privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்தனியார்மயம் - தாராளமயம் - உலகமயம்தருமபுரி தங்கமயில் மோசடி - மக்கள் நேரடி நடவடிக்கை !

தருமபுரி தங்கமயில் மோசடி – மக்கள் நேரடி நடவடிக்கை !

-

22 கேரட் சுத்தமான மோசடி!
கார்ப்பரேட் தங்க நகைக் கடைகளின் மோசடியை நடுத்தெருவுக்கு இழுத்து வந்த
தருமபுரி நகை தொழிலாளர்களின் போராட்டம்!

எங்களிடம் ஒரு லட்ச ரூபாய் நகை வாங்கினால் அதை 10,000 ரூபாய்க்கு உங்களிடமிருந்து திரும்ப வாங்குவோம்! - மோசடியே எங்கள் ஆதாரம்!
எங்களிடம் ஒரு லட்ச ரூபாய் நகை வாங்கினால் அதை 10,000 ரூபாய்க்கு உங்களிடமிருந்து திரும்ப வாங்குவோம்! – மோசடியே எங்கள் ஆதாரம்!

ங்கமயில், மலபார், ஏ.வி.ஆர் போன்ற கார்ப்பரேட் நகைக் கடைகள், “செய்கூலி இல்லை, சேதாரம் இல்லை”, “தங்கமான மனசு, தங்கமான ஜுவல்லர்ஸ்”, “தங்கம் வாங்க, தங்க மயிலுக்கு வாங்க” போன்ற கவர்ச்சிகரமான வாசகங்களை பிரச்சாரம் செய்தும், நடிகர்-நடிகைளை வைத்து விளம்பரங்கள் செய்தும் மக்களை ஏமாற்றி கவர்ந்திழுக்கின்றன. இந்தியாவின் ‘வருங்கால ஜனாதிபதி’ பனாமா புகழ் அமிதாப் கூட இந்த விளம்பர தூதர்களில் ஒருவர்!

இவர்களின் வரவால் எல்லா நகரங்களிலும் உள்ள பாரம்பரிய பொன், வெள்ளி நகை உற்பத்தி செய்யும் தொழிலாளர்களும் உற்பத்தியாளர்களும் பாதிக்கப்பட்டு தொழிலை இழந்துள்ளனர். இந்த கார்ப்பரேட் நகைக் கடைகளை எதிர்கொள்வது எப்படி எனத் தெரியாமல் தவிக்கின்றனர். இந்நிலையில், தருமபுரியில் இயங்கிவரும் தங்க மயில் என்ற கார்ப்பரேட் நகைக்கடையின் மோசடிக்கு எதிராக மக்கள் அதிகாரம் மற்றும் அப்பகுதி மக்களின் போராட்டம் முன்னுதாரணமாக நடைபெற்றது.

thangamayil_shop
மக்களை ஏமாற்ற கடை அலங்காரம்!

தருமபுரியில் இயங்கிவரும் தங்க மயில் கார்ப்பரேட் நகைக்கடை பலவித மோசடிகளை செய்து தங்க நகை வியாபாரம் செய்து வருகிறது. செய்கூலி இல்லை, சேதாரம் இல்லை என்று பொய்யான விளம்பரங்களைத் தாண்டி நகைகளில் ஈயத்தைக் கலந்து எடைக்கூட்டி விற்பனை செய்து வருகிறது. இந்த மோசடியால் பாதிக்கப்பட்ட மக்கள் அண்மையில், ஆதாரபூர்வமாக அம்பலப்படுத்தியுள்ளனர்.

5 ஆண்டுகளுக்கு முன்பு தருமபுரி நகரத்தைச் சேர்ந்த சங்கர் என்பவர் தங்க மயிலில் 20 பவுன் நகை வாங்கியுள்ளார். அதன் பிறகு சென்ற ஆண்டு தனது குடும்ப செலவுகளுக்காக ஐ.சி.ஐ.சி வங்கியில் அந்த நகைகளை அடகு வைத்துள்ளார்  தனது பொருளாதார நெருக்கடியால் வாங்கியக் கடனை கட்ட முடியாமல் போனது. இதனால், இந்த நகைகளை விற்று கடனடைக்க முடிவு செய்த சங்கர், தருமபுரி பொன் – வெள்ளி நகை தொழிலாளர் சங்கத்தை அணுகியுள்ளார். இந்த நகைகளை சிறு நகைகளாக மாற்றி விற்றுவிட முயற்சித்த போதுதான் முனேகால் பவுன் (16.25%) ஈயத்தை கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால், கொதிப்படைந்த சங்கர், சங்கத்திற்கு முழு ஒத்துழைப்புத் தருவதாகவும் தனது நகைக்கான முழு தொகையை தங்கமயில் நிறுவனத்திடமிருந்து பெற்றுத் தருமாறும் கோரிய வகையில் தருமபுரி பொன்-வெள்ளி நகை தொழிலாளர்கள் சங்கம், மக்கள் அதிகாரத்தின் உதவியுடன் அக்கடை முன்பாக போராட்டத்தில் இறங்கியது.

ஒரு தனியார் நகை நிறுவனத்திற்காக ஐஸ்வர்யாவின் நகை அலங்காரம்.
அருவெறுப்பூட்டும் ஒரு நகை விளம்பரம்!

முன்னதாக, சங்கத்தின் சார்பாக சென்று அந்த நிறுவனத்தின் மோசடியை அம்பலப்படுத்தி, நகைக்கான தொகையை கேட்டுள்ளனர். இந்நிறுவனம் அறிவித்துள்ள தரச்சான்றிதழின் படி, “எங்களிடம் வாங்கிய தங்க நகைகளை மாற்றும் போது அன்றைய மார்க்கெட் விலையில் 1% கழித்து மாற்றம் செய்து கொள்ளலாம்”, “எங்களிடம் வாங்கிய தங்க நகைகளை விற்று காசோலையாக பெற விரும்பினால், அன்றைய மார்க்கெட் விலையில் 3% கழித்து காசோலை வழங்கப்படும்” என்று அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பின் படி ரூ.4,11,666 தரவேண்டியுள்ளது. ஆனால், நகையின் சுத்தத்தை (பியூரிட்டி) கணக்கில் கொண்டு அசுத்தங்கள் போக மதிப்பிட்டு ரூ.1,04,462  மட்டுமே தரமுடியும் என்று கூறியது. நகை எப்படி அசுத்த நகையானது, எப்படி ஈயம் கலந்துள்ளது என்ற நகைத் தொழிலாளர் சங்கத்தினரின் கேள்விக்கு பதிலளிக்காமல் இழுத்தடித்து வந்தது தங்கமயில் ஜுவல்லர்ஸ்.

நகைத் தொழிலாளர் சங்கத்தினர் தொழில் தெரிந்து வைத்துள்ளதால், அக்கடையிடன் மோசடியை தொழில் நுணுக்கத்துடன் தொழில் நுட்ப விவரங்களுடன் அம்பலப்படுத்தியுள்ளனர். இருந்தும் தங்கமயில் ஜுவல்லர்ஸ் தனது திருட்டுத்தனத்தை மறைக்கவே முயன்றது.

இந்த நிறுவனத்தின் இத்தகைய மோசடிகளை பலர் மூலம் நகை தொழிலாளர் சங்கத்தினர் அறிந்து வைத்திருந்தாலும் இது நாள் வரை இதனை எதிர்த்துக் கேட்க உறுதியான வாடிக்கையாளர்கள் இல்லை என்று இருந்தனர். இன்று சங்கர் உறுதியாக ஒத்துழைப்பு கொடுத்தும், இந்த நிறுவனத்தை ஆட்டவோ அசைக்கவோ முடியவில்லை. இவ்வாறு பகிரங்கமாக அம்பலப்படுத்தப்பட்ட பின்னரும், இந்த நிறுவனம் இவ்வளவு திமிராக இருப்பதற்கு காரணம் என்ன?

ஈயத்தைக் கலந்து விற்பது என்ற மோசடி மட்டுமல்ல, தங்க நகைக்குள் வெள்ளி கம்பிகளை வைப்பது, சிறிய நகைகளுக்கு செய் கூலி, சேதாரம் என்று அதிக தொகை வசூலிப்பது போன்ற பல மோசடிகளை செய்து வருகின்றன இந்த கார்ப்பரேட் நகைக் கடைகள். ஆனால், தங்க நகையில் இந்த கார்ப்பரேட் நிறுவனங்கள் செய்யும் மோசடிகளை விசாரிக்க முறையான அமைப்புகள் இல்லை. அப்படியே இருந்தாலும், சங்கருக்கும் தருமபுரி தங்க நகை தொழிலாளர் சங்கத்திற்கும் ஏற்பட்ட நிர்கதியான நிலைதான் ஏற்படும். காரணம், அரசும் போலீசும் நுகர்வோர் மன்றங்களும் ஊழல் மயமாகி இவர்களுக்கு பக்க பலமாக உள்ளன. சட்டங்களும் இவர்களுக்கு சாதகமாக உள்ளன. இதனை நன்கு உணர்ந்த தங்க நகை தொழிலாளர் சங்கம் மக்கள் அதிகாரத்தின் உதவியை நாடி, அக்கடையின் முன்பாக போராட்டத்தில் இறங்கியது.

குறைந்த சதவிகித சேதாரம், செய்கூலி இல்லை என நடிகளை வைத்து விளம்பரப்படுத்தி ஏமாற்றும் தங்கமயில் நகைக்கடை
குறைந்த சதவிகித சேதாரம், செய்கூலி இல்லை என நடிகைகளை வைத்து கூறும் தங்கமயில் நகைக்கடை விளம்பரம்

மக்கள் அதிகாரம் தோழர்கள், நகை தொழிலாளர் சங்கத்தினர் பாதிக்கப்பட்ட மக்களைத் திரட்டி 21.03.2016 அன்று கடையை முற்றுகையிட்டனர். இதுநாள் வரை திமிராக பேசிவந்த நிறுவனம், மக்கள் அதிகாரம் தோழர்கள் வந்திருப்பதை அறிந்ததும், பணிந்து வந்தது. இந்நிறுவனத்தின் மோசடியை நகை தொழிலாளர் சங்கத்தினர் கோபத்துடன் அம்பலப்படுத்தினர். தனது கார்ப்பரேட் மூளை, நரித்தனமான வாதங்களை முன்வைத்து திசைத் திருப்பப் பார்த்தது தங்கமயில் ஜுவல்லர்ஸ். தொடர்ந்து திசைத் திருப்ப முயற்சித்தால், அடுத்தக் கட்டமாக போராட்டமாக வெடிக்கும் என உணர்ந்த இந்நிறுவனம், இறுதியில் உரிய தொகையை ஒப்படைக்க ஏற்றுக்கொண்டது.

ஆனால், தனது மோசடிகளை மறைக்கும் விதமாக, போலீசை கொண்டு அச்சங்கத்தினரை மிரட்டுவது, கொலை மிரட்டல் விடுப்பது போன்ற ஈனத்தனமான வேலைகளில் தங்கமயில் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.

மக்கள் அதிகாரமோ அல்லது தருமபுரி பொன்-வெள்ளி நகை தொழிலாளர் சங்கமோ பாதிக்கப்பட்ட சங்கருக்கு உரிய இழப்பீடு வாங்கித் தருவதை மட்டும் நோக்கமாகக் கொண்டு செயல்படவில்லை. இந்த கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆதிக்கத்துக்கு முடிவு கட்ட வேண்டும் என்ற வகையிலேயே செயல்பட்டு வருகின்றனர். அன்றாடம் பல கூலி ஏழை மக்கள்தான் இந்த கார்ப்பரேட் நகைக்கடைகளால் ஏமாற்றப்படுகின்றனர். இவர்கள் எல்லோருக்கும் இந்த மோசடிகளும் இவற்றினால் ஏற்பட்ட பாதிப்புகளும் முழுமையாக தெரியாது.

குறிப்பாக, தங்கமயில் போன்ற கார்ப்பரேட் நகைக் கடைகள் தருமபுரியில் கால்பதித்த பின்னர்தான் தருமபுரியில் பாரம்பரியமாக தொழில் செய்துவரும் 400க்கும் மேற்பட்ட நகை தொழிலாளர்களும் இவர்களிடம் பணி புரியும் 800க்கும் மேற்பட்ட உதவியாளர்களும் தொழில் நொடிந்து வாழ்விழந்துள்ளனர். இன்று 50-க்கும் குறைவானவர்களே இத்தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். பலர் வேறு தொழிலுக்கு சென்றுவிட்டனர். தனது வாழ்நாள் முழுவதும் கடினமாக உழைத்து சிறுக சிறுக பணம் சேர்த்து, நகை வாங்கும் பல உழைக்கும் மக்கள் இந்த நிறுவனங்களிடம் தங்களது உழைப்பின் பெரும் பகுதியை இழந்து விடுகின்றனர்.

மற்றொருபுறம், ஆன்லைன் வர்த்தகம் என்ற பெயரில் நாள் தோறும் தங்கம் விலையேற்றம் என்பது இந்த கார்ப்பரேட் நகைக் கொள்ளையர்களுக்குதான் வசதியாக உள்ளது. இவை தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்ற மறுகாலனியாக்கக் கொள்ளையின் விளைவு. இந்த மோசடி நிறுவனங்களை வளர்ப்பதைத்தான் அரசு தனது கொள்கையாக கொண்டுள்ளது. நேர்மை, நாணயம், தொழில் சுத்தம் போன்ற வார்த்தைகள் அனைத்தையும் இந்தக் காரப்பரேட் நிறுவனங்களும் அரசும் மதிப்பிழக்க செய்துவிட்டன! எனவே தங்கத்தை வைத்து திருடும் இந்த கார்ப்பரேட் திருடர்களை போலிசும் நீதிமன்றமும் தண்டிக்காது. மக்கள் அதிகாரத்தை கையிலெடுப்பது ஒன்றே தீர்வு! தரும்புரி தங்க மயிலிடமிருந்து ஒரு ஏழைத் தொழிலாளியை மக்களை திரட்டி காப்பாற்றிய மக்கள் அதிகாரம் அதற்குத் துணை நிற்கும்!

  • புதிய ஜனநாயகம் செய்தியாளர், தருமபுரி.