privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகளச்செய்திகள்மக்கள் அதிகாரம்அதிகார வர்க்கத்தை ஆட்டம் காணச் செய்த மக்கள் போராட்டம்

அதிகார வர்க்கத்தை ஆட்டம் காணச் செய்த மக்கள் போராட்டம்

-

கொலைகார ராம்கியை இழுத்து மூடு, அதிகார வர்க்கத்தை ஆட்டம் காணச் செய்த மக்கள் போராட்டம்

கொலைகார ராம்கி நிறுவனத்தை இழுத்து மூடு என அ.முக்குளம் கிராமத்தில் நடைபெற்ற அனைத்து கிராம மக்களின் கண்டன ஆர்ப்பாட்டத்தால் ஆட்டம் கண்ட அதிகார வர்க்கம் மக்களை திருச்சுழியில் பேச்சுவார்த்தைக்கு அழைத்தது. இதே போல 18-11-2015 அன்று நடந்த அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் மக்களின் கேள்விகளுக்கும், தோழர் வாஞ்சிநாதனின் சட்டரீதியான கேள்விகளுக்கும் பதிலளிக்க இயலாமல் அம்பலப்பட்ட அதிகாரிகள் ராம்கி நிறுவனத்தை மூடுவதாக வாய்மொழி உத்தரவாதம் கொடுத்தனர். ஆனால், இதுவரை நடவடிக்கை இல்லை என்பதால் இதற்கு தீர்வு காணும் விதமாக மக்கள் அனைவரும் திருச்சுழி தாலுகா அலுவலகத்தை நோக்கி அணிதிரண்டனர்.

mukkulam-medical-waste-protest-2கூட்டம் ஆரம்பம் ஆவதற்கு முன்னரே டி.எஸ்.பி மக்கள் மிரட்டும் தொனியில் பேசினார். இந்த அதிகார வர்க்கம் மக்களுக்கானது அல்ல, காவல் துறை ஏவல்துறையே என்பதை நடைமுறையில் கற்றுக் கொண்ட மக்கள் டி.எஸ்.பி-யை அடிக்காத குறையாக அறைக்குள் ஓடச் செய்தனர்.

தோழர் வாஞ்சிநாதன் மக்களை கட்டுப்பாடாக இருக்கச் செய்து பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் மக்களிடம் அறிவித்து மக்களின் முடிவே எடுக்கப்படும். அதுவரையில் அமைதி காக்க கூறி பேச்சுவார்த்தைக்கு ஊருக்கு 5 பேர் வீதம் சென்றனர்.

mukkulam-medical-waste-protest-5அதிகாரிகளுடன் நடந்த பேச்சுவார்த்தையில் தோழர் வாஞ்சிநாதன், “இந்த நிறுவனம் எந்த விதமான சட்ட திட்டங்களையும் பின்பற்றவில்லை. நாட்டிற்கே அடிப்படையாக விளங்கும் விவசாயம் அழிக்கப்படுகிறது. 100-க்கும் மேற்பட்டவர்கள் மரணமடைந்து இருக்கிறார்கள் என்ற காரணத்தால்தான் 04-07-2013 அன்று மாவட்ட ஆட்சியர் மூடி சீல் வைத்திருக்கிறார். எனவே, இந்த நிறுவனத்தால் என்ன பாதிப்பு என்பதை மக்களாகிய நாங்கள் உங்களுக்கு விளக்கத் தேவையில்லை. இனி இந்த நிறுவனத்தை எப்படி மூடுவது என்பது பற்றிதான் அரசு முடிவு செய்ய வேண்டும். அதிகாரிகளிடம் எப்போது முறையிட்டாலும் மாவட்ட ஆட்சியரின் உத்தரவுக்கு ராம்கி நிறுவனம் கோர்ட் மூலம் தடையாணை பெற்று விட்டது. வழக்கு கோர்ட்டில் இருக்கிறது நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது என்று காரணத்தைக் கூறி இழுத்தடித்து வருகின்றனர். முறையாக நோட்டீஸ் கொடுக்கவில்லை என்ற காரணத்தைக் கூறித்தான் அவர்கள் தடையாணை பெற்றுள்ளனர். அரசு நினைத்தால் தடை ஆணையை ரத்து செய்ய வைக்க முடியும் அல்லது வழக்கை திரும்பப் பெற்று ராம்கி நிறுவனத்துக்கு முறையான நோட்டீஸ் கொடுத்து அந்த நிறுவனத்தை மூடி சீல் வைக்க முடியும். இவை எல்லாம் கோர்ட்டில் ஒரு அரைமணி நேர வேலை.

ஆனால், அதிகாரிகளின் அலட்சியப் போக்கினால் ராம்கி நிறுவனம் தொடர்ந்து செயல்பட்டு மக்களுக்கு தீங்கு விளைவித்து வருகிறது. மக்கள் இப்போது மிகுந்த கொந்தளிப்பில் இருக்கிறார்கள். சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே அரசு 133-ஆம் விதியைப் பயன்படுத்தி உடனடியாக ராம்கி நிறுவனத்தை மூட முடியும். அதற்கான சட்ட ஆணையை நாங்களே தயாரித்துக் கொண்டு வந்திருக்கிறோம். இப்போது அதிகாரிகள் உங்கள் முடிவை கூறுங்கள்” என்று தன் வாதத்தை எடுத்துரைத்தார்.

அதிகாரிகள் கலந்தாலோசித்து விட்டு வருகிறோம் என்று கூறி சென்றவர்கள் சிங்கப்பூரில் உள்ள ராம்கி நிறுவன முதலாளியுடன் தொலைபேசியில் கலந்தாலோசித்து விட்டு வந்தனர்.

மீண்டும் பேச்சுவார்த்தைக்கு வந்தவர்கள், “நாங்கள் புதியவர்கள், இதில் அனுபவம் இல்லை, நடவடிக்கை எடுக்கின்றோம், கால அவகாசம் வேண்டும். 133 சட்டத்தை பயன்படுத்தினால் அவர்கள் தடை ஆணை பெற்று விடுவார்கள்’ என்று ஏதேதோ மழுப்பினார். எப்படியாவது மக்களை இங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்பதைத் தவிர அவர்களிடம் வேறு நோக்கம் இல்லை. கெஞ்சுவது, மிரட்டுவது என்றே நேரம் கடந்தது.

mukkulam-medical-waste-protest-3தாசில்தார் சின்னதுரை, தொகுதி தேர்தல் அதிகாரி தியாகராஜன் ராம்கி நிறுவனத்திடம் பணம் வாங்கிக் கொண்டு அவர்களுக்கு ஆதரவாக செயல்படுவது அப்பட்டமாகத் தெரிந்தது. அதிலும் தியாகராஜனுக்கு ராம்கி முதலாளி அதிகமான எலும்புத் துண்டை போட்டுவிட்டார் போலும், மிகவும் விசுவாசமாக நடந்து கொண்டார்.

பேச்சுவார்த்தையில் சுமூக தீர்வு இல்லை அதிகாரிகள் ராம்கியின் கைக்கூலிகள் என்பதை அறிந்த மக்கள் கொந்தளிப்பிற்கு உள்ளானார்கள். புரட்சியின் ஆணிவேரான பெண்கள் தாசில்தார் அலுவலகத்துக்கு நுழைய முயற்சித்தனர். தடுக்க முயன்ற காவல்துறை உயர் அதிகாரிகளை இளைஞர்கள், பெண்கள் “போய்யா” எனக் கீழே தள்ளிவிட்டு “என்ன கைது செய்யப் போகிறாரா? தூக்கில் போடப் போகிறாயா? முடிந்தால் செய்” என்று கூறிவிட்டு அதிரடியாக நுழைந்தனர். இதனால் போலீசுக்கும், மக்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஆயிரக்கணக்கான மக்களை கட்டுப்படுத்த இயலாமல் ஆட்டம் கண்டது அதிகார வர்க்கம்.

“ஒரு எளவு விழுந்து 13 நாள் காரியம் முடிவதற்குள் அந்த வீட்டில் இன்னொரு எழவு விழுந்துருது. ஒரு வீட்டுல ஒரே நாளில் அப்பாவும் மகனும் கிட்னி பெயிலியரல் செத்தா பொம்பள நாங்க புள்ள குட்டிய வச்சுகிட்டு என்னையா பண்றது, நாங்க எப்புடி வாழ்றது” என்று கோபத்தோடும் கண்ணீரோடும் கத்தியதோடு “வாழ உரிமை இல்லாது எங்களுக்கு வாக்குரிமை எதற்கு? ஊருக்குள் யார் வந்தாலும் விரட்டியடிப்போம்” என்ற ஆவேசமாகக் கூறி வாக்காளர் அட்டையை அதிகாரிகள் மீதும் அவர்களின் மேசை மீதும் வீசி எறிந்து தங்களது கோபக் கனலை வெளிப்படுத்தினர். இதற்கு இடையே ஆர்.டி.ஓ “தயவுசெய்து மக்களை கலைந்து போகச் சொல்லுங்கள்” என்று தன் அறைக்குள் சென்று விட்டார்.

mukkulam-medical-waste-protest-1
“வாழ உரிமை இல்லாது எங்களுக்கு வாக்குரிமை எதற்கு?”

மக்களின் கொந்தளிப்பைப் பார்த்து கலக்கமடைந்த அதிகாரிகள் வேலையை விரைவுபடுத்துவது போல காட்டிக் கொண்டு நேரத்தைக் கடத்தி அந்த இடைவெளியில் மேலும் நிறைய காவலர்களை வரவழைத்தனர். எதற்கும் அசைந்து கொடுக்காத மக்கள் நீ எவ்வளவு போலீஸ் படையும் இறக்கு, சந்திக்கத் தயார் எனக் கூறி அருகிலேயே பாத்திரங்கள் வாடகைக்கு வாங்கி தாலுகா அலுவலகத்திலேயே சமைக்கத் தொடங்கியதைக் கண்டு மேலும் நடுக்கம் கொண்டது அதிகார வர்க்கம்.

பிறகு ஏ.டி.எஸ்.பி பேச்சு வார்த்தைக்கு வந்தார். “நீங்கள் சனிக்கிழமை வாருங்கள் கலெக்டரிடம் பேச்சுவார்த்தை நடத்தி மூட நடவடிக்கை எடுக்கிறோம் எங்களை நம்புங்கள்” என்று கூறினார். “சரி இன்று நடந்த பேச்சுவார்த்தையில் என்ன முடிவு எடுக்கப்பட்டது, எங்கள் கோரிக்கை என்ன என்பதைக் குறிப்பிட்டு எழுதி ஆவணமாக அனைத்து அதிகாரிகளும் கையெழுத்து போட்டு தாருங்கள், நாங்கள் சனிக்கிழமை வருகிறோம்” என்றோம். முதலில் தயங்கியவர்கள் பின்னர் ஒப்புக் கொண்டனர்.

குறிப்பாக, “133 விதியை பயன்படுத்தி நிறுவனத்தை மூட முயற்சிக்கிறோம் என்பதை அதில் குறிப்பிட வேண்டும்” என்று தோழர் வாஞ்சிநாதன் வலியுறுத்தினார். சரி என்று ஒப்புக் கொண்டனர். அதை டைப் செய்து கொண்டு வந்து கொடுத்தனர். அதை வாசியுங்கள் என்று கூறியபோது, அதில் 133 விதியை பயன்படுத்த முயற்சிக்கிறோம் என்னும் வாக்கியமே இடம் பெறவில்லை. என்ன இது என்று கேட்டதற்கு சமாளித்தனர்.

mukkulam-medical-waste-protest-4பிறகு ஏ.டி.எஸ்.பி.யே தோழர் வாஞ்சிநாதன் கூறிய விதிகளை தன் கைப்பட எழுதினார். அதை ஆர்.டி.ஓ சரிபார்த்து டைப் செய்து வாருங்கள் என்று தன் உதவியாளரிடன் கொடுத்தார். டைப் செய்த உதவியாளர் வாசிக்க ஆரம்பித்தார். வழக்கம் போலவே ‘கைய புடிச்சி இழுத்தியா’ கதையாக 133 விதியை பயன்படுத்த முயற்சிக்கிறோம் என்னும் வாக்கியம் இல்லை. இப்போது அதிகாரிகளுக்கும் அதிர்ச்சி. என்ன இது ஏ.டி.எஸ்.பி எழுதி ஆர்.டி.ஓ சரிபார்த்தை யார் மாற்றுகிறார்கள். மாற்றுவது யாரும் இல்லை ராம்கியின் எலும்பு துண்டுக்கு வேலை செய்யும் தேர்தல் அதிகாரிதான். “கடைசி வரையில் 133 விதியை சேர்க்காமல் கலைய மாட்டோம். இந்த வாக்கியத்தை சேர்ப்பதில் என்ன சிக்கல் எல்லா வாக்குறுதியையும் நிறைவேற்ற போகிறீர்கள் என்று கூறியபிறகும் அதை எழுத்து பூர்வமாக கொடுப்பதில் என்ன சிக்கல்” என்று வலுயுறுத்திய பிறகு எழுதி கையெழுத்து போட்டுக் கொடுத்தனர்.

இதனிடையே ஏ.டி.எஸ்.பி “இவ்வளவு மரணம், இத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்கிறீர்களே, இத்தனை ஆண்டுகளாக என்ன செய்து கொண்டு இருந்தீர்கள்” என்று மக்களைப் பார்த்து கேட்டார்.

“இவ்வளவு காலமும் இந்த அரசையும், சட்டத்தையும், நீதிமன்றத்தையும் நம்பினோம். ஒவ்வொரு குறைதீர்க்கும் நாளிலும் நாங்கள் அத்தனை அதிகாரிகளிடமும் மனு கொடுத்தோம். அத்தனை மனுவையும் அடியில் போட்டு உட்கார்ந்து கொண்டு இப்போது நாங்கள் உங்கள் சட்டத்தை காலில் போட்டு மிதித்த பிறகுதான் எங்கள் கோரிக்கையை கேட்கவே ஆரம்பித்து இருக்கிறீர்கள்” என்றனர், மக்கள்.

இறுதியாக, “இனி நாங்கள் உங்களை தேடி வர மாட்டோம் நீங்கள் எங்களை தேடி வரும்படிதான் எங்கள் போராட்டம் அமையும்” என்று எச்சரித்தனர் மக்கள்.

அதிகாரிகளும், அரசியல்வாதிகளும், நீதிமன்றமும் மக்களுக்கு உதவாது. அரசு எந்திரம் மக்களை ஒடுக்கும் கருவியை என்பதை இப்பகுதி மக்கள் நடைமுறையில் உணர்ந்து அதை முறியடிக்க போராட்டமே தீர்வு என்பதை அனுபவத்தின் மூலம் தெரிந்து கொண்டனர்.

மக்கள், மக்கள் மட்டுமே உலக வரலாற்றைப் படைக்கும் உந்து சக்திகள் என்பது மீண்டும் மீண்டும் நிரூபணம் ஆகின்றது.

இறுதியாக, தோழர் வாஞ்சிநாதன் “அதிகாரிகள் இன்னும் 1 வாரத்திற்குள் ராம்கி நிறுவனத்தை மூடி சீல் வைக்காவிட்டால் தொடர் போராட்டம் நடைபெறும்” என்றும், “15-ம் தேதி ஜெயலலிதா வரும் போது கருப்புக்கொடி காட்டும் போராட்டம் செய்யப்படும்” என்றும் அறிவித்த போது மக்கள் “அதோடு தீக்குளிப்பு போராட்டம் கூடச் செய்வோம் எதற்கும் தயார்” என்றனர் ஆவேசத்துடன்.

இறுதியாக, தோழர் வாஞ்சிநாதன் அனைத்து கிராம மக்களையும் கலைந்து செல்லலாம் என்று அறிவித்த பின்னர் மக்கள் கலைந்து சென்றனர்.

பத்திரிகை செய்திகள்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

தகவல்
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க