முகப்புபோலி ஜனநாயகம்நீதிமன்றம்நீதித்துறையின் அடாவடித்தனம் ! வழக்கறிஞர்களின் போராட்டம் !

நீதித்துறையின் அடாவடித்தனம் ! வழக்கறிஞர்களின் போராட்டம் !

-

பத்திரிகை செய்தி: நீதித்துறையின் அடாவடித்தனம்! வழக்கறிஞர்களின் போராட்டம்!

நீதித்துறை தானே முகங்கொடுக்க வேண்டிய, தீர்வு காணவேண்டிய பொறுப்புகள், கடமைகள் ஏராளமாகக் குவிந்து கிடக்கன்றன. உச்சநீதி, உயர்நீதி மன்றங்களில் பல ஆயிரம் வழக்குகள், கீழமை நீதிமன்றங்களில் பல இலட்சம் வழக்குகள் பல ஆண்டு காலமாகத் தேங்கிக் கிடக்கின்றன. நீதிமன்றத் தீர்ப்புகளை, உத்தரவுகளை மத்திய-மாநில அதிகாரிகளும் ஆட்சியாளர்களும், பெரும் கார்ப்பரேட் முதலாளிகளும், இயற்கை வளக் கொள்ளையர்களும் அவர்களின் கிரிமினல் குற்றக் கும்பல்களும் சாதி, மதவெறியர்களும் மதிப்பதேயில்லை. இந்த நிலையில் நீதித்துறையின் மீது காலனிய காலத்திலிருந்து கட்டி எழுப்பப்பட்டிருக்கும் கேள்வி கேட்கவே கூடாத புனிதத் தோற்றம் உடைந்து நொறுங்குகிறது. இதற்குக் காரணமும் பொறுப்பும் நீதித்துறைதான். ஆனால், தான் மதிப்பிழந்து போவதையும் தனது சரிவையும் தடுக்க முடியாத நீதித்துறை, அதிலிருந்து கவனத்தைத் திசைதிருப்பும் முயற்சியாக நீதிமன்ற (வளாகத்தின்) கண்ணியத்தையும் மாண்பையும் காக்கும் திருப்பணியை மேற்கொண்டுள்ளது. நீதித்துறையின் மாண்பும் கண்ணியமும் வழக்கறிஞர்களால்தான் கெட்டுப்போவதாகப் பழிபோட்டு, அவர்கள் மீது தாக்குதல்களைத் தொடுத்திருக்கிறார்கள்.

lawyers-struggle-salem-rally
நீதிமன்றத்தின் பாசிச அடக்குமுறையைக் கண்டித்து ஜூன் 27 அன்று மதுரையில் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் நடத்திய ஆர்ப்பாட்டம்.

உச்சநீதி மன்றம் முதல் கீழமை நீதி மன்றங்கள் வரை எல்லா மட்டங்களிலும் நீதிபதிகளின் தகுதியற்ற நியமனங்கள், இலஞ்ச-ஊழல், அதிகார முறைகேடுகள், கட்டைப் பஞ்சாயத்துகள், பாலியல் குற்றங்கள் நிரம்பி வழிகின்றன. சுயமுரண்பாடுகள் நிறைந்த, சட்டத்துக்கு முரணாக, ஒருதலைப்பட்சமான தீர்ப்புகள் வழங்கப்படுகின்றன. இவற்றையெல்லாம் ஓய்வுபெற்ற, பதவியிலுள்ள நீதிபதிகளே ஒப்புக் கொள்கிறார்கள். இப்போது வழக்கறிஞர்களுக்கு எதிராக, நீதிபதிகளுக்கு ஆதரவாக வரிந்துகட்டிக்கொண்டு வாதாடும் நீதிபதி சந்த்ருவே கிராணைட் கொள்ளையில் குற்றவாளிகளுக்கு ஆதரவாக நீதிபதிகள் தீர்ப்புகள் வழங்கியதையும் விசாரிக்கச் சொல்லவில்லையா? கிராணைட் கொள்ளைக் குற்றவாளிகளை விடுவித்த மேலூர் மாஜிஸ்ட்ரேட் இடைநீக்கம் செய்யப்பட்டதும் என்ன எழுதினார்? உயர்நீதி மன்றத்தின் மூன்று முரண்பட்ட தீர்ப்புகள் அடிப்படையிலேயேதான் அவ்வாறு செய்ததாக கூறினார்.

நீதித்துறை சர்வாதிகாரிகள்: சென்னை உயர்நீதி மன்றத் தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல்
நீதித்துறை சர்வாதிகாரிகள்: சென்னை உயர்நீதி மன்றத் தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல்

கிராணைட் மட்டுமல்ல; தாதுமணல், ஆற்றுமணல் போன்ற இயற்கை வளக்கொள்ளை, சாதிவெறி ஆணவக்கொலைகள், முத்துக்குமாரசாமி மற்றும் விஷ்ணுபிரியா தற்கொலை போன்றவைகளில் நியாயமான விசாரணைக்கு முட்டுகட்டை போடும் தீர்ப்புகள்; ஆளுங்கட்சிக்கும் அரசுக்கும் எதிரான வழக்குகளில் (எம்.ஜி.ஆர். சமாதியில் இருப்பது இரட்டை இலை அல்ல, பறக்கும் குதிரைதான் என்று சொன்னது; சொத்துக்குவிப்பு உட்பட ஜெயலலிதாவுக்கு எதிரான பல வழக்குகளை அப்பட்டமாகவே சட்டவிரோதமாக இரத்து செய்தது; தேர்தல் குற்றவழக்குகளிலிருந்து அவரை விடுவித்தது; தண்டிக்கப்பட்ட குற்றவாளி ஜெயலலிதா படத்தை அரசு அலுவலகங்களில் வைப்பது சரியெனத் தீர்ப்புச் சொன்னது; மதுவிலக்கு அரசின் கொள்கை, அதில் தலையிட முடியாதென ஒதுங்கிக் கொண்டது – இப்படிப் பலவற்றில்) ஒருதலைப்பட்சமாக ஜெயலலிதாவுக்கு சாதகமாக வழங்கிய தீர்ப்புகள்; சொத்துக் குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தத்து, பெங்களூர் நீதிபதி குமாரசாமி போன்றவர்களின் செயல்பாடுகள் நீதிபதிகளை மதிக்கக் கூடியதாகவோ நடுநிலையாளர்களாகவோ கருதக் கூடியதாக இல்லை. தமிழகத்தில் குற்றஞ்சாட்டி விசாரணைக்கு நிறுத்தப்படுவோரில் 70 விழுக்காடு விடுதலை செய்யப்படுகிறார்கள். கட்டைப் பஞ்சாயத்தும் கையூட்டுமே இதற்குக் காரணம். கீழமை நீதிமன்றங்களில் ஊழல் பெருகிவிட்டதாக சமீபத்தில் உயர்நீதி மன்ற நீதிபதியே புலம்பினார்.

நீதிபதி ராமசுப்பிரமணியன்
நீதித்துறை சர்வாதிகாரிகள்: நீதிபதி ராமசுப்பிரமணியன்

நீதித்துறையின் மீதான இத்தகைய புகார்கள், குறைபாடுகளைப் பல ஆண்டுகளாக நீதிபதிகள் சுயபரிசீலனை செய்வதே கிடையாது. தங்கள் முது
கை அவர்கள் திரும்பிப் பார்ப்பதே கிடையாது. நீதிபதிகளை நீதிபதிகளே நியமித்துக் கொள்வார்கள்; பதவி உயர்களையும் தாங்களே போட்டுக் கொள்வார்கள்; தங்கள் மீதான குறைபாடுகள், புகார்களைத் தாங்களே விசாரித்துக் கொள்வார்கள்; இவைபற்றி வேறுயாரும் தலையிடவோ, பேசவோ கூடாது என்கிறார்கள். இது மன்னராட்சியைவிட மோசமானதில்லையா? இது கொடூரமான சர்வாதிகாரமில்லையா? யார் இந்த அதிகாரத்தை நீதிபதிகளுக்குக் கொடுத்தது? நீதிபதிகள் தங்களுக்குத் தாங்களே புனிதர்களாக ஒளிவட்டம் போட்டுகொண்டு, அத்துமீறிய அதிகாரத்தைச் சுவீகரித்துக் கொண்டது, வெளிப்படைத்தன்மையும் யாருக்கும் பதில்சொல்ல வேண்டிய கடப்பாடும் இல்லாதது; ஒளிவு மறைவான செயல்பாடு கொண்டதாகவும் நீதிமன்ற அவமதிப்பு என்ற ஆயுதமும் எளிதில் பதவிநீக்கம் செய்யமுடியாத கவசமும் தரித்திருப்பதால் சர்வாதிகாரிகளாக நடந்து கொள்கிறார்கள்.

அன்றாடம் நீதித்துறையும் சட்டத்துறையும் இனைந்து செயல்பட வேண்டியிருக்கிறது. இதில் நீதித்துறையின் மீது வழக்கறிஞர்களுக்கு மதிப்பும் மரியாதையும் நம்பிக்கையும் நீதிபதிகளின் நடத்தை, செயல்பாடுகளால் ஏற்படுத்தப்பட வேண்டியன. நீதிபதிகள்தாம் தமது தலைமைப் பண்புகளால் முன்னுதாரணமாகச் செயல்பட்டு வழக்கறிஞர்களிடையே கண்ணியமான, மதிக்கத்தக்க நல்லுவுறகளைப் பேணிக்கொள்ள வேண்டும். ஆனால், அவ்வாறில்லாத நீதிபதிகளின் மேற்கண்ட நடத்தைகள் அருகிலிருந்து அன்றாடம் காணும் வழக்கறிஞர்களிடையே நல்லுறவையும் பொது மக்களிடையே நீதித்துறையின் மீது கண்ணியத்தையும் ஏற்படுத்தக் கூடியவையாக இல்லை.

lawyers-struggle-madurai-demo
நீதிமன்றத்தின் பாசிச அடக்குமுறையைக் கண்டித்து ஜூன் 27 அன்று மதுரையில் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் நடத்திய ஆர்ப்பாட்டம்.

இருந்தாலும், தமது சுயநல சீரழிவுப் போக்குகளை மாற்றிக்கொள்ளாத நீதிபதிகள், வழக்கறிஞர்கள் மீது சர்வாதிகாரத் தாக்குதல்களை ஏவியிருக்கின்றனர். பதவிஉயர்வைக் குறிவைத்து சமீபத்தில் ஆந்திராவுக்கு மாற்றல் வாங்கிக் கொண்டுபோன ஒரு நீதிபதி தனது பிரிவுபச்சார விருந்தில் பின்வருமாறு பேசியிருக்கிறார்.

“நான் போர்க்களத்திலிருந்து ஓடிவிடவில்லை. தொலை தூர ஏவுகணைகளை வீசி எதிரி முகாம்களை முற்றிலுமாக அழிப்பதற்குத் தோதான தூரத்தை கணக்கிட்டு, அதற்குப் பொருத்தமான இடத்தில் நிலைகொள்ளவிருக்கிறேன். வெகுதூரம் போய்விடவில்லை. தலைமை நீதிபதி தொலைபேசியில் அழைத்தால் ஆஜராகும் தொலைவில்தான் இருக்கிறேன். இங்கிருந்து போன பின்னரும், இங்கே என்ன நடக்க வேண்டும் என்பதைத் தீர்மானிப்பவனாக நான் இருப்பேன். கனவிலும் வந்து உங்களை அச்சுறுத்துவேன்.”

மாண்புமிகு என்றழைக்கப்படும் ஒருநீதிபதி, நியாயத்துக்குப் போராடும் வழக்கறிஞர்கள் மீது வஞ்சம் தீர்க்கும் வகையில் இப்படி பேசியதும், தலைமை நீதிபதிக்கு தனக்கும் உள்ள நெருக்கத்தைக் காட்டி மிரட்டும் அவரது சிறுமையையும் இப்போது வழக்கறிஞர்களுக்கான நடத்தை விதித் திருத்தம் என்ற பெயரில் வழக்கறிஞர்கள் மீது நடத்தப்படும் தாக்குதலையையும் வேறுவேறானதாகக் கருதமுடியுமா?

நீதிமன்ற ஊழலுக்கு உதாரணமாக முன்னாள் இந்தியத் தலைமை நீதிபதி ஹெச்.எல்.தத்து, ஜெயாவிற்குப் பிணை வழங்கிய விவகாரம் சந்தி சிரித்தது.
நீதிமன்ற ஊழலுக்கு உதாரணமாக முன்னாள் இந்தியத் தலைமை நீதிபதி ஹெச்.எல்.தத்து, ஜெயாவிற்குப் பிணை வழங்கிய விவகாரம் சந்தி சிரித்தது.

குடித்துவிட்டு நீதிமன்றத்துக்கு வருவதும் வழக்கு விசாரணைகளில் ஈடுபடுவதும், கட்டைப் பஞ்சாயத்து செய்வதும் சில வழக்கறிஞர்கள் மட்டுமல்ல, நீதிபதிகளிடமும் காணப்படும் சீரழிவுகள் இல்லையா? அதனால் நீதித்துறையின் மாண்பும் கண்ணியமும் பாதிக்கப்படாதா? இம்மாதிரியான தவறுகளுக்குத் தக்க விசாரணையின்றி நீதிபதிகளை தண்டிக்கலாம் என்றால், அதே தவறுகளுக்கு நீதிபதிகளைத் தண்டிப்பது யார்? அதற்காக உச்சநீதி மன்றத்துக்கே போனாலும், அவை பல ஆண்டுகளாகக் கிடப்பில் தானேபோடப்பட்டுள்ளன? வழக்கறிஞர்கள் சிலரின் தவறுகளுக்காக அந்தச் சமூகம் முழுவதையும் தண்டிப்பது சரியா?

நீதிமன்ற அதிக்கிரமங்களையும் அநீதிகளையும் அநியாயங்களையும் அன்றாடம் அருகிலிருந்து அனுபவிப்பவர்கள் மற்றவர்களைவிட வழக்கறிஞர்கள். அவற்றின் சட்ட நுட்பங்களை அறிந்தவர்கள் வழக்கறிஞர்கள். ஆகவே, அவற்றுக்கும் வேறு சமூகப் பிரச்சினைகளுக்காகவும் போராட வேண்டிய கூடுதலான உரிமையும் கடமையும் கொண்டவர்கள் வழக்கறிஞர்கள். நீதிமன்ற வளாகத்துக்குள்ளேயோ, வெளியேயோ எங்கும் பேசவோ, போராடவோ கூடாது என்றால் வேறுயார், எங்குபோய் போராடுவார்கள்? ஆகவே, இது வழக்கறிஞர்கள் மீதான தாக்குதல் மட்டுமல்ல, அரசியல் ஜனநாயக உரிமைகளுக்காகப் போராடும் அனைத்துப் பிரிவு மக்கள் மீதான நீதிமன்றத்தின் பாசிசத் தாக்குதல். நீதிமன்ற பாசிசத்திற்கு எதிராக அனைவரும் ஒன்றுதிரளுவோம்! போராடுவோம்!

– மாநில ஒருங்கிணைப்புக் குழு,
மக்கள் அதிகாரம், தமிழ்நாடு.
_______________________________
புதிய ஜனநாயகம், ஜூலை 2016
_______________________________

  1. “இம்மாதிரியான தவறுகளுக்குத் தக்க விசாரணையின்றி வழக்கறிஞர்ளை தண்டிக்கலாம் என்றால், அதே தவறுகளுக்கு நீதிபதிகளைத் தண்டிப்பது யார்?”

    என்று இருக்க்க வேண்டும்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க