Wednesday, June 7, 2023
முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்தேவர்கண்ட நல்லூர் டாஸ்மாக் முற்றுகை ! பெண்கள் குழந்தைகள் கைது !

தேவர்கண்ட நல்லூர் டாஸ்மாக் முற்றுகை ! பெண்கள் குழந்தைகள் கைது !

-

தேவர்கண்ட நல்லூர் டாஸ்மாக் முற்றுகை! பெண்கள், குழந்தைகள் என 400 க்கும் மேற்பட்ட மக்கள் கைது!

devarkandanallur-tasmac-honoured-by-police-1திருவாரூர் நகரத்திற்கு அருகில் உள்ள தேவர்கண்ட நல்லூரில் உள்ள டாஸ்மாக், தேவர்கண்ட நல்லூர் மற்றும் பெருந்தரக்குடி ஊராட்சிகளில் உள்ள பல்வேறு கிராமங்களில் உள்ள மக்களின் வாழ்க்கையை அழித்துக் கொண்டிருந்தது. அதை விரட்டியடிக்க வேண்டும் என்று 200-க்கும் மேற்பட்ட இப்பகுதி மக்கள் கடந்த 01-07-2016 அன்று மக்கள் அதிகாரம் தோழர்கள் தலைமையில் திரண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இந்த டாஸ்மாக்கை மூடவேண்டும் என மனுகொடுத்து, மாவட்ட நிர்வாகத்திற்கு 15 நாட்கள் கெடுவிதித்து விட்டு வந்தனர். கெடுவிதிக்கப்பட்ட நாளுக்குள் டாஸ்மாக்கை மூடாததால் கொதிப்படைந்த மக்கள் மக்களதிகாரத் தோழர்களுடன் இணைந்து அடுத்தக்கட்ட போராட்டத்திற்கு திட்டமிட்டு ஜூலை 31 அன்று கடையை முற்றுகையிடலாம் முடிவுசெய்து விரிவான பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

டாஸ்மாக்கை மூடுவதற்கு மனு கொடுத்தபிறகு மக்களை கண்டகொள்ளாத அரசு அதிகாரிகள், முற்றுகை அறிவித்தபிறகு ‘உறக்கம்’ கலைத்து தங்களின் சதிதிட்டங்கள் ஒவ்வொன்றையும் அரங்கேற்றத் தொடங்கினர்.

devarkandanallur-tasmac-honoured-by-police-2வட்டாட்சியர் தொடர்ச்சியாக காலையும், மாலையும் தொலைபேசியின் மூலம் மக்கள் அதிகாரம் தோழர்களை தொடர்பு கொண்டு ‘போராட்டம் வேண்டாங்க, நாங்க அமைதி கமிட்டி போட்டிருக்கிறோம், பேச்சுவார்த்தைக்கு வாங்க” என்று நச்சரித்துக்கொண்டே இருந்தார். அதற்கு மக்கள் அதிகாரம் தோழர்கள் “பேச்சுவார்த்தை எல்லாம் ஒன்றும் அவசியமில்லை கடையை மூடுங்க நாங்க போராட்டத்தை நிறுத்திக் கொள்கிறோம்” என்று ஒரேயடியாய் மறுத்து விட்டனர். வட்டாட்சியரின் ‘அதிகாரம்’ எல்லாம் மக்கள் அதிகாரத் தோழர்களிடம் செல்லுபடியாகாததால் அடுத்த கட்ட நடவடிக்கையாக காவல் துறை துணை கண்காணிப்பாளர் மக்கள் அதிகாரம் தோழர்களிடம் கெஞ்சினார். கடைசி நேரம் வரை “முற்றுகை வேண்டாம் ஆர்ப்பாட்டம் வேண்டுமெனா நடத்திக் கொள்ளுங்கள்” என எவ்வளவோ தாஜா பண்ணியும் சிறிதளவு கூட எடுபடாமல் போகவே காவல் துறை தனது ‘கடமையை’ செவ்வென ஆற்றத் தொடங்கியது.

devarkandanallur-tasmac-honoured-by-police-3முற்றுகை அறிவித்த 31-07-2016 அன்று காலையில் 500-க்கும் மேற்பட்ட காக்கிகள் நிரம்பி வழிய, நேரிடையாக எஸ்.பி தலைமையில் டி.எஸ்.பி குழு, ஆய்வாளர் குழு என காவல் துறையினர் ஒட்டுமொத்த தமது பலத்தை முழுவதையும் திரட்டி தேவர்கண்ட நல்லூர் டாஸ்மாக்குக்கு உச்சகட்ட பாதுகாப்பை வழங்கியது. மோடிக்கு 5 அடுக்கு பாதுகாப்பு கொடுப்பது போல சாராயக்கடைக்கும் 3 அடுக்கு பாதுகாப்பு கொடுத்திருந்தது. காவல்துறையினரின் இந்த செயல் அப்பகுதி மக்களிடையே ஆத்திரத்தை மேலும் அதிகப்படுத்தியது. சாதாரண போராட்டத்தை காவல் துறையினர் அசாதாரணமான சூழ்நிலைக்கு தள்ளினர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

திட்டமிட்டபடி காலை 11 மணிக்கு பெண்களும், குழந்தைகளும் தோழர்களும் அப்பகுதியில் குவியக் குவிய காவல்துறையினர் ‘இவனுங்க இன்னக்கி என்ன செய்யப் போரானுங்கனே தெரியலையே” என்று கையைப்பிசைந்துக்கொண்டு ‘எல்லாவற்றிற்கும்’ தயாராக காத்து கொண்டிருந்தனர். இப்போராட்டத்தில் மக்கள் அதிகாரம் அமைப்புடன், திராவிட முன்னேற்றக் கழகம், விடுதலை சிறுத்தைகள் கட்சி, தேசிய காங்கிரஸ், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தினரும் தங்களை இணைத்துக்கொண்டனர்.

devarkandanallur-masses-against-tasmac-7முற்றுகைக்காண பேரணியை மக்கள் அதிகாரத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் காளியப்பன் தொடங்கி வைத்தார். அவர் பேசும் போது, “உலகிலேயே ஒரு சாராயக்கடையை பாதுகாக்க இவ்வளவு காவல்துறையினரை குவித்து வைத்திருக்கும் கேடுகெட்ட செயலை எந்த அரசும் செய்யாது. ஜெயலலிதா 500 கடையை மூடுவேன் என்று சொல்லிவிட்டு 81 கடைகளை மட்டும்தான் இதுவரை மூடியுள்ளார். தமிழக அரசாங்கம் மட்டும் அல்ல ஒட்டுமொத்த அ.தி.மு.க கட்சியும் இந்த சாராயக்கடை வருமானத்தில் தான் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறது, டாஸமாக்கை மூடினால் இக்கட்சியே காணாமல் போய்விடும். ஜெயலலிதா படிப்படியாக மூடுவேன் என்று சொல்வது எவ்வளவு பித்தலாட்டம். மக்கள் தான் திரண்டு மூடவேண்டும்” என்று முற்றுகைக்கு திரண்ட மக்களுக்கு உணர்வூட்டும் வகையில் உரையாற்றி முற்றுகையை தொடங்கிவைத்தார்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

மாற்றத்திற்கான மக்கள் களத்தின் அமைப்பாளர் தோழர் பு. வரதராஜன், தி.மு.க துணை ஒன்றிய செயலாளர் திரு. மதிவாணன், தி.மு.க. கிராம செயலாளர் திரு. கவியரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒன்றிய செயலாளர் திரு. சௌ. குணா, தே.மு.தி.க. ஒன்றிய செயலாளர் திரு. ரு. சண்முகம், தேசிய காங்கிரஸின் வட்டார செயலாளர் திரு. ஆபூர்வா ஆறுமுகம் ஆகியோரின் வாழ்த்துரைகளுடன் மக்கள் அதிகாரம் தோழர் சண்முக சுந்தரம் தலைமையில் முற்றுகைப் பேரணி தொடங்கி டாஸ்மாக் கடையை நோக்கி சென்றது. டாஸ்மாக் கடைக்கு 100 மீட்டர் அருகில் தடுப்பரண் அமைத்து, கயிறு கட்டி, இரண்டு பேருந்துகளை குறுக்கே நிறுத்தி மக்களை மறித்து பெண்களையும், குழந்தைகளையும், தோழர்களையும் வலுக்கட்டாயமாக இழுத்து கைது செய்து அருகில் உள்ள மண்டபத்தில் அடைத்தது.

இந்த சாராயக்கடைக்கு பாதுகாப்பு கொடுக்க காவல் துறையின் உயர் மட்ட அதிகாரிகள் முதல் கீழ்நிலை காவலர்கள் வரை இவ்வளவு சிரத்தையுடன் பணிபுரிவதைப் பார்த்த பெண்கள் காறித் துப்பினர். இந்த அரசு டாஸ்மாக்குக்கு பாதுகாப்பு கொடுப்பதாக நினைத்துக் கொண்டு மக்களிடையே அம்பலப்பட்டுப்போய் அசிங்கப்பட்டு நின்றது. இப்போராட்டத்தில் 120-க்கும் மேற்பட்ட பெண்கள், 60-க்கும் மேற்பட்டக் குழந்தைகள் என கிட்டத்தட்ட 400-க்கும் மேற்பட்ட மக்கள் வீரத்துடன் கலந்து கொண்டு கைதாகினர். முற்றுகை நடந்த அன்று கடை மூடப்பட்டிருந்தது, “இதற்குப் பிறகும் இந்தக் கடையை திறக்க அரசு நினைத்தால் போராட்டத்தை அறிவித்து நடத்தக்கூடாது, எந்த அறிவிப்பும் இன்றி நாங்களே கடையை மூடிவிடுவோம்” என அடுத்த கட்ட வேலையையும் திட்டமிட்டு மக்கள் சென்றனர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

இப்போராட்டம் டாஸ்மாக்குக்கு எதிராக மட்டுமல்ல தங்களின் அனைத்து வாழ்வாதாரங்களையும் இழந்துவிட்டு, எந்த உரிமையும் இன்றி வாழ்வின் விளிம்புக்கே தள்ளப்பட்ட மக்களின் சுதந்திரத்துக்கான போராட்டமாகப் பார்க்க முடிந்தது. இப்போராட்டம் முடிந்தவுடன் நிறைய பெண்கள் தங்களை மக்கள் அதிகார அமைப்பில் இணைத்துக்கொள்ள வேண்டும் என்றும், மக்கள் அதிகாராம் நடத்தும் அனைத்து போராட்டங்களுக்கும் தங்களை அழைத்துச்செல்லுமாறு கூறியது, மக்கள் முன்னால் இருக்கும் ஒரே நம்பிக்கை மக்கள் அதிகாரம் மட்டும் தான் என்பதை காணமுடிந்தது.

தகவல்
மக்கள் அதிகாரம்,
திருவாரூர்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க