privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்பெண்கள் மீதான தாக்குதல் – தீர்வு என்ன ?

பெண்கள் மீதான தாக்குதல் – தீர்வு என்ன ?

-

அதிகரிக்கும் பெண்கள் மீதான தாக்குதல் – மாற்றுத்தீர்வு குறித்து மக்கள் அதிகாரம் பத்திரிகையாளர் சந்திப்பு!

swathi-murder-pp-press-conferenceநாளுக்கு நாள் பெருகி வரும் குற்றங்கள், கொலைகள், பெண்கள் மீதான தாக்குதல்கள் இவற்றை நடைமுறையில் எப்படி கட்டுப்படுத்துவது என தெரியாமல் அறிக்கையில் மட்டும் தமிழகம் அமைதிப் பூங்காவாக திகழ்கிறது என அம்மா அரசு அறிக்கை விட்டுக்கொண்டிருந்தாலும் யதார்த்தம் என்னவோ அம்மாவின் பேச்சுக்கு நேர்முரணாகத்தான் இருப்பது யாவரும் அறிந்ததே!

போலீசுக்கு அளிக்கப்பட்டுள்ள எக்கச்சக்க அதிகாரம், எண்ணிலடங்கா சலுகைகள், கருவிகள் இவை எதுவும் குற்றங்களை குறைக்கவில்லை. எந்த வகை குற்றத்தையும் குறைப்பதற்கோ, தடுப்பதற்கோ வழி தெரியாமல், வக்கில்லாமல் சொந்த பந்த பிரச்சனைகளுக்காக கொலை நடக்கிறது என நாக்கூசாமல் போலீசு பொய் சொல்லுகிறது.

இந்நிலையில் டாஸ்மாக்கை மூடுவதற்கு அதற்கு காவலராகவும், புரவலராகவும் உள்ள அரசிடம் கெஞ்சுவதற்கு பதிலாக அதிகாரத்தை மக்களே கையிலெடுத்து மூடிக்காட்ட வேண்டுமென போராடி சில இடங்களில் சாதித்தும் காட்டிய மக்கள் அதிகாரம் அமைப்பினர் பெருகி வரும் குற்றங்களை தடுப்பதற்கான மாற்று வழிமுறையை காட்ட பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடத்தினர்.

அதில் மக்கள் அதிகாரம் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் ராஜு, பொருளாளர் காளியப்பன், சென்னை மண்டல ஒருங்கிணைப்பாளர் வெற்றிவேல் செழியன், மக்கள் அதிகாரத்தை சார்ந்த அமிர்தா ஆகியோர் கலந்து கொண்டனர்.

people-power-press-release
01-07-2016

பத்திரிகை செய்தி

மீபத்தில் நடந்த சுவாதி கொலையும், வினுப்பிரியா தற்கொலையும் தமிழ்நாட்டையே உலுக்கி விட்டன. குற்றவாளிகளை கைது செய்யக்கோரி தன்னெழுச்சியான போராட்டங்கள் தொடர்கின்றன. சென்னை உயர் நீதிமன்றம் சுவாதி கொலை வழக்கை தானாக கையில் எடுத்து கொண்டு போலீசுக்கு பல கேள்விகளை எழுப்பி உத்தரவுகளை போட்டுள்ளது. மேற்கண்ட கொலை, தற்கொலைகளை கண்டு அதிர்ச்சியடைவதைவிட நீதிபதிகள் எழுப்பிய கேள்விகளும் உத்தரவுகளும் குற்றவாளிகளை பிடிக்க போலீசு எடுக்கும் நடவடிக்கைகளும்தான் கவனிக்க வேண்டியது.

swathi-murder-wlf-poster
ஆள, அருகதை இழந்தது அரசு கட்டமைப்பு – பெ.வி.மு

பெண்களை பாதுகாக்கும் நடவடிக்கையாக மக்கள் திரள் கண்காணிப்பு (எல்லா இடங்களிலும் சி.சி.டி.வி), போலீசு ரோந்து சுற்றுவது என்பதுதான் அரசும் போலீசும் வைக்கும் தீர்வு. கள்ளக்குறிச்சி எஸ்.வி.எஸ்.கல்லூரி மாணவிகள் மூன்று பேர் கல்லூரி அருகிலேயே கொன்று கிணற்றில் வீசப்பட்டனர். அதற்கு முன்பு அவர்கள் நீதி கேட்டு மாவட்ட ஆட்சியர், பல்கலைக்கழக துணை வேந்தர், போலீசு அதிகாரிகள், நீதிமன்றம், மனித உரிமை ஆணையம், உள்துறை செயலாளர், உள்பட பல்வேறு அரசு அமைப்புகளிடம் முறையிட்டார்கள், அவர்கள் காப்பற்றப்பட்டனரா? அந்தக்காட்டில் எங்கு சி.சி.டி.வி வைப்பது என நீதிமன்றம் சொல்லுமா?.

பெண்களுக்கு நாட்டில் எங்கும் பாதுகாப்பில்லை என்பதுதான் உண்மை. தன் சொந்த வீட்டில் பெற்றோரே ஆணவக்கொலைகள் செய்கிறார்கள். மாதா, பிதா குரு, தெய்வம் என்கிறார்கள். ஆசிரியர்களாலேயே பள்ளிச்சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமைகள் நடக்கின்றன. நீதிமன்றம் எந்த வழக்கிலாவது தலையிட்டதா?. பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் பெரும்பாலும் தெரிந்தவர்கள், உறவினர்களாலேயே நடக்கின்றன. அடுத்து அவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டிய போலீசு மற்றும் சீருடை அரசு பணியாளர்கள்தான் மிக ஆபத்தானவர்களாக இருக்கிறார்கள் என்று நீதிமன்றமே கூறியிருக்கிறது.

swathi-murder-rsyf-poster
ஆள, அருகதை இழந்தது அரசு கட்டமைப்பு – பு.மா.இ.மு

சேலம் வினுப்பிரியா தற்கொலைக்கு ஒருவாரம் முன்பாக போலீசிடம் புகார் செய்யப்பட்டது. போலீசார் தன் கடமையை தட்டி கழித்தார்கள். இது குறித்து நீதிமன்றமோ அரசோ ஏதும் நடவடிக்கை எடுக்க வில்லை. தலைமைக்காவலர் மட்டும் லஞ்சம் பெற்றதற்காக சஸ்பெண்ட் செய்யபட்டுள்ளார். வினுப்பிரியாவின் பெற்றோர் நடத்திய போராட்டம்தான் அதை சமூகத்தின் கவனத்திற்கு கொண்டு வந்தது.

பெண்களுக்கு எதிரான எல்லா கொடுமைகளுக்கும் பெண்கள் மீதே பழி போடுவது, கட்டுப்பாடுகள் விதிப்பது, என்பதுதான் பொதுக்கருத்தாக நிலவுகிறது. ஆனால் மேற்கண்ட உண்மைகள் ஒட்டுமொத்த சமூகத்தையே கவ்வி கொண்டிருக்கும் தீராத நோயின் அறிகுறிகள் அல்லவா. இவை நாட்டில் நிலவும் சமூகம் பாண்பாட்டு நெருக்கடிகளைதான் சுட்டிகாட்டுகின்றன. அதற்கு முன் வைக்கும் தீர்வுகளும், போலீசு, நீதிமன்றம் உட்பட அரசு கட்டமைப்பின் கடும் நெருக்கடிகளைத்தான் காட்டுகின்றன.

swathi-murder-wlf-demo-poster
ஆள, அருகதை இழந்தது அரசு கட்டமைப்பு – பெ.வி.மு ஆர்ப்பாட்ட போஸ்டர்

நிலவும் சமூகத்தின்மீது திணிக்கப்படும் சீர்திருத்தங்கள் இந்த நெருக்கடிகளை தீர்க்கவில்லை. மேலும் கடுமையாக்கி இருக்கிறது. இத்தகைய தாக்குதல்கள் முதன்மையாக பெண்களுக்கு எதிரானதாக இருக்கிறது. பாதுகாப்பற்ற இந்த சமூகத்தில் 24 மணி நேர கேளிக்கை விடுதிகள், சினிமா தியேட்டர், பெரிய வணிக வளாகங்கள் போன்றவை புகுத்தப்பட்டு மேலும் சீரழிவுகளுக்குதான் தள்ளுகிறது இந்த அரசு.

பெண்களின் வாழ்வுரிமைகளை உத்திரவாதப்படத்த வேண்டிய அரசுக் கட்டமைப்பும், ஒட்டுமொத்த சமூக பண்பாட்டு கட்டமைப்பும், பெண்களின் உரிமைகளுக்கு எதிராக இருக்கின்றன. சாதி மத அமைப்புகள் எல்லாம் காலம் காலமாக பெண்களின் உரிமைகளை மறுப்பதாகவும், ஆணாதிக்கத்தை நிலைநாட்டுவதாகவும் இருக்கின்றன. ஆனால் சிறுவயதிலிருந்தே ஆண்களுக்கு தனிமனித ஒழுக்க நீதி போதனைகள் மட்டும் தீர்வாக சொல்லப்படுகிறது. ஆனால் இவையனைத்தும் தோற்றுப் போய்விட்டன. பெண்களை சகமனிதர்களாக ஏற்கும் ஜனநாயகப்பண்பு சமூகம் முழுவதும் நிலைநாட்டப்பட வேண்டும். அனைத்து உரிமைகளும் சமூகத்தின் சரிபாதியான பெண்களுக்கு இருக்கும் போது மட்டுமே, இந்த சமூகம் விடுதலை பெற்றதாக சுதந்திரமானதாக இருக்க முடியும். ஒரு ஆண் தனது பாலியல் இச்சைகளுக்காக பெண்களை துன்புறுத்தி வன்கொடுமைகள் புரியும் வக்கிரத்திற்காக ஒட்டு மொத்த சமூகமும் வெட்கப்பட வேண்டும்.

பெண்களின் ஜனநாயக வாழ்வுரிமைகளை மதிக்கும் உணர்வுகள் ஒவ்வொரு மனிதனின் ரத்தத்தில் ஊறி இருக்க வேண்டும். அதற்காக ஒட்டு மொத்த சமூகத்தையும் மறுவார்ப்பு செய்யாமல் தனிமனித ஒழுக்கம் மூலம் சாதிக்க முடியாது. சமூகத்தையே புரட்டிப்போடும் ஜனநாயக புரட்சியின் மூலமாகத்தான் இதற்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்த முடியும். உடனடியாகவும் சாத்தியமானதாகவும் தோன்றும் தீர்வுகள் அனைத்தும் தோல்வியடைந்தே வந்திருக்கின்றன.

வழக்குரைஞர் சி. ராஜூ
மாநில ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம்

தோழர். காளியப்பன்
பொருளாளர்

தோழர்.வெற்றிவேல் செழியன்
சென்னை மண்டல ஒருங்கிணைப்பாளர்

மக்கள் அதிகாரம் கொள்கை அறிக்கையிலிருந்து…….

7. கட்டுக்கடங்காத சமூக சீரழிவுகள், பண்பாட்டு வக்கிரங்கள், கிரிமினல் குற்றங்கள், பெண் சமூகத்திற்கு எதிரான கொடூரங்கள்

2012 டிசம்பர் 16 அன்று, புதுடில்லியில் கும்பல் பாலியல் வன்கொடுமைகுப் பலியான “நிர்பயா”வின் மரணத்தைத் தொடர்ந்து பொங்கியெழுந்த பல்லாயிரக்கணக்கான மக்களில் ஒருவர் சொன்னார் “அரசு மற்றும் சமூகத்தின் அனைத்து உறுப்புகளும் தோற்றுப்போனதையே குறிக்கின்றது.” இது இந்நாட்டின் அரசியல், சமூக நெருக்கடியை மிகச்சரியாகவும் துல்லியமாகவும், தெளிவாகவும் வெளிப்படுத்துகின்றது. அப்போது, நடந்த சம்பவங்களும் வெளியான தகவல்களும் இதை அப்பட்டமாக தெளிவுபடுத்தின. 3 வயது சிறுமிகள் முதற்கொண்டு 60, 70 வயது பெண்கள் வரை பாலியல் வன்கொடுமைகளுக்கு பலியாகின்றனர். அக்கொடுமைகளுக்கு இலக்கானவர்களில் பெரும்பாலானவர்கள் ஏற்கனவே தெரிந்தவர்களால், நெருக்கமான குடும்ப உறவுக்காரர்களால் இழைக்கப்படுகின்றன. இது குடும்ப, சமூக உறவுகளின் சீரழிவையும் நெருக்கடிகளையுமே காட்டுகின்றன.

சமூக அமைப்புக்களும், விழுமியங்களும் பெண்களுக்கு எதிராகவே கட்டமைக்கப்பட்டு இருக்கின்றன. இதனாலேயே பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் பலவும் வெளி உலகுக்கு தெரிய வருவதோ, பதிவு செய்வதோ இல்லை. அவற்றுக்கு பலியானவர்கள் வெளியே சொல்லவே முடியாதவாறு பலவழிகளிலும் மிரட்டி வைக்கப்பட்டுள்ளனர். போலீசு நிலையங்கள் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்ய மறுக்கின்றன. பல சமயங்களில் பாலியல் வன்கொடுமைக்குப் பலியானவர்கள் மீதே பழி போடப்படுகின்றது. குற்றவாளிகள் அரசியல், அதிகாரம்,சாதி, மதம் பிற சமூகச் செல்வாக்கு மிக்கவர்களாக இருக்கிறார்கள். போலீசுக்காரன்கள் தம் ஆளுகையின் கீழுள்ள பகுதியில் குற்றங்கள் நடப்பதே இல்லை என்றோ அல்லது குற்றங்கள் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாகவோ காட்டுவதற்காக வழக்கு பதிவு செய்யவே மறுக்கின்றனர். பதிவு செய்தாலும் பாலியல் வன்கொடுமை வழக்குகள் மீது சாதிய, ஆணாதிக்க மனப்பான்மையோடும் அக்கறையில்லாமலும், வேண்டாத வீண் வேலைச் சுமையாகவும் கருதி வழக்குகளை நீர்த்துப் போகச் செய்கின்றனர்.

நாட்டின் கீழமை நீதிமன்றங்கள் முதல் உச்சநீதிமன்றம் வரை பாலியல் வன்கொடுமை வழக்குகளில் பொதுச்சட்ட நெறிமுறைகளும் தீர்ப்புகளும் கிடையாது. ஒவ்வொரு நீதிபதியும் தான்தோன்றித்தனமாகவும் வெவ்வேறு அணுகுமுறையைக் கொண்டும் தீர்ப்பு வழங்குகின்றனர். பாலியல் வன்கொடுமை வழக்குகளில் அதற்குப் பலியானவர்களை மேலும் துன்புறுத்துவதாகவும் அவமதிப்பதாகவுமே சட்ட, நீதிமுறைமைகள் உள்ளன. இவற்றைப் பயன்படுத்தி போலீசு நிலையங்களிலும் நீதிமன்றங்களிலும் பலியான பெண்கள் மேலும் கொடுமைப்படுத்தப்படுகின்றனர். சட்டப்படி பதினெட்டு வயதுக்கு கீழான பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் வன்புணர்ச்சியினதாகக் கொள்ள முடியாது. பதினெட்டு வயதுக்கு கீழான ஆண்கள் புரியும் பாலியல் குற்றங்கள் சிறார்களின் தவறாகவும் வன்புணர்ச்சி அல்லாதவையாகவும் சட்டப்படி எடுத்துக்கொள்ள வேண்டும்; எனவே, சட்டப்படியே இவ்வழக்குகளில் கடும்தண்டனை வழங்க முடியாது. ஆனால் இயல்பாகவே, பாலியல் வன்கொடுமைகளை போலீசுக்காரன்களும், நீதிபதிகளும் மட்டுமல்ல, ஆணாதிக்க சமூகமே ஒரு பொருட்டாக மதிக்கவில்லை. பெண்களுக்கு விதிக்கப்பட்ட வாழ்க்கையே இவ்வாறானதுதான் என்று சமூகமும் கருதுகிறது.. பாலியல் வன்கொடுமைகளைப்பற்றி, அவை அதிகரித்து வருவதைப்பற்றி சாதி, மத, அரசியல், சமூகப் பிரமுகர்கள் மட்டுமல்ல ஒரு பிரிவுப் பெண்களும் கூறும் கருத்துக்களும் இதையே காட்டுகின்றன.

“நிர்பயா” விவகாரத்தில், புது தில்லியில் பலநாட்கள் நடந்த மக்கள் எழுச்சிகளுக்குப் பிறகு, அவற்றை சமாளிப்பதற்காக நீதிபதி வர்மா தலைமையிலான கமிசனை மத்திய அரசு அமைத்தது. மிகப்பெரும்பாலான மாநில அரசுகள் வர்மா கமிசனுக்குத் தம் கருத்துக்களை, பரிந்துரைகளை, அறிக்கைகளை அனுப்பவே இல்லை. அதற்காக வர்மா கமிசன் தெரிவித்த கண்டனங்களை அவை மதிக்கவும் இல்லை. இதற்காகவும் நீதி கேட்டும் போராடிய இளைஞர்கள் – மாணவர்களைக் காட்டுமிராண்டித்தனமாகத் தாக்கி விரட்டியதற்காகவும் புதுதில்லி தலைமைப் போலீசு இயக்குநர்களின் நியமனங்களையும் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று வர்மா கமிசன் பரிந்துரைத்தது. இதையும் மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்ளவேயில்லை.

பெண்களுக்கு எதிராகப் பெரும்பாலான வன்கொடுமைகள் இழைக்கும் முதன்மைக் குற்றவாளிகள் சீருடையணிந்த போலீசும், துணை ராணுவமும் மற்ரும் ராணுவத்தினரும்தாம்; அவர்களைப் பாதுகாக்கும் ஆயுதப்படையினருக்கான சிறப்பு அதிகாரச் சட்டத்தையும் அதையொத்த அடக்குமுறைச் சட்டங்களையும் நீக்க வேண்டும்; மேலும், ஒரு இராணுவச் சிப்பாய் பாலியல் வல்லுறவுக் குற்றமிழைத்தால் அவரது மேலதிகாரியையும் சேர்த்து இராணுவ ஆணைமீறல் குற்றத்துக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது முதலான பல பரிந்துரைகளை அக்கமிசன் வைத்தது. இதுவும் இதைப் போன்ற பலபாரிய பரிந்துரைகளில் 90 விழுக்காடு கண்டு கொள்ளாமல் ஒதுக்கிவிட்டு, கண் துடைப்புக்குச் சில சில்லரைத் திருத்தங்கள் செய்யும், போலீசுக்கு மேலும் அதிகாரத்தைக் குவிக்கும் சட்டம் ஒன்று அனைத்துக் கட்சிகள் ஒப்புதலுடன் நிறைவேற்றப்பட்டது. புதுதில்லியில் கும்பல் பாலியல் வன்முறைக்கு “நிர்பயா” பலியானவுடன் கொதித்துப் போனவர்களைப் போல குற்றவாளிகளுக்கு மரணதண்டனை, ஆண்மை நீக்க சிகிச்சை என்றெல்லாம் குத்தாட்டம் போட்ட நாடாளுமன்ற அரசியல்வாதிகளும், ஊடக ஊதுகுழல்களும் “ஒப்புதலுடன் உடலுறவு,” பாலியல்வன்கொடுமைகள் புரியும் சிறார் குற்றவாளிகளுக்கு வயது வரம்பைக் குறைப்பது போன்ற விளிம்பு விசயங்களில் கவனத்தைத் திருப்பி விட்டனர்.

அதே சமயம், அரசியல், சமூகத் தலைவர்கள் வெளியில் என்ன நீதி போதனை சொல்கிறார்களோ அதற்கெதிரான போக்குகளே நாட்டில் அரங்கேறி வருகின்றன. உழைப்புச் சந்தையில் பெண்களின் பங்கை மிக மிக அதிகரித்த வகையில் கோரும் உலகமயமாக்கமும் மறுகாலனியாக்கமும் திணிக்கப்படுகின்றன. அவை பெண்கள் உடலை சந்தைப்படுத்தும் பண்பாட்டுச் சீரழிவைக் கொண்டு வருகின்றன. ஆண்களிடையே பாலியல் வெறியைப் பரப்பும் தொழில்களும் ( விபச்சாரத்தை சட்டப் பூர்வமாக்குதல், பாலியல் சுற்றுலா முதல் சினிமா, வானொளி, இணையம் ஆகிய ஊடகங்கள் வரை) பெருகி வருகின்றன. ஆணாதிக்கப் பெண்ணடிமைத்தனத்தை அடிப்படையாகக் கொண்ட அரைநிலவுடமை சமூக அமைப்பில் மேலை பண்பாட்டைப் புகுத்துவது காரணமாக பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் பெருகுகின்றன.

ஆனால் போலீசு ரோந்து சுற்றுவது ( போலீசு கண்காணிப்பும் பெண்களுக்கு பேராபத்து விளைவிப்பதாக உள்ளது !) பேருந்து மற்றும் பொது இடங்களில் காமிராக்களை பொருத்துவது, உயர் போலீசு அதிகாரிகளின் மேற்பார்வை, குற்றவாளிகளுக்கு எதிராக வழக்குகளை விரைந்து நடத்தித் தண்டனையை கடுமையாக்குவது போன்ற யோசனைகள் அள்ளி வீசப்படுகின்றன. கூடவே, பெண்கள் பாரதப் பண்பாட்டை மதிக்கவும் கடைபிடிக்கவும் வேண்டும். ஆபாச உடையணியக்கூடாது, இரவு குறிப்பிட்ட நேரத்துக்குப் பிறகு வெளியில் “சுற்றக் கூடாது. ஆண்கள் பாலியல் வன்முறையில் ஈடுபடுவது இயல்பானது” என்பது போன்ற பெண்ணடிமைத்தனத்தைப் பேணும் “உபதேசங்களும்” வழங்கப்படுகின்றன. இதனாலெல்லாம் பெண்களுக்கெதிரான குற்றங்கள், குறிப்பாக பாலியல் குற்றங்கள் குறையவில்லை. மாறாக பன்மடங்கு அதிகரித்திருக்கின்றன்.

பாலியல் வன்முறையோடு அதற்குப் பலியாகும் பெண்கள் படுகொலை செய்யப்படுவதும், சாதிப் பஞ்சாயத்துக்களில் கும்பல் பாலியல் வன்முறைக்குத் தீர்ப்புக்கள் வழங்கப்படுவதும் பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலம் நடத்தப்படுகின்றன. குறிப்பாக, தாழ்த்தப்பட்டவர்கள் இம்மாதிரியான இழிசெயல்களுக்குப் பலியாவதும் என்ற காட்டுமிராண்டித்தனங்கள் மிகையாக நடக்கின்றன. அதிலும் முக்கியமாக நாட்டின் உச்சநீதிமன்றமே இம்மாதிரியான கேடுகெட்ட நடவடிக்கைகளுக்கு உடந்தையாக செயல்படுகின்றது. இந்தியா பெண்கள் பாதுகாப்பாக வாழ்வதற்கும் பயணம் செய்வதற்கும் தகுதியுள்ள நாடு அல்லவென்ற கருத்து உலகம் முழுவதும் பரவியிருக்கிறது. இந்நாட்டின் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைச் சிக்கலுக்குத் தீர்வெதுவும் காணமுடியத இந்தவொரு விவகாரமே போதும் ஆளும் வர்க்கங்களும் அதன் அரசும் ஆளத்தகுதியற்றுப் போயுள்ளதைத் தெளிவாகவும் காட்டுவதற்கு !

(பக்கங்கள் 34 -38 )
கொள்கை அறிக்கை, மக்கள் அதிகாரம், தமிழ்நாடு

தகவல்
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க