Saturday, October 31, 2020
முகப்பு மறுகாலனியாக்கம் கல்வி தொழிலாளிகளை ஏற்றுமதி செய்ய விரும்புகிறது மோடி அரசு

தொழிலாளிகளை ஏற்றுமதி செய்ய விரும்புகிறது மோடி அரசு

-

மோடி அரசின் புதியக் கல்விக்கொள்கை – சமஸ்கிருத திணிப்புக்கு எதிராக, செப்டம்பர் – 1, 2016 அன்று சென்னை – மதுரவாயலில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி நடத்திய பிரம்மாண்டமான பொதுக்கூட்ட உரைகள் (தொடர்ச்சி..)

குடியாத்தம் அரசுக் கல்லூரியின் முன்னாள் முதல்வர் பேரா ப.சிவக்குமார்

rsyf-meeting-against-new-education-policy1932 தொடங்கி இந்தியை எதிர்க்கிறோம். இந்த மண்ணில் சி.என்.அண்ணாதுரை எழுதிய ஆரிய மாயை வந்த போது கடுமையான எதிர்ப்பை தி.மு.க சந்தித்தது. பெரியார் பிள்ளையாரை போட்டு உடைத்தார், அந்த மண்ணில் இன்று பிள்ளையார் விஸ்வரூபமாக எடுத்துள்ளது. இதை ஏற்றுக்கொள்ளப் போகின்றோமா? அன்று மெக்காலே கல்வி முறை உடலால் ரத்தத்தால் இந்தியனாக, சுவையாலும் சிந்தனையாலும் ஆங்கிலேயனாக இருப்பதை நோக்கமாகக் கொண்டிருந்தது. அதுபோல் இன்று வேதமய – சமஸ்கிருதமயக் கல்வி புகுத்தப்படுகிறது, இதை நாம் எதிர்க்க வேண்டும். இந்தித் திணிப்பை எதிர்த்துப் போராடி முறியடித்த வரலாறுக்குத் சொந்தக்காரர்கள் பச்சையப்பன், மாநிலக் கல்லூரி உள்ளிட்ட தமிழகத்தின் கல்லூரி பள்ளி மாணவர்கள். இத்தகைய மாணவர்கள் இளைஞர்களால்தான் இன்றைக்கு புதியக் கல்விக்கொள்கையை முறியடிக்க முடியும். ஆளும் வர்க்கத்தின் அதிகாரத்தைத் தக்க வைக்கவே புதிய கல்விக்கொள்கை கொண்டு வருகிறார்கள். இது இந்துமதவெறி பாசிசத்தை நோக்கி, வேத கலாச்சாரம் நோக்கி மட்டுமல்ல, அடுத்து, வெளிநாட்டு கல்வி நிறுவனங்கள் வரும், சிறப்புக் கல்வி மண்டலம், IES – வரப் போகிறது. கல்வியை மாநில பட்டியலில் இருந்து எடுத்து விடப்போகிறார்கள்.

புதிய கல்விக் கொள்கை ஒரு பக்கம் வணிகமயத்தையும், இன்னொரு பக்கம் காவிமயத்தையும் கொண்டு வருகிறது. இதற்கு எதிரான போராட்டம் என்பது பச்சையப்பன் கல்லூரி மாணவர்களின் டாஸ்மாக் எதிர்ப்புப் போராட்டம் போல் மாணவர்கள் மத்தியில் இருந்து துவங்க வேண்டும் என்று கூறி முடித்தார்.

அகில இந்திய கல்வி உரிமைக்கான கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புச் செயலர் திரு.ரமேஷ் பட்நாயக் புதிய கல்விக் கொள்கைக்கான ஆவணம் சதித்தனமாக தயாரிக்கப்பட்டுள்ளதை அம்பலப்படுத்தினார், அவர் உரையில் இருந்து,

ramesh-patnaik-aifrte-1
அகில இந்திய கல்வி உரிமைக்கான கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புச் செயலர் திரு.ரமேஷ் பட்நாயக் (வலது)

ஏப்ரல் 30 ல், TSR.சுப்ரமணியன் கமிட்டி அளித்த அறிக்கையை பொது தளங்களில் வெளியிட மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் விரும்பவில்லை. குறிப்பாக மக்களின் அடிப்படை உரிமைகளில் ஒன்றான கல்வி உரிமை பற்றிய ஒரு அறிக்கையை வெளியிடாமல் மக்களை / நாட்டை இருட்டில் வைப்பது என்பது ஜனநாயகமற்றது மற்றும் வன்மையாக கண்டிக்கத்தக்கது.

தற்போது – பு.க.கொ – சில உள்ளீடுகள் என்ற தலைப்பில் ஒரு ஆவணத்தை வெளியிட்டுள்ளது. ஜூலை 31-க்குள் மக்களிடம் கருத்து கேட்டது. அந்த ஆவணம் எதிர்பார்த்தபடி, வணிகமயமாக்கலையும், சாதீய பிளவுகளையும் உருவாக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.

கல்வி குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள மோசமான ஆவணம் இது. கல்வியில் வணிகமயமாக்கலை ஒழிப்பதற்கு பதிலாக அதற்கு வசதி வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்க வகை செய்துள்ளது. மேலும் ஆளும் வர்க்கத்துக்கு உகந்த கொள்கையான PPP (பொதுத்துறை தனியார் கூட்டு) என்பதை மேலும் தீவிரமாக நடைமுறைப்படுத்தும் என்பதை தெளிவுபடுத்தியுள்ளது.

எனவே, தற்போதுள்ள அரசு இயல்பாகவே பொதுக்கல்வி முறை, பொதுப் பள்ளி முறை பற்றி பேசாது. உலகமயமாக்கல் மூலம் கல்விச் சேவையில் வர்த்தகத்தை நிறுவுவதன் மூலம் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களை அனுமதிக்கும் சட்டங்களைக் கொண்டு வருவதற்கான அடிப்படையை உருவாக்குகிறது.

மறுபக்கத்தில் அரசு மீண்டும் மனு தர்மத்தை நிலைநாட்டத் துடிக்கிறது. தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, பழங்குடியின மற்றும் மத, மொழி, இன சிறுபான்மையினருக்கு கல்வியை மறுப்பது என்பது மட்டுமல்லாமல் இந்தப் பிரிவினரை திறன் மேம்பாட்டு பயிற்சி கொடுத்து மீண்டும் சாதிய குலக்கல்வி முறைக்குள் தள்ளுகிறது. குழந்தை தொழிலாளர் முறை ஒழிக்கப்படாது. ஆனால், மாற்றுப் பள்ளிகள் என்ற பெயரில் குழந்தை தொழிலாளர் முறை நிறுவனப்படுத்தப்படும் என்கிறது.

ramesh-patnaik-aifrte-2திறந்த நிலை பள்ளிகள், திறந்த நிலை கல்லூரிகள், மற்றும் திறந்த நிலை கல்வி பெறும் வசதிகள் என்றும், திறம் மேம்பாட்டுப் பயிற்சி என்றும் மாணவர்கள் மீது அரசு திடீர் தாக்குதல் நடத்த உள்ளது. எனவே, சாதி,மத,பாலின,மொழி,இன அடிப்படையில் உரிமை மறுக்கப்பட்ட பிரிவினர்களான பெரும்பான்மையினர் முறையான கல்வியைப் பெற முடியாது. இவர்களில் பெரும்பான்மையினருக்கு ஆரம்பக் கல்விக்கு அடுத்தக்கட்டமாக, 5ம் வகுப்பிற்கு பிறகு இனி கல்வி மறுக்கப்படும்.

ஆவணத்தில் எந்த இடத்திலும் இடஒதுக்கீடு தேவை குறித்தும், அனைத்து கல்வி நிறுவனங்களிலும், எல்லா நிலைகளிலும், எதிலும் இடஒதுக்கீடு செய்வது குறித்து பேசவே இல்லை. அதேபோல், ஏழ்மையான சமூக ரீதியில் பின் தங்கியவர்களை பள்ளி/ கல்லூரி/ பல்கலைக்கழகங்களுக்கு கொண்டு வருவதற்கேற்ப விடுதிகளை அமைப்பது குறித்தும், மற்ற அடிப்படையான வசதிகளை செய்வது குறித்தும் குறிப்பிடப்படவே இல்லை.

தேசிய இனங்களின் மொழிகளுக்கு முக்கியத்துவமில்லை. 5ம் வகுப்பு வரை மட்டுமே தாய்மொழிவழிக் கல்வி அனுமதிக்கப்படும். மேலும் ஆரம்ப நிலையிலேயே ஆங்கிலவழிக் கல்வியை அறிமுகப்படுத்த மாநில அரசுகளுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அவர்களின் பொருட்களை உற்பத்தி செய்வதற்கேற்ப மலிவான உழைப்புச் சந்தையை ஏற்படுத்தவே தாய்மொழிவழிக்கல்விக்கு எதிராக அரசு தெளிவாக உள்ளது. அனைத்து மாநிலங்களிலும் பள்ளி, கல்லூரி அளவில் சமஸ்கிருதம் அறிமுகப்படுத்தப்படும். பெரும்பான்மையினருக்கு எதிராக ஒரு குறிப்பிட்ட பண்பாடு, மதம், மொழி, சாதி, பாலினம் ஆகியவை குறித்த பெருமைகள் சமஸ்கிருதம் மூலம் திணிக்கப்படும்.

இந்திய வரலாற்றின் மத்திய காலப் பகுதி (RSS இதனை முசுலீம்களின் காலம் என்கிறது) பற்றி அந்த ஆவணத்தில் இல்லை. இந்த மண்ணின் நாகரிக வளர்ச்சிக்கு அந்த காலத்தின் பங்களிப்பைக் குறைத்து மதிப்பிடுகிறது. ஒரு குறிப்பிட்ட பிரிவினரை சார்ந்த அரசின் இந்த அணுகுமுறை என்பது மற்ற மத, இன, மொழி சிறுபான்மையினரின் பங்களிப்புகளை அலட்சியம் செய்கிறது அல்லது குறைத்து மதிப்பிடுகிறது என்பதாகும். பல்கலைக்கழக வளாகங்களில் ஜனநாயக உரிமைகள் குறித்து பேசும் போது, மாணவர்கள் – ஆசிரியர்களின் நடவடிக்கைகள் மீது தடை விதிக்கும் வகையிலும் நவீன தாராளவாதமாக்கலும், சாதிய வன்முறைகளுக்கும் ஏதுவானதாக உள்ளது புதிய கல்விக் கொள்கை.

பாடத்திட்டத்தை மையமாக்குவது மற்றும் நிர்வாகத்தின் அதிகாரத்தை குவிப்பது மூலம் கட்டுப்பாட்டை நிலைநாட்டுவது என்பதும், இன்னொரு பக்கம் கல்வி முறையை உலக சந்தைக்கேற்ப உள்ளடக்கத்திலும் வடிவத்திலும் மாற்றுவது என்பதையும் செய்கிறது. இந்த புதியக் கல்விக் கொள்கை என்பது கார்ப்பரேட் முதலாளிகளுக்கு சேவை செய்யக் கூடியதாக உள்ளது இதன் மூலம் கல்வியை மேலும் வணிகமயமாக்குவது, சாதிய ஏற்றத்தாழ்வை உருவாக்குவதையும் செய்ய விரும்புகிறது.

உலக வர்த்தகக் கழகத்தின் கீழ் ஒப்பந்தங்களை போட்டு நிறைவேற்றி கல்விச் சேவையில் வர்த்தகத்தை நுழைக்கிறது. மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் உரிமைகள், பல்கலைகழகங்களின் தன்னாட்சி குறித்து அஞ்சுகிறது. கல்வியை வணிகமயமாக்கும் திட்டத்தை எதிர்க்கும் எத்தகைய சக்தியையும் அழிக்க நினைக்கிறது. ஆட்சியில் உள்ள கட்சியின் புதிய தாராளவாத – பாசிசத்தை அஜெண்டாவாக அரசின் இந்த கல்வி கொள்கையில் வெளிப்படுகிறது. அரசியல் சாசன நெறிகளை மீறுகிறது.

இந்த நாட்டின் மக்கள், மாணவர்கள் இந்த தாக்குதலுக்கு எதிராக தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். இதை முறியடிக்க வேண்டும், கல்வி வணிகமயமாவதை ஒழிக்க வேண்டும், அரசால் நடத்தப்படக் கூடிய பொதுக் கல்வி முறைக்கு போராட வேண்டும். அனைவருக்கும் ஆரம்பக் கல்வி முதல் ஆராய்ச்சிக் கல்வி வரை இலவச, கட்டாய, தரமான கல்வி கிடைக்க போராட வேண்டும். பழமையான மூடபக்திக்கு எதிராக அறிவியல் வளர்ச்சிக்கு பாடுபட வேண்டும். இந்தியா பல்தேசிய இன-மொழி-பண்பாட்டைக் கொண்டது, கல்வி முறையும் இவையனைத்திற்காகவும் இருக்க வேண்டும்.

சமத்துவம் மற்றும் சமூக நீதி அடிப்படையிலான சமூக மாற்றம் ஏற்பட கல்வி முறை ஆதாரத் தூணாக வேண்டும். இந்தியாவின் பல்தேசிய – மத- மொழி, சமூக – பண்பாட்டு விழுமியங்களுக்கு ஏற்ப, ஜனநாயக, மதச்சார்பற்ற, அறிவியல்பூர்வமான, சமத்துவமான கல்வி முறையை உருவாக்க உழைப்போம்!

சென்னை ஐ.ஐ.டி அம்பேத்கர்-பெரியார் வாசகர் வட்டத்தின் சார்பில் திரு. ரமேஷ் உரையாற்றுப்போது,

சென்னை ஐ.ஐ.டி அம்பேத்கர்-பெரியார் வாசகர் வட்டத்தின் சார்பில் திரு. ரமேஷ்
சென்னை ஐ.ஐ.டி அம்பேத்கர்-பெரியார் வாசகர் வட்டத்தின் சார்பில் திரு. ரமேஷ்

80% மக்களுக்கு இனி கல்வி இல்லை என்பது தான் புதிய கல்விக் கொள்கையின் நோக்கம். புதிய கல்விக் கொள்கை இரண்டு முக்கியமான விசயங்களை முன் வைக்கிறது,

1) இந்து ராஷ்டிரத்தைக் கட்டியமைப்பதற்கான ஒரு செயல் தந்திரம்
2) ஏகாதிபத்தியத்திற்குத் தேவையான கொத்தடிமைகளை உருவாக்கிக் கொடுப்பது

இவற்றைத் தான் இது முக்கிய நோக்கமாக கொண்டுள்ளது. இந்த வாரம் நிர்மலா சீதாராமன் பேசியதைப் பாருங்கள்,

“இந்தியாவில் ஸ்கில்டு லேபர் நிறைய பேர் இருக்கிறார்கள், கோடிக்கணக்கில் உள்ளனர், இவர்கள் எல்லாரையும் நாங்கள் வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்வதற்கு சர்வதேச அளவில் இருக்கும் சட்டங்கள் எல்லாம் கடுமையாக உள்ளது, இந்த சட்டங்கள் எல்லாவற்றையும் தகர்க்க வேண்டும்” என உலக வர்த்தக கழகத்தில் இந்தியா முன்மொழிந்துள்ளது என்கிறார்.

அப்படியென்றால் 80% மக்களுக்கு கல்வி கொடுக்காமல் எல்லோருக்கும் தொழில்பயிற்சி கொடுத்து அவர்கள் எல்லோரையும் ஸ்கில்டு லேபராக மாற்றுவது – இவர்கள் எல்லாரையும் கொத்தடிமைகளாக வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்வது.

அதாவது, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் இந்தியாவைக் காலனியாக்கிய போது தேயிலைத் தோட்டங்களுக்காக, ரயில்வே போடுவதற்காக, எங்கெல்லாம் காலனி பிடித்தானோ அங்கெல்லாம் உள்கட்டமைப்பு வசதிகளுக்காக இங்கிருந்து கொத்தடிமைகளாக ஏற்றுமதி செய்தான் – பர்மா, இலங்கை, தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளில். அது பழைய நிலை.

இது புதிய கொத்தடிமை முறை. அதே போல் ஒரு பிரிவினருக்கு மட்டுமே உயர்கல்வி. புதிய கல்வி கொள்கை சொல்வது என்ன – எல்லா அரசு பள்ளி/கல்லூரி/பல்கலைக்கழகங்களுக்கும் அரசு மானியம் கொடுக்கக் கூடாது. நீங்களே பணம் ஏற்பாடு செய்து கொள்ளுங்கள். அதாவது லட்சக்கணக்கில் மாணவர்களிடமிருந்து வாங்குங்கள் என்கிறது. இதன் மூலம் யாரிடம் பணம் இருக்குதோ, அவர்கள் மட்டுமே படிக்க முடியும். பெரும்பான்மையான மக்களுக்கு கல்வியை மறுத்து வெறும் உடல் உழைப்பில் ஈடுபட வைத்து, ஒரு சிறு கூட்டத்திற்கு மட்டும் கல்வியைக் கொடுப்பது. எதை மனு தர்மம் சொன்னதோ, எதை பார்ப்பனர்கள் முன்வைத்தார்களோ, அதே விசயத்தைத் தான் புதிய கல்விக் கொள்கை முன்வைக்கிறது. அது முன்பிருந்த மனுதர்மம், இது புதிய குலக்கல்வி முறை.

சமஸ்கிருதம் மேன்மையானது என்று பொய்யான கதைகளை பரப்புகிறார்கள். சமஸ்கிருதம் எல்லா மொழிகளின் வளர்ச்சிக்கு பயன்பட்டிருக்கிறது என்கிறான். சமஸ்கிருதம் வாயிலாக வேத கலாச்சாரத்தை சொல்லிக் கொடுக்க நினைக்கிறான்.

சமஸ்கிருதம் கலாச்சார ரீதியாக இந்தியாவை ஒற்றுமைப்படுத்தியதாம், எனவே ஒன்றாம் வகுப்பிலிருந்து PH.D வரை எல்லாருக்கும் சமஸ்கிருத பாடம் கட்டாயம் என்கிறான் – இவன் சொல்லும் கலாச்சாரம் யாருடையது – அது வேத கலாச்சாரம், அது பார்ப்பனர்களுடைய கலாச்சாரம். எனவே இவன் முன்வைக்கும் சமஸ்கிருதம் என்பது இவன் முழுமையாக கட்டியமைக்க நினைக்கிற இந்து ராஷ்டிரத்திற்கான கனவு. நீண்டகாலமாக ஆர்.எஸ்.எஸ் எப்படி அந்தக் கனவை வைத்திருக்கிறானோ, அந்தக் கனவை நடைமுறைப்படுத்துவதற்கான ஒரு செயல்வடிவம் தான் புதிய கல்விக் கொள்கை.

ஆனால் இந்து ராஷ்டிரம் என்பது வெறும் இந்துத்துவாவை மட்டும் திணிப்பதல்ல – இந்து ராஷ்டிரம் என்பது – உழைக்கும் சாதியின் மீது பார்ப்பனர்கள் கொண்டிருந்த வெறுப்பு, வன்மம், அதே போல் தொழிலாளி வர்க்கத்தின் மீது முதலாளிகள் கொண்டிருந்த வெறுப்பு. இந்த வன்மமும் வெறுப்பும் சேர்ந்தது தான் – கொத்தடிமைகளாக வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்வது என்பது.

இன்றைக்கு வந்த செய்தி – இந்தியாவில் எல்லாருக்கும் நிலையான குடியுரிமை வழங்கப் போகிறார்களாம், ஆனால் மோடி அரசு முன்வைப்பது – வெறும் 10 கோடி இருந்தால் போதும் இந்தியாவில் யார் வேண்டுமானாலும் குடியுரிமையை வாங்கி விடலாம். ஆர்.எஸ்.எஸ். வைக்கக் கூடிய இந்து ராஷ்டிரம் என்பது ஏகாதிபத்தியத்திற்கு சேவை செய்யக் கூடியது. இந்த இந்து ராஷ்டிரத்தில் பெரும்பான்மையான உழைக்கும் மக்கள், உழைக்கும் சாதிகளுக்கு இடம் கிடையாது. ஆக பெரும்பான்மையான மக்களுக்கு எதிரான இந்த புதிய கல்விக் கொள்கையை ஒட்டுமொத்தமாக புறக்கணிக்க வேண்டும்.

இது வெறும் சமஸ்கிருத திணிப்பு மட்டும் கிடையாது. இந்து ராஷ்டிரத்தைக் கட்டுவது, ஏகாதிபத்தியத்திற்கு சேவை செய்யக் கூடிய சிந்திக்கும் திறனற்ற கொத்தடிமைகளை உருவாக்கிக் கொடுப்பது. ஆக இப்படிபட்ட கல்வி கொள்கையை நாம் கட்டாயம் எதிர்த்தாக வேண்டும்.

தகவல்
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
சென்னை

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க