Saturday, January 23, 2021
முகப்பு கட்சிகள் அ.தி.மு.க மகிந்திரா வங்கிக்கு அடியாளாக செயல்படும் தஞ்சை போலீசு !

மகிந்திரா வங்கிக்கு அடியாளாக செயல்படும் தஞ்சை போலீசு !

-

thanjai mariyal posterவிவசாயிகளின் போராட்டங்களை ஆளும் அரசுகள் ஒரு பிரச்சனையாகக் கருதுவதில்லை. பட்டை நாமப் போராட்டம், திருவோடு போராட்டம், அரை நிர்வாணப் போராட்டம் என அந்த போராட்ட வடிவங்கள் மாறிக் கொண்டிருந்ததே ஒழிய தீர்வு எதுவும் எட்டப்படவில்லை. அரசின் கடன் பாக்கிகளைத் தள்ளுபடி செய்யக்கோரி மாநாடுகள் போராட்டங்கள் தொடர்ந்து கொண்டிருந்த வேளையில் தலைவலியோடு திருகுவலியாகத் தனியார் வங்கிகளின் கடன் வசூல் ஜப்தி நடவடிக்கை அரங்கேறிக் கொண்டிருக்கிறது.

கோட்டாக் மகிந்திரா வங்கியில் டிராக்டர் கடன் வாங்கியிருந்த தஞ்சைச் சோழகன் குடிகாடு விவசாயி பாலன் மீது வங்கியின் அடியாளாக நின்று ஒரத்தநாடு காவல்துறை தாக்குதல் நடத்தியது. தாக்குதல் சம்பவக் காட்சிப் பதிவும், “அடிக்காதீங்க…” என்ற அவலக் குரலும் வாட்ஸ் அப் மூலமாக மூன்று நாள் சுற்றி வந்தது. இச்செய்தியைப் பாலிமர் தொலைக்காட்சி முதலில் வெளியிட்டுப் பிற ஊடகங்கள், அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் கவனத்தைத் திருப்பியது.

விவாதங்கள் சூடுபறக்கச் சினிமா நடிகர் சங்கத் தலைவர் விஷால், வங்கி மற்றும் போலிஸ் குண்டர்களை கண்டிக்காமல் விவசாயி பாலனின் கடனைக் கட்டி டிராக்டரை மீட்டுத் தந்து உதவுவதாக அறிவிப்பை வெளியிட்டு வங்கி நிர்வாகத்தை நல்ல பிள்ளையாக காட்டினார். ஆனால் இந்த தனியார் வங்கி முதலாளகளின் உண்மை முகத்தை காட்டும் வண்ணம் அரியலூர் விவசாயி அழகர், சோழமண்டலம் பைனான்சின் அடாவடி நடவடிக்கையால் தற்கொலை செய்து கொண்டார்.

தஞ்சை ஆர்பாட்டம்தஞ்சை விவசாயிகள் மத்தியில் இது கொந்தளிப்பை ஏற்படுத்தியதோடு போராட்டங்கள் வலு பெறத் தொடங்கியது. விடுமுறை நாளில் மூடிக்கிடந்த கோட்டாக் மகிந்திரா வங்கிக்குப் பூட்டு போடும் போராட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருப்புப் போராட்டம் போன்ற போராட்டங்கள் முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட நிலையில் மக்கள் அதிகாரம் அமைப்பின் மறியல் போராட்ட அறிவிப்பு சுவரொட்டி, தஞ்சை மாவட்ட விவசாயிகளுக்கு நம்பிக்கையும், அரசு இயந்திரத்திற்கு பீதியையும் ஊட்டியது.

தஞ்சை புதிய பேருந்து நிலையம் அருகில் மக்கள் அதிகாரம் மாநில ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர் தோழர் காளியப்பன் தலைமையில் தோழர்கள் கூடினர். மற்ற தோழர்கள் விவசாயிகளின் வருகையை எதிர்ப்பார்த்து காத்திருந்தனர். தோழர்களைக் கைது செய்யக் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் தலைமையில் போலீசு பட்டாளம் குவிக்கப்பட்டிருந்தது.

சாராயக் கடையை முடக்கக்கோரும் பிரச்சாரத்திற்கும் கண்ணையாகுமார் கைதைக் கண்டிக்கும் ஆர்ப்பாட்டத்திற்கும் தேர்தல் நடத்தை விதிகளைக் காரணம் காட்டி அனுமதி மறுத்து வந்த தஞ்சை போலீசு, “மறியலைக் கைவிடுங்கள்! ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி தருகிறோம்” என்று சமரசம் பேசியது. ஆனால் அதை மறுத்துப் பேசி மறியலில் ஈடுபடுவோம் என்று தோழர்கள் அறிவித்தனர்.

தோழர் காளியப்பன் மற்றும் தோழர்களைச் சுற்றி வளைத்துக் கைது செய்ய முயற்சித்தபோலீசின் பாதுகாப்பு வளையத்தை உடைத்து வெளியேறி, தோழர்கள் மறியலில் ஈடுபட்டன ர். ஒரு பக்கம் தோழர் காளியப்பன் மற்றும் தோழர்களிடம் பேச்சு வார்த்தை இன்னொரு பக்கம் கைது என்று போலீசு நாடகமாடிக் கொண்டிருந்தது. பேருந்துகளை மறித்து மறியலில் ஈடுபட்ட தோழர்களுக்கும், போலீசுக்கும் இடையில் தள்ளு முள்ளு ஏற்பட்டது. போலீசு அராஜகத்தையும், கோட்டாக் மகேந்திரா வங்கிக்கு அடியாளாகச் செயல்படும் போலிசைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பியபடி, சாலையில் அமர்ந்து படுத்துப் போராடிய தோழர்களை குண்டுக்கட்டாகத் தூக்கி வண்டியில் ஏற்றியது போலிசு.

மக்கள் அதிகாரம் திருவாரூர் தோழர்கள் முரளி, ஆசாத் – தஞ்சை தோழர். தேவன், பட்டுக்கோட்டைத் தோழர் மாரிமுத்து, விவசாயிகள் விடுதலை முன்னணித் தோழர் பாலு, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணித் தோழர் கோகிலநாதன், மக்கள் கலை இலக்கியக் கழகத் தோழர் இராவணன் உள்ளிட்ட தோழர்கள் தலைமையில் நகரப்பேருந்துகள் பட்டுக்கோட்டை, கும்பகோணம், திருச்சி பேருந்துகள் மறிக்கப்பட்டு, ஐம்பத்து மூன்று தோழர்கள் கைது செய்யப்பட்டனர்.

கைதுக்குப் பிறகு திருமண மண்டபம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டிருந்த தோழர்களை இரவு எட்டு மணி வரை விடுதலை செய்யாமல் பழி வாங்கியது போலீசு.

மறியலைக் கேள்விப்பட்டு வந்த விவசாயிகள் சிலர் மண்டபத்திற்கு வந்து தோழர்களைச் சந்தித்து நன்றி கூறினர். விவசாயி மதியழகன் கூறிய போது, ஐந்து ஏக்கர் நிலம் உடைய சிறு விவசாயி நான். சிறு வயதிலிருந்தே விவசாயத்தில் – ஈடுபாடு உண்டு. ஐந்து ஏக்கரில் கரும்புப் பயிர் செய்தால் செலவு போக இரண்டு இலட்சம் கிடைக்கும் என்று வேளாண் அதிகாரிகள் அலுவலர்கள் கூறியதை நம்பி கரும்புச் சாகுபடி செய்தேன். உரம் பூச்சி மருந்துகள் போட்டு, கரும்பு நன்றாகவே வளர்ந்து இருந்தது. கட்டிங் ஆர்டர் கிடைக்கவில்லை. கரும்பை வெட்டி ரோட்டில் அடுக்கிப் பதினைந்து நாட்கள் காய்ந்து கொண்டிருந்தது. கடைசியாக 1 ட ன் கரும்புக்கு ரூ. 1200 என்று கட்டிங் ஆர்டர் கிடைத்தது. கரும்பு பாக்கிப் பணத்தை வாங்க அலைந்து கால்கள் தேய்ந்து போனதுதான் மிச்சம்.

இனி கரும்பு வேண்டாம் என்று சவுக்குப் பயிரிட்டு வெளிநாடு சென்று விட்டேன். மலேசியா-விலிருந்து திரும்பி வந்து விட்டேன். எப்படி விவசாயம் செய்வது? அடுத்து என்ன செய்வது? என்று புரியாமல் சவுக்கு, பாமாயில், தென்னை என்று பயிரிட்டு விவசாயிகள் போண்டியாகிக் கொண்டிருக்கிறார்கள். கறவை மாடு வாங்க வங்கிக்கு அலைந்து கடன் கிடைக்கவில்லை என்றார். தேர்தலில் ஓட்டு போட்டு மாற்றம் நிகழப் போவதில்லைஎன்றார். டாஸ்மாக் அம்மாவின் சீர்மிகு ஆட்சியில் விவசாயிகளின் நிலை எப்படி உள்ளது என்பதற்கு விவசாயி மதியழகனின் கருத்தும், ஒரத்தநாடு, அரியலூர், லேலூர் என்று அடுத்தடுத்த சம்பவங்க ளும் சாட்சிகளாக உள்ளன.

மறியலுக்கு முன் செய்தியாளர்களைச் சந்தித்த மக்கள் அதிகாரம் மாநில ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர் தோழர் காளியப்பன் சோழகன்குடிக்காடு விவசாயி பாலன் மீது தாக்குதல் நடத்திய பாப்பாநாடு ஆய்வாளர் உள்ளிட்ட போலீசார் மற்றும் தனியார் வங்கியான கோட்டக் மகிந்திரா அதிகாரிகள் ஆகியோர் மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்து கைது செய்யப்பட வேண்டும்.

அரியலூர் மாவட்டம், ஒரத்துர் ஊராட்சி விவசாயி அழகரைத் தற்கொலைக்குத் தள்ளிய சோழ மண்டலம் பைனான்ஸ் அதிகாரிகளைக் கைது செய்ய வேண்டும். தனியார் நிதி நிறுவனங்கள் வசூல் முகவர்கள் என்ற பெயரில் அடியாட்களை வைத்துக் கொள்வதையும் அத்தகைய அடியாட்களாக ஓய்வு பெற்ற போலீசார் செயல்படுவதையும் தடை செய்ய வேண்டும். பஞ்சாயத்து முறையான ஆர்பிட்டேஷன் ஆக்டை நீக்க வேண்டும்.

கந்து வட்டிக் கொடுமைக்கும், சாதிவெறிக் கொலைகளுக்கும் முடிவு கட்ட ஆதிக்கச் சாதி வெறிச் சங்கங்களை முற்றாகத் தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தினார்.

 முழக்கங்கள்:

கைது செய்… கைது செய்… கிரிமினல் வழக்குப் பதிவு செய் !
விவசாயி பாலன் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய
போலீசைக் கைது செய்!
கோட்டக் மகேந்திரா அதிகாரிகளைக் – குண்டர் சட்டத்தில் கைது செய் !!!
அரியலூர் விவசாயி அழகரைக் கொலை செய்த
சோழ மண்டலம் பைனான்சின் அதிகாரிகளைக் கைது செய்! தமிழக அரசே கைது செய் !!

ஒன்பதாயிரம் கோடியை ஒரேயடியாய்ச் சுருட்டிய
சாராய மன்னன் மல்லையாவுக்கு லண்டனிலே உல்லாசம்
மாமா வேலை பார்த்தது மோடியோட சர்க்காரு !
அறுபதாயிரம் கட்டலேண்ணு அடிச்சு உதைச்சு வதைக்குது லேடியோட சர்க்காரு !!

அம்பானியும் அதானியும் இன்னும் பல முதலாளிகளும்
கடன் பாக்கி கோடி கோடி கமுக்கமாக தள்ளுபடி !
நட்டமான விவசாயத்தால் கட்ட முடியாத
விவசாயிக்கு அடிமை போல சவுக்கடி !!

அனுமதியோம். அனுமதியோம்.
தனியார் வங்கிக் கொள்ளையர்கள்
அடியாள் கும்பல் போலீசு ரவுடித்தனத்தை அனுமதியோம்!

சட்டத்திற்கும் தீர்ப்புகளுக்கு டாடா காட்டி ஆட்டம் போடும்
தனியார் வங்கிக் குண்டர்களின் அடாவடிக்கு முடிவு கட்டுவோம்!

சட்டமும், நீதியும் தோற்றுப்போனது!
அதிகாரவர்க்கமும் போலீசும் மக்கள் விரோதக் கும்பலாச்சு!!
கையிலெடுப்போம். கையிலெடுப்போம்.
அதிகாரத்தைக் கையிலேடுப்போம்!!!
மக்கள் அதிகாரம் உயர்த்திப் பிடிப்போம்!

இவண்

மக்கள் அதிகாரம், தஞ்சாவூர்.

___________________________

ஓசூர் மக்கள் அதிகாரம்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க