Sunday, March 26, 2023
முகப்புகட்சிகள்அ.தி.மு.கநரகலில் நல்லரிசி தேடாதீர் !

நரகலில் நல்லரிசி தேடாதீர் !

-

“இதிகாச புராணங்களில் உள்ள நல்ல கருத்துகளை நாம் எடுத்துக் கொள்ளலாமே” என்று பெரியாரிடம் சொன்னபோது, “நரகலில் இருந்துதான் நல்லரிசியைப் பொறுக்க வேண்டுமா?” என்று அவர் திருப்பிக் கேட்டாராம். தேர்தலில் கட்டாயம் வாக்களிக்க வேண்டுமென்று பிரச்சாரம் செய்பவர்கள் மக்களிடம் இந்தக் காரியத்தைத்தான் செய்யச் சொல்கிறார்கள். மக்களின் விரல் நுனியில் அதிகாரம் இருப்பதைப் போலவும் அதனைச் சரியாகப் பயன்படுத்த தவறுவதன் காரணமாகத்தான் நாட்டின் எதிர்காலத்தையும் தங்களது சொந்த எதிர்காலத்தையும் மக்கள் கெடுத்துக் கொள்வதாகவும் பிரச்சாரம் செய்யப்படுகிறது. “இந்த அரசமைப்பு சரியாகத்தான் இருக்கிறது. தேர்ந்தெடுத்து அனுப்பப்படும் நபர்கள்தான் சரியில்லை” என்பதுதான் இந்த பிரச்சாரம் கூறவரும் செய்தி.

sifting-shit-to-pick-grainsஅரசியல் கட்சிகள் மட்டுமல்ல, இந்தத் தேர்தலை நடத்துகின்ற தேர்தல் ஆணையம், அதிகார வர்க்கம், போலீசு, நீதித்துறை உள்ளிட்ட இந்த ஜனநாயகத்தின் உறுப்புகள் என்று கூறப்படும் அனைத்தும் கெட்டுச் சீரழிந்து நரகலாகி விட்டன. அவற்றுக்கான தகுதிகள் என்றும் கடமைகள் என்றும் கூறப்படும் எதற்கும் எள்ளளவும் பொருத்தமானவையாக அவை இல்லை. அதனால்தான் வாக்களிப்பதன் அவசியம் பற்றி வக்கணை பேசுபவர்கள், “நல்லவர்களுக்கு வாக்களியுங்கள்” என்று ஒரு வேட்பாளரை அவரது தனிப்பட்ட ஒழுக்கம் மற்றும் குணநலனின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கும் பொறுப்பை வாக்காளர்களிடம் தள்ளி விடுகிறார்கள்.

கட்சிகள், அதிகாரவர்க்கம், போலீசு, நீதித்துறை என்று எந்த நிறுவனத்தின் மீது விமரிசனம் வந்தாலும், அந்த நிறுவனத்தின் சீரழிவுக்கான காரணங்களைப் பரிசீலிப்பதற்குப் பதிலாக, அவற்றில் ஆங்காங்கே தென்படும் ஓரிரு நேர்மையாளர்களைக் காட்டி, நல்லவர்கள் இன்னமும் இருக்கத்தானே செய்கிறார்கள் என்று கூறி நம்பிக்கையூட்டுகிறார்கள். இத்தகைய நல்லவர்களில் ஒருவரான பழ.கருப்பையா, “அ.தி.மு.க. என்ற கட்சி ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட கொள்ளைக்கூட்டம் என்றும், அதில் நல்லவர்கள் யாருக்கும் வேலை இல்லை” என்றும் விளக்கித் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். போலீசு மற்றும் அதிகார வர்க்கத்தில் “நல்லவர்கள்” என்று அறியப்பட்ட விஷ்ணுப்பிரியாவைப் போன்ற பலர் மர்மமான முறையில் மரணமடைந்திருக்கிறார்கள்; முத்துக்குமாரசாமி போன்றோர் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள்; சகாயம் போன்றோர் சுடுகாட்டுக்கு விரட்டப்பட்டிருக்கிறார்கள்; நீதித்துறையின் ஊழலைக் கேள்விக்குள்ளாக்கும் வழக்கறிஞர்கள் நீதிமன்ற அவமதிப்புக் குற்றம் சாட்டப்பட்டு வெளியேற்றப்படுகிறார்கள்.

இதுதான் நம் மீது அதிகாரம் செலுத்துகின்ற இந்த அரசமைப்பின் யோக்கியதை. இதை மக்கள் கூடுதலாகவோ குறைவாகவோ புரிந்திருக்கின்றனர். எனவே, சமுதாயத்தையே ஊழல்படுத்துவதன் வாயிலாகத்தான் தங்களுடைய ‘கவுரவத்தை’க் காப்பாற்றிக் கொள்ள முடியும் என்பதை ஆளும் வர்க்கம் புரிந்து வைத்திருக்கிறது. மற்ற யாரை விடவும் இதனைத் தெளிவாகப் புரிந்து அமல்படுத்துபவர் ஜெயலலிதா. அதனால்தான் மூன்றாவது மாடியில் நின்றபடி வெள்ளத்தை வேடிக்கை பார்த்த நடுத்தர வர்க்கத்தினருக்கும் வெள்ள நிவாரணம் வழங்கி, தன்னுடைய ‘கட்சி’யில் சேர்த்துக் கொள்கிறார். வாக்கை விலை பேசி விற்பதையே ஒரு ஜனநாயக உரிமையாகக் கருதும்படியும், கூடுதல் விலை தருபவர்களை நேர்மையானவர்களாக மதிப்பிடும்படியும் மக்களைப் பயிற்றுவிக்கிறார்.

முதல் தலைமுறை வாக்காளர்களான மாணவர்கள், இளைஞர்கள் அரசியல், சமூக அறிவோ உணர்வோ இல்லாத காரியவாதிகளாகப் பயிற்றுவித்து வளர்க்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களைக் காட்டித்தான் “100 விழுக்காடு வாக்குப்பதிவு” என்று இந்த அமைப்புக்கு மதிப்புக் கூட்டும் பணியைத் தேர்தல் ஆணையம் செய்து வருகிறது.

ஒருபுறம் நரகலாக முடைநாற்றம் வீசும் இந்த அரசமைப்பு, இன்னொரு புறம் ஊழல்படுத்தப்பட்டு அறியாமையில் ஆழ்த்தப்பட்டிருக்கும் மக்கள். தமது உரிமையையும் அதிகாரத்தையும் நிலைநாட்டிக் கொள்ளும் போராட்டத்தில் மக்களை ஈடுபடுத்துவதுதான், நரகலில் நல்லரிசி தேடும் இந்த அவல நிலையிலிருந்து அவர்களை விடுவிக்கும்.

– தலையங்கம்
_____________________________
புதிய ஜனநாயகம் – ஏப்ரல் 2016
_____________________________

  1. “மக்கள். தமது உரிமையையும் அதிகாரத்தையும் நிலைநாட்டிக் கொள்ளும் போராட்டத்தில் மக்களை ஈடுபடுத்துவதுதான்”- HOW LONG, WAIT FOR THAT?

    PORATTAM ILLAI PURATCHI VENDUM.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க