Friday, December 9, 2022
முகப்புபோலி ஜனநாயகம்இராணுவம்காஷ்மீரில் கொல்லப்பட்ட தலித் போலீசைப் புதைக்க கூட நாதியில்லை !

காஷ்மீரில் கொல்லப்பட்ட தலித் போலீசைப் புதைக்க கூட நாதியில்லை !

-

Master
வீர் சிங்கின் படத்துடன் அவரது மகன்கள். இனி இவர்களின் எதிர்காலம் கேள்விக் குறி என்கிறார், வீர் சிங்கின் தந்தை.

காஷ்மீரில் கொல்லப்பட்ட தலித் ராணுவ வீரரின் உடலை பொது இடத்தில் வைத்து எரியூட்ட ஆதிக்க சாதியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். உத்திரபிரதேசம் பரிசாபாத் மாவட்டத்தின் நக்லா கேவல் கிராமத்தை சேர்ந்த தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் வீர் சிங். இவர் துணை இராணுவப் படையான மத்திய ரிசர்வ் போலிசு படை சி.ஆர்.பி.எஃப் வீரர் .காஷ்மீரில் பணியாற்றி வந்தார். கடந்த வாரம் இந்திய ஆக்கிரமிப்பு படையினரை குறிவைத்து காஷ்மீர் போராளிகள் நடத்திய தாக்குதலில் இவர் உட்பட 8 பேர் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில் சொந்த கிராமத்திற்கு எடுத்துவரப்பட்ட இவரது உடலை பொது இடத்தில் வைத்து எரியூட்டவும் அங்கு ஒரு நினைவு சின்னம் எழுப்பவும் அக்கிராம ஆதிக்க சாதியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இச்செய்தி ஊடகங்களில் வெளிவந்தால் தலைகுனிவு ஏற்படும் என்ற நிலையில் மாவட்ட நிர்வாகம் பல சுற்று பேச்சுவார்த்தை நடத்தி இறுதி சடங்கு செய்ய ஆதிக்க சாதியினரிடம் அனுமதி பெற்றுள்ளது. பொது இடத்தில் 10 X 10 என்ற அளவில் இடத்தை பயன்படுத்திகொள்ள ‘கருணையுடன்’ அனுமதி வழங்கியுள்ளனர் ஆதிக்க சாதியினர்.

“என் மகன் நாட்டை பாதுகாக்க உயிரிழந்துள்ளான். ஆனால் அவனுக்கு இறுதி சடங்கு செய்ய நம் மக்களே இடம் தர மறுக்கிறார்கள்.” என வேதனையுடன் குறிப்பிடுகிறார் வீர் சிங்கின் தந்தை. இவர் ரிக்சா இழுக்கும் தொழிலாளி.

காஷ்மீர் விவகாரத்தில் தேசிய வெறி கிளப்பும் 24 மணி நேர ஊடகங்களும், தேசபக்தர்களும் இச்செய்தியை எளிதாக கடந்து சென்றுவிட்டார்கள். உள்ளூர் ஆதிக்க சாதிவெறி பயங்கரவாதிகளின் மறைமுக கூட்டாளிகள் இவர்கள். முகநூல்களில் தேசவெறி கிளப்பிவிடும் மேட்டுகுடிகளோ அல்லது நாட்டு வளத்தை அனுபவிக்கும் அம்பானி அதானிகளின் பிள்ளைகளோ ராணுவத்தின் சிப்பாய் வேலைக்கு செல்வதில்லை. அப்படி சென்றாலும் அதிகாரிகளாக பசையுள்ள பதவிகளுக்கு தான் விண்ணப்பிக்கவே செய்கிறார்கள். புதிய பொருளாதார கொள்கைகளின் விளைவாக கிராமப்புறங்களில் விவசாயம் நலிந்து வருவதும், நகர்ப்புறத்து கூலி வேலையின் மீதான வெறுப்பு காரணமாக வேறு வழியின்றி ஆயிரக்கணக்கான இளைஞர்கள் இராணுவ ஆள் சேர்ப்புக்கு செல்கின்றனர். மற்றபடி பாரதமாதாவின் மீது கொண்ட பற்று கராணமல்ல என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை. கிராமத்தில் 500 சதுர அடி கொண்ட ஒரு அறை வீட்டில் தான் வீர் சிங்கின் குடும்பம் வசித்துவருதாகவும், அவரது வீர் சிங்கின் சம்பளத்தை நம்பி தான் இவர்களது குடும்பம் இருப்பதாகவும் பத்திரிகை செய்திகள் தெரிவிக்கின்றன.

இப்படி தேர்வு செய்யப்பட்டவர்களை பன்னாட்டு நிறுவனங்களை எதிர்த்து போராடும் சத்தீஸ்கர், தண்டகாரண்யா பகுதி பழங்குடிகளை ஒடுக்கவும், காஷ்மீர், மணிப்பூர், ஈழம் என தனது ஆக்கிரமிப்பு பணிகளுக்கும் பயன்படுத்திக்கொள்கிறது இந்திய ஆளும் வர்க்கம். இதைத்தான் ஏழைகளுக்கு எதிராக ஏழைகளை ஏவிவிடும் போர் என வர்ணிக்கிறார் எழுத்தாளர் அருந்ததிராய். பொருளாதார நோக்குடன் வேலைக்கு சேரும் இளைஞர்கள் ராணுவத்தின் அறமற்ற செயலுக்கு பழகிப் போகிறார்கள், கூடவே மன அழுத்தத்திற்கு உள்ளாகிறார்கள். தன் தந்தை ஊரில் வயலில் வேலை செய்துகொண்டிருக்க தண்டகாரண்ய பழங்குடியின் நிலத்தை ஜிண்டாலுக்காக பிடுங்கிக்கொண்டிருப்பார் துணை இராணுவப் படையில் பணியாற்றும் ஒரு இளைஞர். இதுவே அவ்விளைஞர் ஒரு அதிகாரியாக இருக்கும் போது இக்குறைந்தபட்ச மன உறுத்தல் கூட இருக்காது என்பதற்கு அலெக்ஸ் பால் மேனன் உள்ளிட்டு பல அதிகாரிகள் சான்றாக இருக்கிறார்கள். கண்முன்னால் சக ஒடுக்கப்பட்ட மக்கள் அரச படைகளால் சிதைக்கப்பட்டாலும் மவுனமாக அரசின் பக்கம் நின்று தங்கள் பணியை காப்பாற்றிக் கொள்கிறார்கள்.

டைம்ஸ் நவ் தொலைக்காட்சியில் தேசபக்தியைக் குத்தகைக்கு எடுத்திருக்கும் ஓநாய் அர்னாப் கோஸ்வாமி காஷ்மீர் போராட்டம் குறித்த கலந்துரையாடலில் கொல்லப்பட் இந்த தலித் வீரரைக் குறிப்பிடுகிறார் – தலித்தாக இல்ல, தேசபக்தராக. அந்த விவாதத்தில் பங்கேற்ற காஷ்மீர் அறிஞர்கள், பத்திரிகையாளர்களைப் பார்த்த “இந்த வீரனை கொன்று விட்டீர்களே” என்று கொலை வெறியில் கத்தினார். ஆனால் அந்த வீரனை அடக்கம் செய்யக் கூட இந்த நாட்டில் நாதியில்லை என்பது அர்னாப்புக்கு தெரியாத ஒன்றல்ல. ஏனெனில் இவர்களைப் போன்ற தேசபக்தி உதார் உள்ளவர்கள் ஒருக்காலும் தேசத்திற்காக சாகமாட்டார்கள். அதற்குத்தான் இராணுவம் என்ற பெயரில் இத்தகைய ஏழைகளை கூலிப் படைகளாக இராணுவத்தில் அமர்த்திக் கொள்கிறார்கள். ஏழைகள் – தலித்துக்களைப் பொறுத்தவரை எல்லையில் மட்டுமல்ல, நாட்டிற்குள்ளேயேயும் மரணம்தான்.

இந்த உண்மை புரியும் போது இராணுவத்தின் ஏழை வீரர்கள் இந்திய அரசு பக்கம் நிற்கமாட்டார்கள், இந்திய மக்கள் பக்கம் நிற்பார்கள். அப்போதுதான் உண்மையான தேசபக்தியை இந்த தேசம் உணரும்.

– ரவி

மேலும் படிக்க:

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க