Tuesday, May 30, 2023
முகப்புசெய்திதீர்த்தனகிரி டாஸ்மாக் மூடப்பட்டது - இனி இந்த ஊரு நல்லா இருக்கும்

தீர்த்தனகிரி டாஸ்மாக் மூடப்பட்டது – இனி இந்த ஊரு நல்லா இருக்கும்

-

டந்த சட்டமன்ற தேர்தலின்போது மே 5-ம் தேதி அன்று மக்கள் அதிகாரம் சார்பில் தீர்த்தனகிரி டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி போராட்டம் நடத்தப்பட்டது. இப்போராட்டத்தின் போது மக்கள் அதிகார தோழர்கள் கைது செய்யப்பட்டாலும் மக்கள் அதிகார அமைப்பின் வழிகாட்டுதலுடன் பெண்கள் திரளாக திரண்டு அன்று நாள் முழுவதும் முற்றுகையிட்டு மூடினார்கள். மீண்டும் 6-ம் தேதி திறக்க முனைந்தபோது அன்றும் போலிசுக்கு அஞ்சி பின்வாங்காமல் குறிப்பாக பெண்கள் கடையை முற்றுகையிட்டனர். தமிழ்கத்தில் நடைபெற்ற போராட்டத்தில் இரண்டு நாள் மூடியே இருந்த கடை தீர்த்தனகிரி டாஸ்மாக் கடை.

மக்கள் அதிகார அமைப்பின் வழிகாட்டுதலின்கீழ் திரண்டு மக்கள் போலிசை கண்டு கொஞ்சம் கூட பின்வாங்காமல் தொடர்ச்சியாக போராட்டம் நடத்தியதன் விளைவாக இந்தக் கடையும் தமிழக அரசின் பட்டியலில் வைக்கப்பட்டு ஜுன் 19-ம் தேதி நண்பகல் 12 மணிக்கு கோட்டாட்சியர் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது. சீல் வைத்த செய்தி தீர்த்தனகிரி வட்டாரம் எங்கும் பரபரப்பாக பேசப்பட மே 5 போராட்டத்தின் போது மக்கள் அதிகார அமைப்புடன் சேர்ந்து போராடிய பெண்களும், இளைஞர்களும் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டனர்.

மாலை 5 மணி வாக்கில் மக்கள் அதிகார தொண்டர்கள் சீருடையுடன் அணிவகுக்க தப்படித்து கொண்டே இந்த செய்தியை மக்களிடம் அறிவித்தபோது மக்கள் மகிழ்ச்சி ஆரவாரத்தில் தோழர்களை வரவேற்றனர். அனைவரும் கொளத்து மேட்டு தெரு மாரியம்மன் கோயில் தெரு முன்பாக ஒன்று கூடினார்கள். இந்த வெற்றி கூட்டத்தில் அப்பகுதியை சேர்ந்த முன்னணியாளர் ராஜ்-ம், இன்னொரு வயதான பெண்மணியும் பேசினார்கள். மக்கள் அதிகாரத்தின் சார்பில் பவாணிக்குப்பம் தோழர் கோபாலகிருஷ்ணனும், சுப்ரமணியபுரம் தோழர் நந்தாவும் உரையாற்றினார்கள்.

இறுதியாக மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் பாலு பேசியபோது, “இந்த வெற்றி என்பது மக்களின் வெற்றி. மக்கள் இல்லாமல் வரலாறு இல்லை. மக்களை பாதுகாக்க வக்கற்ற அரசு இந்த அறிவிப்பை சும்மா செய்து விடவில்லை. மக்கள் அதிகார அமைப்பின் ஓராண்டு கால போராட்டம் குறிப்பாக ஏப்ரல் 20-ம் தேதியும் மே 5-ம் தேதியும் நடைபெற்ற போராட்டத்தின் போதும் அதற்கு பின்பும் அதிகார வெறிப்பிடித்த போலிசால் பெண்கள், மாணவர்கள், இளைஞர்கள், மக்கள் அதிகார தோழர்கள் சென்னையிலும், விழுப்புரத்திலும், திருச்சியிலும், கோவையிலும் மற்றும் தமிழகம் முழுவதும் நம்மைபோல் போராடி அடி உதைபட்டு மண்டை உடைந்து, கை கால் எலும்பு முறிந்து பெண்கள் இழிவுபடுத்தப்பட்டு சிறைவாசம் சென்று பெறப்பட்ட வெற்றி. இதை யாரும் நமக்கு யாசகம் தரவில்லை. நம்முடைய வாழ்வின் நிம்மதிக்காகவும் நம்முடைய பிள்ளைகளின் எதிர்கால வாழ்விற்காகவும் நாமே அதிகாரத்தை கையிலெடுத்து நிலைநாட்டியதன் விளைவு தான் இந்த கடை மூடப்பட்டுள்ளது. இனி இது தான் வழி. இந்த வழிமுறையில் தான் இனி மக்கள் அனைத்து பிரச்சனைகளுக்கும் போராட வேண்டும். அதற்கு இப்போதுபோல் மக்கள் அதிகாரம் துணை நிற்கும்” என்று பேசி முடித்தபோது மக்கள் ஆரவாரத்துடன் கைதட்டி வரவேற்று விசில் அடித்தனர்.

பின் அங்கிருந்து தப்படித்து கொண்டே ஊர்வலமாக சென்று கடையின் முன்பாக பட்டாசுகள் வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள். அப்போது ஊரின் முக்கியதஸ்களும் பெரியவர்களும் நம் கையை பிடித்து கொண்டு கண்ணீர் மல்க நன்றி கூறினார்கள். சில மூதாட்டிகள், “ஏன் சாமிவுளா காப்பத்த வந்த சாமிவுளா இனிநாங்க நிம்மதியா தூங்குவோம், இனி எங்க குடும்பம் நல்லா இருக்கும். உங்களால இந்த ஊரும் நல்லா இருக்கும்” என்று கூறி காலில் விழ முயற்சித்தபோது அதைத் தடுத்து நம் தோழர்கள் கையை பிடித்துகொண்டார்கள்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

அவர்கள் பிடித்து கொண்டது மக்கள் அதிகார தொண்டர்களின் கைகளை அல்ல மக்கள் அதிகாரத்தை தான். இனி இந்த ஊருக்கும் மட்டுமல்ல மொத்த நாட்டுக்கும் வெளிச்சம் தரும் வழிகாட்டி மக்கள் அதிகாரம்.

இப்படிக்கு
மக்கள் அதிகாரம், கடலூர்.
தொடர்பு எண்: 8110815963

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க