முகப்புபுதிய ஜனநாயகம்கிரிமினல் போலீசைப் பாதுகாக்கும் ஊடகங்கள் !

கிரிமினல் போலீசைப் பாதுகாக்கும் ஊடகங்கள் !

-

தொலைக்காட்சிகளில் அந்த வீடியோவைப் பார்த்தவர்கள் அனைவரும் அதிர்ந்து போயிருப்பார்கள். திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் ஆட்டோ ஓட்டுநரான கணவன், மனைவி, மகன் மூவரையும் பட்டப்பகலில் கடைவீதியில் பலரும் பார்க்க போலீசார் காட்டுமிராண்டித்தனமாகத் தாக்குகிறார்கள். சுற்றி நின்ற பொதுமக்கள் மீதும் தடியடித் தாக்குதல் நடத்தி விரட்டியடிக்கிறார்கள். எந்த ஏரியா என்று அக்குடும்பத்தினரைக் கேட்ட போலீசார், அவர்கள் தாழ்த்தப்பட்டோர் குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்று தெரிந்ததும் முன்பைவிட வெறியுடன் தாக்குகிறார்கள்.

  • police-atrocities-chengamசென்னை திருவல்லிக்கேணி கஸ்தூரிபாய் காந்தி மருத்துவ மனையில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார் முத்தாம்பிகை. வார்டுக்கு வெளியே அவரது கணவர் தமிழரசு, அவர்களது முதல் குழந்தையுடன் அமர்ந்திருந்தார். அந்தக் குழந்தை விடாமல் அழுது கொண்டிருந்ததால், அங்கு பாதுகாப்புக்கு வந்திருந்த பெண் போலீசார் எரிச்சலடைந்து குழந்தையின் அழுகையை நிறுத்தச் சொல்லி ஆபாசமாகத் திட்டி, தமிழரசுவைத் தாக்கியதோடு கஞ்சா வழக்கு போட்டு உள்ளே தள்ளிவிடுவோம் என்று மிரட்டியுள்ளனர். இதைப் பார்த்து வார்டிலிருந்து வெளியே வந்த முத்தாம்பிகையை நிறைமாத கர்ப்பிணி என்றும் பார்க்காமல் சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இனி இங்கிருந்தால் ஆபத்து என்று அஞ்சிய அந்தப் பெண்மணியும், அவரது கணவரும் புறப்பட்டு பேருந்தில் சென்று கொண்டிருந்த போது, வழியில் அந்தப் பெண்மணியின் பனிக்குடம் உடைந்து, வலியால் துடித்து, பேருந்தை நிறுத்தி அந்தப் பெண்மணியை ஆம்புலன்ஸ்சில் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு அனுப்பி அங்கே குழந்தை பிறந்துள்ளது.
  • கடந்த ஜூலை 21-ம் தேதியன்று, மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மொட்டை மலையில் குடியிருக்கும் ஒட்டர் சாதியைச் சேர்ந்த மருதாயி, கணவர் செல்வராசு, அவர்களது குழந்தை விஜய், மருதாயியின் அக்கா வள்ளி, அவரது கணவர் வேலு ஆகியோர் குடும்பத்துடன் மதுரை நல்லூர்கோயில் திருவிழாவில் களிமண் பொம்மை விற்றுவிட்டு அங்கேயே இரவில் உறங்கிக் கொண்டிருந்தபோது, கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் போலீசார் ஒரு திருட்டு வழக்கு தொடர்பாக மருதாயியைத் தவிர மற்ற அனைவரையும் கைது செய்து கொண்டு சென்றனர். ஆண்கள் இருவரையும் பாளையங்கோட்டை சிறையிலடைத்துவிட்டு, கைக்குழந்தையையும் வள்ளியையும் மதுரை பெண்கள் சிறையில் அடைத்துள்ளனர். கைக்குழந்தையைத் தன்னிடம் ஒப்படைக்குமாறு போலீசாரிடம் மருதாயி மன்றாடிய போதிலும், அவர்கள் ஏறெடுத்தும் பார்க்காததால், பீப்பிள்ஸ் வாட்ச் எனும் மனித உரிமை அமைப்பின் உதவியுடன் மருதாயி மதுரை உயர்நீதி மன்றத்தில் மனுச் செய்தார்.
    இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, “ஒரு திருட்டு வழக்கு சம்பந்தமாக மூன்று பேரையும் மார்த்தாண்டம் காவல்துறை கைது செய்து, குழித்துறை மாஜிஸ்திரேட்டிடம் ஆஜர்படுத்தி மதுரை சிறையில் அடைத்துள்ளனர். அக்குழந்தை தனது பெரியம்மாவுடன் சிறையில் உள்ளான்” என்று அரசு வழக்குரைஞர் தெரிவித்தைக் கேட்டு அனைவரும் ஒருகணம் ஆடிப் போய்விட்டனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், குழந்தையைக் கைதுசெய்த போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துராஜ் மற்றும் குழித்துறை நடுவர் சண்முகராஜ் ஆகியோர்மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அக்குழந்தையை மீட்டு தாயிடம் ஒப்படைக்கவும் பின்னர் உத்தரவிட்டுள்ளனர்.
  • மதுரையில் கடந்த ஜூலை 25-ம் தேதியன்று இரவில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த கூடல்புதூர் போலீசார் ஒரு ஓட்டலுக்குச் சென்று புரோட்டா பார்சல் வாங்கிவிட்டு பணம் கொடுக்காததோடு, பணம் கேட்டதற்காக ஊழியர்களைத் தாக்கி அந்தக் கடையை நாசப்படுத்தியுள்ளனர். அந்தக் கடையிலிருந்த சிசிடிவியில் இந்தத் தாக்குதல் பதிவாகியுள்ளது.
  • ஊர்ஊராகச் சென்று பாசிகள் விற்பது, கத்தி, அரிவாள்மனைக்கு சாணை பிடிப்பது ஆகிய தொழிலில் ஈடுபட்டுள்ள நாடோடிக் குடும்பத்தினரை நாகர்கோவில் போலீசார் கடந்த ஏப்ரல் 29-ஆம் தேதி நகை திருட்டை ஒப்புக்கொள்ளச் சொல்லி கொட்டடியில் அடைத்து, தொடர்ந்து 63 நாட்களாகச் சித்திரவதை செய்துள்ளனர். பெண்களின் சேலையை உருவி உள்ளாடையுடன் நிற்க வைத்து, அவருடைய கணவர், பிள்ளைகள் முன்னிலையில் பாலியல் தொல்லைகள் செய்துள்ளனர்.
கைக்குழந்தை விஜயுடன் மருதாயி
கைக்குழந்தை விஜயுடன் மருதாயி

கடந்த மூன்று மாதங்களில் அடுத்தடுத்து நடந்துள்ள இக்கொடூரங்கள் அனைத்தும் போலீசிடமிருந்து மக்கள் தங்களை எப்படிப் பாதுகாத்துக் கொள்வது என்பதே இன்று முக்கியமான பிரச்சினையாகிவிட்டதை மீண்டும் நிரூபித்துக் காட்டுகின்றன. ஏற்கெனவே மிருகத்தனமாக சாமானிய மக்களை வதைத்துவரும் போலீசு, இப்போது ஒரு குடும்பத் தகராறு தெருவில் நடந்தால் குடும்பத்தையே அடிக்கலாம், கைக்குழந்தை அழுதால் பெற்றோரை அடிக்கலாம் என்று புதிய விதிகளை உருவாக்கிக் கொண்டு முன்பைவிட இன்னும் கொடூர மிருகமாக வளர்ந்து நிற்கிறது. கொடிய சர்வாதிகாரிகள்கூட தாயையையும் சேயையும் பிரித்து கைக்குழந்தையை சிறையில் அடைக்கத் துணியமாட்டார்கள். ஆனால் குமரி மாவட்டப் போலீசும் மாஜிஸ்டிரேட்டும் இதைச் செய்திருக்கிறார்கள். அதை அரசு வழக்கறிஞர் நியாயப்படுத்தி வாதிட்டுள்ளார்.

போலீசாரும் நீதித்துறையும் பின்பற்றுவதாகக் கூறிக்கொள்ளும் சட்டத்தின்படியேகூட இப்படி கைக்குழந்தையைக் கைது செய்து தாயிடமிருந்து பிரித்து சிறையிலடைப்படைப்பது சட்டவிரோதமானது. நிறைமாத கர்ப்பிணித் தாக்குவது மனிதத்தன்மையற்றது. தொடர்ந்து இரு மாதங்களுக்கும் மேலாக ஒரு குடும்பத்தினரை கொட்டடியில் அடைத்து வதைக்க போலீசுக்கு எந்த உரிமையோ அதிகாரமோ கிடையாது.
ஆனால், செங்கத்தில் பொது இடத்தில் போலீசார் இப்படி நடந்து கொண்டதை ஏற்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவிக்கிறதே தவிர, இச்சட்டவிரோத செயலுக்காக அப்போலீசார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. துறை சார்ந்த விசாரணை நடத்துமாறு உபதேசிப்பதுதான் நடந்தது. அந்த மூன்று போலீசாரும் ஆயுதப்படைக்கு பணி மாறுதல் செய்யப்பட்டுள்ளதைத் தவிர வெறெந்த நடவடிக்கையையும் தமிழக அரசு எடுக்கவில்லை. குழந்தை அழுததற்காக தம்பதிகளைத் தாக்கிய திருவல்லிக்கேணி பெண் போலீசார் மீதும், இரு மாதங்களுக்கும் மேலாக நாடோடிக் குடும்பத்தினரைக் கொட்டடியில் அடைத்து வதைத்த நாகர்கோவில் போலீசார் மீதும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.

அம்பலமாகியுள்ள இச்சம்பவங்களையொட்டி ஊடகங்களில் பரபரப்பாக விவாதங்கள் நடத்தப்பட்டன. ஒருவரைக் கைது செய்யும் பொழுது என்னென்ன விதிகளைப் பின்பற்ற வேண்டும் என்ற வழிகாட்டுதல்கள் ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ள போதிலும், இவற்றையெல்லாம் கீழ்நிலை போலீசுக்காரன் தொடங்கி உயர் போலீசு அதிகாரி வரை ஏன் பின்பற்றுவதில்லை? போலீசார் இதனை மீறி நடப்பதை அரசும் நீதிமன்றமும் கண்டு கொள்ளாமலிருப்பது ஏன்? அண்மையில், ஓசூரில் ஆசிரியையிடம் செயினை பறித்துவிட்டு தப்பி ஓடிய கொள்ளையர்களை விரட்டி சென்றபோது, கொள்ளையர்கள் கத்தியால் குத்தியதில் மரணமடைந்த ஏட்டு முனுசாமி குடும்பத்துக்கு ஒரு கோடி ரூபாய் நிதி கொடுத்திருக்கிறார் ஜெயலலிதா. செத்த போலீசுக்கு ஒரு கோடி ரூபாய் நிவாரணமாக அள்ளிக் கொடுக்கும் அரசு, போலீசாரால் பாதிக்கப்பட்ட சாமானிய மக்களுக்கு எவ்வித நிவாரணத்தையும் தருவதில்லை, நியாயத்தையும் வழங்குவதில்லை – இது ஏன்? இவ்வளவு சம்பளமும் சலுகைகளும் பெறுமளவுக்கு போலீசுக்கு ஏதாவது அருகதை இருக்கிறதா? – என்கிற அடிப்படையில் ஊடகங்களில் விவாதங்கள் நடந்திருக்க வேண்டுமென்றுதான் அனைவரும் எதிர்பார்ப்பார்கள்.

police-atrocities
போலீசின் அன்றாடை வேலை என்பதே வசூல் வேட்டையும், ஓட்டல்களில் ஓசியில் தின்பதும், மக்களை ஒடுக்குவதும்தான். இதிலே மன உளைச்சல் எப்படி வரும்? ஆனால், கேள்விக்கிடமற்ற அதிகாரமாக மாறிவிட்ட போலீசைக் கேள்விக்குள்ளாக்குவதை விடுத்து வேலைப்பளு, மன அழுத்தம் என்று காரணங்களைக்க ஊறி அதன் கொலை வெறியாட்டத்தை ஊடகங்கள் மறைமுகமாக ஊக்குவித்துக் கொண்டிருக்கின்றன.

ஆனால், எதிர்நிலை சக்தியாகிவிட்ட போலீசின் வரம்பற்ற அதிகாரத்தை எதிர்த்துப் போராட வேண்டிய சூழல் நிலவுவதால், அப்படி நடந்துவிடக்கூடாது என்பதற்காகவே திட்டமிட்டு போலீசுக்கு ஆதரவாக விவாதங்களையும் கருத்துகளையும் வைத்து, போலீசைக் காப்பாற்றும் நோக்கத்துடனேயே ஊடகங்கள் விவாதங்களை நடத்தியுள்ளன. இதற்கேற்ப வாதங்களைக் கட்டியமைப்பதற்காக ஓய்வுபெற்ற போலீசு அதிகாரி, மூத்த பத்திரிகையாளர் – என திட்டமிட்டே ஆட்களைத் தெரிவு செய்து களமிறக்குகிறார்கள். கேள்விக்கிடமற்ற அதிகாரமாக மாறிவிட்ட போலீசைக் கேள்விக்குள்ளாக்குவதை விடுத்து வேலைப்பளு, மன அழுத்தம் என்று காரணங்களைக் கூறி அதன் கொலைவெறியாட்டத்தை மறைமுகமாக ஊக்குவித்துக் கொண்டிருக்கிறார்கள். இறுதியில், என்ன இருந்தாலும் இப்படி நடந்து கொள்வது சரியல்ல என்று முதலைக்கண்ணீர் வடித்துவிட்டு, போலீசார் கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டுமென்றும், இதற்காக போலீசுக்குப் பயிற்சிகள் அளிக்க வேண்டுமென்றும் நெறியாளர் கூறுவதாகத்தான் இந்த விவாதங்கள் நடக்கின்றன.

இந்த விவாதங்களில் போலீசார் ஓய்வின்றி ஏதோ உன்னதான வேலையைச் செய்வதைப் போலவும், போதிய எண்ணிக்கையில் போலீசார் இல்லாததால் அவர்களுக்கு வேலைப்பளு அதிகமாக உள்ளது என்றும், இதனால் அவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி உணர்ச்சி வேகத்தில் அத்துமீறுகிறார்கள் என்றும், ஒருசிலரின் தனிப்பட்ட தவறுகளைக் காட்டி ஒட்டுமொத்த போலீசுத்துறையைக் குற்றம் சாட்டக்கூடாது என்றும் கூச்சமே இல்லாமல் நியாயப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். குடும்பத் தகராறு கொலையாக மாறிவிடாமல் தடுப்பதற்காகத்தான் செங்கத்தில் அக்குடும்பத்தினரை போலீசார் அடித்து விரட்டியதாக கதையளக்கிறார்கள். அடித்தட்டு வர்க்கப் பெண்கள் மீது போலீசார் பாலியல் வன்முறையை ஏவுவதற்குக் காரணம், போலீசாரின் மனைவிமார்கள் அவர்களிடம் அன்பாக இல்லாததுதான் காரணம் என்று இவர்கள் விளக்கமளித்தாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை.

போலீசின் அன்றாட வேலை என்பதே வசூல் வேட்டையும், ஓட்டல்களில் ஓசியில் தின்பதும், மக்களை ஒடுக்குவதும்தான். இதிலே மன உளைச்சல் எப்படி வரும்? வசூல் வேட்டையில் தமக்கு உரிய பங்கு கிடைக்காதபோதும், மேலதிகாரிகளைத் திருப்திபடுத்த வேண்டிய வேலைகளைச் செய்யவேண்டி யிருப்பதாலும்தான் அவர்களுக்கு மன உளைச்சல் வரு கிறது. பெண் போலீசாருக்கு ஆண் போலீசு அதிகாரிகளின் தொல்லையால் மன உளைச்சல் வருகிறது.

மேலும், எப்போதும் மன அழுத்தத்தில் உள்ள போலீசு, ஒரு ஓட்டுக்கட்சிப் பிரமுகரையோ, ஒரு முதலாளியையோ, அதிகாரியையோ அடித்ததாக வரலாறில்லை. அந்த மன அழுத்தமும் சாமானிய மக்களைப் பார்த்தவுடன் வெடிக்கிறதே, அது ஏன்? டீக்கடை ஊழியர், காயலாங்கடைக்குப் போகவேண்டிய அரசுப் பேருந்துகளை இயக்கும் ஓட்டுநர் தொடங்கி ஐ.டி. ஊழியர் வரை அனைவரும் தமது வேலைப்பளுவால் கடுமையான மன அழுத்தத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் யாரும் மக்களை கைநீட்டி அடித்துக் கொண்டிருப்பதில்லை. ஒருக்கால் அப்படி ஏதேனும் நடந்தால் வழக்கு, தற்காலிகப்பணி நீக்கம் முதலானவற்றை எதிர்கொள்கிறார்கள். ஆனால் அதையே போலீசு செய்தால் எந்த நடவடிக்கையும் இல்லை.

எந்நேரம் அழைத்தாலும் உடனடியாகப் பணிக்கு வரவேண்டிய நிலையில் அரசு மருத்துவர்களும் பொதுப்பணித்துறை பொறியாளர்களும் இருக்கும்போது, போலீசு மட்டும்தான் இரவு பகலாக வேலை செய்கிறார்கள் என்று கூறுவது அப்பட்டமான மோசடி. மேலும், வேலைப்பளு உள்ளதாக போலீசார் கூறுவது ஒருக்கால் உண்மையானால், வேலைச்சுமையைத் தங்கள் மீது திணித்தவர்களுக்கு எதிராகவும் தமது உரிமைகளுக்காகவும் சங்கம் கட்டிப் போராடியிருக்க வேண்டும். ஆனால், போலீசார் சங்கம் அமைக்க முன்வராததோடு, அதை அரசோ, நீத்துறையோ ஏற்பதுமில்லை. ஆட்சியாளர்களின் காலை நக்கி சலுகைகளைப் பெறுவதையும் மக்கள் மீது பாய்ந்து குதறுவதையும்தான் போலீசார் செய்து கொண்டிருக்கின்றனர்.

இயல்பிலேயே சமூகத்துக்கு எதிரானதாகவும், வரம்பற்ற அதிகாரத்துடனும், நியாய உணர்வோ, ஜனநாயக உணர்வோ இல்லாத கொடிய மிருகமாகவும் வளர்ந்துவிட்ட போலீசுத்துறையின் நோக்கமே சாமானிய மக்களை ஒடுக்குவதுதான். அதை மூடிமறைத்துவிட்டு, போலீசு அட்டூழியங்களுக்கு நியாயம் கற்பிக்கும் ஊடகவியலாளர்களின் வாதங்கள்தான் இன்று போலீசைவிட அபாயகரமானதாகியுள்ளது.

– பாலன்
_____________________________
புதிய ஜனநாயகம், ஆகஸ்ட் 2016
_____________________________

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க