privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகலைகவிதைஎட்டடிக் குச்சுக்குள் அடங்குமா அம்மா உன் அய்யனார் சிலை ?

எட்டடிக் குச்சுக்குள் அடங்குமா அம்மா உன் அய்யனார் சிலை ?

-

Mother"s tearsன்னோட படிச்சதெல்லாம்
ஊக்கமா பொழைக்குதுங்க,
கச்சி கட்சியின்னு
கட்சிக்கட்டிக்கினு அலையிரியே…

சித்தாகாட்டு வெறகுவெட்டி
செட்டிகுளம் தண்ணிமொண்டு,
செவ்வெண்ணெய் கூட்டினது
எந்தக் கட்சி?

வெய்யில் கானலுன்னு
பாக்காம,
கையும் காலையும்
தூக்கிக்கினு,
கூலிக்கு ஒடுன எடத்துல,
ஊத்துன கூழு கஞ்சிய தூக்கியாந்து,
பள்ளிக்கோட வாசல்ல
உன்னையக்
குடிக்க வச்சிட்டு
கூட்டி முழுங்குன
நெஞ்சுடா!

மறக்க முடியுமா
அம்மா!

எல்லோரும்
புள்ள வளத்தது போலவா
வளத்தேன்,
போலீஸ் புடிச்சிம்போய்
இருக்குமாமே,

எந்த தெய்வம் வந்து
குறுக்க நின்னுச்சோ!

‘தெய்வமா’
அம்மா!

காது மூக்குல
கெடந்ததை உறுவி,
கால் வவுத்தக் காப்பாத்துன
கழனிக் காட்டையும்
கை கழுவிட்டு,
கையேந்த வச்சிட்டேன்ற
கர்வமாடா?

எனக்கா அம்மா?

***

அம்மா நீ
பேசி முடித்து விட்டாயா,
அழுது தீர்த்துவிட்டாயா?

பக்கத்து விட்டுப் பிள்ளைகள் காணாமல்
நீ பதுக்கிய திண்பண்டங்கள்
உரியில்
எனக்காக.

நீ காணாமல்
அண்ணி பதுக்கிய திண்பண்டங்கள்
உரியில்
அவள் பிள்ளைக்காக

கஞ்சி கொடுத்தாய்
காதுத்தோட்டைக் கொடுத்தாய்
எனக்கு
உரி வேண்டாம் அம்மா.

பதுக்குவதற்கு ஒன்றுமில்லை
என்னிடம்
என்பதற்காஅழுகிறாய்?

***

“தனக்கு மிஞ்சிதாண்டா
தான தருமம்
உன் குடும்பத்தைக் காப்பாற்று,
ஏழை பாழைக்கு
ஏதோ முடிஞ்சதைக் கொடு”

உன்னையும் என்னையும் சேர்த்து
ஒரு வளையம் போட்டாய்.
எதிர்வீட்டு ஏகாம்பரம்
மனைவிக்கும் தனக்குமாய்
அந்த வளையத்தைச் சுருக்கிக் கொண்டவுடன்

”கொண்டவ தலையில
பூ சுமையும்
பெத்தவ தலையில
புல் சுமையும்
வச்ச பாவி… போறாம் பாரு”
எனப் பொருமிகிறாய்.

நானும் ஒரு
பாவியாகவில்லை என்றா
ஏங்குகிறாய்?

என் வளையம்
ரொம்பப் பெரியது.
அதில்
நீ உண்டு. அண்ணி உண்டு
ஏகாம்பரம் உண்டு, அவன் தாயு
முண்டு
நம் ஊரே உண்டு.

ஊர் காத்த அய்யனார்
நீ சொன்ன கதைதான்.
எட்டடிக் குச்சுக்குள்
அடங்குமா அம்மா
உன் அய்யனார் சிலை?

***

அம்மா
நீயும் அப்பாவும் அண்ணனும்
என்மீது கொண்ட
அன்பைச் சொல்ல
‘பாசம்’
என்ற சொல் உண்டு.

என்னுடைய அன்பை
எடுத்துச் சொல்ல – உன்
உரியில் இருக்கும் சொற்கள்
உதவாது.

உன் கண்ணிரைத் துடைக்க
உதவும் கைகள்
என் கண்ணிரைத் துடைக்க
உதவாது.

கோபப்படாதே அம்மா.
என் கண்ணிரை
இன்னும் நீ பார்த்ததேயில்லை.

– நிதி. கோமேதகம்

புதிய கலாச்சாரம், ஆகஸ்ட் 1999

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க