privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்தொழிலாளர்கள்செப்டம்பர் 2 போராட்டக் களத்தில் பு.ஜ தொ.மு ! செய்தி - படங்கள்

செப்டம்பர் 2 போராட்டக் களத்தில் பு.ஜ தொ.மு ! செய்தி – படங்கள்

-

மோடி அரசு பதவியேற்ற நாள் முதல் கார்ப்பரேட் முதலாளிகளது இலாபவெறிக்காக பல்வேறு கொடுஞ்செயல்களை அரங்கேற்றி வருகிறது. மேக் இன் இந்தியா, டிஜிட்டல் இந்தியா போன்ற சிறப்புத் திட்டங்கள், கேந்திரமான துறைகளான இரயில்வே, பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் அந்நிய நேரடி முதலீட்டுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு, காப்பீடு உள்ளிட்ட துறைகளில் அந்நிய நேரடி முதலீட்டினை அதிகரிப்பது, பல இலட்சம் கோடிகள் புழங்குகின்ற வங்கித்துறையில் வங்கிகள் இணைப்பு என்கிற பெயரில் மூலதனத்தை ஓரிடத்தில் குவித்து கார்ப்பரேட் கொள்ளைக்கு வழிவகுப்பது உள்ளிட்ட பல்வேறு வழிகளில் சேவை செய்து கார்ப்பரேட் மற்றும் பன்னாட்டு முதலாளிகளது மனம் கவர்ந்த நாயகனாகியுள்ளார், மோடி.

மற்றொருபுறத்தில் மலிவான கூலியில், எந்த வேலைகளையும் செய்கின்ற தொழிலாளர்கள் கிடைப்பதை உத்திரவாதப்படுத்துகின்ற வகையில் தொழிலாளர் நலச்சட்டங்கள் அனைத்தையும் ஒழித்துக் கட்டி வருகிறது. குறிப்பாக, நிரந்தரத் தொழிலாளர்களை வைத்துக் கொள்வது அவசியமில்லை என்கிற வகையில் அனைத்து துறைகளிலும், அனைத்து தொழிற்பிரிவுகளிலும் காண்டிராக்ட் முறையை அமல்படுத்துவதற்கு ஏதுவாக காண்டிராக்ட் முறையை முன்னிலைப்படுத்தி வருகிறது, அரசு. இந்தியத் தொழிலாளி வர்க்கம் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளில் முதன்மையானதாக காண்டிராக்ட் தொழிலாளர் பிரச்சினை உருவெடுத்துள்ளது.

காண்டிராக்ட் தொழிலாளர்களது பிரச்சினையின் முக்கியத்துவத்தை உணர்ந்து கடந்த ஏப்ரல் 2016 முதல் மாநிலம் முழுவதும் தெருமுனைக் கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் மற்றும் முற்றுகைப் போராட்டங்களை தமிழகம் மற்றும் புதுச்சேரி முழுவதும் பு.ஜ.தொ.மு மேற்கொண்டது.

விவசாயம்-நெசவு-சிறுவணிகம்-சிறுதொழிதொழில்களை அழித்து காண்டிராக்ட் சுரண்டலைத் தீவிரப்படுத்துகின்ற கார்ப்பரேட் காட்டாட்சிக்கு முடிவுகட்டுவோம்!

என்கிற தலைப்பில் மேற்கொள்ளப்பட்ட மாநிலந்தழுவிய பிரச்சார இயக்கத்தின் இறுதியாக செப்டம்பர் 2 அன்று வேலைநிறுத்தப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டது. போலி கம்யூனிஸ்டுகள் காங்கிரசு துரோகக்கும்பலுடன் இணைந்து நாடு தழுவிய வேலைநிறுத்தம் என்கிற சடங்குத்தனத்தை அரங்கேற்றிய தருணத்தில் பு.ஜ.தொ.மு புரட்சிகர அரசியலையும், தொழிலாளி வர்க்கத்தின் வரலாற்றுப் பாத்திரத்தையும் மையப்படுத்தி, இணைப்பு மற்றும் கிளைச்சங்கங்களை வேலைநிறுத்தத்தில் ஈடுபடுத்தியது. தமிழகம் மற்றும் புதுவையில் 6 மையங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.

1. ஆவடி

திருவள்ளூர் (மேற்கு) மாவட்டக்குழுவின் சார்பில் ஆவடி பேருந்துநிலையம் அருகில ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் தோழர் ம.சரவணன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலாளர் தோழர் மு.முகிலன் கண்டன உரையாற்றினார். சுமார் 500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உணர்வுபூர்வமாகப் பங்கேற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மோடி அரசின் மோசடிகள் தோலுரிக்கப்பட்டன. இணைப்பு மற்றும் கிளைச்சங்கங்கள் செயல்படுகின்ற ஆலைகளில் உற்பத்தி முற்றிலுமாக முடக்கப்பதுடன், ஒரு நாள் சம்பள இழப்பை துச்சமென கருதிய தொழிலாளர்கள் விண்ணதிர முழக்கமிட்டனர். கணிசமான எண்ணிக்கையில் காண்டிராக்ட் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

ஒரே ஆலையில் பணிபுரிகின்ற காண்டிராக்ட் தொழிலாளியும், நிரந்தரத் தொழிலாளியும் அக்கம்பக்கமாக நின்றும், கைகோர்த்துக் கொண்டும் முழக்கமிட்டனர். காண்டிராக்ட் தொழிலாளர்களை, அந்த ஆலையின் நிரந்தரத் தொழிலாளர்களே இரண்டாம்பட்சமாக பார்க்கின்ற வகையில் தொழிலாளர்களை பிளவுபடுத்தி வைத்திருக்கின்ற முதலாளித்துவ அயோக்கியத்தனத்துக்கு சவுக்கடி கொடுப்பதாக இந்த ஒற்றுமை முழக்கம் அமைந்தது. காண்டிராக்ட் முறையை அமல்படுத்தி அவர்களது உழைப்பில் மூலதனத்தை பெருக்கிக் கொள்கின்ற முதலாளிகளுக்கு ஆப்பறையும் நாள் வெகுதொலைவில் இல்லை என்பதை இந்த இயக்கமும், ஆர்ப்பாட்டமும் அறிவித்தன.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

முன்னதாக, ஆவடியில் உள்ள டியூப் புராடக்ட்ஸ் ஆப் இந்தியா நிறுவனத்தின் வாயிலில் அந்த ஆலையில் இயங்கி வருகின்ற பொதுத்தொழிலாளர் சங்கத்தின் சார்பில் கண்டனக்கூட்டம் நடத்தப்பட்டது. இதில் சங்கத்தின் செயலாளர் தோழர் ம.சரவணன், சங்கத்தின் தலைவரும், பு.ஜ.தொ.மு-வின் மாநிலப் பொருளாளருமான தோழர் பா.விஜயகுமார் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

2. கும்மிடிப்பூண்டி:

மாவட்டத் தலைவர் தோழர் சதீஷ்
மாவட்டத் தலைவர் தோழர் சதீஷ்

திருவள்ளூர் கிழக்கு மாவட்டத்தின் சார்பாக 02-09-2016, காலை 10 மணி முதல் மதியம் 02 மணி வரை தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. கும்முடிப்பூண்டி பேருந்து நிலையத்தில், மாவட்டச் செயலாளர் தோழர் விகந்தர் முன்னிலையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தை மாவட்டத் தலைவர் தோழர் சதீஷ் தலைமையேற்று நடத்தினார்.

இதில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் கிளை / இணைப்புச் சங்கத்தின் முன்னணியாளர்கள் தாங்கள் சங்கமாக சேருமுன் சந்தித்த அடக்குமுறைகளையும், சங்கம் துவக்கிய பின் பெற்ற உரிமைகளைப் பற்றியும், அதற்குக் காரணம் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி தான் என பறைசாற்றினர். மேலும் இந்த உரிமைகளை தக்கவைத்துக் கொள்ள இது போன்ற போராட்ட முறைகளை முதலாளிகளுக்கு எதிராக நடத்த வேண்டுமென சூளுரைத்தனர். அதே போல இவ்வார்ப்பாட்டத்தில் உரையாற்றிய லைட்விண்டு கிளைச் சங்கத்தின் அமைப்பாளர் தோழர் பிரவீன்குமார், தான் பணிபுரியும் லைட்விண்டு ஆலையில் இருக்கின்ற முதலாளிகளின் கைக்கூலி சங்கமான INTUC வேலை நிறுத்தத்துக்கு ஆதரவு தெரிவித்துவிட்டு தன்னுடைய உறுப்பினர்களை உள்ளே வேலைக்கு அனுப்பி வைத்த அயோக்கியத்தனத்தை தோலுரித்தார்.

SRF மணலி கிளை செயலாளர் தோழர் ஞானபிரகாஷ்
SRF மணலி கிளை செயலாளர் தோழர் ஞானபிரகாஷ்

தொடர்ந்து பேசிய SRF மணலி கிளை செயலாளர் தோழர் ஞானபிரகாஷ், சென்ற வருடம் இதே நாளில் நடத்தப்பட்ட தொழிலுறவு சட்டத்தொகுப்பு நகல் எரிப்புப் போராட்டத்தில் மணலி SRF-ல் பெரும்பான்மை தொழிலாளிகள் கலந்து கொண்டனர். அதற்கு காரணம் அரசியல் உணர்வை ஊட்டுகின்ற பு.ஜ.தொ.மு தான். மாறாக இவ்வருடம் தொழிலாளி வர்க்கத்தின் தோழன் என்று கூறிக்கொள்கிற ULF தலைவரான பிரகாஷின் டீமிடம் வேலைநிறுத்தத்தில் கலந்து கொள்ள வேண்டுமென கோரிக்கை வைத்த போது, “அப்படியா? ஸ்ட்ரைக்கா? அதெல்ல்லாம் கிடையாது. போய் வேலையைச் செய்யுங்கள் என நிர்வாகத்துக்கு சாதகமாக தனது விசுவாசத்தை காட்டியதை தோலுரித்தார். மேலும், வழக்கறிஞர்கள் போராடியபோதே ஆதரவு தராத இந்த வக்கீல் பிரகாஷ் தொழிலாளிகளுக்கா தரப் போகிறார் என கேள்வி எழுப்பி அம்பலப்படுத்தினார்.

தொடர்ந்து MHH கிளைச் செயலாளர் தோழர் சிவா, KEMIN கிளைச் செயலாளர் ஹரிநாதன், SRF புதிய ஜனநாயகத் தொழிலாளர் சங்கத்தின் செயலாளர் தோழர் ராமஜெயம், RMK கல்லூரி வாகன ஓட்டுநர் சங்கத்தின் செயலாளர் S.A. குமார். மாநகர போக்குவரத்துத் துறை ஊழியர் திரு. ஸ்ரீதர் உள்ளிட்டவர்கள் தமது கண்டன உரையை பதிவு செய்தனர்.

GREAVES COTTON தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் திரு. ஆறுமுகசெல்வன்
GREAVES COTTON தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் திரு. ஆறுமுகசெல்வன்

அடுத்ததாகப் பேசிய GREAVES COTTON தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் திரு. ஆறுமுகசெல்வன், ” சங்கம் துவக்கியதற்காகவே ஆலை முதலாளி ஆலையை மூடிவிட்டு உன்னால் முடிந்ததைப் பார் என கொக்கரிக்கிறார். தமிழக முதலமைச்சரிலிருந்து உள்ளூர் அரசியல் தலைவர் வரை, தொழிலாளர் துறையிலிருந்து நீதிமன்றம் வரை, தாசில்தார் முதல் கலெக்டர் வரை மனு கொடுத்து போராட்டம் நடத்தி விட்டோம். இறுதியாக எங்களுக்குக் கிடைத்துள்ளது பசியும் பட்டினியும் தான் என முதலாளித்துவ பயங்கரவாதத்தை அம்பலப்படுத்தியும், கடைசி வரை விடாது நாங்கள் போராடுவோம் ” என்று தொழிலாளி வர்க்க திமிரோடு சூளுரைத்தார்.

மாவட்டச் செயலாளர் தோழர் விகந்தர், தற்போது நடந்து கொண்டுள்ள போராட்டத்தின் முக்கியத்துவம் குறித்தும், தொழிலாளிகள் தங்கள் உரிமைகளைப் பெற, கும்முடிப்பூண்டி சிப்காட் தொழிலாளிகள் புரட்சிகர தொழிற்சங்கத்தில் இணைத்துக் கொள்ள வேண்டுமென அறைகூவல் விடுத்தார்.

மாவட்டப் பொருளாளர் தோழர் செல்வகுமார் உரையாற்றினார். தொழிலாளி வர்க்கம் போராடிப் பெற்ற உரிமைகளை அனைத்தையும் காவு கொடுத்து வருகிறது அரசு. ஒருபுறம் மறுகாலனிய நடவடிக்கைகள் மூலமாகவும், மறுபுறம் காவிமயமாக்கல் நடவடிக்கைகள் மூலமாகவும் தொழிலாளி வர்க்கத்தை முதலாளிகள் மென்மேலும் சுரண்டும் வகையில் செயல்பட்டு வருகிறது அரசு. இதை முறியடிக்க வேண்டுமெனில் ஆளும்வர்க்கம், பிழைப்புவாதம், தனிநபர்வாத தொழிற்சங்கங்கள் தீர்வைத் தராது. புரட்சிகர சங்கமான பு.ஜ.தொ.மு-வில் அணிதிரள்வதன் மூலமாகவே தங்களின் பிரச்சனைகளை தீர்த்துக் கொள்ள முடியுமென உரையாற்றினார்.

மாநில இணைச் செயலாளர் தோழர் சுதேஷ் குமார்
மாநில இணைச் செயலாளர் தோழர் சுதேஷ் குமார்

இறுதியாக மாநில இணைச் செயலாளர் தோழர் சுதேஷ் குமார் அகில இந்திய பொது வேலை நிறுத்தத்தில் மத்திய தொழிற்சங்கங்கள் எவ்வாறு சமரசவாதக் கண்ணோட்டத்தோடு ஆளும் வர்க்கத்துக்கு வால் பிடித்துப் போகின்றன என்பதையும், குறிப்பாக BJP கட்சியின் தொழிற்சங்கமான BMS-ஐ இந்த வேலை நிறுத்தத்தில் சேர்த்துக்கொண்டது, யாரைப் பாதுகாக்க என கேள்வி எழுப்பி, இந்த தொழிற்சங்கங்கள் மோடிக்கு மறைமுகமாக ஆதரவு தருவதை அம்பலப்படுத்தினார். மேலும் தனது உரையில் அரங்கு இயக்க முழக்கத்தின் அடிப்படையில் ஒப்பந்த தொழிலாளர்கள் முறை தீவிரப்படுத்தப்படுவதையும், விவசாயத்தை நம்பி இருக்கும் பெரும்பான்மை மக்கள் இன்றைக்கு மரணக்குழியை நோக்கி தள்ளப்படுவதையும் அதற்கு உதாரணமாக சி.பொ.ம என்ற பெயரில் நிலங்கள் பறிக்கப்பட்டதையும், வளர்ச்சி என்ற பெயரில் ரியல் எஸ்டேட் மாஃபியா கும்பல்களால் கான்க்ரீட் காடுகளாக விவசாய நிலங்கள் மாற்றப்பட்டதால் விவசாயிகள் தற்கொலைக்கு தள்ளப்பட்டதற்கு காரணம் அரசுதான் என குற்றஞ்சாட்டினார். அதே போல சிறுவனிகம், சிறுதொழில், நெசவு தொழில்கள் அழிந்து போவதும் அதிலிருந்த மக்கள் பிழைப்புக்காக நகரத்தை நோக்கி தள்ளப்படுவதும், குறைந்த கூலியில் ஒப்பந்த தொழிலாளர்களாக ஆலைகளிலே பணிபுரிவதற்குக் காரணம் இந்த அரசின் தனியார்மய, தாராளாமய, உலகமயக் கொள்கைகள் என்றும் இந்த மறுகாலனியாக்க நடவடிக்கைகளை முறியடிக்க வர்க்கமாக அணிதிரள வேண்டுமென அறைகூவல் விடுத்தார். மேலும் உழைக்கும் மக்களை பிளவு படுத்துவதற்கு மோடியின் சங் பரிவார் அமைப்புகள் மதவெறி என்ற பெயரில் கொலைவெறியாட்டம் நடத்துவதை அம்பலப்படுத்தியும், மொத்தமாக இந்த அரசு நம்மை ஆளுவதற்கு தகுதியிழந்து விட்ட அரசாக இருப்பதை உதாரணஙகளோடு விளக்கி அரசுக் கட்டமைப்பை நொறுக்க தொழிலாளிகள் ஓரணியில் திரள வேண்டுமென அறைகூவல் விடுத்தார்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

300-க்கும் மேற்பட்ட தொழிலாளிகள் கலந்து கொண்ட இந்த ஆர்ப்பாட்டம் தொழிலாளி வர்க்கத்தின் மீதான சுரண்டலை முறியடிக்க புரட்சிகர தொழிற்சங்கமே மாற்று என்பதை பதிய வைப்பதாக அமைந்தது.

3. காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் தாலுக்கா அலுவலகம் எதிரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட துணைத்தலைவர் தோழர் சரவணன் தலைமை தாங்கினார். விண்ணதிரும் முழக்கத்துடன் துவங்கிய ஆர்ப்பாட்டத்தில், மாநில தலைவர் தோழர் அ.முகுந்தன் கண்டன உரையாற்றினார்.

தனியார்மய, தாராளமய, உலகமயத்திற்கு பிறகு விவசாயம் எவ்வாறு அழிக்கப்பட்டு வருகிறது என்றும் பல வகையான சிறு தொழில்களை பன்னாட்டு கம்பெனிகளிடம் ஒப்படைத்த மோடியை அம்பலப்படுத்தியும், சிறு வணிகத்தை கொள்ளையடித்த ஆன்லைன் வர்த்தகத்தை அம்பலப்படுத்தியும் பேசினார். மேலும் இன்றைய மறுகாலனியாக்க சூழலில் தொழிலாளர்கள் காண்ட்ராக்ட் முறையில் சுரண்டப்படுவதையும், கொத்தடிமைத்தனத்தையும், அரசு துறை முதல் தனியார் வரை காண்ட்ராக்ட் முறை வளர்ந்து தொழிலாளர்கள் முதல் மருத்துவர்கள், செவிலியர்கள், பேராசிரியர்கள், ஆசிரியர்கள் என அனைவரும் காண்ட்ராக்ட் முறைக்கு பலிகடா ஆக்கப்படுவதையும் அம்பலப்படுத்தி பேசினார். இப்பேராபத்தான சூழலில் வேலை நிறுத்தம் அறிவித்து அதை கைவிட்ட துரோகிகளை, பிழைப்புவாத சங்கங்களை அம்பலப்படுத்தியும், தொழிலாளி வர்க்கத்தின் உரிமைகளை மீட்க புரட்சிகர சங்கங்களில் அணி திரள வேண்டும் என்றும், புதிய ஜனநாயகப் புரட்சி மட்டுமே இதற்கெல்லாம் தீர்வாக இருக்கும் என்றும் கண்டன உரை ஆற்றினார்.

நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்களும், ஏனைய உழைக்கும் மக்களும் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தின் பங்கேற்பாளர்களாக இருந்தனர்.

sep2-ndlf-kanchi-demo-contract-labour-3காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் ஹூண்டாய்,நிசான் மற்றும் ஃபோர்டு போன்ற பன்னாட்டுக் கார் கம்பெனிகளும், சாம்சங் போன்ற மின்னணு பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்களும், இந்த நிறுவனங்களுக்கு உதிரிப் பாகங்களை சப்ளை செய்கின்ற நூற்றுக்கணக்கான துணை நிறுவனங்களும் இயங்கி வருகின்றன.

இவற்றில் இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். பல்லாயிரம் கோடி ரூபாய் இலாபத்தை வாரிக்கொட்டுகின்ற இந்த தொழில் மையத்தில் பணிபுரிபவர்களில் 70% பேர் காண்டிராக்ட் தொழிலாளர்கள் தான். காண்டிராக்ட் தொழிலாளியானாலும், நிரந்தரத் தொழிலாளியானாலும் தங்களது உரிமைகள் பற்றி கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத நிலை தான் இங்கிருக்கிறது. நாடு தழுவிய வேலைநிறுத்தம் நடந்த போதிலும், இங்கிருக்கின்ற அனைத்து நிறுவனங்களும் முழுமையாக இயங்கின. இந்த நிறுவனங்களில் தொழிற்சங்கம் அமைக்கின்ற உரிமையே கிடையாது.இந்தியாவின் எந்த ஒரு சட்டமும் இங்கு செல்லுபடியாகாது. உள்நாட்டுக்குள் ஒரு தனி சாம்ராஜ்ஜியமாக பன்னாட்டு நிறுவனக்களின் சாம்ராஜ்ஜியமாகத் தான் இங்கிருக்கின்ற சிறப்புப் பொருளாதார மையங்கள் இருக்கின்றன. நாடு தழுவிய வேலைநிறுத்தம் நடப்பதற்கான சுவடு கூட இல்லாமல் இந்த தொழில் மையங்கள் இயங்கின. இந்த மயான அமைதியை உடைத்திட வேண்டும் என்கிற இலக்கோடு பு.ஜ.தொ.மு-வின் ஆர்ப்பாட்டம் நடந்தேறியது.

இறுதியாக K.P.M மாவட்ட பு.ஜ.தொ.மு உறுப்பினர் சங்கர் நன்றியுரை கூறினார்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

4. கோவை:

த்திய தொழிற்சங்கங்கள் 12 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி செப்.2 அன்று நாடு தழுவிய பொது வேலை நிறுத்தத்தை அறிவித்திருந்தன. (தனியார், தாராள மற்றும் உலக) மும்மயக் கொள்கை அமலான 1990 களிலிருந்து இது போல் 17 வேலை நிறுத்தங்கள் நடந்துள்ளன. இதே போல் 2015 செப்.2 அன்றும் அகில இந்திய வேலை நிறுத்தம் நடந்தது. அதன்பிறகு இந்த ஒரு வருடத்தில் மத்திய தொழிற்சங்கங்களை அழைத்து மோடி அரசு பேச்சுவார்த்தை நடத்தவில்லை. அகில இந்திய வேலை நிறுத்தங்களை மோடி அரசு ம….க்கு (மருந்துக்குதான்) கூட மதிப்பதில்லை. அடுத்து என்ன செய்வதென ஒட்டுக் கட்சி தொழிற்சங்கங்களுக்கும் தெரியாமல் மீண்டும் மீண்டும் செக்கு மாடு போல் ஒரே பாதையில் தொழிலாளர்களை வழிநடத்தி போகின்றனர்.

திசை வழி அறியாதவர்கள், நடுநிலை வாதிகள் நடத்தும் வேலை நிறுத்தம் என்றால் கூட அதனை பலப்படுத்தும் நோக்கோடு தனிப்பட்ட கோரிக்கைகளுடன் புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி கலந்து கொண்டது. இதில் நமது சொந்த கோரிக்கைகளோடு கலந்து கொண்டதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன.

திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர் சக்திவேல் அவர்களின் 27 ஆண்டு சேவையை (!) பாராட்டி ஏறத்தாழ இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்ற அனைத்து தொழிற் சங்கங்களும் விழா எடுத்தன. 1-ம் தேதி முதலாளிக்கு பாராட்டு விழா. 2-ம் தேதி தொழிலாளிக்கு ஆதரவாய் போராட்டமாம். முதலாளியை எதிர்க்காமல் தொழிலாளிக்கு ஆதரவாய் போராடுவது எப்படி ? இதில் அடங்கியிருக்கிறது சி‌.பி‌.எம், சி‌.பி‌.ஐ.-யின் அரசியல். இது போன்ற அரசியல் ஓட்டாண்டிகளையும் பிழைப்புவாத பிதாமகன்களையும் விமர்சிப்பதை (JAC) ஏற்பதில்லை.

எனவே தனியான கோரிக்கைகளோடு கலந்து கொண்டோம். எனவே விவசாயம் சிறுவணிகம் நெசவு குறுதொழில் போன்றவற்றை அழித்து காண்ட்ராக்ட் சுரண்டலை தீவிரப்படுத்துகின்ற கார்ப்பரேட் மூலதனத்தை முறியடிப்போம் என்பது நமது கோரிக்கை.

இதனடிப்படையில் காந்திபுரம் திருவள்ளுவர் பேருந்து நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கேட்டோம். அங்கு அனுமதி மறுத்து தெற்கு தாசில்தார் அலுவலகம் அருகில் நடத்துங்கள் என்றனர். அதை மறுத்து காந்திபுரத்தில்தான் செய்வோம் எனக் கூறிவிட்டோம்.

கோவையில் பு.ஜ.தொ.மு செயல்படும் இடங்களிலெல்லாம் வேலை நிறுத்த நோட்டீஸ் கொடுத்து வாயில் கூட்டம் நடத்தி பிரச்சாரம் செய்யப்பட்டது. ஏறத்தாழ அனைத்து தொழிலாளர்களும் வேலைக்கு செல்லாமல் புறக்கணித்ததனர். நிர்வாகத்துக்கு எரிச்சலூட்டும் வகையில் எச்‌.ஆர் முகத்தில் நமது தோழர்கள் கரியை பூசினர்.

2-ம் தேதியன்று காந்திபுரம் பேருந்து நிலையம் அருகே செஞ்சட்டை மற்றும் பதாகைகளுடன் கூடியிருந்தோம். பல்வேறு தரப்பை சேர்ந்த உழைக்கும் மக்கள் சுற்றிலும் கூடி நின்று ஆர்ப்பாட்டத்தை ஊக்கப்படுத்தினர். ஐ‌.எஸ், க்யூ போன்ற உளவுப் படையணிகள் முழுவதும் அழையா விருந்தாளிகளாக வந்து சூழ்ந்து நின்று கொண்டிருந்தனர். நாம் அவர்களிடம் கலெக்டர் ஆபீஸ் போராட்டத்துக்கு போகாமல் இங்கு ஏன் வந்தீர்கள் என கேட்டோம். எங்களுக்கு அது முக்கியமில்லை இதுதான் முக்கியம் என்று கூறிவிட்டார்கள். பு.ஜ.தொ.மு கோவை மாவட்டத் தலைவர் கோபி தலைமையில் 10:30 க்கு ஆர்ப்பாட்டம் துவங்கியது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

sep2-ndlf-kovai-demo-contract-labour-051½ வயது குழந்தை முதல் 65 வயது தோழர் வரை நிகழ்கால எதிர்கால தலைமுறையினர் உள்ளடங்கி சுமார் 170 பேரின் பங்களிப்போடு போராட்டம் நடந்தது. தோழர் விளவை இராமசாமி ஆர்ப்பாட்ட நோக்கத்தை விளக்கி பேசினார். குறிப்பிட்ட நேரத்துக்கு பின் காவல்துறை அனைவரையும் கைது செய்ய முனைந்தது. 1½ வயது குழந்தையை கைது செய்ய மாட்டோம் என பெண் காவல் அதிகாரி போலி அதிர்ச்சி காட்டினார். 5 வயது குழந்தைக்கு சாதிவெறியில் பாலியல் வழக்கு போட்ட கும்பலின் நடிப்பை சட்டென நினைவுக்கு வந்து பின்னர் ஆயாசத்துடன் “அதையெல்லாம் நீங்க முடிவு செய்யக்கூடாது“ என நமது தோழர் சொல்ல, செஞ்சீருடை அணிந்த அக்குழந்தை செவ்வணக்கம் வைத்து அவரை வழியனுப்பி வைத்தது. காந்திபுரம் அருகேயே ஆம்னி பேருந்து நிலையம் இருந்ததால் செமீ ஸ்லீப்பர் பஸ்களை மிரட்டி அழைத்து வந்திருந்தனர். கைது செய்யப்பட்டு அண்ணாமலை அரங்கத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டோம்.

பெயர் கொடுக்கும் சடங்கு முடிந்தவுடன் கோவை மண்ணில் மலர்ந்து உதிர்ந்த செம்மலர் தோழர் மணிவண்ணனுக்கு மவுன அஞ்சலி செலுத்தி அரங்குக் கூட்டம் துவங்கியது.

பு.ஜ.தொ.மு கோவை மாவட்ட பொருளாளர் தோழர் நித்தியானந்தன் தலைமை தாங்கினார்.

கம்போடியா மில் கிளை தோழர் மோகன்ராஜ், “மோடி அரசு பி‌ஜெ‌பி அரசின் கொள்கை என்ன ? இந்த நாட்டை இந்து நாடாக மாற்றுவதற்காக வேலை செய்கிறார்கள். இத்தகைய ஆதிக்க சக்திகள் தான் ஆட்சி நடத்துகின்றன. பல்வேறு வகைகளில் சட்டங்களை திருத்தி முதலாளிகளுக்கு சாதகமாக இந்த அரசு நடந்து வருகிறது. கல்விக் கொள்கைகைகளை திருத்தி நாட்டை காவிமயமாக்கி வருகிறது. கடன் வசூலிக்கும் பொறுப்பை ரிலையன்சுக்கு கொடுக்கிறார்கள். இதையெல்லாம் முறியடிக்க நீண்ட நெடிய போராட்டமானது தேவைப்படுகிறது” எனக் கூறி முடித்தார்.

மக்கள் கலை இலக்கியக் கழக தோழர் சம்புகன், “இந்த போராட்டமானது நாடு முழுவதும் நடைபெறுகிற அடையாளப் போராட்டம். நமது போராட்டமானது தனித்துவம் வாய்ந்தது. மதவெறி ஊட்டுகிற மோடி அரசை எதிர்த்து நாம் போராடுகிறோம். ஊர் ஊராக சுற்றும் பிரதமர் இங்கு இந்தியாவில் விரல் விட்டு எண்ணக் கூடிய நாட்களே இருக்கிறார். இந்த அரசு கொண்டு வந்த கல்விக் கொள்கைக்கு நாடு முழுவதும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. பு.மா.இ.மு நேற்று ஒரு பொதுக்கூட்டத்தை நடத்தியுள்ளது இதே கல்விக் கொள்கைக்கு எதிராக. இதை நாம் முறியடிக்க வேண்டும்” என்றார்.

எஸ்‌.ஆர்‌.ஐ கிளை செயற்குழு தோழர் சரவணன், “ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் போடுவதாக பிரச்சாரம் செய்த மோடி ரெண்டு வருசத்துல ஒண்ணும் செய்யல. அமெரிக்க முதலாளிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தியவுடன் தொழிலாளர் நலச்சட்டங்கள் திருத்தப்படுகின்றன. வழக்கொழிந்த மொழியான சமஸ்கிருதத்தை கொணர்கிறார்கள். ஆனால் ஏற்றத் தாழ்வை போதிக்கும் மொழிதான் சமஸ்கிருதம். அனைத்து ஆலைகளிலும் தொழிலாளர் ஆதிக்கத்தை நிலை நிறுத்த இவற்றை நாம் முறியடிக்க வேண்டும்” எனக் கூறினார்.

மண்டல சங்கத் தோழர் ஜெகநாதன், “ஆறுகளை அழித்தது அரசு. ஆறுகள் அழிந்ததால் விவசாயம் அழிந்தது. கங்கை ஆற்றை கழுவேற்றியது பார்ப்பனியம்” உள்ளிட்டு பல விசயங்களை கூறி சிரிக்கவும் சிந்தக்கவும் வைக்கும் வகையில் உரையாற்றினார்.

பு.ஜ.தொ.மு மாநில துணைத் தலைவர் விளவை இராமசாமி, 1901ஆம் ஆண்டு ரஷியா புற நிலைமை எப்படி இருந்ததோ அதே போல் நிலைமைதான் தமிழகத்தில் கோவையில் நிலவுகிறது. ஆனால் பிரச்சினை எங்கே என்றால் தொழிலாளர்களுக்கு தலைமை தாங்கும் தலைவர்களிடமும் அவர்களின் முன்முயற்சியின்மையிலும் உணர்வின்மையிலுமே இருக்கிறது. பிழைப்புவாதம் எவ்வடிவத்தில் வந்தாலும் அதை புயல் வேகத்தில் போராடி முறியடிக்க வேண்டும். மனித குலத்தின் முன்னால் கோவை பாட்டாளி வர்க்கத்தின் முன்னால் வரலாறு இரண்டு பாதைகளை காட்டுகிறது. ஒன்று முதலாளித்துவ சித்தாந்தம் இரண்டு சோசலிச சித்தாந்தம். மூன்றாவது பாதை கிடையாது. மூன்றாவது பாதை இருப்பதாக சொல்பவன் சுரண்டல்காரர்களுக்கு சொம்பு தூக்குபவன். கம்யூனிச பாதையில் நடை போட அமைப்பு தேவை. அமைப்பை கட்டுவதில் அணி திரட்டுவதில் 1000 பிரச்சினை இருக்கலாம். அதிலிருந்து அணுவளவு விலகினாலும் முதலாளித்துவத்தை ஆதரிப்பதாக பொருள். எனவே வாழ்க்கையை முதலாளித்துவத்துக்காக செலவழிக்க முடியாது. அந்த அடிப்படையில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி நடைபோடுகிறது. இந்தப் பாதையில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை அணிதிரட்டி 1917ஆம் ஆண்டுப் புரட்சியை இங்கே நிகழ்த்துவோம்” எனக் கூறி முடித்தார்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

இறுதியாக மாவட்டச் செயலாளர் தோழர் திலீப் தனது நன்றியுரையில், “நமது அமைப்பை எதிரிகள், கருங்காளிகள், போலிகள், போலீஸ் உளவாளிகள் என அனைவரும் ஒரு சேர எதிர்க்கின்றனர். அந்த வகையில் நமது வளர்ச்சி பிரம்மாண்டமாக உள்ளது. எதிரி நம்மை தாக்காவிட்டால் நாம் எங்கோ தவறு செய்வதாகப் பொருள் என்றார் தோழர் மாவோ. எனவே எல்லாவற்றையும் கணக்கில் எடுத்து முன்னேறுவோம்” என நன்றி கூறி முடித்தார்.

5. ஓசூர்

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் கிருஷ்ணகிரி மாவட்டக்குழுவின் சார்பில் ஓசூர் பழைய நகராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தோழர் வெங்கடேசன் முன்னிலையில் இவ்வமைப்பின் பாகலூர் பகுதி பொறுப்பாளர் தோழர் இரவிச்சந்திரன் தலைமையேற்று நடத்தினார். பு.ஜ.தொ.மு வின் மாநில துணைத்தலைவர் தோழர் பரசுராமன் கண்டன உரையாற்றினார்.

இறுதியாக தோழர் ராஜி நன்றியுரையாற்றினார். இதில் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தோழர்கள் பெண்கள் குழந்தைகள் உள்ளிட்டோர் பலரும் கலந்து கொண்டனர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

6. புதுச்சேரி:

புதுச்சேரி நகரப் பகுதியான பழைய பேருந்து நிலையம் அருகில் புதுச்சேரி புஜதொமு துணைத்தலைவர் தோழர். சுதாகர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.

sep2-ndlf-puduvai-demo-contract-labour-posterஆர்ப்பாட்டத்திற்கு போலிசு அனுமதி மறுத்தாலும், நமது அரசியல் கோரிக்கைகளின் முக்கியத்துவத்தை மக்களுக்குக் கொண்டு செல்லும் வகையில், திட்டமிட்ட அடிப்படையில் பழைய பேருந்து நிலையம் அருகில் கூடி, புஜதொமு இணைச் செயலாளர் தோழர், லோகநாதன் போராட்டத்தின் நோக்கத்தை தொழிலாளர்களிடம் விளக்கிப் பேசி, அங்கிருந்து அருகில் உள்ள வெங்கட சுப்பா ரெட்டியார் சதுக்கம், சாலை சந்திப்பில் மறியல் செய்வதற்காக பேரணியாக சென்ற போது, சதுக்கத்தின் அருகில் போலிசு வழிமறித்து கூடியிருந்த 160 தோழர்களையும் கைது செய்து, அங்கிருந்து கடற்கரை அருகில் உள்ள மண்டபத்திற்கு கொண்டு சென்றது. மற்ற ஓட்டுக் கட்சி சங்கங்கள் போல், இறக்கியவுடன் கலைந்து சென்றுவிடுவார்கள் என்று எண்ணி மண்டப வாயிலிலேயே இறக்கி விட்டு, கண்டும் காணாமல் நின்றது போலிசு. ஆனால், நாம் அந்த இடத்தை விட்டு அசையாமல் தொடர்ந்து முழக்கமிட்டோம். இறக்கிய இடத்திலேயே அமர்ந்து தொடர்முழக்கமிட்ட பின்னரே நிலைமையை உணர்ந்து பதட்டமடைந்த போலிசு, கைது செய்த தோழர்களை வழக்கமான கணக்கெடுப்பு வேலைகளுக்குப் பிறகு, அங்கிருந்து விடுதலை செய்தது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

தகவல்:
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
தமிழ்நாடு.