Monday, June 17, 2024
முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்அதிகாரத்தைக் கேள்விக்குள்ளாக்கிய போராட்டங்கள்

அதிகாரத்தைக் கேள்விக்குள்ளாக்கிய போராட்டங்கள்

-

விஜய் மல்லையாவின் திருட்டுக்கு உடந்தையாக இருக்கும் இந்த அரசை அம்பலப்படுத்தும் வகையில் அற்புதமானதொரு போராட்டத்தை நடத்தியிருக்கிறார், மும்பை நகரைச் சேர்ந்த பிரேமலதா பன்சாலி என்ற பெண்.

பிரேமலதா பன்சாலி மார்ச் 22-ம் தேதியன்று மும்பை புறநகர் ரயிலில் வேண்டுமென்றே பயணச்சீட்டு எடுக்காமல் பயணம் செய்தார். பயணச்சீட்டு ஆய்வாளர் 260 ரூபாய் அபராதம் விதிக்க, அதனைக் கட்ட முடியாது என்று கூறிய பன்சாலி, “மல்லையாவிடம் 9,000 கோடி ரூபாயை வசூல் செய்யத் துப்பில்லாத அரசுக்கு என்னிடம் அபராதம் கேட்க என்ன அருகதை இருக்கிறது?” எனத் திருப்பி அடித்தார். நிலைய அதிகாரி முதல் ரயில்வே பாதுகாப்பு படை அதிகாரிகள் வரை அனைவரும் அவரிடம் பேசிப் பார்த்தனர்; பன்சாலியின் கணவரைத் தேடிப் பிடித்து அழைத்து வந்து சமாதானம் பேச முயன்றனர். எதற்கும் பன்சாலி மசியவில்லை.

பிரேமலதா பன்சாலி
பிரேமலதா பன்சாலி

“இக்குற்றத்துக்கு 1,500 ரூபாய் அபராதம் போட வேண்டும். மனிதாபிமான அடிப்படையில் 460 ரூபாயாகக் குறைக்கிறேன். கட்டாவிடில், ஒரு வாரம் சிறைத் தண்டனை” என நைச்சியமாக மிரட்டிப் பார்த்த நீதிபதியிடம், “ஆறு மாதமோ, ஒரு வருடமோ சிறைக்கு அனுப்புங்கள். நான் பணம் கட்ட மாட்டேன். மல்லையாவிடம் பணத்தை வசூல் செய்யுங்கள் பார்ப்போம். ஏழைகள் என்றால் உங்களுக்கெல்லாம் கிள்ளுக்கீரையா?” என்று கேள்வி எழுப்பி சிறை வாசத்தை அனுபவித்திருக்கிறார் பன்சாலி. இந்தச் செய்தி ஊடகங்கள் அனைத்திலும் வெளிவந்து, அதிகார வர்க்கத்தையும் ஆளும் வர்க்கத்தையும் நெளியச் செய்திருக்கிறது.

பன்சாலி, ஒரு மேல்தட்டு நடுத்தர வர்க்கப் பெண். இரண்டு குழந்தைகளின் தாய். தன்னைச் சுற்றி நடக்கும் நாட்டு நடப்புகளைப் பார்த்துக் கொதிப்படைந்து, தனக்குப் புரிந்த நியாயத்தை எல்லோருக்கும் புரிய வைக்க முயன்றிருக்கிறார். “இந்த நாட்டில் பணக்காரனைக் கட்டுப்படுத்த எந்தச் சட்டமும் கிடையாது. எல்லா சட்டமும் ஏழைக்குத்தான். அவன் மதிக்காத சட்டத்தை நான் ஏன் மதிக்க வேண்டும்” என்பதுதான் பன்சாலி எழுப்பியிருக்கும் கேள்வி. அந்தக் கேள்வியின் நியாயம்தான் ரயில்வே அதிகாரிகள் முதல் நீதிமன்றம் வரையில் அனைவரையும் தடுமாற வைத்திருக்கிறது. இவர்களுடைய சட்டத்தில் நியாயம் இல்லை என்பதை அம்பலமாக்கியிருக்கிறது.

ஒரத்தநாடு விவசாயி போலீசால் தாக்கப்பட்ட சம்பவத்துடன் இதனை ஒப்பிட்டுப் பாருங்கள். இச்சம்பவத்தை மல்லையா விவகாரத்துடன் ஒப்பிட்டுப் பலரும் எழுதினர். கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. விசயம் நியாயப்படுத்த முடியாத அளவுக்கு அம்பலமாகவே, வங்கி பின்வாங்கியது. ஆனால், அந்தப் பிரச்சினை விவசாயிகள் என்ற வர்க்கத்தின் பிரச்சினையாக எழும்புவதற்குப் பதிலாக, ஒரு தனிப்பட்ட விவசாயி விசயத்தில், தனிப்பட்ட ஒரு வங்கிக்காக, தனிப்பட்ட ஒரு போலீசு அதிகாரி நடத்திய அத்துமீறலாக முடிந்து விட்டது.

ஒரத்தநாடு விவசாயி தாக்கப்பட்ட விவகாரமாகட்டும், மல்லையா தப்பியோடிய விவகாரமாகட்டும், முத்துக்குமாரசாமி, விஷ்ணுப்பிரியா தற்கொலைகளாகட்டும், எஸ்.வி.எஸ். கல்லூரி மாணவிகளின் மர்ம மரணமாகட்டும் – இவையனைத்தும், இந்த அரசமைப்பின் தோல்வியை வெவ்வேறு விதங்களில் பறைசாற்றுகின்றன. குடிநீர், மின்சாரம், மருத்துவம் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளுக்காக அதிகரித்துவரும் போராட்டங்களை அதிகார வர்க்கம் கண்டு கொள்வதில்லை. புறக்கணிக்க வேண்டும் என்பதற்காகவே ஊருக்கு ஒதுக்குப்புறமான இடங்கள் போராட்டத்துக்காக ஒதுக்கப்படுகின்றன.

பெங்களுரு ஆயத்த ஆடை தொழிலாளர் போராட்டம்
2. தொழிலாளர்களின் ஓய்வூதிய நிதியைத் திரும்ப்ப் பெறுவதில் செய்யப்பட்ட மாறுதல்களை எதிர்த்து, அரசை நிலைகுலையச் செய்யும் வண்ணம் நடந்த பெங்களுரு ஆயத்த ஆடை தொழிலாளர் போராட்டம்

இந்தப் புறக்கணிப்பை மீறித் தங்களது கோரிக்கையின்பால் அரசின் கவனத்தையும் ஊடகங்களின் கவனத்தையும் ‘ஈர்க்க வேண்டும்’ என்பதற்காக மொட்டை போடுதல், கரும்புள்ளி செம்புள்ளி குத்துதல், ஒப்பாரி உள்ளிட்ட சுயமரியாதைக் கேடான வடிவங்களில் ‘போராட்டங்கள்’ நடத்தப்படுகின்றன. இத்தகைய ‘வித்தியாசமான’ போராட்டங்களும் நாளடைவில் ஊடகங்களின் பார்வையிலேயே வித்தியாசமற்றவை ஆகிவிடுவதால், ஊடகங்களும் இவற்றைப் புறக்கணிக்கின்றன. புறக்கணிப்பால் மனம் நொந்து போகின்ற சசி பெருமாள் போன்றவர்கள் அலைபேசிக் கோபுரத்தில் ஏறுகிறார்கள். எஸ்.வி.எஸ். கல்லூரி மாணவர்கள் நஞ்சருந்தி தற்கொலைக்கு முயற்சிக்கிறார்கள். பலர் தீக்குளிக்கிறார்கள்.
அரசின் கவனத்தை “ஈர்ப்பதற்குத்தான்” போராட்டங்கள் என்று கருதிக் கொண்டிருப்போர் சிந்திக்க வேண்டும். எஸ்.வி.எஸ். கல்லூரிக் கொள்ளை, டாஸ்மாக், முத்துக்குமாரசாமியை சாவுக்குத் தள்ளிய இலஞ்சம் ஆகிய அனைத்தும் அரசாலும் ஆட்சியாளர்களாலும் தெரிந்தே இழைக்கப்படும் குற்றங்களல்லவா? குற்றவாளியான இந்த அரசின் கவனத்தை ஈர்த்து என்ன பயன்? இந்த அரசையும் அரசுக் கட்டமைவையும் அம்பலப்படுத்தும் வகையிலான போராட்டங்களை, அதன் அதிகாரத்தைக் கேள்விக்குள்ளாக்கும் வகையிலான போராட்ட வடிவங்களை நாம் கண்டறிய வேண்டும். பிரேமலதா பன்சாலியின் போராட்டம் அந்த வகையில் நமக்கு ஒரு எடுத்துக்காட்டு.

பெங்களுரு ஆயத்த ஆடை தொழிலாளர் போராட்டம்
2. தொழிலாளர்களின் ஓய்வூதிய நிதியைத் திரும்ப்ப் பெறுவதில் செய்யப்பட்ட மாறுதல்களை எதிர்த்து, அரசை நிலைகுலையச் செய்யும் வண்ணம் நடந்த பெங்களுரு ஆயத்த ஆடை தொழிலாளர் போராட்டம்

ஏப்ரல் 18, 19 தேதிகளில் நடைபெற்ற பெங்களூரு ஆயத்த ஆடைத் தொழிலாளர்களின் போராட்டம் தொழிலாளி வர்க்கத்தின் இயல்பான போர்க்குணத்துக்கு ஒரு சான்று. “பத்து ஆண்டுகள் பணியாற்றிய பின் ஆட்குறைப்பினால் வெளியேற்றப்பட்ட ஒரு தொழிலாளி, அவருக்கு 58 வயது ஆகும் வரை அந்தப் பத்து ஆண்டுகளில் தனது வருங்கால வைப்பு நிதியில் சேர்ந்திருக்கும் தொகையை எடுக்க முடியாது” என்றொரு விதியை மோடி அரசு அறிமுகப்படுத்தியது.

தொழிலாளிகள் தங்களது சேமிப்பை எடுத்து செலவு செய்து விட்டு கடைசி காலத்தில் வறுமையில் வாடுவதால், அவர்களது வருங்கால நலனைக் கணக்கில் கொண்டுதான் இத்திருத்தத்தை கொண்டு வந்ததாகக் கூறியது மோடி அரசு. இந்த திருத்தத்தின்படி, ஒரு தொழிலாளி எத்தனை கம்பெனி மாறினாலும் அவரது வைப்பு நிதிக் கணக்கு 58 வயது வரை மாறாது. 40 வயதுக்கு மேல் வேலையே கிடைக்காமல் போனாலும் 58 வயது வரை தன்னுடைய சேமிப்பை அவர் எடுக்க முடியாது என்பதுதான் இந்த விதி.

ஏற்கெனவே தொழிலாளர்களுக்கான வைப்பு நிதியில் தம் பங்கை செலுத்தாத முதலாளிகளுக்கு சலுகை செய்யவும், தொழிலாளிகளின் சேமிப்புப் பணத்தை தன் கையிருப்பாக வைத்துக் கொண்டு திவாலாகிக் கொண்டிருக்கும் அரசு கஜானாவைக் காப்பாற்றிக் கொள்ளவும் போடப்பட்டிருக்கும் இந்த அயோக்கியத்தனமான திட்டத்தை எதிர்த்துத்தான் பெங்களூரு ஆயத்த ஆடை தொழிலாளிகள் கிளர்ந்தெழுந்தார்கள்.

சுமார் 8 இலட்சம் ஆயத்த ஆடை தொழிலாளிகளைக் கொண்ட பெங்களூரு நகரில், ஒசூர் சாலை, எலக்ட்ரானிக் சிட்டி, மைசூரு சாலை உள்ளிட்ட சாலைகள் அனைத்தும் தொழிலாளர்களால் நிரம்பின. தொழிலகங்கள் நொறுங்கின. பேருந்துகள் எரிந்தன, போலீசு நிலையமும் எரிந்தது. துப்பாக்கிச் சூடு நடந்தது. நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர்.

ஆனால், இந்த விதியை அமல்படுத்துவதை உடனே தள்ளி வைப்பதாக மறுநாளே மோடி அரசு அறிவிக்க வேண்டியதாயிற்று. காரணம், போராட்டத் தீ நாடெங்கும் பரவி விடுமோ என்ற அச்சம். “தொழிலாளிக்கு ஒரு வேலையும், பணிப் பாதுகாப்பும், நியாயமான ஊதியமும் தர வக்கில்லாத அரசுக்கு, என்னுடைய எதிர்காலத்தைப் பற்றிப் பேச என்ன அருகதை இருக்கிறது?” என்ற ஒரு கேள்வியில் தங்களது போராட்டத்தின் நியாயத்தைக் கூறினார் ஒரு தொழிலாளி. மல்லையாவிடம் வசூலிக்கத் துப்பில்லாத அரசுக்கு என்னிடம் அபராதம் கேட்க என்ன அருகதை உள்ளது என்று கேட்டார் பன்சாலி.

பெங்களூரு தொழிலாளியும், மும்பை பன்சாலியும் எழுப்பும் கேள்விகளைத்தான் போராடும் மக்கள் கவனிக்கவேண்டும். இவைதான் நம் போராட்ட வடிவங்களைத் தீர்மானிக்க வேண்டும்.

– அஜீத்
___________________________
புதிய ஜனநாயகம், மே 2016
___________________________