privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கஜெயாவின் பிரியாணி ஜனநாயகம்

ஜெயாவின் பிரியாணி ஜனநாயகம்

-

ன்னுடைய ஆட்சி உங்களுக்கு வசந்தத்தைத் தந்திருக்கிறது” என்று மனித உணர்ச்சியின் சாயலே இல்லாத தனது ரோபோ குரலை உயர்த்தி ஜெயலலிதா உரையாற்றிக் கொண்டிருந்த போது, கீழே அமர்ந்திருந்த மக்கள் “108 டிகிரி பாரன்ஹீட் வசந்தத்திலிருந்து” தப்பி ஓடிக் கொண்டிருந்தார்கள். அம்மா பேசும்போது வெளியேறி சட்டம் ஒழுங்கைச் சீர்குலைக்கும் அவர்கள் மீது தடியடி நடத்த முடியாமல், கைகள் கட்டப்பட்டிருந்த காரணத்தால், அவர்களை வெளியேற விடாமல் தடுத்து உள்ளே தள்ளிக்கொண்டிருந்தனர் போலீசார். 200 ரூபாய் காசுக்குத் தமது உயிரையே விலையாகத் தரவேண்டியிருக்கும் என்று பரிதாபத்துக்குரிய அந்த மக்கள் எதிர்பார்த்திருக்கவில்லை.

jaya meeting_2
சேலத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பலியான சேலம்-ஆத்தூர் அருகிலுள்ள இராமநாதபுரம் கிராமத்தை சேர்ந்த பெரியசாமி

ஏப்ரல் 11 ஆம் தேதி விருத்தாசலத்தில் இரண்டு பேரும், பின்னர் 15 ஆம் தேதி அருப்புக்கோட்டையில் ஒருவரும், சேலத்தில் இரண்டு பேரும் வெயிலில் சுருண்டு விழுந்து இறந்தது குறித்த விவரங்கள் எல்லா பத்திரிகைகளிலும் வெளிவந்து விட்டன. பல்வேறு மாவட்டங்களிலுருந்தும் கேரளத்திலிருந்தும் கூட மக்கள் லாரியில் அடைத்துக் கொண்டு வரப்பட்டிருக்கிறார்கள். பகல் 11 மணியிலிருந்து மாலை 4 மணி வரை ஒதுங்க நிழல் இல்லாத பொட்டல் வெளியில், கொடும் வெயிலில், குடிநீர் அருந்தவோ, சிறுநீர் கழிக்கவோ கூட அசைய முடியாமல் பட்டியில் அடைக்கப் பட்டிருக்கிறார்கள். அத்தகையதொரு வெயிலில் ஆறு மணி நேரத்துக்கு மேல் நிற்பதென்பது ஆடு மாடுகளுக்குக் கூட சாத்தியமற்ற காரியம்.

நாடெங்கும் வெயிலின் கொடுமைக்கு மக்கள் பலியாகிக் கொண்டிருக்கும் சூழ்நிலையில், அனல் காற்று வீசுவதால் பகல் நேரத்தில் வெளியில் அதிக நேரம் நடமாடுவதைத் தவிர்க்குமாறு அரசே மக்களுக்கு அறிவுறுத்தி வரும் இந்தக் கோடையில், 200 ரூபாய் காசுக்காகவும் ஒரு பிரியாணிப் பொட்டலத்துக்காகவும் வண்டியில் ஏறத்துணிந்த மக்களை அவ்வாறு தூண்டியது எது? அதனை ஏழ்மை என்பதா பிழைப்புவாதம் என்பதா?

ஐந்து பேர் இறந்தார்கள் என்பது அரசுக் கணக்கு. ஒரு பெண் போலீசு அதிகாரி உள்ளிட்ட பல பத்து பேர் மயக்கமடைந்தும், மிதிபட்டும், எலும்பு முறிந்தும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் என்ன நேர்ந்தது என்பதை நாம் அறியோம். இறந்தவர்கள் உடல்நலக் குறைவினால் இறந்து விட்டதாகவும், தற்போது தேர்தல் காலமென்பதால் தேர்தல் முடிந்த பின்னர் நிவாரணம் அளிப்பதாகவும் அறிவித்து விட்டார் ஜெயலலிதா. கூட்டத்துக்கு வருவதற்கு 200 ரூபாயும் பிரியாணிப் பொட்டலமும் என்பதைப் போல, கூட்டத்தில் மிதி பட்டு செத்தால் இவ்வளவு, எலும்பு முறிந்தால் இவ்வளவு என்று கருணைத்தொகையையும் இனி அம்மா நிர்ணயிக்கக் கூடும்.

இந்த 5 மரணங்களும் கொலைகள்தான் என்பதில் யாருக்கும் ஐயம் தேவையில்லை. இரவு நேரத்தில் எலிகாப்டர் பயணம் பாதுகாப்பானதல்ல என்ற காரணத்துக்காக, அதாவது தன்னுடைய உயிரைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்ற காரணத்துக்காக பல்லாயிரக்கணக்கான மக்களைப் பிடித்துக் கொண்டு வந்து கொடும் வெயிலில் நிறுத்தி மரணத்துக்குத் தள்ளியிருக்கிறார் ஜெயலலிதா. அடுத்தடுத்த மரணங்களும் கண்டனங்களும் கூட அவரது இந்த வக்கிர மனோபாவத்தை ஒரு அங்குலம் கூட அசைக்கவில்லை.

தேர்தல் ஆணையத்தைப் பொருத்தவரை, அரசியல் கட்சிப் பொதுக்கூட்டங்களின் ஒலிபெருக்கி சத்தம் தங்கள் தூக்கத்தைக் கலைப்பதாக மேட்டுக்குடி வர்க்க கனவான்கள் நீண்டகாலமாக சொல்லி வந்த புகாரை மனதிற்கொண்டு, இரவு பத்து மணிக்கு மேல் ஒரு நிமிடம் கூடப் பேசக்கூடாது என்று கட்டுப்பாடு விதிக்கிறது. 108 டிகிரி வெயிலில் ஆறு மணி நேரம் மக்களை அடைத்து வைப்பது அவர்களை மரணத்துக்கே தள்ளும் என்பது தேர்தல் ஆணையத்துக்குப் புரியாத உண்மையாக இருக்க முடியாது. செத்தவர்கள் ஏழைகள், சாகடித்தவர் ஜெயலலிதா என்ற காரணத்தினால்தான் அடுத்தடுத்து 3 ஊர்களில் மரணம் நிகழ்ந்தும் கூட ஆணையம் பெயருக்கு ஒரு வழக்கு கூட பதிவு செய்யவில்லை.

ஜெயலலிதா மட்டுமல்ல, பிரச்சாரக் கூட்டங்களுக்கு அனுமதி வழங்கிய ஆணையம், மாவட்ட ஆட்சியர், போலீசு அதிகாரிகள், நகராட்சி அதிகாரிகள் உள்ளிட்ட அனைவரும் இந்தப் படுகொலையில் கூட்டுக் குற்றவாளிகள். கொடும் வெயிலில் நீரும் நிழலும் இன்றி மணிக்கணக்கில் மக்களை அடைத்து வைப்பது அவர்களை மரணத்துக்குத் தள்ளும் என்று தெரிந்தேதான் அவர்கள் இதனைச் செய்கிறார்கள். இது வெறும் அலட்சியமும் அல்ல; இவர்கள் அனைவரும் அதிமுக அடிமைகளைப் போல ஜெ வின் பொதுக்கூட்டத்துக்கு வேலை செய்திருப்பதை ஊடகங்கள் ஆதாரபூர்வமாக வெளியிட்டிருக்கின்றன.

தன்னுடைய லாப வெறிக்காக குடந்தையில் பள்ளிக் குழந்தைகளை நெருப்புக்குப் பலியிட்ட தாளாளரைப் போன்ற குற்றவாளிகள் இவர்கள். சட்டப்படி ‘கொலைக்குற்றம் ஆகாத மரணம் விளைவிக்கும் குற்றம்’ (இ.த.ச 304) என்ற குற்றப்பிரிவின் கீழ், தண்டிக்கப்பட வேண்டியவர்கள். ஜெயலலிதாவின் ஆணவத்துக்கும் அலட்சியத்துக்கும் ஊழலுக்கும் மக்கள் பலியாவது புதிதல்ல. மகாமக சாவு தொடங்கி முகலிவாக்கம் கட்டிடச் சாவு, செம்பரம்பாக்கம் வெள்ளச்சாவு வரையிலான கொலைக்குற்றங்கள் தனியே பட்டியலிடப்பட வேண்டியவை. ஆனால் ஜெ வுக்கு எதிராக அத்தகைய குற்றச்சாட்டை பதிவு செய்வதற்கு தேர்தல் ஆணையமோ நீதிமன்றமோ ஒருபோதும் ஒப்புக்கொள்ளப் போவதில்லை.

மக்கள் மன்றத்திலேயே கூட இந்த ஐந்து மரணங்களும் ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் என்ன? இந்தச் சாவுகள் ஆத்திரத்தையோ கொந்தளிப்பையோ ஏற்படுத்தாத அளவுக்கு தமிழ்ச் சமூகத்தின் தன்மான உணர்ச்சி மரத்து விட்டது. ஒரே ஒரு நபருக்கு 8 ஏசிகள், 20 ஏர் கூலர்கள் என்ற திமிர்த்தனமும், ஒரு நபரின் வசதிக்காக 50,000 மக்கள் வெயிலில் வதங்குவதும் சகித்துக் கொள்ளப்படுகிறது. ஏ.சி குளிரில் அமர்ந்து கொண்டு வெயிலில் வாடும் மக்களைப் பார்த்து, “அம்மா இட்டிலி, அம்மா தண்ணீர் ஆகியவையெல்லாம் நான் சொல்லாமலேயே செய்தவை. இதையெல்லாம் நீங்கள் எதிர்பார்த்தீர்களா?” என்று கேட்கும் ஜெ வின் திமிர்த்தனம் அங்கீகரிக்கப்படுகிறது.

jaya meeting_1
தமிழக மக்களுக்காக முற்றும் துறந்து தவ வாழ்க்கை வாழ்ந்து வரும் “வசந்தசேனை” ஜெயலலிதா

‘எம்ஜியாரின் உடன்கட்டை’ என்ற முறையில் தமிழகமே தனக்குப் பாத்தியதையுள்ள சொத்து என்றும், தமிழக மக்கள் தனது அடிமைகள் என்றும் ஜெயலலிதா கருதுகின்றார். குளுகுளு ஏ.சி யில் அமர்ந்தபடி, வெயிலில் வாடும் மக்களிடம் “தான் தவ வாழ்வு வாழ்வதாக” ஜெயலலிதாவால் கூச்சமே இல்லாமல் பேச முடிவதற்குக் காரணம் இதுதான். ஜெயலலிதாவின் அடிமைகளான அதிமுகவினர், தமக்கு வாய்த்திருக்கும் வாழ்வு என்பது “அம்மா போட்ட பிச்சை” என்று எண்ணுவதைப் போலவே, தாங்கள் போடும் பிச்சையில்தான் தமிழ் மக்கள் வாழ்வதாகக் கருதுகின்றனர். எனவேதான் ‘உரிமை’ என்று குரல் எழுப்புகின்றவர்கள் ஊனமுற்றவர்களே ஆனாலும், அவர்கள் மூர்க்கமாகத் தாக்கப்படுகிறர்கள்.

மக்களுடைய தயவை அவர்கள் நாடவேண்டியிருக்கும் ‘வாக்குரிமை’ என்ற ஏற்பாடு, தலித் மக்களுக்கு கோயில் திருவிழாக்களில் வழங்கப்பட்டிருக்கும் ‘காப்புக்கட்டும் உரிமை’யைப் போன்றதொரு உரிமை. தேர்தலும் ஒரு திருவிழாதான் என்பதையும், தங்களுடைய ‘உரிமை’யின் வரம்பையும் மக்கள் புரிந்திருக்க வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

“வேலையில்லாமல் சோற்றுக்கில்லாமல் கிராமத்தில் கிடந்தவர்களுக்கு பிரியாணி போட்டு தலைக்கு 200 ரூபாய் கொடுத்திருக்கிறோம். தேர்தல் முடிந்த பின்னர் செத்தவர்களுக்கு நிவாரணம் தருவோம். 200 ரூபாய்க்கு தங்களை விற்றுக் கொண்ட கூட்டத்துக்கு வேறு என்ன மனக்குறை இருக்க முடியும்?” என்பதே அதிமுக வினரின் இயல்பான பார்வை. அவர்கள் மட்டுமல்ல, காசுக்கு ஆள் பிடித்து கூட்டம் சேர்க்கும் ஓட்டுக் கட்சியினர் அனைவரின் கருத்தும் இப்படித்தான் இருக்க முடியும்.

jaya meeting_3
மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தின் போது வெயிலின் கொடுமையைத் தாங்க முடியாமல் வெளியேற முயன்ற மக்களை போலீசார் தடுக்க முனைந்த பொழுது ஏற்பட்ட வாக்குவாதம்

ஜனநாயகம் பெரிதும் முற்றி, நிர்வாண நிலை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. சாலைகளில் கட்சிக் கொடி கட்டும் காண்டிராக்டர்கள், கம்பத்தை நட்டுவிட்டு, கொடியை மட்டும் தேவைக்கேற்ப மாற்றுவதைப் போன்ற நிலை கூட்டங்களுக்கும் வந்து கொண்டிருக்கிறது. 1000 மாணவர்கள், 2000 இளைஞர்கள், 4000 பெண்கள், 2000 விவசாயிகள் என்று பார்வையாளர்களை சப்ளை செய்யும் ஈவென்ட் மானேஜ்மென்ட் நிறுவனங்கள் இனி கூட்டங்களை சப்ளை செய்யக்கூடும். செலவைக் குறைக்கும் பொருட்டு ஒரே கும்பல் வெவ்வேறு கட்சிகளின் தொண்டர்களாக வேடமும் அணியக்கூடும்.

தன் எதிரில் அமர்ந்திருப்பது விலைக்கு வாங்கப்பட்ட கூட்டம் என்பது மற்றெல்லோரைக் காட்டிலும் ஜெயலலிதாவுக்குத்தான் நிச்சயமாகத் தெரியும். ஜெயலலிதாவின் பேச்சுக்கு கூட்டம் எப்படி கைதட்டியது என்பதை ஊடகங்கள் விளக்கியிருந்தன. பேச்சுக்கு இடையில் “இந்த இடத்தில் கை தட்டு” என்று உத்தரவிடுவதைப் போல ஜெயலலிதா ஒரு இடைவெளி விடுகிறார். உடனே மேடையிலேயே நின்று கொண்டிருக்கும் ஒரு நபர் தலைக்கு மேலே கையை உயர்த்தி கை தட்டிக் காண்பிக்கிறார். அதனைத் தொடர்ந்து கூட்டம் கைதட்டுகிறது.

வருங்காலத்தில், கோடம்பாக்கம் ஏஜென்டுகள் மூலம் சினிமா துணை நடிகர்கள் சில நூறு பேரை முன் வரிசையில் அமரவைத்து அவர்கள் சிரிப்பதையும் அழுவதையும் கைதட்டுவதையும் படம்பிடித்து தொலைக்காட்சிகளில் காட்டக்கூடும். துணை நடிகர்களை டாக்டர்களாகவும் நோயாளிகளாகவும் நடிக்க வைத்து, மருத்துவக் கல்லூரிக்கு அங்கீகாரம் பெற முடியும்போது இது எம்மாத்திரம்?

தங்களது டாக் ஷோக்களுக்கு பார்வையாளர்களை வாடகைக்கு எடுக்கும் தொலைக்காட்சிகளுக்கு, இந்தக் கூட்டம் போலி, கைதட்டல் போலி என்று தெரியும். இருப்பினும் நேரலை ஒளிபரப்பு, உணர்ச்சிகரமான தொகுப்புரைகள், விவாதங்கள் போன்றவை மூலம் பொய்மையை அவர்கள் உண்மையாக்குகிறார்கள். போலிகளின் இந்த அணிவகுப்பில், போலி வாக்காளர்களையும் சேர்ப்பது எந்த விதத்தில் குற்றமாகும் என்பதுதான் ஜெயலலிதா கேட்க விரும்பும் கேள்வி.

“பணம் கொடுத்து கூட்டத்துக்கு ஆள் பிடிப்பது முறைகேடில்லையா?” என்று தேர்தல் ஆணையத்திடம் கேட்டதற்கு, “அது வேட்பாளரின் செலவு கணக்கில் சேர்க்கப்படும்” என்று பதிலளித்திருக்கிறது ஆணையம். அதாவது குவார்ட்டர்- சிக்கன் பிரியாணி- பணம் கொடுத்துக் கூட்டம் சேர்ப்பதை அங்கீகரிக்கப்பட்ட ஜனநாயக முறையாக தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டு விட்டது. இருந்த போதிலும் இந்த ‘பிரியாணி ஜனநாயகத்தில்’, பணம் கொடுத்து ஓட்டு வாங்குவதை மட்டும் ஆணையத்தால் அதிகாரபூர்வமாக ஒப்புக் கொள்ள முடியவில்லை. விசித்திரம்தான்!

விலை பேசப்படும் வாக்குகளுக்கும் விலையில்லா திட்டங்களுக்கும் இடையில், இருபது டன் ஏ.சிக்கும் 108 டிகிரி வெயிலுக்கும் இடையில், “உனக்கு என்ன வேண்டுமென்று எனக்குத் தெரியும்” என்று கூறும் அம்மாவுக்கும், ‘தமக்கு என்ன வேண்டும்’ என்று தெரியாத மக்களுக்கும் இடையில் நசுங்கிக் கொண்டிருக்கிறது இந்த ‘ஜனநாயகம்’. நசுங்கிச் செத்து விட்டார்கள் பொதுமக்களில் 5 பேர்.

– புதிய ஜனநாயகம் – மே 2016 இதழ் தலையங்கம்

 1. அது என்ன ஜெயா பிரியாணி?
  “ஆத்தா” பிரியாணினு சொல்லு…
  நத்தம்,ஓபியெஸ் வகையறா பைல்ஸ் வந்து அவதிப்படுவான்

 2. சூடு,சொரணை,வெட்கம்,மானம் இதையெல்லாம்
  தமிழன் விரட்டியடித்து நீண்ட நாட்களாகி விட்டது.
  இந்த சதிகாரி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டை
  ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது.
  இறை பக்தியுள்ள நடுநிலையாளர்கள் நாத்திகர்கள் ஆவதையும்தான்.

 3. பணத்தை விரும்பினால் எப்படியும் பெறவேண்டும் என்ற எண்ணம்தான் வரும், அதைவிரும்புபவர்கள் எதையும் செய்வார்கள் ஆனால் ஒன்று இவர்கள் மாட்டிகொல்வார்கள் என்பது உண்மை. ஏனென்றால் நீதிதான் வெல்லும் கடைசியில் வாழ்வு முழுவது முடிந்தபின் தோற்றுவிட்டதை அவர்களால் சொல்லமுடியாது ஆனால் மக்கள் சொல்லுவார்கள் அதுதான் மகேசன் தீர்ப்பு.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க