privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்அமெரிக்காஆர்.எஸ்.எஸ். இன் தேசபக்தியைத் தோலுரித்த ரகுராம் ராஜன் !

ஆர்.எஸ்.எஸ். இன் தேசபக்தியைத் தோலுரித்த ரகுராம் ராஜன் !

-

ரிசர்வ் வங்கியின் ஆளுநர் ரகுராம் ராஜன், “தான் பதவி நீட்டிப்பு கோரப் போவதில்லை; செப்டம்பரில் தனது பதவிக் காலம் முடிந்த பிறகு, ஆசிரியப் பணிக்குத் திரும்பச் செல்லவிருக்கிறேன்” என அறிவித்ததையடுத்து, இந்தப் பிரச்சினைக்கு மங்களம் பாடிவிட்டன, ஊடகங்கள். ஆனால், இப்பிரச்சினையின் பின்னே புதைந்து கிடக்கும் அபாயங்கள் இனிதான், அதன் முழு பரிமாணத்தோடு வெடிக்கவிருக்கின்றன.

ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன்.
ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன்.

பொதுத்துறை வங்கிகளிடம் கடன் வாங்கி அவற்றுக்கு நாமம் போடும் விசயத்தில் இந்தியத் தரகு முதலாளிகள் மல்லையாவை விஞ்சியவர்கள். கடன்களை மறுசீரமைப்பது என்ற பெயரில் கடனைத் திரும்பக் கட்டாமலேயே தந்திரமாக இழுத்தடித்து வந்த தரகு முதலாளிகளுக்கும், அதற்குத் துணை நின்ற வங்கி நிர்வாகம் மற்றும் நிதியமைச்சகம் ஆகியவற்றுக்கும் கிடுக்கிப்பிடி போட்டு, சொத்தை விற்று கடனைக் கட்டுமாறு செய்தார் ரகுராம் ராஜன். இதன் விளைவாகத்தான் ஊரறிந்த சி.ஐ.ஏ. ஏஜெண்டும், ஆளும் வர்க்கத்தின் பங்களா நாயுமான சுப்பிரமணியசாமி, ரகுராம் ராஜன் அமெரிக்க குடியுரிமை வைத்திருப்பவர் என்றும் இந்தியா மீது விசுவாசமில்லாதவர் என்றும் ஏசினார்.

அம்பானி, அதானி, நிதின் கட்கரி ஆகிய தரகு முதலாளிகளின் அறிவிக்கப்படாத கணக்குப் பிள்ளையான ஆர்.எஸ்.எஸ்.-இன் குருமூர்த்தி, சு.சாமி போல பச்சையாகவும் கொச்சையாகவும் தாக்காமல், ரொம்பவும் ஆதாரபூர்வமாக விமரிசிக்கும் தோரணையில், ரகுராம்ராஜனின் அணுகுமுறை காரணமாக உள்நாட்டுத் தொழில்கள் நசிந்து விட்டதாக குற்றம் சாட்டினார்.

முஸ்லிம்களைக் காட்டிலும் அதிகமாக ரகுராம் ராஜன் மீது ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் வெறுப்பைக் கக்குவதைப் பார்த்து, அவர் ஒரு இடதுசாரி சார்பு பொருளாதாரக் கொள்கையாளரோ என்று யாரும் சந்தேகப்படவேண்டாம். அவர் புதிய தாராளவாதக் கொள்கையின் தீவிர ஆதரவாளர்தான். எனினும், பொதுத்துறை வங்கிகளை உங்கள் விருப்பம் போலக் கொள்ளையடிப்பதை அனுமதிக்க இயலாது என்று இந்தியப் பெரு முதலாளிகளிடம் சொன்னார் ரகுராம் ராஜன். ஒரு வரியில் சொன்னால், இதுதான் அவர் செய்த மாபெரும் தேச விரோதக் குற்றம்.

வட்டி வீதத்தை யார் தீர்மானிப்பது?

“வங்கி வட்டி வீதத்தைக் குறைக்க மறுத்ததன் மூலம் ராஜன் இந்தியப் பொருளாதாரத்தைச் சீர்குலைத்துவிட்டதாகவும்; இதனால் வேலை வாய்ப்புகள் உருவாவது தடைபட்டுப் போனதாகவும்; சிறுதொழில்களுக்குக் கடன் கொடுப்பதற்காக மோடி அரசு கொண்டு வந்த முத்ரா வங்கித் திட்டம் முடங்கிப் போனதாகவும்” ரகுராம் ராஜன் மீது குற்றச்சாட்டுகளை அடுக்கியிருக்கிறார் குருமூர்த்தி. சுவாமியால் தேசத் துரோகியாகக் காட்டப்பட்ட ராஜனை வளர்ச்சியின் எதிரியாக்கி நிறுத்துகிறார், குருமூர்த்தி.

இந்தியத் தரகு முதலாளிகளின் கைக்கூலிகள்: சுப்பிரமணிய சுவாமி (இடது) மற்றும் எஸ்.குருமூர்த்தி.
இந்தியத் தரகு முதலாளிகளின் கைக்கூலிகள்: சுப்பிரமணிய சுவாமி (இடது) மற்றும் எஸ்.குருமூர்த்தி.

மோடி அரசு கொண்டு வந்திருக்கும் முத்ரா வங்கித் திட்டம் என்பது, சிறு தொழில்களுக்கு நேரடியாகக் கடன் கொடுக்கும் திட்டமல்ல. மாறாக, சிறு தொழில் நிறுவனங்களுக்குக் கடன் கொடுக்கின்ற நிதி நிறுவனங்களுக்குக் குறைந்த வட்டியில் கடன் வழங்கும் திட்டம்தான் அது. கந்து வட்டிக் கும்பலுக்கு கடன் கொடுக்க முட்டுக்கட்டை போடுகிறாரே என்பதுதான் மார்வாடிக் கட்சியான பாரதிய ஜனதாக் கட்சியினரின் குமுறல்.

வங்கி வட்டி வீதத்தை ராஜன் குறைக்க மறுத்துவிட்டார் எனச் சொல்லப்படும் குற்றச்சாட்டும்கூட, உண்மைக்குப் புறம்பானது. கடனுக்கு வட்டி எவ்வளவு என்பதைக் கடன் கொடுக்கும் வங்கி தீர்மானிப்பதா, கடன் வாங்கும் தரகு முதலாளிகள் தீர்மானிப்பதா? கடந்த ஒன்றரை ஆண்டுகளில் 1.50 சதவீதம் அளவிற்கு வட்டியைக் குறைத்து, தற்பொழுது அதனை 6.50 சதவீதமாக நிர்ணயித்திருக்கிறது ரிசர்வ் வங்கி. ஆனால், மோடி அரசும் தரகு முதலாளிகளும் அதனை 4 சதவீதமாகக் குறைக்க வேண்டும் எனக் கோரியதற்குத்தான் ராஜன் உடன்பட மறுத்துவிட்டார்.

“உங்களின் சேமிப்பை இந்தியாவிலுள்ள ஏதாவதொரு பாதுகாப்பான வங்கியில் 4 சதவீத வட்டியில் டெபாசிட் பண்ண முன் வருவீர்களா?” எனக் கேட்டுத் தரகு முதலாளிகளின் கோரிக்கையை ஒதுக்கித் தள்ளிய ராஜன், வங்கி சேமிப்புகளிலிருந்து கிடைக்கும் வட்டியைக் கொண்டு வாழ்க்கையை நடத்தும் பொதுமக்களையும் ரிசர்வ் வங்கி கவனத்தில் கொள்ள வேண்டும் என்றார்.

தொழிலாளர்களின் பி.எஃப். வட்டியைக் குறைத்து, அவர்கள் வயிற்றிலடிக்கும் மோடி தேசபக்தராம். முதலாளிகள் வாங்கும் கடனுக்கு வட்டியைக் குறைத்தால், சேமிப்புகள் மூலம் கிடைக்கும் வட்டியில் வாழ்க்கை நடத்தும் முதியவர்களின் நலன் பாதிக்கப்படும் என்று சொல்லும் ராஜன் தேசவிரோதியாம்! இந்தியாவைப் பற்றித் தெரியாதவராம்!

cartoon1பொருளாதாரத் தேக்கம் நிலவும் காலத்தில் வங்கி வட்டியைக் குறைப்பதன் மூலம் பணப் புழக்கத்தை ஏற்படுத்தி, அதன் வழியாக வளர்ச்சியைக் கொண்டுவர முடியும் என்று நம்பச்சொல்கிறது மோடி கும்பல். ஆனால், இந்த வழியானது ஒட்டுமொத்த நாட்டையும் புதைகுழிக்குள் இழுத்துச் செல்லும் வழி என்பதை அமெரிக்காவில் 2008-இல் வெடித்த சப்-பிரைம் கடன் நெருக்கடி உணர்த்தியிருக்கிறது. சப்-பிரைம் நெருக்கடி வெடிப்பதற்கு முன்பாக அமெரிக்காவில் வங்கி கடனுக்கான வட்டி 0% சதவீதமாகக் குறைக்கப்பட்டிருந்தையும், அவ்வட்டி குறைப்பால் செயற்கையாக உருவாக்கப்பட்ட பொருளாதார ஏற்றம், 2008-இல் உடைந்து உலக நாடுகள் அனைத்தையுமே புதைசேற்றுக்குள் தள்ளியதையும், கணிசமான அமெரிக்க மக்கள் ஓட்டாண்டிகளாகித் தெருவிற்கு வந்ததையும், அதிலிருந்து மீண்டு வர முடியாமல் உலகமே தத்தளிப்பதையும் நாம் அனுபவித்து வருகிறோம்.

அந்தப் பொருளாதார நெருக்கடியில் சிக்கி இந்தியப் பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கிகள் திவாலாகிவிடாமல் தப்பித்துக் கொண்டதற்கு, பணக் கொள்கை மீது ரிசர்வ் வங்கிக்கு இருந்த கட்டுப்பாடுகள்தான் காரணம். ரிசர்வ் வங்கியின் கையில் உள்ள இந்த அதிகாரத்தைப் பறித்துவிட வேண்டும் என்பதுதான் மோடி அரசின் விருப்பம்.

வாராக் கடன் என்ற புற்றுநோய்

வங்கிகள் கொடுத்திருக்கும் கடனுக்கான வட்டி 60 நாட்களுக்கு மேல் செலுத்தப்படாமல் இருந்தால், அவற்றை வாராக் கடனாக வரையறுக்க வேண்டும் என்கிறது, வங்கிகளின் நிர்வாக விதி. இந்திய வங்கிகளில், குறிப்பாக பொதுத்துறை வங்கிகளில் இப்படிபட்ட வாராக் கடன் எவ்வளவு இருக்கிறது என்பது நீண்ட காலமாகவே மர்மமாக இருந்துவந்த நிலையில், அந்த இரகசியத்தை வங்கிகளின் சொத்து குறித்த நடத்தப்பட்ட ஆய்வுகளின் மூலம்  உடைத்து வெளிக்கொண்டு வந்தார், ரகுராம் ராஜன்.

கடந்த அக்டோபர் 2015 தொடங்கி டிசம்பர் 2015 முடியவுள்ள காலாண்டு அறிக்கையில், வங்கிகள் தங்களிடம் நான்கு இலட்சம் கோடி ரூபாய் அளவிற்கு வாராக் கடன் இருப்பதாகக் கணக்குக் காட்டின. ஆனால், ராஜன் எடுத்த நடவடிக்கையின் விளைவாக வங்கிகளின் அடுத்த காலாண்டு அறிக்கையில் (ஜன.2016 – மார்ச் 2016) வாராக்கடன் ஏறத்தாழ 6 இலட்சம் கோடி ரூபாய் அளவிற்கு இருப்பது தெரியவந்தது. வெறும் மூன்று மாத இடைவெளியில் வங்கிகளின் வாராக் கடன் 50 சதவீதம் அதிகரித்து ஆறு இலட்சம் கோடி ரூபாயைத் தொட்டிருப்பது அசாதாரணமானது மட்டுமல்ல, குற்றப் புலனாய்வு விசாரணைக்கும் உரியது.

தமது நிறுவனங்களின் சொத்துக்களை விற்றாவது கடனை அடைக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கும் தரகு முதலாளிகள் (இடமிருந்து) அனில் அம்பானி, கௌதம் அதானி மற்றும் சசி ரூயா.
தமது நிறுவனங்களின் சொத்துக்களை விற்றாவது கடனை அடைக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கும் தரகு முதலாளிகள் (இடமிருந்து) அனில் அம்பானி, கௌதம் அதானி மற்றும் சசி ரூயா.

இந்த வாராக் கடன்களில் பெரும்பகுதி இந்தியத் தரகு முதலாளிகளுக்குத் தரப்பட்டு நிலுவையில் இருப்பவை என்பது ஏற்கெனவே அம்பலமான உண்மை. இந்தியாவின் முதல் பத்து பெரு நிறுவனங்கள் வங்கிகளுக்குத் திருப்பித் தர வேண்டிய கடன் தொகை 7.5 இலட்சம் கோடி என்றும், இதில் சரிபாதி வாராக் கடனாக இருப்பதாகவும் குறிப்பிடுகிறது, “கிரெடிட் சுயிஸ் இந்தியா” என்ற அமைப்பு. இந்த வாராக் கடன் பட்டியலில் சேர்க்கப்படாமல், மோசமான கடன்கள் என வகைப்படுத்தப்பட்ட கடன்களின் நிலுவையையும் சேர்த்தால், கார்ப்பரேட் நிறுவனங்களுக்குக் கொடுத்த கடன்களின் விளைவாக பொதுத்துறை வங்கிகள் திவால் நிலையின் விளிம்பில் நிறுத்தப்பட்டிருப்பதை யாரும் புரிந்துகொள்ள முடியும்.

வங்கிகளிடமிருந்து 1,21,000 கோடி ரூபாயைக் கடனாகப் பெற்றுள்ள அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமம், அதற்கு ஆண்டு வட்டியாக 8,299 கோடி ரூபாய் செலுத்த வேண்டும். ஆனால், அந்தக் குழுமத்தின் வரி விதிப்புக்கு முந்தைய ஆண்டு விற்று முதல் வரவே 9,848 கோடி ரூபாய்தான். இது போல ரிலையன்ஸ் குழுமத்தைச் சேர்ந்த ரிலையன்ஸ் இன்ஃபராஸ்டர்க்சர், ரிலையன்ஸ் டிஃபன்ஸ் நிறுவனங்களும் வட்டி கட்டக்கூடிய அளவிற்கு வருமானம் ஈட்டுவதில்லை எனக் கூறப்படுகிறது. ரிலையன்ஸ் நிறுவனம் மட்டுமல்ல, எஸ்ஸார், அதானி, ஜே.பி. எனப் பல குழுமங்களின் நிலையும் இதுதான்.

வங்கியில் வீட்டுக் கடன் வாங்கிய நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்களோ, விவசாயக் கடன் வாங்கிய குடியானவனோ, கல்விக் கடன் வாங்கிய பெற்றோரோ கடனைத் திருப்பிச் செலுத்தாவிட்டால், அவர்கள் வீட்டுக்குக் குண்டர்களை, போலீசை அனுப்பி, சொத்துக்களை ஜப்தி செய்யும் வங்கி நிர்வாகங்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள் அசலை, வட்டியைக் கட்டாமல் திட்டமிட்டே ஏய்ப்பது தெரிந்தும், அவர்கள் வாங்கிய கடன்களுக்கான தவணையை, கெடுவைத் தள்ளிவைத்து தில்லுமுல்லு செய்து வருகின்றன.

கார்ப்பரேட் நிறுவனங்களுக்குக் கடனைக் கொடுப்பதிலும், அதனை வசூலிக்காமல் கெடு காலத்தைத் தள்ளிவைத்து கடனை மறுசீரமைப்பதிலும், கடன்களைத் தள்ளுபடி செய்வதிலும் வங்கி நிர்வாகத்திற்கும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் இடையே இருந்துவரும் கிரிமினல் தொடர்பைத்தான் ரகுராம் ராஜன் தனது நடவடிக்கைகள் மூலம் துண்டித்துவிட முயற்சித்தார்.

வங்கிகள் தமது கடன்கள் அனைத்தையும் மார்ச் 2017-க்குள் ஒழுங்கமைப்பு செய்து, அவற்றை வசூலிக்கும் ஏற்பாடுகளைச் செய்ய வேண்டுமென்றும்; நிலுவையில் உள்ள கடன்களின் கெடு தேதிகளைத் தள்ளிவைத்து மறுசீரமைப்பு செய்யக் கூடாதென்றும் உத்தரவிட்ட ராஜன், கடனைக் கட்டாமல் ஏய்த்துவந்த கார்ப்பரேட் நிறுவனங்களைத் தமது சொத்துக்களை விற்றுக் கடனை அடைக்க வேண்டிய நிர்பந்தத்தை உருவாக்கினார்.

இதன் காரணமாக அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமம் 60,000 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களையும்; எஸ்ஸார் குழுமம் 50,000 கோடி ரூபாய் சொத்துக்களையும்;கௌதம் அதானி குழுமம் 6,000 கோடி ரூபாய் சொத்துக்களையும்; டாடா நிறுவனம் இங்கிலாந்திலுள்ள 17,400 கோடி ரூபாய் சொத்துக்களையும்; ஜே.பி. குழுமம் 24,000 கோடி ரூபாய் சொத்துக்களையும்; லான்கோ குழுமம் 25,000 கோடி ரூபாய் சொத்துக்களையும்; வீடியோகான் குழுமம் 9,000 கோடி ரூபாய் பெறுமான சொத்துக்களையும் விற்றுக் கடனைக் கட்ட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டன.

தரகு முதலாளிகள்: அரசின் செல்லப்பிள்ளைகள்

swamy2இந்தியத் தரகு முதலாளிகள் இப்படிபட்ட நெருக்கடிகளை இதற்கு முன் சந்தித்ததேயில்லை. அக்கும்பல், தனது பிறப்பிலிருந்தே, குறிப்பாக நாடு ‘சுதந்திர’மடைந்த பிறகு, அரசின் செல்லப்பிள்ளைகளாகவே வளர்க்கப்பட்டனர். மூலதனம் தொடங்கி இயற்கை வளங்கள் வரையில், மானியம் தொடங்கி வரிச் சலுகை வரையில் அனைத்தும் அவர்கள் விரும்பியபடியே அரசாலும், ஆளும் வர்க்க கட்சிகளாலும் செய்து கொடுக்கப்பட்டன.

கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அரசு முறைகேடான சலுகைகளை வழங்கி ஊட்டி வளர்க்கக் கூடாது. மாறாக, கார்ப்பரேட் நிறுவனங்கள் சட்டத்திற்கு உட்பட்டு, சந்தையில் போட்டியிட்டு தொழிலை நடத்த வேண்டும்; இல்லையென்றால் மூடிவிட்டுச் சென்றுவிட வேண்டும் என்கிறார் ராஜன். மேலும், இந்திய தரகு முதலாளிகளுக்கும் இந்திய அரசிற்கும் இடையேயான இந்த நெருக்கமான உறவுதான் இந்தியா எதிர்கொள்ளும் மிகப்பெரும் அபாயம் என்றும் அவர் சுட்டிக் காட்டுகிறார்.  இந்த அணுகுமுறைதான் இந்தியத் தரகு முதலாளிகளையும், அவர்களது பாதுகாவலர்களான ஆளும் வர்க்கக் கட்சிகளையும் ஆத்திரம் கொள்ளச் செய்திருக்கிறது.

கிராமப்புறங்களில் இரட்டை டம்ளர் உள்ளிட்ட தீண்டாமைக் கொடுமைகளை, சாதிய பழக்கவழக்கங்களைக் கேள்விக்குள்ளாக்குபவர்களைப் பார்த்து,  “தம்பி ஊருக்குப் புதுசா?” என ஆதிக்க சாதிவெறியர்கள் கேட்பது வழக்கம். அதுதான் ராஜன் விவகாரத்திலும் நடக்கிறது. ராஜன் இந்திய அரசிற்கும் தரகு முதலாளிகளுக்கும் இடையேயான கள்ளக்கூட்டை, செல்லப்பிள்ளைத்தனத்தைக் கேள்விக்குள்ளாக்கியவுடன், “ராஜன் இந்தியாவைப் புரிந்து கொள்ளவில்லை; அவர் திறமையான பொருளாதார நிபுணராக இருக்கலாம். ஆனால், இந்தியப் பொருளாதார நிபுணர் அல்ல” என ஆர்.எஸ்.எஸ். கும்பல் தரகு முதலாளிகளைக் காப்பாற்றும் விசுவாசத்தோடு  ராஜனை வசைபாடியது.

அரசின் கட்டுப்பாட்டிலிருந்து பொதுத்துறை நிறுவனங்களை விடுவித்து, அரசின் ஆதரவின்றி சுயேச்சையாக சந்தையில் போட்டியிடச் செய்ய வேண்டும் என நியாயவாதம் பேசிய தரகு முதலாளித்துவக் கும்பல், தனக்கென்று வரும்பொழுது தட்டைத் திருப்பிப் போட்டுத் தட்டுகிறது. ஒருபுறம் தங்களின் தொழிலுக்கும், இலாபத்திற்கும் அரசின் பாதுகாப்பு, நிதியுதவிகளைக் கோரும் இவர்கள், இன்னொருபுறமோ எந்தவொரு சட்டமும், அரசு நிறுவனமும் தங்களைக் கட்டுப்படுத்தக் கூடாதென்றும் கோருகிறார்கள்.

மையப் புலனாய்வுத் துறை (சி.பி.ஐ.), மைய தணிக்கைத் துறை (சி.ஏ.ஜி.), மைய ஊழல் ஒழிப்புத் துறை (சி.வி.சி.) ஆகிய மூன்று “சி”க்களும் இந்தியாவை நிர்வகிக்க அனுமதிக்கக்கூடாது என்றார், வங்கிக் கடனை ஏப்பம் விட்டிருக்கும் அனில் அம்பானி. இதனை அப்படியே வழிமொழிந்தார் மைய அமைச்சரும் தரகு முதலாளியுமான நிதின் கட்கரி. கார்ப்பரேட் நிறுவனங்கள் மீது விதிக்கப்படும் வருமான வரி விதிப்பைக் கைவிட வேண்டும் என்கிறார், சு.சாமி. காங்கிரசு அரசு கொண்டு வந்த முன் தேதியிட்டு வருமான வரி வசூலிக்கும் விதியை ஆட்சிக்கு வந்தவுடனேயே ஊறுகாய் பாட்டிலுக்குள் போட்டு அடைத்தது, மோடி அரசு.

வாங்கிய கடனுக்கு வட்டியைக் கட்டச் சொன்னால், பொருளாதாரத் தேக்கம் நிலவுகிறது என நிதியமைச்சரே தரகு முதலாளிகளுக்காக வக்காலத்து வாங்குகிறார். இந்தப் பொருளாதார தேக்கம் நிலவும் நேரத்தில்தான், டிராக்டர் கடன் வாங்கிய தஞ்சை விவசாயி பாலனிடமிருந்து கடனை வசூலிக்க போலீசை ஏவியது வங்கி நிர்வாகம். கல்விக் கடனைக் கட்டாத மாணவர்கள் வங்கி வேலைகளுக்கான போட்டித் தேர்வுகளில் போட்டியிட முடியாது என உத்தரவிட்டது ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா. ஆனால், பல்லாயிரம் கோடிகளில் கடன் வாங்கி ஏப்பம் விட்டு வரும் தரகு முதலாளிகளோ, அரசால் சலுகை அளிக்கப்பட்டு பாதுகாக்கப்படுகின்றனர். இந்தக் கூட்டுக் களவாணித்தோடு ஒத்துப்போக மறுத்த ராஜனைத்தான் தேசத் துரோகி என முத்திரை குத்துகிறது, ஆர்.எஸ்.எஸ். கும்பல்.

மோடியின் ‘சாதனைகளை’ப் புட்டுவைத்த ராஜன்

“மேக் இன் இந்தியா” திட்டத்தை அறிவித்துள்ள மோடி, இந்தத் திட்டம் இந்தியாவை உலகின் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி மையமாக மாற்றக் கூடிய மந்திரக்கோல் எனக் காட்டி வருகிறார். அதாவது, கொக்கு தலையில் வெண்ணெய் வைத்து பிடிக்கும் கதையாக, இத்திட்டத்தைப் பயன்படுத்திக் கொண்டு பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் தொழில்களைத் தொடங்க போட்டி போடுமென்றும்; அப்படித் தொடங்கப்படும் தொழிற்சாலைகளின் உற்பத்திப் பொருட்களை ஏற்றுமதி செய்து, சர்வதேச சந்தையில் சீனாவின் இடத்தை இந்தியா பிடிக்கும் என்றும் ஒரு மல்டி கலர் கனவை இறக்கிவிட்டார், மோடி.

தமது பி.எஃப் பணத்தை முடக்கத் திட்டமிட்ட மோடி அரசின் சதியை எதிர்த்து போர்க்குணமிக்கப் போராட்டம் நடத்திய பெங்களூரு ஆயத்த ஆடை பெண் தொழிலாளர்கள்.(கோப்புப்படம்)
தமது பி.எஃப் பணத்தை முடக்கத் திட்டமிட்ட மோடி அரசின் சதியை எதிர்த்து போர்க்குணமிக்கப் போராட்டம் நடத்திய பெங்களூரு ஆயத்த ஆடை பெண் தொழிலாளர்கள்.(கோப்புப்படம்)

கார்ப்பரேட் ஊடகங்களும், முதலாளிகளும் இதை வைத்து ஆதாயம் பார்க்கலாம் என்ற எதிர்பார்ப்பில் மோடியின் இந்தத் திட்டத்தை வாராது வந்த மாமணி போல புகழ்ந்து தள்ளிக்கொண்டிருந்த சமயத்தில், ரகுராம் ராஜன் இந்த திட்டத்தின் ஓட்டைகளைப் புட்டு வைத்தார். சப்-பிரைம் கடன் நெருக்கடியால் ஏற்பட்ட பொருளாதார தேக்கத்திலிருந்து உலக நாடுகள் இன்னமும் மீண்டுவர இயலாத நிலையில், இந்தியாவை உலகின் ஏற்றுமதி மையமாக மாற்றுவது சாத்தியமே இல்லாத ஒன்று எனக் கூறிய ராஜன், உலகச் சந்தைக்காக உற்பத்தி செய்வதற்கு மாறாக, உள்நாட்டு சந்தைக்காக உற்பத்தி செய்யும் “இந்தியாவிற்காகத் தயாரிப்போம்” (மேக் ஃபார் இந்தியா) திட்டத்தைத் தொடங்குமாறு கூறி, இது ஒன்றுதான் பொருளாதாரத்தை முன்னேற்ற சாத்தியமான வழி என்றும் விளக்கி, இந்து தேசியவாதக் கும்பலின் மூக்கை உடைத்தார் ‘அந்நியர்’ ராஜன்.

2015-16 ஆம் ஆண்டு நிதியாண்டில் இந்தியப் பொருளாதாரம் ( ஜி.டி.பி.) 7.2 சதவீதம் வளர்ச்சியடைந்திருப்பதாகவும், இதுவொரு உலக சாதனை என்றும் மோடி கும்பல் தம்பட்டம் அடித்தபொழுது, ரகுராம் ராஜன், “குருடர்கள் தேசத்தில் ஒற்றைக் கண் உள்ளவன்தான் அரசன்” என நக்கலடித்து, மோடி கும்பலின் ஓட்டாண்டித்தனத்தை அம்பலப்படுத்தினார்.

இதுவொரு பொருளாதரப் புள்ளிவிவர மோசடி எனப் பல பொருளாதார நிபுணர்கள் மோடி அரசின் பித்தலாட்டத்தனத்தை அம்பலப்படுத்தியபொழுது, ரகுராம் ராஜன், “தனியொரு மனிதனின் வருமானத்தை எடுத்துக் கொண்டால், இந்தியா இன்னமும் உலகின் ஏழை நாடுகளில் ஒன்றாக இருப்பதை உணர வேண்டும்” என்றார்.

சாட்டையடி போல விழுந்த ரகுராம் ராஜனின் நக்கலால் ஆத்திரப்பட்ட அருண் ஜெட்லியும், நிர்மலா சீதாராமனும், அவர் எல்லை மீறிப் பேசுவதாக எச்சரித்தபொழுது, ராஜன், “எனது வார்த்தைகளால் பார்வையற்றவர்கள் மனது புண்பட்டிருந்தால் அதற்காக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்” எனக் கூறி, பார்ப்பன பாசிச திமிர் பிடித்த ஆர்.எஸ்.எஸ். கும்பலை நாக்கைப் பிடுங்கிக் கொள்ளும் நிலைக்குத் தள்ளினார்.

மோடியை வலிமையான தலைவர் என்றும், அவரது அரசு வலிமையான அரசு என்றும் பார்ப்பனக் கும்பல் கொண்டாடியபொழுது, “வலிமையான அரசுகள் மக்களுக்கு வளமையைத் தருவதில்லை” எனப் பதிலடி கொடுத்த ராஜன், அதற்கு இட்லரை உதாரணமாகக் காட்டி, “வலிமையான தலைவரான இட்லர் ஜெர்மனியைத் திறமையாகவும் உறுதியோடும் அழிவுப் பாதைக்கு இட்டுச் சென்றதோடு, சட்டத்தின் ஆட்சிக்கும் தேர்தலுக்கும் முடிவு கட்டியதை” நினைவூட்டினார்.

ஸ்டார்ட்-அப் இந்தியா மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு சகிப்புத்தன்மையும், கருத்து முரண்பாடுகளும் அவசியம் எனக் குறிப்பிட்ட ராஜன், “கருத்துக்களின் மோதலுக்கு இடம் இல்லையென்றால், பொருளாதாரம்கூடத் தேக்கம் அடைந்துவிடும்” எனக் கூறி, ஆர்.எஸ்.எஸ். கும்பலின் இந்து மதவெறித்தனத்தை இலைமறை காயாகக் குத்திக் காட்டினார்.

தரகு முதலாளிகள் வட்டியைக் குறைக்க வேண்டும் என விடாப்பிடியாக நிர்பந்தம் கொடுத்தபொழுது, “நாங்கள் யாருக்கும் தீபாவளி போனசு வழங்குவதில்லை” என அவர்களை வாரிய ராஜன், “இந்திய முதலாளிகள் சவால்களை எதிர்கொள்வதில்லை. நல்ல காலங்களில் இலாபத்தை அறுவடை செய்து கொள்ளும் அவர்கள், மோசமான தருணங்களில் வங்கிகளால் தூக்கிவிடப்படுகிறார்கள்” என உண்மையை உடைத்து, அவர்களின் ஒட்டுண்ணித்தனத்தை நாறடித்தார்.

பார்ப்பனக் கும்பலின் இரட்டை வேடம்

“அதிகார வர்க்கத்தை அரசியல் தலையீடின்றி, சுதந்திரமாகச் செயல்பட அனுமதிக்க வேண்டும். திராவிடக் கட்சிகள் அப்படி அனுமதிக்காததால்தான் தமிழகம் குட்டிச் சுவராகிவிட்டதாக” அங்கலாய்த்துக் கொள்வதும் புலம்புவதும் பார்ப்பனக் கும்பலின் வழக்கம். அவர்களின் அளவுகோலின்படி ராஜன் அரசியல் தலையீட்டுக்கு அடிபணிய மறுத்தார்; சுதந்திரமாக முடிவுகளை எடுத்தார். ஆனால், பார்ப்பனக் கும்பலோ அப்படிச் செயல்பட்டவரை அநாகரிகமாகவும் பொறுக்கித்தனமாகவும் தாக்குகிறது. ராஜன் மட்டுமல்ல, தேர்தல் கமிசன், நீதிமன்றங்கள் போல அரசியல் தலையீடின்றிச் சுதந்திரமாகச் செயல்பட வேண்டும் என்ற நோக்கில் உருவாக்கப்பட்ட ரிசர்வ் வங்கியும்கூட, மோடி அரசின் கைப்பாவையாக, இந்தியத் தரகு முதலாளிகளின் எடுபிடியாகச் செயல்பட வேண்டும் என்பதுதான் அக்கும்பலின் உள்நோக்கம்.

சப்-பிரைம் நெருக்கடியையடுத்து, தமது வங்கிச் சேமிப்புகளைத் திரும்பப் பெறுவதற்காக இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரிலுள்ள வங்கி வாசலில் காத்து நிற்கும் பொதுமக்கள். (கோப்புப்படம்)
சப்-பிரைம் நெருக்கடியையடுத்து, தமது வங்கிச் சேமிப்புகளைத் திரும்பப் பெறுவதற்காக இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரிலுள்ள வங்கி வாசலில் காத்து நிற்கும் பொதுமக்கள். (கோப்புப்படம்)

குறிப்பாக, மைய அரசு மற்றும் ரிசர்வ் வங்கியைச் சேர்ந்த ஏழு அதிகாரிகளைக் கொண்ட கூட்டுக் கமிட்டிதான் நாட்டின் பணக் கொள்கையைத் தீர்மானிக்கும் அதிகாரம் கொண்டதாக இயங்கி வருகிறது. எனினும், இக்கமிட்டி எடுக்கும் முடிவுகளை ரத்து செய்யும் அதிகாரம் ரிசர்வ் வங்கி கவர்னருக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. ராஜனைத் தனது வழிக்குக் கொண்டு வருவதில் மண்ணைக் கவ்விய மோடி கும்பல், ரிசர்வ் வங்கி கவர்னருக்கு வழங்கப்பட்டிருக்கும் இந்த ரத்து அதிகாரத்தையே ரத்து செய்ய முயன்றது.

ராஜன் தனியார்மயத்தை ஆதரிக்கும் பொருளாதார நிபுணர்தான். அவர் விதிகளின்படி விளையாடச் சொன்னார். அவ்வளவே. பாசிஸ்டுகளின் அதிகாரத்திற்கு எதிராக நின்று, உண்மையைத் துணிந்து கூறினார். மிக முக்கியமாக பொதுத்துறை வங்கிகளில் உள்ள மக்களின் சேமிப்புகளைக் காப்பதற்காக அவர் மோடி அரசை எதிர்த்து நின்றார். இவ்வாறு உண்மையைப் பேசுபவர்களையும், தம்மை எதிர்த்து நிற்பவர்களையும் பார்ப்பன பாசிசக் கும்பல் நேர்மையாகவோ, நாகரிகமாகவோ எதிர் கொண்டதில்லை என்பதற்கு நிகழ்கால வரலாற்றிலும், கடந்த கால வரலாற்றிலும் பல உதாரணங்கள் உண்டு.

ராஜன் ஆர்.எஸ்.எஸ். கும்பலிடம் தோற்றுப் போய் வெளியேறவில்லை. தரகு முதலாளிகளின் கொள்ளைக்கு ஏதுவாக வங்கிப் பெட்டகத்தைத் திறந்து வைப்பதே அந்தக் கும்பலின் நோக்கம் என்ற உண்மையை பொதுவெளியில் அம்பலமாக்கி, எச்சரித்துவிட்டு பிறகுதான் முடிவை அறிவித்திருக்கிறார்.

“ராஜனைவிட வேறு திறமையான இந்தியர்கள் இல்லையா?” எனக் கேள்வி எழுப்பி, அவரைவிடத் திறமையான, நாணயமான நிபுணரை ரிசர்வ் வங்கி கவர்னராக நியமிக்கப் போவது போல சீன் போட்டு வருகிறது, ஆர்.எஸ்.எஸ். கும்பல். ஆனால், மோடி ஆட்சியில் மத்தியப் பல்கலைக்கழகங்கள், கல்வி, கலாச்சார, வரலாற்று ஆய்வு நிறுவனங்களின் தலைவர்களாக நியமிக்கப்பட்டிருக்கும் பேர்வழிகளின் யோக்கியதையைப் பாரக்கும்போது, ரிசர்வ் வங்கியும், பொதுத்துறை வங்கிகளும் எத்தகைய அபாயத்தை எதிர்நோக்கியுள்ளன என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

– திப்பு
_______________________________
புதிய ஜனநாயகம், ஜூலை 2016
_______________________________