privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசமூகம்சாதி – மதம்அம்பேத்கர் விழாவில் கண்ணீர் சிந்திய தலித்துகள் !

அம்பேத்கர் விழாவில் கண்ணீர் சிந்திய தலித்துகள் !

-

“எங்களைக் கொல்லாதீர்கள்!” – அம்பேத்கர் விழாவில் கண்ணீர் சிந்திய தலித்துகள் : ஆனந்த் தெல்தும்டே

manual-scavenging-1பாபா சாகேப் அம்பேத்கரின் 125-வது பிறந்த நாள் விழாவைக் கொண்டாட நாடு தயாராகிக் கொண்டிருந்த வேளையில், தாழ்த்தப்பட்டோரில் ஒரு பிரிவினரான மலம் அள்ளும் துப்புரவுப் பணியாளர்கள் டில்லியில் கூடியிருந்தனர். அஸ்ஸாம் மாநிலம் திப்ருகாரிலிருந்து நான்கு மாதங்களுக்கு முன் தொடங்கிய “பீம் யாத்ரா” என்ற அவர்களது பயணம், சுமார் 500 மாவட்டங்கள், 30 மாநிலங்கள், 3,500 கி.மீ. தூரத்தைக் கடந்து ஏப்ரல் 13-ம் தேதியன்று டில்லி ஜந்தர் மந்தரை வந்தடைந்திருந்தது.

manual-scavenging-caption-2அவர்களுடைய பெயர் துப்புரவுத் தொழிலாளர் இயக்கம். “எங்களைக் கொல்லாதீர்கள்!” என்பது அவர்களின் முழக்கம். ஆண்டொன்றுக்கு 22,000 துப்புரவுத் தொழிலாளர்கள் கேட்பாரின்றி கொல்லப்படுகிறார்கள். (பா.ஜ.க. எம்.பி. தருண் விஜய், சென்ற மாதம் நாடாளுமன்றத்தில் இந்தப் புள்ளிவிவரத்தை ஒப்புக் கொண்டிருக்கிறார்) தங்கள் பெற்றோரும் உற்றாரும் மலத்தொட்டிகளிலும், கழிவுநீர் சாக்கடைகளிலும் மூச்சுத் திணறி இறந்த அந்தக் கொடூரக் கதைகளை, கண்களில் நீர் வழிய, துக்கம் தொண்டையை அடைக்க விவரித்தார்கள் பல குழந்தைகள். அந்தக் கதைகள் கொடூரமானதொரு அபத்தத்தின் குறியீடுகள். ஒருபுறம் அம்பேத்கர் ஒரு மாபெரும் பிம்பமாக கட்டமைக்கப்படுகிறார். அவர் எந்த மக்களுக்காக வாழ்ந்து போராடினாரோ அம்மக்களோ உயிர் வாழ்வதற்காகக் கையேந்தி நிற்கிறார்கள். நீக்கமற நிறைந்திருக்கும் போலித்தனம்!

இந்திய அரசியல் சட்டம் தீண்டாமையை ஒழித்துவிட்டது. ஆனால் தீண்டாமையை மறு உற்பத்தி செய்யும் சூழலை மாற்றுவதற்கு அது ஒன்றும் செய்யவில்லை. துப்புரவுப் பணியாளர்கள் தீண்டாமையின் ஆகக் கொடிய வடிவத்தை அனுபவிப்பவர்கள். சாதி இந்துக்களுக்கு மட்டுமல்ல, மற்ற தலித் சாதிகளுக்கும் கூட அவர்கள் தீண்டத்தகாதவர்கள்தான். தீண்டாமை விடயத்தில் காந்தியின் கருத்துகள் எத்தனை பிற்போக்கானவையாக இருந்தாலும், “தோட்டிகள்” என்று அழைக்கப்படும் துப்புரவுப் பணியாளர்கள்தான் தலித்துகளின் பிரதிநிதிகள் என்று அவர் சரியாகவே அடையாளம் கண்டார். தன் கருத்தை நிலைநாட்ட அவர்களில் ஒருவனாகத் தன்னை அடையாளம் காட்டிக் காட்டிக்கொண்டார். அவர்கள் மீதான அன்பைக் காட்டுவதற்காக அவர்கள் குடியிருப்பிலேயே வாழ்ந்தார். காந்தியின் பெயரால் உறுதியேற்றுக் கொள்ளும் அரசு, மனிதத்தன்மையைக் கொல்லும் இந்த பணியை சட்டவிரோதமாக்குவதற்கும் அம்மக்களுடைய மறுவாழ்வுக்கும் முன்னுரிமை தந்திருக்க வேண்டும். ஆனால் மனித மலத்தை மனிதனே அள்ளும் கொடுமை பற்றி பெரும் கவலை கொண்டிருப்பது போல காட்டிக் கொள்ளும் இந்த அரசு, அடுக்கடுக்காக கமிட்டிகளை மட்டும் அமைத்து இப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதை மட்டும் கடந்த
46 ஆண்டுகளாகத் தள்ளிப்போட்டு வருகிறது.

manual-scavenging-modi-clean-india
நரேந்திர மோடியின் தூய்மை இந்தியா திட்டம் எத்துணை பெரிய மோசடி

1949-ல் தொடங்கிய இந்த ஆட்டம் இன்று வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது. 1949-ல் அன்றைய பம்பாய் அரசு, வி.என். பார்வே என்பவர் தலைமையில் “துப்புரவுப் பணியாளர் வாழ்நிலை ஆய்வுக்குழு” ஒன்றை அமைத்தது. 1952-ல் அக்குழு தனது அறிக்கையை கொடுத்தது. 1955-ல் மத்திய உள்துறை அமைச்சகம் அக்குழுவின் முதன்மையான பரிந்துரைகள் அனைத்தையும் எல்லா மாநில அரசுகளுக்கும் சுற்றுக்கு விட்டு, அவற்றை அமல்படுத்துமாறு கோரியது. எதுவும் நடக்கவில்லை.

1957-ல் என்.ஆர்.மல்கானி என்பவர் தலைமையில் மத்திய உள்துறை அமைச்சகம் ஒரு குழுவை அமைத்து, மலம் அள்ளும் தொழிலை முடிவுக்கு கொண்டுவர திட்டம் வகுக்குமாறு கோரியது. 1960-ல் தனது அறிக்கையை அளித்த இக்குழு, மனிதக் கழிவை மனிதர் அகற்றும் கொடுமையை மூன்றாவது ஐந்தாண்டு திட்ட காலத்திற்குள் முடிவுக்கு கொண்டு வர மத்திய மாநில அரசுகள் திட்டமிட வேண்டுமெனக் கோரியது. இதுவும் நடக்கவில்லை.

நகராட்சி நிர்வாகத்துக்கு வெளியே, தனியார் கழிவறைகளில் மனித மலத்தை அகற்றும் பணி, பரம்பரைத் தொழிலாக துப்புரவுப் பணியாளர்கள் மீது திணிக்கப்படும் இடங்களில் அதனை முடிவுக்கு கொண்டு வருமாறு 1965-ல் இன்னொரு குழு பரிந்துரைத்தது. இதுவும் கிடப்பில் போடப்பட்டது.

1968-69 ல் தொழிலாளர்களுக்கான தேசிய கமிசன், துப்புரவுப் பணியாளர்களின் பணிநிலை மற்றும் வாழ்நிலைகளை முறைப்படுத்துவதற்கு ஒருங்கிணைந்த சட்டமொன்றை இயற்றுமாறு பரிந்துரைத்தது. காந்தி நூற்றாண்டையொட்டி 1969-ல் திறந்த கழிவறைகள் அனைத்தையும், நவீனக் கழிவறைகளாக மாற்றுவதற்கான திட்டம் அறிவிக்கப்பட்டது. அது துவக்க நிலையிலேயே தோல்வியடைந்தது. இதே திட்டத்தை 1980-ல் அறிவித்த உள்துறை அமைச்சகம், மனிதக் கழிவகற்றும் பணியிலிருந்து விடுவிக்கப்பட்ட துப்புரவுப் பணியாளர்களையும் அவர்களது சுற்றத்தாரையும் குறிப்பிட்ட சில நகரங்களில் வேறு கவுரவமான தொழில்களில் பணியமர்த்தும் திட்டம் ஒன்றை அறிவித்தது. 1985-ல் இத்திட்டம் உள்துறையிடமிருந்து மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு மாற்றப்பட்டது. 1991-ல் திட்டக்குழு இத்திட்டத்தை இரண்டாகப் பிரித்தது. கழிவறைகளை மாற்றியமைக்கும் பொறுப்பு ஊரக வளர்ச்சித்துறை மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத்துறைகளிடம் ஒப்படைக்கப்பட்டது. துப்புரவுப் பணியாளர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் பொறுப்பு மக்கள் நல்வாழ்வுத் துறையிடம் விடப்பட்டது. 1992-ல் துப்புரவுப் பணியாளர்களை மனிதக்கழிவகற்றும் பணியிலிருந்து விடுவித்தல் மற்றும்
மறுவாழ்வளித்தல் என்ற திட்டத்தை நல்வாழ்வுத்துறை அறிவித்தது. எதுவும் நடக்கவில்லை.

கிரிமினல் அலட்சியம்!

manual-scavenging-killed-in-drainage
விழுப்புரம்-கா.குப்பம் பகுதியில் சாக்கடை அடைப்பை நீக்குவதற்காக இறங்கிய 19 வயதான அந்தோணிராஜுக்கு அந்தக் குழியே சவக்குழியானது. (கோப்புப் படம்)

அரசமைப்புச் சட்டத்தின் பிரிவுகள் 14, 17, 21, 23 ஆகியவற்றின் படியே மனிதக்கழிவகற்றும் பணி தடுக்கப்பட்டிருக்க வேண்டும். சிவில் உரிமைப் பாதுகாப்புச் சட்டம் (1955) இன் 7அ மற்றும் 15அ பிரிவுகள், மனிதக்கழிவகற்றும் பணியிலிருந்து துப்புரவுப் பணியாளர்களை விடுவிப்பதற்கும், தொடர்ந்து அவர்களை அப்பணியில் ஈடுபடுத்துவோருக்கு தண்டனை விதிக்கவும் வகை செய்கின்றன.

1993-ல் “மனிதக் கழிவு அகற்றுதல் மற்றும் திறந்த கழிவறைகள் தடுப்புச் சட்டம்” என்றொரு மத்திய சட்டம் இயற்றப்பட்டது. 1997 வரை அது அரசிதழில் வெளியிடப்படவில்லை. 2000 ஆண்டு வரையில் எந்த மாநிலமும் இதன் அடிப்படையில் சட்டமியற்றவில்லை. துப்புரவுப் பணியாளர்களின் குழந்தைகளால் 1994-இல் துவக்கப்பட்ட “சஃபாய் காம்கார் ஆந்தோலன்” என்ற அமைப்பும், சில தன்னார்வக் குழுக்களும், மலம் அள்ளும் தொழிலில் ஈடுபடும் சமூகத்தைச் சேர்ந்த 7 பேரும் இணைந்து டிசம்பர் 2003-ல் பொதுநல வழக்கு ஒன்றை உச்ச நீதிமன்றத்தில் தொடுத்தனர். நீதிமன்ற அவமதிப்புக்காக அரசின் மீது நடவடிக்கை கோரினர். “தங்கள் மீது தவறே இல்லை” என்று மாநில அரசுகள் வாதாடின. இந்தப் பொய்யை முறியடிக்க, ஏராளமான தரவுகளைத் திரட்டி 12 ஆண்டு காலம் போராடி, 27 மார்ச் 2014 அன்று ஒரு சாதகமான தீர்ப்பினைப் பெற்றனர்.

“1993 முதல் மனிதக் கழிவு அகற்றும் பணியிலும் கழிவுநீர் கால்வாயிலும் உயிரிழந்த துப்புரவுப் பணியாளர்களின் குடும்பத்தினருக்கு பத்து லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும்” என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. 1268 பேர் இவ்வாறு இறந்திருப்பதாகவும், இவர்களில் 18 பேருக்கு மட்டுமே நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது என்றும் பீம் யாத்ராவில் பங்கேற்றவர்கள் தமது உரையில் குறிப்பிட்டனர்.

மனிதக் கழிவகற்றும் பணியைத் தடை செய்து 2013-ல் நாடாளுமன்றமும் ஒரு சட்டம் பிறப்பித்திருக்கிறது. ஆனால் எல்லா மாநில அரசுகளும் “எங்கள் மாநிலத்தில் இப்பிரச்சினை இல்லவே இல்லை” என்றே சாதிக்கின்றன. ஆனால் 7,94,000 பேர் மனிதக்கழிவு அகற்றும் பணியில் ஈடுபட்டிருப்பதாக 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு கூறுகிறது. இச்சட்டத்தை மீறுவோரில் மற்றெல்லோரையும் விட அரசுக்குத்தான் முதலிடம்.

ரயில்வே துறை வடிவமைக்கும் ரயில் பெட்டிகளின் கழிவறைகள், தண்டவாளத்தில் மலம் விழுகின்ற வகையில்தான் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. அவற்றைத் துப்புரவுப் பணியாளர்கள்தான் தம் கையால் சுத்தம் செய்கிறார்கள். “தூய்மை இந்தியா இயக்கத்தின் விளைவாக 2019-ல் இந்தியாவில் மனிதக் கழிவை மனிதர் அகற்றுவது முடிவுக்கு வந்து விடும்” என்று தடபுடலாக அறிவித்தது மட்டுமின்றி, இந்தியாவில் புல்லட் ரயில் வலைப்பின்னலை உருவாக்கப்போவதாகவெல்லாம் பேசினார் பிரதமர். ஆனால் ரயில் பெட்டிகளில் உள்ள இந்தக் கழிவறைகள், பயோ டாய்லெட்டுகளாக எப்போது மாற்றியமைக்கப்படும் என்பதற்கு மட்டும், ஒரு கால இலக்கை அவரால் சொல்ல முடியவில்லை.

ஏன் இந்த அலட்சியம்?

manual-scavenging-caption-1ஏப்ரல் 19-ம் தேதியன்று, பீம் யாத்ரா எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த மைய அரசு, மனிதக் கழிவை அகற்றும் துப்புரவுப் பணியாளர்கள் பற்றிய விவரங்களை மாநில அரசுகளிடமிருந்து பெற முடியவில்லை என்பதால், தானே நேரடியாக ஆய்வு நடத்த முடிவு செய்திருப்பதாகக் கூறியிருக்கிறது. அரசுக்கு இதில் ஈடுபாடில்லை என்பது பளிச்சென்று தெரிகிறது. இந்த ஆய்வைக் காட்டி இன்னும் பத்து ஆண்டுகளுக்கு துப்புரவுப் பணியாளர்கள் இழுத்தடிக்கப்படுவார்கள்.

உலக அரங்கில் தலைமைப் பாத்திரம் ஆற்ற பெரிதும் ஆசைப்படும் ஒரு தேசம், இப்படிப்பட்ட ஒரு அவமானத்தை எதற்காகச் சுமக்க வேண்டும்? இதற்கு விடை காண்பது கடினமல்ல. ஆகச்சிறுபான்மையான துப்புரவுப் பணியாளர் சமூகம் துண்டு துண்டாக சிதறிக் கிடக்கிறது. மொத்த சமூகத்திலிருந்து மட்டுமின்றி, தலித் சமூகத்திலிருந்தும் துண்டிக்கப்பட்டு எல்லா ஊர்களிலும் ஏதோ ஓர் மூலையிலுள்ள சேரியில் ஒடுங்கிக் கிடக்கிறது. அரசியல் கட்சிகளின் வாக்கு கணக்கில் இந்தச் சமூகத்துக்கு எந்த முக்கியத்துவமும் இல்லை. இருப்பினும், இது பற்றி ஏன் பேசுகிறார்கள் என்றால், இப்பிரச்சினை தங்களுடைய தேசிய கவுரவத்துக்கு இழுக்காக அமைந்திருப்பதாக எண்ணி ஆளும் வர்க்கத்தினர் சங்கடப்படுகிறார்கள். அந்தக் காலத்து சீர்திருத்தவாதிகள், நியாயப்படுத்த முடியாத கவுரவக் குறைச்சலான விவகாரமாக தீண்டாமையைக் கருதினார்களல்லவா, அது போலத்தான். தீண்டாமையைப் போலவே, மனிதக் கழிவை மனிதர் அகற்றும் வழக்கமும் நிலப்பிரபுத்துவக் கலாச்சாரத்துடன் இணைந்திருக்கிறது. இதனை ஒழித்தால் பெரும்பான்மை சமூகத்தின் அதிருப்தியை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

இப்பிரச்சினையின்பால் ஆளும் வர்க்கம் கடைப்பிடிக்கும் அணுகுமுறையைப் புரிந்து கொள்வதில் நமக்கு சிரமம் ஒன்றும் இல்லை. மனிதக் கழிவகற்றும் துப்புரவுப் பணியாளர்களின்பால் தலித் இயக்கங்கள் காட்டும் அலட்சியம்தான் விசித்திரமானது. மைய நீரோட்டத்திலுள்ள தலித் அமைப்புகள் இப்பிரச்சினையைக் கையிலெடுத்ததே இல்லை. அரசியல் பிரதிநிதித்துவத்தைப் பெறுவது மட்டும்தான் தலித் இயக்கத்தின் முதன்மையான போர்தந்திரமாக உள்ளது.

protest-against-manual-scavenging
கையால் மலம் அள்ளும் இழிவு தாழ்த்தப்பட்டோர் மீது சுமத்தப்படுவதை முற்றிலுமாகத் தடை செய்யக் கோரி கோயம்புத்தூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம். (கோப்புப் படம்)

அம்பேத்கர் அரசியலில் பிரதிநிதித்துவம் பெறப் போராடினார். பின்னர் அதனை பொது வேலைவாய்ப்பிற்குக் கொண்டு சென்றார். வேலைவாய்ப்புக்கு கல்வி முன் நிபந்தனை ஆனது. தலித் மக்களின் அரசியல் நலன்களை தலித் அரசியல்வாதிகள் பாதுகாப்பார்கள் என்பதும், அதிகார வர்க்கப் பதவிகளில் அமரும் படித்த தலித்துகள் உழைக்கும் மக்களுக்கு பாதுகாப்புக் கவசமாக விளங்குவார்கள் என்பதும் அவரது எதிர்பார்ப்பு. எனவேதான், பெரும்பான்மைதலித் மக்களின் பொருளாயத பிரச்சினைகள் கையாளப்படவில்லை. உழைக்கும் தலித் மக்களிடமிருந்து தன்னை அந்நியப்படுத்திக் கொண்டுவிட்ட தலித் இயக்கத்தின் அக்கறையோ, இட ஒதுக்கீடு மட்டும்தான் என்று ஆகிவிட்டது.

கடந்த 70 ஆண்டுகளில் தலித் மக்கள் மத்தியில் உருவாகி வந்திருக்கும் நடுத்தர வர்க்கம், தலித் மக்களிடமிருந்து முற்றாகத் தன்னைத் துண்டித்துக் கொண்டு விட்டது. பீம் யாத்ராவில் அம்பேத்கர் மாபெரும் உந்து சக்தியாகத் திகழ்ந்ததும், அம்பேத்கரிஸ்டுகள் யாரும் அங்கே இல்லாமலிருந்ததும் மேற்கண்ட உண்மையின் வெளிப்பாடாக அமைந்திருந்தது. குறிப்பிடத்தக்க முற்போக்காளர்கள் பலரும் ஏழைத் துப்புரவுப் பணியாளர்களின் போராட்டத்துக்கு தமது ஆதரவைத் தெரிவித்துக் கொண்டனர். ஆனால் அம்பேத்கரிஸ்டுகள் என்று தம்மை அழைத்துக் கொள்வோர், அங்கே வராமலிருந்ததன் மூலம் தம்மை இனங்காட்டிக் கொண்டனர்.

(எகனாமிக் அண்டு பொலிடிகல் வீக்லி, மே,7, 2016 இதழில் வெளியான கட்டுரையின் சற்றே சுருக்கப்பட்ட மொழியாக்கம்)
______________________________
புதிய ஜனநாயகம், ஜூன் 2016
______________________________

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க