பிரதமர் பதவியில் ஒரு மோடி மஸ்தான் !

-

ரு முப்பது, நாற்பது ஆண்டுகளுக்கு முன்பெல்லாம், நகர்ப்புறத்துக் கடைவீதிகளில் மோடி வித்தை நடப்பது வழமையான ஒன்று. அந்த வித்தையை நடத்துபவர் பாம்பையும் கீரியையும் மோதவிடப் போவதாக சவுண்டுவிட்டுக் கொண்டேயிருப்பார். ஆனால், எவ்வளவு நேரமானாலும் அந்த மோதல் நடந்துவிடாது.ஆனாலும், அந்த மோதலை வேடிக்கைப் பார்ப்பதற்காகக் கூடும் அப்பாவிகளிடமிருந்து துட்டைக் கறந்துவிடுவார், அவர்.

பொது மக்களின் ‘விழிப்புணர்வு’ காரணமாகவோ அல்லது இந்தியா ‘நவீனமயமாக’ உருவாகிக் கொண்டிருப்பதன் காரணமாகவோ, இந்த மோடி வித்தை தற்காலத்தில் அழியும் நிலைக்குச் சென்றுவிட்டது. பிறகு ஏன், இந்த மலரும் நினைவுகள் எனக் கேட்கிறீர்களா? குஜராத்தில் நடந்து, தற்பொழுது அம்பலமாகியிருக்கும் எரிவாயு துரப்பணவு மோசடியைப் படிக்க நேர்ந்தபொழுது, இந்த மோடிவித்தைதான் எனக்குச் சட்டென நினைவுக்கு வந்தது.

குஜராத் அரசு பெட்ரோலியக் கழகத்தின் கார்ப்பரேட் அலுவலகம்
குஜராத் தலைநகர் காந்திநகரில் அமைந்துள்ள குஜராத் அரசு பெட்ரோலியக் கழகத்தின் கார்ப்பரேட் அலுவலகம்: 20,000 கோடி ஊழலின் தலைமையகம்

தெருவோரத்தில் மோடி வித்தையை நடத்திப் பிழைப்பவனுக்கு மோடி மஸ்தான் என்று பெயர். குஜராத்தில் நடந்துள்ள எரிவாயு மோசடிக்குச் சூத்திரதாரியாக இருந்தவரின் பெயர் நரேந்திர தாமோதரதாஸ் மோடி.

நரேந்திர மோடி குஜராத் முதல்வராக இருந்த சமயத்தில், 2005-ஆம் ஆண்டு வாக்கில், நாடே விக்கித்துப் போகும் வண்ணம், “குஜராத் அரசு பெட்ரோலியக் கழகம், கிருஷ்ணா-கோதாவரிப் படுகையில் 20 இலட்சம் கோடி கன அடி இருப்பு கொண்ட இயற்கை எரிவாயுயைக் கண்டுபிடித்துவிட்டதாகவும், இதன் வர்த்தக மதிப்பு 40 இலட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமானதென்றும், இந்தக் கண்டுபிடிப்பு நாட்டின் எரிசக்தி தேவையை முழுமையாகப் பூர்த்தி செய்வதோடு, ஏற்றுமதிக்கான வாய்ப்புகளையும் திறந்துவிட்டிருப்பதாகவும், குஜராத் அரசு பெட்ரோலியக் கழகம் அப்படுகையில் 2007-இல்எரிவாயு உற்பத்தியைத் தொடங்கிவிடுமென்றும்” அதிரடியாக அறிவித்தார்.

இந்தப் பிரமிக்கத்தக்க அறிவிப்பை மோடி வெளியிட்டு 11 ஆண்டுகளும், உற்பத்தி தொடங்குவதற்காக நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடு முடிந்து 9 ஆண்டுகளும் கழிந்துவிட்டன. ஆனால், குஜராத் அரசு பெட்ரோலியக் கழகம் அந்தப் படுகையிலிருந்து இதுநாள் வரை ஒரு கன அடி எரிவாயுவைக்கூட உற்பத்தி செய்யவில்லை. மாறாக, மோடி மஸ்தான் பாம்பையும் கீரியையும் காட்டி காசு பிடுங்குவதைப் போல, கிருஷ்ணா-கோதாவரிப் படுகையிலிருந்து இந்த ஆண்டு எரிவாயுவை உற்பத்தி செய்துவிடுவோம், அடுத்த ஆண்டு உற்பத்தி செய்துவிடுவோம் எனப் போங்காட்டம் ஆடியே, கடந்த 2008-ஆம் ஆண்டு தொடங்கி 2015-ஆம் ஆண்டு முடியவுள்ள ஏழே ஆண்டுகளில், 19,720 கோடி ரூபாயை 13 பொதுத்துறை வங்கிகளிடமிருந்து கடனாக உருவிக் கொண்டுவிட்டது.

gujarat-modi-empty-show
குஜராத் அரசு பெட்ரோலியக் கழகத்திற்கும் பிரிட்டிஷ் கேஸ் நிறுவனத்திற்கும் இடையே இயற்கை எரிவாயு வணிகம் தொடர்பாக நடந்த பேச்சு வார்த்தையில் கலந்துகொண்ட அன்றைய குஜராத் முதல்வர் நரேந்திர மோடி உள்ளிட்டோர்: நரேந்திர மோடி அரசின் வெட்டி பந்தா. (கோப்புப் படம்)

குஜராத் பெட்ரோலியக் கழகம் கிருஷ்ணா-கோதாவரிப் படுகையில் எரிவாயு உற்பத்தியைத் தொடங்கவில்லை என்பது மட்டுமல்ல, அப்படுகையில் குஜராத் அரசிற்கு ஒதுக்கப்பட்ட வயலில் எரிவாயு இருக்கிறதா, அப்படியே இருந்தாலும் அதனை எடுக்க முடியுமா, அப்படியே எடுத்தாலும் அதனை இலாபம் தரத்தக்க வகையில் சந்தையில் விற்க முடியுமா எனப் பல கேள்விகளும் சந்தேகங்களும் இத்திட்டம் குறித்து எழுப்பப்பட்டுள்ளன. ஏனென்றால், இந்தத் திட்டம் குறித்து குஜராத் பெட்ரோலியக் கழகம் 2009-இல் வெளியிட்ட ஆய்வறிக்கையில், அந்த வயலில் ஒரு இலட்சத்து பத்தாயிரம் கோடி கன அடி மட்டுமே எரிவாயு இருப்பதாகக் கூறியது. வடிவேலுவின் கிணறு காணாமல் போனது போல, 19 இலட்சம் கோடி கன அடி எரிவாயு ‘காணாமல்’ போய்விட்டது மட்டுமல்ல, பூமிக்கு அடியில் புதைந்து கிடப்பதாகச் சொல்லப்படும் இந்த ஒரு இலட்சம் கோடி கன அடி எரிவாயுவை எடுப்பதும் கடந்த ஆறு ஆண்டுகளாக வெறும் காகிதத் திட்டமாகத்தான் இருந்து வருகிறது.

gujarat-petrol-scam-caption-1சங்கப் பரிவாரத்தின் மூத்த தலைவர்களுள் ஒருவரான தீனதயாள் உபாத்யாயாவின் நினைவாக தீனதயாள் மேற்கு எனப் பெயரிடப்பட்டுள்ள அந்த வயலில் உள்ள 20 இலட்சம் கோடி கன அடி எரிவாயுவை 1,500 கோடி ரூபாய் செலவில், 2007-இல் எடுக்கத் தொடங்கிவிடுவோம் என 2005-இல் அறிவித்தார், மோடி. அதன் பின், அவரே உற்பத்தி 2011-இல் தொடங்கிவிடும் என்றும், மூலதனச் செலவு 4,100 கோடி ரூபாயாக அதிகரிக்கும் என 2008-இல் அறிவித்தார். இதன் பிறகு, இத்திட்டம் குறித்து அறிக்கைகளைச் சமர்ப்பித்த பங்குச் சந்தை கண்காணிப்பு வாரியம், மத்தியத் தணிக்கைத் துறை, குஜராத் அரசு பெட்ரோலியக் கழகம் ஆகிய நிறுவனங்கள் தீனதயாள் மேற்கு வயலில் ஒரு இலட்சத்துப் பத்தாயிரம் கோடி கன அடி மட்டுமே எரிவாயு இருப்பதாகக் கூறியதோடு, இந்த எரிவாயுவை எடுப்பதற்கான மூலதனச் செலவை 8,500 கோடி, 13,000 கோடி, 18,000 கோடி என அதிகரித்துக் கொண்டே சென்றன. இறுதியாக, 2015-இல் அறிக்கை அளித்த மத்திய தணிக்கைத் துறை ஒரு இலட்சத்து பத்தாயிரம் கோடி கன அடி எரிவாயுவை எடுக்க 19,600 கோடி ரூபாய் மூலதனம் தேவைப்படும் என்றும் உற்பத்தி 2016-இல் தொடங்கக் கூடும் என்றும் அறிவித்தது.

ஜெய்ராம் ரமேஷ்
குஜராத் அரசு பெட்ரோலியக் கழகத்தில் நடந்துள்ள 20,000 கோடி ரூபாய் பெறுமான ஊழலைத் தொடர்ச்சியாக அம்பலப்படுத்திவரும் காங்கிரசு கட்சியைச் சேர்ந்த முன்னாள் சுற்றுப்புறச் சுழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ்

ஆனால், இதுவரை உற்பத்தி தொடங்கவில்லை. மாறாக, மூலதனச் செலவிற்காகப் பொதுத்துறை வங்கிகளிடமிருந்து வாங்கப்பட்ட கடன் மட்டும் அதிகரித்துக் கொண்டே சென்றிருக்கிறது. 2011-இல் உற்பத்தி தொடங்கிவிடும் எனக் காட்டி 2008-இல் 2,386 கோடி ரூபாய் கடன் பெறப்பட்டிருக்கிறது. 2012-இல் உற்பத்தி தொடங்கிவிடும் எனக் கூறப்பட்ட நேரத்தில் இந்தக் கடன் 6,383 கோடி ரூபாயாக அதிகரித்தது. 2013-இல் கம்பெனி உற்பத்தியை எட்டிவிடும் எனக் கூறப்பட்டபொழுது, கடன் 9,723 கோடி ரூபாயை எட்டிப் பிடித்தது. இப்படியாக 13,900 கோடி ரூபாய், 16,000 கோடி ரூபாய் என அதிகரித்த கடன் தொகை தற்பொழுது 19,716 கோடி ரூபாயைத் தொட்டுவிட்டது.

20 இலட்சம் கோடி கன அடி எரிவாயுவைக் கண்டுபிடித்துவிட்டதாக மோடி அறிவித்ததும்; திட்டச் செலவை 1,500 கோடி ரூபாயிலிருந்து 19,716 கோடி ரூபாயாக அதிகரித்துக் கொண்டே சென்றிருப்பதும்தான் இந்த எரிவாயு ஊழலின் முக்கிய அம்சங்கள். மூலதனச் செலவை அதிகரித்துக் காட்டுவதற்காகவே பல்வேறு முறைகேடுகளும் மோசடிகளும் தில்லுமுல்லுகளும் நடந்துள்ளன. அதிலொன்றுதான் இத்திட்டம் குறித்து தயாரித்து அளிக்கப்பட்ட அறிக்கை. வெறும் நூறு பக்கங்களைக் கொண்ட அந்த அறிக்கையைத் தயாரித்து அளிப்பதற்குள், வங்கிகளிடமிருந்து 4,800 ரூபாய் கடன் பெறப்பட்டிருக்கிறது.

உலகிலேயே 4,800 கோடி கடனில் தயாரிக்கப்பட்ட முதல் அறிக்கை இதுவாகத்தான் இருக்கும். அப்படிபட்ட “காஸ்ட்லியான” அறிக்கையில் தீனதயாள் மேற்கு வயலில் ஒரு இலட்சத்துப் பத்தாயிரம் கோடி கன அடி மட்டுமே எரிவாயு இருப்பதாகக் கூறப்பட்டாலும், அத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது விழலுக்கு இறைத்த நீர் என்ற உண்மையும் அம்பலத்துக்கு வந்தது. இந்த அறிக்கை வெளிவந்த சமயத்தில் சர்வதேச சந்தையில் எரிவாயுவின் விலை 4.2 டாலராக இருந்தது. ஆனால், அறிக்கையோ இந்த வயலில் இருந்து எடுக்கப்படும் எரிவாயுவை 5.7 டாலருக்கு விற்றால்தான் இலாபம் பார்க்க முடியும் எனக் குறிப்பிட்டது. குஜராத் அரசு தயாரித்த அறிக்கையே இத்திட்டம் இலாபகரமானது அல்ல எனக் காட்டிவிட்ட பிறகும், மோடி கும்பல் திட்டத்தைக் கைவிடாமல் உடும்புப் பிடியாகப் பிடித்துக் கொண்டு நின்றதற்குக் காரணம், அக்கும்பலுக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் இடையேயான நெருக்கம்.

gujarat-petrol-scam-caption-2இந்த வயலில் இருந்து எரிவாயுவை எடுக்கும் வேலை ஒப்பந்த அடிப்படையில் அதானி குழுமம், குஜராத்தைச் சேர்ந்த டஃப் டிரில்லிங் மற்றும் மொரீஷியஸ், பார்போடாஸ் ஆகிய வரியில்லா சொர்க்கத் தீவுகளைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் லெட்டர் பேடு நிறுவனங்களுக்குத் தாரை வார்க்கப்பட்டிருக்கிறது. எரிவாயுவை இந்த ஆண்டு எடுத்துவிடுவோம், அடுத்த ஆண்டு எடுத்துவிடுவோம் எனக் கூறிப் பொதுத்துறை வங்கிகளிடமிருந்து பெறப்பட்ட கடனின் பெரும்பகுதியை இந்த உப்புமா கம்பெனிகள்தான் விழுங்கியுள்ளன.

குறிப்பாக, டஃப் டிரில்லிங் நிறுவனத்திற்கும் எரிவாயு துரப்பணவு தொழிலுக்கும் ஒட்டும் இருந்தது கிடையாது, உறவும் இருந்தது கிடையாது. ஆயுத்த ஆடை தயாரிப்புதான் அந்த நிறுவன முதலாளிகளின் பூர்வாசிரமத் தொழில். குஜராத் அரசு கிருஷ்ணா-கோதாவரிப் படுகையில் எரிவாயு எடுக்கும் திட்டத்தை அறிவித்தவுடனேயே, அம்முதலாளிகள் டஃப் டிரில்லிங் நிறுவனத்தைத் தொடங்கி, 5000 கோடி ரூபாய் பெறுமான ஒப்பந்தத்தைப் பெற்றார்கள். கிருஷ்ணா-கோதாவரிப் படுகையில் எரிவாயுவை எடுப்பதற்கு நவீனமான உயர் தொழில்நுட்பமும் நிபுணத்துவமும் தேவைப்படும் நிலையில், குஜராத் பெட்ரோலியக் கழகம் முன் அனுபவமேயில்லாத ஒரு உப்புமா கம்பெனிக்கு இவ்வளவு பெரிய தொகை கொண்ட ஒப்பந்தத்தை வழங்கியதற்குக் காரணம், அதானி குழுமத்தைப் போலவே இவர்களும் மோடிக்கும் நெருக்கமானவர்கள் என்பதுதான்.

எரிவாயுவை எடுப்பதற்குத் தேவையான கனரக இயந்திரங்களை வாங்கிய செலவு 2,000 கோடி ரூபாய்; கம்பெனியின் பிறவகை செலவுகள் 500 கோடி ரூபாய்; உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் குத்தகைக்கு எடுத்த வயல்களைத் திரும்ப ஒப்படைத்த வகையில் ஏற்பட்ட நட்டம் 2,514 கோடி ரூபாய்; ஒப்பந்த நிறுவனங்களிடமிருந்து வர வேண்டிய நிலுவைத் தொகை 2,000 கோடி ரூபாய் எனக் கணக்குகளைக் காட்டி, பொதுத்துறை வங்கிகளிடமிருந்து பெற்ற கடன்களை குஜராத் பெட்ரோலியக் கழகமும், அதன் ஒப்பந்த நிறுவனங்களும் கூட்டுச் சேர்ந்து ஏப்பம் விட்டுள்ளன.

கௌதம் அதானி
குஜராத் அரசு பெட்ரோலியக் கழகத்தில் நடந்திருக்கும் ஊழலில் நரேந்திர மோடியின் நெருங்கிய கூட்டாளி கௌதம் அதானிக்குப் பெரும் பங்குண்டு

குஜராத் பெட்ரோலியக் கழகம் பொதுத்துறை வங்கிகளுக்குக் கட்ட வேண்டிய வட்டி ஆண்டொன்றுக்கு 2,000 கோடி ரூபாய். ஆனால், அந்த நிறுவனத்தின் ஆண்டு வருமானமே 682 கோடி ரூபாய்தான். அதனின் துணை நிறுவனங்களிலிருந்து கிடைக்கும் வருமானத்தையும் சேர்த்தால், 1,219 கோடி ரூபாய். வட்டி கட்டுவதற்குக்கூட வருமானம் இல்லாமல் திவால் நிலையை எட்டிவிட்ட குஜராத் பெட்ரோலியக் கழகத்திற்கு மேலும் மேலும் சலுகைகள் காட்டப்படுகின்றன.

தீனதயாள் மேற்கு வயலில் உள்ள எரிவாயு மிகவும் ஆழத்திலும் இறுக்கமாகவும் புதைந்து கிடப்பதாகவும், அதனைத் துரப்பணவு செய்து எடுக்க மிகவும் நவீனமான தொழில்நுட்பம் தேவைப்படுவதாகவும், அதனால்தான் கடந்த ஒன்பது ஆண்டுகளாக உற்பத்தியைத் தொடங்க முடியாமல் போய்விட்டதாகவும் கூறித் தாமதத்தை நியாயப்படுத்தி வரும் மோடி ஆதரவாளர்கள், மறுபுறமோ 40,000 @காடி ரூபாய் பெறுமானமுள்ள அந்த எரிவாயுவை நாளைக்கே எடுத்து, அதற்கு மறுநாளே விற்றுப் பொதுத்துறை வங்கிகளின் கடனை அடைத்துவிட முடியுமென்றும் உதார் விடுகிறார்கள்.

ஆனால், குஜராத் பெட்ரோலியக் கழகமோ வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட முடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறது. அதனால் இந்த நிறுவனம் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவிடமிருந்து பெற்றுள்ள 3,000 கோடி ரூபாய் பெறுமான கடன் மறுசீரமைப்பு செய்யப்பட்டிருப்பதோடு, இந்த நிறுவனம் வட்டி கட்டுவதற்கு வசதியாக 3,500 கோடி ரூபாயை, அமெரிக்க டாலராக ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, பரோடா வங்கி உள்ளிட்ட பொதுத்துறை வங்கிகள் வழங்கியுள்ளன.

பூமியின் அடியில் புதைந்து கிடக்கும் கச்சா எண்ணெய், எரிவாயு வளங்களை அப்படியே முழுவதுமாக எடுத்துவிட முடியாது என்பதால், மோடியின் ஆதரவாளர்கள் வீசும் வாக்குறுதிகளைத் துரப்பணவு தொழில் நிபுணர்கள்கூட நம்ப மறுக்கிறார்கள். தீனதயாள் மேற்கு வயலில் உள்ளதாகக் கூறப்படும் ஒரு இலட்சத்து பத்தாயிரம் கோடி கன அடி இருப்பில் இருந்து எவ்வளவு கன அடி எரிவாயுவை எடுக்க முடியும், அதனை எந்தளவிற்கு இலாபகரமாக விற்க முடியும் என்ற கேள்விகளுக்குத் திட்டமிட்டே பதில் அளிக்க மறுக்கிறது, மோடி கும்பல். தெருவோரத்தில் நடக்கும் மோடி வித்தையில் பாம்பையும் கீரியையும் காட்டிப் பொதுமக்களை ஏமாற்றுவதைப் போல, புதைந்து கிடக்கும் எரிவாயு இருப்பை மட்டுமே காட்டித் தமது மோசடிகளை நியாயப்படுத்திவிட முயன்று வருகிறது, மோடி கும்பல்.

gujarat-petrol-scam-caption-3இந்தத் திட்டம் கூடுதல் செலவு பிடிக்கும் தோல்வியடைந்த ஒன்று என 2015-இல் மத்திய தணிக்கைத் துறை தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதோடு, இதில் நடந்துள்ள முறைகேடுகளையும் அந்த அறிக்கையில் பட்டியல் இட்டிருக்கிறது. குஜராத் பெட்ரோலியக் கழகம் கிருஷ்ணா-கோதாவரிப் படுகையிலிருந்து எரிவாயுவைத் துரப்பணவு செய்வதற்கான திட்டத்தைத் தயாரிக்கும் ஒப்பந்தத்தை கனடா நாட்டைச் சேர்ர்ந்த ஜியோ குளோபல் ரிசோர்சஸ் என்ற நிறுவனத்திற்கு வழங்கியதென்றும், அந்த நிறுவனத்தின் தவறான திட்ட மதிப்பிடுகளின் காரணமாகவே கிணறுகளைத் தோண்டுவதற்கான செலவு 531 @காடி ரூபாயிலிருந்து 6,265 கோடி ரூபாயாக அதிகரித்தது என்றும்; அதானி குழுமம் மற்றும் எஸ்ஸார் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட சட்டவிரோதமான சலுகைகளின் காரணமாக 5,000 கோடி ரூபாய்க்கு இழப்பு ஏற்பட்டிருப்பதையும் மத்திய தணிக்கைத் துறை சுட்டிக் காட்டியிருக்கிறது.

அலைக்கற்றை விற்பனையில் இழப்பு ஏற்பட்டுள்ளதைப் போன்றே, கிருஷ்ணா-கோதாவரிப் படுகையில் இருந்து எரிவாயு எடுக்கும் திட்டத்திலும் பல்வேறு முறைகேடுகள் நடந்து, திட்டமும் தோற்றுப் போய், அரசிற்கும் பொதுத்துறை வங்கிகளுக்கும் இழப்பு ஏற்பட்டுள்ளது. அலைக்கற்றைகளைக் குறைந்த விலைக்குத் தனியாருக்கு விற்று நாட்டிற்கு நட்டமேற்படுத்தியது ஊழல் என்றால், எரிவாயு எடுக்கும் திட்டத்தில் அதானி, எஸ்ஸார், டஃப் டிரில்லிங், ஜியோ குளோபல் ரிசோர்சஸ் எனக் குறிப்பிட்ட சில தனியார் கார்ப்பரேட் நிறுவனங்கள் ஆதாயமடைவதற்காகப் பொதுத்துறை நிறுவனமும் அதற்குக் கடன் கொடுத்த பொதுத்துறை வங்கிகளும் மொட்டையடிக்கப்பட்டிருப்பதும் ஊழல்தான்.

இந்த எரிவாயு ஊழல் கடந்த ஒன்பது ஆண்டுகளாக நடந்து வருகிறது. இது குறித்து மத்திய தணிக்கைத் துறை ஆறு அறிக்கைகளை அளித்திருக்கிறது. எனினும், அலைக்கற்றை ஊழல் பொதுவெளியில் செய்யப்பட்ட அளவிற்கு, ஊடகங்களில் விவாதிக்கப்பட்ட அளவிற்கு எரிவாயு ஊழல் அம்பலத்திற்கு வரவில்லை. காரணம், வெளிப்படையான ஒன்று. எரிவாயு ஊழலின் சூத்திரதாரி பார்ப்பன-பாசிஸ்டு. அலைக்கற்றை ஊழலில் குற்றஞ்சுமத்தப்பட்டிருப்பவரோ சூத்திர தி.மு.க.-வைச் சேர்ந்தவர்.

– செல்வம்
______________________________
புதிய ஜனநாயகம், ஜூன் 2016

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க