Friday, December 9, 2022
முகப்புகளச்செய்திகள்மக்கள் அதிகாரம்தோழர் மணிவண்ணனுக்கு சிவப்பஞ்சலி !

தோழர் மணிவண்ணனுக்கு சிவப்பஞ்சலி !

-

மக்கள் கலை இலக்கியக் கழக்தின் துவக்க காலத்திலிருந்து செயல்பட்டு வந்த தோழர் மணிவண்ணன் திங்கள் 22.08.2016 அன்று அதிகாலையில் காலமானார்.

தோழர் மணிவண்ணன்
தோழர் மணிவண்ணன்

ம.க.இ.க, கோவைக் கிளை துவங்கப்பட்ட 1983-84-ம் ஆண்டிலிருந்து துடிப்புடன் செயல்பட்ட தோழர், சென்ற ஆண்டு 2015 வரை அக்கிளையின் செயலராக பணியாற்றினார். சென்ற ஆண்டிலிருந்து ம.க.இ.க தோழர் மணிவண்ணன், மக்கள் அதிகாரத்தின் கோவை மண்டல ஒருங்கிணைப்பாளராக பணியாற்றி வந்தார்.

65 வயதான அவருக்கு சுமார் எட்டு மாதங்களுக்கு முன்னர் சர்க்கரை நோய் இருப்பது தெரிய வந்தது. பிறகு நுரையீரலில் ஒரு கட்டி அறியப்பட்டு அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. இந்நோய்களெல்லாம் கட்டுக்குள் வந்த போது முழங்காலில் வலி வந்து பிறகு அதை சற்று தாமதமாக டி.பி என்று மருத்துவர்கள் கண்டு பிடித்தனர். அதற்கு மருத்துவம் பார்த்த போது திடீரென்று அவரது சிறுநீரகங்கள் செயலிழந்து போனதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதை முன்னதாகவே மருத்துவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.

இம்மாதங்களில் அவரது மருத்துவத்திற்காக தோழர்கள்  பெரு முயற்சி எடுத்தனர். சென்னையில் சிறப்பு மருத்துவர்களை சந்திப்பதற்காகவெல்லாம் அவர் வந்து சென்றார். இந்நிலையில்தான் அவர் நோய்வாய்ப்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மரிப்பதற்கு முந்தைய கணங்கள் வரை சுயநினைவோடு இருந்தார். இறுதியில் அவருக்கு டயாலிசிஸ் நடக்கும் போது மரணமடைந்தார்.

இறப்பதற்கு முந்தைய நாட்களில் சிகிச்சைக்காக அவர் சென்னை வந்த போது அவரை சந்தித்தோம்.  முழங்காலில் வலி என்பதைத் தாண்டி அவருக்கு வேறு குறைகள் இல்லை. மருத்துவரிடம் பேசும் போது தற்செயலாக சில அறிகுறிகளை சொன்னார். ஏன் முதலிலேயே சொல்லவில்லை என்று தோழர்கள் கேட்ட போது அவரிடம் விடையில்லை. மருத்துவம் குறித்து என்ன மாதிரி நடைமுறைகளை வைத்துக் கொள்ள வேண்டும் என்று தோழர்கள் ஒரு தாளில் எழுதி அவரிடமும் உடன் வந்த தோழரிடமும் விளக்கினர். ஒரு வேளை இந்த நேரங்களில் அவரது அமைதிக்கு காரணம் தன்னால் தோழர்களுக்கும் மற்றவர்களுக்கும் சிரமமாக இருக்குமோ என்று அவர் யோசித்திருக்கவும் கூடும். அதுதான் தோழர் மணி வண்ணன்.

பேசிக் கொண்டிருந்து போது கடைசியாக மக்கள் அதிகாரம் நடத்திய கூட்டத்திற்கு தன்னால் செல்ல முடியவில்லை என்று குறைபட்டார். கோவை ம.க.இ.க கிளை வேலை, புதிய கலாச்சாரம் விற்பனை குறித்து பகிர்ந்து கொண்டார். எமது அமைப்புக்களில் இருந்து சொந்த வாழ்க்கை நலன்களுக்காக வெளியேறிய ஒரிருவர் அவதூறு செய்வது குறித்து அறிவீர்களா என்று நம்மிடம் கேட்டார்.  குப்பைகளை  உற்பத்தி செய்வோரைக் கண்டால் பலரும் முகம் சுளிக்கவே செய்வர். அவற்றையெல்லாம் பொதுவானவர்களோ இல்லை நம்மை தீவிரமாக எதிர்ப்போர் கூட சட்டை செய்வதில்லை என்ற போது சிரித்தார். தொழிலாளி வர்க்கத்திலுருந்து வந்த அவரிடம் எப்போதும் பொறுமையும், அர்ப்பணிப்பும் கூடவே பயணித்தது.

கோவை மூடு டாஸ்மாக் போராட்டத்தில்
கோவை சாய்பா காலனி டாஸ்மாக்கை மூடும் போராட்டத்தில் தோழர் மணிவண்ணன்.

மக்கள் அதிகாரம் அறிவித்த “மூடு டாஸ்மாக்கை” இயக்கத்திற்காக 2015-ம் ஆண்டில் சிறை சென்றார். கோவை சாய்பாபா காலனி டாஸ்மாக் கடையை அடித்து நொறுக்கிய மக்கள் அதிகாரம் அமைப்பினர், தோழர் மணிவண்ணன் தலைமையில் முழக்கமிட்டவாறு அங்கேயே போலீசுக்காக காத்துக் கொண்டிருந்தனர். வந்த போலீசோ கடையை நொறுக்கி, பாட்டில்களை தீ வைத்தாலும் ஓடாமல் அங்கேயே எங்களுக்காக நிற்கிறீர்களே என்று வியந்தார்கள்.

கோவை மத்திய சிறையில் ஒரு மாதம் சிறையில் இருந்தார். சிறை அதிகாரிகளோ, “தோழர் மணிவண்ணன், இம்முறையோடு நீங்கள் 25-ஆவது முறையாக சிறைக்கு வருகிறீர்கள், எனவே எங்களுக்கு விருந்து வைக்க வேண்டும்” என்றார்களாம். தோழரோ வேடிக்கையாக சிறை வைத்த நீங்கள்தான் விருந்து தரவேண்டும் என்று கூறியிருக்கிறார். ஆம், நண்பர்களே தோழர் மணிவண்ணன் கிட்டத்தட்ட 25 முறை சிறைக்கு சென்றிருக்கிறார்.

kovai-pp-tasmac-8
கோவை சாய்பாபா காலனி டாஸ்மாக் கடையை அடித்து நொறுக்கிய மக்கள் அதிகாரம் அமைப்பினர் தோழர் மணிவண்ணன் தலைமையில் முழக்கமிட்டவாறு அங்கேயே போலீசுக்காக காத்துக் கொண்டிருந்தனர்.

கோவை பகுதி என்பது தமிழகத்தில் ஒரு குட்டி காஷ்மீர் போல. இது பலருக்கும் தெரியாமல் இருக்கலாம். கோவை குண்டு வெடிப்பை ஒட்டி இந்து மதவெறியர்கள் அங்கே பெரும் கலவரம் நடத்திய பிறகு அந்நகரத்தில் எந்த உரிமையும் யாருக்குமில்லை எனலாம். குறிப்பாக சுவரொட்டி ஒட்ட தடை, கூட்டம் நடத்த தடை, பேருந்திலோ – மக்கள் கூடுமிடங்களிலோ பிரச்சாரம் செய்யத் தடை என்பது தற்போது வரை அமலில் இருக்கிறது. இதை மீறும் போது போலீசு தேடிவந்து கைது செய்யும், சிறையிலடைக்கும்.

ம.க.இ.க மற்றும் அதன் தோழமை இயக்கங்களின் போராட்டங்களுக்காக மற்ற கிளைகள் – பகுதிகள் தமது பிரச்சார திட்டங்களை போடும் போது, கோவை தோழர்களோ அதற்காக சிறைக்கு செல்லும் நாட்களையும் சேர்த்து போட்டுக் கொள்ளவேண்டும். அப்படித்தான் தோழர் மணிவண்ணன் 25 முறை சிறைக்கு சென்று பல மாதங்களை கழித்துள்ளார்.

thillai-demo-kovai-08
திருமணம் ஆகாமலேயே முழுநேரமாக அரசியல் பணியாற்றி தோழர் மணிவண்ணனை, கோவை ஒண்டிப்புதூர் பகுதியின் பிள்ளை எனலாம்.

இந்த பிரச்சார இயக்கங்களுக்கான வேலைகளை திட்டமிடும் போது இதனால் கைது செய்யப்படும் வாய்ப்பிருக்கிறது…….அதனால்………என்ற தயக்கமோ, சுணக்கமோ அவரிடத்தில் இல்லை. அப்பகுதி தோழர்களிடத்திலும் அது இல்லை. இதனால்தான் ஆர்.எஸ்.எஸ் கலவரம் நடத்திய நாட்களிலேயே கூட தோழர்கள் எதிர்ப்பியக்கத்தை வீச்சாக நடத்தினர். கோவையில் புரட்சிகர அமைப்புக்களின் தொடர்ச்சியை இத்தகைய தோழர்களின் போராட்ட உறுதியே இன்று வரை காப்பாற்றிவருகிறது என்றால் அது மிகையல்ல.

திருமணம் ஆகாமலேயே முழுநேரமாக அரசியல் பணியாற்றி தோழர் மணிவண்ணனை, கோவை ஒண்டிப்புதூர் பகுதியின் பிள்ளை எனலாம். மண்ணின் மைந்தர் என்பதற்கும் மேலாக அவர் ஒவ்வொரு வீட்டோடும், குடும்பத்தோடும் அன்போடு ஐக்கியமானார். ஒண்டிப்புதூரில் உள்ள எல்லா வீடுகளுக்கும் எல்லா ஆண்டுகளிலும் அவர் சென்றிருப்பார். நிதி வசூலாகட்டும், கூட்டங்களுக்கு அழைப்பதாகட்டும் மக்களை உரிமையோடு அழைப்பார், தேவைப்பட்டால் விமரிசிப்பார்.

kovail-caldwell-conference-3
கால்டுவெல் பிறந்தநாள் கருத்தரங்கத்தில் பேசும் போது

தனது உடல் நலன் குறித்து அவர் எப்போதும் கவலைப்பட்டதில்லை. இந்த கடைசி ஆண்டுகள் தவிர முந்தைய காலத்தில் அவர் அனேக தருணங்களில் மருத்துவமனைக்கோ, மருத்துவர்களையோ சந்தித்து அபூர்வம். பல நேரங்களில் “அஞ்சால்” அலுப்பு மருந்துதான் அவரது சர்வரோக நிவாரணி. இதை தோழர்கள் கேலி செய்தாலும், விமரிசனம் செய்தாலும், தனது உடல் நலம் குறித்து அவர்  கவலைப்பட்டதில்லை.

அவரது அஞ்சலிக் கூட்டத்தில் பேசிய ஒரு உள்ளூர் நண்பர், இவரிடம் குறையேதும் இல்லை, ஒரு சின்ன கெட்ட பெயர் கூட மக்களிடத்தில் இல்லை என்று வியந்தார். அந்த அளவுக்கு மக்களோடு இரண்டறக் கலந்து ஒரு எளிமையான கம்யூனிஸ்டாக நேசிக்கப்பட்டார். இதை தோழர் மருதையன் தனது இறுதி உரையில் விரிவாக விளக்கினார்.

comrade-manivannan-funeral-(13)
கோவை ராமகிருஷ்ணன் மற்றும் பெரியார் திராவிடர் கழக தோழர்கள் கலந்து கொண்டு பேசினர்

ஒண்டிப்புதூர் பகுதி முழுவதும் அவரது மரண அறிவித்தல் சுவரொட்டி ஒட்டப்பட்டு, அவர் வாழ்ந்த தெருவில் இறுதி அஞ்சலிக் கூட்டம் நடத்தப்பட்டது. பகுதி வாழ் மக்களும், தோழர்களும் திரளாக கலந்து கொண்டனர். அவரோடு பணியாற்றிய இளந்தோழர்கள் குறிப்பாக பெண் தோழர்கள் கடைசி வரை அழுது கொண்டே இருந்தனர். தோழரது உறவினர்களோ தமது குடும்ப உறுப்பினர் கட்சி கட்சி என்று சீரழிந்து போனானே என்று வழக்கமான புலம்பலுக்கு பதிலாக அவரது பணி குறித்து மற்ற தோழர்கள் பேசும் போது மரியாதையுடன் கேட்டுக் கொண்டிருந்தனர். இப்படி தனது குடும்ப உறுப்பினர்களிடமும் அவர் நேசத்திற்குரியவராக இருந்தார். ஒரே நகரத்தில் அவரது குடும்ப உறுப்பினர்கள் இருந்தாலும் அவரது காலம் தோழர்களோடும், மக்களோடும்தான் அதிகம் பயணித்தது.

comrade-manivannan-funeral-(5)
மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநில பொதுச் செயலர் தோழர் மருதையன் இறுதியாகப் பேசும் போது மணிவண்ணனை காப்பாற்ற எடுத்த முயற்சிகளை விவரித்தார்.

இறுதி அஞ்சலிக் கூட்டத்தில் பல்வேறு இயக்கத்தினரும், கட்சியினரும் கூட கலந்து கொண்டனர். கோவை ராமகிருஷ்ணன் மற்றும் பெரியார் திராவிடர் கழக தோழர்கள் கலந்து கொண்டு பேசினர். மக்கள் அதிகாரம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி தோழர்கள் அவரது நினைவுகளை பகிர்ந்தனர்.

மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநில பொதுச் செயலர் தோழர் மருதையன் இறுதியாகப் பேசும் போது மணிவண்ணனை காப்பாற்ற எடுத்த முயற்சிகளை விவரித்தார். தோழர் மணிவண்ணன் எப்படி ஒரு இயல்பான கம்யூனிஸ்டாக வாழ்ந்தார் என்பதை எடுத்துரைத்தார்.

பிறகு தோழர்கள் வீர வணக்கம் செலுத்தி முழக்கமிட அவரது உடலைத் தாங்கிய வாகனம் மெதுவாக ஊர்வலமாக புறப்ப்ட்டு மின்தகன மைதானத்திற்கு வந்தது. தோழர்களின் அழுகை, அஞ்சலி, முழக்கங்களுக்கு மத்தியில் தோழர் மணிவண்ணன் நம்மிடமிருந்து விடைபெற்றார்.

தோழர் மணிவண்ணனுக்கு சிவப்பஞ்சலி!

– வினவு செய்தியாளர்.

  1. தோழருக்கு சிவப்பஞ்சலி. தோழரோடு முல்லைப் பெரியாறு போராட்டத்தில் பங்கெடுத்து இருக்கின்றேன். மக்கள் கொடுக்கும் உணவினை முகம் சுளிக்காமல் ஏற்க வேண்டும் என்று அறிவுரை கூறினார். மனம் கனக்கின்றது.

  2. மனம் பிசையும் மரணம். அவருடன் பழக்கமில்லை.ஆனால்,அவரைப் பார்வை தவிர்த்ததில்லை.இன்னும் எத்தனை மணிவண்ணங்கள்? போய்வாருங்கள் தோழர்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க