ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்களுக்கான மின் உதிரிப் பொருட்களை தயாரித்து கொடுத்து வரும் தைவானைச் சேர்ந்த மின்னனு நிறுவனமான பாக்ஸ்கான் கிட்டத்தட்ட 60,000 சீனத் தொழிலாளர்களை வேலையை விட்டு நீக்கி அதற்கு பதிலாக தானியங்கி இயந்திரங்களை பயன்படுத்த இருக்கிறது.
சீனாவின் ஜியாங்சு மாநிலத்தின் குன்ஷான் பகுதியில் உள்ள தனது தொழிற்சாலையில் பணி புரியும் 1,10,0௦௦ தொழிலாளர்களை 50,000 மாக குறைத்துள்ள இந்நிறுவனம் இதற்கான ஒத்திகையை சில ஆண்டுகளுக்கு முன்பிருந்தே செய்து வந்திருக்கிறது.
கடுகளவு கூட இலாபத்தை குறைக்க விரும்பாமல் கூடு விட்டு கூடு பாய்ந்து கொண்டு இருக்கும் முதலாளித்துவம் கடைசியாக தொழிலாளர்கள் உயிர் வாழ்வதற்கு தேவையான குறைவான கூலியைக் கூட தரத் தயராக இல்லாத நிலையில் தானியங்கி இயந்திரங்களிடம் தஞ்சம் புகுந்து உள்ளது.
சீனாவில் உள்ள பாக்ஸ்கான் உள்ளிட்ட 600 மின்னணு நிறுவனங்கள் கடந்த சில ஆண்டுகளாக தானியங்கி தொழில்நுட்பத்தில் அதிக அளவு முதலீடு செய்து வருகின்றன. குறிப்பாக கடந்த 2014-ம் ஆண்டில் மட்டும் கிட்டத்தட்ட 4.74 பில்லியன் ஹாங்காங் டாலர்களை முதலீடு செய்து உள்ளன.
கடந்த 2014-ம் ஆண்டில் குன்ஷான் பகுதியில் உள்ள ழோங்க்ராங் (Zhongrong) என்ற உலோக உற்பத்தி நிறுவனத்தில் ஏற்பட்ட கொடூரமான வெடி விபத்தில் குறைந்து 147 தொழிலாளர்கள் படுகொலை செய்யப்பட்டதுடன் நூறுக்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். நகரின் பணிப்பாதுகாப்பு கட்டுப்பாட்டு அமைப்பு தொடர்ச்சியாக பாதுகாப்பு எச்சரிக்கை விட்டுள்ளதை இந்நிறுவனம் கிஞ்சித்தும் மதிக்காதது குறிப்பிடத்தக்கது.
இந்த துரோகத்தின் வெந்தபுண் இன்னும் ஆறாத நிலையில் பாக்ஸ்கான் நிறுவனத்தின் இந்த கொடுஞ்செயல் அந்த புண்ணின் மீது வேலை பாய்ச்சுவதாக உள்ளது.
தமது நிறுவனத்தில் தானியங்கி தொழில்நுட்பத்தை தொடர்ச்சியாக நடைமுறைபடுத்த முடிவு செய்திருப்பதாக கூறியுள்ள இந்நிறுவனம் குறைந்த கூலியை கோரும் உற்பத்திப் பிரிவில் மட்டும் கணிசமான தொழிலாளர்களை தொடர்ந்து வைத்திருக்க போவதாக கூறியுள்ளது.
ஒரே மாதிரியான மீண்டும் மீண்டும் செய்ய கூடிய வேலைகளுக்கு தானியங்கித் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது மட்டுமின்றி பணியாளர்களை, உற்பத்தி முறையில் மதிப்பு கூட்டும் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி, செயல்முறை கட்டுப்பாடு மற்றும் தரக் கட்டுப்பாடு ஆகிய துறைகளில் ஈடுபட பயிற்சி அளித்து வருவதாகவும் அறிவித்து உள்ளது.
ஆப்பிளின் ஐ.பேட் மற்றும் ஐ.போனுக்கான மின்னணு உதிரிப் பாகங்களை தயாரிக்கத் தொழிலாளர்களை கசக்கிப் பிழிந்து வேலை வாங்கும் இந்நிறுவனத்தின் வேலைக் கொடுமை காரணமாக தொழிலாளர்கள் பலர் தற்கொலைகளை செய்திருப்பது வரலாறாகும்.
இதே ஆப்பிளின் நிறுவனத்திற்காக பிறப்புச் சான்றிதழில் கோல்மால் செய்து சிறுவர்களை பணியில் ஈடுபடுத்துவதும், பெண்களுக்கு கட்டாய கர்ப்பப் பரிசோதனை செய்யும் ஈனச் செயலிலும் இந்நிறுவனங்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருவதும் ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்ட உண்மையாகும்.
சமீபத்தில் டெலாய்டி என்ற ஆலோசனை நிறுவனம், ஆக்ஸ்போர்டு பல்கலைகழகத்துடன் சேர்ந்து நடத்திய ஆய்வில் அடுத்த 2௦ ஆண்டுகளில் 35 விழுக்காடு தொழிலாளிகளின் வேலைகள் மாயாமாகிவிடும் என்று எச்சரித்து உள்ளது.
ஒருபுறம் இப்படி தொழிலாளிகளின் வேலை பறிப்பு நிகழ்ந்து வருகின்ற வேளையில் மறுபுறம் ஜியாங்சு மாநிலம் நாட்டிலேயே தனி நபர் வருமானத்தில் முதலிடம் பிடித்துள்ளதாக கூறுவது ஒரு முரண்நகை. இம்மாநிலம் தொடர்ச்சியாக 7 ஆண்டுகளாக பொருளாதார வளர்ச்சியில் முதலிடத்தில் இருக்கிறது என்று போர்ப்ஸ் பத்திரிக்கை உச்சி மோர்ந்து உள்ளது.
கிட்டதட்ட 25 லட்சம் மக்கள் உள்ள குன்ஷானில் இந்த வேலைபறிப்பு என்பது அம்மக்களின் உயிர் வாழும் உரிமைக்கு விடப்பட்ட சவாலாகும். அதில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு மக்கள் உள்நாட்டு அகதிகளாவர்.
சீனாவின் மின்னணு பொருட்கள் தயாரிப்பின் மையமாக உள்ள குன்ஷான் அதிகபட்சமாக 120 மில்லியன் மடிக்கணினிகள் தயாரித்து உள்ளது. ஆனால் தற்போது அதன் தேவை ஆண்டுக்கு 51 மில்லியன்களாக குறைந்து விட்டது.
முதலாளிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த இயந்திரங்களின் வளர்ச்சியானது ஒருபுறம் தொழிலாளிகளின் வேலையை பறிப்பதுடன் மறுபுறம் சந்தையின் வாங்கும் திறனையும் காலி செய்கின்றன.
இயந்திரங்களின் வளர்ச்சி மனித சமூகத்தின் ஒட்டு மொத்த உழைப்பின் பலனாகும். இயந்திரங்களில் இடப்படும் மூலதனமானது இலட்சகணக்கான தொழிலாளிகள் தமது இரத்தத்தாலும் வியர்வையாலும் இதுவரை முதலாளிகளுக்கு இட்ட பிச்சையாகும்.
முதலாளித்துவம் உயிருடன் இருக்க அதற்கு பணம் படைத்த வாடிக்கையாளர்கள் தேவை. தானியங்கி எந்திரங்களால் பொருட்களை உற்பத்தி செய்ய முடியுமோ ஒழிய அந்த பொருட்களை நுகர முடியாது. கடைசியில் முதலாளித்துவம் தனது நுகர்பொருள் சந்தையை தானே அழிக்கிறது.
இரத்தமும் சதையுமான மனித உணர்வுகளை புரிந்து கொள்ள முடியாதது இயந்திரங்கள் மட்டுமல்ல முதலாளித்துவமும் தான். இப்படி இலாபத்திற்காக இயந்திரங்களை பயன்படுத்துவது என்பது மல்லாக்க படுத்து எச்சில் துப்புவது போன்றது தான்.
தனது உற்பத்தி சக்திகளை தானே அழிப்பதுடன் மனிதர்களுக்கு இடையேயான உறவுகளை பண உறவாகவும் மாற்றியுள்ள முதலாளித்துவம் தனது சவத்தை மூட தானே தோண்டிய குழியில் படுத்துள்ளது. அதற்கு மண்ணள்ளிப் போடுவது ஒன்று தான் நம் முன் இருக்கும் ஒரே பணியாகும்.
– சுந்தரம்.
தொடர்புடைய பதிவுகள்
- 60,000 Chinese factory workers replaced by robots
- Apple products made with child labor – internal report
- Kunshan explosion factory ignored several danger warnings, says regulator
- Foxconn replaces ‘60,000 factory workers with robots’
- Fmr. McDonald’s USA CEO: $35K Robots Cheaper Than Hiring at $15 Per Hour
இந்தக் கட்டுரை அறிவியல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சிக்கு பதிலாக மனித உறவை முன்னிலைப்படுத்தி மைய இழையாய் நின்று வாதிடுகிறது. ஆட்டோமேசன் என்பது அறிவியலின் வளர்ச்சி, மனித இனம் தன்னை அந்நியமாக்கும் உழைப்பில் இருந்து மீண்டு ஆக்கப்பூர்வமான உழைப்பை நோக்கி பயணிக்கும் தடமும் கூட. இதனை எதிர்ப்பதை 19ம் நூற்றாண்டின் எந்திரங்கள் அறிமுகத்தின் போது அதனை உடைக்க முனைந்த தொழிலாளர்களது அறியாமையோடு ஒப்பிட முடியாதா? … ஐயம் தான் அய்யன்மீர்
மணி,
அறிவியல் தொழில்நுட்பங்கள் எடுத்துக்காட்டாக தானியங்கி கருவிகள் ஒட்டுமொத்த மனித குலம் கண்டடைந்த உன்னதம் எனில் அதன் பயன்பாடும் ஒட்டு மொத்த மனித குலத்துக்கேயானதாக இருக்க வேண்டும்.
ஆனால் தானியங்கி கருவிகள் உள்ளிட்ட இயந்திரங்கள் முதலாளிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் நிலையில் அது உண்மையில் அதன் வேலையை செய்ய இயலாதவாறு கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது. அதன் உச்சகட்ட நிலைமா தான் சீன தொழிலாளிகளின் வேலையிழப்பு.
இப்படி யோசித்து பாருங்கள். வேலையிழந்த அந்த ஆயிரக்கணக்கான தொழிலாளிகளால் தான் அந்த இயந்திரங்கள் படைக்கபடுகின்றன. அவர்களின் சரிதவறுகளால் ஆன அனுபவங்களால் தான் தொழில்னுட்பங்கள் மெருகிடப்படுகின்றன. கடைசியில் படைத்தவனுக்கு அந்த பொருள் மீதான உரிமை வன்முறையாக பிடுங்கபடுகிறது.
இயந்திரங்கள் பொருட்களை தான் படைக்கின்றன சந்தையை அல்ல. நுகர்வதற்கு சதையால ஆன உடம்பும் நுகர்வதற்கான சந்தைக்கு மனித உறவுகளும் தான் தேவைபடுகின்றன இயந்திரங்கள் அல்ல.
நன்றி.
புரிய வைத்தமைக்கு மிகவும் நன்றி
*பணியில் ஈடுபடுத்துவதும், பெண்களுக்கு கட்டாய கர்ப்பப் பரிசோதனை செய்யும் ஈனச் செயலிலும்*
இந்த சோதனை எதற்காக செய்கிறார்கள்?
இயந்திய மயமாக்கல் என்பது காலத்தின் கட்டாயம். கார்பரேட் காரன் எப்போதும் செலவை குறைப்பதிலேயே குறியாக இருப்பான். எத்தனை குடும்பம் நடுத்தெருவுக்கும் வரும் என்பதெல்லாம் அவனுக்கு கவலையில்லை. இயந்திய மயமாக்கலால் பெரும்பாதிப்புக்கு உள்ளாகப்போகும் நாடுகளில் முக்கியமானது இந்தியா. ஏற்கனவே வேலையில்லா திண்டாட்டம் பெருத்து தலைவிரித்தாடுகிறது. இனி இன்னும் மோசமாகும். தேவையில்லாம பெருத்துவரும் ஜனத்தொகையை குறைத்தாலே போதும். ஐரோப்பிய நாடுகளில் ஒருபிரச்சனையும் இல்லை. அளவான மக்கள் தொகை. நிம்மதியும் மகிழ்ச்சியும் நிரந்தரம்.