Saturday, June 15, 2024
முகப்புசெய்திவிழுப்புரம் பா.ஜ.க நேரலை : காசு துட்டு அடிதடி குத்து வெட்டு

விழுப்புரம் பா.ஜ.க நேரலை : காசு துட்டு அடிதடி குத்து வெட்டு

-

விழுப்புரத்தின் மையப்பகுதியில் பிரதான சாலையில் அமைந்துள்ளது AGG  திருமண மண்டபம். பாரதிய ஜனதா கட்சியும் மையத்தில்ஆள்வதால் நகரின் மையத்தில் இருக்கும் அந்த மண்டபத்தில் தான் கூட்டம் நடத்துவார்கள். எப்பொழுதும் பரபரப்பாகவே இருக்கும் அந்த சாலையில் வழக்கம் போல 07.07.2016 அன்று காலை 10.00 மணிக்கு (நேற்று) அக்கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெறுவதற்காக தெருவெங்கும் தோரணம் கட்டி, ஒரு டிஜிட்டல் பேனரும் வைத்திருந்தனர்.. அந்த பேனரும் பா.ஜ.க மாநில செயலாளரான கே.டி. ராகவனை வரவேற்று காத்திருந்தது.

காவிக்கரைவேட்டிக்காரர்கள் வருவதும் போவதுமாக இருந்தனர். கூட்டம் ஆரம்பிக்கும் சற்று நேரத்திற்கு முன்பு, மண்டபத்தில் ஒரே கூச்சல், மண்டபத்தின் உள்ளிருந்தவர்களில் சிலர் அலறியடித்துக் கொண்டு ஓடிவந்தனர். ஒரு புறம் ஜன்னல் கதவுகள் உடைகிறது… டியுப் லைட், நாற்காலிகள் என அனைத்தும் உடைகிறது..  இன்னொரு பக்கம் பேனர் கிழிந்து தொங்குகிறது. ரத்தம் சொட்ட சொட்ட ஒருவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்கின்றனர்.

அந்த வழியாக வரும் பொதுமக்களுக்கு ஒன்றும் புரியவில்லை. என்ன நடக்குமோ என்ற அச்சத்தில் பலரும் அருகருகே உள்ள கடைகளினுள் சென்று நுழைந்து  தங்களை பத்திரப்படுத்திக்கொண்டனர்.

கலவர பூமியாக காட்சியளித்த அந்த இடத்தில் “பயமும், பதற்றமும் தான் நிலவியது. மண்டபத்தில் இருந்து ஆவேசமாக வெளியே வந்த ஒருவரை பத்திரிகைகள் மொய்க்க ஆரம்பித்தன. மற்றொரு புறம் ஒரு துணை காவல் ஆய்வாளர்  தலைமையில்  சில போலீசார் மட்டும் கலவரத்தை கட்டுப்படுத்த முயற்சி செய்து கொண்டிருந்தனர்.

என்ன தான் நடக்கிறது என்பதை தெரிந்து கொள்ள மண்டபத்தின் உள்ளே சென்று, அதிர்ச்சியில் உறைந்து போயிருந்த ஒருவரிடம் மெல்ல பேச்சு கொடுத்தோம்.. அவரோ, “ அது ஒன்னுமில்லங்க தம்பி, இது ஒரு இந்து கட்சி… இந்த கட்சில தலித்து, வன்னியரு, போக ஒடையாறு, மத்த உயர் ஜாதிகாரங்க, அப்புறம் ஐயிருங்க எல்லாம் இருக்காங்க. இப்ப எல்லாருக்கும் போஸ்டிங் போட்டாங்க. அதுல சிலருக்கு பொறுப்பு குடுக்கல, ஒரு ஆளுக்கு 2 லட்ச ரூபா பணம் வாங்கினு தான் கொடுத்திருக்காங்க.. முக்கியமா,  தலித்துகளுக்கு எந்த பொறுப்பும் குடுக்கல. அதனால தான் “போலீஸ் சேகர்” (முன்னாள் மாவட்ட தலைவர்) தலைமையில் 50  பேர் வந்து கலவரம் பண்றானுங்க” என்று சொல்லி கொண்டிருக்கும் பொழுதே, போலீஸ் உள்ளே நுழைந்ததை பார்த்ததும் வர்றேன் தம்பி என்று கூறி கிளம்பிவிட்டார். நாட்டையே கூறு போட்டு நாடு நாடாக ஏலம் போட்டு விற்கும்  மோடி அரசின் கட்சி மட்டும் தனது பதவிகளை ஏலம் போடாதா என்ன? இதுதான் கேடி ராகவனின் செயலாளர் பணி போலும்.

SC/ST பிரிவை சார்ந்த ஒருவர், “ நாங்க காலம் காலமா ஒடுக்கப்பட்டு  வருகிறோம்.  இந்த கட்சிக்கு வந்தா அதெல்லாம் மாறிடும்’னு நெனச்சேன். ஆனா, இங்க வந்த பிறகும் நாங்க “அடியாளா” தான் இருக்கோம். எங்களுக்கு எந்த பொறுப்பும் கொடுக்கல.. இதுக்கு ஒரு முடிவு கட்டாம போறதில்லை என்று ஆத்திரம் பொங்க பத்திரிகைக்கு பேட்டியளித்தார். இதே நிலைமை தான் “வன்னியருக்கும்” என இன்னொருவர் கூறிவிட்டு சென்றார். ஒடுக்குவதையே சித்தாந்தமாகக் கொண்டிருக்கும் பார்ப்பனியக் கட்சியையே விடுதலைக்கான கட்சியாக நினைப்பது முட்டாள்தனம் என்கிறீர்களா? இல்லை ஒருவேளை இவர்களுக்கு பேரப்படி போஸ்டிங் கொடுக்கப்பட்டிருந்தால் அப்புறம் தலித்துக்களுக்கு விடுதலைதான்! ஆனால் மண்டபத்தில் ஆங்காங்க சிதறிய ரத்தத்தை பார்க்கும் போது இந்தக் கட்சியில் இரத்தம் சிந்திதான் அந்த ‘விடுதலையையும்’ பெற முடியும் என்பது புரிகிறது.

police-sekar-talikng-with-police

அப்பொழுது மாநில செயலாளர் கே.டி. ராகவன் வந்ததால் பத்திரிக்கையாளர்கள் அவரை நோக்கி ஓட, நடந்த சம்பவங்கள் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. கூட்டம் நடைபெறும் என்ற அறிவிப்போடு நிறுத்திக்கொண்டார். கமுக்கமாக நடக்கும் வரைதான் அது பஞ்சாயத்து. அதுவே அடிதடி, உடைப்பு என்று போன பிறகு பஞ்சாயத்து தலைவர் அதற்கு ஏன் என்ன என்று விளக்கினால் அனைவரும் அவரைத்தான் குடைவார்கள். அந்தப்படிக்கு கேடி ராகவன் கமுக்கமாக எஸ்கேப் ஆனார். எனவே, தற்போதைய மாவட்ட தலைவர் விநாயகம் தரப்பை சேர்ந்தவர்கள் அடிதடி முடிந்த பிறகும் இந்துக்களை காப்பதற்கான கட்சி கூட்டத்தை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்தனர்.

இறுதியில், காவல்துறை குவிக்கப்பட்டதால் நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு, கலவரத்தில் ஈடுபட்டவர்கள் என கூறி 6 தலித் இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். இறுதியில் தலித்துக்களுக்கான விடுதலை என்பது காவல் துறையின் கைதாக பரிணமித்தது. அதே வேளையில் இந்து ஒற்றுமையை வலியுறுத்தி பாரத தேஷத்தை காப்பாற்றும் கடமையை எடுத்துக் கூறி கூட்டமும் நடைபெற்றுக் கொண்டிருந்தது.

ஆம்! மேற்கண்ட சம்பவங்கள் நமக்கு உணர்த்துவது என்ன, RSS-BJP பார்ப்பன கும்பல் நாடு முழுவதும்  கலவரங்களை செய்து தான் ஆட்சியை கைப்பற்றியுள்ளனர். இந்த கலவரத்தில் ஈடுபடுபவர்கள் பெரும்பான்மையானோர் இந்து வெறியூட்டப்பட்ட அப்பாவி தலித்துகள் மற்றும் பிற்படுத்தப்பட்ட சாதியினர். தற்பொழுது அவர்கள் தமிழகத்தில் காலுன்ற துடித்துக் கொண்டிருக்கிறார்கள். மற்றபடி அடியாள்களாக பயன்படுபவர்கள் பதவிகளை எதிர்பார்த்தால் ஆதிக்க சாதி இந்துக்களுக்கும் கட்சித் தலைமைக்கும் கோபம் வரத்தான் செய்யும். ஒன்றுமில்லாத விழுப்புரத்திலேயே ஒன்றுமில்லாத பா.ஜ.க பதவிகளுக்கு இரண்டு இலட்சம் ரூபாய் ரேட் என்றால் மாநிலம், மையம், வடக்கில் உள்ள ரேட் என்ன என்று சுப்ரமணிய சாமியைத்தான் கேட்க வேண்டும்.

இவர்களுடன் சேராதீர்கள் என அப்பொழுதே அம்பேத்கர் தாழ்த்தப்பட்ட மக்களைப் பார்த்து கூறினார்… ”இவர்கள் நாவிலே இராமனையும், கைகளிலே கூர்வாளையும் வைத்திருப்பார்கள்.ஆனால், கொலைகாரர்களாக நடந்து கொள்வார்கள். கடவுள் எங்கும் நிறைந்திருகிறான் என்பார்கள்.ஆனால், விலங்கினும் கேவலமாக மனிதனை நடத்துவார்கள். எறும்பிற்கு சர்க்கரையை உணவாய் இடுவார்கள். ஆனால், மனிதர்கள் தண்ணீர் குடிக்க தடை விதிப்பார்கள். இவர்களுடன் சேராதீர்கள்”.

– செய்தி, படங்கள்: வினவு செய்தியாளர்கள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க