Monday, March 27, 2023
முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்எழுந்தது மக்களின் அதிகாரம் - உணர்வூட்டும் போராட்டச் செய்திகள் !

எழுந்தது மக்களின் அதிகாரம் – உணர்வூட்டும் போராட்டச் செய்திகள் !

-

1. ஆனைவாரி

shutdown-tasmac-anaivari-siege-1005-05-2016 வியாழன் அன்று சுமார் காலை 10.30 மணி அளவில் ஆனைவாரி பகுதி சுற்று வட்டார மக்களை மக்கள் அதிகாரத்தின் சார்பாக அணி திரட்டி கொண்டு டாஸ்மாக் கடையை மூடுவதற்கு தோழர்கள் பொதுமக்களுடன் “ஆனைவாரி டாஸ்மாக் கடையை மூடு” என்ற விண் அதிரும் முழக்கத்துடன் தோழர்கள் டாஸ்மாக் கடை மூடுவதற்காக சென்றனர். கடை அருகாமையிலேயே காவல் துறையின் சுமார் 100-க்கு மேற்பட்டோர் தடுத்து நிறுத்தினர். கடை அருகில் போகாமலே 10 நிமிடத்திற்கு மேலாக முழக்கமிட்டனர். அப்போது மக்களிடம் பேசிய தோழர் முருகானந்தம், “காவல் துறையினருக்கு இங்கு வேலையில்லை, காவல் துறையால் டாஸ்மாக்கை மூட முடியாது. கடந்த 02-05-2016 அன்று சிதம்பரம் ஆர்.டி.ஓ-விடம் கடையை மூடுவதற்கு மனுகொடுத்தோம். இன்று வரை மூடவில்லை. ஆர்.டி.ஓ-வை இங்கு வரசொல்லுங்கள்” என்றதற்கு போலீசு, “அவருக்கு தேர்தல் வேலை இருப்பதாக” கூறினர்.

“சரி அவர் தேர்தல் வேலையை பார்க்கட்டும். நாங்களே மூடிக்கொள்கிறோம். டாஸ்மாக் கடையை உடனடியாக மூடாமல் இங்கிருந்து போவதில்லை” என்று கூறிவிட்டு தொடர்ந்து முழக்கமிட்டனர்.

உடனே காவல் துறை, “நீங்கள் சொல்லுவதை எல்லாம் கேட்க முடியாது. உங்களை கைது செய்கிறோம். உடன் வண்டியில் ஏறுங்கள்” என்று கூறி மிக வலுக்கட்டாயமாக தோழர்களையும், ஊர்மக்களையும் தள்ளியும் தூக்கிக்கொண்டும் கைது செய்து வண்டியில் ஏற்றினர்.

இந்த போராட்டத்தில் மக்கள் அதிகாரத்தோழர்கள் உட்பட 35 பேர் கைது செய்யப்பட்டனர். புவனகிரி தி.மு.க மாணவரணி நிர்வாகி பாலசுப்ரமணியன் இணைந்து கைதானார். அருகாமையில் உள்ள எறும்பூரில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்து உள்ளனர். அங்கு கடையை மூடாமல் சாப்பிட முடியாது என காவல் துறையினர் அளித்த உணவை மறுத்து தொடர்ந்து போராடி வருகின்றனர்.

உடன் மக்கள் உரிமை பாதுகாப்பு மைய வழக்கறிஞர்கள் / PUSER நிர்வாகிகளும் கலந்துக் கொண்டனர். கைது செய்யப்பட்ட தோழர்கள் காவல் துறையிடம் பெயர் ஏதும் தறாமல் மறுத்தனர். காவல் துறை வழக்கறிஞரை சந்தித்து, “உங்கள் தோழர்கள் பெயர் தர ஒத்துழைப்பு தறாமல் மறுக்கின்றனர். நீங்கள் தயவு செய்து பெயர் தர வேண்டும் சொல்லுங்கள்” போயி கெஞ்சுகிறது. மண்டபத்தில் உள்ள அனைத்து தோழர்களது போன்களை பறிமுதல் செய்து விட்டனர்.


[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

தகவல்
மக்கள் அதிகாரம்,
விருத்தாசலம்

2. ஒசூர்

சூர் : பாகலூர் அருகிலுள்ள சத்தியமங்கலம் கேட் அருகே 100 கணக்கில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். அவ்வழியே செல்பவர்களை அச்சுறுத்தும் வகையில் ஒருவித பதட்டத்துடன் அந்தப் பகுதி முழுவதும் இருந்தது.

இந்நிலையில் சத்தியமங்கலம் கேட்டுக்கு அருகே இருக்கின்ற இரண்டு டாஸ்மாக் சாராயக் கடைகளையும் முற்றுகையிடப்போவதாக அறிவித்திருந்த மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்த தோழர்கள், சத்தியமங்கலம் கிராமத்தில் தெருத்தெருவாக சென்று பெண்கள் குழந்தைகள் முதியவர்கள் என ஊர்வலமாக திரண்டு முழக்கமிட்டபடியே அணிதிரட்டிக்கொண்டிருந்தனர்.

தோழர்கள் அணிதிரட்டிக்கொண்டிருப்பதை அறிந்த போலீசு ஊருக்குள் வந்து தோழர்களையும், ஊர்மக்களையும் பிளவுபடுத்தும் சதிவேலைத்திட்டத்தோடே அணுகியது. குறிப்பாக, “தேர்தல் நேரம் என்பதால் இங்கே யாரும் கூட்டம் கூடக்கூடாது. சட்டம் ஒழுங்கு பாதிக்கும்” என்ற வழக்கமான அறிவிப்பை மிரட்டும் தொனியிலும், நைச்சியமான முறையிலும் கூடியிருந்த தோழர்கள் மக்களிடம் முன்வைத்தது.

அதற்கு தோழர்கள், “டாஸ்மாக்குக்கு எதிராகப் போராடுவது எங்களது உரிமை என்றும், நாங்கள் உழைக்கும் மக்கள்! எங்கள் ஊரில் டாஸ்மாக் வேண்டாம் என்றுதான் நாங்கள் போராட்டம் நடத்துகிறோம். கடையை மூடினால் பிரச்சனை ஏதுமில்லை. எங்களால் எப்போதும் சட்டம் ஒழுங்குப் பிரச்சனை ஏற்படுவதில்லை. கடையை மூடினால் நாங்கள் போராட்டத்தை விலக்கிக்கொள்கிறோம். இல்லையேல், டாஸ்மாக்கை மூடும் வரை நாங்கள் எங்களின் முற்றுகைப் போராட்டத்தை தொடர்வோம்” என்றனர்.

“கடையை மூடுவதற்கெல்லாம் எங்களுக்கு அதிகாரம் இல்லை, நீங்கள் போராட்டம் நடத்தினால் நாங்கள் கைது செய்து ரிமாண்ட் செய்வோம்” என்று அச்சுறுத்தியது போலிசு. போலீசின் மிரட்டலுக்கு பணியாமல் போராட்டத்தை தொடர்ந்தனர். ஊர்வலமாக முழக்கமிட்டபடியே முற்றுகையிட சென்றனர். சத்தியமங்கலம் கேட் அருகில் ஏற்கனவே குவிக்கப்பட்டிருந்த போலீசு ஊர்வலமாக வந்த மக்களை சுற்றி வளைத்தது. பெண்கள் போலீசை முற்றுகையிட்டு டாஸ்மாக் கடையை நிரந்தரமாக மூடக் கோரினர். வாதாடினர்.


[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

உடனடியாக, அதிகார போதையேறிய போலீசு திமிராக அவர்களை தரதரவென இழுத்துச் சென்று வேனில் ஏற்றியது. உள்ளுர் மக்கள்,வேடிக்கை பார்த்தவர்கள் என எல்லோரையும் கைது செய்தது. மேலும் கைதாகாமல் ஒதுங்கிய பெண்கள், முதியவர்களை கேவலமான முறையில் விரட்டிச் சென்றது. மக்கள் அதிகாரம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ரவிச்சந்திரன், ரமேஷ் உள்ளிட்ட அணைவர்களையும் கைது செய்தது. அது மட்டுமில்லாமல், சாலையில் நிற்பவர்களையும் பேருந்து நிலையத்தில் நிற்பவர்களையும் கைது செய்வதாக மிரட்டி விரட்டியது. மேலும், போலீசுக்குத் துணையாக அ.தி.மு.க-வினர் இணைந்து கொண்டு உள்ளூர் மக்கள் யார், வெளியூர் மக்கள் யார் என காட்டிக் கொடுக்கும் வேலையை செய்தனர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

தகவல்
மக்கள் அதிகாரம்,
ஒசூர்

3. அன்பில், திருச்சி

trichy-anbil-shutdown-tasmac-siege-21திருச்சி பகுதியின் புறநகர் பகுதியான லால்குடி வட்டத்தில் உள்ள அன்பில் கிராமத்தில் அமைந்துள்ள டாஸ்மாக் கடையை மூட மே 5 கெடு விதித்து 2-ம் தேதி மாவட்ட ஆட்சியரின் உதவியாளரிடம் மக்கள் அதிகாரமும், ஊர்ப்பொதுமக்களும் இணைந்து மனுகொடுத்தோம். அதையொட்டி மக்கள் அதிகார தோழர்கள் அப்பகுதியில் உள்ள கிராமங்களில் தங்கி, மக்கள் கலை இலக்கியக் கழக கலைக்குழுவின் பாடல்களுடன் தெருமுனைப் பிரச்சாரமும், பரவலாக சுவரொட்டி விளம்பரமும் செய்தோம். கெடு விதித்து மக்கள் மத்தியில் தங்கி வேலை செய்ததால் பீதியடைந்த அரசு 04-05-2016 இரவு 9.30 மணி முதலே மக்களிடமிருந்து சாராயக் கடையை ‘பாதுகாக்க’ 2 போலீசை நிறுத்தியதுடன், அதிகாலை 6 மணி முதல் தீயணைப்பு வாகனம், 50-க்கும் மேற்பட்ட காவல்துறை வாகனங்கள் மற்றும் 100-க்கும் மேற்பட்ட போலீசார் சகிதமாக நிறுத்தியிருந்தனர். 3 கி.மீ முன்பே தடையரண்கள் அமைத்து போக்குவரத்தை மாற்றிவிட்டனர்.

உள்ளூர் பகுதியில் உள்ள முன்னணியாளர்களுக்கு அடிக்கடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு தொந்தரவு செய்வது, உளவு பார்ப்பது போன்ற வேலைகளை செய்து வந்தது. மேலும், மக்கள் போராட்டத்தில் கலந்து கொள்வதை தடுக்க அப்பகுதியில் மக்களை அணிதிரட்டிய நம் தோழர்கள் உட்பட 4 பேரை கைது செய்து பீதியூட்டும் முயற்சியில் ஈடுபட்டதுடன், பல பகுதிகளிலிருந்து, 500-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வாகனங்களில் வந்திறங்கியதை கண்டு, டாஸ்மாக் பாதுகாப்பு டியூட்டியில் ஈடுபட்ட போலீசாரை (போராடும்) மக்கள் கூடும் இடத்திற்கு 200 மீட்டருக்கு முன் வரவழைத்தது.

திருச்சி பகுதி மக்கள் அதிகார ஒருங்கிணைப்பாளர் தோழர் தர்மராஜ் போராட்டத்தை பற்றி விளக்கினார். தமிழக விவசாய சங்கத்தை சேர்ந்த மா.பா. சின்னதுரை, ஆதிதமிழர் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள், பெண்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

 [படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

அதன் பின் ம.க.இ.க மைய கலைக் குழுவின் பாடல்கள் பாடப்பட்டது. இதற்கிடையே, காவல்துறை ஆய்வாளர் பாலாஜி, தாசில்தார் ஜெயக்குமார் ‘பேச்சுவார்த்தை’க்கு வந்தனர். அவரிடம் மக்களின் கோரிக்கைகளை தோழர் தர்மராஜ் விளக்கினார். “தற்போதைக்கு மூடுவது சாத்தியமில்லை” எனக் கூறியவர், “கலெக்டரை சந்திக்க 10 பேர் வாருங்கள்” என அழைத்தார். “மக்கள் முன்பு விவாதிக்கலாம்” எனக் கூறியதற்கு, “எப்படிங்க மக்கள் முன்னாடி பேச முடியும்” என்றார். மேலும், “என்னைப்பற்றி இப்பகுதி மக்களிடம் நல்லபெயர் உள்ளது” எனக் கூறியதும், அதற்கு காவல் ஆய்வாளர் சர்டிபிகேட் கொடுத்தார்!

“கோரிக்கையை மக்கள் முன்பு தான் விவாதிக்க வேண்டும்” என அவரை அழைத்து மக்கள் முன் நிறுத்தி தாசில்தார் கூறியதை மக்களிடம் சொன்னது தான் தாமதம், மக்கள் தங்கள் வேதனையை (குடித்துவிட்டு கணவன் அடிப்பது, வீட்டிலுள்ள பானைகளை உடைப்பது, தாய் முன்பே நிர்வாணமாக நிற்பது, உணவில் சிறுநீர் கழிப்பது) கொட்டித் தீர்த்தனர். ஒரு குறிப்பிட்ட கட்டத்திற்கு மேல், “கடையை மூடவில்லையென்றால் பால் டாயிலை குடித்து இங்கேயே சாகப்போகிறோம், தீக்குளித்து சாகப்போகிறோம்” என தங்கள் கையறு நிலையை ஆத்திரமாக வெளிப்படுத்தினர். இதற்கு பதில் சொல்ல முடியாத தாசில்தார் பின்வாங்கினார்.

ஒரு மணி நேரத்திற்கு பின் ஏ.டி.எஸ்.பி நடராஜனுடன் வந்தவர், “கலெக்டரிடம் பேசியதில் ‘விதிமுறைப்படி’ அமைந்துள்ள கடையை உடனடியாக எடுப்பது சாத்தியமில்லை” என விளக்கம் கொடுத்தார்.

மக்கள் உரிமை பாதுகாப்பு மைய வழக்கறிஞர்கள், குற்றவியல் நடைமுறைச் சட்டம் (CRPC) பிரிவு 133-ன் படி அமைதிக்குலைவு ஏற்படுத்தக் கூடிய தடைகளை நீக்க தாசில்தாருக்கு அதிகாரம் இருப்பதை சுட்டிக்காட்டியும் ஏற்க மறுத்து, கடையை மூடுவது பற்றி மூன்று நாள் கழித்து பதில் சொல்வதாகவும், இதை ஏற்கவில்லையென்றால் ‘சட்டவிரோதமாக’ கூடியுள்ளீர்கள் எனக் கலைக்க கலெக்டர் உத்தரவிட்டுள்ளதாகவும் கூறினார். 3 நாளில் நடவடிக்கை எடுப்பது பற்றி எழுத்துப்பூர்வமாக கேட்டதற்கு சரி எனக்கூறி நழுவி காரில் ஏறி தப்பினார்.

அதன் பின் மக்களை அச்சுறுத்தும் வகையில் போலீசார் நெருங்கினர். இதை முன் கூட்டியே கணித்த நம் தோழர்கள், ஏற்கனவே மனிதச் சங்கிலித் தொடர் அமைத்து மக்களுக்கு அரணாக நின்றனர். மக்களிடம் நடந்ததை விளக்கியதில், “டாஸ்மாக்கை மூடவில்லையென்றால் நாங்கள் அனைவரும் கைதாகத் தயார்” என போர்க்குணமாக ஒரே குரலில் முழக்கமிட்டனர். அவர்கள் விருப்பத்திற்கிணங்க கைதாக முடிவெடுக்கப்பட்டு அனைவரும் கைதாகினர்.

சட்டம் ஒழுங்கு சீர்குலைவை கையாள கடையை மூடுவது, கைது செய்வது என்ற இருவேறு வழிமுறைகளில் கைது செய்வதை தேர்ந்தெடுத்ததின் மூலம் இந்த அரசமைப்பு மக்களுக்கு எதிராக உள்ளதை நிரூபித்துள்ளது அதிகார வர்க்கம்! இனி அதிகாரத்தை கையிலெடுப்பதைத் தவிர மக்களுக்கு வேறு வழியில்லை என்பதை உணர்த்தியுள்ளது இப்போராட்டம்!

மண்டபத்தில் அடைக்கப்பட்ட பொதுமக்கள் மிகுந்த உற்சாகத்துடன் இருந்தனர். மக்களை உற்சாகப்படுத்த போராட்ட அனுபவகள் மற்றும் ம.க.இ.க மையக் கலைக்குழு தோழர்களின் புரட்சிகர பாடல்கள் இடம் பெற்றன. டாஸ்மாக் கடையை மூடும் வரை போராடலாம் என கோரியதன் அடிப்படையில் உள்ளேயே கையெழுத்து போடாமல் எதிர்ப்பை பதிவு செய்தோம். காவல்துறை உயர்அதிகாரிகள் பலர் வந்து பேசியும் மக்கள் உறுதியாடு இருந்ததால் இறுதியில் சப்கலெக்டர் வந்து மக்களிடம் பேசியும் பயனில்லை மக்கள் அதிகாரத் தோழர்களும்,பொது மக்களும் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்க முடியாத அதிகாரி, “என்னால் எதுவும் செய்ய முடியாது எனக்கு அதிகாரம் இல்லை” என தெரிவித்தனர். உடனே ஊர் மக்களில் இருந்த சாந்தி என்ற பெண்மணி சப்கலெடரிடம் “அப்போ அதிகாரம் இருப்பவர்களை வரச்சொல்லுங்க நீங்க கிளம்புங்க” என கூற அதிகாரிகள் அதிர்சியில் உறைந்தனர்.

பிறகு, “எவரும் கையெழுத்து கூட போட வேண்டாம் உங்களை கூட்டிட்டு வந்த வேனிலேயே கொண்டு போய் விட்டு விடுகிறோம். நாளை ஒரு வாரத்திற்குள் டாஸ்மாக்கை மூடுவதற்கான நகலை தருகிறேன். நீங்கள் தற்போது கிளம்புங்கள்” என காவல்துறை அதிகாரி கெஞ்சி நிற்க, “அதிகாரிகள் உரிய தேதிக்குள் சொன்னதை செய்ய மறுத்தால் நாம் இன்னும் மக்களை அதிகப்படியாக திரட்டி நாமே டாஸ்மாக்கை மூடுவோம்” என மக்களுடன் கூடி பேசி முடிவெடுத்து அறிவித்தோம்.

இரவு மண்டபத்தை விட்டு அனைவரும் போராட்ட குணம் குறையாமல் சென்றது காவல் துறையினரை வியப்பில் ஆழ்த்தியது.


[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

தகவல்
மக்கள் அதிகாரம்,
திருச்சி கிளை.

4. விழுப்புரம்


[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]