Tuesday, January 26, 2021
முகப்பு போலி ஜனநாயகம் நீதிமன்றம் நீதிபதிகள் ஆண்டைகளா ? - ஆகஸ்டு 12 திருச்சியில் மக்கள் அதிகாரம் பொதுக்கூட்டம்

நீதிபதிகள் ஆண்டைகளா ? – ஆகஸ்டு 12 திருச்சியில் மக்கள் அதிகாரம் பொதுக்கூட்டம்

-

நீதிபதிகள் ஆண்டைகளா ? அவர்களின் அடிமைகளா நாம்?

ன்புடையீர்….!

நீதிபதிகள் தங்கள் மாண்பும் கண்ணியமும் குறித்து ரொம்பவும் கொதித்து போயிருக்கிறார்கள்! மக்களுக்குப் பயம் விட்டுப் போனால் போலீசு அதிகாரம் பண்ண முடியாது, அதைப் போல நீதிபதிகள் மீதான மதிப்பும் மரியாதையும் இல்லாமல் போனால் மக்கள் நம்பிக்கை இழந்து விடுவார்கள் என்று இவர்கள் பதட்டமடைந்து கிடக்கிறார்கள்.

நீதிபதிகளும் சாதாரண மனிதர்கள் தாம், ஒரு சார்பு, பாராபட்சம், சீரழிவுகள் இல்லாதவர்கள் அல்ல, இந்த உண்மை நீதிமன்றங்களிலேயே தொழில் புரியும் வழக்கறிஞர்களுக்குத் தெரியும். ஆகவேதான் நீதிமன்றங்களின் மாண்பையும் கண்ணியத்தையும் பற்றிப் பேசுவதற்கு, மதிப்பு, மரியாதையும் கோருவதற்கு நீதிபதிகளுக்கு தகுதி இருக்கிறதா என்று வழக்கறிஞர்கள் கேட்கிறார்கள்.

இத்தகைய வழக்கறிஞர்களை அடக்குவதற்கு தான் புதிய சட்டத்திருத்தத்தை சென்னை உயர்நீதிமன்றம் கொண்டு வந்துள்ளது. இதன்படி லஞ்சம் வாங்கும் நீதிபதி மீது புகார் கொடுத்தால், நீதிமன்றத்தில் சத்தமாக வாதிட்டால் அந்த வழக்கறிஞரை விசாரணையின்றி தொழிலிருந்தே விரட்டி விடலாம். ஆங்கிலேயன் காலத்தில் கூட இப்படிபட்ட கருப்பு சட்டம் கிடையாது. இந்த அநீதியை எதிர்த்து இருமாதமாக வழக்கறிஞர்கள் வருமானம் இழந்து போராடி வருகிறார்கள். டெல்லி பார் கவுன்சில் முறைகேடாக 126 வழக்கறிஞர்களை சஸ்பெண்ட் செய்து மிரட்டுகிறது. எந்த மாநிலத்திலும் இந்த சட்டம் இல்லை. எந்த மாநில வழக்கறிஞர்கள் மீதும் இந்த சஸ்பெண்ட் இல்லை.

நீதிமன்றங்களின் நெடிதுயர்ந்த பிரமாண்டக் கட்டிடங்கள், பரிவாரங்களோடு டவாலிகள் மணியடித்துக் கூவிக்கொண்டு முன் செல்ல கருப்பு அங்கிக்குள் புகுந்து கொண்டு நடந்துவரும் காலனிய காலத்து பந்தா, குண்டூசி விழும் சத்தம் கூடக் கேட்காதவாறு மிரட்டும் அமைதி இவை எதுவும் நீதிபதிகளுக்கு மிதிப்பும் மரியாதையும் கொடுத்து விடமாட்டா. சட்ட நியாயப்படியான நீதி, நேர்மை வழுவாத, நடுவு நிலையான, தீர்ப்புகளும் நன்னடத்தைகளும் தாம் சமூகத்தில் அவர்களுக்கு மதிப்பும் மரியாதையும் ஏற்படுத்தும்.

நீதிபதிகளின் தீர்ப்புகளும் நடத்தைகளும் அப்படி இருக்கின்றனவா? இல்லையே! ஏழை எளிய மக்கள், ஒடுக்கப்பட்டோர் என்றால் குற்றம் சாட்டபட்டவர்களைத் துரத்தித் துரத்தி, தூக்குமேடை வரை விரட்டுகிறார்கள். அவர்கள் உயிரை மயிருக்கும் மதிப்பதில்லை. அதுவே, மேட்டுக்குடி ஆதிக்க சாதியினர், ஆட்சியாளர், அதிகார வர்க்கத்தினர் மீதான வழக்குகள் என்றால் குப்பையைக் கூட கிளறி மோர்ந்து பார்க்கிறார்கள். தாழ்த்தப்பட்டவர்கள் உயிரோடு கொளுத்தப்பட்ட கீழ்வெண்மணியிருந்து. மேலவளவில் வெட்டிவீசப்பட்ட தாழ்த்தப்பட்டோர், ஓமலூர் கோகுல்ராஜ், உடுமலை சங்கர் கொலை வழக்குகளில் நீதிபதிகளின் இறுகிய முகத்தைத்தானே காண்கிறோம்.

சுவாதி கொல்லப்பட்ட போது நீதிபதிகள் கோபப்பட்டார்கள் சரிதான். கும்பகோணத்தில் 93 பச்சிளங் குழந்தைகள் தீக்கிரையாக்கப்பட்டார்கள்; முகலிவாக்கத்தில் 61 தொழிலாளர்கள் உயிரோடு புதைக்கப்பட்டார்கள்; அவற்றுக்காக அரசுக் குற்றவாளிகள் யாரேனும் தண்டிக்கப்பட்டார்களா? அவையும் உயிர்கள்தாமே. அவர்களுக்காக நீதிபதிகளிடம் கோபம் கொப்பளிக்கவில்லையே! அதிகாரவர்க்கப் பாசம்தானே பீறிட்டது!

வரதராசப் பெருமாள் கோவில் நிர்வாகி சங்கரராமனை வெட்டிக் கொன்ற காஞ்சி சங்கராச்சாரி வழக்கு முதல் பிளாட்பாரத்தில் தூங்கிய சிறுவனை குடிபோதையில் காரை ஏற்றிக்கொன்ற சல்மான்கான் வழக்கு வரை மேட்டுக்குடி ஆதிக்க சாதிக்காரர்கள் பக்கம்தானே நீதிபதிகள் நின்றார்கள். ”எங்க அப்பாவை வரதராசப் பெருமாளே வந்து வெட்டிக் கொன்றாரா; இல்லை அவர் தன்னைத்தானே வெட்டிக் கொண்டாரா?” என்று அவரது மகன் கேட்ட கேள்விக்கு நீதிபதிகள் எவராவது பதில் சொன்னார்களா?

தான் நிச்சயம் தண்டிக்கப்படிவோம் என்று பயப்படும் குற்றவாளிகள் தாம் வழக்கைப் பல ஆண்டுகள் இழுத்தடிப்பார்கள்; இது பாமரனும் அறிந்த உண்மை. ஊழல்-குற்றவாளி ஜெயலலிதாவின் இவ்வாறான தகிடுதித்தங்களுக்கு உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகள் பலரும் உடந்தையாக இருக்கிறார்கள். சொத்துக் குவிப்பு வழக்கை 18 ஆண்டுகள் இழுத்தடித்து, ஜெயலலிதாவின் அதிகார ஆட்சியும்-உல்லாச வாழ்வும் தொடர நீதிபதிகளும் காரணமில்லையா? தண்டிக்கப்பட்டவுடன் அவரது மேல் முறையீட்டு வழக்கை நீதி, சட்ட மரபுகளுக்கு மாறாக மூன்றே மாதங்களில் விசாரித்து முடிக்கும் படி நெருக்கும் உத்திரவு போட்டதோடு, கட்டுப்பாடற்ற பிணையிலும் விடுவித்தார், உச்சநீதி மன்றத் தலைமை நீதிபதி தத்து. இறுதியில் நீதிபதி குமாரசாமி எங்கள் குலசாமி என்று ஜெயலலிதா கும்பலின் அடிமைகள் கும்பிடுமாறு கேவலமான தீர்ப்பு வழங்கினார்.

ஜெயலலிதாவின் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு சிறையிடப்பட்டதும், வழக்கை விரைந்து நடத்தி அவரை விடுவிப்பதில் அதீத அக்கறை காட்டிய உச்சநீதிமன்றம் , மேல் முறையீடு மூலம் மீண்டும் அவர் சிறைப்படக் கூடாதென்று இப்போது வழக்கை இழுத்தடிக்கிறது. ஜெயலலிதாவைத் தண்டிப்பதற்கான ஆதாரங்கள் வலுவாக இருப்பதால், அடாவடியாக ஏதாவது வியாக்கியானம் செய்து குற்றவாளியை விடுவிப்பது அல்லது வழக்கை மீண்டும் கர்நாடகா உயர்நீதி மன்றத்துக்கே மறுபரிசீலனைக்கு அனுப்பி இழுத்தடிப்பது; இப்படி ஒரு தனி மனிதரைக் காக்கும் முயற்சியில் நீதித்துறையே நிர்வாணமாகி நிற்கும்போது, தமிழக வழக்கறிஞர்களை ஒடுக்குவதன் மூலம் அதன் மாண்பும். கண்ணியமும், மதிப்பும் மரியாதையும் காக்கப்படுமா?

கிரானைட் கொள்ளையர் பழனிச்சாமி, தாது மணல் கொள்ளையர் வைகுண்டராஜன், ஆற்று மணல் கொள்ளையர் ஆறுமுகசாமி, படிக்காசு ஆகிய இயற்கைவளச் சூறையாடிகளையும் ஏரி, குளம், கண்மாய், அரசுப் புறம் போக்கு நிலங்களை ஆக்கிரமித்துள்ள கல்விக் கொள்ளையர்களையும் பல பத்தாண்டுகளாக நீதிபதிகள் பாதுகாத்து வருகிறார்கள்.

மதுரை கிரானைட் கொள்ளையர் பழனிச்சாமி மீதான வழக்குகளைத் தள்ளுபடி செய்த மேலூர் நீதிபதி மகேந்திர பூபதி, உயர்நீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்புகளின் வழிகாட்டுதல்கள் அடிப்படையில்தான் அப்படிச் செய்ததாகச் சொல்லவில்லையா? இதற்கென்ன, கறுப்பு அங்கிக்குள் ஒளிந்து கொண்டுள்ள குள்ளநரிகளின் பதில்?

கிரானைட் கொள்ளை மீது சகாயம் குழு விசாரணையத் தொடங்கியபோது, அக்கொள்ளையர்களுக்கு ஆதரவாக உயர்நீதிமன்ற நீதிபதிகள் வழங்கிய தீர்ப்புகளையும் விசாரிக்க வேண்டும் என்று ஓய்வுப்பெற்ற நீதிபதி சந்துரு வெளிப்படையாகவே எழுதினார். இந்தக் குற்றச்சாட்டுக்கு நீதிபதிகளின் பதில் என்ன?

பதவி உயர்வும், ஓய்வு பெற்ற பிறகு ஆதாயம் தரும் பதவிகளைக் குறிவைத்தும் பெரும்பாலும் ஆட்சியாளருக்கு சாதகமான தீர்ப்புகளையே வழங்குகிறார்கள். ஆட்சியாளர்களுக்கும் போலீசுக்கும் எதிரான வழக்குகளில் நீதி, நியாயம் கிடைப்பதற்காக சி.பி.ஐ போன்ற விசாரனை கோரினால் பெரும்பாலும் தள்ளுபடி செய்துவிடுகிறார்கள்.

மக்கள் நலனுக்காகப் பொதுநல வழக்குகள் போட்டால் மதிப்பதே கிடையாது. ஆயிரக்கணக்கான வழக்குகளில் நீதிமன்ற உத்திரவுகளை அரசும் அதன் அதிகாரிகளும் மதிப்பதே இல்லை. அரசிடம் மீண்டும் மீண்டும் விளக்கம் கேட்டு மீண்டும் மீண்டும் தள்ளிப்போடுவது; நீதிமன்றங்கள் அவர்களை எச்சரிப்பதும், இறுதி எச்சரிக்கை விடுவதும்தானே நெடுந்தொடராக நீடிக்கின்றன.

இயற்கை வளங்களையும் பொதுச் சொத்துக்களையும் காப்பது, ஆணவக் கொலைகளையும் தாழ்தப்பட்டவர்களுக்கு எதிரான வன்கொடுமைகளைத் தடுப்பது, பெண்கள் மீதான பாலியல் தாக்குதல்களைத் தடுப்பது இவை எதையும் பொது நலன்களாகவோ தமது கடமைகளாகவோ நீதிபதிகள் கருதுவதேயில்லை.

இவை குறித்தெல்லாம் எதிர்க் கட்சிகளும் மக்களும் ஊடகங்களும் பேசிக் கொண்டிருக்காமல் அவர்களின் வாயடைப்பதற்கு என்ன வழி? ஆய்வு, விசாரணை என்று மக்கள் அவற்றை மறக்கும் வரை அரசும் நீதிபதிகளும் இழுத்தடித்து, அதன் மீது ஏறி உட்கார்ந்து கொள்கிறார்கள். இத்தகைய விசாரனைகளால் குற்றங்கள் தடுக்கப்பட்டனவா? குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டார்களா?

மக்கள் ஆத்திரம் கொண்டு கொந்தளிக்கும் அளவுக்கு எரியும் பிரச்சனைகளில் மக்கள் நலனில் அக்கறையுள்ளவர்களைப் போல நடித்து, அவர்கள் கவனத்தைத் திசை திருப்பும் வகையில் சிலவற்றை “தானே முன்வந்து விசாரணை”க்குத் தெரிந்தெடுத்துக் கொள்கிறார்கள். குடிதண்ணீர் கேட்டு மக்கள் காலிக்குடத்தோடு ஊருக்கு ஊரு சாலை மறியல் செய்கிறார்கள்; சட்டம் ஒழங்கு பிரச்சனை என்று போலீசை ஏவி, அடி த்து நொறுக்கிறார்கள்.

செங்கத்தில் ஆட்டோ ஓட்டுனரின் குடும்பமே வெறித்தனமாகத் தாக்கப்பட்டது; திருட்டுக் குற்றம் சுமத்தி மூன்று வயதுக் குழந்தையோடு நரிக்குறவர் குடும்பமே நாகர்கோவிலில் சிறையிடப்பட்டது. இது போல் நூற்றக்கணக்கில் அக்கிரமங்கள் நடக்கின்றன. எல்லாவற்றுக்கும் காரணமான போலீசு மீது நீதிபதிகள் தாமே முன்வந்து விசாரணைக்கு எடுக்கவில்லை.

கத்தை கத்தையாகக் கறுப்புப் பணம் கைப்பற்றப்பட்ட தனியார் மருத்துவக் கல்லூரிகளின் நாளும் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் தனியார் பொறியல் கல்லூரிகளின் முதலாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

அரசு எந்திரத்தின் எல்லா உறுப்புகளிடத்தும் முறையிட்டும் செவி சாய்க்காது விரட்டப்பட்ட எஸ்.வி.எஸ் மருத்துவக் கல்லூரி மாணவிகள் மூன்று பேர் படுகொலை செய்யப்பட்டார்கள், நாளும் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளும் படுகொலைகளும் நடக்கின்றன. இப்படி மக்களை அப்பட்டமாக, நேரடியாகப் பாதிக்கும் எந்தப் பிரச்சினையையும் தாமாக விசாரணைக்கு எடுப்பதில்லை. அப்புறம் எதற்கு நீதிபதிகள் தாமே முன்வந்து விசாரணை செய்யும் அதிகாரம்?

மக்களிடம் ஓட்டுவாங்கிப் பதவிக்கு வரும் ஆட்சியாளர்களுக்கு இல்லாத அதிகாரம், அவர்கள் போடும் உத்தரவுகள், சட்டங்களையும் செல்லாதென்று நிராகரிக்கும் அதிகாரம், யாரையும் நீதிமன்ற அவமதிப்புக் குற்றஞ்சாட்டித் தண்டிக்கும் அதிகாரம் நீதிபதிகளுக்குண்டு.

நாடாளுமன்றத்தில் இரண்டில் ஒரு பங்கினர் ஓட்டுப்போட்டாலே பிரதமரையும் நீக்கிவிடலாம். இதுவரை பல முதல்வர்கள், பிரதமர்கள் அப்படிப் பதவியிழந்திருக்கிறார்கள். ஆனால், நீதிபதிகள் கொலையோ, பாலியல் அத்துமீறல்களோ ஊழலோ செய்தாலும் மூன்றில் இரண்டு பங்கினர் ஓட்டுப் போட்டால்தான் நீதிபதிகளைப் பதவி நீக்கம் செய்ய முடியும்! மக்களோ அவர்களின் பிரதிநிதிகளோ நீதிபதிகளை நியமித்துக் கொள்ள முடியாது. நீதிபதிகளே நீதிபதிகளை நியமித்துக் கொள்ளலாம். இது என்ன ஜனநாயகம்?

மேலே கண்ட சான்றுகளைப் பரிசீலியுங்கள்! கடவுளைப் பற்றிய பிரம்ம சூத்திரம் தனக்கு மட்டுமே என்று சொல்லும் பார்ப்பனப் பூசாரிகளைப் போல் இந்திய சட்டத்தை வைத்துக் கொண்டு, அதற்கு வியாக்கியானம் செய்யும் ஏகபோகத் தகுதி, அதிகாரம் தமக்கு மட்டுமே உண்டென்று ஒட்டு மொத்த சமூகத்தின் மீது ஏறி மிதிக்கிறார்கள்.

மருத்துவருக்கு நோயாளி இன்னுமொரு நோயாளிதான்! சாதாரண மக்களிடமிருந்து அந்நியப்பட்டு அடுக்கு மாடி வீடுகளில் மேட்டுக் குடியோடு மட்டும் போலீசு புடை சூழ வாழும் நீதிபதிகள் சமூகப் பிரச்சினைகளைப் புரிந்துகொள்ள மாட்டார்கள்.

ஏழை எளிய மக்களின் துயரங்கள், பாலியல் வன்கொடுமைக்குப் பலியான பெண்களின் வலியை அவர்களால் உணர முடியாது.

ஆகவே, நாட்டின், அரசியல், சமூக, பொருளாதார, கலாச்சாரச் சிக்கல்கள் எல்லாவற்றையும் அலசி ஆராய்ந்து முடிவு சொல்லும் அதிகார கொண்ட நீதிபதிகள் என்ன எல்லாத் துறைகளும் கற்று தேர்ந்த வல்லுநர்களா? மேதைகளா? அதற்கான தகுதி கொண்டவர்களா? சிந்தியுங்கள்.

நீதிபதிகள் யாரும் ஆண்டைகளும் அல்ல!
மக்கள் யாரும் அவர்களின் அடிமைகளும் அல்ல!

பொதுக்கூட்டம் கலைநிகழ்ச்சி

திருச்சிக்கு வாரீர்!

நாள்: 12.08.2016 வெள்ளி மாலை 5 மணி
இடம்: பஞ்சவர்ணசாமி கோவில் தெரு,
உறையூர், திருச்சி

—-
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு
தொடர்புக்கு : 99623 66321

    • இடமாற்ற திருத்தம் செய்துவிட்டோம். தகவலுக்கு நன்றி! நீதிபதிகள் யாரும் ஆண்டைகளும் அல்ல! மக்கள் யாரும் அவர்களின் அடிமைகளும் அல்ல! பொதுக்கூட்டம் கலைநிகழ்ச்சி திருச்சிக்கு வாரீர்! நாள்: 12.08.2016 வெள்ளி மாலை 5 மணி இடம்: பஞ்சவர்ணசாமி கோவில் தெரு, உறையூர், திருச்சி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க