Wednesday, December 11, 2024
முகப்புஉலகம்அமெரிக்காஅழகு - ஆடம்பரத்திற்காக வீணாகும் உணவுப் பொருட்கள் !

அழகு – ஆடம்பரத்திற்காக வீணாகும் உணவுப் பொருட்கள் !

-

அமெரிக்கர்கள் தாங்கள் உண்ணும் உணவில் பாதியை குப்பையில் கொட்டுவதாக தி கார்டியன் பத்திரிக்கையின் செய்தி அறிக்கையொன்று தெரிவிக்கிறது. அமெரிக்காவில் 160 பில்லியன் டாலர் மதிப்புள்ள உணவுப் பொருள்கள் ஒவ்வொரு ஆண்டும் வீணாகின்றன. உலகம் முழுவதும் மூன்றில் ஒரு பங்கு அதாவது 1.6 பில்லியன் டன் உணவுபொருள்கள் வீணாகின்றன.

ஃபிளோரிடா மாகாணத்தில் வீணாக்கப்படும் காய்கறிகள்
ஃபிளோரிடா மாகாணத்தில் வீணாக்கப்படும் காய்கறிகள்

விளைநிலங்களிலும், கிடங்குகளிலும், பொட்டலமிடுவதிலும், பகிர்ந்தளிப்பதிலும், பல் பொருள் அங்காடிகளிலும், உணவு நிறுவனங்களிலும், குளிர்சாதனப் பெட்டிகளிலும் உணவுப் பொருள்கள் வீணாகின்றன. இப்படி விவசாயிகளின் கரங்களுக்கும் நுகர்வோரின் உணவுக் கரண்டிக்கும் இடையில் உணவுப் பொருட்கள் வீணாவதை பண்ணையிலிருந்து கரண்டிக்கு(Farm-to-Fork) என்று அழைக்கின்றனர். ஆனால் இந்த இழப்பு முன்னேறிய நாடுகளில் குறைவு.

அதிநவீன இயந்திரங்கள், தொடர்ச்சியான பெரிய நிலங்கள், இலகுவான போக்குவரத்து காரணமாக உற்பத்தியின் போது பணக்கார நாடுகளில் உணவுப் பொருள்கள் குறைவாகவே வீணாகின்றன. துண்டு துண்டான நிலங்கள், நிலபிரபுத்துவ விவசாய முறை. மோசமான போக்குவரத்து என ஏழை நாடுகளில் உணவுப் பொருள்கள் கணிசமான அளவில் வீணாகின்றன. பிறகு அமெரிக்காவின் வீணாவது எப்படி?

இவர்கள் நுகர்வின் போது அதிகமாக உணவுப் பொருள்களை வீணடிக்கின்றன. எடுத்துக்காட்டாக, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் உணவுப் பொருள்கள் அவற்றின் நேர்த்தியான வடிவம், அளவு மற்றும் நிறம் ஆகியவற்றின் (cult of perfection) அடிப்படையில் நிராகரிக்கப்பட்டு வீணடிக்கப்படுகின்றன.

அமெரிக்க நியூயார்க் நகரத்தில் வீணடிக்கப்படும் காய்றிகள்
அமெரிக்க நியூயார்க் நகரத்தில் வீணடிக்கப்படும் காய்றிகள்

இங்கே சந்தைப்படுத்தப்பட்ட உணவுப் பொருள் இரண்டு கட்டங்களில் வீணாகின்றது. சான்றாக மெக்டனால்ட் போன்ற உணவு நிறுவனங்களில் பயன்படுத்தப்படாத உருளைக்கிழங்கு சிப்ஸ் குறிப்பிட்ட காலத்திற்க்கு பிறகு குப்பையில் தூக்கி எறியப்படுகிறது. இரண்டாவதாக தேவைக்கு அதிகமாக வாங்கப்பட்ட உணவுப் பொருள்கள் நுகர்வோர்களால் குப்பையில் வீசப்படுகின்றன.

வடக்கு கரோலினா மற்றும் புளோரிடாவிலிருந்து பசுமையான காய்கறிகள் மற்றும் பழங்களை விற்பனைக்காக அனுப்புகிறார்கள். “எங்களது வியாபாரத்தில் என்ன நடக்கிறது என்றால் ஒன்று காய்கறிகள் சரியான வடிவத்துடன் இருக்க வேண்டும் அல்லது நிராகரிக்கப்பட்டு விடும்” என்கிறார் ஒரு விவசாயி. அதாவது சாமுத்ரிகா இலட்சணத்தில் இல்லாத உணவுப் பொருள்கள் நுகர்வுக்கான சந்தை மதிப்பற்றவை என்கிறார்.

ஆனால் இந்த நிலைக்கு நுகர்வோர் தான் காரணம், நுகர்வோரின் விருப்பங்களை நிறைவேற்றுவது தான் எங்களது முதன்மையான கடமை என்று உணவு நிறுவனங்கள், மக்களின் மேல் மட்டும் பழியை தள்ளிவிடுகின்றன. உணவகங்களில் மக்கள் அப்படித்தான் சாப்பிடுகிறார்கள் என்பதை பழக்கப்படுத்தியது யார்? மேலும் பல்வேறு உணவுப் பொருட்களை அப்படி அழகுக்காக வெட்டிக் குறைத்து கழிப்பது யார்?

முதலாளித்துவம் உருவாக்கியிருக்கும் ‘அழகுணர்ச்சி’ இதுதான்!
முதலாளித்துவம் உருவாக்கியிருக்கும் ‘அழகுணர்ச்சி’ இதுதான்!

இந்த நிராகரிப்பு நுகர்வில் மட்டுமல்லாது அதன் உற்பத்தியிலும் இருக்கிறது. சாமுத்ரிகா இலட்சணம் இல்லாத காய்கறிகள் அறுவடை செய்யப்படாமல் விளைநிலத்திலே அழுக விடப்படுகின்றன. இந்த காய்கறிகளை அறுவடை செய்தாலும் வியாபாரிகள் வாங்குவதில்லை. அதனால் ஏற்படும் உற்பத்திச் செலவை குறைக்க இலட்சணம் குறைந்த காய்கறிகள் தியாகம் செய்யப்படுகின்றன. மனிதர்களிடம்தான் இத்தகைய அழகு குறித்த மாயையை உருவாக்கி முகப்பூச்சு-அரிதார பொருட்களை விற்கிறார்கள் என்றால் விவசாயத்திலும் அப்படித்தான் செய்கிறார்கள். ஆழ்கடலில் மீன் பிடிக்கும் கப்பல்கள் சிறிய வகை மீன்களை பிடித்து விட்டு கொட்டுகிறார்கள். இது கிடைத்தால் பல ஏழை நாடுகளில் ஓராண்டு மீன் குழம்பை மட்டுமே தினசரி வைக்கலாம்.

கிட்டத்தட்ட 25 விழுக்காடு உணவுப் பொருள்கள் ஒன்று அறுவடை செய்யப்படுவதில்லை அல்லது கால்நடைகளுக்கு உணவாகிறது என்கிறார் வேடி கிர்ச்சென்மன். கலிபோர்னியாவின் பேக்கர்ஸ்பீல்டில் விவசாயத்தில் ஈடுபடும் இவரது குடும்பத்தினர், 1930-களில் இருந்து உருளைகிழங்குகளையும் இதர காய்கறிகளையும் உற்பத்தி செய்கின்றனர்.

ஏழை நாடுகளை பொருத்தமட்டில் ஒரு நாளைக்குத் தேவைப்படும் குறைந்தபட்ச கலோரி அளவு உணவு கூட கிடைக்காத அவல நிலை தான் இருக்கிறது. உணவு இறுதிநிலைக் கணக்கின் (food Balance Sheet) அடிப்படையில் தனி நபர் நுகர்வில் அமெரிக்கா உள்ளிட்ட மேற்குல நாடுகள் முன் வரிசையில் உள்ளன.

தானிய உற்பத்தி ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வரும் நிலையில் அதை நுகர்வதற்கான வாய்ப்புகள் அற்ற நிலையை நோக்கி உலக மக்கள் தள்ளப்பட்டுக் வருகிறார்கள் என்பதை இது வெளிச்சம் போட்டு காட்டுகிறது. இந்தியாவின் உணவு உற்பத்தி 263 மில்லியன் டன் என்றாலும் இந்திய மக்களுக்கு தேவைப்படும் 230 மில்லியன் டன் உணவு கூட கிடைப்பதில்லை. உலக சராசரியை விட குறைவான கலோரிகள் உணவே இந்திய மக்களுக்கு கிடைப்பதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. அதிலும் வர்க்க ரீதியான பிரிவினைகளைக் கணக்கில் கொண்டால் இங்கே ஏழை மக்களின் நுகர்வு அகலபாதாளத்தில் இருக்கிறது.

அழகின்மை காரணமாக நிராகரிக்கப்பட்டு விளைந்த நிலத்திலே உரமாக மாறிய காய்கறிகள்
அழகின்மை காரணமாக நிராகரிக்கப்பட்டு விளைந்த நிலத்திலே உரமாக மாறிய காய்கறிகள்

அமெரிக்காவில் கிட்டத்தட்ட 33.3% ஆண்களும் 35.8% பெண்களும் அதீத நுகர்வின் காரணமாக உடல் பருமன் பிரச்சினைக் கொண்டவர்களாக இருப்பதாக ஒரு புள்ளி விவரம் தெரிவிக்கிறது. தனி நபர் வருமானம் குறைவாக உள்ள நாடுகளில் மக்கள் குறைவான அளவிலே நுகர்வதாகவும் அந்த புள்ளி விவரம் மேலும் கூறுகிறது.

மே மாத அறுவடைக் காலத்தில் 11 டன் ஸ்குவாஷ் காய்கறிகளை உற்பத்தி செய்த ஜான்சன், சலுகை விலைக்கு விற்க முயன்றாலும் வாங்குவதற்கு யாருமில்லை. அமெரிக்காவில் வறுமைக் கோட்டிற்கு கீழே பல இலட்சம் மக்கள் இருக்கையில் என்னால் ஏன் குறைவான விலைக்கு விற்பனை செய்ய முடியவில்லை? என்று கேட்கிறார் ஜான்சன்.

உணவுப் பொருட்களின் அங்கலட்சணம் மட்டுமல்ல உணவுப் பொருட்களின் தேவையையும் கூட விவசாயிகளோ நுகர்வோர்களோ தீர்மானிக்க முடியாது என்பதற்கு இது ஒரு நல்ல எடுத்துக்காட்டு.

போதிய ஊட்டச்சத்து கிடைக்காமல் 5 முதல் 10 சதவீத மக்கள் அமெரிக்காவிலும் இருக்கிறார்கள் என்கிறார் வாசிங்டனில் உள்ள உலகளாவிய உணவுப்பொருள் ஆராய்ச்சி கொள்கை நிறுவனத்தின்(IFPRI) நிர்வாக இயக்குனர் ஷேங்கேன் பேன். அமெரிக்க மக்களில் 11 விழுக்காட்டினரும் குழந்தைகளில் 22 விழுக்காட்டினரும் வறுமைக் கோட்டிற்கு கிழே வாழ்கின்றனர். அமெரிக்காவின் மக்கள் தொகை கணக்கெடுப்பு செயலகத்தின் அமெரிக்க சமூக மதிப்பாய்வு(ACS) அறிக்கையின் படி 27 விழுக்காடு கறுப்பின மக்களும் 38 விழுக்காடு கறுப்பினக் குழந்தைகளும் வறுமைக் கோட்டிற்கும் கீழே வாழ்வதாக அதே அறிக்கை கூறுகிறது. அழகு, பழக்கம் காரணமாக உணவுப் பொருட்களை வீணாக்கும் அமெரிக்க நாடு தனது சொந்த மக்களைக் கூட பசியோடவே வைத்திருக்கிறது.

அமெரிக்காவில் கிட்டத்தட்ட 33.3% ஆண்களும் 35.8% பெண்களும் அதீத நுகர்வின் காரணமாக உடல் பருமன் பிரச்சினைக் கொண்டவர்களாக இருப்பதாக ஒரு புள்ளி விவரம் தெரிவிக்கிறது
அமெரிக்காவில் கிட்டத்தட்ட 33.3% ஆண்களும் 35.8% பெண்களும் அதீத நுகர்வின் காரணமாக உடல் பருமன் பிரச்சினைக் கொண்டவர்களாக இருப்பதாக ஒரு புள்ளி விவரம் தெரிவிக்கிறது

ஒரு சிலக் கீரைப் பொதிகளை மேம்போக்காக ஆய்வு செய்து ஒரு மோசமான கீரையின் தலையை காண்பித்து 8,000 டாலர்கள் மதிப்புள்ள ஒரு வண்டிக் கீரைகளை கூட நிராகரித்து விடுவார்கள். இதை எதிர்த்து அமெரிக்க உணவு உறபத்தியாளர்கள், அழிந்துபட கூடிய விவசாய பொருள்களின் சட்டத்தை (PACA 1930) சில்லறை வணிகத்தின் ஜாம்பவான்களுக்கு எதிராக பயன்படுத்த முடியும். ஆனால் அதன் பிறகு அவர்களிடம் மீண்டும் உங்களிடம் வாங்க மாட்டார்கள் என்கிறார் கிழக்கு கடற்கரையை சேர்ந்த ஒரு நடுத்தர டிரக் நிறுவன உரிமையாளர்.

ஸேப்வே(SafeWay), வால்மார்ட் மற்றும் காஸ்ட்கோ(CostCo) உள்ளிட்ட அமெரிக்க சில்லறை வர்த்தக ஜாம்பவான்களை எதிர்த்து பெரிய உணவு உற்பத்தியாளர்களே PACA சட்டத்தை பயன்படுத்த மாட்டார்கள் என்று கூறுகிறார் குறையுள்ள உற்பத்தி (Imperfect Produce) என்ற குழுவின் இணை நிறுவனரான ரோன் கிளார்க். இந்நிறுவனத்தை தொடங்கும் முன் 20 ஆண்டுகள் விவசாயிகள் மற்றும் உணவு வங்கிகளிடம் தொடர்ந்து வேலை செய்து வந்துள்ளார்.

உணவுப் பொருள் வீணாவதை குறைப்பதென்பது ஒருபுறம் மக்களை பட்டினியில் இருந்து தடுப்பதற்கான போராட்டமாக இருக்கும் அதே நேரத்தில் மறுபுறம் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு பருவநிலை பாதிப்புகளை தடுக்க உதவும் என்று கூறுகிறார் போட்ஸ்டாம் தட்பவெப்ப தாக்கம் ஆராய்ச்சி நிறுவனத்தின்(PIK) அறிவியல் உதவியாளராக இருக்கும் சேரன் ஹிக். விவசாய உற்பத்தி உலகில் 20 விழுக்காடு பசுமை குடில் வாயுக்களை உற்பத்தி செய்வதாக அறிவியலாளர்கள் கூறுகின்றார்கள்.

ஆயினும் விவசாயிகளைப் பற்றியோ, மக்களின் தேவைகளைப் பற்றியோ அல்லது அறிவியலார்களின் கவலைகள், எச்சரிக்கைகள் மற்றும் அறிவுரைகள் பற்றியோ கிஞ்சித்தும் கவலைப்பட முதலாளிகள் தயாராக இல்லை. அவர்களுக்குத் தேவை இலாபம் மட்டுமே.

கருப்பு அழகின்மை, வெள்ளை அழகானது என்று விளம்பரப்படுத்துவது போல நேர்த்தியான வடிவத்தில் உணவுப் பொருள்களை வாடிக்கையாளர்களுக்கு பல பில்லியன் டாலர்களில் அறிமுகம் செய்கின்றன உணவு நிறுவனங்கள். இதற்கு பெயர் தான் Cult of Perfection என்கிறார்கள். நம் நாட்டில் அழகின்மை என்று சொல்லி பல்வேறு பெண்களை திருமணம் செய்யாமல் வதைக்கும் சமூகத்தைப் போல அமெரிக்காவில் அழகின்மை என்று சொல்லி பல்வேறு உணவுப் பொருட்களை விரயமாக்கி ஏழைகளை பட்டினி கிடக்க வைக்கிறார்கள். முதலாளித்துவம் உருவாக்கியிருக்கும் ‘அழகுணர்ச்சி’ இதுதான்!

ஒருபுறம் தேவைக்கு அதிகமான உணவு உற்பத்தி மறுபுறம் உணவில்லாமல் தவிக்கும் மக்கள், ஒருபுறம் உணவுப் பொருள்கள் வடிவங்கள் காரணமாக குப்பைக்கு போகிறது மறுபுறம் குப்பையில் உணவைத் தேடும் மக்கள் என இந்த சமூக பொருளாதார உற்பத்தியின் முதலாளித்துவ சுழற்சி முறை ஒட்டுமொத்தமாக மக்கள் விரோதமாகி விட்டதைத்தான் இது காட்டுகிறது.

– சுந்தரம்

மேலும் படிக்க
We need a Nutrition Mission
Reducing food waste could help mitigate climate change
Food Waste
Half of all US food produce is thrown away, new research suggests
Food waste
India must tackle food waste

  1. முதலீட்டுத்துவம்

    ஒருபுறம் தேவைக்கு அதிகமான உணவு உற்பத்தி
    ஒருபுறம் உணவுப் பொருள்கள் வடிவங்கள் காரணமாக குப்பைக்கு போகிறது

    சோசியலிசம்

    மறுபுறம் உணவில்லாமல் தவிக்கும் மக்கள்,
    மறுபுறம் குப்பையில் உணவைத் தேடும் மக்கள் என இந்த சமூக பொருளாதார உற்பத்தியின்

    பட்டினி போடும் சோசியலிசத்தை குறை கூறாமல் , வீணடிக்கும் கபாடிலாசத்தை மட்டும் குறை கூறுவது ஏனோ

  2. லே சிப்ஸ் கம்பெனில உருளை கிழங்க பிரிக்குரதுகுனே மிசின் வச்சு இருக்காங்க அதயும் நம்பாம ஒருத்தன் ஸ்கேல் வச்சு அளந்து பார்ப்பார் எல்லா சிப்ஸ்சும் ஒரெ ரவுண்டா இருக்கனும் இல்லனா வாடிக்கையாளர்களால் நிராகரிக்கபடுமாம் அது அவுங்க கம்பெனி பாலிஸி எனென்றால் என்னி 12 சிப்ஸ் 5 ரூபாய் இல்லயா இது பூட் பிராடக்ட் பன்ற எல்லா கம்பெனிகளும் பன்றதுதான், அனா அவங்க வேணாமுனு சொன்ன காய் கறிகள் உணவு பொருள்கள் ஏன் வேஸ்ட் பன்னனும்,நீங்க சொல்லுற எந்த ஏழை நாடும் அதை இறக்குமதி பன்னறது இல்லை அவஙளுக்கு அதுல ஆர்வம் இல்லை அதனால அதெல்லாம் வீனாகுது நம்ம ஊருலயே தரமான காய்கறிகளத்தான் விவசயிகிட்ட இருந்து வாங்குவாங்க கழிவானத உள்ளூர் சந்தைல வித்துப்பாங்க கூரு கட்டி அது மாறி அங்க விக்க வழி இல்லை ஏழைநாடுகளும் இறக்குமதி பன்ன மாட்டான் அப்பம் வீனாத்தான் போகும் இதுக்கு லேஸ்யும் மெக் டொனால்டயும் குறை சொல்ல முடியாது ,கொஞ்ச நாளுக்கு முன்னாடி கேள்வி பட்ட விசயம் கோழி லெக் பீஸ் அமெரிக்காரன் துண்ன மாட்டானாம் 50 காசுக்கு ஒரு லெக் வாங்கிகிட சொன்னானாம் இந்திய கவ்ர்மென்ட் வேனாமுனு சொல்லிருச்சு

  3. ஏன் வேனாமுனு சொல்லிருச்சு இந்திய கவர்மென்ட் ஏன்னா நம்ம மக்கள் கெல்த் முக்கியம் நமக்கு

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க