Tuesday, June 18, 2024
முகப்புசெய்திலால்குடியில் கள்ளத்தனமாக டாஸ்மாக் விற்பனை !

லால்குடியில் கள்ளத்தனமாக டாஸ்மாக் விற்பனை !

-

“இனிமேல் டாஸ்மாக் சரக்கை கள்ளத்தனமாக விற்கக் கூடாது! இது தப்பு புரியுதா!” – கள்ளச்சாராய பேர்வழிகளுக்கு திருச்சி இலால்குடி போலிசார் அறிவுரை!

திருச்சி இலால்குடி அன்பில் கிராமத்தில் உள்ள டாஸ்மாக்கை (10506) மூட வேண்டும், இது அன்பில் சுற்றியுள்ள ஏழு கிராமங்களுக்கும் பெரும் தலைவலியாக உள்ளது என மக்களின் நீண்டநாள் கோரிக்கையை ஒட்டி மக்கள் அதிகாரம் நடத்திய மே 5 போராட்டம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்து மீண்டும் ஆட்சியை பிடித்த ஜெயா அரசு படிப்படியான மதுவிலக்கு என்ற நாடகத்தின் ஒரு பகுதியாக 500 கடைகள் மூடப்பட்டதாக சொல்லப்பட்டது. இதில் அன்பில் கடையும் ஒன்று!

மதுவிற்கு எதிராக போராடும் சாந்தி
மதுவிற்கு எதிராக போராடும் சாந்தி

நம்புவதற்கு கஷ்டமாகத் தான் இருந்தது. காரணம் நல்ல லாபம் தரும் கடை மக்கள் பெரும் குடிகாரர்களாக மாற்றிவரும் கடை இதை மூடியது புரியாத புதிராகவே இருந்தது. மெல்ல, மெல்லதான் புதிர் விலக ஆரம்பித்தது. ஏழு கிராமத்துக்கும் தொந்தரவாக உள்ள கடையை மூடு என மக்களும், மக்கள் அதிகாரம் நடத்திய போராட்டத்திற்காக கடையை மூடவில்லை. ஏழு கிராமங்களில் இருந்து குடிக்க சிரமப்படும் குடிமகன்களின் கோரிக்கையை ஏற்று ஊர்முழுக்க கடையை பெட்டிக்கடை, மளிகைக்கடை என குடிசைத்தொழில் போல சரக்குவிற்க அனுமதித்து கடைகளை விரிவுபடுத்தத்தான் அன்பில் கடையை மூடி உள்ளனர் என்ற புதிர் முழுமையாக விளங்கியது.

இதில் அரியூர் கிராமமும் ஒன்று, அரியூர் பெட்டிக்கடைகளில் குளிர்பானம் விற்பது போல தாராளமாக சரக்கு விற்க்கப்பட்டு வந்துள்ளது.

மது விற்கும் கடை
மது விற்கும் கடை

இதனை ஊர்மக்கள் ஒழிக்க விரும்பினாலும் ஒரே ஊரு, ஒரே தெரு, போலிஸ் கூட்டு, வீண் வம்பு வரும் என பயந்து வெளிப்படையாக எதிர்க்காமல் புலம்பிக்கொண்டு இருந்துள்ளனர். வில்லன் இருக்கும் ஊரில் நிச்சயம் கதாநாயகன் இருந்தே ஆகவேண்டும் என்ற விதி இந்த ஊரிலும் பொருந்தியது, ஒரு திருத்தம். இங்கே உருவானவர் கதாநாயகன் இல்லை, சாந்தி என்ற நாயகி ஆவார். இவர் கடந்த காலங்களில் கள்ளச்சாராயத்திற்கு எதிராக துனிந்து நின்று போராடியவர்.

ஊரை கெடுப்பவனே ஊரின் நாட்டாமையாக இருக்கும் அவலம் அரியூரிலும் உள்ளது. சம்பந்தப்பட்ட கள்ளச்சாராய வியாபாரியே ஊர்கூட்டம் கூட்டி ஒழுங்கு, நியாயம், தர்மம் பேசி உள்ளான். கோயில் திருவிழா நடத்த வேண்டும் என்று தலைக்கட்டு வரியை தீர்மானித்து நீட்டி உள்ளான். பெண்கள் மனதுக்குள் முணுமுணுப்பதும் சாந்தியிடம் சிலர் பேசச் சொல்வதும் நடந்தது. ஒரு கட்டத்தில் வெகுண்டெழுந்த சாந்தி, “ஊர் நியாயம் பேசுவதும், ஊர் திருவிழா நடப்பதும் ஒருபுறம் இருக்கட்டும். முதலில் ஊரை கெடுக்கும் சாராயத்ததை விற்பது ஏன்? இதை தடுக்க வேண்டாமா? இது தான் ஊரைக்காக்கும் லட்சணமா?” என பொருமித்தள்ளினார். இதனை சற்றும் எதிர்பார்க்காத மேற்படியவர் சாமிநாதன் அருள் வந்தவர் போல சாமியாட தொடங்கினார். வீட்டிற்கு சென்று அரிவாளை எடுத்துக்கொண்டு வந்து சலம்பித்தீர்த்தான். அவனுக்கு உதவியாக அவனது குடும்பம் துணைநின்றது.

மது விற்கும் சாமிநாதன் மனைவி சாந்தி
மது விற்கும் சாமிநாதன் மனைவி சாந்தி

தனித்து விடப்பட்ட சாந்தி உளவியல் ரீதியாக பெரும் துன்பத்திற்கு தள்ளப்பட்டார். ஊர் மக்கள் அமைதி காத்தனர். அன்றைய இரவு முழுவதும் வேதனையோடு கழித்தார். விடிந்தவுடன் உடனடியாக மக்கள் அதிகாரத்தை தொடர்புக்கொண்டு நேரில் வந்து நடவடிக்கை எடுத்தாக வேண்டும் என உறுதியாக நின்றார். லோக்கல் போலீசையோ, அரசியல் தலைவர்களையோ நம்பாமல் மக்கள் அதிகாரத்தை நம்பிக்கையுடன் நாடினார். அதனைத் தொடர்ந்து தோழமை அரங்கினரின் உதவியோடு காவல்துறை கண்காணிப்பாளரை சந்தித்து புகார்மனு அளிக்கப்பட்டது. “லோக்கல் போலிசார் மீது நம்பிக்கை இல்லை. நீங்கள் உடனடியாக சம்பந்தப்பட்ட நபரின் குடும்பத்தை கைது செய்ய வேண்டும். இன்று மாலை அரியூர் கிராமத்துக்கு செல்ல உள்ளோம். இவர்களுக்கு பாதுகாப்பு வேண்டும். ஏற்படும் பிரச்சனைக்கு லோக்கல் போலிசாலும், சாராய வியாபாரியுமே காரணம்” என எச்சரித்துவிட்டு ஊடகங்களுக்கும் செய்தி அளிக்கப்பட்டது.

அன்று மாலை இலால்குடி காவல் நிலையம் சென்று புகார் நகலை கொடுத்து நடவடிக்கை எடுக்க வழியுறுத்தப்பட்டது. “ஊருக்குள் சென்று புகார்தாரரான சாந்தியை பாதுகாப்பாக சேர்ப்பதற்கு போலிசார் பாதுகாப்பு தர வேண்டும்” என வலியுறுத்தி கோர 2 உதவி ஆய்வாளர்களுடன் அரியூர் கிராமம் சென்று ஊர்மக்கள் மத்தியிலும், நம்பிக்கை ஊட்டி பேசப்பட்டது.

மது விற்கும் குடும்பத்தோடு சமரசம் பேசும் போலீசு
மது விற்கும் குடும்பத்தோடு சமரசம் பேசும் போலீசு

பாதுகாப்புக்கு வந்த போலீசார் சாராய வியாபாரி குடும்பத்தில், “டாஸ்மாக் சரக்கை கள்ளத்தனமாக விற்ககூடாது. இது தப்பு” என புத்திமதி சொல்லிக்கொண்டு இருந்தார்.

அவர்களும், “சரி சார் இனிமேல் விற்கமாட்டோம்” என சமாதானம் சொன்னார்கள்.

தோழர்கள் இடைமறித்து, “புகாரில் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறினர். “நீங்கள் ஆலோசனை செய்வது சரியில்லை” என்றதும், “நாளை காலை அனைவரும் காவல் நிலையம் வாருங்கள்” என அழைப்பு விடுத்தார். அவர்கள் அங்கேயே, “முடியாது” என மறுத்தனர்.

போலீசாருக்கும் அவர்களுக்கும் இடையிலான உரையாடலை பார்க்கும் போதே போலீசாரின் ஒத்துழைப்போடுதான் சாராய வியாபாரம் நடக்கிறதோ என்ற சந்தேகம் வேடிக்கை பார்த்த அனைவருக்குமே வந்திருக்கும். ஊர்மக்கள் வேடிக்கை பார்க்க மற்றொரு புறம் நாம் விடாப்பிடியாக நடவடிக்கை எடுக்கக் கோர சாராய வியாபாரிகள் முடியாது என மறுக்க வெறுத்து போன போலீசார் புலம்பித் தள்ளி விட்டனர். இந்த “பொழப்பே நாய் பொழப்பு வேலைய விட்டுட்டு ஓடிப்போலாமுனு தோனுது” என பினாத்த ஆரம்பித்துவிட்டனர்.

மூடப்பட்ட டாஸ்மாக் கடை
மூடப்பட்ட டாஸ்மாக் கடை

“சார் நீங்க அதிகாரி உங்களுக்கு பவர் இருக்கு” என எடுத்து கூறவும், “பவரும் இல்ல ஒரு அதிகாரமும் இல்ல” என கத்ததொடங்கிவிட்டார்.

“நீங்க போங்க சார் நாங்க பாத்துக்குறோம்” என நம்மை அனுப்புவதிலேயே குறியாக உள்ளார்.

ஒரு சாராய வியாபாரியை கூட அடக்கமுடியாத அளவுக்கு இலால்குடி போலீஸ் முடங்கி போயிருப்பதை பார்க்க முடிந்தது. இன்னொரு புறம் மதுவிலக்கு பிரிவினர் சம்மந்தப்பட்ட சாராய வியாபாரி சாமிநாதனை விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளதாகவும் வழக்கு போட்டுள்ளதாகவும் போலீசார் கூறினர்.

ஒரு சமூக விரோதியை கூட அரசு இழக்க விரும்பவில்லை. அவனை பாதுகாப்பதிலேயே கவனம் செலுத்துகிறது. தற்காலிகமாக சரக்கு விற்பனையை நிறுத்தி உள்ளதாகவும், சம்பந்தப்பட்ட நபர்மீது வழக்கும் பதிவு செய்து இருப்பதாகவும் கூறி கதையை முடிக்க பார்க்கின்றனர். மக்கள் அதிகாரமும், அரியூர் மக்களும் இணைந்து முழுமையாக சமூகவிரோத டாஸ்மாக் விற்பனை எந்த வடிவத்தில் வந்தாலும் எதிர்த்து முறியடிக்காமல் விட போவதில்லை என்று உறுதியோடு களத்தில் இருக்கின்றனர்.

தகவல்
மக்கள் அதிகாரம்,
லால்குடி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க