Thursday, January 16, 2025
முகப்புபோலி ஜனநாயகம்நீதிமன்றம்வழக்கறிஞர் போராட்டத்திற்கு தோள் கொடுக்கும் திருச்சி சட்டக்கல்லூரி மாணவர்கள் !

வழக்கறிஞர் போராட்டத்திற்கு தோள் கொடுக்கும் திருச்சி சட்டக்கல்லூரி மாணவர்கள் !

-

ந்தியாவில் எங்கும் இல்லாத கருப்புச் சட்டம் தமிழகத்தில் மட்டும் தான் கொண்டு வரப்பட்டுள்ளது. சில மாதங்களுக்கு முன்பு சென்னை உயர்நீதிமன்ற தலைமை (அ)நீதிபதியாக பணியாற்றிவரும் எஸ்.கே கவுல் என்பவர் வழக்கறிஞர்கள் சட்டம் 1961 பிரிவு 34(1)-ல் வழக்கறிஞர்களுக்கு எதிராக புதிய சட்டத்திருத்தத்தை இயற்றியுள்ளார்.

trichy-rsyf-solidarity-with-lawyers-01வழக்கறிஞர்கள் கோரிக்கைக்காக நீதிமன்ற வளாகத்திற்குள் ஆர்ப்பாட்டம் நடத்தினால், நீதிமன்றத்தின் தீர்ப்புகளை விமர்சித்தால், நீதிமன்றத்திற்குள் உரத்த குரலில் வாதிட்டால், கையை நீட்டி நீதிபதிகளிடம் பேசினால் இந்த புதிய விதிகளின்படி எவ்வித கேள்வியும் இன்றி, வழக்கறிஞர்கள் தொழில் செய்ய நீதிபதிகளே நேரடியாக தடை விதிக்கலாம் என்பது இச்சட்டமாகும்.

இச்சட்டம் வருவதற்கு முன்பு, வழக்கறிஞர்கள் நீதிமன்ற அவமதிப்பு போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டால் அம்மாநிலத்தில் உள்ள பார் கவுன்சிலே அதனை விசாரித்து நடவடிக்கை எடுக்கும். ஆனால் தற்பொழுது, பார் கவுன்சிலிடம் அதிகாரத்தை பறித்து, வழக்கறிஞர்களை நீதிபதிகளின் கொத்தடிமைகளாக மாற்றுவதற்கே இந்த புதிய சட்ட விதிகளை எஸ்.கே கவுல் இயற்றிள்ளார்.

சில நாட்களுக்கு முன்பு, உயர்நீதிமன்ற ஊழல் நீதிபதிகளின் பட்டியலை வெளியிட்டு, அம்பலப்படுத்தி போராடியதற்காக வழக்கறிஞர்கள் சிலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். போராடிய மக்கள் மீது வன்முறையில் ஈடுபட்ட காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி போராடிய வழக்கறிஞர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். சென்னை உயர்நீதிமன்றத்தில் போலீசார் பெண் வழக்கறிஞரை வீடியோ எடுத்ததை கண்டித்து போராடிய வழக்கறிஞர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். மேலும் உயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழ் மொழி இருக்க வேண்டும், அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆக வேண்டும் என்ற பல போராட்டங்களை நடத்தியதன் காரணமாக இதுநாள் வரையிலும் தமிழகத்தில் 43 வழக்கறிஞர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு அது தொடர்பான வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்திலும், கர்நாடகாவிலும் நடந்து வருகின்றன.

trichy-rsyf-solidarity-with-lawyers-15இவ்வாறு நீதித்துறையையும், அதிகார வர்க்கத்தையும் கேள்விக்குள்ளாக்கும் வழக்கறிஞர்களின் போராட்டத்தை ஒடுக்குவதற்காகவே இந்த கருப்புச் சட்டத்தை எஸ்.கே கவுல் இயற்றியுள்ளார்.

இந்த கருப்புச் சட்டத்தை எதிர்த்து, இச்சட்டத்தை திரும்பப் பெறக்கோரி தமிழக வழக்கறிஞர்கள் அனைவரும் கடந்த ஒரு மாத காலமாக நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம், உண்ணாவிரதப் போராட்டம், இரயில் மறியல் போராட்டம், நகல் எரிப்புப் போராட்டம் ஆகியவற்றை நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக 12-07-2016 அன்று காலை 11 மணி அளவில் திருச்சிராப்பள்ளி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு வழக்கறிஞர்கள் மனிதச் சங்கிலி போராட்டம் நடத்தினர். இப்போராட்டத்தில் மக்கள் கலை இலக்கிய கழகம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, ஆட்டோ ஓட்டுநர் பாதுகாப்பு சங்கம் ஆகிய புரட்சிகர அமைப்புகளைச் சேர்ந்த தோழர்களும் கலந்து கொண்டு தங்களது ஆதரவை தெரிவித்தனர்.

மேலும் இச்சட்டம் எதிர்கால வழக்கறிஞர்களான சட்டக்கல்லூரி மாணவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துவதாலும், வழக்கறிஞர்களின் இப்போராட்டத்தை ஆதரித்து திருச்சி சட்டக்கல்லூரி மாணவர்கள் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் தலைமையில் பேரணியாக வந்து இந்த மனித சங்கிலி போராட்டத்தில் கலந்து கொண்டனர். பு.மா.இ.மு சட்டக்கல்லூரி கிளை தோழர்களும், சக மாணவர்களும் ஒவ்வொரு வகுப்பாக சென்று இச்சட்டத்தின் பாதிப்பை விளக்கி வகுப்புகளை புறக்கணித்து இப்போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அறைகூவினர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

பருவத் தேர்வு முடிந்து கல்லூரியை திறந்த இரண்டாவது நாளில் வகுப்புகளை புறக்கணித்துவிட்டு மாணவர்கள் வெளியில் வந்தனர். வெளியில் வந்த மாணவர்களிடம், “இந்த கருப்புச் சட்டம் அமலுக்கு வந்தால் வழக்கறிஞர் தொழிலை நாம் சுதந்திரமாக செய்ய முடியாது. நமது கருத்துரிமை பறிபோகும். வழக்கறிஞர்கள் நீதிபதிகளின் நிரந்தர கொத்தடிமைகளாக மாற்றப்படுவார்கள். மேலும் இச்சட்டம் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை மீறுவதாகவும் உள்ளது. இது நமது பிரச்சனை. நமது வாழ்வாதார பிரச்சனை. ஆகையால் இதற்கு நாம் தான் போராட வேண்டும்” என்று பு.மா.இ.மு சட்டக் கல்லூரி கிளை அமைப்பாளர் வசந்த் மாணவர்களிடம் விளக்கிப் பேசி இப்பேரணி ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கினார்.

பின்னர் வழக்கம் போல் காவல் துறையினர் கல்லூரியை சூழ்ந்து கொண்டு பேரணியாக சென்ற மாணவர்களிடம், “எங்கே போகிறீர்கள்?” என்று கேட்டனர். அதற்கு மாணவர்கள், “வழக்கறிஞர்களின் மனித சங்கிலி போராட்டத்திற்கு செல்கிறோம்” என்று கூறினர். “கல்லூரியில் இருந்து அவ்வளவு தூரம் நடந்து செல்ல வேண்டாம், உங்களுக்கு நாங்கள் வாகனங்களை ஏற்பாடு செய்து தருகிறோம். அதில் சென்று மனித சங்கிலி போராட்டத்திற்கு கலந்து கொள்ளுங்கள்” என்று மாணவர்கள் மீது அக்கறை கொண்டவர்கள் போல் நைச்சியமாக பேசி, மாணவர்களின் பேரணியை மக்கள் மத்தியில் பிரச்சாரம் ஆகிவிடாமல் தடுக்க முயற்ச்சித்தனர்.

அதற்கு ஒரு மாணவர் “பேரணியாக சென்றால் தான் எங்களது போராட்டம் மக்களுக்கு தெரியும்” என்று கூறி காவல்துறையின் நரித்தனத்தை அம்பலப்படுத்தும் வகையில் பதில் கூறினார். பின்னர் நூற்றுக்கும் அதிகமான மாணவர்கள், விண்ணதிரும் முழக்கங்களுடன் பேரணியாக சென்று, வழக்கறிஞர்களின் மனித சங்கிலி போராட்டத்தில் கலந்து கொண்டும், நீதிமன்றத்தின் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தியும் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

“நீதிபதிகள் மன்னர்களும் அல்ல!
வழக்கறிஞர்கள் அடிமைகளும் அல்ல!!”

என்று மாணவர்கள் கோசங்களை எழுப்பியது, பொது மக்களை வியந்து பார்க்க செய்தது. பின்னர் பேரணியாக வரும் வழியில் பொது மக்கள் அனைவரிடத்திலும் பிரசுரங்களை விநியோகித்தும், இப்போராட்டத்திற்கு பொது மக்கள் அனைவரும் ஆதரவு தர வேண்டும் என்று கூறினர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

மாணவர்களின் பேரணி நீதிமன்றத்திற்கு வந்த பிறகு நீதிமன்ற வாசலில்

வாபஸ் வாங்கு வாபஸ் வாங்கு!
கருப்புச் சட்டத்தை வாபஸ் வாங்கு!

வெளியேறு வெளியேறு!,
நீதிபதி கவுலே,
தமிழகத்தை விட்டு வெளியேறு!

வெல்லட்டும்… வெல்லட்டும்!
வழக்கறிஞர் போராட்டம்
வெல்லட்டும்… வெல்லட்டும்!

துணை நிற்போம்… துணை நிற்போம்!
வழக்கறிஞர்களுக்கு ஆதரவாக
தோளோடு… தோளாக..
துணை நிற்போம்… துணை நிற்போம்!

என்ற விண்ணதிரும் முழக்கங்களுடன் 15 நிமிடம் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

trichy-rsyf-solidarity-with-lawyers-16பின்னர் பு.மா.இ.மு சட்டக் கல்லூரி கிளை அமைப்பாளர் வசந்த், “இந்த கருப்புச் சட்டத்தை வாபஸ் வாங்கும் வரை சட்டக் கல்லூரி மாணவர்கள் இறுதி வரை வழக்கறிஞர்களுக்கு துணை நிற்போம்” என்றும், “தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டக் கல்லூரி மாணவர்களும் இப்போராட்டத்தை நடத்த வேண்டும்” என்றும் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளித்தார்.

பேரணியாக வந்த மாணவர்களுக்கு திருச்சிராப்பள்ளி வழக்கறிஞர்கள் சங்கம் சார்பாக தண்ணீர் பாக்கெட்டுகளும், மதிய உணவும் ஏற்பாடு செய்து தரப்பட்டது. இறுதி நிகழ்ச்சியாக, மனித சங்கிலி போராட்டத்திற்கு ஆதரவு தந்து கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் திருச்சிராப்பள்ளி வழக்கறிஞர்கள் சங்கம் சார்பாக நன்றியையும், வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

தகவல்
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
திருச்சி.
99431-76246.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க