privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திபீகார் வெள்ளம் : வடக்கிலும் ஒரு செம்பரம்பாக்கம் !

பீகார் வெள்ளம் : வடக்கிலும் ஒரு செம்பரம்பாக்கம் !

-

கடந்த 41 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பீகாரை வெள்ளம் சூழ்ந்துள்ளது. பீகார் மாநிலத்தின் 12 மாவட்டங்கள் மிக மோசமான பாதிப்புக்குள்ளாகின. 60 லட்சத்துக்கும் அதிகமான பீகார் மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் – இம்மாவட்டங்களில் இருந்து சுமார் ஐந்து லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். ஆகஸ்ட் 27-ம் தேதி மாலை வரை கிடைத்த தகவல்களின் படி, சுமார் 153 பேர் வெள்ளத்தில் பலியாகியுள்ளனர்.

bihar-floodவெள்ள அபாயம் அதிகரித்ததைத் தொடர்ந்து களமிறங்கிய தேசிய பேரிடர் மீட்புப் படை, இது வரை சுமார் 53,000 பேரை மீட்டு அவர்களில் சுமார் 12,200 பேர்களுக்கு மருத்துவ சிகிச்சைக்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளது. பீகார் மாநிலத்திற்கு வெள்ள பாதிப்புகள் புதியவை அல்ல – எனினும், இந்த முறை ஏற்பட்டுள்ள பாதிப்புகள் தவிர்க்கப்பட முடியாததல்ல.

வழக்கத்திற்கும் குறைவான மழை பொழிவை இந்தப் பருவ காலத்தில் பெற்றுள்ள பீகார் மாநிலத்தில், வெள்ளத்திற்கான முதன்மைக் காரணம் கங்கை. இமயத்தின் அடிவாரத்தில் பெய்த கனமழையின் காரணமாக அதிகரித்த நீர்மட்டம். அதிக மழை பொழிவின் காரணமாக கங்கை மற்றும் அதன் கிளைகளான சோனே, புர்ஹி, காக்ரா, கந்தக் மற்றும் கோஷி ஆகிய நதிகளில் நீர்மட்டம் பல இடங்களில் ஐம்பது அடிகளில் ஓடிக் கொண்டிருக்கிறது.

மழைக் காலங்களில் கங்கையில் திடீரென நீர்மட்டம் அதிகரிப்பது எதிர்பாராத நிகழ்வல்ல. இது பல நூற்றாண்டுகளாக நடக்கும் ஒன்று தான் – எனினும், கடந்த சில பத்தாண்டுகளில் கங்கை நதிப் படுகையில் படிந்துள்ள வண்டல் மண் படிவங்கள் முறையாக அகற்றப்படாமல் இருப்பதால் கங்கையின் கொள் அளவு கணிசமாக குறைந்துள்ளது. குறிப்பாக கங்கை, வங்கக் கடலில் கலக்கும் முகத்துவாரத்தில் அமைந்துள்ள கல்கத்தா துறைமுகத்தின் செயல்பாடே வண்டல் மண் படிவதால் பாதிக்கப்படும் நிலை உருவானது.

1960-களில் அமைக்கப்பட்ட தாமோதர் அணையின் விளைவாகத் தான் கங்கையின் முகத்துவாரம் வண்டல் மண் படிவங்களால் தூர்ந்து போனது என்பது பின்னர் கண்டறியப்பட்ட போது அதற்கும் தீர்வாக பராக்கா எனும் புதிய குறுக்கு அணை ஒன்று 1975-ல் ஏற்படுத்தப்பட்டது. பராக்கா குறுக்கு அணை, கங்கையின் இயல்பான ஓடுபாதையான பத்மா நதிக்குச் செல்லும் நீரைத் ஹூக்லி நதிக்குத் திருப்பி விடுகிறது. ஆனால், நதியின் இயல்பான பாதை மாற்றப்பட்டதால் அதன் வேகம் மட்டுப்பட்டதோடு பீகார் மாநிலம் நெடுக கங்கையின் ஓடுபாதையெங்கும் வண்டல் மண் படிவது அதிகரித்தது.

அணைகள் அமைப்பதிலும், நீர் மேலாண்மையிலும் விஞ்ஞானப்பூர்வமான அணுகுமுறைகள் ஏதும் பின்பற்றப்படாத நிலையில் கடந்த 40 ஆண்டுகளாக எந்நேரமும் வெடிக்கத் தயாராக இருந்த அணுகுண்டு ஒன்றின் முனையில் பீகார் அமர்ந்திருந்தது. இந்நிலையில் இந்தமுறை கங்கை பல்வேறு கிளை நதிகளுடைய பிறப்பிடமான இமயத்திலும் அதன் அடிவாரப் பகுதிகளிலும் கன மழை பெய்ததோடு மத்திய பிரதேசத்திலும் நல்ல மழை பெய்துள்ளது.

கங்கையின் முக்கிய நீராதாரங்களில் ஒன்றான சோனே நதி மத்திய பிரதேசத்தின் ரேவா நகரத்தைக் கடந்து பீகாரின் எல்லைக்குள் நுழைந்து கங்கையில் கலக்கிறது. ரேவா நகரில் இருந்து சுமார் 50 கிலோமீட்டர்கள் தொலைவில் சோனே நதியின் குறுக்கே பனசாகரா அணை என்கிற அணை 2006ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. மத்திய பிரதேசத்தில் பெய்த கன மழையின் விளைவாக பனசாகரா அணை அதன் 95 சதவீத கொள்ளளவை எட்டிய நிலையில் அதன் 18 மதகுகளில் 16 மதகுகள் ஆகஸ்ட் 19-ம் தேதியன்று திடீரென திறந்துவிடப்பட்டன.

ஏற்கனவே வண்டல் மண்ணால் கொள்ளளவு குறைந்திருந்த கங்கையில் இமயத்தின் அடிவாரப் பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக நீர் மட்டம் அபாயகரமான நிலையில் ஓடிக் கொண்டிருக்க, இதோடு பனசாகரா அணையில் இருந்து திடீரெனத் திறந்து விடப்பட்ட நீரும் சேர்ந்து கொள்ளவே பீகார் மற்றும் உத்திர பிரதேச மாநிலங்களில் பல இடங்களில் கரையை உடைத்துக் கொண்டு ஊருக்குள் புகுந்துள்ளது கங்கை.

மத்திய பிரதேசத்தில் கடந்த சில வாரங்களாகவே மழை பெய்து வந்த நிலையில் அணையின் நீர் வெளியேற்றத்தை சிறு சிறு அளவாகச் செய்திருந்தால், இந்த வெள்ளத்தைத் தவிர்த்திருக்க முடியும். பனசாகரா அணையின் பராமரிப்பு மத்திய பிரதேசம், உத்திர பிரதேசம் மற்றும் பீகார் மாநில அரசுகளின் கூட்டுப் பொறுப்பு நிலையில் உள்ள நிலையில் தற்போது அனைவரும் சொல்லி வைத்தாற்போல் இந்த விசயத்தில் கள்ள மவுனம் சாதிக்கின்றனர்.

கங்கையைப் புனிதம் என பீற்றிக் கொள்ளும் பாரதிய ஜனதா அரசு, தபால் துறையின் மூலம் அதன் நீரை பாட்டில்களில் அடைத்து நாடெங்கும் ’யாவாரம்’ செய்து வருகின்றது. ஒருபக்கம் கங்கா மாதா என்று கன்னத்தில் போட்டுக் கொண்டே இன்னொரு பக்கம் திட்டமிட்ட ரீதியில் ஆகக்கேடான நீர்மேலாண்மை திட்டங்களின் மூலம் அந்த நதியைக் கொன்று வருகின்றது மத்திய பாரதிய ஜனதா அரசு.

இயற்கை வளங்களைக் கையாள்வது தொடர்பாக ‘சுதந்திரத்திற்கு’ பின் மாறி மாறி வந்த அரசுகள் மேற்கொண்ட திட்டமிட்ட நாசகாரியங்களின் விளைவாக இன்று லட்சக்கணக்கான மக்கள் கதியற்றவர்களாக விடப்பட்டுள்ளனர். மக்களின் துன்ப துயரங்களைப் பற்றிக் கிஞ்சித்தும் அக்கறை கொள்ளாத அரசு நிர்வாகமோ எரியும் கொள்ளிக்கு எண்ணை வார்க்கிறது.

இனிமேலும் இவர்களால் மக்களைக் காக்க முடியும் என்பதை நம்புகிறீர்களா?

மேலும் படிக்க:
Poor dam management responsible for Bihar flood
Bihar is suffering devastating floods – and they’re completely man-made
Flood situation grim in Bihar, CM Nitish Kumar says water won’t enter Patna
Flood fury continues in Bihar, death toll hits 153
Floods in Bihar: More than monsoon, were they man-made?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க