Wednesday, June 7, 2023
முகப்புகட்சிகள்அ.தி.மு.கதிருச்சியில் திருட்டு டாஸ்மாக் - ம.க.இ.க நேரடி நடவடிக்கை

திருச்சியில் திருட்டு டாஸ்மாக் – ம.க.இ.க நேரடி நடவடிக்கை

-

மிழகத்தில் மக்கள் அதிகாரம் அமைப்பினரும், புரட்சிகர இயக்கங்களும் மூடு டாஸ்மாக்கை என்று மதுவுக்கு எதிராக மக்களை அணிதிரட்டி தொடர்ந்து போராடினர். இதை தொடர்ந்து தமிழகத் தேர்தல் களத்தில் மது விலக்கு கொள்கையை அனைத்து கட்சிகளும் கையில் எடுத்தனர். இதனால் வேண்டாவெறுப்பாக தாமும் மதுவிலக்கு பற்றி பேசியே தீர வேண்டும் என்ற நெருக்கடியால் படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என அறிவித்தார். பல்வேறு பித்தலாட்டங்களுக்கு பின் வெற்றியும் பெற்று விட்டார் அ.தி.மு.க-வின் சர்வாதிகாரி ஜெயா.

மீண்டும் ஆட்சியில் அமர்ந்தவுடன் கண்துடைப்புக்காக ‘முதற்கட்டமாக 500 கடைகள் மூடப்படும் எனவும், விற்பனை 2 மணி நேரம் குறைக்கப்படும்’ எனவும் அறிவித்தார். இதை ஏதோ மாபெரும் சாதனை என்று அ.தி.மு.க-வின் அல்லக்கைகள் தம்பட்டம் அடித்து கொண்டாடினர். நேரம் குறைப்பு என்பதோ, சில கடைகளை மூடுவது என்பதோ அரசியல் ரவுடிகளும், காவல் துறையினரும் கள்ளத்தனமாக வருவாய் ஈட்டவே உதவும் என்பதை அன்றே நாம் வினவு மூலமாக அம்பலப்படுத்தினோம். சில பத்திரிக்கைகளிலும் இவை செய்திகளாக வெளிவந்தன.

இந்த உண்மையை நிரூபிக்கும் விதமானதுதான் இந்த சம்பவம். திருச்சி – உறையூர் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளில் காலை 6 மணி முதல் 12 மணி வரை அருகில் உள்ள பாரில் வைத்து டாஸ்மாக் சரக்குகளை விற்பனை செய்து வருவதாக காவல் துறைக்கு புகார் தெரிவித்தும் மது விற்கும் அ.தி.மு.க ரவுடிகளிடமே லஞ்சம் வாங்கிக்கொண்டு நடவடிக்கை எடுக்காமல் இருந்து வந்தனர்.

அ.தி.மு.க ரவுடிகளின் டாஸ்மாக் சரக்கு விற்பனை

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

இதனை அறிந்த மக்கள் கலை இலக்கியக் கழகத்தினர் 01-08-2016 அன்று காலை 10 மணியளவில் பார் முன் கள்ளத்தனமாக குப்பை தொட்டிக்குள் மது பாட்டில்களை மூட்டை மூட்டையாக வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தவர்களை புகைப்படம் எடுத்து பிடிக்க முயன்றபோது அவர்கள் தப்பி ஓடினர். மது பாட்டில்களை கைப்பற்றிய தோழர்கள் உடனடியாக கடைமுன் திரண்டு ஆர்ப்பாட்டதில் ஈடுபட்டனர். அப்போது அ.தி.மு.க அரசின் பித்தலாட்டத்தையும், காவல் துறையின் களவாணித் தனத்தையும் முழக்கமாக எழுப்பி அம்பலப்படுத்தினர். உடனே அங்கிருந்த மக்களை கலைந்து போக சொல்லி காவல் துறையினர் விரட்டினர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

trichy-pala-flash-demo-infront-of-tasmac-shop-7இதுகுறித்து காவல்துறை அதிகாரியிடம் பத்திரிகையாளர்கள் கேட்டபோது, “ம.க.இ.க-வினர் அவர்களே சரக்குகளை கொண்டுவந்து பொய்யான பிரச்சாரம் செய்கின்றனர்” என்று கூறினார். ஆனால், “அது பொய் என்பதையும், காவல் துறையின் ஆதரவோடுதான் இது நடைபெறுகிறது” என்ற உண்மையையும் மக்கள் ஆதங்கத்தோடு வெளிப்படுத்தினர். இந்த சம்பவத்தில் காவல்துறையினர் மக்கள் மத்தியில் அம்பலப்பட்டுப் போனதால் தோழர்களை எதுவும் செய்ய முடியாமல் திகைத்தனர்.

தோழர்கள் அங்கு கூடியிருந்த மக்களிடையே,  “இனி இதற்கு ஒரே தீர்வு அனைவரும் அமைப்பாக ஒன்றுபட வேண்டும், மக்களே அதிகாரத்தை கையிலெடுத்து டாஸ்மாக் கடைகளை அடித்து நொறுக்க வேண்டும்” என முழக்கமிட்டு மது பாட்டில்களை மக்கள் முன் தரையில் ஊற்றி அழித்தனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே அமைப்பாக ஒன்று சேர்ந்தால் டாஸ்மாக்கை அழிக்க முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியது.

இது குறித்து பத்திரிக்கைகளுக்கு பேட்டி அளித்த ம.க.இ.க மாவட்ட செயலர் தோழர் ஜீவா, “இது ஏதோ திருச்சி- உறையூரில் மட்டும் தான் என்று இல்லை. தமிழகத்தின் அனைத்து இடங்களிலும் இதே போன்று தான் அரசியல் ரவுடிகளும், காவல் துறையும் சேர்ந்து கள்ளத்தனமாக டாஸ்மாக் சரக்குகளை விற்பனை செய்கின்றனர். படிப்படியாக மதுவிலக்கு என்று ஜெயலலிதா கூறுவது போங்காட்டம், மக்களிடையே அம்பலப்பட்டு நிற்கிறது ஜெயா அரசு. மது விற்பனை மூலம் மக்களை கொன்று கல்லாக் கட்டும் இவர்களுக்கு மக்கள் சரியான பாடம் புகட்ட வேண்டும்” என போர்குணத்துடன் பேசினார்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

இப்போராட்டத்தில் மக்கள் அதிகாரத்தின் மாநில ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர் தோழர் தர்மராஜ்  கலந்து கொண்டார்.

செய்தி:
மக்கள் கலை இலக்கியக் கழகம், திருச்சி
.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க