privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்நீதிமன்றம்உறுதியுடன் தொடரும் வழக்கறிஞர்கள் போராட்டம் !

உறுதியுடன் தொடரும் வழக்கறிஞர்கள் போராட்டம் !

-

“வழக்கறிஞர்களின் ஜனநாயக குரலை நெறிக்கும் புதிய சட்டத்திருத்தத்தை முழுமையாக திரும்ப பெறு!”

என ஒரே குரலில் தமிழ்நாடு தழுவிய அளவில் கடந்த ஒருமாத காலமாக வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பை நடத்தியும், பேரணி, உண்ணாவிரதம் என பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

theni-action-committee-meeting-1
தேனியில் நடைபெற்ற ”தமிழ்நாடு -பாண்டிச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டுக்குழு”

25-06-2016 அன்று தேனியில் நடைபெற்ற ”தமிழ்நாடு -பாண்டிச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டுக்குழு” கீழ்க்கண்ட கூட்டத்தின் தீர்மானங்களை நிறைவேற்றியது!

• வழக்கறிஞர்களுக்கு எதிரான புதிய சட்டத்திருத்தத்தை ரத்து செய்யப்படும் வரை நீதிமன்ற புறக்கணிப்பு

  • வருகிற 27 மற்றும் 28 தேதிகளில் தமிழக முதல்வர், எதிர்கட்சி தலைவர் உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் தலைவர்கள் சந்தித்து புதிய விதிகளின் பாதிப்பு குறித்து விளக்கி, போராட்டத்திற்கு ஆதரவு கோருதல். இந்திய தலைமை நீதிபதி, குடியரசு தலைவர் பிரதமர், சட்ட அமைச்சர் மற்றும் எதிர்கட்சித் தலைவர்களை சந்தித்து, எந்த மாநிலத்திலும் இல்லாமல் தமிழகத்தில் மட்டும் அமல்படுத்தப்படும் புதிய சட்டத் திருத்தத்தை ரத்து செய்ய வலியுறுத்துதல்
  • வருகிற 29-ம் தேதி தமிழகம் மாவட்ட தலைநகரங்களில் ரயில் மறியல் போராட்டம்
  • ஜூலை 1-ம் தேதி தமிழகத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்கள் முன், புதிய சட்டத்திருத்தத்தின் நகலை எரித்து போராட்டம்
  • ஜூலை 3-ல் திருப்பூரில் ”தமிழ்நாடு -பாண்டிச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டுக்குழுவின் மாநில மாநாடு
  • ஜூலை 4-ல் மாவட்ட முதன்மை நீதிமன்றங்கள் மற்றும் முக்கிய நிதீமன்றங்களில் உள்ளிருப்பு போராட்டம்
theni-action-committee-meeting-2
தேனியில் நடைபெற்ற ”தமிழ்நாடு -பாண்டிச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டுக்குழு”

இதைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தின் (MHAA) சிறப்பு பொதுக்குழு 27-ம் தேதி துணைத்தலைவர் தலைமையில் கூடியது.

அதில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

  • உயர்நீதிமன்றத்தால் கொண்டு வரப்பட்ட புதிய சட்டதிருத்த34(1) விதிகளை எவ்வித நிபந்தனையின்றி முழுமையாக உடனே திரும்ப பெற வேண்டும் என நாங்கள் மீண்டும் வலியுறுத்துகிறோம்.
  • 25-06-2016 அன்று தேனியில் நடைபெற்ற தமிழ்நாடு-புதுச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டுகுழுவின் பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை நாங்கள் ஆதரிக்கிறோம்.
  • உயர்நீதிமன்றத்தால் கொண்டு வரப்பட்ட புதிய சட்டதிருத்த 34(1) விதிகளை எவ்வித நிபந்தனையின்றி முழுமையாக உடனே திரும்ப பெற வலியுறுத்தி பின்வரும் போராட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள இருக்கிறோம்.

(i) திரும்ப பெறும் வரை 28-06-2016 முதல் காலவரையற்ற அனைத்து நீதிமன்ற புறக்கணிப்பு

(ii) 29-06-2016 அன்று காலை 10.30 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில் மறியல்.

(iii) 01-07-2016 அன்று காலை 10.30 மணிக்கு சென்னை உயர்நீதிமன்ற ஆவின் பாலக நுழைவு வாயில் முன்பு கருப்புச் சட்டமான புதிய சட்டதிருத்ததின் நகல் எரிப்பு.

  • ஒழுங்கு நடவடிக்கையை எதிர்கொள்ளும் வழக்கறிஞர்கள் மீதான இடைநீக்கத்தை உடனே திரும்ப பெறுமாறு இந்திய பார் கவுன்சிலையும் மற்றும் தமிழ்நாடு பார் கவுன்சிலையும் வலியுறுத்துகிறோம்.

S.அறிவழகன்
செயலாளர்

K.கினி இம்மானுவேல்
துணைத் தலைவர்

அறிவித்தபடி 29-06-2016 அன்று தமிழகம் தழுவிய அளவில் ரயில் மறியல் செய்து, பல்லாயிரக்கணக்கான வழக்கறிஞர்கள் கைதாகினர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

சென்னை உயர்நீதி மன்றத்தில் ஒலித்த முழக்கங்கள் :

யர்நீதி மன்றத்தின்
புதிய விதிகள் சொல்வதென்ன?

நீதிபதிகள் ஊழல் செய்தால்
ஊழலைப் பற்றிப் பேசாதே!
ஊழல் செய்வதை பார்க்காதே!
ஊழல் செய்தியை கேட்காதே!

இது நீதியா? அநீதியா?

ஊழலைப் பற்றி கேள்வி கேட்டால்
உடனடியான சஸ்பென்டாம்
உரத்த குரலில் வாதிட்டால்
கேள்வி இல்லை டிஸ்மிஸ்ஸாம்

கேள்வி கேட்டால் தண்டனைகொடுக்க
நீதிபதிகள் மன்னர்களல்ல
மக்களின் பணியாளர்கள்

உயர்நீதிமன்றத்தின்
புதிய சட்ட விதிகள்
நீதிபதிகளின் ஊழலை
கேள்வியின்றி காக்கவே!

குடிகார வக்கீல்களை
தண்டிப்பதாய் கூறுகின்ற
தலைமை நீதிபதி கைக்குள்
இருப்பது யார்? இருப்பது யார்?

டாஸ்மாக்கை குத்தகைக்கெடுத்த
பிராபாகரனும்! செல்வமும்!
பிரியாணிக்கும் சரக்குக்கும்
வக்கீல்களை சீரழிக்கும்
பிரபாகரனும் செல்வமும்
கவுலின் கூட்டாளிகள்

தெருவில் இறங்கி போராடும்
வழக்குரைஞர் போராட்டம்
சோத்துக்கல்ல! தொழிலுக்கல்ல!
தமிழக நீதிமன்றங்களை
புரோக்கர்களின் கூடாரமாக்கும்
நீதியை விலைபேசும்
அநீதியை ஒழிக்கவே!

திரும்பப் பெறு! திரும்பப் பெறு!
வாய்ப்பூட்டு கருப்புச்சட்டத்தை
உயர்நீதிமன்றமே திரும்ப்பபெறு!

வக்கீல்களை ஊமையாக்கி
நீதிமன்ற வளாகத்தில்
என்ன வாதம் நடைபெறும்?
யாருக்கு நீதி கிடைத்திடும்?

வெளியேறு! வெளியேறு!
வழக்குரைஞர் கழுத்தறுக்கும்
S.K. கவுலே வெளியேறு!

பலிக்காது பலிக்காது
கைக்கூலிகள் துணையோடு
வழக்குரைஞரை ஒடுக்க நினைக்கும்
S.K கவுலின் பகல் கனவு
பலிக்காது! பலிக்காது!

அனுமதியோம்! அனுமதியோம்!
சென்னை உயர்நீதிமன்றத்தை
கவுலின் தர்பாராக
மாற்றுவதை அனுமதியோம்!

விரட்டியடிப்போம்! விரட்டியடிப்போம்!
நீதிபதிகளின் கைக்கூலிகள்
பார்கவுன்சில் புரோக்கர்களை
விரட்டியடிப்போம்! விரட்டியடிப்போம்!

தகவல் :
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,
சென்னை

மதுரையில் ம. உ. பா. மையம் ஆர்ப்பாட்டம் !

வழக்கறிஞர் சட்டத் திருத்தத்தை முழுவதுமாகத் திரும்பப் பெறு !
43 வழக்கறிஞர்கள் சஸ்பெண்ட் நடவடிக்கையை உடனே கைவிடு !

மக்கள் பிரச்சினைகளுக்காகப் போராடிய வழக்கறிஞர்களின் மீதான கருப்புச் சட்டத்தை நீக்கக் கோரி மக்களாகிய நாம் களத்தில் இறங்கிப் போராடுவோம் !

ழக்கறிஞர் சட்டத்தில் சென்னை உயர் நீதிமன்றம் எதேச்சாதிகாரமாகக் கொண்டு வந்துள்ள புதிய சட்டத் திருத்தத்தை உடனே திரும்பப் பெறக்கோரியும், 43 வழக்கறிஞர்கள் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கையை கைவிடக் கோரியும் நீதிமன்றத்தின் பாசிச அடக்குமுறையைக் கண்டித்தும் மதுரையில் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் சார்பாக மதுரை அண்ணாநகர் அம்பிகா தியோட்டர் அருகில் கடந்த 27-06-2016 திங்கள் கிழமை காலை 10.30 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வழக்கறிஞர்கள்,பேராசிரியர்கள், தோழமை அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

madurai-lawyers-protest-4மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மதுரைக் கிளைத் துணைத் தலைவர் வழக்கறிஞர், நடராசன் தலைமை உரையாற்றினார். “இம் என்றால் வனவாசம், ஏன் என்றால் சிறைவாசம் என்பது போல நீதித்துறையின் தவறுகளைச் சுட்டிக்காட்டினாலே உடனே பணிநீக்கம், வழக்கு, வாய்தா மேல் வாய்தா போட்டு ஒடுக்குவது என்று சர்வாதிகாரமாக நீதிபதிகளும் நீதிமன்றமும் செயல்படுகின்றனர். தற்போது இவர்கள் கொண்டுவந்துள்ள சட்டத் திருத்தத்தால் 80,000 வழக்கறிஞர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அதற்கெதிராக நடக்கும் வழக்கறிஞர் போராட்டத்தை ஆதரித்துத்தான் இந்த ஆர்ப்பாட்டம்” என்று கூறினார்.

அதன் பின் பேசிய சமநீதி வழக்கறிஞர் சங்க செயலாளர் கனகவேல் தன் உரையில், “கட்டாய ஹெல்மெட் சட்டத்தை எதிர்த்துப் போராடினால் வழக்கறிஞர்களை சஸ்பென்ட் செய்யும் இந்த நீதிபதிகள், ஹார்வார்டு பல்கலைக் கழகத்தில் தமிழுக்கு இருக்கை ஏற்படுத்த கூட்டம் போட்டுப் பேசுகிறார்கள். ஆனால் இங்கே தமிழ்நாட்டு நீதிமன்றங்களில் தமிழில் வழக்காட அனுமதி வேண்டி அமைதியாகப் போராடினால் வழக்கறிஞர்களை சஸ்பென்ட் செய்கிறார்கள்” என நீதிபதிகளின் இரட்டை நிலையை அம்பலப்படுத்தினார். “நீதிபதியின் பெயரைச் சொல்லியே லஞ்சம் வாங்கும் நிலை பல கோர்ட்களில் உள்ளது, இதை எதிர்த்து இந்த நீதிமன்றம் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது” எனக் கேள்வி எழுப்பினார். “வழக்கறிஞர்கள் மேல் குற்றம் சொல்லும் இவர்கள் மேலான குற்றச்சாட்டுகளை முதலில் விசாரிக்க முன் வர மறுக்கிறார்கள்” என்றார்.

madurai-lawyers-protest-2பின்னர் பேசிய மதுரை காமராசர் பல்கலைக் கழகப் பாதுகாப்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் சீனிவாசன், “நீதி வழங்க வேண்டிய நீதித்துறை இன்று மொத்தமாக ஊழல்மயமாகி சீரழிந்துவிட்டது, இந்த வழ்க்கறிஞர்கள் மீதான அடக்குமுறை மக்களின் மீதான அடக்குமுறை, ஏனென்றால் கல்வியில், அரசு நிர்வாகத்தில் என்று எங்கும் நிறைந்து நிற்கும் ஊழல்களைத் தடுக்காத நீதித்துறைகூட தண்டிக்கப்பட வேண்டியதுதான். தாதுமணல் கொள்ளை, முல்லைப் பெரியாறு பிரச்சினை, கிரானைட் கொள்ளை, ஆற்றுமணல் கொள்ளை, கல்விக்கொள்ளை, ஆகியவைகளை மக்கள் மன்றத்திற்குக் கொண்டு வந்தவர்கள் வழக்கறிஞர்கள்தான், அதற்காகத்தான் அவர்கள் மேல் இந்த அடக்குமுறை. 1863-ம் ஆண்டிலேயே மாயூரம் முன்சீப் வேதநாயகம் பிள்ளை என்ற நீதிபதி தமிழில்தான் வாதடவேண்டும் என்றார், தமிழில் வாதாடுவதில் என்ன தவறு இருக்கிறது. எனவே மக்கள் இந்தப் போராட்டத்தை ஆதரிக்க வேண்டும்” என்று நிறைவு செய்தார்.

வழக்கறிஞர் ராஜேந்திரன் ‍ சமநீதி வழக்கறிஞர் சங்கத் தலைவர் :-

“தமிழ்நாடு முழுவதும் நீதிதுறை முடங்கிப்போய்க் கிடக்கிறது, இதை உச்சநீதிமன்றமும், நீதிபதிகளும், அரசியல் கட்சித் தலைவர்களும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். நடவடிக்கை எடுக்க வேண்டிய பார்கவுன்சில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. ஆனால் அதே சமயத்தில் நீதிபதிகள் சம்பந்தமில்லாத ஏதோ ஒரு பொது நல வழக்கில் கூட கட்டாய ஹெல்மெட் சட்டம், பொது இடத்தில் சிகரெட் பிடிக்கத் தடை எனத் தீர்ப்பு வழங்குகிறார்கள். இப்படிப்பட்ட நீதித்துறைக்கு எதிராகப் போராடத் திராணியுள்ளவர்களாக வழக்கறிஞர்கள்தான் உள்ளார்கள். அவர்களை முடக்கவே இந்த அடக்குமுறை சட்டம்”.

madurai-lawyers-protest-3பேராசிரியர் விஜயகுமார் , இந்திய சமூக அறிவியல் கழகம் :

“உண்மையில் இன்று இந்தியா இருள் சூழ்ந்து இருக்கிறது. உரிமைக்காகப் போராடிய கண்ணையா குமாரும், ரோஹித் வெமுலாவும் பழிவாங்கப்பட்டார்கள். தமிழில் வாதாடும் உரிமை வேண்டி போராடிய வழக்கறிஞர்கள்தான் தண்டிக்கப்பட்டார்கள். நிலைமை இப்படி இருக்க ராஜஸ்தான் நீதிமன்றத்தில் மனுவுக்கு சிலை வைக்கிறார்கள். விட்டால் இவர்கள் மதுரையிலும் சிலை வைப்பார்கள் அதற்கு முன் இவர்களை முறியடிக்க வேண்டும், அதற்கு முதலில் வழக்கறிஞர்கள் மேல் போடப்பட்டுள்ள இந்த அடக்குமுறையை வெட்டியெறிய வேண்டும், அந்தப் போராட்டத்தில் நாமும் அவர்களுக்குத் துணை நிற்போம்.”

மதுரை வழக்கறிஞர் சங்கத் துணைத்தலைவர் நெடுஞ்செழியன்‍ ‍:

“தற்காலிகமாக சஸ்பென்ட் செய்யப்பட்ட முதல் 13 வழக்கறிஞர்களில் நானும் ஒருவன். அந்த வகையில் நான் அதற்குப் பெருமைப்படுகிறேன். இந்திய பார் கவுன்சில் சட்டத்தை மீறி பழிவாங்கப்பட்டவர்கள்தான் நாங்கள்.

சம்பாதிப்பதற்காக மட்டும் மனிதன் பிறக்கவில்லை, போராடுவதற்கே பிறந்துள்ளான். நாங்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட போது வேடிக்கை பார்த்த பல வழக்கறிஞர்கள், அப்போதே விடாப்பிடியாகப் போராடியிருந்தால் இதைத் தடுத்திருக்கலாம் என்று குற்ற உணர்வோடு பேசுகிறார்கள். ஆதலால் இந்த அடக்குமுறையால் மக்களுக்கு என்ன பாதிப்பு என யோசித்து இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துப் போராட வேண்டும் என்பதற்காகத்தான் இந்த ஆர்ப்பாட்டம். இதைத் தடுக்கவில்லை என்றால் மீண்டும் இது அடிமை நாடாகும்”.

madurai-lawyers-protest-4பேராசிரியர் முரளி‍: PUCL தேசிய நிர்வாகக் குழு :

“பணம் இருப்பவர்களுக்குத்தான் நீதிகிடைக்கும் என்கின்ற நிலை இருக்கிறது. இந்த நீதிபதிகளை எப்படித் தேர்ந்தெடுக்கிறார்கள். இவர்கள்தான் மக்களுக்காகப் போராடக்கூடிய வழக்கறிகள் மேல் தாக்குதல் தொடுக்கிறார்கள். இப்படி நீதிக்காகப் போராடுபவர்கள் மேல் தாக்குதல் தொடுக்கும் போது நாம் வேடிக்கை பார்க்கக் கூடாது, எங்களுடைய ஆதரவும் இருக்கும்.”

தோழர் கதிரவன் , மக்கள் கலை இலக்கியக் கழகம் :

“தொடர்ச்சியாகப் பல்வேறு மக்கள் பிரச்சினைகளுக்கு வழக்கறிஞர்கள்தான் போராடி மக்களுக்கான உரிமையைப் பெற்றுத்தருகிறார்கள். ஈழப்போராட்டத்திலிருந்து காவல் நிலைய பாலியல் வல்லுறவு ஆகியவைகளில் எல்லாம் எந்த நீதிபதிகள் போராடினார்கள், மக்களின் பிரதிநிதிகளாக நின்று வழக்கறிஞர்கள்தான் போராடினார்கள். இந்த நாட்டில் ஜனநாயகம் நிலவ வேண்டுமானாலும் சரி மக்களுக்குத் தேவையான பிரச்சினைகளிலும் வழக்கறிஞர்கள்தான் உதவுவார்கள். நாம் இந்தப் போராட்டத்தை அணைய விடாமல் உதவவேண்டும்”.

தோழர் குருசாமி, மக்கள் அதிகாரம் :

“நீதிபதிகளின் ஊழலை அம்பலப்படுத்தி ஒரு சுவரொட்டி ஒட்டியிருந்தோம். மக்கள் பலரும் தொடர்பு கொண்டு விசாரித்தார்கள். ஆனால் உளவுத்துறை மட்டும் அழைக்கவில்லை. அந்த அளவில் மக்கள் பலரும் நீதிபதிகளைப் பற்றி நன்றாக உணர்ந்து உள்ளார்கள். இந்த நீதிபதிகளின் அடக்குமுறை காரணமாக வந்த‌ பல மக்கள் பிரச்சினைகளில் இவர்கள்தான் தலையிட்டு உதவியிருக்கிறார்கள். இந்த நீதிபதிகள் யார், இவர்கள் தமிழ்நாட்டு சோத்தை தின்று வளர்ந்து தமிழ்நாட்டுக்காக எதையும் செய்வதில்லை. இன்று இவர்களாக ஒரு சட்டத்தைப் போட்டுக்கொண்டு வழக்கறிஞர்களை அடக்குகிறார்களே, உண்மையில் தைரியமிருந்தால் இதே போல இவர்களாக ஒரு சட்டத்தைப் போட்டுக்கொண்டு சட்டசபையைக் கலைத்துவிடு பார்ப்போம். நமக்கு இப்போது தேவையானது மக்கள் கையில் அதிகாரம். இந்த போராட்டத்தின் ஊடாக மக்கள் அதிகாரத்தை நோக்கி நம் போராட்டத்தை முன்னெடுப்போம்” என்று நீதித்துறை பாசிசத்தை அம்பலப்படுத்தி மக்கள் அதிகாரத்தின் தேவையை வலியுறுத்திப் பேசினார்.

மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் மதுரை மாவட்டச்செயலாளர், லயனல் அந்தோணி ராஜ் “இப்போது கொண்டு வரப்பட்டுள்ள இச்சட்டப்படி நீதிபதிகளைப் பார்த்து கொஞ்சம் குரலை உயர்த்திப் பேசினால் கூட வழக்கறிஞர் மேல் நடவடிக்கைடுக்க இதில் இடமுண்டு.

வழக்கறிஞர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பார்கவுன்சிலுக்குத்தான் வழக்கறிஞர்கள் மேல் நடவடிக்கை எடுக்க அதிகாரம் உண்டு என்பதை மாற்றி வழக்கறிஞர்களால் தேர்ந்தெடுக்கப்படாத நீதிபதிகளுக்கு அதிகாரத்தை வழங்கி தலைமை நீதிபதி கவுல் இச்சட்ட திருத்தத்தைக் கொண்டு வந்துள்ளார். இதன் உள்நோக்கம் வழக்கறிஞர்கள் மக்களுக்காக எந்தப் போராட்டத்தையும் முன்னெடுக்கக் கூடாது என்பதுதான்.

தமிழக அரசின் மேல் இரண்டாயிரம் கோர்ட் அவமதிப்பு வழக்கு இருக்கிறது, அதற்கு நீதிபதிகள் என்ன செய்தார்கள் ? சட்டம் ஒழுங்கு நாறிப்போய் இருக்கிறது அதற்கு நீதிபதிகள் என்ன செய்கிறார்கள் ? சும்மா வேடிக்கைதானே பார்க்கிறார்கள். ஆகவே இந்த நீதிபதிகள் எல்லாம் கார்பரேட் நிறுவனங்களின் வேலைக்காரர்கள்தான். எனவே இந்த நீதிமன்ற பாசிசத்தை எதிர்த்து தமிழகம் முழுவதும் போராட்டம் பரவ வேண்டும், இச்சட்டம் நீக்கப்பட வேண்டும்” என்று அறைகூவி பேசி முடித்தார்.

இறுதியில் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் வாஞ்சிநாதனின் நன்றி உரையுடன் கூட்டம் நிறைவடைந்தது.

மக்களிடையே உண்மையில் இது ஜனநாயக நாடுதானா என்கின்ற ஐயம் எழுகின்ற வகையில் இப்போராட்டம் அமைந்தது.

தகவல்:
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம், மதுரை
29-06-16

நாளை மறுநாள் சட்ட எரிப்பு நகல் போராட்டம் நடத்த இருக்கின்றனர்.

set-fire-to-amended-rules-poster