- புதுச்சேரி – வீராம்பட்டினத்தில் போராடிய வினோத் புதைகுழியில் தள்ளி கொடூரக் கொலை!
- போலீசு – ராணுவம் மக்களின் நண்பன் என்பது உண்மையில்லை!
- இன்று போலிசு அடித்துக் கொன்றது! நாளை இராணுவம் சுட்டுக் கொல்லும்!
புதுச்சேரி நகரத்தை ஒட்டியுள்ள மீனவ கிராமம் வீராம்பட்டினம். இக்கிராமத்தில் கடலோர காவல்படை முகாம் அமைக்கப்படுவதைக் கண்டித்து அம்மக்கள் தொடர்ந்து பல ஆண்டுகளாகப் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
தங்களது பகுதியில் இராணுவ கண்காணிப்பு முகாம் அமைந்தால் கண்காணிப்பு என்ற பெயரில் இராணுவத்தின் அத்து மீறல்கள் தங்களது பகுதிகளிலும் நடக்கும். அதனால் ஊர் அமைதி கெட்டு, தொடர்ந்து அசாதாரணமான சூழல் நிலவும். இத்தகைய விசயங்களால் தங்களது வாழ்வாதார உரிமைகள் பாதிக்கப்படும். அதனால் தங்களது பகுதியில் கண்காணிப்பு முகாம் அமைக்கக் கூடாது என அரசுக்குக் கோரிக்கை வைத்து தொடர்ந்து பல்வேறு வடிவங்களில் போராடி வருகின்றனர்.
ஆனால், தடித்த தோல் கொண்ட அரசோ, மக்களின் வாழ்வாதாரத்தைப் பற்றி சற்றும் அக்கறையில்லாமல், முகாம் அமைப்பதற்கான வேலைகளைத் தொடர்ந்து செய்து வருகிறது. முகாம் அமைவதற்கான இடத்தைத் தேர்வு செய்து முள்வேலி அமைத்தது. இதனால், கொதிப்படைந்த மக்கள் தங்களது உணர்வுகளை மதிக்காத அரசைக் கண்டிக்கின்ற வகையிலும், எதிர்ப்பைக் காட்டும் வகையிலும், முள்வேலிகளை அறுத்தெறிந்து போராடினர்.
இப்போராட்டங்களை ஒடுக்கி மக்களை அச்சுறுத்திப் பணிய வைக்கும் வகையில் முள்வேலி அறுத்ததாகச் சொல்லி, 11 பேர் மீது உள்ளூர் போலிசு பொய்வழக்கு போட்டது. வழக்கில் உள்ளவர்களை கைது செய்யும் வகையில் வீராம்பட்டினம் கிராமம் முழுவதும் தேடுதல் வேட்டை நடத்தியது. போலீசின் தேடுதல் வேட்டையிலிருந்து தப்பிக்க ஓடிய வினோத் என்பவர், புதைகுழியில் சிக்கினார். தான் சரணடைந்து விடுவதாகவும், தனது உயிரைக் காப்பாற்றக் கோரியும் போலீசிடம் கெஞ்சிய வினோத்தை காப்பாற்றாதது மட்டுமின்றி வெளியே வர அவர் எடுத்த முயற்சிகளைத் தடுக்கும் வகையில் கல்லெறிந்து அவரை புதைகுழியில் தள்ளி கொடூரமான முறையில் கொலை செய்தது போலீசு.
போலீசின் இந்த படுபாதகச் செயலைக் கண்டிக்கின்ற வகையிலும், தேடுதல் என்ற பெயரில் வீராம்பட்டினம் ஊர் பெண்களிடம் பாலியல் ரீதியாக அசிங்கமான முறையில் பேசிய துணை ஆய்வாளர் திருமுருகன் உள்ளிட்ட போலிசுக் கும்பலை கைது செய்ய வலியுறுத்தியும், இராணுவ முகாம் அமைப்பதற்கான அரசின் முயற்சிக்குப் பின் உள்ள சதிகளை அம்பலப்படுத்தியும், 27-02-2016 அன்று மாலை 5 மணி அளவில் முதலியார்பேட்டை வானொலித்திடலில் புதுச்சேரி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
ஆர்ப்பாட்டத்துக்கு, புதுச்சேரி புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி தலைவர் தோழர் சரவணன் தலைமை தாங்கினார்.
“இந்த அரசு மக்களுக்கான அரசு அல்ல என்பதும், போலீசும் – இராணுவமும் மக்களின் நண்பன் அல்ல என்பதும் மீண்டும் ஒரு முறை நமது கண் முன்னே நிரூபிக்கப்பட்டுள்ளது. மக்கள் எவ்வளவு பாதிக்கப்பட்டாலும், வளர்ச்சி என்ற பெயரில் கூடங்குளம் அணு உலைத் திட்டம், கெயில் குழாய் பதிப்பு திட்டம், மீத்தேன் எடுக்கும் திட்டம் போன்ற மக்களை பாதிக்கும் திட்டங்களை வளர்ச்சி என்ற பெயரில் நாடு தழுவிய அளவில் நடைமுறைப்படுத்தி வருகிறது. போராடும் மக்களை போலீசு, இராணுவம் கொண்டு ஒடுக்கி வருகிறது. நீதிமன்றங்களோ, இதை நியாயப்படுத்தி தீர்ப்புகள் வழங்கி வருகின்றன. இதில் யாருடைய வளர்ச்சி அடங்கி உள்ளது என்பது தான் நாம் சிந்திக்க வேண்டிய விசயம். மேலும், ஜம்மு காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்களில் இராணுவத்தின் அத்துமீறல்களுக்கு அளவே இல்லை. எனவே, அனைத்து மக்களுக்கும் எதிராக மாறிவிட்ட இந்த அரசை நம்பியோ, அதன் அடியாள் படைகளான போலிசு, இராணுவம், நீதிமன்றங்களை நம்பியோ பயனில்லை. இந்தப் பகுதியில் நடைபெறுவது போலத்தான், நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. எனவே, இது ஒட்டு மொத்த மக்களின் பிரச்சினை என்பதை உணர்ந்து, நாமே நமது சொந்த பலத்தில் ஒன்றிணைந்து போராட வேண்டும்” என்றார்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய, பெரியார் பகுத்தறிவாளர் இயக்கத்தின் புதுச்சேரி அமைப்பாளர் தீனா, “வீராம்பட்டினம் ஊர் மக்கள் ஒன்றுபட்டுப் போராடிய வரையில், அரசால் முகாம் அமைக்க முடிய வில்லை. அரசின் சதித்தனத்தால், அம்மக்களின் ஒற்றுமையைச் சிதைத்து, கருங்காலிகளை உருவாக்கியதனால், இன்று பிரச்சினை பெரிதாகி உள்ளது. இதைப் பயன்படுத்தி போலீசும் உள்ளே நுழைந்து அத்துமீறல்களை நடத்துகிறது. நடுவீட்டில் நாய் நுழைந்த கதையாகி உள்ளது. எனவே, நாயை விரட்ட வேண்டுமெனில் நாம் ஒன்று பட்டுப் போராட வேண்டும். அதற்கு, நாம் எப்போதும் துணை நிற்போம்” என்று கூறினார்.
கண்டவுரையாற்றிய புதுச்சேரி புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி இணைச் செயலாளர் தோழர். லோகநாதன், “வீராம்பட்டினத்தில், நடுவீட்டில் நாய் நுழைந்த கதையாகி விட்டதால், அந்த நாய் மக்களை பிராண்டுகிறது. பெண்களைப் பாலியல் ரீதியில் துன்புறுத்துவது, கொச்சையான வார்த்தைகளால், அசிங்கமாகப் பேசுவது என ஆட்டம் போடுகிறது. கண்காணிப்பு முகாம் அமைந்தால் பல்வேறு மக்கள் நலத் திட்டங்கள் மூலம் பயன்பெறலாம் என அரசு கூறுகிறது. அத்தனையும் அங்கு குடியிருக்கும் சாதாரண மக்கள் பயன்பெறப் போவதில்லை. ஏற்கனவே கரையில் உள்ள நிலங்கள் உள்ளிட்டு அத்தனை சொத்துக்களையும் மக்களிடமிருந்து பிடுங்கி கார்ப்பரேட்டுகளிடம் ஒப்படைத்துவிட்டது அரசு. கடலையும், கடற்கரையோரத்தையும் ஒப்படைக்கவும், அதைப் பாதுகாக்கவும் தான் கண்காணிப்பு முகாம்களை அமைக்க உள்ளது. எனவே, இந்த மக்கள் விரோத அரசை அகற்றுவதும், மக்கள் உணர்வை மதிக்கும், உண்மையான ஜனநாயகத்தை நிறுவும் மக்கள் நல அரசை புதிய ஜனநாயகப் புரட்சியின் மூலம் நிறுவுவதும் தான் நம்முன் உள்ள கடமை” என்று விளக்கினார்.
- வீராம்பட்டிணம் ஊர் அமைதியைக் குலைத்து மக்களை துரத்தியடிக்கும் அரசின் சதிகளை முறியடிப்போம்!
- மீனவர்களின் வாழ்வாதாரத்தை நாசமாக்க வரும் இராணுவ கண்காணிப்பு முகாமை விரட்டியடிப்போம்!
- மீனவர்களின் மீது இலங்கை இராணுவம் நடத்தி வரும் கொலைவெறித் தாக்குதலை இந்திய ராணுவம் தொடர்வதை அனுமதியோம்!
- இராணுவ முகாமுக்கு எதிரான வீராம்பட்டிணம் உள்ளிட்ட மீனவர்களின் போர்க்குணமிக்க போராட்டங்களை ஆதரிப்போம்!
- மக்களை காட்டிக்கொடுக்கும் பிழைப்புவாதிகள் – சதிகாரர்களை புறக்கணிப்போம்!
- விவசாயிகள் – தொழிலாளர்களுடன் ஒன்றிணைந்து நமது வாழ்வாதாரத்தை பாதுகாக்க போராடுவோம்!
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]
தகவல்:
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, புதுச்சேரி.
தொடர்புக்கு, த.பழனிசாமி, 9597789801.