Saturday, January 16, 2021
முகப்பு கட்சிகள் அ.தி.மு.க மூடு டாஸ்மாக்கை ! குமரியில் கிளம்பிய போராட்ட நெருப்பு !

மூடு டாஸ்மாக்கை ! குமரியில் கிளம்பிய போராட்ட நெருப்பு !

-

நுள்ளிவிளை போராட்டம்ன்னியாகுமாரி  மாவட்டம், நுள்ளிவிளை-பேயன்குழி  சந்திப்பு பகுதியில்  அருகருகே செயல்பட்டு  வரும்  இரு  டாஸ்மாக்  சாராயக் கடைகளை  உடனடியாக மூடுமாறு  மக்கள்  அதிகாரம் அமைப்பும்,  டாஸ்மாக்  ஒழிப்பு பெண்கள்  முன்னணி அமைப்பும் 12.04.2016-ம்  தேதி முற்றுகைப்  போராட்டம்  நடத்தினர்.

பேயன்குழி சந்திப்பு டாஸ்மாக்  கடைகளினால்  சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த    40-க்கும் மேற்பட்ட  கிராம  மக்கள்  பாதிப்படைந்துள்ளனர். இக்கிராமங்களைச் சேந்த மக்கள் அனைவரும் போக்குவரத்து, வர்த்தகம் மற்றும்  அத்தியாவசிய தேவை அனைத்திற்கும்  டாஸ்மாக்  கடைகள்  அமைந்திருக்கும்  இந்த  சந்திப்பிற்குத்தான்  வரவேண்டும்.    இக்கடைகள்  அமைந்திருக்கும்  இடத்திலிருந்து  50 மீட்டர் தொலைவிற்குள்தான்  தேவாலயமும் கோவிலும் நான்கு பள்ளிகளும் உள்ளன.

எந்நேரமும்  குடிகாரர்களால் ஆக்கிரமிக்கப்பட்ட  பகுதியாகவே  காணப்படுகிறது  இந்த  பகுதி.   பள்ளி, கல்லூரிகள் செல்லும்  மாணவிகள்  மற்றும்  பெண்கள்  எந்நேரமும்  அச்சத்துடனேயெ  கடந்து செல்லவேண்டிய  நிலை.  சாலை  ஓரங்கள் மற்றும் அருகிலுள்ள  கடைகளில்  வைத்து  குடிப்பதும், குடித்துவிட்டு  ஆடையின்றி  சாலையோரத்திலேயே அலங்கோலமாக கிடப்பதும், மாணவிகள்-பெண்களிடம் அநாகரிகமாக நடப்பதும், எப்போதும்  கெட்ட வார்த்தைகளை பேசிக்கொண்டிருப்பதுமாக மொத்தத்தில் இது ஒரு அருவெறுப்பான பகுதியாக மாறிவிட்டது.

தொடர்ந்து பலஆண்டுகள்  மனுக்கொடுத்தும் அதிகாரிகள், மக்கள்  பிரதிநிதிகளைச் சந்தித்தும்  எவ்வித பலனும்  கிடைக்காததால்  போராட்டம்  நடத்துவதைத்  தவிர  வேறு  வழியில்லை  என  உணர்ந்த சுற்றுவட்டார கிராம  பெண்கள் போராட்டத்திற்கு  அணிதிரண்டனர். அதன்படி சென்ற வருடம்  15.10.2015-ம் தேதி அன்று ஆர்ப்பாட்டம்  நடத்தியுள்ளனர்.   30  நாட்களுக்குள்  கடையை  மூடிவிடுவோம்  என்று  தாசில்தார் அன்றைய தினமே  வாக்குறுதியளித்துள்ளார்.  ஆனால்  5  மாதங்கள்  கடந்தும்  எந்த  பலனும்  இல்லை. எனவே அடுத்த  கட்ட  போராட்டத்திற்கு  தயாராகினார்  பெண்கள்.

படங்களை பெரிதாக பார்க்க அழுத்தவும்:

நுள்ளிவிளை காரங்காடு டாஸ்மாக்கினால் பாதிப்படையும் நுள்ளிவிளை, காரங்காடு, மூலச்சன்விளை, கட்டிமாங்கோடு, செருப்பங்கோடு, குசவன்குழி உள்ளிட்ட  சுற்று வட்டார  கிராமப்பெண்கள் டாஸ்மாக்  ஒழிப்பு பெண்கள்  முன்னணி  என்னும் இயக்கத்தை உருவாக்கி  அமைப்பாகத்  திரண்டனர்.  தற்போது டாஸ்மாக்  ஒழிப்பு பெண்கள்  முன்னணியும், மக்கள்  அதிகாரமும்  சுமார்  ஒருமாத  காலம்  சுற்றுவட்டார  கிராமங்களில் பிரச்சாரம் செய்தன. இப்பிராச்சாரத்தில் பெண்கள் பெருமளவு கலந்து கொண்டனர். தொடர்ச்சியாக  12.04.2016-ம் தேதி  போராட்டம்  நடத்துவது  என்று  முடிவு  செய்யப்பட்டது.

அனுமதி  வாங்கி  போராட்டம்  நடத்தி  டாஸ்மாக்கை மூடமுடியாது, ஓட்டுப் போட்டு  டாஸ்மாக்கை  மூட முடியாது, டாஸ்மாக்கை மட்டுமல்ல எந்தவொரு  பிரச்சனையையும்  ஓட்டு  போட்டு  தீர்க்க  முடியாது,  போராட்டம்  ஒன்றே  தீர்வு  என்று  பிரச்சாரம் தீவிரமாக நடந்தது. போராட்டத்திற்கு முதல்  நாளே  கிராமம்  கிராமமாக  சென்று  அச்சமூட்டியது போலீசு.

போராட்டத் தினத்தன்று  காலையிலே திட்டமிட்டபடி  பெண்கள்  அணி அணியாக  வர  ஆரம்பித்தனார்.  வரும்  வழியிலேயே  பெண்களை  தடுப்பதற்கு  திட்டமிட்டு  தோற்றுப்போனது  போலீசு.  போலீசின்  தடைகளை  மீறி  திட்டமிட்டபடி  கடையினை  முற்றுகையிட்டனர்  பெண்களும்  மக்கள் அதிகார  தோழர்களும்.

சிறிது நேரத்தில்  கலைந்து  சென்று  விடுவார்கள்  என்று  நினைத்த  போலீசுக்கு கடைகளை மூடும்  வரை  செல்லமாட்டோம்    என்று  மக்கள் உறுதியாக  இருந்தது  கலக்கத்தை  ஏற்படுத்தியது.   தற்காலிக பந்தலும்  மக்களால் போடப்பட்டது.

சிறிது  நேரத்தில்  டாஸ்மாக்  அதிகாரி வந்து  பேசினார்.  கடையை மூன்று  நாட்கள்  தற்காலிகமாக மூடுகின்றொம்  என்றார் அந்த அதிகாரி. மூன்று நாட்கள் மூடவா  நாங்கள்  போராடுகிறோம்  என்று  எதிர்கேள்வி  எழுப்பியதை  எதிர்கொள்ள  முடியாமல்  அமைதியாக சென்று  விட்டார் அவர்.

நேரம்  கடக்க கடக்க  மக்கள்  போராட்டம்  வீரம்  செறிந்ததாக  மாறிக்கொண்டிருந்தது.   ஒதுங்கியிருந்த  பெண்கள், ஆண்கள்  பலரும்  போராட்டத்தில்  தங்களை  இணைத்துக் கொண்டனர்.   மறுபுறம்  அரசு  நிர்வாகமும்  போலீசின்  எண்ணிக்கையை  அதிகரித்துக் கொண்டேயிருந்தது.   அடுத்து வந்த   ஆர்.டி.ஓ-விடம் ,  எங்கள்  கோரிக்கை    இரண்டு கடைகளை  உடனே மூடவேண்டும்  என்பது தான்  என்று  மக்கள்  கூற   நான்  மேலதிகாரிக்கு  எழுதுகிறேன் என்றார் ஆர்.டி.ஓ.   நாங்கள்  இப்படி  பலமுறை  ஏமாந்து   விட்டோம்  இனியும் ஏமாற  மாட்டோம்,  கடையை  மூட உத்தரவிடுங்கள்,   இல்லையென்றால்  சென்று  விடுங்கள்,  அதிகாரம்  யாருக்கு  உண்டோ  அவர்களை  வரச்சொல்லுங்கள்  என்று  பணிய  மறுத்தனார்  பெண்கள்.

இந்த  ஆர்.டி.ஓ.  தன்னை  அலுவலகத்திற்கு  காண  வருபவர்களை   எளிதில்  சந்திக்காமல் திமிருடன்  நடந்து  கொள்வாராம்.  ஆர்.டி.ஓ., எஸ்.பி, ஏ.எஸ்.பி உள்ளிட்ட   ஒட்டுமொத்த   அரசு நிர்வாகத்தையும்  தெருவுக்கு இழுத்து வெயிலில்  நிற்க  வைத்து  விட்டது இந்த  உறுதிமிக்க போராட்டம்.  100-க்கும்  மேற்பட்ட  போலீஸ்  வாகனங்கள் , சுழல் விளக்கு  பொருத்திய அதிகாரிகளின்  வாகனங்கள் என்று  அந்த  பகுதியை  போர்ககளம்  போல  மாற்றியது  போலீசும்  அரசும்.

படங்களை பெரிதாக பார்க்க அழுத்தவும்:

தேர்தல்  நேரம்  போராட  அனுமதியில்லை  கடையை  மூட எங்களுக்கு  அதிகாரமில்லை என்று  ஏதோதோ  பேசிப்  பார்த்தனார்  அதிகாரிகள்.  டாஸ்மாக்கை  மூட தேர்தல்  தடுக்கிறதென்றால்  அந்த  தேர்தலே  எங்களுக்கு  தேவையில்லையென  மக்கள்  இயல்பாக  கூறியது  தேர்தல்   மயக்கத்திலிருந்த  அதிகாரிகளை  விழி பிதுங்க வைத்தது.

நேரம்  செல்லச்  செல்ல  மக்கள்  கலைய  மாட்டார்கள்  என்பதை  புரிந்து கொண்ட  போலீசு அவர்களை எளிதில்  கைது  செய்ய  முடியாது  என்பதையும்  புரிந்து  கொண்டது. உளவுத் துறை  கைகாட்டியவர்களை  குறிவைத்து  அடித்து உதைத்து இழுத்து  சென்று  வண்டியில்  ஏற்றினாலும்  பெண்களை  அவர்கள்  நினைத்த  மாதிரி கைது  செய்ய  இயலவில்லை.  போராட்டத்  தலைமை மற்றும்  மக்கள்  அதிகார  தோழர்களையும் போலிசிடமிருந்து  தங்களால்  முடிந்தவரை காப்பாற்ற போராடினர் பெண்கள்.

பெண்கள் பலரையும் அடித்தும் இழுத்தும் கொண்டு செல்ல முயன்றார்கள். சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட மக்களை கைது செய்த போலீசுக்கு பெண்களை ஆண் போலிசு தொடக்கூடாதென்றோ, பணியில் இருக்கும் போது தனது பெயரை சட்டையில் தெரியும்படி வைக்க வேண்டுமென்றோ தெரியவில்லை.

கைது செய்து மண்டபத்தில் வைத்து மிரட்டி அனுப்பினால் அமைதியாக சென்று விடுவார்கள் என்று நினைத்து மனப்பால் குடித்த போலிசுக்கு அதிர்ச்சியூட்டியது மக்களின் முழக்கம்.

மண்டபத்தில் நாங்கள் உண்ணாவிரதம் இருக்கிறோம், எங்கள் அங்க அடையாளங்கள், முகவரகளைத் தரமாட்டோம் என முடிவு செய்து அறிவித்தனர் மக்கள். உண்ணாவிரதம் அறிவித்ததும் கைதிகளின் உரிமையை நிலைநாட்டுவதற்காக போலிசு சரியான நேரத்திற்கு உணவு ஏற்பாடு செய்து மக்கள் முன் வைத்தது. அதை திரும்பிக் கூட பார்க்காத மக்கள் போலிசை எள்ளி நகையாடி நிலை குலைய வைத்தனர்.

பெண்கள்தானே, வீட்டில் ஆயிரம் வேலைகள் இருக்கும், நேரம் செல்லச் செல்ல கலைந்து சென்று விடுவார்கள் என்று மனப்பால் குடித்த போலிசுக்கும் நிர்வாகத்திற்கும் பீதியை ஏற்படுத்தியது மக்களின் உறுதி.

அதனால் மக்களை கலைய வைக்க தனது கைக்கூலிகளை துணைக்கு இழுத்தனர். பிறகு போராடுபவர்களின் உறவினர்கள், சில பாதிரியார்கள் என பலரையும் அழைத்து வந்தனர். ஆனால் அத்தனை பேரையும் திருப்பி அனுப்பினர் மக்கள்.

படங்களை பெரிதாக பார்க்க அழுத்தவும்:

மதுவுக்கு எதிராக போராடும் எங்களோடு நிற்காமல் போலிசுக்கு துணையாக வேலை பார்க்கும் நீங்களெல்லாம் மக்கள் விரோதிகள் என்று பாதிரியார்களை அம்பலப்படுத்தி திருப்பி அனுப்பினர் மக்கள். அது மட்டுமல்ல இந்து, கிறிஸ்தவ பேதமில்லாமல் சாதி பாகுபாடு இல்லாமல் வேற்றுமைகளை கடந்து உழைக்கும் மக்களாக இணைந்து நடக்கும் போராட்டமாக இது பரிணமித்தது. வந்த பாதிரியார்களிடம் “இங்கு எல்லாம மத மக்களும் இருக்கிறோம், திரும்பிச் சென்று விடுங்கள்”என்று எச்சரிக்கவும் மக்கள் தயங்கவில்லை.

போராட்டத்திற்கு முந்தைய நாள்  ஆர்.எஸ்.எஸ்-காரர்கள் தங்கள் ஆதிக்கம் செலுத்தும் ஊர்களில் செய்ததை இங்கு பாதிரியார்களும் செய்தனர். ஆனால் உழைக்கும் மக்கள் தங்களுக்கே உரிய முறையில் இரு இடங்களிலும் அவர்களை அம்பலப்படுத்தி தனிமைப்படுத்தினர். நேரம் செல்லச் செல்ல மண்டபத்தினுள் மின்விசிறி விளக்குகளை அணைத்தது போலிசு. கழிவறைகளையும் அடைத்தது. ஆனால் மக்கள் எதற்கும் கலங்கவில்லை.

மாலை ஆறுமணிக்கு மேல் ஆண்களும் பெண்களும் ஒரே இடத்தில் அமர சட்டம் அனுமதிக்காது என்று போராடியவர்களை பிடிக்க முயன்ற போலிசை “நாங்கள் போராளிகள், கட்டுப்பாடானவர்கள்” என்று போராட்ட தலைமை மற்றும் ஆண்களை தனியாக பிடிக்க நினைத்த போலிசின் சதியை புரிந்து கொண்டு மக்கள் கூறியதும் போலிசு வேறு வழியின்றி அமைதியானது. மண்டப நிர்வாகிகள் மற்றும் உள்ளூர் பொறுக்கிகள் சிலரையும் மண்டபத்தில் அனுப்பியது போலிசு. அச்சுறுத்த முயன்ற அவர்களையும் மிரட்டி அனுப்பினர் மக்கள்.

மண்டபத்திற்கு வெளியே நூற்றுக்கணக்கா பெண்களும் ஆண்களும் அணிதிரண்டு டாஸ்மாக் கடைகளை மூடு என்று முழக்கமிட்டனர். அவர்களையும் அச்சறுத்த முயன்றனர். மண்டபத்திலிருந்து வெளியேறிய பொறுக்கிகள், கைக்கூலி பாதிரியார்கள் இங்கும் மக்களை மிரட்டினர். ஆனால் மக்களோ இங்கும் கரிபூசினர். கைது செய்கிறோம் என்று மக்களை கடுமையாகத் தாக்கிய போலிசை படம் பிடித்த பத்திரிகையாளரின் மொபைலை பிடுங்கி காலில் போட்டு மிதித்து உடைத்தது போலிசு.  இதைக் கண்டித்து அன்று மாலை தக்கலையில் பத்திரிகையாளர்கள் போராட்டம் நடத்தினர்.

தேர்தல் நேரம் எங்களால் முடிவெடுக்க முடியாது என்று அடம்பிடித்த போலிசும் நிர்வாகமும் வேறு வழியின்றி தேர்தல் முடிந்த ஒரு மாத காலத்திற்குள் (ஜூன் 20-ம் தேதிக்குள்) இருகடைகளையும் மூடிவிட்டு இடம் மாற்றுவதாக எழுதிக் கொடுத்ததை ஏற்றுக் கொண்டு இரவு 9.45 மணியளவில் போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்திக் கொண்டனர் மக்கள்.

விடுதலை செய்யப்பட்ட மக்களிடம், அதிகாரிகளின் முன்னிலையிலேயே “அதிகாரிகள் எழுதிக் கொடுத்ததை நாம் நம்புகின்றோமா”என்று கேட்ட போது இல்லை, அரசு சொன்னபடி நடக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டத்தை தொடருவோம் என்று ஒரே குரலில் மக்கள் உரக்க அறிவித்தனர். இது அதிகாரிகளை கலக்கமடையச் செய்தது. கைது செய்யப்பட்ட இடத்திற்கே மீண்டும் கொண்டு சென்று விடுகிறோம் என்று போலிசு கூறிய போது நீ சமூக விரோதி உன்னுடைய தயவில் நாங்கள் செல்ல தயாரில்லை என்று நடந்தே தங்களுடைய பகுதிகளுக்கு மக்கள் சென்றனர்.

மறுநாள் (13.04.2016) காலை அரைமணிநேரம் மட்டுமே கடையை திறந்து வைத்துவிட்டு நாள் முழுவதும் கடையை அடைத்தது மாவட்ட நிர்வாகம். தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் கடைகளை அடைக்க அதிகாரம் இல்லை என்று கூறிய அதே அதிகாரிகளை இரண்டு நாட்களுக்கு கடையை மூட வைத்தது மக்கள் போராட்டம்.

தேர்தல் அக்கப்போர் செய்திகளுக்கு மத்தியில் நம்பிக்கையூட்டும் போராட்டம் குமரி மாவட்டத்தில் நடந்திருக்கிறது. டாஸ்மாக்கை மூடுவது என்பது ஓட்டுக் கட்சிகளின் கருணையினால் அல்ல, மக்கள் போராட்டத்தினால் மட்டுமே என்பதை இப்போராட்டம் நிரூபித்திருக்கிறது.

தகவல்:
டாஸ்மாக் ஒழிப்பு பெண்கள் முன்னணி,
மக்கள் அதிகாரம்,
குமரி மாவட்டம்.

_________________________________

  1. தமிழ் நட்டின் தென் கோடியில் தெறித்திருக்கும் இந்தத் தீப்பொறி வடகோடி தலை நகர் வரை பற்றிப் படரட்டும்.போர்க்குணம் காட்டிய பெண் தோழர்களுக்கு வாழ்த்துக்கள்! சாராயக் கடையை மூடினால் தான் வெற்றி!அதுவரை போராடுங்கள்!யார் வந்தும் சாராயக் கடையை மூடக் காத்திருக்க வேண்டாம்.மக்களே மூடிவிடலாம்.மக்கள்தான் மூடவேண்டும்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க