Monday, October 14, 2024

மக்களின் பணம் ! மல்லையாவின் அரசு !!

-

ஒரத்தூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி அழகர்
வங்கிகளின் கெடுபிடி, அவமானப்படுத்தல்களால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட அரியலூர் மாவட்டம் ஒரத்தூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி அழகர்

ங்கிகளில் கடன் பெற்று மோசடியில் ஈடுபடுவோர் யாரும் தப்ப முடியாது என்று பிரதமர் மோடி சவடால் அடித்துக் கொண்டிருக்கும்போதுதான், வங்கிகளில் 9 ஆயிரம் கோடியை ஏப்பம் விட்ட தரகுப் பெருமுதலாளி விஜய் மல்லையா வெளிநாட்டில் பதுங்கியிருந்துகொண்டு இந்திய அரசுக்கு பெப்பே காட்டிக் கொண்டிருக்கிறார்.

விஜய் மல்லையாவுக்கு ரூ. 7,500 கோடிகளை அள்ளிக் கொடுத்து, அக்கடனுக்கான வட்டியுடன் சேர்த்து இன்று 9 ஆயிரம் கோடியாகிவிட்ட நிலையில், இவ்வளவு பிரம்மாண்டமான தொகையை கடந்த 2012லிருந்தே அவர் திருப்பிச் செலுத்தாமல் இழுத்தடித்து வந்துள்ள நிலையில், அவர் நாட்டை விட்டு ஓடிவிடாமல் இருக்க உத்தரவிட வேண்டுமென்று 17 பொதுத்துறை வங்கிகள் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டன. ஆனால், அதற்கு முன்பே அவர் நாட்டைவிட்டுத் தப்பியோடிவிட்டார்.

அவரது பாஸ்போர்ட் முடக்கப்பட்டு, பிணையில் வெளிவர முடியாத பிடியாணை நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்டு, அவரை இந்தியாவிற்குக் கொண்டுவரும் நடவடிக்கைகளை எடுத்து வருவதாக அரசு காட்டிக் கொள்கிறது. உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் தன் பெயரிலும் தனது குடும்பத்தினர் பெயரிலும் உள்ள சொத்துக்கள், பங்குகள் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் வங்கிகளிடம் மல்லையா ஒப்படைக்க வேண்டும்; பெங்களூரிலுள்ள கடன் வசூல் தீர்ப்பாயம் இதனைப் பரிசீலித்து 2 மாதத்தில் முடுவெடுக்க வேண்டும் என கடந்த ஏப்ரல் இறுதியில் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி எம்.சுப்பிரமணியன்
வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி எம்.சுப்பிரமணியன்

மல்லையாவின் மோசடி அம்பலமான அதேநேரத்தில்தான், தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த பாலன் என்ற விவசாயி, டிராக்டர் வாங்கிய கடனுக்கான தவணையைச் செலுத்தாத குற்றத்துக்காக வங்கியின் அடியாட்களாலும் போலீசாராலும் தாக்கப்பட்டார். வங்கிகளின் கெடுபிடிகளாலும் அவமானப்படுத்தல்களாலும் அரியலூர் மாவட்டம் ஒரத்தூர் கிராமத்தைச் சேர்ந்த அழகர், உசிலம்பட்டி பால்ராஜ், கும்பகோணத்தை அடுத்த கொத்தங்குடியைச் சேர்ந்த தனசேகர், மேட்டுப்பாளையம் அருகே தேவாங்குபுரத்தைச் சேர்ந்த ராமசாமி ஆகிய விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

விவசாயிகள் மட்டுமின்றி, சிறுதொழில் தொடங்கக் கடன் வாங்கிவிட்டு அதனைக் கட்டத் தவறுபவர்கள், கல்விக் கடன் கட்டாத மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் பெயர்களையும் புகைப்படங்களையும் பிளக்ஸ் பேனரில் கட்டி பொதுத்துறை வங்கிகள் அவமானப்படுத்துகின்றன. கல்விக் கடனைத் திருப்பிச் செலுத்தாதவர்கள் வங்கி ஊழியர் வேலைக்கான ஆள்சேர்ப்பு தேர்வைக்கூட எழுத முடியாதபடி தடை விதித்து, அவர்களது எதிர்காலத்தையே முடமாக்குகின்றன.

ஒரு ஆடம்பரக் கார் வாங்க 8%வட்டியில் கடன் கொடுக்கும் வங்கிகள், ஒரு விவசாயி டிராக்டர் வாங்க 14% வட்டி வசூலிக்கின்றன. வங்கியில் கடன் கிடைக்காமல் கந்துவட்டிக்குக் கடன் வாங்கி பல சிறு முதலாளிகள் தொழில் நடத்திக் கொண்டிருக்கும்போது, பொதுத்துறை வங்கிகள் போட்டி போட்டுக் கொண்டு கார்ப்பரேட் முதலாளிகளுக்கு 5% வட்டிக்குத் தாராளமாகக் கடன் கொடுக்கின்றன.

விவசாயிகளைத் தற்கொலைக்குத் தள்ளும் வங்கிகளின் அடாவடித்தனத்தை எதிர்த்து
கெடுபிடி அவமானப்படுத்தல்களால் விவசாயிகளைத் தற்கொலைக்குத் தள்ளும் வங்கிகளின் அடாவடித்தனத்தை எதிர்த்து திருவெண்ணெய்நல்லூர் வட்ட விவசாயிகள் விடுதலை முன்னணி 19-03-2016 அன்று நடத்திய ஆர்ப்பாட்டம்.

இந்தத் தாராளமயம்தான் வாராக்கடன்களும் மோசடிகளும் பெருகிக் கொண்டே போவதற்கு அடிப்படையான காரணமாக உள்ளது. மல்லையா ரூ. 9,000 கோடி கடனை ஏப்பம் விட்டிருப்பது போதாதென்று, இவரைப் போல இன்னும் நூற்றுக்கணக்கான தரகு முதலாளிகள் பொதுத்துறை வங்கிகளிடம் பல்லாயிரம் கோடிகளைக் கடனாக வாங்கிவிட்டு, இன்னமும் திருப்பிச் செலுத்தாமல் உள்ளனர். பொதுத்துறை வங்கிகளின் வாராக்கடன் கடந்த 9 மாதங்களில் மட்டும் ரூ. 94,666 கோடி அதிகரித்து மொத்தத்தில் ரூ. 3.61 லட்சம் கோடியாகிவிட்டது. மக்களின் சேமிப்பாகவும் முதலீடாகவும் வங்கிகளில் திரண்டுள்ள செல்வத்தை முதலாளிகள் ஏப்பம் விடுவதோடு, இந்த விவகாரம் முடிந்துவிடவில்லை. பொதுத்துறை வங்கிகள் வாராக்கடனால் திவாலாகும் நிலைக்குத் தள்ளப்படுகின்றன. பொதுத்துறை வங்கிகளின் வாராக் கடன் அதிகரித்துக் கொண்டே செல்வதைக் காட்டி, அவற்றைத் தனியார்மயப்படுத்தும் தனது சதித் திட்டத்தை நிறைவேற்றிக் கொள்ளத் துடிக்கிறது அரசு.

வங்கிகளில் கடன் வாங்கி ஏப்பம் விட்ட கார்ப்பரேட் முதலாளிகளோ தங்களது மோசடியை மூடிமறைக்க, பொருளாதார நெருக்கடி, சந்தையில் மந்தம், தொழிலில் நட்டம் என்று பிலாக்கணம் பாடுகிறார்கள். ஆனால் இப்படி நட்டமடைந்துவிட்ட எந்த முதலாளியும் தெருவில் பிச்சை எடுத்துக் கொண்டு அலையவில்லை. மானத்துக்கு அஞ்சி விவசாயிகளைப் போல தற்கொலை செய்து கொள்வதுமில்லை.

வங்கிகளின் அடாவடித்தனம்
கல்விக்கடனைச் செலுத்தத் தவறிய மாணவர்களின் படங்களை பிளக்ஸ் பேனர் கட்டி அவமானப்படுத்தும் வங்கிகளின் அடாவடித்தனம்

“முன்பு பெட்ரோல் விலை உயர்ந்திருந்ததால் எனது நிறுவனத்தின் பங்குகளின் மதிப்பு அதிகமாக இருந்தது. இப்போது சர்வதேசச் சந்தையில் பெட்ரோல் விலை குறைந்துவிட்டதால் பங்குகளின் மதிப்பும் குறைந்து நட்டமாகிவிட்டது. இதற்கு நான் காரணமல்ல” என்று நியாயவாதம் பேசுகிறார் விஜய் மல்லையா. “இன்று கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள நிலையில் மல்லையாவின் கிங் பிஷர் விமானப் போக்குவரத்து நிறுவனம் செயல்பட்டிருந்தால் லாபத்தை ஈட்டியிருக்க முடியும். ஆனால், முன்பு விலை அதிகமாக இருந்த சூழலில் எப்படி லாபம் கிடைக்கும்? இதனால் அவரது தொழில் நட்டமாகியது. இது மல்லையா செய்த தவறு என்று கூற முடியுமா?” என்று எண்ணெய் விலை சரிவின் மீது சில முதலாளித்துவப் பொருளாதாரவாதிகள் பழி போடுகிறார்கள்.

“ மல்லையாவின் கிங் பிஷர் போலவே, ஏர் இந்தியா எனும் அரசு விமானப் போக்குவரத்து நிறுவனமும் நட்டமடைந்துள்ளது. நட்டமடைந்த மல்லையா வங்கிப் பணத்தைச் சுருட்டிவிட்டார் என்று குற்றம் சாட்டுவது சரியென்றால், நட்டமடைந்த ஏர் இந்தியா மக்களின் வரிப்பணத்தைச் சுருட்டி விட்டது என்று கூறுவதும் நியாயம்தான்” என்று சிலர் எதிர்வாதம் செய்கிறார்கள்.

ஒரு முதலாளி நட்டமடைந்து வாங்கி கடனைத் திருப்பிச் செலுத்தாவிட்டால், அவரை மோசடிப் பேர்வழி என்று குற்றம் சாட்டி, நெருக்கடி கொடுப்பது தவறான உத்தி என்கிறார் இன்போசிஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிதி அதிகாரியான மோகன்தாஸ் பாய். வங்கிக் கடனை வசுலிக்க இது போன்று நெருக்கடி கொடுத்தால், அது இந்தியப் பொருளாதாரத்துக்கே நெருக்கடியாகிவிடும் எனப் பயமுறுத்துகிறார்கள் முதலாளித்துவ பொருளாதார நிபுணர்கள்.

mallya-bank-money-7நிதியமைச்சர் அருண் ஜெட்லியோ, இன்று 5 தொழில் துறைகள் தேக்க நிலையில் இருப்பதாகவும் இதனால் வாராக்கடன் பிரச்சினையை நெளிவுசுழிவாகத்தான் கையாள வேண்டுமென்கிறார். ரூ.500 கோடிக்கு மேல் கடன் வாங்கி திருப்பிச் செலுத்தாதவர்களின் பட்டியலை வெளியிட்டால், பொருளாதாரத்தில் நிலைகுலைவு ஏற்படும் என்று எச்சரிக்கிறது ரிசர்வ் வங்கி.

இவர்கள்தான் “அரசாங்கத்திடம் தொழில் நடத்துவற்கான திறமை கிடையாது, தனியார் முதலாளிகளிடம்தான் தொழில் முனைப்பும் திறமையும் அனுபவமும் இருக்கிறது” என்று வாதிட்டு, ஆட்சியாளர்களின் தனியார்மய நடவடிக்கைகளை ஆதரித்தனர். இப்போது தனியார் கார்ப்பரேட் முதலாளிகள் பொதுத்துறை வங்கிகளில் கடன் வாங்கி ஏப்பம் விட்ட பிறகு, தொழிலில் நட்டம் ஏற்பட்டுள்ள நிலையில் வங்கிகள் கடனைத் திருப்பிக் கேட்கக் கூடாது என்கிறார்கள். கடனைச் செலுத்துமாறு நெருக்குதல் கொடுத்தால் தொழிற்சாலைகளை மூட வேண்டிய நிலைதான் ஏற்படும் என்று மிரட்டுகிறார்கள். மீட்டர் வட்டிக்குக் கடன் வாங்கி தொழில் நடத்தும் சிறு தொழில் முதலாளிகள் இப்படி பேச முடியுமா?

தொழிலதிபர் விஜய் மல்லையா
பொதுத்துறை வங்கிகளிடமிருந்து ரூ. 9,000 கோடி கடன் வாங்கி ஏப்பம் விட்ட சீமைச்சாராயத் தொழிலதிபர் விஜய் மல்லையா

சாராய முதலாளியான விஜய் மல்லையா நடத்திவந்த கிங் பிஷர் விமானப் போக்குவரத்து நிறுவனத்துக்கு ரூ. 7,500 கோடி கடன் கொடுத்த பொதுத்துறை வங்கிகள், அந்த நிறுவனம் தள்ளாடத் தொடங்கியதும், அந்நிறுவனம் உடனடியாகத் திருப்பிச் செலுத்த வேண்டிய ரூ. 1,600 கோடியை ரொக்கமாகப் பெற்றுக் கொள்ளாமல், அந்நிறுவனத்தின் பங்குகளாகப் பெற்றுக் கொண்டன. அதுவும் அப்பங்குகளின் சந்தை விலையைவிட கூடுதலான விலைக்கு வாங்கிக் கொண்டன. இது மட்டுமின்றி, அந்நிறுவனத்தின் கடனும் ‘மறு ஒழுங்கமைப்பு’ செய்யப்பட்டது. இப்போது விஜய் மல்லையாவின் கிங் பிஷர் நிறுவனம் திவாலாகிவிட்டது. கடன் கொடுத்த வங்கிகளோ, தாங்கள் கொடுத்த கடனுக்கு ஈடாக திவாலாகிப் போன கிங் பிஷர் நிறுவனத்தின் காகிதப் பங்குகளை வைத்துக் கொண்டு கையைப் பிசைந்து கொண்டிருக்கின்றன. அந்நிறுவனத்தின் இதர சொத்துக்களும் ஏலத்தில் விலை போகாததால் நட்டமடைந்து நிற்கின்றன.

அரசு வங்கிகள் கோடிக்கணக்கில் கடனைக் கொடுக்கும்; அரசு சந்தையை ஏற்படுத்திக் கொடுப்பதோடு, இலாப உத்திரவாதத்தையும் செய்து கொடுக்கும். இதன் பிற்பாடு தொழிலில் இலாபம் பார்த்து முன்னேற்றத்தைச் சாதித்துவிட்டதாக கார்ப்பரேட் முதலாளிகள் காட்டிக் கொள்வதும், நட்டம் வந்தால் அதை அரசாங்கம்தான் ஏற்க வேண்டுமென்று கையை முறுக்கிக் காரியம் சாதித்துக் கொள்வதும்தான் திரும்பத் திரும்ப நடந்து கொண்டிருக்கிறது. இதுதான் பெருமையாகச் சித்தரிக்கப்படும் முதலாளித்துவத்தின் பராக்கிரமம்.

இதேபோல, தனது அனல் மின் நிலையத்தின் மூலம் மாநில அரசுக்கு மின்சாரத்தை விற்று வந்த டாடா பவர் நிறுவனம், தற்போது நிலக்கரியின் சர்வதேச விலை உயர்ந்துவிட்டதால், தனது மின்சாரத்துக்குக் கூடுதல் விலை தரவேண்டுமெனக் கோரியது. “மின்சாரத்தின் விலையைக் கூட்டித்தர மறுத்தால், மின் நிலையத்தை மூடிவிடுவோம்; இதனால் மாநில மின்வாரியத்துக்கு மின்சாரம் கிடைக்காமல் போகும்; அது மட்டுமின்றி, எங்களுக்குக் கடன் கொடுத்த பொதுத்துறை வங்கிகளும் திவாலாகிப் போகும்” என்று மிரட்டியது. இதனால் டாடா போன்ற தனியார் மின் உற்பத்தி நிலையங்களுக்கு பல லட்சம் கோடி ரூபாய் கடன் கொடுத்துள்ள பொதுத்துறை வங்கிகள், தாங்கள் திவாலாகாமல் இருக்க வேண்டுமானால், மின் கட்டணத்தை உயர்த்துமாறு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் முறையிடுகின்றன.

இதுதான் தனியார்மயத்தின் மகிமை. ஊழல், கொள்ளை, மோசடிகளின் ஊற்றுமூலமே தனியார்மயம்- தாரளமயம்தான். இந்த உண்மையை மக்கள் புரிந்து கொண்டு போராடும்போதுதான் மல்லையா போன்ற மோசடி முதலாளிகளையும் அதற்கு துணை நின்ற ஆட்சியாளர்களையும் தண்டிக்க முடியும். காரப்பரேட் முதலாளித்துவக் கொள்ளையை முறியடிக்கவும் முடியும்.

– மனோகரன்
___________________________
புதிய ஜனநாயகம், மே 2016
___________________________

  1. நூறு சதம் நட்டம் ஆகாத தொழில் என்று ஒன்று கண்டு பிடிக்க படவில்லை .
    சோசியலிச வங்கிகள் கடன் கொடுத்தது தான் பிரச்சினையே .

    தனியார் வங்கி கடன் என்றால் நட்டம் முதலீட்டாளர்களுக்கு .ஆனால் போலி சோசியலிச வங்கிகளில் லாபம் முதலீட்டலர்களுக்கு நட்டம் அரசாங்கத்திற்கு அதாவது மக்களுக்கு .

    இது தனியார் துரையின் பிரச்சினை அல்ல , மிச்சம் மீதி இருக்கும் சொசியளிசதின் வடுக்கள் ஏற்படுத்தும் வலி எனலாம்

  2. என் கட்சிக்காரன் மல்லைய்யா என்ன தப்பு பண்ணிட்டான்?
    9000 கோடி கட்டணும் சரி
    …யார் இல்லைன்னா-
    அவனோட தொந்தியில பூணூல் தொங்கறது உங்க கண்ணுக்கு தெரியலியா…
    பூணூல் கிட்ட கடன் வசூல் பண்ணினா .
    ..அது தெய்வ குத்தம்…
    அருன் ஜெட்லி சத்தியமா…சாமி குத்தம்!

  3. ராம ராஜியத்தின் மிச்சசொச்சங்கள்தான் மேற்கண்ட களிமண்ணாங்கட்டி ராமன்கள் போல் தெரிகிறது.எந்த முதலாளி நட்டமடைந்து தெருவில் பிச்சை எடுத்துக்கொண்டிருக்கிறான்?மக்கள்தான் இவர்களால் பிச்சைக்காரர்கள் ஆகியிருக்கிறார்கள்.திவால் முதலாளிகள்கூட சொகுசாகத்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க