privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகலைஇலக்கிய விமரிசனங்கள்கபாலி நெருப்பா கருப்பா சொல்லுடா !

கபாலி நெருப்பா கருப்பா சொல்லுடா !

-

காபாலி
காபாலி

காதுகள் அமைதியை நாடினாலும், கண்கள் ஓய்வை தேடினாலும் கபாலியின் கசமுசா விடுவதாயில்லை. முன்னோட்டம், பாடல், வியாபாரம், பரவசம், புண்ணியம் என்று வெளியாவதற்கு முன்னர் எத்தனை வார்த்தைகள், காட்சிகள், உருவகங்கள்? தினமும் கொலையும், கொள்ளையும் கூப்பாடு போடும் தமிழகத்தில் கபாலியின் கொண்டாட்டம் எதைக் காட்டுகிறது? ரஜினியை வைத்து பெரு நிறுவனங்கள் திட்டமிட்டு நடத்தும் ஆக்கிரமிப்பு வணிகம்தான் கபாலி என்றாலும் இம்முறை இயக்குநர் ரஞ்சித்தின் ‘தலித்திய’ ஃபிளேவர் அதற்கோர் ‘தத்துவ’ தரிசனத்தை வேறு அளிக்கிறது.

முதலில் வியாபாரம்!

“வியக்க வைக்கும் கபாலி வியாபாரம், எகிறும் கபாலி வியாபாரம், எந்திரனையே மிஞ்சும் கபாலி வியாபாரம், ஜிவ் என்று ஏறும் காபாலி வியாபாரம்” என்று மணி, மலர், லொட்டு, லொசுக்கு வரை ஊடகங்கள் அனைத்தும் ஏதோ இந்தியாவுக்கே உலக லாட்டரியில் முதல் பரிசு விழுந்தாற் போல ஒரு பில்டப்பு. சூதாட்டமும், ஏமாற்றமும் அடிப்படையாக இருக்கும் லாட்டரி போலத்தான் ரஜினி வியாபாரமும்! இடையில் “லிங்கா வதந்தியால் கபாலி வியாபாரம் பாதிப்பா?” என்ற எதிர்மறை தலைப்பில் கண்களை இழுத்துப் போட்டு பிசினஸ் அடி பின்னுது என்று கொல்கிறார்கள்!

லிங்கா விநியோஸ்தர்கள் பிச்சை எடுக்கும் போராட்டம் அறிவித்த நிலையை மக்கள் பலரும் ஏதோ ஒரு மொக்கை ரஜினி படத்தின் தோல்வி என்று மட்டும் பரிதாபப்பட்டார்கள். உண்மையில் கருப்பில் விற்பனையாக வழியில்லாமல் போனதே அந்த பிச்சைப் போருக்கு காரணம். அதாவது ரசிகர்கள் இந்த இழவுக்கு ஒயிட்டே ஜாஸ்தி, இதுல கருப்புன்னா நாஸ்தி என்று புறக்கணித்ததன் விளைவுதான் லிங்காவின் மரணம்.

“திரைத்துறை வரலாற்றில் முதல்முறையாக அமெரிக்காவில் மட்டும் எட்டு கோடி ரூபாய்க்கு கபாலி படம் வியாபாரம் ஆகியுள்ளது. இதுகுறித்து வருமான வரிச் சோதனை நடைபெற்றாலும் கவலையில்லை. ஆனால் இதுதான் உண்மை” என்கிறார் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு. இதே உண்மையை கொஞ்சம் புலம்பலும், எரிச்சலுமாய் ஆளவந்தானில் சொன்னார். அது உலகநாயகன் தாணுவை தாளித்தது. தற்போது ரஜினி எனும் பிராண்டை வைத்து தாளிப்பதால் எப்படியும் கலைப்புலியின் வீட்டிலோ வங்கி லாக்கரிலோ பணத்தை அடுக்க அண்ணாசாலை எல்.ஐ.சியையே கட்ட வேண்டியிருக்கும். மேலதிகமாக சென்ற தேர்தலுக்கு ரஜினி வீடு தேடி மோடி வந்ததால் வருமானவரிச் சோதனை இங்கே எட்டிக் கூடப் பார்க்காது என்பதும் தாணுவுக்கும் தெரியும். என்ன இருந்தாலும் வைகோ ஈழத்தின் விடிவெள்ளியாக இருந்த காலத்திலேயே இந்திய அமைதிப் படையின் கொலை வரலாற்றை தியாகமாக படம் எடுத்து பிசினஸ் செய்த பெருச்சாளியல்லவா அவர்!

தமிழ்நாட்டு உரிமை மட்டும் சுமார் 80 கோடி இருக்கலாம் என்று இந்து முதல் தினமலர் வரை மதிப்பிடுகின்றன. சாட்டிலைட் உரிமையுடன் சேரும் போது அது 120 கோடியாகுமாம். பிறகு பிற மாநில உரிமை, வெளிநாட்டு உரிமை, ஆடியோ, ரிங்டோன் போன்ற சில்லறைகளையும் சேர்த்தால் வியாபாரம் 200 கோடியைத் தாண்டுமாம். 132 கோடியில் தயாரான எந்திரன் 179 கோடியை வசூலித்தது என்றால் அதை விட குறைவான செலவில் தயாரிப்பான கபாலி எந்திரனை வசூலில் மிஞ்சுமாம். அப்படி மிஞ்சவைப்பதற்குத்தான் இந்த கொஞ்சல், கெஞ்சல், அரிப்பு, சொறி  எல்லாம். சரி, எந்திரன் தயாரிப்புச் செலவில் ஏதோ ரோபோ, அனிமேஷனுக்கு நிறைய செலவாயிருக்கும் என்று நம்பினால் நீங்கள் இன்னும் நம்பியாரைப் பார்த்து பயப்படும் கருப்பு வெள்ளை கால அப்பாவி ரசிகராக இருக்கலாம். அந்த செலவில் 45 கோடி ரஜினி அவர்கள் கை,காலை அசைத்தற்கு அருளப்பட்ட காணிக்கை மட்டுமே. லிங்காவின் இது 60 கோடியாக எகிறியதும், பிறகு படத்தை வெளியிட்டவர்கள் பிச்சை எடுப்போமென வெடித்தார்கள்.

தற்போது கபாலி நேரடியாக தமிழிலும், மொழி மாற்றி தெலுங்கு, இந்தி, மலேயா மொழிகளில் மொத்தம் 4000 திரையிடல்களில் காட்டுவார்களாம். எந்திரனது திரையிடல் 3000 என்பதால் இது சாதனையாம். இதில் தமிழ்நாட்டில் உள்ள எட்டு கோடி மக்களில் ஒரு எண்பது இலட்சம் பேர் தலைக்கு ரூ.100 மொய் எழுதினால்தான் அந்த 80 கோடி வசூல் வரும். ஆனால் ரஜினி படத்தை திரையரங்கிலயே பார்த்து ரசிக்கும் வண்ணம் வாழ்க்கையோ, நேரமோ, பணமோ இல்லாதவர்கள்தான் இங்கே அதிகம். அதனால்தான் சாட்டிலைட் உரிமை 40 கோடிக்கு அவர்களுக்காக வாங்கப்படுகிறது. இதன்படி கபாலி அனேகமாக அம்மா தொலைக்காட்சியில் வெளியாகி தமிழக மக்களின் சந்தோஷத்தை விளம்பரங்களாக வாங்கி கல்லா கட்டலாம். இல்லை சன்னா, மதரா என்போது இ ப்போது தெரியாது. இருப்பினும் தேர்தலில் வாக்களித்துவிட்டு கன்டெயினர் ஜனநாயகம் பற்றி வாய் திறவேன் என்று பம்மிப் பதுங்கி கபாலி சென்ற விதத்தைப் பார்த்தால் ஜெயா டி.விதான் சேட்டிலைட்டின் ஏகபோகமாக இருக்கலாம்.

திரையரங்குகளில் முதல் மூன்று நாட்களில் இந்தப்படத்தை அதிகபட்சம் 15 இலட்சம் பேர் பார்க்கலாம். (600 திரையரங்கு, தினம் ஐந்து காட்சிகள், சராசரியாக 500 இருக்கைகள்) அடுத்த வாரம் சுமார் 5 முதல் பத்து இலட்சம் பேர் பார்க்கலாம். இவையெல்லாம் அதிகபட்சம் என்பதை கணக்கில் கொண்டால். அந்த 80 கோடி ரூபாயை இந்த 20 – 25 இலட்சம்  பேர் பகிர்ந்து கொள்ள வேண்டும். அதை வகுத்தால் ஒருவர் 400 முதல் 500 ரூபாய் வரை செலவழிக்க வேண்டும். மல்டி பிளக்ஸ் கட்டணம் ரூ.120  என்றால் மற்ற திரையரங்குகளில் இவை 100, 80,70 என்று வரும். சராசரியாக ரூ.100தான் அதிகாரப்பூர்வ கட்டணம் என்றால் அந்த எண்பது கோடியில் 20 கோடிதான் வரும். அதுவே நான்கந்து மடங்கு பணத்தை ரசிகர்கள் பிளாக்கில் தந்தால்தான் கபாலி 80 சியை கிராஸ் ப்ண்ணுவார்.

தாணு இந்தப் படத்தை வெளியிட அம்பானி அல்லது ஈராசுக்கு எவ்வளவு விற்கிறார், அவர்கள் விநியோகஸ்தர்களுக்கு எவ்வளவு விற்கிறார்கள், விநியோகஸ்தர்க்ள் மற்றும் திரையரங்க உரிமையாளர்களின் முதலீடு போக அவர்கள் எவ்வளவு சம்பாதிக்கிறார்கள் என்பதையெல்லாம் கணக்கிட்டால் நாம் முன்னர் சொன்ன அந்த 400 ரூபாய் இருமடங்காய் மாறும்.

இல்லை என்பவர்கள் சென்னையின் புறநகர் திரையரங்கு அல்லது தமிழக நகர அரங்கு ஒன்றில் அந்த மூன்று நாட்களும் சென்று ரசிகர்களிடம் விசாரியுங்கள்.  டிக்கெட்டுகளை வாங்கிப பாருங்கள். அதில் கட்டணமே இருக்காது. நெருப்பில்லாமல் புகையாது போல கருப்பில்லாமல் கபாலி கடைத்தேறாது!

இதுதாண்டா கபாலியின் கருப்பு வியாபாரம்!

இது போக நிறுவனங்கள் சில கபாலியின் விளம்பர புரவலர்களாக 40 கோடி ரூபாயை வழங்குகின்றன. ஏர் ஏசியா நிறுவனம் பெங்களூருவிலிருந்து சென்னைக்கு ரசிகர்களை முதல் காட்சிக்கு சுமந்தவாறு பறக்கிறதாம். விமானத்தின் வெளியே ரஜினியின் உருவம் வரையப்பட்டு அதுவும் உலக விமான வரலாற்றிலையே முதல் முறையாம். ரைட்டு, ரைட் சகோதரர்கள் இருந்தால் அதே விமானத்திலிருந்து குதித்திருப்பார்கள். தமது கண்டுபிடிப்பு எத்தகைய அற்பத்தனங்களுக்கு பயன்படுகிறது என்று.

தினுசு தினுசாக மக்களை ஏமாற்றி டாப் அப் முதல் இணையம் வரை கட்டணம் வாங்கும் ஏர்டெல் நிறுவனம் கபாலி சிம்கார்டுகளை வெளியிடுகிறதாம். ஒரு படத்திற்கு கட்டணத்தை வாங்கிக் கொண்டு வேறு ஒரு படத்தை காட்டும் புகழ் பெற்ற பி.வி.ஆர் மல்டிபிளக்ஸ் நிறுவனமோ இந்தியா முழுவதும் மூன்று மொழிகளில் மிக அதிக காட்சிகளாக கபாலியை காட்டுகிறதாம். பாவம் அந்த தினங்களில் கபாலியின் நண்பர் மோடி தனது ஃபோட்டோக்களை எதிர்பார்த்து தினசரிகளை புரட்ட வேண்டியிருக்கும். இது போக கபாலி டிஜிட்டில் போஸ்டர்களை விற்கும் உரிமையையும் பி.வி.ஆர் பெற்றிருக்கிறதாம். காட்பாரிஸ் சாக்லெட் நிறுவனம் தனது 5 ஸ்டாரை சூப்பர்ஸ்டாரின் சாக்லெட்டாக சந்தைப்படுத்துமாம். அமோசான் நிறுவனம் கபாலி பொம்மை, சாவி, அருணாக் கயிறு போன்றவற்றை விற்குமாம். முத்தூட் நிதி நிறுவனமோ கபாலி ரஜினியின் உருவம் தாங்கிய தங்க, வெள்ளி நாணயங்களை வெளியிடுமாம். வி.எஸ் மருத்துவமனை நிறுவனமும் படத்தயாரிப்பாளரோடு ஒப்பந்தம் போட்டுள்ளதாம். அது என்ன எழவென்று தெரியவில்லை. ஆக மொத்தம் சிம்கார்டு முதல் ஆன்லைன் அண்டர்டேக்கர் புக்கிங் வரை அல்லாம் கபாலிமயம்!

ரஜினியை எப்படியாவது அரசியலுக்கு இழுத்து வந்து தமிழகத்தை கலக்க வேண்டுமென்ற பா.ஜ.கவின் வெறியை வைத்துப் பார்த்தால் காந்தி நோட்டில் கூட கபாலி குந்துவதற்கு வாய்ப்பிருக்கிறது.

இரண்டாவதாக அரசியல்….

பாலி முன்னோட்டம், பாடலைக் கேட்டு நெருப்புடா, பருப்புடா என்று தங்களின் உற்சாகத்தை வெளிப்படுத்துவதற்கு வாய்ப்பில்லாத மலச்சிக்கல்காரர்கள் படுத்தி எடுக்கிறார்கள். மலேசியாவில் தோட்ட வேலைக்குச் சென்ற தமிழ் மக்களை அடிமையாக நடத்தும் ஆண்டைகளை டான் ஆக ரஜினி நாக் அவுட் செய்வதுதான் கதையாம். இதில் ஒடுக்கப்பட்டோர், ஆண்டை, அடிமை, புரட்சி, எல்லாம் இருப்பதால் முன்னாள் புரட்சியாளர்கள், புரட்சியிலிருந்து ஓய்வு பெற்றோர், சினிமா வழியாக புரட்சி வராதா என்று காத்துக் கொண்டிருக்கும் போலிக் கம்யூனிஸ்டுகள், அரசியலில் ஆண்டைகளிடம் சரண்டைந்து விட்டோம் – கலைத்துறையிலாவது ஹீரோ ஆக வாய்ப்பிருக்கிறதா என்று மனப்பால் குடிக்கும் தலித்தியவாதிகள் வரை பலரும் இயக்குநர் ரஞ்சித்தே வெட்கப்படும் வண்ணம் புரட்சி பொழிப்புரைகளை கொட்டி வருகிறார்கள்.

டப்பிங் நேரத்தில் ஒலிப்பதிவு அறையில் தன்னைத் தவிர எந்த இயக்குநரையும்  அனுமதிக்காத ரஜினி இம்முறை மணிரத்தினத்திற்கு அடுத்ததாக ரஞ்சித்தை அனுமதித்தார் என ரஞ்சித்தே கொஞ்சுகிறார் என்றால் கெலித்தது ஆண்டையா, அடிமையா?

மலேசியாவுக்கு செல்லும் சினிமா நட்சத்திரங்களை அழைத்து உபசரித்து காசு கொடுத்து, லொகேசன் காட்டி, பைனான்ஸ் செய்யும் பெருமக்கள்தான் தோட்ட முதலாளிகளின் அணிவரிசையில் உள்ளவர்கள். இன்னும் அங்கே தொழிலாளிகளா இருக்கும் உழைக்கும் மக்கள்தான் இத்தகைய மேன்மக்கள் செய்யும் படத்தை பார்க்கப் போகும் பார்வையாளர்கள். கத்தி படமோ கபாலி படமோ மக்களிடம் வளர்ந்து வரும் போராட்ட அரசியலை பணம் பண்ணுவதற்காக படம் பண்ணலாம். ஹாலிவுட் முதல் கோலிவுட் வரை கலையில் புரட்சி செய்வது சேர்ப்பது எல்லாம் ஒரு வணிக உத்தியாக என்றோ நிலைபெற்றுவிட்டது. அதனால்தான் நேரடியாக முதலாளிகள் நடத்தும் ஊடகங்கள், தொலைக்காட்சிகள் வரை தம்மை நடுநிலைமை என்று காட்டிக் கொள்வதன் காரணம் அது ஒரு வெற்றிகரமான பிசினஸ் என்பதால்தான்.

இது தெரியாமல் நெருப்பு, பருப்பு என்று சுய இன்பம் செய்பவர்கள் தங்களது வாழ்வில் புரட்சியோ, கிளர்ச்சியோ, பிரச்சாரமோ செய்ய வேண்டாம் என்று பாதுகாப்பாக முடிவு செய்து விட்டு அதை ஆன்லைனிலும், ஆர்ட்டிலும் செய்து பார்த்து விர்ச்சுவல் புரட்சியாளர்களாக காட்டிக் கொள்ளும் ரசனையாளர்கள்.

மெட்ராஸ் பட வெற்றிக்கு பிறகு தன்னார்வ நிறுவனங்கள் மூலம் தமிழகம் முழுவதும் அரங்க கூட்டங்களில் பேசிய இயக்குநர் ரஞ்சித், 90 களில் திருமாவளவன் மற்றும் வி.சி.க-வினர் பேசிய தலித்திய அரசியலை பேசினார். அதாவது “தலித்துக்கள் அரசியலில் என்ன செய்ய வேண்டும் என்று தலித்துக்களே பார்த்துக் கொள்வார்கள்” என்று பொங்கினார். அதைக் கேட்டால் இன்று திருமாவோ இல்லை தலித்தியத்தின் ஆதி பிரச்சாரகரான ரவிக்குமாரோ நாணத்துடன் சிரிப்பார்கள். கபாலி படத்திற்கு பிறகு ரஞ்சித்தே அப்படிப்பட்ட நாணச் சிரிப்பு சிரிப்பார். ஏனெனில் நாணயத்தை (சுயமரியாதை) விட நாணயம் (பணம்) பெரிதல்லவா!

பிறகு ரஜினி எனும் ஆண்டையை வைத்து, ஏர்டெல், அமோசான், பி.வி.ஆர், முத்தூட் போன்ற முதலாளிகளை வைத்து மலேசிய தொழிலாளிகளின் விடுதலையை பெற்றுத் தந்து அதையே 200 கோடி ரூபாயில் பிசினெஸ் செய்து, இன்னபிறவெல்லாம் பார்த்தால் அவர் வெட்கப்படாமல் வெடிக்கவா முடியும்?

நம்மைப் பொறுத்தவரை கபாலி எனும் பிசினஸ் தமிழக மக்களின் உழைப்பை பிளாக்கில் வாங்கி நடக்கும் குற்றம் என்கிறோம். இணையத்தில் கபாலி வெளியாகவே கூடாது என்று முன்கூட்டியே வழக்கு போடும் கபாலி தயாரிப்புக் குழுவினர், அதே போல தமிழகமெங்கும் பிளாக்கில் விற்க கூடாது என்று முன்கூட்டியே வழக்கு போடுவார்களா?

ஆகவேதான் இந்த கபாலி நெருப்பு இல்லடா, கருப்புடா!

  1. ஒடுக்கப்பட்டோர், ஆண்டை, அடிமை, புரட்சி, எல்லாம் இருப்பதால் முன்னாள் புரட்சியாளர்கள், புரட்சியிலிருந்து ஓய்வு பெற்றோர், சினிமா வழியாக புரட்சி வராதா என்று காத்துக் கொண்டிருக்கும் போலிக் கம்யூனிஸ்டுகள், அரசியலில் ஆண்டைகளிடம் சரண்டைந்து விட்டோம் – கலைத்துறையிலாவது ஹீரோ ஆக வாய்ப்பிருக்கிறதா என்று மனப்பால் குடிக்கும் தலித்தியவாதிகள் வரை பலரும் இயக்குநர் ரஞ்சித்தே வெட்கப்படும் வண்ணம் புரட்சி பொழிப்புரைகளை கொட்டி வருகிறார்கள்.////
    அருமை?

  2. ஒட்டு மொத்த தமிழக மக்களும் எப்படி திரைத்துறையினரின் கிரிகெட்டை புறக்கணித்தது போன்று இதை இந்த படத்தினையும் தவிர்க்க வேண்டும். ஒன்றும் இல்லை என்று மாறவேண்டும் மாற்றம் நம்மில் இருந்து உருவாக வேண்டும்.

  3. முகமெல்லாம் சுருக்கம் விழுந்து இருந்தாலும் இந்த ஆள் மேக் அப் போட்டு நிக்கிறதே போஸ்டர்லயே சகிக்கல வாந்தி வர மாறி இருக்குது இதுல இந்தாள் படத்த வேற பாத்த அவ்வளவுதான் இதுக்கு நீங்க ஓசில விளம்பரம் குடுக்குற மாறி ஒரு கட்டுரை

  4. தான் சம்பாரிச்ச சல்லி காசையும்
    டமிள்நாட்டு மக்களுக்கு “செலவு”
    செஞ்ச புண்ணியவான் ரஜினி கஞ்சா வாழக

  5. –திரையரங்குகளில் முதல் மூன்று நாட்களில் இந்தப்படத்தை அதிகபட்சம் 15 இலட்சம் பேர் பார்க்கலாம். (600 திரையரங்கு, தினம் ஐந்து காட்சிகள், சராசரியாக 500 இருக்கைகள்) — மொத்தம் 45 லட்சம். பதினைந்து லட்சம்க ஒவ்வொரு நாளும்.. கணக்கும் தப்பு.. உங்க புரிதலும் தப்பு. முதல்ல கணக்கு சரிபார்த்து விட்டு வாரும்.. இன்னும் சில உண்மைகளைப் புரிய வைக்கிறேன்

    • தவறினைக் கண்டுபிடித்தமைக்கு வாழ்த்துக்கள்! எனினும் கணக்கு தப்பினாலும் கருத்து தப்பில்லை. தமிழகத்தின் திரையரங்கிலிருந்து வசூலாகும் 80 கோடி (இதன் உண்மையான வசூல் கருப்பு என்பதால் அது நமக்குத் தெரியாமலேயே போகலாம்). மேலும் ஒரே நேரத்தில் அதிக திரையரங்குகளில் வெளியிடுவதன் மூலம் அதிகம் பேரை முதல் மூன்று நாட்களில் பார்க்கவைக்கும் தந்திரம் ஏற்கனவே எந்திரன் வெளியீட்டில் நிரூபிக்கப்பட்டுள்ளது. அந்நாட்களில் ஏற்படும் பரபரப்பு மாயை மூலம் அதிக பணத்தை இவர்கள் வசூலிக்கிறார்கள். அடுத்த வாரத்தில் கூட்டம் பெரிதும் குறைந்தவிடும். திரையரங்க கட்டணமும் கூட்டத்திற்கேற்ப குறையும். மேலும் தற்போது வரும் செய்திகளின் படி மல்டி பிளக்ஸ் திரையரங்குகள் கூட தீனிக்கட்டணம் இன்ன பிறகு ஆஃப்ர்கள் என்று ஒரு டிக்கெட்டை 800, ஆயிரம் என்று ‘சட்டப்படியே’ வைத்திருக்கிறார்கள் என்று தகவல்கள் வருகின்றன. இது போக ரசிகர்கள் சிறப்புக் காட்சிகள், நிறுவனங்களின் சிறப்புக் காட்சிகள் அனைத்தும் மொத்தமான ரேட்டுக்கு விற்கப்படுகின்றன. இதன் சராசரி விலை 1000, 2000ம் என இருக்கலாம். மேலும் எந்தப்படத்திற்கும் இத்தனை ரூபாய் வசூல் என்றுதான் கணக்கு வருமே அன்றி அதை எத்தனை பேர் பார்த்தார்கள் என்று வரவே வராது. கட்டுரையில் சுட்டியபடி மல்டிபிளக்ஸ் அல்லாத பெரும்பான்மை திரையரங்குகளின் டிக்கெட்டின் கட்டணமே இருக்காது. ஆகவே இவர்கள் சொல்லும் வசூல், அரசுக்கு போகும் முறையான வரி எவையுமே உண்மை அல்ல. ஆக ஊடகங்கள் உதவியுடன் உருவாக்கப்படும் கபாலி படையெடுப்பில் தமிழக மக்களின் பணம் எவ்வளவு சுருட்டப்படும் என்பதற்கு அளவே கிடையாது. அதனால்தான் மீண்டும் சொல்கிறோம், கருப்பு விற்பனை இன்றி கபாலி படமோ, ரஜினி ஊதியமோ, தாணுவின் இலபாமோ எதுவுமில்லை. இவர்களோடு மல்டிபிளக்ஸ், திரையரங்க உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள்ளின் இலாபம் வேறு. சான்றாக இத்திரைப்படத்தின் தமிழக, வெளிநாடு,ஆடியோ,சாட்டிலைட் இன்ன பிற உரிமைகளை உள்ளடக்கி தாணு 240 கோடிக்கு விற்கிறார் என்றால் அதை வாங்கி விநியோகிக்கும் கார்ப்பரேட் நிறுவனத்தின் இலாபம் எவ்வளவு? அவர்களிடமிருந்த வாங்கும் சம்பந்தப்பட்ட பிரிவினரின் இலாபம் எவ்வளவு? கூட்டினால் இன்னும் அதிகத் தொகை வரும். ஆக தமிழகத்திதன் 80 கோடி உரிமை தாணுவுக்கு போகிறது என்றால் இதன் மேலதிக இலாபம் கூட்டி அதை பார்ப்பவரால் வகுத்தால் கண்டிப்பாக இது கருப்பினால் மட்டுமே சாத்தியம்! நீங்கள் சுட்டிக்காட்டிய எமது கணக்கு பிழையை தோழர்கள் சிலரும் தெரிவித்தார்கள். இதை கபாலி பாகம் இரண்டில் விளக்கலாம் என்று நினைத்தோம். தவறுக்கு வருந்துகிறோம். நன்றி

  6. கபாலி என்றில்லை எல்லா ரஜினி படங்களும் ஒரு கொள்ளை முயற்சியாகவே இருக்கிறது.பாபா படத்தில் ஆரம்பித்த இந்த கொள்ளையை ரஜினியின் குரு என்று கூறிக்கொள்ளும் பாலசந்தரே வெளிப்படையாக அருவருத்து பேசியதும் நடந்தது; அதன் பின் அதே மனிதர் தனது கவிதாலயா தயாரிப்பில் அந்த கொள்ளையில் ஈடுபட்டதும் நடந்தது.இன்றைக்கு ரஜினி படத்தின் டிக்கெட் வியாபார முறை கிட்டத்தட்ட எல்லா முன்னணி கதாநாயகர்களின் படத்திற்குமான பொது நியதியாகி விட்டது.பேருந்து நடத்துனரிடம் ஒன்றிரண்டு ரூபாய் சில்லறைக்கு மல்லுக்கட்டுவோர் கூட இப்படி விலை அச்சடிக்கப்படாத டிக்கெட் பற்றி புலம்புவது கிடையாது. அதிகவிலைக்கு டிக்கெட் என்பதை ஒரு கௌரவ சின்னமாக வளர்த்து விட்டிருக்கிறார்கள் கார்ப்பரேட் அடிமைகள்.இது கேவலம் என்று முணங்குவோர் எண்ணிக்கை சொற்பம்.அதே நேரத்தில் முதல் நாளில் ரஜினி படம் பார்க்க பணம் தரவில்லை என்பதால் தன் வீட்டாரிடம் கோபித்துக் கொண்டு தான் உயிரை இழக்க விரும்பும் எந்த முட்டாள் ரசிகனும் இந்த அநியாய விலையை எதிர்த்து ரஜினி மேல் கோபம் கொள்வதில்லை.

    சாதாரண ஆட்டோ ஓட்டுனரிடம் சட்டம் பேசி ஆட்டோவை பறிமுதல் செய்ய வைக்கிற டிராபிக் ராமசாமி மற்றும் அவருக்கு முதுகெலும்பாக நிற்கிற உயர்நீதிமன்ற நீதிமான்கள் யாருமே இந்த திரையரங்க கொள்ளையை கண்டுகொள்வதே இல்லை.தாணுவின் கோரிக்கையை ஏற்று இணைய தளமுடக்கத்திற்கு உத்தரவிடும் நீதிமன்றம் நல்ல கருத்துக்களை சொல்ல புத்திமதி சொல்வதோடு நிறுத்திக் கொள்கிறது.சரியான விலைக்கு டிக்கெட் விற்பீர்களா என்று ஒரு நியாயமாக எழும்புகின்ற கேள்வியை கேட்பதில்லை.

    இதில் வேறு சிலர் போலி மது போன்ற டாஸ்மாக் கடை அநீதிகளை குடிகாரர்கள் தானே எதிர்கொள்கின்றனர் நமக்கென்ன என்பது போல ஒதுங்கியே நிற்கின்றனர்.பூனைக்கு யார் தான் மணி கட்டுவார்களோ?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க