Thursday, October 21, 2021
முகப்பு கட்சிகள் அ.தி.மு.க போலிஸ் சித்திரவதையின் தருணங்கள் – வீடியோ

போலிஸ் சித்திரவதையின் தருணங்கள் – வீடியோ

-

மதுரவாயல் மே 5, 2016 டாஸ்மாக் முற்றுகை போர்க்களத்தில்………பாகம் 1

க்கள் அதிகாரம் அமைப்பின் சென்னை மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் வெற்றிவேல் செழியன், மதுரவாயல் பகுதி டாஸ்மாக் எதிர்ப்புக் குழுவை சார்ந்த தோழர் கணேசன், பு.மா.இமு-வை சார்ந்த பச்சையப்பன் கல்லூரி மாணவர் வாசு மூவரும் தமது அனுபவங்களை இந்த வீடியோவில் பகிர்ந்து கொள்கிறார்கள்.

tasmac-struggle-vetrivel-chezhiyan-attacked-3போலிஸ் சித்திரவதை எப்படி இருக்கும் என்பது தோழர்களுக்கு புதிதல்ல. ஆனால் நேரடியாக எதிர்கொள்ளும் வரை கொட்டடி வதை என்பது பொதுவான போலிஸ் பற்றிய ஒரு கருத்து மட்டுமே. அதே நேரம் மற்றவர் போல தோழர்கள் அந்த கொடூரத்தை முதல் முறையாக எதிர் கொண்டாலும் முன்னர் கண்ட கோட்பாட்டுத் தெளிவினால் தைரியமாக எதிர் கொள்கிறார்கள். முக்கியமாக அதை அரசியல் உறுதியுடனும், மக்கள் சார்பிலும் சந்திக்கிறார்கள். வேட்டை நாயாக பயிற்றுவிக்கப்பட்டிருக்கும் போலிசுக்கு இந்த வேறுபாடு பொதுவில் புரியாது.

சாதா கிரிமினலோ, ஸ்பெஷல் கிரிமினலோ அனைவரும் போலிஸின் முதல் அடியிலேயே சரணடைந்து விடுவார்கள். இருப்பினும் கிடைக்க இருக்கும் அடி குறையாது என்றாலும் அதன் கடுமை மற்றும் வீரியம் கூடிக் கொண்டே போகாது. பொது மக்களாக இருந்தால் இந்த சித்ரவதை முதலில் கடுமையான அதிர்ச்சியாகவும் பின்னர் பயமாகவும் கோபமாகவும் இறுதியில் விரக்தியாகவும் மாறும். இது ஏன், எப்படி என்று பார்க்க முடியாத படி அந்த அதிர்ச்சி இருக்குமென்பதால் பாதிக்கப்பட்ட ஒரு சாமானியனாக அவர்கள் சரிந்து போகிறார்கள்.

தோழர்களும் மக்கள் போன்றே இதை துவக்கத்தில் எதிர் கொள்கிறார்கள். பிறகே அது ஒரு அரசியல் உறுதி, தெளிவுடன் வலியையும், அதிர்ச்சியையும் கடந்து போக வைக்கிறது. என்ன இருந்தாலும் அந்த வலி அவருக்குத்தான் என்று கண்ணீர் விடுகிறார், தோழர் வெற்றிவேல் செழியனின் தங்கை. அவரது பெற்றோருக்கு 12 வருடங்கள் கழித்து பிறந்த பிள்ளை என்று கூறுபவர் தொலைபேசியில் அம்மா அடைந்த அதிர்ச்சியை வருத்தத்துடன் விவரிக்கிறார். பள்ளி மாணவியான அவரது மகளோ குடும்ப உறவினராக பார்க்கும் போது இது வலித்தாலும், மக்கள் தரப்பில் பார்க்கும் போது பெருமையாக இருக்கிறது என்கிறார். செழியனின் தங்கையோ நாங்கள் செய்ய முடியாததை அவர் செய்திருக்கிறார், அவரது அரசியல் நடவடிக்கைகளுக்கு முடிந்த அளவில் உதவுவோம், இந்த அடியால் துளியளவு சமூக மாற்றம் வந்தால் கூட அது வெற்றிதான் என்று கண்ணீரைக் கடந்து பேசுகிறார்.

தன்னுடைய துணைவியார் நேரில் வந்து பார்த்து விட்டு  பக்கத்து அறையில் அழுததாகவும் பிறகு சமாதானப்படுத்தியதாகவும் புன்னகையுடன் கூறுகிறார் வெற்றிவேல் செழியன். தங்கை அழும் போது அண்ணன் சிரித்துக் கொண்டே அதை பேசுவது என்பதற்கு ஒரு பின்னணி இருக்கிறது. இந்த சம்பவத்திற்கு முன்னர் அவரை எத்தனையோ தருணங்களில் பார்த்த போது, எப்படி ஒரு தொழிலாளிகளிடையே உருவான தலைவனுக்குரிய உறுதியோடும், பொறுமையோடும் பேசுவாரோ அது இப்போதும் குறையவில்லை. இந்த அடிதடி அவரை இம்மியளவு கூட மாற்றிவிடவில்லை – அதாவது சோர்வு என்ற கோணத்தில்.

சாராய ஜேப்பியார் கல்லூரியில் ஒரு தொழிலாளியாக ஆரம்பித்து பின்னர் தொழிற்சங்க தலைவராக உயர்ந்து தற்போது “மக்கள் அதிகாரம் – சென்னை மண்டல ஒருங்கிணைப்பாளராக” பணியாற்றும் வரை அவரது வாழ்க்கை நிறைய திருப்பங்களையும், சாகசங்களையும் கொண்டிருக்கிறது. வேலை போனதும் தான் முழுநேர ஊழியராக புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியில் பணியாற்றதையும் சுமார் பத்தாண்டுகளுக்கும் மேலாக தனது பொருளாதாரத்தை சக தொழிலாளிகளே பராமரிக்கிறார்கள் என்று பெருமையுடன் தெரிவிக்கிறார் அவர். இந்த சமூக உறவின் பலம்தான் அவரை போலிசின் சித்திரவதையை பதறாமல் எதிர்கொள்வதற்கு உதவியிருக்கும்.

மதுரவாயல் போலிசால் தான் அடிபடுவதை விட தோழர் வெற்றிவேல் செழியன் மீது விழுந்த அடிகள் தன்னை நிலைகுலைய வைத்ததாகவும் அதனால் தான் மயக்கத்துடன் வாந்தி எடுத்தாகவும் கூறுகிறார் தோழர் கணேசன். இவர் பகுதி டாஸ்மாக் எதிர்ப்புக் குழுவில் செயல்படுகிறார்.

மதுரவாயிலில் ஒரு குடிசை வீட்டில் தனது மனைவி, மகன்களுடன் அப்பளம் தயாரிக்கும் தொழிலாளியாக வாழ்க்கையை நடத்தும் கணேசனை இன்றும் அவருக்கு அப்பள ஆர்டர் கொடுக்கும் சிறு வியாபாரிகள் “நீதான் அடிக்கடி போராட்டம் சிறையின்னு போற, உன் குடும்பத்தையும் ஏன் அழைச்சுட்டு போற?” என்று கேட்கிறார்கள்.

“காக்க காக்க” சூர்யா போல தன்னைக் கருதிக் கொண்டு அடித்த மதுரவாயல் காவல் உதவி ஆய்வாளர் செல்லதுரையின் வெற்று உதாரை கேலி செய்கிறார் கணேசன். அதே நேரம் முடிந்தால் எங்களை அடித்துக் கொன்றாலும் இந்த போராட்டத்தை விடமாட்டோம் என்று சவாலும் விட்டிருக்கிறார். இதனால் அவருக்கு கூடுதலாக அடிகள் கிடைத்திருக்கும் என்றாலும் இனி போலிஸ் எனும் கிரிமினல் கும்பலைக் கண்டு அவரோ அவரது பகுதி தோழர்களோ பயப்படப்போவதில்லை. ஆம். போலிஸ் தோற்றுவிக்கும் பயம் என்பது உடல் வலியில் அல்ல, உள்ளத்தின் அதிர்ச்சியில்தான்.

எவ்வளவு அடிபட்டாலும் வெற்றிவேல் செழியன் இரும்பு போல நிற்கிறார் என்று கணேசன் தெரிவிக்கிறார். செழியனோ பச்சையப்பன் கல்லூரி மாணவர் வாசுவின் உறுதியைப் பார்த்து கற்றுக் கொண்டேன் என்று பணிவாகவும் பெருமையாகவும் தெரிவிக்கிறார். அவர்களது உடைகளை கழட்டுமாறு போலிஸ் உத்தரவிடுகிறது, தோழர்கள் மறுக்கிறார்கள். பின்னர் பலவந்தப் படுத்தியும் அதை செய்ய முடியவில்லை. ஒருவரை கழட்டியதும், கழட்டிய அடுத்தவர் உடையை மீண்டும் போடுகிறார். இப்படி போகிறது அந்த போராட்டம். இந்த ஆட்டத்தை திறம்பட நடத்தியதற்காக வாசுவைப் பாராட்டுகிறார் செழியன்.

ஆமாம், இத்தகைய உறுதியையும், போர்க்குணத்தையும், முக்கியமாக தங்களை மக்களின் அங்கமாக கருதிக் கொள்ளும் பணிவான மனிதர்களை நீங்கள் எந்தக் கட்சியில் சந்திக்க முடியும்?

இந்த வீடியோ வேலைகளின் போது ஒரு தோழர் கேட்டார். “இந்த சித்திரவதையின் கதையை நாம் காண்பித்தால் மக்களோ புதிய தோழர்களோ பயந்து போய்விடமாட்டார்களா, இனி நமது போராட்டங்களில் பங்கேற்க தயங்கமாட்டார்களா?”.

பொதுவில் இந்த கேள்வி சரியானது போலத் தோன்றலாம். ஆனால் உண்மையில் இனி போலிஸ் எனும் கிரிமினல் கும்பலின் அடிகளையும், வதைகளையும் கடந்து வருவது பெரிய சோதனை அல்ல என்ற தைரியத்தையும் அளப்பறிய நம்பிக்கையையும், தோழர்களது நேர்காணல் அளிக்கும் என்று நம்புகிறோம்.

வெற்றிவேல் செழியனது இரண்டு கால்கள் மற்றும் ஒரு கையில் எலும்புகள் முறிக்கப்பட்டிருக்கின்றன. அவர் இயல்பாக நடமாட, எப்படியும் மூன்று மாதங்கள் ஆகலாம். ஆனால் அவரோ “மக்கள் அதிகாரம்” சார்பில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பிற்கே அடுத்த நாளிலேயே சென்று விட்டார். தோழர்கள் அவரை தூக்கிச் சென்றிருந்தாலும், போராடும் ஒரு மனிதனை ஒரு சித்திரவதை முடக்கிவிட முடியுமா என்ன?

மாணவர் வாசுவின் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறது. இந்த நேர்காணல் இடைவெளியில் சாப்பிடும் போது தட்டுக்கள் குறைவு என்பதால் எங்களுக்கு முழுத்தட்டு அளித்துவிட்டு அவர் ஒரே தட்டில் மற்றொரு தோழரோடு மதிய உணவை பகிர்ந்து கொண்டு சாப்பிடுகிறார். இவரையெல்லாம் மதுரவாயில் காவல் நிலைய காக்கி கும்பல்கள் “பூச்சாண்டி” பயம் காட்டி முடக்க முடியுமா என்ன?

விசாரணை படம் பார்த்தவர்கள் பொதுவில் போலிசைப் பார்த்து பயந்தார்கள். தோழர்களின் கதையைப் பார்த்தவர்களுக்கு அந்த பயம் ஏற்படாது மட்டுமல்ல, வாழ்வில் நேர்மையாகவும் உறுதியாகவும் இருந்து போராடுபவர்களின் மகிழ்ச்சியையும் அது அறிமுகப்படுத்தக் கூடும்.

inner_design450x150

  1. POLICE NAIGALIN UNMAI MUGAM MAKKALIN PARRVAIKU VAITHA VINAVUKU NANDRI……….
    THOLARGALIN NEJJURAM ANNAI BRAMMIKA VAIKIRATHU .THOLARGALUKU VEERAVANAKKAM

  2. “ஆம். போலிஸ் தோற்றுவிக்கும் பயம் என்பது உடல் வலியில் அல்ல, உள்ளத்தின் அதிர்ச்சியில்தான்”
    This is the important sentence in the article .
    my salutes to comrades.

  3. மதுரவயல் ஆய்வாளன் செல்லதுரை மற்றும் தோழர்களை சித்ரவதை செய்த சில காக்கி ரவுடிகள் தோழர்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். அடிபட்ட தோழர்களுக்கு Rs.2000000 மருத்துவ செலவிற்க்கு வழங்க வேண்டும் .அதை 43 காவல் வெறி,சொரிகளிடமிருந்து வசூல் செய்து, தற்போது காவல்துறையை தனது கட்டுபாட்டில் வைத்திருக்கும் தேர்தல் அதிகாரி திரு. லக்கானி அவர்கள் தோழர்களிடம் வழங்க வேண்டும் .

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க