Monday, March 27, 2023
முகப்புகட்சிகள்இதர கட்சிகள்கொள்கையா, சாதியா, பணமா ? பென்னாகரம் தொகுதி நேரடி ரிப்போர்ட்

கொள்கையா, சாதியா, பணமா ? பென்னாகரம் தொகுதி நேரடி ரிப்போர்ட்

-

கொள்கையா, சாதியா, பணமா? தேர்தல் வெற்றியைத் தீர்மானிப்பது எது?

“மக்கள் சரியில்லைங்க. மக்கள் அயோக்கியர்களாக இருக்கிறதாலே அரசியல்வாதிகளும் அயோக்கியர்களா இருக்காங்க. அரசியல்வாதிகள் அயோக்கியர்களா இருக்கிறதாலே அரசாங்கங்களும் அயோக்கியத்தனமா நடக்குது. எல்லாமே காசுதான். ஓட்டு வாங்க பணத்தை முதலீடு செஞ்சி பதவிக்கு வர்றவன், வந்த பின்னாலே அதை பத்து மடங்கா திருப்பி எடுக்கத்தானே நினைப்பான்?” – அவரது உரையாடலில் வலிந்து திணிக்கப்பட்ட ஒரு மேடை பேச்சு பாணி இருந்தது.

அவர் தன்னை ”தோழர் கிருஷ்ணமூர்த்தி” என்றே அறிமுகப்படுத்திக் கொண்டார். பேச்சின் இடையிலும் தன்னைத் தானே குறிப்பிடும் போதும் பிறர் அழைக்கும் போதும் “தோழர்” என்கிற அடைமொழி தவறி விடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தார். அவர் எர்ரகொல்லனூர் கிளை சி.பி.ஐ. கட்சியின் செயலாளர். எர்ரகொல்லனூர் பென்னாகரம் நகரிலிருந்து சுமார் பத்து கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

அன்புமணி
வன்னிய சாதி வாக்குகளை அறுவடை செய்து வெற்றி பெற்றுவிடலாம் எனக் கனவு கொண்டிருந்த அன்புமணியை, டெபாசிட்டைக் காலிசெய்து தோற்கடித்தனர் பெண்ணாகரம் தொகுதி மக்கள்

“இந்த ஊர்லயே மாமா தாங்க நல்லா அரசியல் பேசுவாரு… தி.மு.க.காரன் ஓட்டுக்கு காசு கொடுத்தப்ப கூட வேண்டாம்னு சொல்லி அனுப்பிட்டாரு. ஆனா அத்தை தனியா போயி நாலு ஓட்டுக்கு ரெண்டாயிரம் ரூவாய்னு கறாரா பேசி வாங்கினு வந்திருச்சி” என்றார் மணிவண்ணன். தோழர் கிருஷ்ணமூர்த்தியின் மருமகன் இவர். நடுச்சபையில் வேட்டி உரிந்து விழுந்தவரைப் போல் துணுக்குற்றார் தோழர் கிருஷ்ணமூர்த்தி.

“என்னாங்க செய்யிறது.. வீட்டுல பொம்பளைங்க பேராசை பிடிச்சவளுங்களா இருக்காளுங்க. அவளுங்களுக்கு அரசியலெல்லாம் புரியறதில்லே” சற்றுத் தொலைவில் சாயம் போய் படபடத்துக் கொண்டிருந்த அவரது கட்சிக் கொடியிலிருந்த சிவப்பு தோழரின் முகத்தில் சட்டென ஏறியது.

அன்புமணி தலைகுப்புறக் கவிழ்ந்ததற்கு இரண்டு நாள் கழித்து நாங்கள் பென்னாகரம் சென்றிருந்தோம். அவரது தோல்வியை நூலாகப் பிடித்துக் கொண்டு மக்கள் எப்படி ஓட்டளிக்கிறார்கள், எதற்காக ஓட்டளிக்கிறார்கள், தேர்தல் அரசியல் சமூகத்தின் வேர்மட்ட அளவில் எப்படிச் செயல்படுகிறது, வெற்றி- தோல்வியை தீர்மானிக்கும் சமன்பாடுகள் எவை என்பதைப் புரிந்து கொள்வதே எமது பயணத்தின் நோக்கங்கள்.

பென்னாகரம் தொகுதிக்குட்பட்ட வன்னியர் மற்றும் ஆதிதிராவிடர்கள் நெருக்கமாக வசிக்கும் சில கிராமங்கள், பென்னாகரம் நகரப் பகுதி மற்றும் வன்னியரல்லாத பிற சாதியினர் வசிக்கும் பகுதிகளைத் தெரிவு செய்தோம்.

pennagaram-election-sowmiya
அன்புமணியின் மனைவியும் மக்களும் அவருக்காக வன்னிய சாதி உழைக்கும் மக்களிடத்தில் பிரச்சார வேட்டை நடத்தியதைப் பற்றிக் கேட்டபொழுது, அவுங்க கலரைப் பாரு, நம்ம கலரைப் பாரு, ரெண்டு பேரும் ஒரு சாதியாப்பா?” என்று கேலி செய்து சிரித்தனர்.

“ஒரு சிட்டிங் எம்.எல்.ஏ. ஐயாயிரத்தி சொச்சம் ஓட்டு வாங்கி டெப்பாசிட்டையும் பறிகொடுத்து தோற்கிறார் என்பது மகா கேவலமாச்சே தோழர். அதிலும் பென்னாகரம் சி.பி.ஐ. கட்சி செல்வாக்கோடு இருக்கும் பகுதியாச்சே? இங்கே வி.சி. ஓட்டு இருக்கு, தே.மு.தி.க.வுக்கு ஆதரவு இருக்கு…எப்படி தோற்றீர்கள்?”

“எல்லா பயலும் பணம் குடுத்துட்டான். எங்க கிட்டே குடுக்க பணமில்லே.. வேற என்னத்த சொல்ல?”

“பா.ம.க.வுமா?”

“இவங்க ரெண்டு பேரும் நேரடியா ஓட்டுக்கு ஐநூறு, அறுநூறு கொடுத்தாங்க. பா.ம.க.வுக்கு சாதி ஓட்டு இருக்கு… அதனால அவன் அந்தந்த ஊர் நாட்டாமைக்காரங்க கிட்டே நாலைஞ்சி லச்சம் குடுத்து ஊர்காரன் ஓட்டையெல்லாம் அப்படியே லம்பா வளைச்சிட்டான்னு சொல்லிக்கிறாங்க?”

“அப்படி கொடுத்திருந்தா அன்புமணி ஜெயித்திருக்கனுமே?”

அவர் முகத்தில் ஒரு பிரகாசம் தோன்றியது. “ஆங்.எப்படி ஜெயிப்பான்னு கேட்கிறேன். மொத்த ஓட்டுல வன்னியர் ஓட்டு பாதிக்கும் கொஞ்சம் கீழேன்னா மத்த சாதி ஓட்டு பாதிக்கும் கொஞ்சம் மேல இருக்கே?”

“மத்த ஓட்டெல்லாம் பிரியாதா?”

pennagaram-election-anbumani-campaign
நத்தம் காலனியில் தாழ்த்தப்பட்டோர் வீடுகளையும் உடமைகளையும் சூறையாடிக் கொளுத்திய (இடது படம்) வன்னிய சாதிவெறியன் அன்புமணியின் ஹை-டெக் பிரச்சாரம்: ஒய்யாரக் கொண்டைக்குள்ள ஈறும் பேனும்.

“அங்கதான் விசயமே இருக்கு… ஏற்கனவே அன்புமணி எம்.பி.யா ஜெயிச்ச பின்னாடி வன்னியருங்க ரொம்ப கொட்டமடிச்சிட்டாங்க. சின்னச் சின்ன பசங்க கும்பலா பைக்ல டர்ர்ருன்னு வர்றதும் போறதும்… ரோட்டுல மத்த சாதிக்காரனை மறிச்சி கலாட்டா பன்றதும்…ஏகப்பட்ட தொல்லை. திரும்ப எம்.எல்.ஏ.வா ஜெயிச்சா கையிலெ பிடிக்க முடியுமா? அதான் மத்த சாதிக்காரனெல்லாம் அன்புமணி தோற்கனும்னா இன்பசேகரனுக்கு போட்டா தான் ஆகும்னு முடிவெடுத்திருக்காங்க… அதே மாதிரி வன்னியர்கள்லேயும் தி.மு.க.வுக்கும் அ.தி.மு.க.வும் ஆதரவு இருக்கு. அந்த ஓட்டு பிரியுமில்லே?”

”அப்படின்னா இதர சாதிக்காரங்க சேர்ந்து தான் பா.ம.க.வை தோற்கடிச்சதா சொல்றீங்க?”

”அட ஆமாங்க. இந்த ஊர்ல பத்து பதினோரு வன்னியர் குடும்பங்கள் தான் இருக்கும். மத்தபடி பெரும்பாலும் நாயுடு – ஒக்கலிகா சமூகம் தான்… எங்க வார்டை எடுத்துக்கங்க… மொத்தம் 930 ஓட்டு இருக்கு. அதுல தி.மு.க.வுக்கு 430 ஓட்டு, அ.தி.மு.க.வுக்கு 175 ஓட்டு விழுந்திருக்கு.. பா.ம.க.வுக்கு 27 ஓட்டு தான் கிடைச்சிருக்கு” என்று ஒரு இடைவெளி விட்டர்வர் “சி.பி.ஐ.க்கு 30 ஓட்டு விழுந்திச்சி” என்றார். பின், “மத்த சாதிக்காரர்களை பகைச்சிகிட்டு அவங்க ஜெயிக்க முடியுமா?” என்று தன் மருமகனைப் பார்த்து கேட்டார். இருவரின் முகங்களிலும் வெற்றிப் பெருமிதம்.

“உங்கள் வீட்டில் யாருக்குப் போட்டார்கள்” என்கிற சங்கடமான கேள்வியைத் தவிர்த்து விட்டோம்.

இந்தத் தேர்தலில் சந்தேகமின்றி காசு விளையாடியிருக்கிறது. காசு மட்டுமின்றி, சாதி உள்ளிட்ட வேறு காரணிகளும் கூட உள்ளது. ஒரே வீட்டிற்கு தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் போட்டி போட்டு காசு கொடுத்துள்ளனர். பா.ம.க. ஊர் நாட்டாமைகளுக்குச் செலவு செய்ததாக மற்ற கட்சியினர் சொல்கின்றனர். இன்னாரென்று குறிப்பான ஆதாரங்கள் எதையும் கூறவில்லை. நேற்று முளைத்த நாம் தமிழர் கட்சியினர் வெளியூரில் இருந்து ஆட்களை இறக்கி வேலை செய்திருக்கின்றனர். இவர்கள் வாங்கிய சில நூறு ஓட்டுக்களுக்கு செலவழித்த தொகையை கணக்கிட்டால் ஓப்பீட்டளவில் பெரிய கட்சிகளுக்கு இணையாக செலவழித்துள்ளனர்.

“உங்க ஏரியாவுல எவ்வளவு காசு கொடுத்தாங்க?” பென்னாகரம் பேருந்து நிலையத்திற்கு அருகே தேநீர் கடை நடத்தும் ஒருவரிடம் பேச்சுக் கொடுத்தோம்.

“இவங்க ஐநூறு, அவங்க அறுநூறு” என்றார் முகத்தில் கொஞ்சம் வெட்கம் எட்டிப் பார்த்தது.

“வீட்ல மொத்தம் எத்தனை ஓட்டு?”

“மொத்தம் ஆறு ஓட்டு இருக்குங்க..”

“அப்ப ஆறாயிரத்துக்கு மேல தேறியிருக்குமே?”

“எதுனா செலவுக்கு ஆகுமில்லே?”

“ஏன் பணம் வாங்கினீங்க? காசு வாங்கி ஓட்டை விற்பது தப்பில்லையா? நாளைக்கு தெரு விளக்கு எரியலெ, ரோடு சரியில்லென்னு அவன் கிட்டே போயி நிக்க முடியுமா உங்களால?”

pennagaram-election-cartoon“என்னா சார், அவன் வூட்டு துட்டையா குட்த்தான்? எல்லாம் நம்ப கிட்ட கொள்ளெ அடிச்சது தானே? இப்படி தேர்தல்னா தானே துட்ட கண்ல காட்றானுவோ? இப்ப காசு குடுக்காம ஒருத்தன் ஜெயிக்கிறான்னே வையிங்க… அவன் மட்டும் ஜெயிச்சி வந்து என்னாத்த கிழிக்கப் போறான்? எப்டியும் ஜெயிச்சி உள்ற போன திருடத் தானே போறான்?” அவரது முகத்தில் இருந்த வெட்கம் அகன்றது; தர்மாவேசத்தோடு பேசிச் சென்றவரை தடுத்து அடுத்த கேள்வியை கேட்டோம்.

“சரிங்க… ரெண்டு கட்சிக்காரன்ட்டையும் துட்டு வாங்கியிருக்கீங்களே, யாருக்குப் போட்டீங்க?”

“மூணு வோட்டு தி.மு.க.வுக்கு, மூணு வோட்டு ரெட்டெலைக்கு” கோபம் அடங்கி நியாயஸ்தராக பேசினார்.

“இப்படி காசு வாங்கிட்டு சொந்த சாதிக்காரருக்கே துரோகம் செஞ்சிருக்கீங்களே; உங்கள மாதிரி ஆளுங்க இருந்தா எப்படிங்க அன்புமணி முதலமைச்சர் ஆவாரு?”

“பென்னாகரத்துல ஜெயிச்சி தான் அவரு முதலமைச்சர் ஆகப் போறாரா? கோயமுத்தூர்ல, மதுரைல, திருச்சில, மெட்றாசுல எல்லாம் ஜெயிக்க வேணாம்? சாதிய சொல்லித் தானே இம்மாம் பெரிய கட்சி ஆனாங்க; சாதிக்கு என்ன செஞ்சாங்க? நாங்க கஸ்டப்படறோம், துன்றோம்… சாதியா சோறு போட்டுச்சி… இல்ல சாதிக்காரன்னு ஆத்திர அவசரத்துக்கு ஐயா கிட்ட கைமாத்து கேட்ட குடுத்துட போறாரா?”

“ரெண்டு கட்சியும் காசு கொடுக்கலைன்னா மாம்பழத்துக்கு தானே போட்டிருப்பீங்க?”

“அப்டி இல்ல சார். எப்டியும் சூரியனோ ரெட்டெலையோ தான் வரப் போவுது.இன்னாத்துக்கு ஓட்டை வேஸ்ட் பண்ணனும்? அவுங்க ரெண்டு பேர்ல யாருக்கோ தான் போட்ருப்பேன்”

மக்கள் ஜெயிக்கும் குதிரையின் மேல் பந்தயம் கட்டுகிறார்கள். இதில் பணம் ஒரு துணைக்காரணியாக சேர்ந்து விடுகிறது. மக்கள் எவருக்கும் பணம் வாங்குவதில் சிறிதளவுக்கும் கூச்சமோ தயக்கமோ இல்லை.”நம்ம காசு தானே” என்கிற உரிமையில் கைநீட்டுகிறார்கள். சில இடங்களில் ஓட்டுக்குப் பணம் கொடுப்பதை தடுத்த மாற்றுக் கட்சிக்காரர்களை மக்களே அடித்து விரட்டியுள்ளனர்.

pennagaram-election-anbumani-campaign-2மல்லாபுரம், கூத்தப்பள்ளி, குளத்துமேடு பகுதி மக்கள் தங்களுக்கு கட்சிகளிடமிருந்து காசு வருவது தாமதமானதும் உள்ளூர் கட்சிப் பிரமுகர்களின் வீட்டைச் சூழ்ந்து கொண்டு சண்டையிட்டிருக்கிறார்கள். “யாரு அப்பமூட்டு காசு, மேலயிருந்து குடுத்தா நீ அமுக்க பார்க்கிறயா?” என்று கேட்டு ஏசியிருக்கிறார்கள்.

காசு வாங்கிக் கொண்டு ஓட்டுப் போட்டவர்களை மூன்று வகையாக பார்க்க முடிகிறது.

முதலாவதாக, யாருக்கு ஓட்டுப் போடுவது என்பதை முன்பே தீர்மானித்துக் கொண்டவர்கள்.தாம் ஓட்டுப் போடும் கட்சியை ‘உரிமையோடு’ அணுகி காசு வாங்கிக் கொண்டு, அதே கட்சிக்கு ஓட்டுப் போட்டுள்ளனர். தீர்மானித்ததற்கு மாறான கட்சியின் முன்வந்து காசு கொடுத்தாலும் மறுப்பதில்லை; ஆனால் ஓட்டு, தீர்மானத்தின் அடிப்படையில்தான். கூத்தப்பாடி கிராமத்திற்குட்பட்ட காலனியில் பெரும்பான்மையான ஓட்டுக்கள் தி.மு.க.வுக்குப் பதிவாகியுள்ளது. நாங்கள் அங்குள்ள மக்கள் சிலரிடம் பேசினோம்.

“சூரியன் கட்சி ஜெயிச்சி வந்தாங்கண்ணா டாஸ்மார்க்கு கடைய மூடுவாங்கன்னு நெனைச்சோம்” என்கிறார் ராஜாமணி அம்மாள்.

”இருந்தாலும் துட்டு வாங்கிட்டு தானே ஓட்டுப் போட்டீங்க?”

“காசு கெடக்குது சார்; கருணாநிதி வந்திருக்கலாம்; வராம பூட்டாரே” என்று அங்கலாய்த்துக் கொண்டார்.

“ஏன் கருணாநிதி வந்திருந்தா மட்டும் உங்க பிரச்சினை எல்லாம் தீர்த்திருப்பாரா?”

“யாரு வந்தாலும் ஒரு பிரச்சினையும் தீரப் போறதில்லே; ஏதோ படிச்சவுகளுக்கு வேலை எடுத்துக் கொடுப்பாருன்னு சொன்னாங்க” என்கிறார் அருகில் நின்ற ராமக்காள்.

அந்தக் காலனியில் இருபத்தைந்து வயதுக்குட்பட்ட இளைஞர்களில் அநேகர் பட்டதாரிகள்.அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு முறையான வேலையில்லை.பி.காம்.பட்டதாரியான ராஜு வேலையின்றி இருக்கிறார்.பெங்களூர் சென்றால் எதாவது கொரியர் டெலிவரி வேலை கிடைக்கலாம் என்று யோசித்துக் கொண்டிருப்பதாகச் சொல்கிறார். பி.ஏ. தமிழ் இலக்கியம் படித்த சதீஸ், ஓசூரில் உள்ள இயந்திர உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றில் கூலி வேலைக்குச் செல்கிறார்.

இந்தக் காலனியில் சென்ற தேர்தல்களில் இரட்டை இலைக்கு அதிக வாக்குகள் பதிவாகியுள்ளது. வேறு சில பகுதிகளில் உத்திரவாதமாக இரட்டை இலைக்கே ஓட்டு விழும் என்கிற மாதிரியான பகுதிகளில் அக்கட்சியினர் காசு கொடுக்கவில்லை. அந்த மாதிரியான இடங்களில் ஒன்று, நம்மை ஏமாற்றி விட்டார்களே என்கிற ஆத்திரத்தில் ஓட்டுப் போடாமலோ அல்லது நோட்டாவிற்கோ ஓட்டுப் போட்டுள்ளனர். ஒரு கட்சி சார்பான பகுதிகளில் சம்பந்தப்பட்ட கட்சி காசு கொடுக்காமல் மாற்றுக் கட்சி காசு கொடுத்தால், அங்கே கணிசமாக மாற்றிப் போட்டுள்ளனர்.

இரண்டாவது பிரிவினர், எந்தக் கட்சி காசு கொடுத்ததோ அதே கட்சிக்கே ஓட்டுப் போட்டுள்ளனர். உள்ளூர் அளவில் உள்ள கட்சிப் பிரமுகர்கள் தங்களுக்குள் கூட்டணி அமைத்து ஏரியாக்களைப் பிரித்துக் கொண்டு மேலிடத்திலிருந்து வரும் தொகையில் தாங்கள் அமுக்கியது போக எஞ்சியதை மக்களுக்கு விநியோகிக்கும் புரோக்கர்களாகச் செயல்பட்டுள்ளனர். இது மாதிரியான பகுதிகளில் கீழ்மட்டத்தில் கிளைக்கழக அளவில் பொறுப்பில் உள்ளவர்களுக்கு இடையே நல்ல புரிந்துணர்வு இருக்கிறது. தங்களுக்குள் சச்சரவின்றி ஓட்டுக்களைப் பிரித்துக் கொண்டு பணத்தை விநியோகித்துள்ளனர். இது போன்ற பகுதிகளில் ஒரே வீட்டுக்கு இரண்டு, மூன்று கட்சிகள் காசு கொடுத்து வாக்காளர்களைக் குழப்பியடிக்காமல் ஜனநாயகத்தை சிறப்பாக காப்பாற்றியிருக்கிறார்கள்.

கள்ளிபுரம் காலனி பகுதியில் ஊர் மக்களே கூட்டம் போட்டு பா.ம.க.வுக்கு ஓட்டுப் போடுவதில்லை என்று தீர்மானித்துள்ளனர். மற்ற இரு கட்சிகளில் எதற்கு ஓட்டுப் போடுவது என்பதைத் தீர்மானிக்க இரு பெரிய கட்சிகளையும் உள்ளூர் புரோக்கர்கள் மூலமாக அணுகியுள்ளனர். இரு தரப்புடனும் சமமாக பேரம் பேசி கடைசியில் தி.மு.க.வுடனான பேரம் படிந்துள்ளது. அதன்படி, தி.மு.க. வேட்பாளர் இன்பசேகரன் கோயில் கட்டுவதற்கு நிதி அளிப்பதாக ஒப்புக் கொண்டிருக்கிறார்.

மூன்றாவது பிரிவினர், எல்லா கட்சிகளிடமும் காசு வாங்கிக் கொண்டு வீட்டிலிருக்கும் ஓட்டுக்களை விகிதாச்சார அடிப்படையில் பிரித்துப் போட்டுள்ளனர். இவர்களுக்கு கட்சி, அரசியல் பற்றியோ அல்லது கட்சிகள் தரப்பில் அளிக்கப்படும் வாக்குறுதிகள் பற்றியோ பெரியளவில் மதிப்பு இல்லை. “யார் ஜெயித்தாலும் எதுவும் மாறப் போவதில்லை”,”எவன் ஜெயிச்சாலும் திருடத்தான் போகிறான்”, “ஓட்டுப் போட்டாலும் ஒன்றுதான் போடாவிட்டாலும் ஒன்றுதான்”, “தேர்தல் என்பதே மக்களை ஏமாற்றுவதற்காகத்தான்” என்றெல்லாம் ‘தத்துவார்த்தமாக’ பேசத் துவங்கும் இவர்கள், இந்த தேர்தலைப் பயன்படுத்திக் கொண்டு முடிந்தவரை கட்சிகளிடமிருந்து ’கறந்து’ விட வேண்டும் என்கிறார்கள். இப்போது விட்டால் எப்படியும் அடுத்த ஐந்தாண்டுகளுக்கு நம்மைப் பார்க்க இவர்களில் எவனும் வரப் போவதில்லை என்று சொல்லும் இவர்கள், கிடைத்தற்கரிய வாய்ப்பைத் தவறவிடக் கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறார்கள்.

என்.ஜி.ஓ.க்களோ, தேர்தல் ஆணையமோ, புதிய தலைமுறை மொக்கைகளோ சொல்வது போல் நல்ல வேட்பாளர்களைத் தேடி அவர்களை சட்டமன்றத்திற்கு அனுப்பினால் தங்கள் வாழ்க்கை சிறப்படைந்து விடும் என்கிற மூட நம்பிக்கைகள் மக்களுக்கே இல்லை. சீசனுக்கு விற்கப்படும் பண்டங்களைப் போல் தான் தங்கள் ஓட்டுரிமையை அவர்கள் பாவிக்கிறார்கள்.

***

அதே நேரத்தில் பணத்துக்கு சற்றும் குறையாத முக்கியத்துவத்தை சாதியும் பெற்றிருக்கிறது. பென்னாகரம் தொகுதியின் மொத்த வாக்குகள் சுமார் 2,26,000 வாக்குகள். அதில் 1,10,000 வன்னியர்கள், சுமார் 40,000 தாழ்த்தப்பட்டோர்; ஒக்கலிகர்,குறும்பர் போன்ற சாதியினர் 15,000. தெலுங்கு பேசும் நாயக்கர், நாயுடு போன்றோர் 15,000. முஸ்லிம்கள் 20,000; இவையன்றி மற்ற சாதியினர் என்பது உத்தேசமான சாதி ரீதியான வாக்கு கணக்கு.

தொகுதியின் வ.கம்யூ எம்.எல்.ஏ.வான நஞ்சப்பன் இந்த தேர்தலில் வெறும் 5,000 வாக்குகள்தான் வாங்கியிருக்கிறார். அவரே மறைமுகமாக அ.தி.மு.க.வுக்கு ஆதரவளித்ததுதான் இதற்குக் காரணம் என்றும் கூறுகிறார்கள். தி.மு.க.விற்கு ஓட்டளித்தால்தான் பா.ம.க.வை தோற்கடிக்க முடியும் என்று, தாழ்த்தப்பட்ட மக்களை தி.மு.க.விற்கு ஓட்டளிக்குமாறு வி.சி. கட்சியைச் சேர்ந்தவர்களே சில கிராமங்களில் கோரியிருக்கின்றனர்.

வன்னியர் வாக்குகள் சரிபாதி இருந்தும் அன்புமணி ஏன் படுதோல்வி அடைந்தார் என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமானால், அவர் எம்.பி.தேர்தலில் எப்படி வெற்றி பெற்றார் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். சென்ற நாடாளுமன்றத் தேர்தலில் பென்னாகரம் தொகுதியில் மட்டும் அன்புமணி 93,000 வாக்குகள் பெற்றிருக்கிறார். இளவரசன் -திவ்யா காதலுக்கு எதிராக பா.ம.க. தோற்றுவித்திருந்த சாதிவெறி, வன்னியர்கள் மத்தியில் மட்டுமின்றி மற்ற ஆதிக்க சாதியினரிடமும் செல்வாக்கு செலுத்தியதே இதற்கு முதற்காரணம். அன்று அ.தி.மு.க.வின் கே.பி.முனுசாமி, தி.மு.க.வின் இன்பசேகரன், வலது கம்யூ. கட்சியின் நஞ்சப்பன் ஆகிய அனைவரும் அன்புமணிக்கு ஆதரவாக வேலை செய்தனரென்று அனைவரும் கூறுகின்றனர்.

இன்பசேகரனின் தந்தையான மறைந்த பெரியண்ணன் எம்.எல்.ஏ, ஏற்கெனவே பா.ம.க. விலிருந்து தி.மு.க.விற்கு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இன்பசேகரனின் நடவடிக்கை பற்றி தி.மு.க. தலைமைக்குத் தெரிந்த போதிலும், இந்த காரணத்தை நேரடியாகச் சொல்ல அஞ்சி, “உட்கட்சி தேர்தல் விவகாரத்தில் கட்சி விரோத நடவடிக்கை” என்று கூறி அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்திருக்கின்றனர். அவருடைய சாதி செல்வாக்கு காரணமாக தேர்தலுக்கு ஆறு மாதங்கள் முன் மீண்டும் கட்சியில் சேர்த்துக் கொண்டு விட்டனர்.

2014-இல் அன்புமணி வெற்றி பெற்றதன் பின்புலம் இதுதான். வன்னியர் மட்டுமல்ல, குறிப்பிட்ட வட்டாரத்தில் எண்ணிக்கையில் அதிகமாக இருக்கும் சாதி எதுவாக இருந்தாலும் சரி, அந்த சாதியின் பெயரால் இயங்கும் கட்சியை மற்றெல்லா சாதியினரும் உள்ளூர வெறுக்கவே செய்கின்றனர். இந்த வெறுப்புணர்வை தலித் மக்களுக்கு எதிராகத் தந்திரமாக மடை மாற்றி விட்டதன் மூலம் 2014-இல் அன்புமணி வெற்றி பெற்றிருக்கிறார். அவ்வளவே. வெற்றி பெற்ற பின்னர் பா.ம.க.வினர் தங்களது அடாவடித்தனங்கள் காரணமாக மற்ற ஆதிக்க சாதியினரின் வெறுப்பை சம்பாதித்துக் கொண்டது மட்டுமின்றி, வன்னியர் சமூக மக்கள் மத்தியிலேயே தனிமைப்பட்டுவிட்டனர் என்பதையும் அனைவரும் கூறுகின்றனர்.

இருந்த போதிலும் 20 முதல் 25 வயது வரை உள்ள வன்னிய இளைஞர்கள் அநேகமாக பா.ம.க.வுக்குத்தான் வாக்களித்துள்ளனர். வெறும் சாதிவெறியை மட்டும் வைத்து இளைஞர்களைக் கட்டுக்குள் முடியாது என்பதால், “கட்சி சீட்டு” என்ற பெயரில் எல்லா கிராமங்களிலும் ஏலச்சீட்டு நடத்தியிருக்கின்றனர். இந்தப் பணத்திலிருந்து வட்டிக்கு கொடுப்பது, கட்சி மாநாட்டுக்கு பஸ் செலவு, தண்ணி அடிக்கும் செலவுக்கு இதனைப் பயன்படுத்திக் கொள்வது போன்ற வழிமுறைகள் மூலம் இளைஞர்களை தம் பிடியில் பராமரித்திருக்கின்றனர். மேற்படி இளைஞர் படை வாங்கின காசுக்கு மேலே கூவி, தொகுதி மக்களை வெற்றிகரமாக அன்புமணிக்கு எதிராகத் திருப்பி விட்டது.

“பாட்டாளி சொந்தங்களே நம்மைக் கவிழ்த்து விடுவார்கள்” என்ற பயமும் அன்புமணிக்கு இருந்திருக்கிறது. இதனால் தேர்தல் பிரச்சாரத்தில் பல காமெடி காட்சிகள் அரங்கேறியிருக்கின்றன. கிராமத்திற்கு வாக்கு கேட்க செல்லும்போது, கிராமத்தின் எல்லையிலேயே உட்கார்ந்து கொண்டு,”எனக்கு ஓட்டு போடுவதாக சத்தியம் செய்தால்தான் ஊருக்குள் வருவேன்” என்று அன்புமணி சென்டிமென்டாக போட்டுத் தாக்கியிருக்கிறார். “இதென்னடா வம்பு” என்று பாட்டாளி சொந்தங்களும் சத்தியம் செய்து அவரை ஊருக்குள் அழைத்துச் சென்றிருக்கிறார்கள். நம்ம்..பி உள்ளே போனவரை இந்தக் கும்மு கும்மி விட்டார்கள்.

அன்புமணியின் மனைவி மக்களும் பென்னாகரத்தில் தங்கி வாக்கு சேகரித்திருக்கிறார்கள். அது பற்றி வன்னிய சமூக உழைக்கும் மக்களிடம் கேட்டபோது, “அவுங்க கலரைப் பாரு, நம்ம கலரைப் பாரு, ரெண்டு பேரும் ஒரு சாதியாப்பா?” என்று கேலி செய்து சிரித்தனர்.
இனி, தேர்தல் காலத்தில் மட்டும் கருப்பு நிறத்துக்கு மாறிக்கொள்ளும் படியாக ஃபேர் அண்டு லவ்லி கம்பெனிக்காரன் ஏதாவது கிரீம் கண்டுபிடித்தால்தான் உண்டு.

தனது தோல்விக்கு பணம்தான் காரணம் என்று சாதிக்கிறார் அன்புமணி. தோற்றவர்கள் பலரும் அப்படித்தான் சொல்லிக் கொள்கிறார்கள். இந்த தேர்தலில் “பணம்” வெற்றிக்கு காரணமாக இருந்ததைக் காட்டிலும், தோற்றவர்கள் தமது தோல்விக்கான காரணத்தை மறைத்துக் கொள்வதற்குப் பெரிதும் உதவியிருக்கிறது.

– வினவு செய்தியாளர்கள்
______________________________
புதிய ஜனநாயகம், ஜூன் 2016
______________________________

 1. ‘நீங்கள் எழுதியிருப்பது சரியான அலசல். இதில் முழுவதுமாக உண்மை இருப்பதாக நம்புகிறேன். “நான் வன்னியன்டா” என்றோ “நான் …. டா” என்றோ பேசுபவர்கள், அவர்களுக்குத்தான் கெடுதல் செய்துகொள்கிறார்கள். ஒவ்வொரு செயலுக்கும் எதிர்வினை இருக்கும் என்பதுபோல, 90ஆயிரம் வாக்குகள் எம்.பி. தேர்தலில் பெற்றதும், லட்சத்துக்கு மேல் வாக்கு கிடைக்கும், மிக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெல்வோம் என்று கனவு காண ஆரம்பித்துவிட்டார்கள். என்னதான் மறைத்தாலும், அன்புமணியும் திருமாவும் கிருஷ்ணசாமியும் அவரவர் சாதியை மட்டுமே முன்னிறுத்துவதால், தனியாக வெற்றி பெறுவது கடினம். இப்போது பெண்ணாகரம் மக்கள் பாமகாவினரையோ வன்னியரையோ எள்ளி நகையாடுமாறு நடந்துகொண்டால், அடுத்தமுறை பாமக சார்பாக தேர்தலில் நிற்பவருக்கு நிறைய ஓட்டு ஆடோமேட்டிக்காக வந்துவிடும்.

 2. “அவர் எம்.பி.தேர்தலில் எப்படி வெற்றி பெற்றார் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். சென்ற நாடாளுமன்றத் தேர்தலில் பென்னாகரம் தொகுதியில் மட்டும் அன்புமணி 93,000 வாக்குகள் பெற்றிருக்கிறார்”
  2012ல் மகாபலிபுரம் மாநாட்டு கலவரத்திற்க்குபின் 14 நாட்கள் களி சாப்பிட்ட ராமதாசு
  ஜே-விடம் சரணாகதி ஆகி அதற்க்கு கிடைத்த பலன்கள்தான்,
  1.ஜெ யின் எலக்ஷன் கமிஷன் கூட்டு தில்லு முல்லோடு விட்டு கொடுத்த வெற்றிதான் பெண்ணாகரம்,
  2.மற்றும் ஜே-ன் கன்டெய்னர் சப்ளை-
  இதற்க்கு பிரதியுபகாரம்தான்
  “தனித்து போட்டியிடுவது,மாற்றம்-முன்னேற்றம் என்று ஊளையிட்டது எல்லாம்”
  இப்படி ஓட்டை சிதறடித்து ஜெ-வை வெற்றி பெறவைத்தது,பா ம க

 3. எனக்கு ஒரே ஒரு சந்தேகம்தான், எல்லா தொகுதியிலும் பா.மா.க. தேர்தல் செலவுக்கு எப்படி பணம் கிடைத்திருக்கும், நன்றாகத்தான் செலவு செய்திருக்கிறார்கள், இவர்கள் பணம் கொடுக்காவிட்டாலும் ஜாதிகள் மூலம் ஓட்டை பிரிக்க வேறுகட்சியிடம் பணம் வாங்கி இருக்கிறார்கள் என்ற சந்தேகம் அனைவருக்கும் உண்டு. எல்லா தொகுதியிலும் இவர்களுக்கு எப்படி ஓட்டு கிடைக்கும், வேறு எந்த கூட்டணியும் இல்லை, பணத்தை செலவழிப்பது விரயம்தான் என்று நன்றாகவே தெரிந்துதான் செலவழித்திருக்கிறார்கள். பணத்தை விரயம் பண்ண யாருக்கும் துணிவிருக்காது, எனவேதான் ஜாதி ஓட்டை பிரிக்க யாரிடமோ பணம் வாங்கி இருக்கிறார்கள் என்பது உண்மை. களவானியே தனது தந்திரத்தால் மற்றவரை பழி சுமத்துவது கேவலதிலே கேவலம்தான். நம்பிய ஜாதி வெறியர்களை ஏமாற்றிவிட்டார்கள் சாதிவெறிபிடித்த போலிகள்.

 4. போடா ஜாதி வெறி பிடித்த வினவு… உன் கற்பனைக்கு அளவே இல்லடா…

 5. கொசு கடித்தால் அடிப்பது குற்றம்.ஒரு நாய் கடித்தால் அதை அடிக்க கூடாது.பாம்பு கடித்தாலும் அடிப்பது குற்றம்.,ஒரு மனித மிருக்கத்தால் ஒரு குடும்பமே இறந்தாலும் பரவாயில்லை ஆனால் அதற்க்கு காரணமான மனித மிருகத்தை கண்டிக்கவோ தண்டிக்கவோ கூடாது.,போங்கடா நீங்களும் உங்க சட்டமும்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க