5. சென்னை கும்மிடிப்பூண்டி
130-வது உலகத் தொழிலாளர் தினமான மே-1 அன்று புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி திருவள்ளூர் கிழக்கு மாவட்டத்தின் சார்பில் “விவசாயம் – நெசவு, சிறுவணிகம், சிறுதொழில்களை அழித்து, காண்ட்ராக்ட் சுரண்டலை தீவிரப்படுத்துகின்ற கார்ப்பரேட் காட்டாட்சிக்கு முடிவுகட்டுவோம்!” என்கிற தலைப்பின் கீழ் கும்மிடிப்பூண்டியில் பேரணி – ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிடப்பட்டது. தேர்தலைக் காரணம் காட்டி, பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் ஆர்ப்பாட்டம் மட்டும் எழுச்சிகரமாக நடத்தப்பட்டது.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]
திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் தோழர் கே.எம்.விகந்தர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்திய பின்னர், தலைமை உரையாற்றினார். “நிரந்தர தொழிலாளர் முறையை ஒழித்து கட்டி காண்டிராக்ட் முறையை அமல்படுத்தி தொழிலாளர்களை கொத்தடிமைகளாக வைத்துச் சுரண்டிக் கொழுக்கின்றனர், முதலாளிகள். இந்த சுரண்டலுக்கு அரசு துணை நிற்கிறது. ஆளத் தகுதியிழந்துவிட்ட இந்த அரசுதான் நம்மை கட்டிக் காப்பதாகவும், நமக்காக இருப்பதாகவும் கூறி நம்மை ஏமாற்றி வருகின்றனர். நாம் போராடுவதன் மூலமே நமது உரிமைகளைப் பெற முடியும்” என உரையாற்றினார்.
SRF புதிய ஜனநாயகத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் தோழர் ஆறுமுகம், லைட்விண்டு ஸ்ரீராம் கிளையின் தலைவர் தோழர் பிரவீன், பாரத் டெக்ஸ்டைல்ஸ் கிளையின் தலைவர் தோழர் ஆனந்தன் ஆகியோர் தங்களது சொந்த வாழ்வியல் அனுபவங்களிலிருந்து அரசென்பது உழைக்கும் மக்களுக்கு எதிராகவே உள்ளது என்பதை பதிவு செய்தனர்.
ஆர்ப்பாட்ட எழுச்சியுரையாற்றிய புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாநில இணைச் செயலாளர் தோழர் சுதேஷ்குமார், தேர்தல் ஆணையத்தை அம்பலப்படுத்தியும், விவசாயம் நெசவு, சிறுதொழில், சிறுவணிகம் என ஒவ்வொரு துறையும் எப்படியொரு தாக்குதலை எதிர்கொண்டுள்ளது என்பதையும், இதைத் தீர்க்க உழைக்கும் மக்களாக நாமனைவரும் ஒன்றிணைவதைத் தவிர வேறேதும் தீர்வில்லை என்பதை ஆணித்தரமாக பதியவைத்தார்.
மாவட்டப் பிரச்சாரக் குழுவின் சார்பாக புரட்சிகரப் பாடல்கள் பாடப்பட்டன. கூட்டத்தின் இடையிடையே ஆர்ப்பாட்ட முழக்கமிடப்பட்டது.
இறுதியாக மாவட்ட பொருளாளர் தோழர் செல்வகுமார் நன்றியுரையாற்றினார். உழைக்கும் மக்கள் தொழிலாளிகள் கலந்து கொண்ட இந்த ஆர்ப்பாட்டம், பாட்டாளி வர்க்க சர்வதேசகீதத்துடன் கூட்டம் நிறைவுபெற்றது.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]
தகவல்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
திருவள்ளூர் கிழக்கு மாவட்டம்
6. ஒசூர்
தேர்தல் ஓட்டுச்சீட்டு அரசியல் என்பது மக்களின் பிரச்சனைகளுக்கு எந்தவகையிலும் தொடர்பற்றது மட்டுமல்ல, அவை, அடிப்படைப் பிரச்சனைகளிலிருந்து மக்களை திசை திருப்புபவையும் கூட. ஒசூரில் இதனை அம்பலப்படுத்தும் வகையில் அமைந்தது இந்த ஆண்டு மே நாள். வழக்கமாக மே நாள் என்றவுடன் போலிகளின் சி.ஐ.டி.யூ.-ஏ.ஐ.டி.யூ.சி சங்கங்கள் சில பல தொழிலாளர்களை கொண்டு ஒரு அடையாள ஊர்வலமும் ஒரு ஆர்ப்பாட்டமும் நடத்துவார்கள். பிற ஓட்டுக் கட்சிகள், உதிரி அமைப்புகளும் இந்த நாளைக் கடைப்பிடிப்பார்கள் சுவரொட்டிகள் ஒட்டுவார்கள். ஆனால், இவை எதையும் இன்று ஒசூரில் காணவில்லை. மே நாளுக்கு தொழிற்சங்கங்கள் சுவரொட்டி ஒட்டக் கூடாது என தேர்தல் கமிசன் சொல்லவில்லை என்றாலும், இவை அனைத்தும் ஓட்டு போதைக்குள் அடங்கிவிட்டன. தேர்தல் ஓட்டு வேட்டைக்குக் கூட மே நாளைப் பயன்படுத்தக் கூடாது என்று இந்த ஓட்டுச்சீட்டு தொழிற்சங்கங்கள் முடிவு செய்துள்ளன போலும்!
இன்று மே நாளும் ஞாயிற்றுக் கிழமையும் சேர்ந்து வந்ததால், ஒசூரில் பல ஆலைகளில் விடுமுறை வழங்கவில்லை. குறிப்பாக, சண்டே ஒர்க் செய்யும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் அனைவரும் வேலைக்கு சென்று கொண்டுதான் இருந்தார்கள். இதனை எதிர்த்துக் கேட்டதற்காக வேலைநீக்கமும் செய்யப்பட்டுள்ளார்கள். இவை ஒப்பந்தத் தொழிலாளர்கள் படும் துன்பம்! பு.ஜ.தொ.மு. தலைமையில் இன்று ஒசூரில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம் இத்துன்பத்திற்கான காரணங்களையும் தீர்வுகளையும் முன்வைத்து தொழிலாளர்களுக்கு நம்பிக்கையூட்டு வகையில் அமைந்தது.
பேருந்துகளின் உறுமல், போக்குவரத்து நெரிசல், வியாபாரிகளின் கூவல் என ஓயாத பேரிரைச்சலால் சூழப்பட்ட ஒசூர் பேருந்து நிலையமும் அதன் அருகில் உள்ள பழைய நகராட்சி அலுவலகமும் எழுச்சிகரமான பறை முழக்கத்தால் கவரப்பட்டது. பறை முழக்கமும் அதனைத் தொடர்ந்து உயிரைக் கொடுத்து தோழர்கள் எழுப்பிய வின்னைக் கிழிக்கும் ஆர்ப்பாட்ட முழக்கங்களும் பாதசாரிகள் முதல் பயணிகள் வரை அனைவரும் ஒரு கணம் திரும்பிப் பார்க்க வைத்தது; பலரையும் நின்று கேட்க வைத்தது.
சிறுவர்கள், பெரியவர்கள், பெண்கள் என நூற்றுக்கணக்கில் தோழர்களும் தொழிலாளர்களும் திரண்டிருந்த மே நாள் ஆர்ப்பாட்டத்தை பு.ஜ.தொ.மு.வின் மாநிலத் துணைத்தலைவர் தோழர் பரசுராமன் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
மேநாளின் தியாக வரலாற்றையும் தொழிலாளர்களின் உரிமைகளுக்காக போராடிய தொழிலாளர்களின் வரலாற்றையும் நினைவுகூர்ந்த தோழர், பிரிக்கால் தொழிலாளர்கள் 8 பேர் இரட்டை ஆயுள்தண்டனை அனுபவித்து வருவதையும் மாருதி தொழிலாளர்கள் 3 ஆண்டுகளாக சிறையில் வாடுவதையும் நினைவு கூர்ந்து உரையாற்றினார். பிறகு இங்கே ஓசூரில் உள்ள லேலாண்டு, டி.வி.எஸ், டைட்டான், குளோபல் ஃபார்மாடெக், ஆவ்டெக், எக்ஸைடு போன்ற கம்பெனிகளில் தொழிலாளர்கள்மீதான நிர்வாகத்தின் ஒடுக்குமுறை, சி.எல், காண்ட்ராக்ட், அப்ரண்டீஸ் என்ற முறையில் இளம் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தி கசக்கிப் பிழிந்து வேலைவாங்கி உற்பத்தியிலக்கை எட்டியபிறகு அவர்களை எவ்வித முன்னறிவிப்புமின்றி வெளியேற்றும் கொடுமைகளை பட்டியலிட்டு சாடினார். ஆலைநிர்வாகம் தங்கள் ஆலையில் உள்ள தொழிற்சங்கங்களில் தனக்கு பாதசேவைசெய்யும் தொழிற்சங்கங்களை மட்டும் அங்கீகரித்து வைத்துக்கொண்டு மற்ற நேர்மையானதொரு தொழிற்சங்கம் உருவாவதை தடைசெய்துவருகின்றன. பாதுகாப்பற்ற வேலைமுறையினால் விபத்துக்குள்ளாகி இறக்கின்ற தொழிலாளர்களை தனதுக்கணக்கில்கூட கொண்டுவராமல் தட்டிக்கழித்து தனதுக் கொலையை மறைத்துவிடுகின்றன, இதனை எதிர்த்து குரல் கொடுக்கும் தொழிலாளர்கள் அல்லது சங்கங்களை மிரட்டி பணியவைக்கின்றன. இதுபோன்ற கொடூரமான கார்ப்பரேட் சுரண்டல்களை, கொலைகளை கோடிக்கால் பூதமான தொழிலாளர் வர்க்கம் தியாகத்திற்கு அஞ்சாத நெஞ்சுரத்துடன் புரட்சிகர சங்கமாய் எழுந்து முறியடிக்கும் காலம் வெகுதொலைவில் இல்லை என்று அறிவித்துப் பேசினார்.
இதனைத் தொடர்ந்து மண்ணைத் தோண்டி “வெட்டி எடுத்த தங்கம் யாருக்கு” என்ற புரட்சிகர பாடலை பென்னாகரம் விவசாயிகள் விடுதலை முன்னணி தோழர்கள் இசைத்து மக்களுக்கு உணர்வூட்டினர். தொடர்ந்து, கோலார் தங்கவயல் தொழிலாளர்கள் குறிப்பாக, பெம்மல் ஒப்பந்தத் தொழிலாளர்கள் மற்றும் நகராட்சி ஒப்பந்தத் துப்புரவுத் தொழிலாளர்களின் அண்மைகால போராட்ட அனுபவங்களைத் தொகுத்து தோழர் ரமேஷ் எடுத்துரைத்தார். குறிப்பாக கே.ஜி.எப் ஒப்பந்தத் தொழிலாளர்களின் இன்றைய அவல வாழ்க்கை நிலைமைகளை விவரித்துக்கூறி அதிலிருந்து தங்களை விடுவித்துக்கொள்ள புரட்சிகர தொழிற்சங்கத்தின் தேவையை வலியுறுத்தி உரையாற்றியது நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.
தொடர்ந்து விவசாயத்திலும் சிறுதொழில்கள், சிறுவணிகத்திலிருந்தும் மக்கள் வெளியேற்றக் காரணமாக உள்ள கார்ப்பரேட் கம்பெனிகள் ஆதிக்கம், காண்டிராக்ட்மயம் குறித்து விவசாயிகள் விடுதலை முன்னணியின் பென்னாகரம் வட்டச் செயலாளர் தோழர்.கோபிநாத் விளக்கிப் பேசி விவசாயிகளும், தொழிலாளர்களும் ஒன்றிணைந்து மீண்டும் ஒரு மேநாளை உருவாக்குவோம் என அறைகூவி பேசினார்.
“25 ஆண்டுகளுக்கு முன்பிருந்த கட்டமைப்பு முழுவதும் இன்று இல்லை; குறிப்பாக தொழிலாளர் நலத்துறையை எடுத்துக் கொண்டால் அது முழுக்க முழுக்க முதலாளிகளின் நலனைப் பேணுகின்ற துறையாக வெட்டவெளிச்சமாகவே தெரிகிறது. இதனை தொழிலாளர்கள் தங்களின் சொந்த அனுபவத்தின் ஊடாகவே காணமுடியும். பார்ப்பனர்களின் மனுதர்ம படிநிலைகளைப்போலவே தொழிலாளர்கள் சி.எல், காண்ட்ராக்ட், அப்ரண்டீஸ் என பல படிநிலைகளாக பிரித்துவைத்து அடிமைகளாக்கி கார்ப்பரேட் முதலாளிகளால் சுரண்டப்பட்டுவருகின்றனர். அரசுத் துறை என்று சொல்லப்படு்பவை அனைத்துமே கார்ப்பரேட் முதலாளிகளின் அலுவலகமாக மாறிப்போயுள்ளது. மொத்தத்தில் அரசுக் கட்டமைப்பு முழுவதுமே கார்ப்பரேட்மயமும் காண்டிராக்ட்மயமும் இணைந்த ஒரு கலவையாக உள்ளது.” எனவே, ஆளத் தகுதியிழந்த அரசுக் கட்டமைப்பு என்பதையும் மக்கள் அதிகாரத்தைக் கையில் எடுக்க வேண்டிய அவசியத்தையும் உணர்த்தி மக்கள் அதிகாரத்தின் தருமபுரி மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர்.முத்துக்குமார் உரையாற்றினார்.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]
இறுதியாக, பு.ஜ.தொ.மு.வின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் தோழர் ராஜூ நன்றியுரையாற்றினார்.
இப்படிக்கு,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
தொடர்புக்கு : 9788011784, ஓசூர்.
7. திருச்சி
திருச்சியில் மே தினத்தை ஒட்டி வெளியிடப்பட்ட சுவரொட்டிகள், துண்டுப் பிரசுரங்கள்:
தகவல்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
திருச்சி