முகப்புகட்சிகள்சி.பி.ஐ - சி.பி.எம்ஜனநாயகம் என்பது இலட்சியமா - வழிமுறையா ?

ஜனநாயகம் என்பது இலட்சியமா – வழிமுறையா ?

-

“ஒடுக்கப்பட்ட வர்க்கம் தன்னுடைய விடுதலையைத் தானே நிறைவேற்றுவதற்குப் பக்குவம் பெறாதிருக்கின்ற வரையில், இன்றுள்ள சமூக அமைப்பு ஒன்றுதான் சாத்தியமானது என்று அதன் பெரும்பான்மையினர் கருதிக்கொண்டிருப்பார்கள்.”
– எங்கெல்ஸ் குடும்பம், தனிச் சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம்.

தேர்தலைப் புறக்கணியுங்கள்’ என்று நாம் கூறும்போது “தேர்தலையா புறக்கணிக்கச்சொல்கிறாய்?” என்று மக்கள் யாரும் கொதித்தெழுவதில்லை. இந்தத் தேர்தல் ஜனநாயகம் தங்களுக்கு எதையும் வழங்கவில்லை என்பதை மக்கள் தம் சொந்த அனுபவத்தில் உணர்ந்தேயிருக்கிறார்கள். அதனால் தான் ‘தேர் தலைப் புறக்கணித்து விட்டு வேறென்ன செய்வது?” என்று விழிக்கிறார்கள். எங்கெல்சின் வார்த்தைகளில் சொன்னால் ‘இன்றுள்ள சமூக அமைப்புதான் சாத்தியமானது என்று கருதிக்கொண்டிருக்கிறார்கள். ஆளும்வர்க்கமோ இந்த ஜனநாயக அமைப்புதான் மனிதகுலம் கண்டறிந்த அதி உன்னத சமூக அமைப்பு என்றும், இதற்கு வேறு மாற்றே இல்லை என்றும் சாதிக்கிறது. “வேறென்னமாற்று” என்று ஏக்கத்துடன் கேட்கும் மக்களின் அவலத்திற்கும், “வேறு மாற்றே இல்லை” என்று சவால் விடும் ஆளும்வர்க்கத்தின் ஆணவத்திற்கும் இடைப்பட்ட சந்தில் சிக்கி மூச்சுத் திணறிக் கொண்டிருக்கிறது இந்தியாவின் தேர்தல் ஜனநாயகம்.

ஜனநாயகம் என்பது வேறு ஏதோவொரு ஒரு உன்னதமான இலட்சியத்தை அடைவதற்கான வழிமுறையா, அல்லது ஜனநாயகம்தான் அந்த லட்சியமா? இது வழிமுறை என்றால் அந்த உன்னத லட்சியம் என்பது என்ன என்ற கேள்விக்கு நாம் விடை காணவேண்டும். அல்லது ஜனநாயகத்தைப் பாதுகாப்பது தான் ஜனநாயகத்தின் லட்சியம் என்றால் அந்த லட்சியத்தின் லட்சனம் என்ன என்பதையும் நாம் பிரித்து ஆராய வேண்டியுள்ளது.

இந்தியாவின் நாடாளுமன்ற ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காகவே பகவான் எடுத்துள்ள பதினொன்றாவது அவதாரமான மார்க்சிஸ்டு கட்சியின் தலைவர் சீதாராம் யெச்சூரி (இந்து நாளேடு 25.3.2004) தனது கட்டுரை யொன்றில் ரத்தக் கண்ணிர் வடிக்கிறார்.

election1தேர்தலில் பணம் ஆறாக ஒடுகிறது. அரசியல் கட்சிகள் முதலாளிகளுடன் நேரடியாகத் தங்களை அடையாளம் காட்டிக்கொள்கிறார்கள் அரசின் கொள்கைகளோ மேலும் மேலும் பணக்காரர்களுக்கு ஆதரவாகவே சென்று கொண்டிருக்கின்றன. ஜனநாயகத்தின் அர்த்தம் களவாடப்படுகிறது. தேர்தல் ஜனநாயகத்தின் வெளியலங்காரம் பாதுகாக்கப்படுகிறது; ஆனால் ஜனநாயகத்தின் சாரமோ புறந்தள்ளப்படுகிறது” என்கிறார் யெச்சூரி.

தேர்தல் அரசியலின் சீரழிவுகளை இன்னமும் அடுக்கலாம். 13-வது நாடாளுமன்றத்தின் உறுப்பினர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் கிரிமினல் குற்ற வழக்குகளில் சிக்கிய அயோக்கியர்கள்; இந்தத் தேர்தலில் நிற்கும் வேட்பாளர்களில் ஆகப் பெரும்பான்மையானவர்கள் கோடீசுவரர்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்ட சட்டமன்றங்கள் நாடாளுமன்றங்களின் நிலை இதுவென்றால், நிர்வாக எந்திரமும் போலீசும் ஆளும் வர்க்கத்தின் கையாட்படையாகவும் கிரிமினல்களின் கூடாரமுமாகவே செயல்படுகின்றன. சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவதற்காகவே இறக்கப்பட்டிருக்கும் நங்கூரமான நீதிமன்றமோ மக்களின் அடிப்படை உரிமைகளைப் பறிக்கும் கட்டைப் பஞ்சாயத்து மன்றமாக இருக்கிறது.

யெச்சூரியின் கண்ணிருக்கு வலுச்சேர்க்கும் ஆதாரங்களை நாம் இன்னமும் அடுக்கலாம். ஆனால் “ஜனநாயகத்தின் அர்த்தம் களவாடப்படுகிறது. அதன் சாரம் புறந்தள்ளப்படுகிறது” என்று அவர் கூறுகிறாரே அந்த சாரம் என்ன என்பதே நம் முன் உள்ள கேள்வி.

இந்தச் சீரழிவுகளின் மரபணுக்களைத் தன்னகத்தே கொண்டிராத துய்மையான தெளிந்த கன்னிமை குலையாத அந்த ஜனநாயகத்தின் சாரம் என்ன? யெச்சூரியும், தினமணியின் நடுப்பக்கக் கட்டுரையாளர்களான காரியக் குருடர்களும், அசடுகளும் மீட்க விரும்பும் அந்த தேவனுடைய சாம்ராச்சியம் எங்கே இருக்கிறது? பைபிளைப் போலவே இதுவும் காகிதத்தில்தான் இருக்கிறது – அரசியல் சட்டக் காகிதத்தில்.

இந்திய அரசியல் சட்டத்தின் ஜனநாயக அஸ்திவாரம் கீழ்க்கண்ட அடிப்படை உரிமைகளை நமக்கு வழங்குகிறது. “சட்டத்தின் முன் அனைவரும் சமம், மத, இன, சாதி, பால் வேறுபாடுகளின் அடிப்படையில் பாரபட்சம் காட்டப்படாமை பேச்சுரிமை வழிபாட்டுரிமை தனிநபர் சுதந்திரம் மற்றும் வாழ்வுக்குப் பாதுகாப்பு.”

அரசியல் சட்டத்தின் வழிகாட்டும் கோட்பாடோ ஒரு பொற்காலத்தை நமக்குப் படமாகக் காட்டுகிறது.

poor_people“எல்லோருக்கும் சமநீதி, பசியும் வறுமையும் அற்ற வாழ்க்கை, கவுரவமாக வாழும் சுதந்திரம், கவுரவமான ஊதியம் பெறும் உரிமை, பாலின சமத்துவம், தீண்டாமை ஒழிப்பு. கட்டாய அடிப்படைக் கல்வி, பொதுச்சுகாதாரம், சத்துணவுக்கு அனைவருக்கும் சம வாய்ப்பு, தேசிய சொத்துக்கள் வளங்களைப் பாதுகாத்தல்…” என்று ரீல் ரீலாக ஒடுகிறது இந்தப்படம்.

நடப்போ கற்காலத்தை நோக்கித் திரும்பிச் செல்வதாக இருக்கிறது. ஒரு வர்க்கத்துக்கு ஒரு நீதி, உணவுக் கிடங்கின் வாசலிலேயே மக்கள் பட்டினியால் செத்தாலும் 6 கோடிடன் உணவுத் தானியத்தைப் பூட்டி வைப்பதற்கான சுதந்திரம், குறைந்தபட்ச ஊதியம் என்ற சட்டப் பாதுகாப்பையே நீக்குதல், உடன்கட்டை முதல் விபச்சாரம் வரையில் அனைத்துக்கும் அங்கீகாரம். வன்கொடுமைத் தடைச்சட்டத்தையே ஒழிப்பது, தொடக்கப் பள்ளிகள் முடல், அரசு மருத்துவமனைகள் மூடல், சுரங்கங்கள், காடுகள், துறைமுகங்கள், பொதுத்துறைகள், அனைத்தையும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஏலம் விடுதல். வழிகாட்டும் கோட்பாடுகளின் லட்சணம் நடைமுறையில் இப்படித்தானிருக்கிறது.

வேறு வார்த்தைகளில் கூறுவதானால் எந்தப் பெரும்பான்மை மக்களின் வாக்குகளைப் பெற்று ஆள்வதற்கான நியாயவுரிமையை இந்த அரசாங்கம் பெறுகிறதோ அந்த மக்களின் நலன்களை பணக்காரவர்க்கத்துக்கு அதாவது வாக்குச் சாவடியையே தங்கள் வாழ்க்கையில் பார்த்திராத வர்க்கத்திற்குக் காவு கொடுப்பதே இந்த ஜனநாயகத்தின் சாரமாக இருக்கிறது.

ஆனால் கிழக்கே செல்ல வேண்டிய ஜனநாயகம் மேற்கு நோக்கித் திசை திரும்பிவிட்டதாகவும் அதனைத் தேர்தல் முறையின் வாயிலாகவும் இந்த அரசமைப்புக்கு உட்பட்டும் மீண்டும் நெறிப்படுத்தி விட முடியுமென்றும் நம் பச் சொல்கிறார்கள் யெச்சூரி வகையறாக்கள். அதாவது இந்த அரசமைப்பு கூறும் இலட்சியங்களைத் தேர்தல் ஜனநாயக வழிமுறை மூலமே அடைந்துவிட முடியும் என்று ஆசைகாட்டுகிறார்கள்.

சொத்துரிமையையும் சுரண்டும் உரிமையையும் அடிப்படை உரிமைகளாகக் கொண்டிருக்கும் ஜனநாயகம், அனைவருக்கும் சமநீதியை எப்படி நிலைநாட்ட முடியும் என்பதே கேள்வி.

top_Entrepreneurs
இந்தியாவின் முன்னணி தரகு முதலாளிகள்.

கேள்வியை இப்படிப் போடுவோம். “இந்தியா யாருக்குச் சொந்தம்?” “சந்தேகமில்லாமல் இந்தியர்களுக்குத்தான் சொந்தம்” என்று பதில் வரும். ஆனால், தொலைபேசித் துறையில் பாதி பன்னாட்டு நிறுவனங்களுக்குச் சொந்தம், எண்ணெய் எரிவாயுத் துறையில் பாதி அம்பானிக்குச் சொந்தம், துறைமுகங்களும் பிரதமரின் தங்க நாற்கரச்சாலையும், சுரங்கங்களும் கனிம வளங்களும் அமீனா அருண்சோரியின் கையில் கிடைத்த அனைத்தும் அந்நிய முதலாளிகளுக்குச் சொந்தம். “எஞ்சியிருக்கும் இந்தியா இந்தியர்களுக்குச் சொந்தம்” என்று பொருள் கொள்ளலாமா?

“ஒரு சொத்தின் உடைமையாளனுக்குத்தான் அதன்மீது அதிகாரம் இருக்கிறது” என்ற எளிய உண்மையை அளவுகோலாகக் கொண்டு பார்த்தால் இந்தியா என்ற சொத்தின் மீதான அதிகாரம் பெரும்பான்மை இந்தியர்களிடம் இல்லை. ஆனால், இந்தியா என்ற தேசத்தின் மீது மக்களுக்கு அதிகாரம் இருக்கிறதாம். முந்தையது பொருளாதார ரீதியான அதிகாரமாம்! பிந்தையது அரசியல் ரீதியான அதிகாரமாம்! அதாவது மக்களின் இறையாண்மையாம்!

“சொத்துடைமையாளர்கள் தான் தேசத்தின் நியாயமான சொந்தக்காரர்கள். மற்ற மக்களெல்லாம் விடுதியில் தங்கிச் செல்லும் வழிப்போக்கர்களைப் போன்றவர்கள்” என்றார் ஒரு 18-ஆம் நூற்றாண்டு பிரிட்டிஷ் முதலாளித்துவ அறிஞர். “தனிச் சொத்துடைமைதான் நாகரிகத்திற்கு அடிப்படை என்றால், நாகரிகத்தைக் காப்பதுதான் அரசின் கடமை என்றால், யாருக்குத் தேசம் சொந்தமாக இருக்கிறதோ, அவர்கள் தான் அதை ஆட்சி செய்ய வேண்டும்” என்றார் அமெரிக்க உச்சநீதிமன்றத்தின் முதல் தலைமை நீதிபதி.

அனைவருக்கும் வழங்கப்படும் வாக்குரிமை, தங்களது சொத்துரிமையில் கை வைத்துவிடாமல் தடுப்பதெப்படி? மன்னனிடமிருந்து பறிக்கப்பட்ட இறையாண்மையை மக்கள் தமக்கெதிராகப் பயன்படுத்திவிடாமல் தடுப்பதெப்படி? – என்ற கேள்விகளுக்கு விடை கானும் போக்கில்தான் எல்லா முதலாளித்துவ ஜனநாயக மாயைகளும் உருவாக்கப்பட்டன. பேச்சுரிமை எழுத்துரிமை தொடங்கி எல்லா வகையான உரிமைகளும் மக்கள் நல அரசு முதல் பஞ்சாயத்து ராஜ் வரையிலான எல்லா மாயத் தோற்றங்களும் இந்த வகைப்பட்டவை தான்.

முதலாளித்துவ ஜனநாயகத்தின் மீதான மயக்கத்தைப் பராமரிப்பதில் பெரும்பங்கு வகிக்கும் பல கட்சி ஆட்சி முறை, வேறுபட்ட அரசியல் பொருளாதாரக் கருத்தோட்டங்களுக்கும் இடமளிப்பதைப் போன்றதொரு பிரமையை மக்களிடம் தோற்றுவிக்கிறது. உண்மையில் சொத்துடைமை வர்க்கத்தின் வேறுபட்ட பிரிவினருடைய நலன்களையும், அவர்களுக்கிடையிலான முரண்பாடுகளையும் தான் இவர்கள் பிரதிபலிக்கின்றனர். உற்பத்திச் சாதனங்களின் மீதான தனியுடைமையைப் பாதுகாப்பதென்ற சத்தியப்பிரமாணம் அடிப்படையிலேயே இவர்களை ஒன்றிணைக்கிறது. ஓரணியாய் வைத்திருக்கிறது.

இதற்கு உடன்படாதவர்கள் தான் தீவிரவாதிகள், நக்சலைட்டுகள் அல்லது ஜனநாயக வழிமுறைகளில் நம்பிக்கையில்லாதவர்கள் என்று முத்திரை குத்தப்பட்டுப் போலீசால் விலங்குகளைப் போல வேட்டையாடப்படுபவர்கள்.

முதலாளித்துவச் சுரண்டலை ஒப்புக் கொள்வது என்ற நிபந்தனையின் பேரில் நமக்கு வழங்கப்படும் உரிமைகள் தான் முதலாளித்துவ ஜனநாயக உரிமைகள். எனவே இந்த உரிமைகள் தன்னியல்பிலேயே முரண்பாடுகளைக் கொண்டிருப்பதில் வியப்பில்லை.

மக்கள் தொகையில் பாதிப்பேருக்கு எழுத்தறிவே இல்லாத போது எழுத்துரிமையால் என்ன பயன்? கல்வியறிவிருந்தாலும் லட்சக்கணக்கில் பணமின்றி பத்திரிக்கை நடத்த முடியாது எனும்போது கருத்துரிமையால் என்ன பயன்? வேலை வாய்ப்பே இல்லாத போது இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் சென்று வேலை செய்யும் உரிமையால் என்ன பயன்? உள்ள தொழில்களே நசிந்து கொண்டிருக்கும் போது எங்கு வேண்டுமானாலும் தொழில் நடத்தும் உரிமையால் என்ன பயன்? பட்டினியால் சுருண்டு கிடப்பவனுக்கு வாழ்வுரிமையால் என்ன பயன்?

மக்கள் தமக்குத் தெரிந்த முறையில் இந்தக் கேள்வியை எழுப்பிக் கொண்டு தானிருக்கிறார்கள். “உணவு தண்ணீர் மின்சாரம் சாலை, கல்வி, மருத்துவம் வேலை. என எதையுமே வழங்க முடியாத வாக்குரிமையால் என்ன பயன்?” என்று தேர்தலைப் புறக்கணிக்கிறார்கள்.

abdul_kalamஅப்துல் கலாமின் கூற்றுப்படி ”ஒவ்வொரு குடிமகனுக்கும் ஜனநாயகத்தில் சமஉரிமை உண்டு என்பதற்கு நிரூபணமாக விளங்கும் தேர்தலை, புனிதமான வாக்குரிமையை, தாய்மண்ணுக்கு ஆற்ற வேண்டிய கட்டாயக்கடமையை” கேவலம் இரண்டு குடம் தண்ணீருக்காக ஒரு ரேசன் கடைக்காக ஒரு மருத்துவ மனைக்காகப் புறக்கணிக்கிறார்கள், ‘உரிமையின் அருமைபுரியாத’ மக்கள்.

பச்சையாகச் சொல்வதானால் இரண்டு வேளை சோறும் துணியும் கொடுக்கத் தயாரென்றால் எங்களுக்கு உன் வாக்குரிமையே வேண்டாமென்று பத்திரம் எழுதித்தரவும் தயாராக இருக்கிறார்கள் ஏழை இந்தியர்கள். அதாவது “சோறா – சுதந்திரமா” என்ற கேள்விக்கு ”சோறு” என்று பதிலளிக்கிறது ஏழைகளின் இந்தியா. ஆளும் வர்க்கமோ ”சோறு போட முடியாது, ’சுதந்திரம்’ தான் தருவேன்” என்று முழங்குகிறது.

“பொருளாதாரச் சுரண்டல் காரணமாக நீ வழங்கும் எந்தச் சுதந்திரத்தையும் பணமில்லாத மக்களால் பயன்படுத்த இயலவில்லை” என்று சொன்னால் ”பொருளாதார ஏற்றத்தாழ்வும் சுதந்திரத்தின் ஒரு அங்கமே” என்று பதில் சொல்கிறது முதலாளித்துவம்.

’அரசியல் சமத்துவம்’ என்ற முதலாளித்துவ நரித்தனத்தின் சாயம் இங்கே வெளுத்து விடுகிறது. ’தனிநபர் சுதந்திரம்’ என்ற சொற்றொடரின் உண்மையான பொருள் விளங்கத் தொடங்குகிறது.

’கட்டுப்பாடுகள் இல்லாமை’ என்ற எதிர்மறைப் பொருளில் மட்டுமே சுதந்திரத்திற்கு விளக்கம் கூறும் முதலாளித்துவம் பொருளாதார ஏற்றத்தாழ்வை இயற்கையானதாகவும் தலையிடக் கூடாததாகவும் சித்தரிக்கிறது.

”அவனவன் பாடு அவனவனுக்கு; உன் சொந்தக் காலில் நின்று கொள்; யாரும் உனக்கு வாழ்க்கையை வழங்க முடியாது; நீயே முயன்று முன்னேறிக்கொள்; முன்னேறுவதற்காக பொய், களவு, சூது சதி போன்ற வழிமுறைகளை நீ பின்பற்ற வேண்டியிருந்தால் செய் – அது உன் திறமை” என்கிறது முதலாளித்துவம்.

எனவே “சொத்து சேர்ப்பவன் தான் வாழ்க்கையில் வெற்றி பெற்றவன் தனிநபரின் மகிழ்ச்சிதான் உயர்ந்த லட்சியம். இந்தப் போட்டியில் இடறி விழுந்த திறமையற்ற மனிதர்கள்தான் ஏழைகள்.அவர்களுக்காக நாம் இரக்கம் காட்ட முடியாது. திறமையின்மையின் விளைவுதான் ஏழ்மை” என்கிறது முதலாளித்துவம்.

ஆடுகளைத் தின்பதற்கு ஒநாய்கள் இயற்கையாகவே பெற்றிருக்கும் சுதந்திரத்தைத்தான் முதலாளித்துவத் தனிநபர் சுதந்திரம் வலியுறுத்துகிறது. முடியாட்சிக்கும். சர்வாதிகாரத்திற்கும் எதிரானதாகத் தன்னைச் சித்தரித்துக் கொள்ளும் முதலாளித்துவ ஜனநாயகத்தின் சித்தாந்தம், கோட்பாட்டிலும் நடைமுறையிலும் அதற்கு நேரெதிரான துருவத்தில் நிற்கிறது.

வலியதே வெல்லும் என்ற இந்தச் சித்தாந்தம் பாசிசம், நாஜிசம், பார்ப்பனியம், நிறவெறி ஆகிய அனைத்துப் பிற்போக்குத் தனங்களுடனும் தொப்புள் கொடி உறவைக் கொண்டிருக்கிறது.

பெரும்பான்மையான உழைக்கும் மக்களைத் தேவையற்றவர்களாகவும் செத்தொழிய வேண்டியவர்களாகவும் மக்கள் நலத்திட்டங்களை ’தேசத்தின் மீது’ திணிக்கப்பட்ட சுமைகளாகவும் தொழிலாளர்களின் உரிமைகளை பொருளாதாரத்திற்குப் பூட்டப்பட்ட விலங்குகளாகவும் சித்தரிக்கும் மறுகாலனியாக்கக் கொள்கையின் ’பார்வை’ திடீரென்று தோன்றிய திசைவிலகல் அல்ல. இதுதான் முதலாளித்துவ ஜனநாயகத்தின் சாரம்.

அரசியலுக்கும் பொருளாதாரத்திற்கும் இடையில் முதலாளித்துவம் மிகத்தந்திரமாக எழுப்பியிருக்கும் தடுப்புச்சுவரைத் தகர்க்காமல் சுதந்திரம், சமத்துவம் என்ற இந்தச் சொற்களுக்கான உண்மையான பொருளை நாம் காண முடியாது.

இன்று உற்பத்திச் சாதனங்களின் மீதான உடைமை வெகுவிரைவாகத் தனியார் முதலாளிகளின் கைக்கு மாறிக் கொண்டிருக்கும் போது, உலகின் செல்வங்கள் அனைத்தும் விரல்விட்டு எண்ணக்கூடிய சில பன்னாட்டு தொழிற்கழகங்களின் உடைமையாகி வரும்போது அரசியல் அதிகாரம் மட்டும் நம் கையில் நீடிக்க முடியும் என்று கருதுவது அசட்டுத்தனம் சொத்தின் உடைமையாளன் தான் தேசத்தை ஆள்கிறான். இதுதான் முதலாளித்துவ ஜனநாயகம்.

உற்பத்திச் சாதனங்களின் மீதான தனியுடைமையை ஒழிக்கும் சோசலிசம் ’ஜனநாயக விரோதமானது’ என்று எதிரிகள் கூக்குரல் எழுப்புவதன் காரணமும் இதுதான். எதிரிகளின் ’ஜனநாயக’ உரிமையைப் பறிப்பது தான் தங்களது ஜனநாயக உரிமையை மக்கள் நிலைநாட்டிக் கொள்வதற்கான முன்நிபந்தனை அந்த நடவடிக்கையின் பெயர் புரட்சி.

இந்த ஜனநாயகம் என்பது வேறெந்த உயர்ந்த இலட்சியத்தையும் அடைவதற்காக உருவாக்கப்பட்ட வழிமுறை அல்ல. ஜனநாயகத்தின் இலட்சியம் முதலாளித்துவத் தனிச் சொத்துடைமை. இன்று அதன் பரிணாம வளர்ச்சி ஏகாதிபத்திய மறுகாலனியாக்கம்!

இந்தத் தேர்தல் ஜனநாயகத்தை ஒரு ’வழிமுறை’ என்று இன்னமும் நம்பிக் கொண்டிருப்பவர்கள் தாராளமாக வாக்களிக்கலாம். நீங்கள் யாருக்கு வாக்களித்தாலும் பாசிசத்திற்கு வாக்களிக்கிறீர்கள் என்றே பொருள். ஏனென்றால் முதலாளித்துவ ஜனநாயகத்தின் தவிர்க்கவியலாத நிலைமறுப்பே பாசிசம்.

-மருதையன்
புதிய கலாச்சாரம், மே 2004

  1. பொருளாதார மற்றும் சட்ட வல்லுநர் அம்பேத்கர், அமெரிக்காவையும் ஐரோப்பாவையும் பார்த்து சிறப்பாக செதுக்கிய தேர்தல் முறையை, ஆளும் அமைப்பை மிக சுலபமாக இது வெளெய் செய்யவில்லை என்று சொல்லிவிட்டேர்கள் .

    மக்கள் வாக்கு அழிப்பது எப்பாடு என்கின்ற புரிதலை ஏன் பெற்றுக்கொள்ளவில்லை ?
    சினிமாவுக்கு ஒதுக்கும் நேரத்தில் ஐந்து சதம் வேட்பாளர் தகுதியை அளக்க செலவிட்டால் போதும் நமது ஜனநாயகம் சீரடையும்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க