Monday, March 27, 2023
முகப்புகட்சிகள்அ.தி.மு.கதமிழகமெங்கும் டாஸ்மாக் முற்றுகை - படங்கள்

தமிழகமெங்கும் டாஸ்மாக் முற்றுகை – படங்கள்

-

1. விழுப்புரம் டாஸ்மாக் தலைமை அலுவலகம் முற்றுகை போர் ! 270 பேர் கைது !!

மிழகத்தில் இன்று பற்றி எரியும் பிரச்சனையாக டாஸ்மாக் சாராயம் உள்ளது. மூலைமுடுக்குகளில் எல்லாம் ஒரே குரலாக ஓங்கி ஒலிக்கிறது என்றால் அது மூடு டாஸ்மாக்கை என்பதாகத் தான் இருக்கும். அந்த அளவிற்கு டாஸ்மாக்கால் மக்கள் தங்கள் வாழ்க்கையை இழந்து தவித்து வருகின்றனர் என்பதைத் தான் இது உணர்த்துகிறது.

குடும்பங்கள் சீரழிவு, தாய்மார்களின் தாலி அறுப்பு, மாணவர்கள் குடிபோதைக்கு ஆளாகுவது என்று தமிழ்ச் சமூகத்தையே சீரழித்து வருகிறது ஜெயா அரசு. ஒரு காலத்தில் குடிப்பதையே அவமானமாக கருதிய சமூகம், இன்று குடிப்பதையே ஒரு கலாச்சாரமாக கருதும் நிலைக்கு தள்ளப்பட்டு விட்டனர்.

“மூடு டாஸ்மாக்கை” என்று யார் போராடினாலும் அவர்களை கடுமையாக ஒடுக்குகிறார். ஊருக்கு ஊரு சாராயம் எனப்பாடிய கோவனை தேசத்துரோக வழக்கில் கைது செய்தார். பிப்ரவரி 14 அன்று திருச்சியில் நடத்திய மாநாட்டில் பேசிய 6 பேர் மீது தேசதுரோக வழக்கு பதிவு செய்தார்.

இத்தனை படுபாதக செயலையும் செய்த பார்ப்பன ஜெயா வரும் சட்டமன்ற தேர்தலில் ஓட்டுப் பொறுக்குவதற்காக “ படிப்படியாக மதுவிலக்கு” என்று தனது இளமைக் கால தொழிலான நடிப்பை மேடைதோறும் அரங்கேற்றுகிறார். தி.மு.க தலைவர் கருணாநிதி உள்ளிட்ட மற்ற கட்சித் தலைவர்களும் “முதல் நாள் முதல் கையெழுத்து” என்றும் பேசிவருகிறார்கள்.

இன்று அனைத்து கட்சிகளும் மதுவிலக்கு பேசுகிறார்கள் என்றால் கடந்த பத்து மாதங்களாக மக்கள் அதிகாரம் நடத்திய போராட்டமே முக்கிய காரணம் என்பதை நீங்கள் அறிவீர்கள்.

தி.மு.க – அ.தி.மு.க அல்ல, வேறு யார் ஆட்சிக்கு வந்தாலும் இந்த அரசு மூடாது.  கொண்டு வருவது என்பது மக்களாகிய நாமே அதிகாரத்தை கையில் எடுத்தால் தான் டாஸ்மாக்கை மூட முடியும் என்று ஏப்ரல் 20 அன்று தமிழகத்தின் முக்கியமான மாவட்டங்களில் உள்ள “டாஸ்மாக் தலைமை அலுவலகம்” முற்றுகை என அறிவித்திருந்தோம்.

தோழர் ராஜூ கைது
விழுப்புரம் ரயில் நிலையத்தில் தோழர் ராஜூ கைது

விழுப்புரத்தில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை முற்றுகையிடுவதற்கு கடந்த பத்து நாட்களாக தீவிரமாக மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்தனர். அன்று முதலே முன்னணியாளர்களை கண்காணிக்க வரிசையில் வந்துவிட்டனர் “ கியூ பிரிவு” போலீசார்.

பிரச்சாரத்திற்கு செல்லும் கிராமங்களில் எல்லாம் தோழர்களை வரவேற்க தொடங்கி விட்டனர் மக்கள். அந்தந்த கிராமங்களில் உள்ள மாணவர்களும், இளைஞர்களும் மக்கள் அதிகார தோழர்களோடு இணைந்து பிரச்சாரம் செய்வதை பார்த்த அரசு பீதியடைய தொடங்கி விட்டது.

அந்த பீதியின் உச்சகட்டம் தான் 20-ம் தேதி டாஸ்மாக் அலுவலகம் முன்பு DGP, ADGP, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் 300 போலீசாருக்கும் மேல் குவித்து வைத்திருந்தனர். அலுவலகம் முன்பு இருந்த இரண்டு டாஸ்மாக் கடைகளையும் மூடி விட்டனர். தண்ணீர் பீய்ச்சி அடிக்கும் வாகனம், 108 ஆம்புலன்ஸ் என அனைத்தையும் கொண்டு வந்து நிறுத்தி விட்டனர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றி்ன மீது அழுத்தவும்]

போராட்ட செய்தி சேகரிக்க சென்ற புதிய ஜனநாயகம் செய்தியாளர்கள் இரண்டு பேரை போராட்டம் தொடங்கும் முன்னரே சட்டவிரோதமாக கைது செய்தனர். பிறகு மக்கள் அதிகாரத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜுவை விழுப்புரம் இரயில் நிலையத்தில் வைத்து கைது செய்தனர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றி்ன மீது அழுத்தவும்]

சரியாக 11.00 மணியளவில் விண்ணதிரும் முழக்கங்களோடு வந்த தோழர்களை சுற்றி வளைத்தது போலிசு. அவற்றையெல்லாம் மீறி அலுவலகத்தை நோக்கி முன்னேறி சென்றவர்களை வலுக்கட்டாயமாக கைது செய்ய முயன்ற போலீசாருக்கும் – மக்கள் அதிகார அமைப்பு தோழர்களுக்கும் மோதல் ஏற்பட்டு போர்க்களம் போல் காட்சியளித்தது டாஸ்மாக் அலுவலகம்.

சுமார் 45 நிமிடம் நடந்த முற்றுகை போராட்டத்தில் 270 க்கும் மேற்பட்ட தோழர்களை கைது செய்து களைப்படைந்திருந்தனர் காவல்துறையினர். கைது செய்த தோழர்களை இரண்டு மண்டபத்தில் வைத்து மாலை 6.00 மணிக்கு அனைவரையும் விடுவித்தனர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றி்ன மீது அழுத்தவும்]

அரசுக்கட்டமைப்பு தோல்வியடைந்து மக்களுக்கு எதிராக மாறிவிட்டது என்பதை நிரூபிக்கும் வகையில் அமைந்த இந்த முற்றுகை போராட்டம், தற்பொழுது அழுகி நாறுகின்ற இந்த அரசமைப்புக்கு மாற்று அரசு என்றால் அது மக்கள் அதிகாரம் தான் என்பதை மக்களுக்கு உணர்த்தும் விதமாக போர்குணத்துடன் இருந்தது. எனவே மக்கள் அதிகாரத்தை கைப்பற்றும் போராட்டத்தில் உழைக்கும் மக்கள், ஜனநாயக சக்திகள் என அனைவரும் ஒன்றிணைந்தால் மட்டும் தான் மதுவிலக்கு சாத்தியம். அதற்கான தருணமும் இது தான் !

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றி்ன மீது அழுத்தவும்]

தகவல்
வினவு செய்தியாளர்கள்.

2. திருச்சி

ஜெயா அரசின் சாராய போலீசின் அடக்குமுறையும்! முறியடித்த மக்கள் அதிகாரத்தின் போராட்டமும்!

tasmac-protest-trichy-9தமிழக தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் அனைத்தும் தங்களை முதல்வராக்கி அழகு பார்த்தால் ‘மதுவிலக்கு’ கொண்டுவருவதாக மக்களை ஏய்த்து வரும் சூழலில், “கடையை மூடுவதற்கு யாரையும் ஓட்டுப்போட்டு முதல்வராக்கத் தேவையில்லை. மக்கள் தங்கள் அதிகாரத்தை கையிலெடுத்தால் டாஸ்மாக் கடையை மூட முடியும்” என தொடர்ச்சியாக பிரச்சாரம் செய்து வருவதோடு, ஏப்ரல் 20-ல் திருச்சி துவாக்குடி அருகிலுள்ள டாஸ்மாக் தலைமை அலுவலக முற்றுகைப் போராட்டம் அறிவித்திருந்தது மக்கள் அதிகாரம். அதையொட்டி, அடித்தட்டு உழைக்கும் மக்கள் வசிக்கும் பகுதிகளில் பிரசுர விநியோகம் மற்றும் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. மேலும், அரசியல் கட்சிகள், விவசாய சங்கங்கள், வணிகர் சங்கங்கள், பெரியாரிய இயக்கங்கள், தலித் இயக்கங்கள், இளைஞர் மன்றம் என அனைவருக்கும் போராட்டத்தில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டது.

20-04-2016 அன்று காலை 10.30 மணிக்கு திருச்சி துவாக்குடிக்கு அருகிலுள்ள டாஸ்மாக் அலுவலகத்திலிருந்து 300 மீட்டருக்கு முன் திருச்சி, தஞ்சை, திருவாரூர், அறந்தாங்கி ஆகிய பகுதித் தோழர்களும், பொதுமக்கள் உட்பட 400-க்கும் மேற்பட்டோர் கூடினர். சாராயக் கிடங்கை பாதுகாக்கும் வகையில் நூற்றுக்கணக்கான போலீசாரை அதிகாலை முதலே குவித்திருந்தனர். போராட்டத்துக்கு தயாராகிக் கொண்டிருந்த வேளையில் இடைமறித்த காவல்துறை, வாகனங்களை கொண்டு வந்து போராட்டத்துக்கு அனுமதி கிடையாது, உடனடியாக வண்டியில் ஏறுங்கள் என மிரட்டினர். போலிசாரின் உதார்த்தனத்தை கண்டு மிரளாமல் தோழர்கள் முற்றுகைக்காக முன்னேறினர். பீதியடைந்த போலீசு, மொத்த காவல்துறையையும் இறக்கி ஊர்வலத்தை தடுத்து நிறுத்த பெரும்பாடுபட்டது. பேரணியை சுற்றிலும் தடுப்பரண்களை ஏற்படுத்தி, கயிறுகளை கட்டி முன்னேற விடாமல் தடுக்க முயன்றது. ஆனால், தோழர்களின் போர்க்குணமிக்க போராட்டம் தடுப்பரண்களை தகர்த்து முன்னேறியது. ஒரு கட்டத்தில் பேரணியில் வந்த மாற்றுக்கட்சியினர், பெண்கள், குழந்தைகள், பொதுமக்களின் நலன் கருதி போலிசாருடனான மோதலை தவிர்த்து கைதாகினர்.

முற்றுகையில், காவல்துறை மற்றும் தமிழக அரசை கண்டித்தும், டாஸ்மாக்கை மக்களால் தான் மூட முடியும் என எழுப்பிய முழக்கங்கள் பேருந்து பயணிகள், அருகே இருந்த சாராய ஆலைக்கிடங்கு மற்றும் பிற ஆலைத் தொழிலாளர்களை கவனிக்க வைத்தது. அனைவரையும் கைது செய்து அப்புறப்படுத்த ஒரு மணி நேரம் ஆனது. கைதான தோழர்களை வாளவந்தான் கோட்டையில் உள்ள மலர் மண்டபத்தில் அடைத்து கழிவறைக்கு போவதற்கு கூட மறுப்பது, வழக்கறிஞர்களை சந்திக்க மறுப்பது, 25-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு தேவையான பால் உள்ளிட்ட ஆகாரத்திற்கு ஏற்பாடு செய்யாமல் பெயர், முகவரியுடன் கைரேகை பெறுவதில் குறியாக இருந்தது. இதைக் கண்டித்து காவல்துறைக்கு ஒத்துழைக்காமல் உறுதியாக போராடியதால் ஒருவர் பின் ஒருவராக வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இறுதியாக, ஏ.எஸ்.பி வந்து பேசியதில் வேறு வழியின்றி கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டார். பெயர், முகவரியுடன், சாதி – மத பெயர் மற்றும் நயவஞ்சகமாக கைரேகை வைக்கும்படி கோரியதை ஏற்க மறுத்து உறுதியாக போராடி முறியடித்தனர்.

 

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

தமிழக விவசாய சங்கத்தைச் சேர்ந்த மா.பா சின்னதுரை
தமிழக விவசாய சங்கத்தைச் சேர்ந்த மா.பா சின்னதுரை

அதன் பிறகு மண்டபத்தினுள் போராட்ட அனுபவப்பகிர்வும், கலைநிகழ்ச்சியும் நடத்தப்பட்டது. தமிழக விவசாய சங்கத்தைச் சேர்ந்த மா.பா சின்னதுரை, காவிரி நதிநீர் ஆணையம் அமைத்து காவிரி நீரை பெற்றுத்தர துப்பில்லாத அரசு டாஸ்மாக் கடையை நடத்தி சாராயத் தண்ணீரை சப்ளை செய்கிறது. விதிமீறல் கடைகளின் மீது நடவடிக்கை எடுக்காத போலீசு நம்மை வலுக்கட்டாயமாக கைது செய்கிறது என அரசையும், காவல்துறை அராஜகத்தையும் கண்டித்தார். மேலும், அதிமுக-திமுக இரண்டும் கூட்டு வைத்து கொள்ளையடிப்பதாகவும், விவசாயிகள் சங்கத்தை துவக்கிய தோழர் நாராயணசாமி தலைமையில் நடந்த போராட்டங்கள், 50-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் உயிரிழந்தது, தங்கள் சங்க அனுபவத்திலிருந்து போராட்டமே தீர்வு என்பதையும் விளக்கிப் பேசினார்.

ஆதித்தமிழர் பேரவையைச் சேர்ந்த இராசாத்தியம்மாள், 5 வயது குழந்தையும் 60 வயது மூதாட்டியும் பாலியல் வன்கொடுமைக்குள்ளாவது ஆபாசத்தினால் அல்ல, டாஸ்மாக் போதைதான் காரணம். டாஸ்மாக்கால் பெண்கள் அடையும் துயரத்தையும், டாஸ்மாக்கை மூட பெண்களால் மட்டுமே முடியும் எனவும் மக்கள் அதிகாரத்தின் போராட்டங்களுக்கு துணை நிற்போம் எனவும் கூறினார்.

அரியூர் கிராமத்திலிருந்து வந்த சாந்தி, 10 – 15 வருடங்களுக்கு முன் பெண்களை திரட்டி கள்ளச் சாராயம் காய்ச்சும் ரவுடிகளை ஓட ஓட அடித்துவிரட்டியதையும், கள்ளச் சாராயம் காய்ச்சும் இடங்களுக்கே சென்று பானைகளை அடித்து நொறுக்கி போராடியதையும், நரித்தனமான, கள்ளச்சாராய ரவுடிகள் தன்னுடன் இணைந்து போராடும் பெண்களில் கந்துவட்டிக்கு கடன் வாங்கிய பெண்களை மிரட்டி பணியவைத்து அவரை தனிமைப்படுத்தியதையும், தன்னைப்பற்றிய கீழ்த்தரமான அவதூறுகளையும் சகித்துக் கொண்டு தன் கணவனின் (குடிப்பவர்) துணையுடன் சட்டப்பூர்வ வகையில் போராடியதையும் விளக்கினார். மேலும், “அன்று, நான் தனியாக போராடினேன், இன்று, இவ்வளவு பேர் போராடுகிறோம் நிச்சயம் டாஸ்மாக் கடையை மூட முடியும்” என தன் போராட்ட அனுபவத்தை பகிர்ந்தது நம்பிக்கையை உருவாக்கியது.

ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்பு சங்கத் தலைவர் தோழர் கோபி, தான் சீரழிவிலிருந்து மீண்டு வந்ததற்கும், இன்று காவல்துறை மற்றும் அரசு அதிகாரிகளிடம் துணிச்சலாக பேசுவதற்கும் புரட்சிகர சங்கமும், அமைப்புகளும் தான் காரணம். “என்னையே அமைப்பு திருத்தியுள்ளது, நிச்சயம் டாஸ்மாக்கை மூட முடியும்” எனக்கூறினார்.

மக்கள் கலை இலக்கியக் கழக தோழர் ஜீவா, டாஸ்மாக் சீரழிவுகளை விளக்கி, பெண்களின் தாலியறுத்த ஜெயாவை அம்மா என்று அழைக்கக் கூடாது. அவரை ஏழரை நாட்டு சனியன் என அழைப்பதே பொருத்தமானது என ஆவேசமாகவும் மேலும், மக்கள் தங்கள் அதிகாரத்தை கையில் எடுக்க வேண்டும் என விளக்கிப் பேசினார்.

தனுஷ் ரசிகர் மன்றத்தைச் சேர்ந்த இளைஞர்கள்
தனுஷ் ரசிகர் மன்றத்தைச் சேர்ந்த இளைஞர்கள்

தனுஷ் ரசிகர்மன்ற நிர்வாகிகள், “நாங்களே குடிப்பழக்கமுள்ளவர்கள். ஆனால், அமைப்பு சொன்னது சரி என தோன்றியது போராட்டத்தில் கலந்து கொண்டோம். மேலும், தங்களை மாற்றிக்கொள்வதாகவும் இனி எல்லா போராட்டத்திலும் கலந்து கொள்வோம்” எனக்கூறினர். ரசிகர் என்றாலே விட்டேத்தியாகவும், ஊதாரித்தனமாகவும் சுற்றித்திரிபவர்கள் என்ற யதார்த்தத்துக்கு மத்தியில் இந்த இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு கைதானது அனைவரையும் கவனிக்க வைத்தது.

மக்கள் அதிகார மாநில ஒருங்கிணைப்புக்குழு தலைவர் தோழர் காளியப்பன், டாஸ்மாக் போதை பொருளாதார பாதிப்பாக மட்டும் இல்லை. வயது வித்தாயசம் இல்லாமல் குடிப்பது, அப்பா மகன் சேர்ந்து குடிப்பது, தஞ்சையில் அப்பா குடிப்பதை தட்டிக் கேட்ட மகனின் தலையில் கல்லைப் போட்டுக் கொன்றது, கிராமங்களில் மாலை நேரம் வந்தாலே என்ன நடக்குமோ, ஏது நடக்குமோ என்று பெண்கள் அஞ்சும் புதிய நிலைமை உருவாகியுள்ளது என டாஸ்மாக் போதை ஒரு பண்பாட்டு சீரழிவாக பரிணமித்துள்ளதையும், அரசு கட்டமைப்பு ஆள அருகதையற்று தோற்றுவிட்டது, டாஸ்மாக் பிரச்சினை மட்டுமல்ல ஆற்றுமணல் கொள்ளை, தாதுமணல் கொள்ளை, கிரானைட் கொள்ளை என அனைத்து பிரச்சினைகளையும் மக்கள் தங்கள் அதிகாரத்தை கையிலெடுப்பதன் மூலம் மட்டுமே தடுத்து நிறுத்த முடியும் என விளக்கிப் பேசினார்.

நிகழ்ச்சியின் இடையிடையே பாடப்பட்ட ம.க.இ.க மையக் கலைக்குழுவின் பாடல்கள் உற்சாகமூட்டியது. குறிப்பாக, ஜெயாவின் படிப்படியான மதுவிலக்கு நாடகத்தை அம்பலப்படுத்தி தோழர் கோவன் பாடிய போங்கு பாடலை உற்சாகமாக கைதட்டி வரவேற்றனர். போங்கு பாடல் தோழர்கள் மற்றும் மக்களின் விருப்பத்திற்கிணங்க இரண்டு முறை பாடப்பட்டது. போராட்டத்தில் தோழர்கள், பொதுமக்கள், மாற்று அமைப்பினர் என 400-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கைதாகினர். மாலை 7 மணிக்கு மேல் விடுதலை செய்யப்பட்டனர். அப்போது, பெரியார் திராவிட கழகத் தோழர்கள் உள்ளிட்டவர்கள் தோழர் காளியப்பனுக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். இத்தகைய தொடர் போராட்டத்தின் மூலம் தான் டாஸ்மாக் கடையை மூடமுடியும்!

பத்திரிகை செய்திகள்