Friday, December 9, 2022
முகப்புசெய்திஒரு வரிச் செய்திகள் – 28/07/2016

ஒரு வரிச் செய்திகள் – 28/07/2016

-

செய்தி: மத்தியப் பிரதேச மாநிலம், மாண்டசர் ரயில் நிலையத்தில் பசு மாட்டுக்கறி வைத்திருந்ததாகக் கூறி இரு முஸ்லீம் பெண்கள் போலீசார் முன்னிலையில் தாக்கப்பட்டனர். உள்ளூர் மருத்துவரின் பரிசோதனையில் இது எருமை இறைச்சி என தெரிய வந்தது.

நீதி: போலீசு, அரசு, ஆர்.எஸ்.எஸ் கூட்டணி இருக்கும் போது அந்த எருமை இறைச்சி பசுக் கறியாக மாற முடியாதா என்ன? பிரச்சனை பசுக் கறி அல்ல, காவிக்கறை பயங்கரவாதம்!

———————————————————-

செய்தி: ஐ.ஆர்.சி.டி.சி இணையம் வாயிலாக ஆன்லைனில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்பவர்கள் ரூ.1 ப்ரீமியம் தொகை செலுத்தி பயணக் காப்பீடு செய்துகொள்ளும் வசதியை இந்திய ரயில்வே வரும் செப்டம்பர் 1-ம் தேதி முதல் அமல்படுத்துகிறது.

நீதி: தனியார் ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களை வாழ வைக்க, செத்துப் போகும் ரயில் பயணிகளை பயன்படுத்தும் மோடி அரசின் சேவை யாருக்கு?

———————————————————-

செய்தி: “அரசியலில் நான் மறுபிறவி எடுத்த மகிழ்ச்சியோடு ஊருக்குத் திரும்புகிறேன்” என்று செவ்வாய்க் கிழமை மீண்டும் அ.தி.மு.க-வில் இணைந்த கருப்பசாமிபாண்டியன் நெகிழ்ந்து சொன்ன வாசகம் இது.

நீதி: தி.மு.க-வில் இருந்தால் பகுதி நேர அடிமை; அ.தி.மு.க-வில் ஆயுட்கால கொத்தடிமை! சாதா அடிமை ஸ்பெசல் அடிமையாவதில் மகிழ்ச்சி என்ன இகழ்ச்சி என்ன!

———————————————————-

செய்தி: அப்துல் கலாமின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ராமேசுவரத்தில் கலாம் நினைவிடத்தில் மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கழகத்தின் (டி.ஆர்.டி.ஓ) சார்பாக கலாம் தேசிய நினைவகம் அமைக்க நேற்று அடிக்கல் நாட்டப்பட்டது. கலாமின் முழு உருவச் சிலையைத் திறந்து வைத்த மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு, “அப்துல் கலாமின் கனவை நனவாக்குவதே அவருக்கு நாம் செலுத்தக்கூடிய அஞ்சலியாகும்” என்று பேசினார்.

நீதி: தென்மாவட்ட மக்களின் நிரந்தர எமனாக அச்சுறுத்தும் கூடங்குளம் அணுவுலைகள் அடுத்தடுத்து திறக்கப்படுவதன் மூலம், கலாமின் கனவு நனவாகி வருவதால் வெங்கய்யா வருந்த வேண்டாம்!

———————————————————-

செய்தி: ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் ராஜினாமா செய்து ஒன்றரை மாதங்கள் கடந்த பிறகும் தமிழக காங்கிரஸுக்கு புதிய தலைவரை நியமனம் செய்ய முடியாமல் அக்கட்சி மேலிடம் திணறி வருகிறது. இதனால், கட்சிப் பணிகள் முடங்கியுள்ளன.

நீதி: கோஷ்டி மோதல்தான் காங்கிரசின் ஒரே கட்சிப் பணியென்றால் கோஷ்டிகளை சமாளித்து தலைவரை வெளியிடுவது திணறல்தானே?

———————————————————-

செய்தி: தமிழக வழக்கறிஞர்கள் மீதான இடைநீக்க உத்தரவை திரும்பப் பெறும்வரை நீதிமன்ற புறக்கணிப்புப் போராட்டம் தொடரும் என சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

நீதி: வழக்கறிஞர்களை டவாலியாக கருதிய நீதிபதிகள் மேல் மக்கள் மன்றத்தில் வழக்கு தொடுத்துள்ள வழக்கறிஞர்களின் போராட்டம் வெல்லட்டும்!

———————————————————-

செய்தி: கடந்த 10 ஆண்டுகளில் சென்னை துறைமுகம் வழியாக 20 லட்சம் கார்களை ஹுண்டாய் நிறுவனம் ஏற்றுமதி செய்துள்ளதாக சென்னைத் துறைமுக பொறுப்புக் கழகத் தலைவர் சிரில் சி.ஜார்ஜ் தெரிவித்தார்.

நீதி: இருபது இலட்சம் கார்களோடு மலிவான உழைப்பு, நீர், விவசாய நிலம், மலிவு விலை மின்சாரம், வரிச் சலுகை, தொழிற்சங்க உரிமை மறுப்பு அனைத்தும்தான் ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கின்றது. ஹுண்டாய்க்கு ஆரோக்கியம், தமிழகத்திற்கு நோய்!

———————————————————-

செய்தி: குஜராத் மாநிலம், கிர் சோமநாதர் மாவட்டத்தில் உள்ள உனா நகரில் பசுவின் தோலை உரித்ததாக தலித்துகள் தாக்கப்பட்டது தொடர்பான போலீசார் விசாரணையில், அந்தப் பசுக்களை சிங்கம் கொன்றதாகவும், பசுக்களின் உடலை அகற்றுவதற்காகவே தலித்துகள் வரவழைக்கப்பட்டதாகவும் தெரிய வந்துள்ளது.

நீதி: இது காவி குரங்களுக்கு தெரியவில்லை என்பதல்ல பிரச்சினை! குரங்குகளை ஊரை விட்டு இன்னும் நாம் துரத்தவில்லை என்பதே பிரச்சினை!

———————————————————-

செய்தி:  தில்லியில் நிகழாண்டு தொடக்கம் முதல் ஜூன் மாதம் வரை மொத்தம் 3,540 குழந்தைகள் காணாமல் போனதாகவும், அவர்களில் 2,259 பேர் மீட்கப்பட்டிருப்பதாகவும் மத்திய உள்துறை இணையமைச்சர் ஹன்ஸ்ராஜ் கங்காராம் ஆஹிர் தெரிவித்துள்ளார்.

நீதி: மோடியின் ஆட்சியில் வெறுமனே புள்ளிவிவரங்களில் இடம்பெறும் ஏழைகளுக்கு பாதுகாப்பு வழங்கினால் ‘வளர்ச்சிக்காக’ பாடுபடும் அதானிகளுக்கு பாதுகாப்பு வழங்குவது எப்படி?

———————————————————-

செய்தி: இந்திய கோடீஸ்வரர்கள் பட்டியலில் முன்னணியில் இருக்கும் ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானிக்கு கடந்த சில ஆண்டுகளாக ‛இசட்’ பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அவரது மனைவி நினா அம்பானிக்கு மத்திய அரசு ‛ஒய்’ பிரிவு பாதுகாப்பு வழங்கி உள்ளது.

நீதி: நிர்பயாக்கள் பயந்து வாழும் நாட்டில் நினாக்களின் பாதுகாப்பிற்காக மோடி அரசு எவ்வளவு பாடுபடுகிறது பாருங்கள்!

———————————————————-

செய்தி:  விவசாயக் கடன் தள்ளுபடி பெறுபவர்கள் பட்டியல் கூட்டுறவுத் துறை இணையதளத்தில் வெளியிடப்படும் என அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்துள்ளார்.

நீதி: கடனைப் பெறவோ, பெற்ற கடனை தள்ளுபடி பட்டியலில் இடம்பெறவோ கொடுக்க வேண்டிய கமிஷனை கட்சி ஆபீசில் கொடுத்து விடவும்.

———————————————————-

செய்தி: ஆப்பிள் நிறுவனத்தின் சென்ற வருட மொத்த வருமானம் 15% குறைந்திருந்தாலும் 2007-ம் ஆண்டு துவங்கிய அதன் ஐ போன் விற்பனை கடந்த வாரம் ஒரு பில்லியனை அதாவது நூறு கோடி எண்ணிக்கையைத் தொட்டுவிட்டது!

நீதி: தொடர்ந்து சாப்பிட்டால் ஆப்பிள் திகட்டும் என்பதால் வருவாய் குறைகிறது. ஆனாலும் அடுத்த ஐ ஃபோனில் புதிய அம்சங்கள் என்ன என்பதை தினுசு தினுசுகாக கிளப்பாமல் போய்விடுவார்களா என்ன?

———————————————————-

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க