Tuesday, June 25, 2024
முகப்புசமூகம்நூல் அறிமுகம்நூல் அறிமுகம்: பறை - இசைக் கருவி ஓர் ஆய்வு

நூல் அறிமுகம்: பறை – இசைக் கருவி ஓர் ஆய்வு

-

பார்ப்பன இசைக்களவை அம்பலப்படுத்தும் பல ஆய்வு நூல்கள் வெளிவந்துள்ளன. இசைக் கருவிகளின் களவு குறித்தும் பல ஆய்வுகள் வந்துள்ளன. யாழ் வீணையாக உருமாறியது குறித்த விவாதம் அவற்றில் மிகப் பிரபலமானது. எனினும் ஆய்வாளர்களால் இதுநாள் வரை தீண்டப்படாமலிருந்த இசைக் கருவி தமிழ் மக்களின் தொன்மையான இசைக் கருவியாகிய பறை. இதற்குக் காரணம் சொல்லாமலேயே விளங்கும்.

டாக்டர் மு.வளர்மதி
டாக்டர் மு.வளர்மதி

உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த முனைவர் வளர்மதி, சனவரி, 25, 1997 அன்று, ம.க.இ.க தஞ்சையில் நடத்திய தமிழ் மக்கள் இசை விழாவில் “பறையும் தீண்டாமையும்” என்ற தலைப்பில் வழங்கிய ஆய்வுக் கட்டுரையை மேலும் விரிவாக்கி ”பறை, இசைக்கருவி – ஓர் ஆய்வு” எனும் நூலாகத் தயாரித்துள்ளார்.

பறை எனும் இசைக் கருவியின் தோற்றம், அதன் பயன்பாடுகள், பறையைக் குறிக்கும் சொற்கள், பலவகையான பறைகள் ஆகியவற்றை இலக்கிய ஆதாரங்களினூடாக நூலின் முதற்பகுதி விளக்குகிறது. இந்தியாவின் பல பகுதிகளிலும், உலக நாடுகளிலும் தொல்குடி மக்களின் இசைக் கருவியாக பறை இருந்ததையும், இருந்து வருவதையும் நூலின் அடுத்த பகுதி விவரங்களுடன் விளக்குகிறது.

இந்தியா, இலங்கை தவிர வேறு எந்த நாட்டிலும் பறை எனும் கருவியை இசைத்த மக்கள் தீண்டத்தகாதோர் ஆக்கப்படவில்லை என்பதைக் கூறும் நூலாசிரியர், தமிழர் வரலாற்றில் பறையும் தீண்டாமையும் இணைந்த காலம் எதுவாக இருக்கும் என்பதை இலக்கியச் சான்றுகளினூடாக ஆய்வு செய்கிறார்.

பறை என்னும் சொல்லுக்குச் சொல்லுதல், அறிவித்தல் எனப் பல பொருள்கள் உண்டு. பல வகைப்பட்ட தோற் கருவிகளின் பொதுப் பெயராகவும் பறை என்ற சொல் வழங்கப்பட்டுள்ளது.

பறை இசைக்கருவி - ஓர் ஆய்வு
பறை இசைக்கருவி – ஓர் ஆய்வு

பறை தயாரிக்கும் முறை பற்றியும், இசை நயத்தின் தேவைக்கேற்பப் பயன்படுத்த வேண்டிய விலங்குகளின் தோல் குறித்தும், அவற்றைப் பதப்படுத்தும் முறை குறித்தும் சங்க இலக்கியங்களிலிருந்து காட்டப்பட்டுள்ள சான்றுகள் தமிழ் மக்களின் இசையறிவை மெய்ப்பிக்கும் சான்றுகளாகும்.

வாசிக்கும் முறைகளைச் சுட்டுவதற்குப் பயன்படுத்தப்பட்ட சொற்கள் பல புறநானூறு, அகநானூறு, சிலப்பதிகாரம் போன்ற நூல்களிலிருந்து தொகுக்கப்பட்டுள்ளன. இயம்பல் – இயைந்து ஒலித்தல்; கறங்கல் – தகதிமி போன்ற சொற்கட்டினை சுற்றிச் சுற்றி வருமாறு இசைத்தல்; தெளிர்த்தல் – ஒலிக்கூறுகள் சிதறுமாறு அடித்தல்; ஆலித்தல் – அகலமாகி ஒலித்தல்… போன்ற பல சொற்கள் இசை நுட்பத்தை மட்டுமின்றித் தமிழின் மொழி வளத்தையும் காட்டுகின்றன.

தகதிமி, தரிகிட போன்ற தாளக்கட்டுகளால் கொட்டு முறைகள் குறிக்கப்படுகின்ற அதே நேரத்தில், கொட்டு முறைகளைக் குறிப்பிட்டுச் சொல்லும் இத்தனை வகையான சொற்கள் இருந்தும் அவை வழக்கொழிந்து, பறையடித்தல், வாசித்தல் போன்ற ஓரிரு சொற்கள் மட்டுமே இன்று வழங்கி வருவது வருத்தமளிக்கிறது.

ஐவகை நிலப் பாகுபாட்டின் அடிப்படையிலும், ஒலி – உருவம் – பயன்பாடு இவற்றை அடிப்படையாகக் கொண்டும் பறைகள் பெயரிடப் பட்டதை எடுத்துக் காட்டுகளுடன் விளக்குகிறார் நூலாசிரியர்.

முதலில் வினைச் சொல்லாகவும், பின்னர் இசைக் கருவியைக் குறிக்கும் பெயர்ச் சொல்லாகவும் இருந்த பறை, சமூக உறவுகளின் இலக்கண விதி மாறியபோது – தீண்டாமை நுழைந்தபோது – பெயர் உரிச் சொல்லாகவும் மாறியது. இழிவு. அழுக்கு, கருப்பு என்ற பொருள் தரும் சொல்லாகவும் ‘பறை’ மாறியது.

பறை - தமிழர் கலைவரலாற்றின் முகம்
பறை – தமிழர் கலைவரலாற்றின் முகம்

பறைக் கோலம் – இழிவான தோற்றம், பறைத்துணி – அழுக்காடை பறைப் பருந்து – கரும் பருந்து போன்ற பல சொற்கள் தமிழ் இலக்கியங்களில் நுழைந்ததைப் பட்டியலிட்டுக் காட்டுகிறார் ஆசிரியர்.

“துடியன், பாணன், பறையன், கடம்பன் என்ற இந்நான்கு அல்லது குடியும் இல்லை” – துடிகொட்டுபவன், யாழ் மீட்டுவோன், பறையறைபவன், வெறியாடுபவன் ஆகிய கலைஞர்களைக் காட்டிலும் சிறந்த குடிகள் இல்லை என்று கூறி அவர்களைப் புகழ்ந்துரைக்கிறார் மாங்குடி கிழார் எனும் புலவர்.

வேறொரு சங்க இலக்கியப் பாடலோ (புறம் – 287) ”துடி எறியும் புலைய, ஏறிகோல் கொள்ளும் இழிசின” என்று பறை கொட்டியவனை இழிபிறப்பாளனாக்குகிறது.

“பழந்தமிழருடைய குடிப் பாகுபாட்டுடன் பார்ப்பனர்களின் வர்ணப் பாகுபாடு கலந்த காலத்தில் தீண்டாமை வேரூன்றத் தொடங்கியுள்ளது” என்று கூறி சங்கப் பாடல்களை ஆதாரம் காட்டுகிறார் ஆசிரியர். “சங்க காலம் பொற்காலம்” என்று நிறுவ விரும்புவோர்க்கு இது சங்கடத்தைத் தரக்கூடும். ஆனால் இனிமேல்தான் நாம் ஒரு பொற்காலத்தைப் படைக்க வேண்டியுள்ளது என்று அதற்காகப் போராடி வருபவர்களுக்குச் சங்கடம் ஏதும் இல்லை.

பறை எனும் இசைக் கருவிக்கும் தீண்டாமைக்கும் என்ன தொடர்பு? ஏற்கனவே குறிப்பிட்ட நால்வகை இசைக்குடிகளுள் பறையர் மட்டுமே தீண்டத்தகாதோராக, பறை மட்டுமே தீண்டத்தகாத கருவியாக ஆனது ஏன்?

பறையைக் காட்டிலும் யாழ் தொழில் நுட்ப ரீதியில் முன்னேறிய இசைக்கருவி என்பதால் இதனை மீட்டிய கலைஞர்கள் சமூகத்தில் ஒப்பீட்டளவில் உயர் தகுதி பெற்றிருக்கக் கூடுமெனினும், பறையர் தீண்டத்தகாதோரானதற்குக் காரணம் பறை அல்ல. அவை சமூகக் காரணங்களாகும்.

kovan-2
பறை என்னும் சொல்லுக்குச் சொல்லுதல், அறிவித்தல் எனப் பல பொருள்கள் உண்டு.

வேளாண் சமூகத்தில் மேட்டுக்குடிகளுக்கு ஏவல் தொழில் செய்த உழைக்கும் மக்கள், ஈமச்சடங்கில் ஏவல் செய்தோர் போன்றவர்கள் புலையர், இழிசினர், உவச்சர், கடைஞர், கடிகையர், பறையர் என்ற சொற்களால் குறிக்கப்பட்டுள்ளனர்.

கி.பி. இரண்டாம் நூற்றாண்டினதாகக் கருதப்படும் நீதி நூல்களிலும் புலையர் என்ற சொல் பொய், களவு, இழிவு, ஊன், தீயநெறி போன்ற பொருள்களில் ஆளப்பட்டுள்ளது என வேறு சில ஆய்வுகள் மேற்கோள் காட்டப்படுகின்றன.

வேளாண் சமூகத்தின் அடிமைத் தொழில்களைச் செய்ததனால் இழிசினர் என்று ஒதுக்கப்பட்டனரெனக் கொண்டாலும், பார்ப்பன நெறிக்கெதிராய் என்ன தீயநெறியை அவர்கள் பின்பற்றினர். ‘ஊன் உண்ணுதல்’ புன்மையானது எப்போது போன்ற கேள்விகளுக்குள் நூலாசிரியர் செல்லவில்லை.

பறை மிக எளிய இசைக் கருவியாயினும், அதன்மீது சுமத்தப்பட்டிருக்கும் தீண்டாமை எனும் சமூகக் கொடுமை மிகவும் சிக்கலான வரலாற்று நிகழ்ச்சிப் போக்கினூடாகத்தான் நிலை நிறுத்தப் பட்டிருக்கிறது.

மற்றெல்லாக் காலங்களைவிடவும் சோழர் காலத்தில்தான் பறையர் இன மக்கள் மிக இழிவாக நடத்தப்பட்டனர் என்பது இரா. பூங்குன்றன் அவர்களின் ஆய்விலிருந்து மேற்கோள்காட்டி விளக்கப்படுகிறது.

திருவாரூரில் சாமிக்கு முன் “யானையேறும் பெரும்பறையன்” யானை மீதேறிக் கவரி வீசிச் செல்வது போன்று சில கோயில்களில் அவர்கள் பெற்றிருக்கும் உரிமைகள், “மேதினி வளரும் சாதி ஒழுக்கமும் நீதி அறமும் பிறழாது” ஆட்சி நடத்திய சோழ மன்னர்களுக்கும், பிந்தைய ஆட்சியாளர்களுக்கும் எதிராகக் கலகம் செய்து அவர்கள் பெற்றிருக்கக் கூடிய உரிமைகளேயன்றி சாதியச் சமுதாயம் மனமிரங்கி வழங்கிய சலுகைகள் அல்ல.

தொல்குடித் தமிழ்ச் சமுதாயத்தின் கலைஞர்களான பறையர் அடிமைகளாக்கப்பட்டதும், பறை எனும் இசைக் கருவி அடிமையின் கைக் கருவியாக்கப்பட்டதும் இன்றுவரை மாறவில்லை. பறையடிப்பதற்கும் அடிமைத் தொழில் செய்வதற்கும் மறுத்ததற்காக ம.க.இ.க.வின் ஆதரவாளர் குருமூர்த்தியின் (குருங்குளம், தஞ்சை) கட்டைவிரல் வெட்டப்பட்ட சம்பவத்தை நினைவு கூர்ந்து, பறையர் எனும் சொல் சாதி மக்களைக் குறிக்கும் சொல்லாக இருப்பது ஒழிக்கப்பட்டு இசைவாணர்களைக் குறிக்கும் மரியாதைக்குரிய சொல்லாக மாற வேண்டும் என்று குறிப்பிடுகிறார் ஆசிரியர்.

பறை எனும் கருவிக்கு மற்ற இசைக் கருவிகளுக்கு இணையான மதிப்பு அளிக்கப்படுவதுடன், இசை நுணுக்கங்களைப் புகுத்தி, வகுப்புகள் நடத்தி முறையான பறை இசைவாணர்களையும் உருவாக்க வேண்டும் என்று தனது ஆலோசனைகளையும் ஆசிரியர் முன்வைத்துள்ளார்.

பறை இசைத்தல்
தொல்குடித் தமிழ்ச் சமுதாயத்தின் கலைஞர்களான பறையர் அடிமைகளாக்கப்பட்டதும், பறை எனும் இசைக் கருவி அடிமையின் கைக் கருவியாக்கப்பட்டதும் இன்றுவரை மாறவில்லை.

திரையிசை உள்ளிட்ட புதிய தேவைகளையொட்டிப் பறை பயன்படுத்தப்பட்டாலும் ஒரு கருவி என்ற முறையில் அது தீண்டத்தகாத கருவியாகவே சமூகத்தில் இன்னமும் கருதப்படுகிறது. எனவே மாட்டுக்கறி தின்பது, தீண்டாமை மறுப்புத் திருமணம் போல பிற சாதியினர் தப்படிப்பதும் ஒரு தீண்டாமை எதிர்ப்பு நடவடிக்கையாகவே உள்ளது. சாதி ஒழிப்பு குறித்துப் பேசும் அமைப்புகளின் அணிகள் இதைச் செய்ய முன்வர வேண்டும். மணவிழாவுக்கு மங்கல வாத்தியம் (நாதசுரம்) – சாவுக்குப் பறை எனும் பார்ப்பனியப் பண்பாட்டை ஒழித்து பறையை மணவிழாவின், மகிழ்ச்சியின் இசைக் கருவியாக்க வேண்டும். சாப்பறையை நிறுத்த வேண்டும்.

இவை போன்ற பண்பாட்டு ரீதியான நடவடிக்கைகள் பறை எனும் கருவிக்கும் பறையர் அல்லாத பிற மக்களுக்கும் இடையிலான உறவை மாற்றியமைக்கும் முயற்சிகள் மட்டுமே. தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் பிறர்க்கும் இடையிலான தீண்டாமை அடிப்படையிலான சாதிய உறவை ஒழிப்பதன் வாயிலாகத்தான் தொன்மையான இசைக்கருவிக்குரிய முழு மரியாதையைப் ‘பறை’ பெற முடியும்.

“பைங்கொடிச் சுரை மேற்படர்ந்த பழங்கூரையுடைப் புற்குரம்பைச் சிற்றில்” என்று நந்தன் வாழ்ந்த புலைச் சேரியை வருணிக்கிறாரே சேக்கிழார், அந்தச் சுரைக்கொடி படர்ந்த பழங்கூரை பல நூற்றாண்டுகளாகியும் மாறவில்லை – பறையைப் போலவே.

“இழி பிறப்பாளன் கருங்கை சிவப்பத் தன் வலிமையனைத்தையும் செலுத்தி அரசனுக்காகப் போர்ப்பறை முழக்கியதைக் கூறுகிறது புறநானுறு. கருங்கை மட்டுமின்றிக் கண்களும் சிவக்க போர்ப்பறை முழங்க வேண்டும் – அரசுக்கும், ஆண்டைகளுக்கும், சாதிக்கும் எதிராக.

கருங்கையின் வலிமை பறையின் மீது படிந்த தீண்டாமைப் பூச்சை அடித்து உதிர்க்கும்; பறையின் அதிர்வில் கருங்கையில் பூட்டப்பட்ட விலங்குகள் தெறிக்கும்.

– மருதையன்
புதிய கலாச்சாரம், ஜனவரி 2000.

_____________________

பறை இசைக்கருவி – ஓர் ஆய்வு’ – முனைவர் மு. வளர்மதி
புதிய கலாச்சாரம் நூல் விமரிசனக் கட்டுரை வெளியான போது இந்தப் புத்தகத்தை திருமகள் நிலையத்தினர் வெளியிட்டிருந்தனர். 2009-இல் அம்ருதா பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
விலை – ரூ.90.
அம்ருதா பதிப்பகம் – No: 12, 3வது மெயின் ரோடு, 2வது குறுக்குத் தெரு, கோயிந்த் ராயல் நெஸ்ட், கிழக்கு சி.ஐ.டி நகர்,சென்னை – 600 035.

 1. அய்யா இது ரெம்ப பழைய புத்தகம் ஆச்சே நான் நூலகத்துல போயி படிச்சே ரெம்ப நாள் ஆகுதே…

 2. //சாவுக்குப் பறை எனும் பார்ப்பனியப் பண்பாட்டை ஒழித்து பறையை மணவிழாவின், மகிழ்ச்சியின் இசைக் கருவியாக்க வேண்டும். சாப்பறையை நிறுத்த வேண்டும்.//நல்லபடி வாழ்ந்து மிகுந்த வயதுடயவராக மரித்து போனவங்கள கலியான சாவுனு சொல்லுவாங்க ஆபாச நடனம்நய்யான்டி மேளம்லாம் வச்சு சந்தோசமா தூக்கிட்டு போயி அடக்கம் பன்னுவாங்க பார்ப்பனியம் அது இதுனு சொல்லி அந்த சந்தோசத்திலயும் பறை அடிகிக்கிறவங்க பிழைப்பிலயும் மண்ன போடாதீங்க பா

 3. ஆயிரம் வருடங்களுக்கு முன்புதான் பறை இசை வல்லுநர்கள் ஒடுக்கப்பட்டார்கள் என்றால் , என்னால் இன்னொரு காரணத்தை சிந்திக்க முடிகிறது .

  கிருத்துவம் ஆரம்பித்த நான்காம் ஐந்தாம் நூற்றாண்டுகளில் , மனிதனின் இடுப்பை ஆட்ட வைக்கும் இசை மற்றும் இசை கருவிகள் சாத்தானின் கருவிகளாக பார்க்கப்பட்டன . சர்ச்களில் கூட மோனோபோனிக் பிளைன் சாண்ட்(அல்லேலூயா என்பதை நீட்டி முழங்கி ) எனப்படும் தலையை ஆட்டிவைக்கும் இசையை மட்டும் அனுமதித்தார்கள் .அதுவும் வாய்ப்பட்டு தான் . இசை கருவிகள் கிடையாது .

  இசுலாமும் இதே பாதையில் சென்று ஒரு சில பஜனை கருவிகள் மட்டும் அனுமதித்தது

  தலையை ஆட்டவைக்கும் யாழ் போன்றவை மேலே சென்றதற்கும் ,
  இடுப்பை ஆட்ட வைக்கும் பறை இசை, இதே போன்றதொரு மத காரணத்தால் , ஒடுக்கப்பட்டு இருக்கலாம் .

 4. பறை இசை கேட்பவர்நாடிநரம்புகளை எல்லாம் முறுக்கேற்றி வெற்றிநடை போடவைக்கும் ! அதனால் தான் முற்காலத்தில் அரசர்கள் போருக்கு செல்லும்போதும், வெற்றி பெற்று திரும்பும் போதும் மிக அட்டகாசமும், ஆர்ப்பாட்டமும் ஆக இவை முழங்கப்படும்! கேரள கோவில்களில் ‘செண்டை’ எனும் வாத்திஉம், ஒரு போர் உத்திகையை போல , வீரநடனமாக போட்டிகள் வைத்துநடத்தப்படுகிறது! தமிழ்னாட்டில் , தமிழனை போலவே தமிழ் கலைகளும் பொலிவிழந்து ‘இழவு’ வீட்டில் மட்டும் என ஒடுக்கப்பட்டுள்ளது! கோவில்களில் தேர்திருவிழாவின் பொது ஆர்ப்பாட்டமன பறை கொட்டும், மல்லாரிநாத்ஸ்வரமும் கேட்பவர் மனதைன் அள்ளும்! ஆதரிப்பாரின்மையால் அழிந்து வரும் பல கலைகளில் பறை, கரகாட்டம், பொய்கால் குதிரை ஆட்டம், இன்னும் பல!நாகரிக சமூதாயத்தில் பேண்டு இடம்பிடித்துள்ளது-அதுவும் ராணுவ இசைதான்! பழையன கழிதலும், புதியன புகுதலும் வழுவல!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க