Saturday, April 17, 2021
முகப்பு போலி ஜனநாயகம் போலீசு காவிரி - சிறுவாணி உரிமை மீட்போம் - கோவை, சென்னையில் போராட்டம்

காவிரி – சிறுவாணி உரிமை மீட்போம் – கோவை, சென்னையில் போராட்டம்

-

1. சிறுவாணி உரிமை காக்க கோவையில் ஆர்ப்பாட்டம்

சிறுவாணி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் கேரள அரசை கண்டித்து கோவை மண்டல மக்கள் அதிகாரம் மக்களிடையே பிரச்சாரம் செய்து ஆர்ப்பாட்டம் நடத்தியது.

 

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

முதற்கட்டமாக கேரளாவின் அகழி-கூலிக்கெடவிலிருந்து சித்தூர் வழியில் அட்டப்பாடி-சோலையாறு வழியே, ஓடி வரும் சிறுவாணி ஆற்றின் குறுக்கே வெங்கமேட்டு பகுதியில் மக்கள் அதிகாரம் சமீபத்தில் களஆய்வு நடத்தியது. கடந்த ஆண்டுகளிலேயே மேற்கண்ட பகுதியில் வாழ்ந்துவந்த பழங்குடி மக்களை அங்கிருந்து அப்புறப்படுத்தியிருக்கிறார்கள். ஆற்றின் வலது புறத்திலுள்ள இயல்பான மலைப்பகுதிகளை சிதைத்து தடுப்புச் சுவராக்கி, இடது புறத்திலுள்ள கரையெங்கும் சிறுமலைகளை போன்று ஜல்லிகள், மணல் குவியல்கள், இரும்பு கம்பிகள் மற்றும் கட்டுமான இயந்திரங்கள் குவிக்கப்பட்டுள்ளன. ஆற்றின் குறுக்கே பாலத்தின்மீதிருந்து நீரை உறிஞ்சி நிரப்பிக் கொண்டிருக்கும் டேங்கர் லாரிகள் என அணைக் கட்டுவதை சொல்லும் காட்சிகளை பார்க்க முடிந்தது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

மேலும் கடந்த ஆண்டே அணைக் கட்டுமான பொருட்களுக்காக கட்டப்பட்ட பாழடைந்த குடோன்கள், அவற்றின் கட்டுமான இயந்திரங்களை காண முடிந்தது. சற்று தொலைவுகளில் உள்ள பகுதிவாழ் மக்களிடம், இதுபற்றி கேட்டபோது அங்குள்ள ஆற்றுப்படுகைகளில், “ஆடுமாடுகளை மேய்த்தும், மீன்பிடித்தும், வனப்பொருட்களை சேகரித்து வாழ்ந்து வருகின்றோம்’ ஆற்றின் குறுக்கே உள்ள வழித்தடங்களையும் நீண்ட காலமாக பயன்படுத்தி வருகிறோம்” என்றனர்.

இங்கு அணை கட்டப்பட்டால் இந்த உரிமையெல்லாம் பறிபோகும் என்பதையோ, தடுப்பணைகளால், நீர் மற்றும் மின்சாரத்தை அங்கு வரப்போகின்ற பன்னாட்டு நிறுவனங்களுக்கும், அது சார்ந்த உல்லாச சுற்றுலா கேளிக்கைகளுக்கும் பயன்படுத்தப்படும் என்ற விவரமோ அப்பழங்குடி மக்கள் அறிந்திருக்கவில்லை. மேலும் அங்கிருந்து ஓடிவரும் நீரை அணைகட்டி தடுப்பதால் தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களான கோவை, ஈரோடு வாழ் மக்களின் குடிநீர் மற்றும் விவசாய நீர் ஆதாரங்களை இழந்து கொங்கு மண்டலம் கடுமையாக பாதிக்கப்படும்.

siruvani-dam-pp-demoசிறுவாணி ஆற்றின் குறுக்கை அணைகட்டும் கேரள அரசை கண்டித்து

ஆர்ப்பாட்டம்

பாலைவனம் ஆகுது தமிழகம்!
செயலற்று முடங்கி விட்டது ஜெயா அரசு!
சாராய போதை, போலீசு பயம், சினிமா மயகத்தில் வீழ்ந்து கிடக்கும் தமிழ்ச் சமூகமே,
விழித்தெழு, வீறுகொண்டு போராடு!

எனவே அங்கு கட்டப்படும் தடுப்பணைக்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளா எல்லையான அட்டபாடி- ஆணைகட்டி பகுதியில் மக்கள் அதிகாரம் சார்பாக ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. காவல்துறை அனுமதிமறுக்கவே ஞாயிறு காலை கோவை மண்டலம் முழுவதும் (கோவை,கோத்தகிரி,உடுமலை,கரூர்) ஆர்ப்பாட்ட சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு, திட்டமிட்டபடி 11-09-2016 ஞாயிறுமாலை 4 மணிக்கு, மக்கள் அதிகார கோவை பகுதி ஒருங்கிணைப்பாளர் தோழர் மூர்த்தி தலைமையில்  கணுவாய் தடாகம் வழியாக பெண்கள், குழந்தைகள் உட்பட மக்கள் அதிகார கொடிகள் பிடித்து, சீருடை அணிந்து சென்று கொண்டிருக்கும் போது மாங்கரை சோதனைச்சாவடி பகுதியிலேயே 50-க்கும் மேற்பட்ட காவலர்கள், அவர்களின் காவல் வாகனங்களை நிறுத்தி தடுத்தனர் .

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

உடனே தோழர்கள் “போலி தேசியம் பேசும் மோடி அரசு, போலி நாடகமாடும் மாநில அரசுகளை அம்பலப்டுத்தியும், இனவெறியை தூண்டும் பிழைப்புவாத ஓட்டுப் பொறுக்கி கட்சிகளை அம்பலபடுத்தும் விதத்தில் விண் அதிரும்” முழக்கங்களோடு தடுப்பை மீறி முன்னேற முயற்சித்து கைது செய்யப்பட்டனர். இதனை காத்திருந்த செய்தி ஊடங்கங்கள் படம் பிடித்ததோடு நம்மிடம் செய்தி சேகரித்தனர். பிறகு அங்கிருந்து 6 கிமீ தொலைவில் உள்ள சின்னதடாகம் பகுதியிலுள்ள மண்டபத்தில் தங்கவைத்து, இரவு 7 மணிக்கு விடுவித்தது காவல்துறை.

ஆர்ப்பாட்டத்தை ஒட்டி நடத்தப்பட்ட பிரச்சாரமும், ஆர்ப்பாட்டமும் கோவை வட்டார மக்களிடையே தடுப்பணையின் ஆபத்தை வீச்சாக கொண்டு சென்றது.

தகவல்
மக்கள் அதிகாரம்,
கோவை

2. காவிரி உரிமை காக்க சென்னையில் ஆர்ப்பாட்டம்

காவிரியை முடக்கும் கர்நாடக அரசு!
தீர்ப்பை அமலாக்க வக்கற்ற மோடி அரசு !!
நடுநிலை நாடகமாடும் உச்சநீதிமன்றம்!!!

ஆர்ப்பாட்டம்

சென்னை – குமணன் சாவடி | 14.09.2016 | மாலை 4 மணி

காவிரி , பாலாறு, சிறுவாணி, பவானி முல்லைப்பெரியாறு…
எல்லா நீரோட்டங்களையும் தடுக்கிறது தேசிய நீரோட்டம்!

பாலைவனமாகிறது தமிழகம்!
செயலற்று முடங்கிவிட்டது ஜெ.அரசு !

சாராய போதை, போலீசு பயம், சினிமா மயக்கத்தில்
வீழ்ந்து கிடக்கும் தமிழ்ச்சமூகமே!

விழித்தெழு ! வீறுகொண்டு போராடு !

தகவல்
மக்கள் அதிகாரம்,
சென்னை

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க