privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்தொழிலாளர்கள்கார்ப்பரேட் காட்டாட்சியை ஒழிப்போம் - கோவை மே தின பேரணி

கார்ப்பரேட் காட்டாட்சியை ஒழிப்போம் – கோவை மே தின பேரணி

-

விவசாயம்-நெசவு-சிறுவணிகம்-சிறுதொழில்களை அழித்து
காண்ட்ராக்ட் சுரண்டலை தீவிரப்படுத்துகின்ற

கார்ப்பரேட் காட்டாட்சிக்கு முடிவுகட்டுவோம் !

அன்பார்ந்த நண்பர்களே,

may_dayமே தினத்தின் 130வது ஆண்டு இது. 1886-வது ஆண்டில் தொழிலாளி வர்க்கம் எத்தகைய அடக்கு முறை, சுரண்டல் ஆகியவற்றை எதிர்த்தும், 8 மணி நேர வேலை என்கிற உரிமைக்காகவும் போராடி இரத்தம் சிந்தியதோ, அந்த கொடியநிலைமை இன்றைக்கு மீண்டும் வந்துவிட்டது. இன்னும் சொல்லப்போனால், அடக்குமுறையும், சுரண்டலும் அப்போது  இருந்ததைவிட பன்மடங்கு கொடூரமானதாகவும், நவீனப்படுத்துப்பட்டும் அமுல்படுத்தப்படுகிறது.

கார்ப்பரேட்மயம்காண்டிராக்ட்மயம்!
எந்த ஒரு ஆலையிலும் நேரடி உற்பத்தி சாராத வேலைகளில் மட்டும் காண்டிராக்ட் தொழிலாளர்களை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று சட்டம் சொல்கிறது. ஆனால், நேரடி உற்பத்தி நடக்கிற வேலையிலும் காண்டிராக்ட் தொழிலாளர்களை பயன்படுத்திக் கொள்வது அதிகரித்து வருகிறது. எந்த ஆலையிலும் நிரந்தரத் தொழிலாளர்களது எண்ணிக்கையை விட காண்டிராக்ட் தொழிலாளர்களது எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. காண்டிராக்ட் தொழிலாளர்கள் இல்லை என்றால் ஆலையே ஓடாது என்கிற அளவுக்கு ஒட்டுமொத்த ஆலையுமே காண்டிராக்ட் தொழிலாளிமயமாகிவிட்டது.

நெருப்புக்குழம்பு ஒடுகின்ற இரும்பு உருக்காலையானாலும், தூசும், மாசும் மூச்சை முட்டுகின்ற சிமெண்ட் ஆலையானாலும், பாறைகள் சரிந்து சாகடிக்கின்ற சுரங்கமாக இருந்தாலும் நுரையீரல் திணற நூல் நூற்கும் பஞ்சாலையாக இருந்தாலும் காண்டிராக்ட் தொழிலாளி இல்லாமல் ஒரு துரும்பு கூட நகரமுடியாது. கல்லூரி பேராசிரியர் நியமனம் கூட காண்டிராக்ட் முறையில் நடக்கிறதென்றால் இதைவிட அவலம் வேறென்ன இருக்க முடியும்?

தொழிற்துறையின் உயிர்த்துடிப்பு!
ஆனால், உயிராதாரம் பறிப்பு!

தொழிலின் உயிர்த்துடிப்பாகிவிட்ட காண்டிராக்ட் தொழிலாளிக்கு உயிர்வாழும் உரிமை கூட மறுக்கப்படுகிறது. வேலை நிரந்தரம் கேட்டால் கேலி பேசுகிறான், முதலாளி. ஆபத்துகள் மிகுந்த வேலைகளில் கூட எந்த பாதுகாப்பும் இல்லாமல் வேலை செய்தாக வேண்டும் என்று நிர்ப்பந்தம். அப்போது ஆலை விபத்து ஏதேனும் ஏற்பட்டு உயிரே போனாலும் அற்பப்பணத்தை வீசி எறிந்துவிட்டு அடுத்த காண்டிராக்டுக்கு மாறி விடுகிறான், முதலாளி. ஆலைவிபத்துக்களில் செத்துப்போன பல்லாயிரக்கணக்கான காண்டிராக்ட் தொழிலாளர்களது கதியும், கதையும் இப்படித்தான் ‘முடிக்கப்பட்டது’.

காண்டிராக்ட் தொழிலாளிக்கு முறையான சம்பளம் கூட கிடைப்பதில்லை. நிரந்தரத் தொழிலாளிக்கு கிடைக்கின்ற சம்பளத்தில் பாதிகூட கிடைப்பதில்லை. இரண்டு பேரும் ஒரே வேலையை செய்தாலும் காண்டிராக்ட் தொழிலாளி என்றால் கொத்தடிமை தான். சம்பளத்தில் மட்டுமல்ல சாப்பிடும் சோற்றில்கூட இரண்டாம்தரமாக நடத்தப்பட்டு, அவமானத்தில் குன்றிப்போகிறான், காண்டிராக்ட் தொழிலாளி. இதனை நிரந்தரத் தொழிலாளியும், அவர்களது தொழிற்சங்கமும் கண்டும், காணாமலும் இருப்பது மானக்கேடு. இன்னும் ஒருபடி மேலே போய் நிரந்தரத் தொழிலாளிக்கு சம்பள உயர்வு கொடுத்து காண்டிராக்ட் தொழிலாளி மீதான சுரண்டலைப் பாதுகாத்துக் கொள்கின்றனர், முதலாளிகள். ஊழல்படுத்தப்பட்ட நிரந்தரத் தொழிலாளர்களோ, முதலாளிகளின் இளைய பங்காளிகளாக மாறி காண்டிராக்ட் தொழிலாளிக்கு எதிரியாக மாறி, தனக்குத்தானே குழிதோண்டிக் கொள்கின்றனர்.

drought_1481574cமறுகாலனியாக்கத்தால் தீவிரமாகும் நிலைமை!

தனியார்மயம் – தாராளமயம் – உலகமயம் – மறுகாலனியாக்க நடவடிக்கைகளின் விளைவாக விவசாயம் நாசமாகிப்போன நிலையில் தற்கொலை செய்து கொள்வதைவிட நகரத்துக்குப் போய் பிழைத்துக் கொள்ளலாம் என்று ஓடிவருகின்ற விவசாயிகளுக்கும், விவசாயக்கூலிகளுக்கும் வேறென்ன வழி இருக்கிறது? நெசவும், நூற்பும் பன்னாட்டுக்கம்பெனிகளது ஏகபோகத்துக்குப் போய்விட்டதால் நவீன எந்திரங்களுடன் போட்டிப்போட முடியாமல் என்ன இருக்கிறது?

செய்து வந்த சிறுதொழிலை நவீன எந்திரங்கள் முழுங்கி விட்டன. சிறுவணிகத்தை கார்ப்பரேட் கடைகளும், ஆன்லைன் வர்த்தகமும் காவுவாங்கி விட்டன. இதனால் பிழைப்புத் தேடி அலைபவர்கள் வேறெங்கு போக முடியும்? இவர்கள் அனைவரையும் தொழிற்பேட்டைகள் நரகத்துக்கு தள்ளிவிடுகின்ற நிலையில், காண்டிராக்ட் புரோக்கர்களைத் தவிர வேறு யாரும் கைகொடுப்பதில்லை. காண்டிராக்ட் கூலிகளில் பெரும்பாலானோர் இப்படி வந்தவர்கள் தான். எந்த மலிவான கூலிக்கும் உழைப்பது, எத்தனை ஆபத்தான வேலையையும் செய்வது என்கிற நிர்ப்பந்தத்தில் வாழ்கின்ற இவர்களை வைத்துத் தான் கார்ப்பரேட் உலகம் தன்னுடைய இலாப வெறியை தீர்த்துக் கொள்கிறது.

20 காண்டிராக்ட் தொழிலாளருக்கு மேல் வைத்துக் கொண்டால் லைசென்ஸ் வாங்க வேண்டும் என்கிற விதிமுறையினை மாற்றி, 100 பேர் வரை லைசென்ஸ் இல்லாமலேயே வைத்துக் கொள்ளலாம் எனவும், எந்த வேலையிலும், எத்தனை மணிநேரத்துக்கும் காண்டிராக்ட் தொழிலாளியை ஈடுபடுத்தலாம் எனவும் சட்டத்திருத்தம் செய்வதற்கு மோடியின் அரசு தயாராகி வருகிறது. சட்டத்தின் பெயரால் கட்டுப்பாடுகள் இருக்கின்ற போதே கசக்கிப்பிழிகின்ற முதலாளிகள், சுரண்டலுக்கும், அடக்குமுறைகளுக்கும் சட்டபூர்வமாகவே அங்கீகாரம் கிடைத்து விட்டால் எப்படி நசுக்குவார்கள் என்பதை நினைத்தாலே நெஞ்சு கொதிக்கிறது.

தொழிலாளர்களது உரிமைகளை உத்திரவாதம் செய்வதற்காக உருவாக்கப்பட்டதாகச் சொல்லப்படுகின்ற தொழிலாளர் நலத்துறையானது, முதலாளிகள் நலத்துறையாக அப்பட்டமாக செயல்படுகிறது. தொழிலாளர்களது சட்டபூர்வமான கோரிக்கைகளைக்கூட பரிசீலிக்க மறுப்பதோடு, நாங்கள் முதலாளிகள் பக்கம் தான் நிற்போம் என்று பகிரங்கமாகச் சொல்லுகின்றனர், வேலையிலிருந்து ஓய்வு பெற்ற பின்னரும் தொழிலாளர்களை வேட்டையாடுவதற்கு முதலாளிகளுக்கு பயிற்சி வகுப்பு நடத்துகிற, முன்னாள் தொழிலாளர் இணை ஆணையரான ரவீந்திரன், இதற்கொரு எடுத்துக்காட்டு.

ஆயத்த ஆடைத் தொழிலாளர்களில் பெரும்பகுதியினர் பெண்கள்
பெங்களுரு ஆயத்த ஆடைத் தொழிலாளர்களின் போராட்டத்தில் பெரும்பகுதியினர் பெண்கள்

தொழிலாளர் நலத்துறையின் தொழிலாளர் விரோதப்போக்குக்கு அரியானாவில் மாருதி ஆலை, ராஜஸ்தானில் ஹோண்டா மோட்டார்ஸ், மராட்டியத்தில் பஜாஜ் ஸ்கூட்டர்ஸ், குஜராத்தில் நானோ, கர்நாடகத்தில் டயோட்டா, தமிழகத்தில் ஹூண்டாய், நோக்கியா, ஜி.எஸ்.எச். என பலநூறு உதராணங்களையும், ஆதாரங்களையும் அடுக்கிக் கொண்டே போகலாம். ஒட்டுமொத்த அரசுக் கட்டமைப்பும் தான் ஏற்றுக் கொண்ட பொறுப்புக்கு எதிர் நிலையாகவும், செயல்படுவதற்கு தகுதியற்றதாகவும் மாறியுள்ள நிலையில் தொழிலாளர் நலத்துறையானது ஒரு சுற்று அதிகமாக நாறுகிறது.

மூடப்பட்ட கதவு தானாகத் திறக்காது; உடைத்தெறி!

சமீபத்தில் பெங்களுருவில் ஆயத்த ஆலைத்தொழிலாளர்கள் நடத்திய வீரஞ்செறிந்த போராட்டத்தை நீங்கள் அறிந்திருப்பீர்கள். தொழிலாளர்கள் தங்களது பி.எப். சேமிப்பினை பெறுவதற்கு மத்திய அரசு போட்ட புதிய விதிமுறைகளை தகர்த்தெறிந்தது, பெங்களுரு பெண் தொழிலாளர்கள் முன்னின்று நடத்திய போராட்டம். தினம் தினம் தீவிரமடைந்து வருகின்ற முதலாளித்துவ பயங்கரவாதத்துக்கு மென்மையான வார்த்தைகளோ, சாந்தமான சட்டபூர்வமான போராட்டங்களோ புரியாது. அவற்றை நசுக்கத்தான் செய்யும். 1886-ல் மேதினத்தில் தொழிலாளி வர்க்கம் சிந்திய இரத்தமும், மேதினத் தியாகிகளது உயிர்ப்பலியும் நமக்கு திரும்பத் சொல்லிக் கொடுப்பது ஒன்றைத் தான். தொழிலாளி வர்க்கமே, அடங்கிக்கிடக்கின்ற உனது குரலையும், கைகளையும் உயர்த்து! மூடப்பட்டுள்ள நெடுங்கதவை நொறுக்கு. காட்டுத்தீயாய் பரவிடு. கார்ப்பரேட் கொட்டத்தைப் பொசுக்கிடு!

நிகழ்ச்சி நிரல்:
நேரம்:
மாலை 4:30
பேரணி : பவர் ஹவுஸ் – சிவானந்த காலனி
நேரம் : மாலை 5:30

ஆர்ப்பாட்டம் : சிவானந்தா காலனி
தலைமை: தோழர் M. கோபிநாத்,  அமைப்பு செயலாளர் பு.ஜ.தொ.மு கோவை.
பேரணி துவக்கம் : தோழர் C.திலீப், மாவட்ட செயலாளர், பு.ஜ.தொ.மு கோவை.
கண்டன உரை: தோழர் விளவை இராமசாமி, மாநில துணைத்தலைவர், பு.ஜதொ.மு.
தோழரை: தோழர் பாலன், பு.ஜ.தொ.மு, நீலகிரி மாவட்டம்
நன்றி உரை: தோழர் நித்தியாநந்தன்,  இனைச்செயலாளர், பு.ஜ.தொமு கோவை.

தொடர்புக்கு: புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
க.எண்.137 முதல் தளம், K.R.R.காம்ப்ளக்ஸ்,
தடாகம் சாலை, K.N.G.புதூர் (பிரிவு), கோவை – 641 108.
90924 60750