சங்க இலக்கியம் ஆகியவற்றில் தொடங்கி எட்கர் தர்ஸ்டனின் ஆய்வுகள் வரையிலான அனைத்தும் சான்று காட்டப்பட்டு விட்டன. “இது ஐரோப்பிய-கிறித்தவ சதி, பக்ரீத்துக்கு விலங்குகளைக் கொல்லும் முஸ்லிம்களின் மத உரிமைக்கு அனுமதி, இந்துக்களின் சல்லிக்கட்டுக்குத் தடையா“ என்று இந்து வெறியும் கிளப்பப்பட்டது. பெடா (கஉகூஅ) அமைப்பின் கொடும்பாவிகள் கொளுத்தப்பட்டன.
இவையன்றி, சல்லிக்கட்டு தடை என்பது இந்த மண்ணுக்குரிய மாட்டு இனங்களை அழிப்பதற்கான பன்னாட்டு நிறுவனங்களின் சதி என்றும், காங்கேயம், உம்பளச்சேரி உள்ளிட்ட தமிழகத்தைச் சேர்ந்த பல்வகை காளையினங்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாகவும் சில ஆர்வலர்கள் எச்சரித்தனர். சல்லிக்கட்டு தடை செய்யப்பட்டு விட்டதால் இனப் பெருக்கத்துக்குப் பயன்படுத்தப்படும் இக்காளைகள் அடிமாட்டுக்கு அனுப்பப்படுகின்றன என்றும், சல்லிக்கட்டை நடத்துவதொன்றுதான் இந்தக் காளையினங்களைக் காப்பதற்கு வழி என்றும் இவர்கள் வாதிட்டனர்.
பாரதிய ஜனதாவின் கூற்றை மட்டும் குப்பை என்று தள்ளி விடுவோம். எஞ்சியிருப்பனவற்றில் பல, அரை உண்மைகள். ஆனால் சல்லிக்கட்டுக்கு ஆதரவாக வாதாடுபவர்கள், இந்த தடையின் காரணமாகத்தான் நாட்டு மாடுகள் அழியத் தொடங்கின என்று தொடங்கி, அப்படியே அதை விவசாயத்தின் அழிவு வரை நீட்டித்துச் செல்வது, “சீப்பை ஒளித்ததால்தான் கல்யாணம் நின்றுவிட்டது” என்பதற்குச் சமமான நகைச்சுவை.
“வளமான விவசாயம் – மேய்ச்சல் நிலங்கள் – கால்நடைகள் – விவசாயிகளின் மகிழ்ச்சி – பொங்கல் – மாட்டுப் பொங்கல்” என்பதைத் தலைகீழாகத் திருப்பி, “தமிழினப் பெருமிதம் – சல்லிக்கட்டு – கால்நடைப் பெருக்கம் – வளமான விவசாயம் – விவசாயிகளின் மகிழ்ச்சி” என்று சல்லிக்கட்டின் முக்கியத்துவத்தை ‘அறிவியல் பூர்வமாக’ நிறுவ முயல்கிறார்கள் அதன் ஆர்வலர்கள்.
விவசாயத்தில் நவீனக்கருவிகள் நுழைந்ததன் விளைவாக, கால்நடைகளின் பயன்பாடு குறைந்திருப்பது நம் கண் முன் தெரியும் உண்மை. பசுமைப் புரட்சியின் தீய விளைவுகள், விதை நெல் முதல் கால்நடைகள், தாவரங்கள் வரையிலான அனைத்திலும் பன்மைத்துவத்தை அழித்து தமது ஏகபோகத்தை நிலைநாட்டவும், விதை முதல் விலங்கினங்கள் வரை அனைத்திலும் பாரம்பரிய மரபினங்களைத் திருடவும் பன்னாட்டு நிறுவனங்கள் செய்யும் முயற்சிகள் ஆகியவை அம்பலமாகத் தொடங்கி பல ஆண்டுகள் கடந்து விட்டன. இந்த அழிவுகளில் தொடங்கி, நீர்நிலைகளின் அழிவு வரையிலான அனைத்துக்கும் யார் காரணமோ, அவர்கள்தான் தமிழ்ப் பண்பாடு, மரபு ஆகியவற்றின் பெயரால் இன்று சல்லிக்கட்டுக்காக குரல் கொடுக்கிறார்கள்.
விவசாயத்தின் அழிவு காரணமாக தமிழகத்தின் கிராமங்களில் இன்று வேலை இல்லை. மக்கள் பிழைப்பு தேடி நகரத்துக்குத் துரத்தப்பட்டிருக்கிறார்கள். எஞ்சியிருக்கும் விவசாயிகளோ வேலைக்கு ஆள் கிடைக்காமல், நடவுக்கும் அறுப்புக்கும் எந்திரங்களைத் தேடி ஓடுகிறார்கள். கிராமங்களில் உழவுக் காளைகளும் இல்லை, காளையரும் இல்லை. பல கிராமங்களில் ஏழை விவசாயக் குடும்பங்களில் எஞ்சியிருப்பவர்கள் முதியவர்கள் மட்டும்தான். மனிதர்களே பிழைக்க முடியாத கிராமங்களில் மாடுகள் மட்டும் எப்படி எஞ்சியிருக்க இயலும்?
பசுக்களின்பால் பெரும் காதல் கொண்ட பா.ஜ.க., சமீபத்தில் மகாராட்டிரத்தில் மாட்டுக்கறி விற்பனையைத் தடை செய்தது. வழக்கமாக, உழவுக்கோ கறவைக்கோ பயனற்ற மாடுகளை விற்றுவிட்டு புதிய மாடுகளை வாங்கும் விவசாயிகள், இந்தத் தடைச் சட்டத்தின் விளைவாக அவற்றை விற்க முடியாமல் மாடு வளர்ப்பையே கைவிட்டு வருகின்றனர்.
“விவசாயத்தால் என்னுடைய குடும்பத்துக்கே சோறு போடமுடியவில்லை. இந்த லட்சணத்தில் மாட்டைப் பராமரிக்க மாதம் 5,000 ரூபாய்க்கு நான் எங்கே போவது?” என்று கேள்வி எழுப்பியிருந்தார் ஒரு விதர்பா விவசாயி. விதர்பா பகுதியில் விவசாயிகள் தற்கொலை அதிகரிப்பதற்கு இணையாக மாடுகளின் எண்ணிக்கையும் குறைந்து வருவதைத் தனது ஆய்வில் சுட்டிக் காட்டியிருக்கிறார் பத்திரிகையாளர் சாய்நாத்.
விவசாயிகள் கொத்துக் கொத்தாக தற்கொலை செய்து கொள்ளும் நாட்டில் பசுப் பாதுகாப்பு பற்றிப் பேசுவது பார்ப்பன வக்கிரம் என்பது போதுமான அளவுக்கு அம்பலமாகிவிட்டது. இலவச அரிசியிலும் நூறு நாள் வேலையிலும் உயிர் தரித்திருக்கும் தமிழக கிராமங்களில், ஒரு இலட்சம் – இரண்டு லட்சம் கொடுத்து சல்லிக்கட்டுக் காளை வாங்கி, அதனைப் பராமரித்து, தமிழரின் பண்பாட்டு மரபு விட்டுப் போகாமல் சல்லிக்கட்டு நடத்துவது மட்டும் எப்படி வீரமாகிவிடும்?
அதுமட்டுமல்ல, வலியோனிடம் அஞ்சி நடுங்கிக் காலை நக்கினாலும், எளியோரை ஏறி மிதிக்க முடியுமாயின் அதுவே வீரமாகி விடுகிறது. மணல் கொள்ளையைத் தடுக்க முடியாத, டாஸ்மாக் கடையை மூட முடியாத ‘தமிழ் வீரம்’, மாட்டின் திமிலைப் பிடித்துத் தொங்கிவிட்டு மீசையை முறுக்குகிறது. ஜெயலலிதாவின் காலில் நெடுஞ்சாண்கிடையாக வீழ்ந்து கிடக்கும் அமைச்சர் பெருமக்களுக்கு மீசை இல்லை என்றா நினைக்கிறீர்கள்? எழுந்த பிறகு பாருங்கள் எண்ணெய் போட்ட மீசைகளை!
சல்லிக்கட்டுக்குப் பெயர்போன தென் மாவட்டங்கள்தான் கிடா வெட்டுக்கும் பெயர் போனவை. பாண்டி கோயிலிலும், சுடலை மாடசாமி கோயில்களிலும் ஆண்டுதோறும் வெட்டப்படும் கிடாக்களின் எண்ணிக்கை லட்சங்களில் இருக்கும். 2003-இல் ஜெயலலிதா கிடா வெட்டுத் தடைச் சட்டம் போட்டபோது, தென்தமிழகம் ரத்தக் களறியாகும் என்றுதான் பலரும் எண்ணினார்கள். ஒரு கோழி அறுக்கும் சத்தம்கூட எந்தக் கோயிலிலிருந்தும் கேட்கவில்லை. இந்த வெட்கக்கேட்டுக்குப் பின்னர்தான் ம.க.இ.க. கிடா வெட்டும் போராட்டத்தை திருச்சியில் நடத்தியது. சட்டத்தை மீறி கிடா வெட்டி சாமி கும்பிடும் துணிவற்ற வீர மறவர்கள்தான், மேலவளவு முருகேசனை வெட்டிப் போட்டனர் என்பதை நாம் மறுக்க முடியாது.
சல்லிக்கட்டுக்காக ஊடகங்களில் குமுறிக் கொந்தளித்து வெடித்தவர்களைப் பார்த்தபோது, பத்து இடங்களிலாவது ரத்தக்களறி உறுதி என்றுதான் தோன்றியது. ஆனால் ஒரு இடத்தில்கூட சண்டை நடக்கவில்லை, சட்டையும் கிழியவில்லை. மறத்தமிழர்களின் குமுறல் கொந்தளிப்பெல்லாம் வெறும் சலாம் வரிசை என்பது, தடை விதித்த உச்ச நீதிமன்றத்தை அவர்கள் கண்ணீருடன் குனிந்து கும்பிட்டவுடன் அம்பலமாகிவிட்டது.
“மொட்டை, ஒப்பாரி, கண்ணீர், கருப்புக்கொடி” – இவைதான் உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராகத் தமிழ் வீரம் தன்னை வெளிப்படுத்திக் கொண்ட வடிவங்கள். “காளைகளுக்குச் சிரிக்கத் தெரியாது” என்பது தமிழகம் செய்த பேறு. மீறி அவை சிரிக்க முயன்றிருந்தால், ‘தமிழ் மரபை மீறிய’ அவற்றின் செயலைக் கட்டுப்படுத்தி ‘ஒழுங்கை’ நிலைநாட்டும் பொருட்டு, மூக்கணாங்கயிறு கொண்டு போலீசு அதிகாரிகளே காளைகளின் வாயைக் கட்டியிருப்பர்.
திருநாள் கொண்ட சேரியில் ‘சத்திரிய/இந்து/தமிழ்’ வீரத்தைக் காப்பாற்றும் பொருட்டு பிணம் தூக்கிய போலீசார், தமிழ் வீரத்தைக் காக்கும் பொருட்டு இதைக்கூடச் செய்ய மாட்டார்களா என்ன?
000
குறிப்பு: பெரியவர் செல்லமுத்துவின் உடலை பொதுப்பாதை வழியாக எடுத்துச் செல்ல வேண்டும் என்று கோரிய திருநாள் கொண்டசேரி தாழ்த்தப்படட மக்கள், “மொட்டை போடுதல், ஒப்பாரி வைத்தல், கருப்புக்கொடி ஏற்றுதல்” போன்ற இழவு வீட்டுக்குப் பொருத்தமான வடிவங்களில் தமது எதிர்ப்பைக் காட்டியிருக்க வேண்டும். அவர்களோ காளைகளை மறிக்கும் காளையரைப் போல, போலீசை வழிமறித்து மோதி தடியடி பட்டனர். பலருக்கு எலும்பு முறிந்தது. பெண்கள் உள்ளிட்டு 60-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இருப்பினும், இந்நடவடிக்கை ஏறு தழுவுதலையொத்த ‘தமிழ் வீரம்’ என்ற வகையினத்தில் சேருமா, அதற்குரிய வரலாற்றுச் சான்றுகள் உள்ளனவா என்பது குறித்து கட்டுரையாசிரியருக்குத் தெளிவில்லையாதலால், அதனை அறிஞர்களின் முடிவுக்கே விட்டு விடுகிறார்.
– தொரட்டி
_______________________________
புதிய ஜனநாயகம், பிப்ரவரி 2016
_______________________________