Tuesday, September 17, 2024
முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்அரித்துவாரமங்கலம் டாஸ்மாக்கை மூடு : போலீசை வீழ்த்திய சிறுவர்கள் !

அரித்துவாரமங்கலம் டாஸ்மாக்கை மூடு : போலீசை வீழ்த்திய சிறுவர்கள் !

-

ஏன் முடியாது? மூடி காட்டுவோம் டாஸ்மாக்கை! அதிகார வர்க்கத்தை பின்வாங்க வைத்த அரித்துவாரமங்கல மக்களின் நெஞ்சுறுதி மிக்கப் போராட்டம்

திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் வட்டம், அரித்துவாரமங்கலம் என்கிற கிராமத்தில் கொலுவிருக்கும் டாஸ்மாக் பல ஆண்டுகளாக அங்குள்ள மக்களை சிறுக சிறுக அரித்துக்கொண்டிருக்கிறது. அவ்வூரை சுற்றியுள்ள பெருங்குடி, மருவத்தூர், மூலக்கால் பெருங்குடி, பேட்டை, பட்டம், அவளிவநல்லூர், செம்பையநல்லூர், குமாரமங்கலம், தேவமங்கலம், கொத்தூர், கொட்டப்படுகை, கேத்தனூர், குவளவேலி, நிம்மேல்குடி, முனியூர், சடையாங்கால், பயரி, சேரி, குப்பணாம்பேட்டை ஆகிய அனைத்து ஊர் விவசாயிகள், தொழிலாளர்கள், மாணவர்கள், இளைஞர்களை இந்த டாஸ்மாக் சீரழித்து வருகிறது. அது மட்டுமா அரசு தொடக்கப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி, சிவன்கோவில், ரேசன் கடை, பஞ்சாயத்து அலுவலகம் ஆகியவற்றுக்கு அருகாமையில் சுமார் 100 மீட்டர் சுற்றளவுக்குள் டாஸ்மாக் உள்ளது.

டாஸ்மாக்கை அரசு நடத்துவதே சட்டவிரோதம் என்றால், இது சட்ட விரோதத்திற்கும் மேல் சட்டவிரோதமாகவும், இந்த அரசின் கட்டமைப்பு அனைத்தும் ஆளும் அருகதையை இழந்துவிட்டது என்பதை பறைசாற்றும் வகையில் ‘என்னை உங்களால் என்ன செய்து விட முடியம்?”; என்று அப்பகுதி மக்களை பார்த்து மிரட்டிக்கொண்டிருந்தது டாஸ்மாக் கடை. இப்பகுதி மக்களின், குறிப்பாக ஆயிரக்கணக்கான பெண்களின் குமுறலை வெளிப்படுத்தும் விதமாக 07-03-2016 அன்று பள்ளி மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் சேர்ந்து மக்கள் அதிகாரம் அமைப்பின் தோழர் பாண்டியராஜன் தலைமையில் காலை 10 மணிக்கு மதுக்கடை திறந்தவுடனே விண்ணதிர முழக்கங்களுடன் பேரணியாக சென்று முற்றுகையிட்டனர்.

முற்றுகையிட்டு 1 மணி நேரம் கழித்து காவல் துறையினர் வந்து சேர்ந்தனர். அவர்களிடம் மக்கள் “டாஸ்மாக்கால் எங்க குடும்பம் அழியிது இதை உடனே மூடுங்க, அதுமட்டுமல்லாமல் பள்ளிக்கூடத்திற்கு அருகமையிலே சட்டவிரோதமாக நடக்கிறது, போலீசு நீங்க செய்யுர வேலைய நாங்க செய்யுறோம். கடையை மூடுங்க” என்று சொல்லியதற்கு எந்த பதிலையும் கொடுக்க முடியாமல் பின்வாங்கி ஓடியது.

பிறகு சிறிது நேரம் கடந்து டி.எஸ்.பி யும் வந்து சேர்ந்தார். அவர் மாணவர்களை அப்புறப்படுத்திவிடலாம் என்று எண்ணி நைச்சியமாக சீருடையில் இருக்கும் மாணவர்களிடம் சென்று “தம்பிங்களா உங்கப் பாடம் வீணாகும், எதிர்காலம் என்னவாகும்” என்று நீலிக்கண்ணீர் வடித்தார் அதற்கு பதிலடியாக “தினம் தினம் வீட்டுல எங்கப்பா எங்கள அடிக்கும் போதுதான் எங்க படிப்பு வீணாகுது, இன்னக்கி ஒருநாள் வீணாகுனா ஒன்னும் ஆகாது இந்த கடைய மூடுங்க” என்றனர். இன்னும் சில மாணவர்கள் போலீசின் தந்திரத்தை புரிந்துக்கொண்டு “நான் பெயிலாப்போனாலும் அடுத்த வருசம் படிச்சிக்கிறேன், டி.சி யை கொடுத்தாலும் வேற ஸ்கூல சேர்ந்து படிச்சிக்குறேன். இந்த கடையை மூடுங்க” என்று சொன்னனர். இந்த மாணவர்கள் யாரும் மூளைச்சலவை செய்து அழைத்து வரப்பட்டவர்கள் அல்ல அவர்கள் தான் முற்றுகையையே தலைமையேற்று நடத்துகின்றனர் என்பதை புரிந்து கொண்ட போலிசார் செய்வதியறியாது ஓரமாக ஒதுங்கி நின்று கொண்டனர்.

amangalam-shutdown-tasmac-protest-12“அஞ்சமாட்டோம், அஞ்சமாட்டோம் போலீசுக்கு அஞ்சமாட்டோம், விடமாட்டோம் விடமாட்டோம் கடையை மூடும் வரை விடமாட்டோம்” என்று முழக்கங்களுடன் பறையோசை, புரட்சிகரப்பாடல்கள் என தொடர்ச்சியாக தொய்வின்றி போராட்டம் உறுதியாக நடந்து கொண்டே இருந்தது.

amangalam-shutdown-tasmac-protest-17பயந்துகொண்டிருந்த பள்ளி தலைமையாசிரியர் மதிய உணவுக்கு கூட மாணவர்களை வெளியே விடாமல் ‘சிறப்பாக’ பாடம் நடத்தினார். சில மணி நேரம் கழித்து மாவட்ட டாஸ்மாக் அதிகாரி வந்து சேர்ந்தார், அவரும் தம் பங்கிற்கு மக்களிடம் சென்று “இந்தக் கடை இருப்பது தப்புதான், தேர்தல் முடியும் வரை நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது, தேர்தல் முடிந்து 10 நாட்களுக்குள் மூடி விடுகிறோம்” என்று பேசியதற்கு, பெண்கள் “அதுவரைக்கும் வீட்டுக்கு ஒரு போலீசு பாதுகாப்பு குடுங்க” என்றும் ஒரு பெண் தனது தாலியை காட்டி “பாருங்க வெறும் கயிறு தான் எல்லாம் போச்சு, இப்பவே கடைய மூடுங்க, அதுவரைக்கும் இந்த எடத்தவுட்டு நகர மாட்டோம்” என்று கூறியதற்கும், இளைஞர்கள் அவரிடம் “சார் கடையே சட்ட விரோதமுனு சொல்றோம் அதை ஏன் மூட மாட்டேங்கிறீங்க?” என்றதற்கும் பதிலின்றி பின்வாங்கினார்.

amangalam-shutdown-tasmac-protest-10அதற்குள் சில தோழர்கள் போராட்டக்காரர்களுக்கு மதிய உணவு ஏற்பாடு செய்ய பாத்திரம், அரிசி தயார் செய்து அடுப்புகளை கட்ட ஆரம்பித்தனர். கதிகலங்கிப்போன டி.எஸ்.பி ஓடி வந்து “உங்களை கைது செய்யப் போகிறோம்” என்று சொன்னார். யாரும் அசையாமல் விண்ணதிர “டாஸ்மாக்கை மூடும் வரை விடமாட்டோம், போலீசுக்கு அஞ்சமாட்டோம்” என்று முழக்கமிட்டுக்கொண்டே இருந்தனர். போலீசு ‘வேறுவழியின்றி’ இவர்களை தர தரவென்று இழுத்து வேனிற்குள் தள்ளியது. பள்ளி மாணவர்களையும், வயதானவர்களையும் ஏற்ற மறுத்துவிட்டு காவல் நிலையத்திற்கு சென்றுவிட்டது.

காவல் நிலையத்திற்குள்ளும் கடையை மூடும்வரை உணவுக்கூட தொடமாட்டோம் என்று பெண்களும், இளைஞர்களும் கூறிவிட்டு போராட்டத்தை தொடர்ந்தனர். மக்களுடன் கைதான 3 வயது குழந்தைக்கு உணவு கொடுத்தனர், அக்குழந்தை உணவு உண்ண மறுத்துவிட்டது, போலீசு காரர்கள் பிஸ்கட் கொடுத்து சாப்பிட சொல்லி போராடியும் அக்குழந்தை மறுத்துவிட்டது. அக்குழந்தையின் தாயை மட்டும் விட்டுவிடுவதாக போலீசு சொன்னதற்கு அந்த தாய் “என் மேலையும் கேஸ்போடுங்க இல்லையனா எல்லோரையும் விடுங்க என” உறுதியாக இருந்தார்.

amangalam-shutdown-tasmac-protest-16போராட்டத்தில் பங்கேற்ற அனைத்து மாணவர்களும் காவல் நிலையத்திற்கு வெளியே உட்கார்ந்து விட்டனர். சிறிது நேரம் கழித்து அந்த காவல்நிலைய எஸ்.ஐ அந்த மாணவர்களை பார்த்து “கேஸ் போட்டுவிடுவேன், ஒழுங்கா ஓடுங்கடா” என்று மிரட்டிப் பார்த்தார், அதற்கு மாணவர்கள் “அததான் நாங்களும் சொல்றோம் நாங்களும் தான் போராட்டம் நடத்தினோம், எங்களையும் கைது செய்யுங்க, இல்லையனா உள்ளே இருப்பவர்களை வெளியே விடுங்க” என்றனர். பேச வார்த்தையின்றி காவல் நிலையத்திற்குள் அந்த எஸ்.ஐ தஞ்சம் புகுந்துகொண்டார்.

பிறகு சில அ.தி.மு.க அல்லகைகளும், போலீசு எடுபிடிகளும் வந்து அந்த மாணவர்களிடம், “தம்பிகளா டி.எஸ்.பி உங்களை இந்த இடத்த விட்டு போகச் சொல்கிறார் போயிடுங்க, அவருக்கு மூடு மாறுச்சுனா அவ்வளவுதான்” என்றதற்கு அடுத்த நொடியே ஒரு மாணவன் “ஏன் டி.எஸ்.பி.க்குத்தான் மூடு மாறுமா எங்களுக்கெல்லாம் மூடு மாறாதா?” என்றும் இன்னொரு மாணவன் “டி.எஸ்.பி.ய வெளியே வரசொல்லுங்க அவுங்க யூனிபாஃர்மா இல்ல எங்க யூனிபாஃர்மா என்று பார்த்துவிடுவோம்” என்று சட்டை காலரை தூக்கி காட்டியதற்கு அந்த அல்லக்கைகள் முகம் வெளிறிப்போய் சென்றுவிட்டனர்.

amangalam-shutdown-tasmac-protest-11அதேநேரம் காவல் நிலையத்திற்குள்ளே தாயுடன் கைதான ஒரு 3 வயது குழந்தை ஒரு காவலரிடம் “நீங்க நல்லவங்களா, கெட்டவங்களா எங்கள ஏன் இங்க கொண்டுவந்து வச்சிருக்கிறீங்க… நீங்க நல்லவங்கதானாட்டுக்கு…” என்று தன் தாயையும் மீறி கேட்டது, அதற்கு அந்த போலீசுகாரர் எந்த பதிலும் இன்றி உயிரற்ற மரமாக பேசாமல் நின்றார்.

இந்தப்போராட்டமும் அதன் வீச்சும், தாக்கமும் அந்த பகுதி சுற்றுவட்டார மக்களிடையே சூறாவளியாக பரவி ஒரு அலையை உருவாக்கியது. அசைக்க முடியாத பிரமாண்ட ஆலமரத்தை போகிற போக்கில் ஆட்டம் கான வைச்சிட்டாங்களே என்று வாயடைத்து பார்க்கின்றனர். டாஸ்மாக்கை மூட முடியும் என்ற நம்பிக்கையும் துளிர்விட்டுள்ளதை பார்க்க முடிகிறது.

amangalam-shutdown-tasmac-protest-15கைதுசெய்யப்பட்டவர்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனர். அதில் சில மாதங்களுக்கு முன்பு தான் அமைப்பிற்கு வந்த இளைஞர்கள் “தோழர் மக்களுக்கு போலீசு மீதுள்ள பயத்தை போக்கவேண்டும், பக்கத்து கிராமங்களுக்கு சென்று மக்களிடம் பேசி 1000 பேரை திரட்டி டாஸ்மாக்கை மூடியே தீர வேண்டும்” என்று கூறியது இந்த போராட்டத்தின் வெற்றியை பறைசாற்றும் வகையில் இருந்தது. எல்லோரும் இந்த டாஸ்மாக்கை மூடுவதற்கான அடுத்துக்கட்ட வேலைக்கான ஆயுத்த பணியில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.

ஆணவ, அதிகார திமிர் பிடித்த சில காவல் அதிகாரிகளின் திமிர் ஒவ்வொன்றும் எரியும் பிளாஸ்டிக் உருகி ஊத்துவதுப்போல் கரைந்துபோய் வெறும் சக்கையாக்கி நிறுத்தபட்டதும், பெரும்பான்மையான காவலர்கள் இந்த மக்களையும் மாணவர்களையும் ஒடுக்க முடியாமல் தார்மீக நியாயத்தை இழந்து விட்டு நின்றதையும், கடுகளவும் அச்சமின்றி அதிகார வர்க்கத்தை கேள்வி கணைகளால் துளைத்தெடுத்து அதிகாரிகளை பின்வாங்க வைத்த பெண்களின் – இளைஞர்களின் போர்குணமும், காலை முதல் மாலை வரை உணவுக்கூட உண்ணாமல் ஆசிரியர்களின், அதிகாரிகளின், போலீசின் மிரட்டல்களையும் எதிர்த்து நின்ற பள்ளி மாணவர்களின் அசைக்க முடியா நெஞ்சுறுதியும் ஒரு விசியத்தை சொல்லவருகிறது… அது “இதோ ஆள வருகுது மக்கள் அதிகாரம்”.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

தகவல்
மக்கள் அதிகாரம்,
குடந்தை.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க